Saturday, May 20, 2006

எவ்ரி டே மனிதர்கள் -3

தாடி மாமா
----------

"ஒரு ஆயிரம் விளம்பழம் நல்லாப் பழுத்ததாப் பார்த்து வாங்கிக்கணும். அதை ஒரு யானைக்குத் தின்னக் கொடுக்கணும்.யானை எப்படி விளாம்பழம் தின்னும் தெரியுமா?"


"தெரியாதே"


" அப்படியே முழூசா முழுங்கிரும். அதெல்லாம் வயித்துக்குள்ளே போய் அப்படியே உள்ளே இருக்கற பழத்தை மட்டும் செரிச்சுட்டு, மறுநாள் எல்லா ஓடுங்களையும் சாணியா வெளியேத்திரும்."


"அய்யய்ய...."


" என்ன அய்யய்ய? விளாம்பழம் எல்லாமே முழூசா வெளியே வரும்"


" நிஜம்மாவா?"


'' ஆமாம். அப்ப ஒண்ணொண்ணா எடுத்து அந்த ஓட்டை உடைச்சுப் பாக்கணும்"


"ச்சீய்...."


" அதுலேதான் இருக்கு சூட்சமம்"


" அப்படியா? உடைச்சுப் பார்த்தா என்ன இருக்கும்?"


" ஹாஹாஹா... ஒண்ணும் இருக்காது."


" அப்ப ஏன் உடைச்சுப் பாக்கணும்?"


" சொல்றேன் சொல்றேன். அநேகமா எல்லா ஓட்டுலேயும் ஒண்ணும் இருக்காது. ஆனாத் தப்பித்தவறிஎதாவது ஓட்டுக்குள்ளே ஒரு விளம்பழ விதை மட்டும் நின்னுரும். அது அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது.அப்படி ஒரு விதை உனக்குக் கிடைச்சிருச்சுன்னு வச்சுக்க. நீ சீக்கிரம் ஃபேமஸ் ஆயிருவே"

" என்ன ஆகும்? எப்படி ஃபேமஸ் ஆவேன்?"


" பந்தயம் கட்டிக்கிட்டுச் சாப்புடறாங்கல்லே, அதுலே போய் நீ சாப்புட உக்கார்ந்தா, யாரும் உன்னை ஜெயிக்க முடியாது.இந்த விளாம்பழ விதை இருக்குல்லே, அதை உன் தொப்புள்லே வச்சு, அது கீழே விழுந்துராம ஒரு துணியைக் கட்டிக்கணும். அவ்வளோதான். ஜெயிப்பு எப்பவும் உனக்கே"


கற்பனையிலே விளாம்பழவிதையை வயித்துலே கட்டிக்கிட்டு உலகம் பூராப் போய் ஜெயிக்கறேன். என்னை வெல்ல இனி யாருமே இல்லை


தினமும் இப்படி எதாவது சொல்லி எங்களைக் கற்பனை லோகத்துலே சஞ்சரிக்க விடறதுதான் தாடிமாமாவோட வேலை!


தங்கச்சி வீட்டுலே தங்கி இருக்கார் மாமா. அவுங்களுக்கும், எல்லோரும் வேலைக்குப் போறதாலே வீட்டைப் பொறுப்பாப்பார்த்துக்க ஒரு ஆளு வேணுமே!


இவருக்குக் குடும்பம்? எல்லாம் இருக்குதான். மாமி 'போயி' நிறைய வருஷம் ஆச்சு. அப்பவும் சரி இப்பவும் சரி தன்னோட பிள்ளைகளைப் பத்துன கவலையே இல்லாத ஜீவன். அதுங்க எல்லாம் பாட்டி வீட்டுலே வளர்ந்து, இப்பக் கல்யாணம் ஆகிக் கண்காணாத இடத்துலே இருக்குதுங்க. தன்னோட தேவை, குடும்பத்துக்கு இருக்குமுன்னு நினைச்சுக்கூடப் பார்க்கலையாம்.

இளமையிலே மிலிட்டரியில் சேர்ந்து வேலை. சண்டையெல்லாம் போட்டுருக்க மாட்டார். அவர் அங்கே ஸ்டோர் கீப்பராத்தான் இருந்தாராம். ஊர் ஊராச் சுத்தியிருக்கார். ராணுவத்துலே இருந்து ரிட்டயர் ஆன பிறகும் திடீர்திடீர்னு எங்கெயாவது கிளம்பிப் போய்க்கிட்டே இருப்பாராம். போனா அவ்வளொதான்.


