Wednesday, June 28, 2017

அப்படி என்னவாம் விசேஷம் இந்த பத்ரியில் ? (இந்திய மண்ணில் பயணம் 23)

இந்தக்கோவிலில் அப்படி என்ன ஸ்பெஷல்? எதுக்காக சனம் இவ்ளோ ரிஸ்க் எடுத்து இங்கே வருது?  இதுக்கு நான் பதில் சொல்றதைவிட  வசிஷ்ட மஹரிஷி தன் வாயாலே என்ன சொல்லி இருக்காருன்னு  பார்க்கலாம்.
வசிஷ்ட முனிவரின் மனைவி அருந்ததி பத்ரிநாத் தலத்தின் பெருமைகளை கூறுமாறு கேட்க வசிஷ்டர் கூறுகின்றார். " பத்ரிநாத்தை தரிசிப்பவன், அவன் எப்படிப்பட்ட பாவியாயினும், பக்தியினால் புனிதமடைந்து  மோக்ஷமும் அடைகின்றான். பத்ரிநாதரின் தரிசனம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. எவனொருவன் வாழ்நாள் முழுவதும் இறைவனை பிரார்த்தனை செய்கின்றானோ, அவனுக்குத்தான் பத்ரிநாதரின் தரிசனம் கிட்டுகின்றது. அவனுடைய பாவங்கள் நீங்கும். உள்ளம் தூய்மை பெறும். எந்த குற்றத்தை செய்தவனும், வேறெந்த க்ஷேத்திரத்திலும் அவனுடைய பாவங்களிலிருந்து விடுபட வழியின்றிப் போனவனும் கூட பத்ரிநாதரின் கருணையினால் சுவர்க்க லோகத்தை  அடைகின்றான்.  எவன் கங்கையில் நீராடி, உடைகளையும், ஆபரணங்களையும் பத்ரிநாதருக்கு சமர்பிக்கின்றானோ அவனுக்கு மோட்ச லோகத்தில் நிச்சயம் இடம் கிட்டும். எவன் அகண்ட தீபம் ஏற்றுகின்றானோ அவன் சிரேஷ்டராகின்றான். எவன் பத்ரிநாதரின் கோயிலை வலம் வருகின்றானோ, அவரது பாதாரவிந்தங்களை பற்றிக் கொண்டு பிரார்த்தனை செய்கின்றானோ அவன் அஸ்வமேத யாகம் செய்த பலனை பெறுகின்றான்."

  இப்படியெல்லாம்  சிறப்பா, வசிஷ்டரே  சொன்ன   பத்ரிநாத்  கோவிலுக்கு  இன்னும் ஒருக்கா போய் தரிசனம் செஞ்சுக்கிட்டால் என்ன தப்பு?  இங்கெதானே இருக்கோம், இப்ப!  பழைய காலத்துலேதான்  பாதையே இல்லாம ரொம்பவே கஷ்டப்பட்டு, உயிரைப் பணயம் வச்சுப் பயணம் செஞ்சுருப்பாங்க.... இப்ப... ரொம்பவே நோகாமதானே  நோம்பு கும்பிட்டுக்கிட்டு இருக்கோம்?

மானா சாயாவை மறக்கலாமேன்னு  ரூம் சர்வீஸில் ரெண்டு டீ சொல்லிட்டு அது வந்தவுடன் குடிச்சுட்டுக் கிளம்பினோம்.  இப்பவே மணி அஞ்சாகுது.   சாயங்காலம் ஆச்சுன்னா    குளுர் வந்துரும். ஜாக்கெட் எல்லாம் போட்டுக்கிட்டுத்தான் போகணுமுன்னு நம்மவரின்  கண்டிப்பு வேற!    
வழக்கம்போல் (!) கடைவீதி முட்டுலே இறங்கி  சந்துக்குள்ளே நடந்து பாலத்தாண்டை போறோம். தெருவின் ஓரத்தில் மச்சு போல இருந்த இடத்தில் யாசகம் கேட்போர் வரிசையா உக்கார்ந்துருக்காங்க. அவுங்களுக்குப் போட சில்லறையா இல்லையேன்ற கவலையைப் போக்கும் வியாபாரம் ஒருத்தர் செஞ்சுக்கிட்டு இருக்கார் அதே வரிசையில்!

