Monday, June 12, 2017

திருப்பிரிதி என்னும் ஜோஷிமத் (இந்திய மண்ணில் பயணம் 16 )

ஒன்னு கேட்டால் மூணு   கிடைக்கும் என்றது இந்த பத்ரிநாத் யாத்திரையில் லபிக்கும் அற்புதம்!   மூணு    திவ்யதேசங்களை ஒரே  பயணத்தில்  முடிச்சுக்கலாம், மணி நாலாகிருச்சு.  வாங்க கோவிலுக்குப் போகலாம்.

ஜோஷிமத் என்ற இந்த ஊர் அப்படியொன்னும் ரொம்பப் பெருசு இல்லை.  மலைப் பகுதி என்பதால் வளைஞ்சு வளைஞ்சு போகும் சாலை அடுக்குகளில் ஊர் உக்கார்ந்துருக்கு.  ஔலி ரோப்கார் கட்டடத்துலே இருந்து வெளிவந்த ஆறாவது நிமிட் கோவில் வாசலில் இருக்கோம்.  ஊரே ஒன்வே என்பதால் சுத்திக்கிட்டு வர்றோம்.
முதல்லே கோவில் இருக்குன்ற அடையாளம் கூட இல்லை...  சாலை  ஓரத்தில் வண்டியை நிறுத்தின முகேஷ்  'இதுலே போங்க'ன்னார்.  சரிவில் இறங்கி  வளைவு திரும்பியதும், புதுசா கோவில் ஒன்னு கட்டிக்கிட்டு இருக்காங்க.
பெரிய கோபுரத்தோடு பார்க்க நல்லாவே இருக்கு.
இதுக்குள்ளே எப்படின்னு  முழிக்கும்போது , இந்தாண்டை     கண்ணுக்கு நேரா ஒரு வாசலும்,  சுவத்துலே  நரசிங்கரும் ஹிரண்யகசிபும் படத்தில் இருக்காங்க.  சிலையா இல்லாம படமாப் பார்க்கும்போது  நல்லாத்தான் இருக்கு.  படத்துக்கு மேலே ஸ்ரீந்ருஸிங் மந்திர்!

  வெள்ளியோன்னு நினைக்கும் நுழைவு வாயில் அடுத்தாப்லெ.  வலதுபக்கச் சுவத்துலே  ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கராச்சார்யஜி கி பவித்ர(Gaddi)கத்தி னு எழுதி இருக்கு.
 அலங்கார வாசலுக்குள்   நம்ம தலைக்கு மேலே   பெரிய  மணி!

 நரசிங்கரை தரிசிக்கலைன்னா  பத்ரி யாத்திரை முழுமை பெறாதுன்னு ஹிந்தியில் எழுதி வச்சுருக்காங்க.

வாசலைக்கடந்தால் கீழே போகும் படிகள். எதிரில் தாழ்வா இருக்கும் முற்றத்துலே வலப்புறம் இருக்கும் கட்டடம்தான் கோவில்.  108 திவ்ய தேசக்கோவில்களில் ஒன்னு!
முற்றத்தின் இடதுபக்கம் பூஜா கவுன்ட்டர்.  சுவத்துலே 'ஃபோட்டோ கீச்சுனா மனா ஹை' பார்த்ததும் திக்னு ஆச்சு. கவுன்ட்டரில் போய்  அனுமதி கேட்டதுக்கு, உள்ளே கருவறையைப் படம் எடுக்கக்கூடாதுன்னு  சொன்னாங்க. நன்றி சொல்லிட்டு, வாசலாண்டை கட்டிக்கிட்டு இருக்கும் புதுக்கோவிலுக்கான கட்டுமானச் செலவுக்காக ஒரு தொகையைக் கொடுத்து ரசீது வாங்கினோம்.
முற்றத்தின் வலதுபக்கம் கடைசியா இருக்கும் வாசலுக்குள் போனால் கருவறை. வெளியே  பாசுரம் எழுதி வச்சுருக்காங்க. தமிழில்!  அவ்ளோ தொலைவு பயணம் வந்து தமிழ் எழுத்துகளைப் பார்க்கும்போது ஒரு பரவசம் வந்ததை மறுக்க முடியாது. அங்கே நின்னு கொஞ்சம் சப்தமாவே  பாசுரத்தை வாசிச்சேன். அக்கம்பக்கம் நின்றிருந்த  வடக்கர்கள் கூட்டம்,   அதிசயமாப் பார்த்தாங்களாம்!  (கோபால் சொன்னார்!)
வாலிமாவலத்தொருவனதுடல்கெட வரிசிலைவளைவித்து,அன்று
ஏலநாறுதண்தடம்பொழிலிடம்பெற இருந்தநலிமய்யத்துள்,
ஆலிமாமுகிலதிர்தர அருவரை அகடுறமுகடேறி,
பீலிமாமயில்நடஞ்செயும்தடஞ்சுனைப் பிரிதிசென்றடைநெஞ்சே.