அனுபவங்களைச் சுமந்துக்கிட்டு ஊர்வந்து சேர்ந்தப்ப வயசு 60க்கு மேலே ஆயிருச்சு. கழுத்துவரை தொங்கற கொஞ்சம்முடியைத் தூக்கிமுறுக்கி ச்சின்ன எலுமிச்சை அளவு கொண்டையா முடிஞ்சிருப்பார். குனிஞ்சு இருக்கறப்பப் பார்த்தா,தலைமுடிக்கு இடையிலே மண்டை பளபளன்னு டாலடிக்கும்! நெஞ்சுவரை தொங்கும் நரைச்ச தாடி.


சாயந்திரம் அஞ்சு மணி ஆச்சுன்னா, உடையெல்லாம் மாத்திக்கிட்டுத் தயாரா இருப்பாராம். தங்கை வேலை முடிஞ்சு வந்து,வெராண்டாவுலே செருப்பை விடும்போது, இவர் தன்னோட செருப்புக்குள்ளே காலை நுழைச்சுக்கிட்டு இருப்பாராம்.அப்படி ஒரு டைமிங். மிலிட்டரிக்காரர் ஆச்சே!


வேகுவேகுன்னு நடந்து போவார். அந்த ஊரை ரயில் தண்டவாளம் ரெண்டாப் பிரிச்சு இருந்தது. ஒரு பக்கம் தங்கைவீடு. மறுபக்கம் அவரோட சித்தி வீடு. சித்தின்னதும் தள்ளாடும் பாட்டின்னு நினைச்சுறாதீங்க. சித்திக்கும் இவருக்கும் மூணே மூணுவயசுதான் வித்தியாசம். அதனாலெ அவுங்களை அக்கான்னெ கூப்புட்டுப் பழக்கம்! சித்தி கதை பெரிய கதை.அதை இன்னோருநாள் சொல்லிக்கலாம், என்ன?


வர்ற வழியிலேயே அங்கங்கே சில நண்பர்களைச் சந்திச்சுப் பேசிட்டுப், பெட்டிக் கடையிலே பத்து பைசாவுக்கு மூக்குப் பொடி வாங்கிக்கிட்டு ஏறக்குறைய இருட்டும் நேரத்துக்கு வந்துருவார். அவருக்காக இங்கே ஒரு டம்ப்ளர் காஃபி காத்துக்கிட்டு இருக்கும். நல்ல சூடா இருக்கும் காஃபியை மெதுவா அனுபவிச்சுக் குடிக்கும்போதே சபைகூடிரும். பெருசுலே இருந்து சிறுசு வரை ஜமா சேர்ந்தாச்சு.


தாடியை ஒரு கையாலே நீவிக்கிட்டே மெதுவா ஆரம்பிக்கற பேச்சு, ஒரு வளைவுலே திரும்பி இலக்கு நோக்கிப் போயிரும். அவன் சொன்னான், இவன் சொன்னான்னு இல்லாம ஆதாரபூர்வம் பேர், அட்ரஸ் எல்லாம் சொல்லித்தான் சம்பவங்களை விவரிப்பார். ... தெருவிலே ஆறுமுகம்னு ஒருத்தருன்னு ஆரம்பிச்சாருன்னா, நமக்கு அந்த ஆறுமுகம்கூட ஒரு நெருக்கம் தோணிப்போகும்.அதாலேயே கேக்குறவங்களுக்கு ஒரு ஈடுபாடும் வந்துரும்.


டிவிக்கள் எல்லாம் இல்லாத அந்தக் காலத்துலேயே, 'சீரியல்'களுக்கு எங்களைப் பழக்கப்படுத்தி வச்சிருந்தார் மாமா.எட்டு எட்டேகால்வரை நடக்கும் பேச்சு 'டக்'ன்னு நிக்கும். அங்கிருந்து கிளம்புனாருன்னா வந்த வழியாவே நேராத்தங்கை வீடுதான். கிட்டத்தட்ட நாலு கிலோ மீட்டர் இருக்கும். போய்ச் சேர ஒம்போதரை ஆயிருமாம்.


