Monday, June 11, 2018

ராமேஸ்வரம் ஹல்வா

காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன?
அதுதான் இது!
ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான்  பேரும் வச்சு எழுதியும் இங்கே போடறேன்.

தேவையான பொருட்கள்:

பூசணிக்காய்  அரைக்கிலோ!  ஆர்கானிக் சமாச்சாரமுன்னா ரொம்பவே நல்லது. இங்கே இது நம்ம வீட்டுப் பூசணி.
சக்கரை  கால் கிலோ  இது Raw Sugar. அப்படியே ராவா அடிக்கறதுதான் நம்ம வீட்டுப் பழக்கம் :-)
முந்திரி திராக்ஷை  உங்களுக்கு விருப்பப்பட்ட அளவு. அதுக்காக அஞ்சு முந்திரின்னு  கணக்கு வேணாம்.

ஏலக்காய்த்தூள்  ஒரு அரைத் தேக்கரண்டி.

நெய்  கால் கிலோ !!!!  250 கிராமுன்னு சொன்னால்   நல்லா குறைஞ்ச அளவா இருக்குல்லே!

செய்முறை:

முதலில் பூசணிக்காயை வெட்டித் துண்டுகளா எடுக்கணும்.  தோல் நம்மைவிடக் கெட்டி என்பதால் உதவிக்கரங்கள் கிடைச்சால் கொள்ளாம்.  ஆனால் பக்கத்துலேயே நின்னு,  'ஐயோ.... இப்படி தோலைமட்டும் வெட்டாம பூசணிச்சதையையும்  ரொம்பவே  கழிச்சுக் கட்டறீங்களே'ன்னு  கத்தணும். சின்னத் துண்டுகளா வெட்டினால் நல்லது.

குக்கரில்  ரெண்டு விஸில் அளவு  வேகவச்சு மசிச்சுக்கலாம்.  இல்லைன்னா ஒரு  மூணு டீஸ்பூன் தண்ணீர் விட்டு, நறுக்கிய துண்டுகளை நேரடியாக் குக்கரில் போட்டு  மூணு விஸில். (ஓபிஓஎஸ் குக்கிங் போல!)


அப்புறம்  ஒரு வாணலியில் நெய் ரெண்டு ஸ்பூன் சேர்த்து முந்திரி திராக்ஷையை வறுத்து எடுத்துக்கணும்.
ஹல்வாவைக் கிளறி ஊத்த ஒரு பாத்திரம் எடுத்து அதில் நாலு துளி(!) நெய் விட்டுத் தடவி வச்சுக்கணும். வறுத்த முந்திரி திராக்ஷையை நான் இதுலே எடுத்து வைப்பேன். (சிக்கனமா இருக்கேனாம்!) அந்த நெய்யே பாத்திரத்தில் பரவிட்டால் ஒரு வேலை மிச்சம் பாருங்க.
அதே வாணலியில்  மசிச்ச பூசணி விழுதைப் போட்டுக் கிளறுங்க. கொஞ்சம் கெட்டிப் பட்டதும் சக்கரையைச் சேர்த்து இன்னும் கிளறிக்கிட்டே இருக்கணும்.
ஒருவிதம் கெட்டியாகி வரும்போது, நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாச் சேர்த்துக்கணும்.

கிளறிக்கிளறிக் கை வலி ஆரம்பிக்கும்போது ஹல்வா பதம் வந்துருக்கும்.  இது பாதாம் ஹல்வா மாதிரி ஸ்பூனால் எடுத்துச் சாப்பிடும் பதம்தான்.

இப்போ வறுத்து எடுத்து வச்ச முந்திரி திராக்ஷையைச் சேர்த்துக் கிளறிட்டு ஏலக்காய்த் தூளையும் சேர்த்துடலாம்.
ஆச்சு. எடுத்து அப்படியே நெய்தடவிய (!) பாத்திரத்தில்  கொட்டினால் போதும்.

இதுலே  ஒரு சில மாற்றங்கள்  வேணுமுன்னா....  ஹல்வா கெட்டிப்பட்டு வரும்போது  150 கிராம்  பால்பவுடரைச் சேர்க்கலாம்.  கோவா கிடைக்குமுன்னால் அதைச் சேர்த்தால் ஓக்கே. இல்லைன்னா பால்பவுடரில் கூட கோவா செஞ்சுக்கலாம் தெரியுமோ?

பால்பவுடரைக் கொஞ்சம் ரெண்டு ஸ்பூன் பால் தெளிச்சுக் கட்டியா சப்பாத்திமாவு போல பிசைஞ்சு உருட்டி, அஞ்சு நிமிட் ஸ்டீமரில்/ இட்லித் தட்டில் வச்சு ஆவி பிடிச்சால் கோவா !

என்னைப்போல் கடைசி நிமிட் ஐடியா வந்துட்டால், நேரடி பால்பவுடரையே சேர்த்தாலும்  போதும். (சோம்பேறிக்குத் தோலோடு வாழைப்பழம்!)
அப்புறம்.... குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் கொஞ்சம் சேர்த்துக்கலாம். உங்க விருப்பம்.