இரவுகூர்ந்திருள்பெருகியவரைமுழை இரும்பசியதுகூர,
அரவமாவிக்குமகன்பொழில்தழுவிய அருவரையிமயத்து,
பரமனாதியெம்பனிமுகில்வண்ணனென்று எண்ணிநின்றிமையோர்கள்,
பிரமனோடுசென்றடிதொழும்பெருந்தகைப் பிரிதிசென்றடைநெஞ்சே.


இங்லீஷ், ஹிந்தி , தமிழ் னு மூன்று மொழிகளிலும் எழுதி, இங்கே வரும் பக்தர்களின் அனைத்துப் பாவங்களும் போயே போச்னு  சொன்னது மனசுக்கு ப்ரியமா ஆச்சு.  சாமிக்கும் நம்மைக் கண்டால் ப்ரியம். நமக்கும் அவரைக் கண்டால் ப்ரியம். திருப்ரிதி என்றது பழயகாலத்துப் பெயர்.  இப்போ ஜோஷிமட்ன்னு சொன்னத்தான் புரியும்.

  ஆழ்வார் பாசுரங்கள்   பாடி  மங்களாசாஸனம்  செய்த திவ்ய தேசக்கோவில் இந்த  ஸ்ரீநரஸிம்ஹ  மந்திர், ஜோதிமத்.  வழக்கம்போல் பத்துப் பாட்டுக்குக் குறைவில்லை!  (958 - 967    இரண்டாம்  திருமொழி)

கெமெராவை அணைச்சுட்டுக் கருவறைக்குள் போறோம்.  எதிர்பக்கம் இருக்கும் உள்முற்றத்துக்குப் போகும் வழி இது. வெராந்தாபோல்தான் சின்னதா இருக்கு.  வலப்பக்கம்  ஒரு மேடையில்  சாமிச்சிலைகள்.  கோவில் போல இல்லாமல் எதோ வீட்டுப் பூஜை அறைபோலத்தான் இருக்கு. எல்லாமே சின்னச்சின்ன உருவங்கள்தான்.

கருப்புப் பளிங்குச்சிலை நரசிம்ஹர்.  சௌம்ய நரசிம்ஹமூர்த்தி!  ப்ரஹலாதனுக்காக சாந்தமா உக்கார்ந்துருக்காராம்.        ராமர், சீதா,  லக்ஷ்மண், ஆஞ்சி,  பத்ரிநாத் நரநாராயண், சண்டிதேவி, குபேரன், உத்தவர், கருட்ஜி இப்படிக் கலந்துகட்டி  மேடைபூராவும் சிலைகள்.  பளபளன்னு ப்ளாஸ்டிக் ஜரிகைத்துணிகள் அலங்காரம் வேற!   மேடைக்கு முன்னால் கம்பிக் கதவு !  சாமிகள் எல்லாம் ஜெயிலுக்குள் இருக்காங்க :-)

 கற்பூர ஆரத்தி காமிக்கறதுக்குக்காசு அடைக்கணும். 251 ரூ.  பலதரமான பூஜைகள் செஞ்சுக்க  பலதரத்திலும் கட்டணம். குளிர்காலத்தில் பத்ரிநாத் உற்சவர் இங்கே வந்துருவார்.  அப்போ கற்பூரம்  காமிக்க 1501 ரூ.  பாவம்.... சாமி.  அவர் என்ன செய்வார்? தினப்படி பூஜை புனஸ்காரங்களுக்குச் செலவு ஆகிக்கிட்டுத்தானே இருக்கு?

நரசிம்மர் சிலை சாளக்ராமத்தால் ஆனதுன்னு  அங்கே வந்துருந்த   ஸ்ரீகாந்த் ராவ் என்னும் பெங்களூரு பக்தர், தன் குழுவுக்குச் சொல்லிக்கிட்டு இருந்தார்(கன்னட் மொழியில்)
வழக்கம்போல் என் மனசையே  சாமிக்கு நிவேதனமா படைச்சுட்டு  கும்பிடு போட்டுட்டு   உள்முற்றத்துக்குள் வந்துட்டேன். சரிக்கும் சொன்னால் வீடுதான். மாடி வீடு!  கருவறை வாசலுக்கு இந்தாண்டை இன்னும் ரெண்டு  வாசல் முற்றம் பார்த்தபடி.