அங்கே அதுக்குள்ளே எல்லாரும் சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு, இவருக்கு எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டு படுத்துருவாங்களாம். இவருக்கு அந்தத் தங்கை புருஷனைப் பிடிக்கவே பிடிக்காது. ஹூம்...... யாருக்குத்தான் பிடிக்கும்?அப்பேர்ப்பட்ட ஆள். அதனாலேயே அவுங்களைத் தவிர்க்கறதுக்காகத்தான் இவ்வளவு லேட்டா வீடு திரும்பறாருன்னுகேள்வி.


பிள்ளைகளுக்கெல்லாம் இவர் தாடி மாமா. சாயங்காலம் ஆச்சுன்னா மாமா வந்தே ஆகணும். இவரில்லாத நாளைக்கற்பனை செஞ்சும் பார்க்க முடியாது. இதோ வந்துட்டாரே.....


" செம்பு, பித்தளையை எல்லாம் தங்கமா மாத்திரலாம், தெரியுமா? நம்ம ராமநாதன் இல்லே ராயப்புரத்துலே இருக்கானேஅவன் இப்படி செஞ்சிருக்கான். நானும் அவனுமாச் சேர்ந்துதான் முந்தி ஒரு சாமியாரைப் பாக்கப் போயிருந்தோம்..."ஆரம்பம் ஆச்சு இன்னிக்குக் கதை!


பெரிய பெரிய தங்கக்கட்டிகளை வச்சு, ஏகப்பட்ட நகைகளைச் செஞ்சு மாட்டிக்கிட்டு வளைய வந்துக்கிட்டு இருக்கோம்.அன்னிக்கு எல்லாவிதமும் செஞ்சாச்சு. இன்னும் இவ்வளோ தங்கம் மிச்சம் இருக்கே! இனிமே வீட்டுலே பாத்திரங்கள் எல்லாமே தங்கம்தான் !!

------------
அடுத்த வாரம்: ஸ்வீட்டி
--------

நன்றி: தமிழோவியம்

28 comments:

said...

இனிமேல் அவ்வளவும் தங்கம் தான்...நல்ல வாக்கியம்.இன்னும் எத்தனை தாடி மாமாக்கள் இருக்கிறார்களோ.சோகமும் சுகமும் ஒன்றாய்க் கலந்த படைப்பு.அசராத மனிதர்.இவர் மட்டும் ப்ளோக் உலகில் நுழைந்தால் எப்படி இருந்திருக்கும்? துளசி இருப்பதால் அந்தக் கவலை வேண்டாம்.

said...

மானு,

//இவர் மட்டும் ப்ளோக் உலகில் நுழைந்தால் எப்படி ...//

நோ ச்சான்ஸ்.
அவர் போயிட்டார். கான்ஸர்(-:

said...

உங்கள் கதை சொல்லும் கலைக்கு குருவோ ?

said...

மணியன்,

இருக்கச் சான்ஸ் இல்லை.
முனியம்மாதான் என் குரு.

அவுங்க சொல்ற கதையிலே எல்லாம் எப்பவும் ஒரு 'கள்ளப் புருஷன்' வருவான். அப்போ 6 இல்லேன்னா 7 வயசுதான். அதாலே அதோட ரியல் எஃபெக்ட் தெரியலை:-)))

said...

மணியன்,

கொஞ்ச நேரம் யோசிச்சுப் பார்த்தப்ப அவர் குரு # 3 ஆக இருக்கலாம்:-))))

said...

நான் கேள்விப்பட்டிருக்கேன் யானைவயிற்றில் சென்ற விளாம்பழம் முழுசாய்தான் வரும் அனுள் ஒன்றும் இருக்காது என்று ஆனால் அதில் உள்ள விதைக்கு அவ்வளவு மகத்துவம் வாய்ந்தது என எனக்கு அக்கா சொன்னபிறகு தான் தெரியும் உண்மைமையா? அல்லது நான் சரியாக படிக்கவில்லையா

said...

அனுபவங்களைச் சுமந்துக்கிட்டு ஊர்வந்து சேர்ந்தப்ப வயசு 60க்கு மேலே ஆயிருச்சு. கழுத்துவரை தொங்கற கொஞ்சம்முடியைத் தூக்கிமுறுக்கி ச்சின்ன எலுமிச்சை அளவு கொண்டையா முடிஞ்சிருப்பார். குனிஞ்சு இருக்கறப்பப் பார்த்தா,தலைமுடிக்கு இடையிலே மண்டை பளபளன்னு டாலடிக்கும்! நெஞ்சுவரை தொங்கும் நரைச்ச தாடி.//

அடடா.. இந்த வரிகளப் படிச்சதுமே மாமா மனசுல வந்து ஒக்காந்துட்டார்..