நான் பொதுவா எல்லா இனிப்புக்கும் (மைஸூர்பா தவிர) சேர்ப்பேன். பச்சைக் கற்பூரம் பெருமாள் வாசனை  :-)
பின்குறிப்பு:  ரெண்டு முறை செஞ்சு பார்த்தப்ப எடுத்த படங்களை  கலந்துகட்டியே இங்கே போட்டுருக்கேன். தேதி பார்த்துக் குழம்ப வேண்டாம் :-)

குறிப்பு # 2.  கொஞ்சம் எடுத்து  ஃப்ரீஸ் செஞ்சு பார்த்தேன்.  ஒரு மாச இடைவெளி விட்டு எடுத்து டீஃப்ரீஸ் செஞ்சதும்  நல்லாவே இருக்கு. தின்னு பார்த்தால் சுவையில் ஒரு மாற்றமும் இல்லை. ஸோ பாக்கியானால் ஃப்ரீஸருக்கு அனுப்பலாம் :-)

குறிப்பு # 3.  இனிப்பை வாசித்த கையோடு இன்னொரு முக்கிய இனிப்பும் இதோ உங்களுக்கு!  பயணம் ஒன்று அமைந்துள்ளது. இந்த முறை வழக்கத்தை விடக் கொஞ்சம்  நீண்டநாட்கள். அங்கங்கே கிடைக்கும் இணைய வசதிகளைப் பொறுத்து  எட்டிப் பார்த்துட்டுப் போவேன்.  ஆனாலும்.... இதை ஒரு லீவு லெட்டராகப் பாவித்துக்கொள்ளுங்கள்.  வடை, யானை, பூனைகளைப் பார்த்தால் என்னை நினைக்க வேண்டாம் :-)

வணக்கம்.

என்றும் அன்புடன்,
 உங்கள் துளசி டீச்சர்.


14 comments:

said...

பூசணி என்று சொல்வதைவிட, சர்க்கரைப்பூசணி அல்லது பரங்கிக்காய் என்று சொல்லலாம்! அழகாய் இருக்கிறது பார்க்க.

said...

அருமை

said...

அடுத்த பயணத்திற்கு வாழ்த்துக்கள்..மா

நல்லா ரசிச்சு பார்த்து ..படம் எடுத்து வாங்க..காத்திருக்கிறோம்..


பள பள க்கும் அல்வா....வாவ்

said...

பெயர் வச்சது பெர்ஃபெக்ட் டீச்சர். பூசணில செய்யறது காசி அல்வா. பறங்கிக்காய்ல செய்யறது ராமேஸ்வரம் அல்வா. ஆனால், பறங்கிக்காயை, பூசனி என்று சொல்றீங்களே... அங்கதான் சந்தேகம் வருது.

வெண்பூசணில நிறைய வெரைட்டி பார்த்ததில்லை.

ஆனால் பறங்கிக்காய்ல ஏகப்பட்ட வெரைட்டி பார்த்திருக்கிறேன், பச்சைத் தோலுடன் கூடிய நீங்கள் குறிப்பிட்டுள்ள பறங்கி உட்பட. இன்றைக்குத்தான் இனிப்பு இனி சாப்பிடக்கூடாது என்று நினைத்தேன்.. காலையிலேயே வைராக்யத்தை டிராப் செய்யவச்சுட்டீங்க.

said...

வாங்க ஸ்ரீராம்.

சக்கரைப்பூசணின்னு எப்பவும் சொன்னதே இல்லை. இனி பழகிக்கணும்!

வெள்ளைப்பூசணி, மஞ்சள் பூசணின்னு சொல்வதே வழக்கம். பம்ப்க்கின் :-)

said...

வாங்க நாகேந்த்ர பாரதி.

நன்றி.

said...

வாங்க அனு பிரேம்.

நன்றீஸ்ப்பா !

said...

வாங்க நெ. த.

வெள்ளையிலும் சிலவகை இருக்கு. ச்சைனீஸ் மெலன்னு இங்கே சீனக்கடையில் கிடைப்பது ஸூப் செய்யறதுக்காம். மேலே கிவிப் பழம்போல சின்ன ரோமம் இருக்கும். வெள்ளைப்பூசணி இவர்கள் கடையில் கிலோ எட்டு டாலர்.

வெள்ளை, மஞ்சள் பூசணின்னு சொல்றதே வழக்கமாப் போயிருச்சு.

பறங்கின்னு சொல்லவும் சக்கரைப்பூசணின்னு சொல்லவும் பழகணும்.

said...

அல்வா அருமை.
பயணம் ப்ரமாதம்.
இந்தியா / ஈரோப் /இலண்டன் தங்களை வரவேற்கிறது.

said...

ரசித்தேன், ருசித்தேன்.

said...

பூசணிக்காய் அல்வா படைத்த நேரம் இன்னொரு பயணம் கொடுத்திருக்கிறார் சங்காழியான். பயண அனுபவங்களை படித்துச் சுவைக்க நாங்களும் காத்துக்கொண்டிருக்கிறோம். இந்தப் பயணமும் இனிதாகவும் வசதியாகவும் அமைய முருகனை வேண்டிக்கொள்கிறேன்.

said...

// பெயர் வச்சது பெர்ஃபெக்ட் டீச்சர். பூசணில செய்யறது காசி அல்வா. பறங்கிக்காய்ல செய்யறது ராமேஸ்வரம் அல்வா. ஆனால், பறங்கிக்காயை, பூசனி என்று சொல்றீங்களே... அங்கதான் சந்தேகம் வருது. //

தென் தமிழகத்தில் மஞ்சளாய் இருப்பதுதான் பூசணிக்காய். வெள்ளையாய் இருப்பதை தடியங்காய் என்பார்கள். பரங்கிக்காய் என்று சொல்லும் வழக்கம் தெற்கில் இல்லை.

ஆகையால் பூசணிக்காய் என்று டீச்சர் எழுதியது மிகச்சரி. மஞ்சள் வெள்ளை எல்லாம் தேவையில்லை. பூசணிக்காய் தடியங்காயே போதுமானது.

said...

என்ன... ரொம்ப நாளாகிவிட்டது. பயணம் இன்னும் நீளுமோ?

said...

ரொம்ப நாட்களாக பார்க்க முடியவில்லையே.... எல்லாரும் நலம்தானே....