கீழே படம்:  வலது பக்க  ஓரம்தான் கருவறை வாசல். இடது வாசல் தாயாருக்கு.
உள்முற்றத்தில் இன்னொரு சந்நிதி எதிர்ப்பக்கம்.
ஸ்ரீராஜராஜேஸ்வரிக்கானது! மூடிக்கிடக்குது கதவு.

முதல் வாசல் உள்ளே போனால்  மஹாலக்ஷ்மித் தாயார் சந்நிதி.

கும்பிட்டுட்டு திரும்பிவராம நேரா அந்தாண்டை வாசல் வழியா வெளிமுற்றம் போகலாம். அங்கே  போன பின்  வலதுபக்கம் மாடிக்குப் போகும் படிக்கட்டுகள்.
படிகளில் ஏறிப்போனால் விஸ்தாரமான ஹால்.  ஹாலின் ஒரு கோடியில்  ஆதிசங்கரருக்கான  இடம்.  மேடையில்  சிலைகள். இங்கேயும் கம்பித் தடுப்புகள்தான். மஞ்சப்பட்டுகளால் அலங்காரம்!
இங்கேதான் ஆதிசங்கரர் தவம் செய்ஞ்சாராம். தரையில் நல்ல கம்பளவிரிப்பு போட்டு அருமையா இருக்கு. நாமும் ஒரு அஞ்சு நிமிட்ஸ் உக்கார்ந்து  பயணத்தில் இதையெல்லாம் பார்த்து அனுபவிக்கச் சான்ஸ் கொடுத்த பெருமாளுக்கு நன்றி சொல்லிட்டு, நம்ம பாபம் எல்லாம் போச்சுன்ற  மகிழ்ச்சியுடன் இன்னொருக்காப்போய் மூலவரைக் கும்பிட்டுக்கிட்டு வெளியே வந்தோம்.
மேலே படம்:  கூகுளாண்டவர் அருளியது! 

இப்ப இன்னும் நல்லா உத்துக் கவனமாப் பார்த்தப்ப... ராமன் சிலை கருப்புப்பளிங்கிலும், லக்ஷ்மண் சிலை வெண்பளிங்கிலுமா இருக்கு!  அட! பார்த்துப் பார்த்துச் செஞ்சுருக்காங்க !

மூலவருக்குப் பரமபுருஷர்னும், தாயாருக்கு  பரிமளவல்லி நாச்சியார்னும், பெருமாளுடைய  ரூபம்  புஜங்க சயனத்தில் கிடப்புன்னும் ஆழ்வார் சொல்லி இருக்கார்.   அந்தக் கோவில் ஹிமாச்சலில் எங்கியோ இருக்குன்னும் சொல்றாங்க.  இவர் ஒவ்வொரு பாசுரத்திலும்  'பிரிதிசென்றடைநெஞ்சே' ன்றதைக் கவனிச்சால்....      மனக்கண்ணில் பார்த்திருப்பாரோன்னு எனக்கொரு சம்ஸயம்..
முற்றத்தில் இருக்கும் படிகளேறி  வெளிப்புறம் வந்தாச்சு.   இன்னும் இந்தப் பகுதியில் ஒரே ஒரு  கோவில்தான் பாக்கி.   நூத்தியெட்டில் ஒன்னு!
புதுக்கோவில் வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு. நம்மூர்ப்பக்கம் சித்தாட்கள், கல்லைத் தலையில் சுமந்து போறதுமாதிரி இல்லாமல் இங்கே  முதுகில் சுமக்கறாங்க. அதுவும்  ஒரு பையில் கல்லு!  சாக்குப்பையில் போட்டுத் தூக்கிப்போவதும் வசதியாத்தான் இருக்கு. போட்டுருக்கும் சட்டை அழுக்காகாது!




7 comments:

said...

நாமும் பிரிதிசென்று அடை நெஞ்சே என்று சொல்லாமல், போய்ச் சேவிக்கும்படியாக அவன் அருளணும். அதுவரை, நீங்கள் எழுதியதைப் படித்துக்கொள்கிறேன்.

ஆதிசங்கரர் அதிஷ்டானம் எங்க இருக்கு? அவர்தானே பத்ரி கோவிலை சரி செய்தது? இதுவரை, திருப்பிரிதி ஜோஷிமட்ல இருக்குன்னு தெரியலை. பத்ரி'நாராயணர்தான் குளிர்காலத்தில் ஜோஷிமட் கோவிலுக்கு வந்திருவார்னும், அந்தக் கோவில் அர்ச்சகர்கள் 6 மாதம் ஜோஷிமட்லதான் தங்கியிருப்பாங்கன்னும் படிச்சிருக்கேன்.

said...

