Friday, June 02, 2017

தாரி தேவி, நடுவழியில் இருக்காள்! (இந்திய மண்ணில் பயணம் 12 )

ப்ரயாக் னு சொல்லும் சங்கமம் வகைகளில் இந்த  வழிகளில் மட்டும்  அஞ்சு இருக்காம்.  தேவ்ப்ரயாக், ருத்ரப்ரயாக்,  கர்ணப்ரயாக், நந்தப்ரயாக், விஷ்ணுப்ரயாக் இப்படி  பஞ்ச் ப்ரயாக்.

இதுலே இப்பதான் நாம் தேவ்ப்ரயாக் பார்த்துட்டு ஒரு முப்பத்தியெட்டு கிமீ பயணம் செஞ்சு ஸ்ரீநகர் வந்துருந்தோம். அட! இங்கிருந்து காஷ்மீர் இவ்ளோ கிட்டேயா இருக்கு?  ஹாஹா... இது உத்தரகண்ட் மாநிலத்துலே இருக்கும் ஒரு ஊர். பெரிய ஊர்தான்.  தாலுகா தலைமையகம்.  கல்லூரிகளும், ஆஸ்பத்திரிகளும்,  கடைத் தெருக்களுமா ரொம்ப பிஸியான ஊர்தான்.  ஒரு ஸ்பெஷல் சேதி என்னன்னா....  நாட்டின்  படித்தவர்கள்  எண்ணிக்கையில் முன்னால் நிக்கறது இந்த ஊர்தானாம்!  ஆண்கள் 86% பெண்கள் 79% !


இப்பவே மணி  ஒன்னேகாலாகுது.  பகல் சாப்பாட்டை இங்கே எங்கியாவது  சாப்பிடலாமான்னு முகேஷிடம் சொன்னதுக்கு,  நல்ல இடம் ஒன்னு இருக்குன்னு  வண்டியைக் கொண்டுபோய் அங்கே நிறுத்தின இடம் ராஜன்ஸ் ஹொட்டேல் அண்ட் ரெஸ்ட்டாரண்ட்.   இடம் பரவாயில்லாமல் இருந்துச்சு.
மெனு கார்டை வாங்கிப்பார்த்தால்....  சௌத் இண்டியன் வகைகள் இருக்கு!
முகேஷுக்கு  என்ன வேணுமோ அதைக் கொடுத்துருங்கன்னு  பரிமாறும் நபரிடம் சொல்லியாச்.  முகேஷ் போய்  வேறொரு  இடத்தில் உக்கார்ந்துருந்தார்.  நமக்கு,  'தோ ப்ளேட் இட்லி ஔர் சாம்பார்'.
கருவேப்பிலையை  வச்சு இட்லி ஊத்தி இருக்காங்க. எனக்கு இது முதல்முறை இப்படிப் பார்க்கிறது:-)
சுவத்துலே வேற  எழுதி வச்சுருக்கும் மெனுவில் இட்லி சாம்பார், ஊத்தப்பம் னு தமிழ் எழுத்துகள்!  தமிழ் மட்டுமில்லை,  எல்லா தென்னிந்திய மொழிகளிலும்தான்!  இங்கேதான் ஆரம்பத்துலே சொன்ன    பஞ்ச் ப்ரயாக், பாஞ்ச் பத்ரி, பாஞ்ச் கேதார்னு அஞ்சஞ்சா படங்கள் போட்டு வச்சுருக்காங்க. ப்ரயாக் தெரியும் அஞ்சு இருக்குன்னு. இந்த பத்ரியும், கேதாரும் அவ்வஞ்சு இருக்கா என்ன? புதுத்தகவலா இருந்துச்சு. அதனால் கொஞ்சம் க்ளிக்ஸ் :-)




நமக்கு எதுக்கெடுத்தாலும் நவதிருப்பதி, நவகிரகக்கோவில்கள்,  நவ நரசிம்மர் இப்படி நவம் நவமா இருக்கறதைப்போல வடக்கீஸ்களுக்கு  பாஞ்ச் பாஞ்சுன்னு  அஞ்சு  முக்கியம் போல!
இட்லியை முடிச்சுட்டுக் கிளம்பிப்போகும் வழியில் (13 கிமீ. அரைமணி நேரப்பயணம்) சாலையின் ஒரு பக்கம் கோவில் கோபுரம், நம்ம பக்க ஸ்டைலில்.  நிறுத்தாமப் போகலாகுமோ?
தாரி தேவி மந்திர்.   மா தாரி. (தாரி ன்னு சொன்னாலே  வழின்னுதான் தெலுகு மொழியில் பொருள். அதே போல வழியிலேயே இருக்கு!)
கோபுரத்துக்குக்கீழே பெரிய மணி தொங்கும் நுழைவு வாசல்.  ரெண்டு பக்கமும் கோவில் பூஜைக்கான பொருட்கள் விற்கும் கடைகள்.
இங்கெல்லாம் சாமி வஸ்த்ரம்னு சிகப்புத்துணியில் ஓரத்தில் ஜிலுஜிலுன்னு  சரிகை வச்சுத் தைச்சதுதான்.