சூப்பர் துளசி..

said...

என்னோட இத்தனை வருச சர்வீசுல(ஆமாம் பெரிய சர்வீசு!), நான் இந்த வெளாம்பழக் கதையைக் கேட்டதில்லை. ஆனா படிக்க சுவாரசியமா இருந்துச்சு...குறிப்பா ஓபனிங் சூப்பர்.

சில சமயம், கால ஓட்டத்துல நாம கடந்து வந்த மனிதர்களை எப்பவாச்சும் நெனச்சி பாக்குறதும் ஒரு சுகம் தான். அவங்களோட நமக்கு ஏற்பட்ட அனுபவங்கள்...அவங்களோட பழக்க வழக்கம், eccentricities, சிறப்புகள் இப்படின்னு.

இதப் படிச்சதுக்கப்புறம் உங்களை குரு#1ஆ வச்சு நானும் இதே மாதிரி கொசுவத்தி சுத்தலாம்னு யோசிக்கிறேன்.
:)

said...

//கொஞ்ச நேரம் யோசிச்சுப் பார்த்தப்ப அவர் குரு # 3 ஆக இருக்கலாம்:-))))//

முனியம்மா தான் குருனு சொல்லிட்டீங்க (அதனால #1ன்னு எடுத்துக்கிட்டேன்) தாடி மாமா #3யா இருக்கலாம்னு சொல்லிருக்கீங்க.

அப்ப குரு #2 ?

said...

அம்மா,
உங்கள் குரு #3 பயங்கரமான கற்பனை திறன் கொண்டவர் தான், குழந்தைகளுக்கு கதை சொல்ல வேண்டுமெனில் நிறைய கற்பனை வளம் வேன்டும்.

அதில் எனக்கும் அனுபவம் உண்டு, தில்லிருக்கும் என் அக்கா (பெரியம்மா மகள்) மகள்களுக்கு நான் இராமாயணம், மஹாபாரதம், ஹரிசந்தர, விக்ரமாதித்யன், கதைகளை மற்றும் பல சிறுகதைகளையும் சொல்லியுள்ளேன்.

அவர்கள் கேட்க்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்க்குள் அப்பப்பா! என்றாகிவிடும். ஆனாலும் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்வது வரை கதையின் அடுத்த பகுதிக்கு போக விடமாட்டர்.

said...

என்னார்,

அப்பெல்லாம் மாமா சொல்றதுதான் வேதவாக்கு. மறு பேச்சு கிடையாது. அதனாலே விளாம்பழம் விதைக் கதை உண்மையான்னு
ஆராய்ஞ்சு பார்க்கலையே(-:

said...

ஏங்க டிபிஆர்ஜோ,
'மண்டை பளபள'க்குதுன்னதும் மாமா மனசுலே வந்து உக்கார்ந்துட்டரா? :-))))))
இப்ப எங்க மண்டைகளும் இப்படித்தான் ஆயிக்கிட்டு இருக்குதுங்க. எல்லாம் அனுபவம்தான்:-))

said...

அடடே, வாங்க கைப்புள்ளெ.
என்ன இந்தப் பக்கம் திடீர்னு?
சங்க வேலைகள் எல்லாம் முடிஞ்சதா? 'பிகிலு பொன்ஸ்' இருக்கறவரைக்கும்
உங்களுக்குக் கவலையே இல்லை. அவுங்க அடிச்சு ஆடிக்கிட்டுய் இருக்காங்க.

கல்கியிலே வேற வந்துட்டீங்க. வாழ்த்து(க்)கள். நல்லா இருங்கப்பு.

#1 குருவா? அதுக்கென்ன, அப்படியே ஆகட்டும்.

ஆமாம், குருதட்சணை எதாவது உண்டா? :-))))

said...

நன்மனம்,

ரெண்டாவது குருன்னா அது அப்பக் கிடைச்ச புத்தகங்களாத்தான் இருக்கணும். அம்புலிமாமா
எனக்காகவே வாங்கிக்கிட்டு இருந்தாங்க நம்ம வீட்டுலே.
அப்புறம் 'அணில்' னு ஒரு ச்சின்ன புத்தகம் உள்ளங்கை அளவு பெருசுதான் இருக்கும்.அண்ணன் வாங்குவார்.

said...