தூரக்கக் கோவில் வாசல்.  என்னா அலங்காரம்!  பளிச்னு  என்னா கலர்!  சேடிகளுக்கு நடுவிலே நிக்கிற ராஜகுமாரி போல ஜொலிப்பு!
படிகளில் கூட்டமில்லை!!   எல்லாரும் எங்கே போயிட்டாங்க?  கோவிலுக்குள்ளே இருக்காங்களோ?
மேலே தெரியும் கோவிலுக்கு முன்னால்  பெரிய வெளி முற்றம் இருக்கு.  அது உண்மையில் கீழே இருக்கும் ஒரு கட்டடத்தின் மேல்தளம்தான். மொட்டை மாடி.  அங்கிருந்தே  ரெண்டு ஓரங்களிலும்  படிகள்!  இடப்பக்கம் உள்ளது நாம் பாலத்தின் வழியாப் போனால் மேலே கோவிலுக்கு ஏறி இறங்கும் வழி.  வலப்பக்கம் உள்ளது  கீழே தப்த் குண்ட் (வெந்நீர் குளம்)  போய்வரும் வழி. படிகள் வரிசையைப் பார்த்தாலே  கோவில் எவ்ளோ உசரத்தில் கட்டி இருக்காங்கன்னு புரிஞ்சு போகுது!
பாலம் கடந்து படிகளேறிக் கோவிலுக்குள் போறோம்.  நினைச்சது சரிதான். எல்லாக் கூட்டமும் இப்போ உள்ளே!
மஹாலக்ஷ்மி சந்நிதிக்கு  முன்னால் இருக்கும்  கருவறைக் கட்டட வாசலையொட்டி  ஒரு வரிசை சனம்! ஆரத்திக்குக் காசு கட்டி இருக்காங்களாம். நாமும் ஒரு ஆரத்தி ஸேவை பார்க்கலாமான்னு  தோணுச்சு.  கவுன்ட்டரில்  கேட்டோம்.  மூணு வித ஆரத்தி ஸேவை.  கற்பூரம், வெள்ளி, தங்கம்!  கற்பூரம் கூடாதுன்னு நம்ம பக்கங்களில் சொல்றதில்லை?  அது வேணாம். சாமி முகத்துலே புகை படிஞ்சுரும். வெள்ளிக்கும் தங்கத்துக்கும் அப்படி ஒன்னும் பெரிய வித்தியாசம் இல்லை. ஐ மீன் கட்டண விவரத்தில் .... தங்கமே இருக்கட்டும்.

 காசைக் கட்டிட்டு, வரிசையில் போய் நின்னோம்.  கோவில் ஆள் ஒருத்தர் அப்பப்பக் கதவைத் திறந்துக்கிட்டு வந்து  கற்பூர ஆரத்தி மக்களைக் கூட்டிக்கிட்டுப்போறார்.  பத்துப் பதினைஞ்சு பேர் ஒரு  முறைக்கு....
மூணு மணியில் இருந்து ஆறு மணி வரை இந்த மாதிரி ஸேவைகள்.  சாமிக்கு இடதுபக்கக் கதவை மூடி வச்சுடறாங்க.  வலது பக்கக் கதவு (இப்ப நாம் நிக்கிறோமே அந்தப் பக்கக் கதவுதான்) அப்பப்பத் திறந்து மூடிக்கிட்டு இருக்கு.

 இந்தக் கோவிலில் பூஜை செய்ய ஒரு குறிப்பிட்ட  மக்களைத்தான் ஆதிசங்கரர் நியமிச்சுட்டுப் போயிருக்கார். கேரள நம்பூதிரிகள். இங்கே அவுங்களை  ராவல் னு சொல்றாங்க.  பாருங்க ....  எங்கே இருந்து எங்கே கொண்டுவந்து விட்டுருக்காருன்னு!  சொந்த மக்கள் அபிமானம் எல்லோருக்கும்தான் இருக்குல்லே? சந்நியாஸி உட்பட!  (சந்த்ர மண்டலத்தில் சேட்டனின் சாய்க் கடைன்னு கேலி  செய்யறது ....  உண்மையில் கேலியே இல்லையாக்கும்! )

நாம் காத்மாண்ட் லெமன்ட்ரீயில் சந்தித்த கோவிந்தன் நம்பூதிரி கூட , அவருடைய  உறவினர்  ஒருத்தர் இங்கே  கோவில் பண்டிட்டா இருக்காருன்னு  பெயர், செல் நம்பர் எல்லாம் கொடுத்துருந்தார்தான். ஆனால்....  வந்தவுடனே தரிசனம் கொடுத்துட்டாரே நம்ம பத்ரிநாராயணர்னு  பண்டிட்டைத் தொந்திரவு செய்யலை.