நுழைவு வாசல் வழியா அந்தாண்டை போனால்  வளைஞ்சு வளைஞ்சு போகும்  மலைப்பாதை. ரொம்பக் கீழே போகணும்.  அங்கேதான்  கோவில்.  இங்கெல்லாம் இப்படித்தான் சாலையில்  அலங்கார வாசலும்....  கீழே  அதல பாதாளத்தில் கோவிலுமா இருக்கு.  கொஞ்ச நேரத்துக்கு முன்னால் கூட  ராமலக்ஷ்மணசீதை ஹனுமன் போட்ட அழகான வளைவு  பார்த்தோமே....
கீழே சின்னதா  ஒரு கோவில் நதிக்கரையிலே!  அங்கே நிறுத்தி இறங்காம,  கன்னத்தில் போட்டுக்கிட்டு ராமராம சொல்லிட்டேன்.
இங்கேயும்  அதேபோலத்தான்.... கோபுரம்தான் நிக்க வச்சுருச்சு.  சரிவில் இறங்கும்போது கொஞ்ச தூரத்தில் ஆஞ்சி சந்நிதி.  தேவி கோவிலுக்கு இன்னும்கீழே இறங்கணும். உச்சி வெயிலில்  வேணுமான்னு  தயக்கம்.  கோவில்வேற இப்போ மூடியிருக்கும் நேரமில்லையோ.... (எதோ ஒரு சாக்கு வேண்டித்தானே இருக்கு!) 
புதுக்கோவில் கட்டிக்கிட்டு இருக்காங்க.  இங்கேயே அலக்நந்தா நதியில் ஒரு   ஹைட்ரோ பவர் ஸ்டேஷன்  இருக்கு.  இதுக்காக ஒரு அணை வேற கட்டி இருக்காங்க.   ' பவர் எடுத்த  தண்ணி' வெளியேறும் வேகத்தில்  ஆத்தாண்டை இருக்கும் கோவிலுக்குள் வெள்ளம்  புகுந்துரும் அபாயம் இருக்கேன்னு  கோவிலை உயரமாக் கட்டி தேவியை  மாடியில் வைக்கறாங்க.
இந்த தாரி தேவியே அலக்நந்தா வெள்ளத்தில் அடிச்சுக்கிட்டு வந்த  சிலைதானாம். இடுப்புவரைதான் இருக்காள். அப்ப கால்? அது காளிமத் என்னும் கோவிலில் இருக்காம்!  சட்னு பார்க்க நம்ம பக்கத்து மாரியம்மா (ரேணுகாதேவி) மாதிரிதான்.
இந்த சார்தாம் னு சொல்லும் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரின்னு மொத்த பகுதிக்கும் காக்கும் தெய்வம் இந்த தாரிதேவிதான்.
இந்த  அலக்நந்தா நதியில் வந்து சேரும் மந்தாகினி நதி,  கேதார் பகுதிகளில் இருந்து  வருது பாருங்க.... இதால்தான் அடிக்கடி வெள்ளச்சேதம் ஆகிருது இந்தப்பக்கங்களில்.  கிராமங்கள் அடிச்சுக்கிட்டுப்போறது வாடிக்கை. சமீபத்தில்கூட கேதார்நாத் கோவில் வெள்ளத்துலே மாட்டிக்கிட்டது  தெரியும்தானே?

சும்மா எல்லாத்தையும் அழிச்சுக்கிட்டு ஓடும் நதிகளில் அங்கங்கே அணை கட்டி  பவர் எடுத்துக்கிட்டு இருக்காங்க.  அப்படியே ஆபத்தையும் குறைக்கும் முயற்சிதான் இவைகள்.  இப்ப நாம் பார்க்கும் இந்த  ஹைட்ரோ பவருக்கான அணை, மற்ற வேலைகளை செஞ்சுக்கிட்டு இருப்பது  ஜிவிகே கம்பெனிதான். அவுங்கதான்  கோவிலையும்  ஏத்திக் கட்டிக்கிட்டு இருக்காங்க.
 கோவிலுக்குப்போக தனியா ஒரு பாலமும் கட்டறாங்க. இப்பதான் ஞாபகம் வருது கொஞ்ச நேரத்துக்கு முன்னால் பார்த்துக் க்ளிக்கின ராமர் & கோ இருக்கும் அலங்காரவளைவுலே இந்த பெயரும் இருந்துச்சேன்னு.