சிவமுருகன்,

ஆமாங்க. இந்தக் காலத்துக்குக் குழந்தைகளுக்குக் கதை சொல்லணுமுன்னா ரொம்பவே பொறுமை வேணும்.
சந்தேகம் தீரும் வரை ஓயாதுங்களே!

என் பொண்ணு சின்னதா இருக்கறப்ப இப்படி எதோ கதை சொல்லிக்கிட்டு இருந்தேன். குழந்தை வில்வீல்னு அழுதுச்சுன்னு.
அப்ப மகள் கேட்டா? ஏன் வீல் வீல்வீல்னு அழுகணும்? 'டயர் டயர்' னு அழக்கூடாதான்னு?

இதுங்ககிட்டே பேசி ஜெயிக்க முடியாதுங்க.

said...

//என்ன இந்தப் பக்கம் திடீர்னு?//
என்னங்க இப்படியொரு கேள்வியைக் கேட்டுப் புட்டீங்க. என்ன சொல்றதுன்னே தெரியலை. போன ஒன்னரை மாசமா புது வேலையிலே, சக்கையா புழிஞ்சு ஜூஸ் எடுத்ததுனால அங்கே இங்கே தலை காட்ட முடியலை.

//கல்கியிலே வேற வந்துட்டீங்க. வாழ்த்து(க்)கள். நல்லா இருங்கப்பு.//
கல்கியில் நம்ம சங்கத்தோட பேரு வந்ததுக்கு சத்தியமா என்னோட பங்களிப்பு ஒன்னுமில்லை. எல்லாம் தேவ்,பொன்ஸ்,பாண்டி,சிபி,இளா,கார்த்திக்குன்னு எல்லாரோட டீம் வர்க்கோட படிக்கிறவங்களோட உசுப்பேத்தலும் தான் காரணம். நீங்க எல்லாரையும் வாழ்த்துனதா நெனச்சு டாங்ஸுக்கிறேன்.

//#1 குருவா? அதுக்கென்ன, அப்படியே ஆகட்டும்.

ஆமாம், குருதட்சணை எதாவது உண்டா? :-))))//
குரு #1க்கு குருதட்சணை இல்லாமலா? கட்டை விரல் நாலு இருக்கு(காலுதயும் சேர்த்து தான்)...உங்களுக்கு எத்தனை வேணுமின்னு சொல்லுங்க :)-

said...

விளாம்பழக் கதை...ஏன் அப்படினு யராவது விளக்கம் சொல்லுங்களேன்.

'அவர் போய்ட்டார்;கான்சர்'-மனசு கொஞ்சம் வலித்தது

குழந்தைகளுக்கான கதைசொல்லிகள்
குறைந்து வருவது துரதிருஷ்டமே

அரிச்சந்திரன் கதை கேட்கும் குழந்தையிடமும் ஸூப்பர்மேன் பார்க்கும் குழந்தையிடமும் ஒரே வித
தாக்கமா எற்படுகின்றது?

said...

வண்க்கம்,
நலம்தானே!
உங்களை மனதில் நினைத்து ஒரு பதிவு எனது பதிவில்...உங்களுக்கு அனுப்பிய தனிமடல் திரும்பிவிட்டது...அதனால் இங்கே. மன்னிக்கவும்
http://marchoflaw.blogspot.com/2006/05/blog-post_20.html
பிரபு ராஜதுரை

said...

அக்கா,

தாடி தாத்தாவின் கதைகள் அருமை, இன்னும் சொல்லுங்க.

நானும் கதைகள் கேட்டவகையில் ரொம்ப கொடுத்து வச்சவன்.

எங்க வீடு எங்க கிராமத்தில் வழிபோக்கர்களுக்கு (கிளி ஜோசியம், சின்ன சின்ன வியாபாரம் செய்பவர்கள்) சத்திரம் மாதிரி, ஆமாம் பல ஊர்களிலிருந்து வருபவர்கள் எங்க வீட்டு முன் வரண்டாவில் தங்கி, அருகிலேயே சமைத்து, எங்க கூடவே அமர்ந்து சாப்பிடுவாங்க, பகலில் பல இடங்களுக்கு சென்று சம்பாதித்து வந்து இரவில் எங்க வீட்டு வரண்டாவில் பெரிய கதை சொற்பொழிவே நடக்கும்.