ஆரத்தி வரிசை குறைஞ்சு போயி, வெள்ளிக்கு வந்தாங்க....  அடுத்து நாம்தான்ன்னு இருந்தப்ப நீங்களும் வாங்கன்னு உள்ளே கூப்புட்டுப் போயிட்டாங்க.  கருவறை நிலைப்படிக்கு முன் இருந்த ஏழெட்டுப்பேர்களுக்குப் பின்னால் உக்கார இடம் இருந்தது.  அதுவும் நான் கொஞ்சம் உயரம் குறைவா இருக்கேனா....   என் கண்ணுக்கு நேரா கல்லாப்பெட்டிதான்  :-(  பாதி வாசலை அடைச்சுக்கிட்டு அது உக்கார்ந்துருக்கே!  நம்மவர், இடுக்கில் கஷ்டப்பட்டு  இன்னும் கொஞ்சம் வலது பக்கமா நகர்ந்து இப்பப் பார். சாமி தெரியுதான்னார். தெரிஞ்சவரைக்கும் ஆகட்டும்னு  தலையாட்டினேன்.

நீளக் கைப்பிடி உள்ள வெள்ளி  வால் விளக்குலே திரி போட்டு தீபம் ஏத்தி  முதலில் ஆரத்தி எடுத்தாங்க. அடுத்தாப்லே  தங்க வால் விளக்கு. தீபக்கரண்டி!  ஆர்த்தி ஆனதும் எல்லோரும் எழுந்து நின்னோம். ஒவ்வொருத்தரா கல்லாப்பொட்டியாண்டை போய்  அந்தாண்டை கை நீட்டி  சாமி ப்ரஸாதம் வாங்கிக்கணும். அதுக்கு முன்னால்  கல்லாப்பொட்டியில்  காசு போடணும். நமக்கு முன்னால் இருந்த  அத்தனை பேரும் போனபின் நாங்க பொட்டியாண்டை போறோம்.
கோபால்  அதுக்குள்ளே நோட்டுகளைப் போட்டார்.  அந்தாண்டை இருந்து ஒரு கை காஞ்சு போன துளசியைக் கொஞ்சம் பிய்ச்சு அவர் கையில் திணிச்சது. அடுத்து நான்.....   உள்ளே இருக்கும் பத்ரிநாராயணனைக் கைகூப்பி வணங்கினேன்...  ஹூம்.... என்றொரு உருமல்....  கல்லாப்பொட்டியைக் காமிச்சு காசு போடுன்னு செய்கை  காமிச்சது  அந்தக் கை. என் கையிலேதான் எப்பவுமே ஒன்னும் இருக்காதே கெமெராவைத் தவிர..... இப்ப அதுகூட இல்லை. கோபாலின் பேண்ட்ஸ் பாக்கெட்டில் இருக்கே அதுவும். நானும் சைகை மொழியில்   முன்னால் போனவர் போட்டுட்டாருன்னு  கையை வீசிக் காமிச்சேன்.  இன்னொரு காய்ஞ்ச துண்டு துளசி,  வீசி எறிஞ்சாப்லெ என் கைக்கு வந்தது. வாங்கி அங்கேயே சாமிக்கு முன்னால் போட்டுட்டு வந்துட்டேன்.

நம்மவர் கூடக் கேட்டார்.... 'ஏன் அங்கேயே  வச்சுட்டு வந்தே?'ன்னு.

'பெருமாளுக்குப் படைச்சுட்டேன்'னேன்.  ஆச்சு தரிசனம்.  கருவறையை வலம் வந்து தாயாரைக்  கும்பிட்டதும் அடுத்த ஸ்டாப் நேரா நம்ம அர்ஜுனன் கிட்டேதான்.

அப்பதான் அபர்ணாவைப் பார்த்தேன்.  ஸேவகி.  தன்னார்வலர்.  ஒடிஞ்சு விழறதுபோல் ஒல்லியான உடல்.  ரெண்டு வருசமா இங்கே இருக்காங்களாம். அர்ஜுனன் அழகை விஸ்தாரமாப் பேசிட்டு, பத்மாசனம் போட்ட பெருமாளுக்கு முன்னால் இருக்கும் சின்னூண்டு  உருவங்கள் யார்னு கேட்டதுக்கு, ஒரு விநாடி யோசிச்சவங்க   ஸ்ரீதேவி பூதேவின்னு சொன்னாங்க. தேவிகளுக்கான அம்ஸம் துளிகூட இல்லை. இவர்கள்   ஆழ்வார்களா இருக்கணும் என்றது என்  எண்ணம்.