மனக்கோயில் கொண்டெழுந்தான் பரந்தாமன்னு வாணி ஜெயராம் பாடிய எம்.எஸ்.வி பாட்டு ஒன்னு இருக்கு. ஆழ்வார் மனசால வைகுண்டத்தையே பாக்குறப்போ இந்த ஒரு அருட்கோயிலை நினைக்கிறதெல்லாம் ஒரு விஷயமா!

கிருஷ்ணரைக் கட்டனும்னு போட்டி. எல்லாரும் கயிறு சங்கிலி நார்னு வெச்சுக் கட்டுறாங்க. ஆனா முடியல. ஆனா சகாதேவன் மனதால் கட்டுறான். உடனே கிருஷ்ணர் கட்டுப்பட்டு நின்னுட்டாராம். அப்போ நாமளும் மனதால் அடையலாமா? அடையலாம். உள்ளமெனும் கோயிலிலே உறைகிறாய் குமரான்னு சீர்காழி பாடிய பாட்டொன்னு இருக்கே.

ஆண்டவனுக்கு மட்டுந்தான் இந்த உள்ளத்தால் நினைத்து ஆக்க முடியுமா? உலகத்தில் எல்லாத்தையும் உள்ளத்தால் கட்டுவிக்கலாம். ஆனா அதில் நேர்மை வேண்டும். நேர்மையற்ற திருட்டுத்தனத்தால் ஒன்றும் செய்ய முடியாது.

கோயில் ஒரு வீடு மாதிரிதான் இருக்கு. வடக்கத்திய வீடுன்னு யோசிக்காமச் சொல்லீறலாம். ஆனா இதைப் புதுசா எடுத்துக்கட்டினா பழமைக்குரிய அழகு போயிருமோன்னு யோசனையாவும் இருக்கு.

பாசுரம் தமிழ்ல எழுதியிருக்கு. அது என்ன மொழின்னு கூட அங்க வர்ர பலருக்குத் தெரிஞ்சிருக்காது. கோயில்ல எழுதியிருப்பதால அது எதோ பெரிய விஷயம்னு மட்டும் நெனைச்சிருப்பாங்க. திடீர்னு நீங்க அதைப் படிச்சதும் ஒங்களை மாஞானியாவே பாத்திருப்பாங்க. நீங்க ஒரு டீச்சர்னு அவங்களும் புரிஞ்சிக்க ஒரு சந்தர்ப்பம் கெடைச்சிருக்கு.

said...

அருமை. தரிசனம் செய்து வைத்ததற்கும் என் பாவம் போக்கியதற்கும் கோடி நன்றி.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

சங்கரமடம் தனியா இருக்கே! ஆதிசங்கரர் அதிஷ்டானம் இங்கேயா? தெரியலையே.....

பத்ரி ஆறுமாசக் கேம்ப் இங்கேதான். இந்த வருசம் புதுக்கோவில் அவருக்கு ! நாம் பார்த்தே இப்ப 9 மாசம் ஆகுதே. புதுக்கோவிலைக் கட்டி முடிச்சுருப்பாங்கன்னு நினைக்கிறேன்.

said...

வாங்க ஜிரா.

என்ன பழமையோ..... வலையில் தேடினால் இந்தக் கோவில் படங்கள் வெவ்வேற மாதிரி பல காலக் கட்டங்களில் இருந்துருக்குன்னு தெரிஞ்சது. இப்ப நாம் பார்ப்பது சமீபத்திய மாறுதலாக இருக்கணும்.

கடவுளர்களைப் புதுக்கோவிலில் இடம் மாற்றிட்டு, இதை பழையபடி ஆதிசங்கரர் கட்டியாக வைப்பாங்க போல !

என்னது மாஞானியா? மாஅஞ்ஞானிதான் பொருத்தமா இருக்கும் :-)

said...

வாங்க விஸ்வநாத்.

டெம்ப்ளேட் பின்னூட்டம் போயிருக்கு? பாவங்கள் தொலைந்தன :-))

said...

நூத்தி எட்டில் உங்கள் மூலம் இன்னுமொரு தரிசனம்.....

ஜோஷிமட் என்ற பெயரில் தான் இங்கே பிரபலம் - திருப்ரிதி என்று சொன்னால் இங்கே இருப்பவர்களுக்குத் தெரிவதில்லை.

தொடர்கிறேன்.