அப்படி வருபவர்களில் ஒரு பாட்டி மிகவும் எனக்கு பிடிக்கும், ரொம்ப நல்லாவே கதை சொல்லுங்க, அவங்களுக்கு 11 பிள்ளைகள், 6 பொண்ணு, 5 ஆண், இருந்தாலும் யாரிடமும் கையேந்தி பிழைக்கக்கூடாது என்று கடைசி காலத்தில் அவங்க, கத்தி, வெட்டருவா, பாலருவா என்ற் பல இரும்பு பொருட்களை தலையில் சுமந்து விற்க வருவாங்க, 3 மாசம் ஒருமுறை எங்க ஊருக்கு வருவாங்க, எங்க அம்மாவுக்கு அந்த பாட்டியை அம்மா அம்மா என்று அழைத்து சாப்பாடு போடுவாங்க. அந்த பாட்டி வந்துட்டா ஒரு மாசத்துக்கு கதைக்கு பஞ்சமே இருக்காது. தினமும் மகாபாரதம், இராமாயணம், அல்லி அர்ஜீன், நல்லதங்கா, மாயாஜாலக்கதைகள் என்று தொடர்ந்து சொல்லுவாங்க. அவங்க சொன்ன கதைகள் எல்லாம் இன்னமும்
மனசுல இருக்குது.

10வது படிக்கும் போது பாட்டி தொடர்ந்து ஆறுமாசமா வரல, அப்புறம் ஒரு நாள் யாரோ அம்மாவிடம் அந்த பாட்டி செத்து போயிட்டாங்கன்னு சொல்ல, நானும் அம்மாவும் அழுதது நினைவில் இருக்குது.
அந்த பாட்டியே நான் இன்று கதை சொல்லியாக மாற ஒரு வழிகாட்டி.

said...

உங்கள் பதிவு சுவையாக இருந்தது. பரஞ்ஜோதியின் வாழ்க்கை சம்பவமும் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. நல்ல ஒரு பதிவு படித்த த்ருப்தி...

said...

ஆஹா பழைய நினைவுகள்ல நுழைஞ்சுட்டீங்களா.. உங்க மலரும் நினைவுகள கதையா சொல்லுங்க. கேக்கறதுக்க நாங்க ரெடி.

said...

வாங்க பரஞ்சோதி.

சில பேர் நம்ம மனசுலே அப்படியே நின்னுடறாங்க இல்லே, சொந்தமா இல்லாட்டாலும்கூட.

இப்படி நிறையப்பேரோடு சொல்லமுடியாத ஒரு பந்தம்
எனக்கிருக்கு.

said...

ஸ்ரீராம்,

புதுசுங்களா? வாங்க வாங்க. மொத முறையா வந்துருக்கீங்க போல?

நல்லா இருக்கீங்களா?

எல்லாம் மனசுக்குள்ளே ஒளிஞ்சுக்கிட்டு இருக்கும் நினைவுகள்தான் கதையா வருது.

said...

சிலந்தியாரே,

வலயிலே நடுவிலே வந்து உக்காருங்க. அடுத்தகதை வரப்போகுது:-)))

நம்மளை வெள்ளையிலே சேர்க்கமாட்டீங்களாக்கும்?(-:

said...

ஸ்வாரசியமான தாடி மாமா.....

பொதுவா ஆர்மில இருக்கும்போது தினம் தினம் ஷேவ் செய்ய வேண்டியிருக்கும். அதான் வெளில வந்தப்புறம் தாடி வைச்சுக்கிட்டார் போல.....

பதில் மூலம் அவர் இல்லை என்பது தெரிந்து வருத்தம்.....

said...

தாடிமாமா வித்தியாசமான மனிதராக இருக்கிறார். தன் சொந்தக் குடும்பத்தை கவனிக்காமல் இருந்தார் என்பது கொஞ்சம் உறுத்தலான விஷயம்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அவர் போயே வருசம் 45 ஆச்சு. அங்கே மேலோகத்தில் கதை அளந்துவிட்டுக்கிட்டு இருப்பார் என்று நம்புவோமாக:-))))

said...

வாங்க ரஞ்ஜனி.

அவர் குடும்பம்.....

ஆஹா...நல்லா ஆப்டுக்கிட்டீங்க!

இங்கே ஒரு தொடர் இருக்கு. முதல் அத்தியாயம் லிங்க் இது.

http://thulasidhalam.blogspot.co.nz/2007/12/blog-post_19.html

நூல் புடிச்சுப்போங்க:-)