கடந்த வெள்ளத்துலே பவர் ஸ்டேஷனுக்குள்ளே கூட தண்ணி புகுந்து சேதம் நிறையதான்.  அணைச்சுவர்கள் கூட அடிச்சுக்கிட்டுப்போயிருச்சுன்னு  வேலையைக் கொஞ்சம் நிறுத்தி வச்சு இப்ப  90 மீட்டர் அஸ்திவாரம் போட்டுக்கிட்டு இருக்காங்களாம்.  கோவிலுக்கும் நல்ல ஆழமாத்தான் போட்டுருப்பாங்கன்னு நினைக்கிறேன்.

வேகாத வெயிலில் (பகல் ரெண்டரை) அவ்ளோதூரம் போகவேணாமுன்னு நம்மவர் சொன்னதைச் சரின்னு கேட்டுக்கிட்டேன்.  குடை இருந்தாலுமே  கீழிறங்கிட்டு அப்புறம் மேலேறி வர்றது கஷ்டம்தான்.

திரும்ப  கோபுரவாசலுக்கு ( சாலைக்கு)வரும்போது ஆஞ்சிக்கு இன்னொரு கும்பிடும் ஆச்சு.

வாங்க இன்னும் நமக்கு ஒரு   இருவது இருவத்தைஞ்சு  கிமீ பயணம் இன்றைக்கு பாக்கி இருக்கு.  இப்பப் போய்க்கிட்டு இருப்பது மலைப்பாதை என்றதால் நேரம் ரொம்பவே எடுக்கும். நமக்கு  ஒன்னேகால் மணி நேரம் ஆச்சு.  முப்பது கிமீ வேகமே அதிகம் இங்கெல்லாம்.

சரி வாங்க. கிளம்பலாம்....

தொடரும்....... :-)


9 comments:

said...

ஐந்து பிரயாகை பற்றி இப்பொழுதுதான் அறிகிறேன். நன்றி.

said...

என் மச்சான் பெரு பத்ரி. அதுதான் எனக்குத் தெரியும்!!

அந்தப் பாலத்தைப் பார்த்தாலே தலை சுற்றுகிறது!

படங்களை ரசித்தேன்.

said...

இங்கெல்லாம் தென்னிந்தியர்கள் நிறைய வர்ராங்கன்னு தென்னிந்திய உணவுவகைகள் கிடைக்குது போல. அதான் எல்லா மொழியிலும் எழுதியிருக்காங்கன்னு நெனைக்கிறேன். அதுவும் எழுத்துப்பிழை இல்லாம.

கருவேப்பிலை இட்டிலி வித்தியாசம் தான். எப்படி இருந்தது? சாம்பார் சாம்பாரா இருந்ததா? தாலா இருந்ததா?

தாரி தேவி நுழைவு வாசலைப் பாத்தா நம்மூர் கோயில் மாதிரி இருக்கே. இங்கருந்து போய் கட்டினாங்களோ?

said...

அருமை. தொடர்கிறேன்.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

அஞ்சு பத்ரி அஞ்சு கேதார், அஞ்சு ப்ரயாக்ன்னு இங்கே அஞ்சஞ்சா நிறையவே இருக்கு !

said...

வாங்க ஸ்ரீராம்..

அவுங்களுக்குத்தான் வ வராதுன்னு வத்ரியை பத்ரி ஆக்கிட்டாங்க. நமக்குத்தான் வ நல்லாவே வருமே அப்படியும் பத்ரின்னுதான் பெயர் வச்சுக்கறோம்:-)

சில பாலங்கள் இப்படித்தான்.... :-)

said...

வாங்க ஜிரா.

அய்ய... இட்லி மாவு ஊத்தி அதுமேலே ஒரு கருவேப்பிலை வச்சுட்டா? எதோ அலங்காரமுன்னு வச்சுக்கலாம் :-)

சாம்பார்...... ஒன்னும் சொல்றதுக்கில்லை ...

அணை கட்டும் வேலையை ஆந்த்ரா கம்பெனி ஒன்னு எடுத்துச் செய்யுது. அதான் அவுங்களே கோவிலையும் கட்டிடறாங்க. தென்னிந்திய கோபுரம்வந்த கதை இதுதான் :-)

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி.

said...

தாரி தேவி - இப்படி காக்கும் தெய்வங்கள் இப்பகுதியில் அத்தியாவசியத் தேவை.

பெரும்பாலான சமயங்களில் வெள்ளப்பெருக்கு உண்டு.....

தொடர்கிறேன்.