இந்தக் கோவில்  108 திவ்யதேசங்களின் பட்டியலில் இருக்கு. ஆழ்வார்கள்    பாசுரங்கள் பாடி  மங்களாசாஸனம் செஞ்சுருக்காங்கன்னதும்,  கொஞ்சம் முழிச்சாங்க. நாம்தான் பெருமாள் பெருமாள்னு  திவ்யதேச தரிசனத்துக்காக ஓடுறோமே தவிர, வடக்கீஸ்  பொதுவாக, தென் நாடுன்னா   ராமேஸ்வரம்தான்னு  இருந்துடறாங்க. அதுக்கு வர்ற வழியிலே இருப்பதால்  மீனாக்ஷியும் கொஞ்சம் இதுலே சேர்த்தி.

அபர்ணா , குடும்பவாழ்வில் ஏராளமான மனக்கசப்பை  அனுபவிச்சுட்டு, இங்கே வந்தவங்க. வந்த புதுசுலே கோவிலில் நிறைய பெண் ஸேவகிகள் இருந்துருக்காங்க. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா பலரும் கிளம்பிப் போயிருக்காங்க. 'போக்கிடம் இல்லாமப்போச்சு.... அதுதான் பத்ரியே கதின்னு இங்கேயே இருந்துட்டேன்'னு  சொன்னப்ப எனக்கு மனசுக்குப் பேஜாராப் போயிருச்சு.  பல சமயங்களில் குடும்பமே இப்படி கொஞ்சநஞ்சம்   இருப்பதையும் உருவிக்கிட்டு விட்டுருதே....  :-(

இத்தனை பேச்சும் அந்த அர்ஜுனன் முன்னால் நின்னுக்கிட்டுதான். நம்மவர் போய்  பிரகாரத்தின் ஒரு பக்கம்  படிக்கட்டில் உக்கார்ந்துக்கிட்டு இருந்தார்.  அவரிடம் போய் ஒரு தொகை வாங்கிவந்து அபர்ணாவின் கையில் திணிச்சேன். 'எனக்கு வேணாம், மாதாஜி'ன்னு சொல்லும்போது அபர்ணாவின் கண்ணில் மளமளன்னு கண்ணீர்.   இளம்விதவைகள் நிலை, வடநாட்டில் ரொம்பவே  கொடூரம்தான். 'வச்சுக்குங்க  அபர்ணா.  உங்களுக்கு எதாவது செலவுக்கு ஆகும்.  வேணவே வேணாமுன்னு நினைச்சா.... யாராவது ஏழைகளுக்கு  இதுலே சாப்பாடு வாங்கிக் கொடுங்க'ன்னுட்டு  அவுங்களை கட்டிப்பிடிச்சு  தோளில் தட்டிக் கொடுத்துட்டு  வந்தேன். ஆறுதலை இப்படிக்  காமிச்சது  சரிதானே?

 காலையில்  நாலரைக்குக் கோவில் திறந்துருவாங்க,  வருவீங்கதானேன்னு  கேட்டதுக்கு  ஆமாம் இல்லை னு ரெண்டுக்கும் பொதுவா ஒரு தலை ஆட்டி வச்சேன்.  வந்துட்டாலும்.....  மைண்ட் வாய்ஸ்தான்....

அப்பதான் ஞாபகம் வந்துச்சு... இந்த வதரி மரத்தை இன்னும் பார்க்கலையேன்னு.... அபர்ணாவிடம்  கேட்டதுக்கு, தப்த் குண்ட் பக்கம் நிக்குதேன்னாங்க.  ஆமாம்... எதோ மரம் பார்த்த நினைவு. ஆனா அதுதான் இதுன்னு தோணலை பாருங்க.......

 கருவறையைப் படம் எடுக்கக்கூடாதுன்றது கூடச் சரி. ஆனால்      கோவிலுக்குள்ளே பிரகாரம் கூடப் படம் எடுக்கக்கூடாதுன்னு  விதிச்சு இருக்கறதை  நொந்துக்கிட்டேன்.  அந்த அர்ஜுனனை உங்களுக்குக் காட்டமுடியலை பாருங்க  :-(

உங்களுக்கு அதிர்ஷ்டம்தான் போங்க....

இந்த அர்ஜுனனைத் தேடிக்கிட்டே இருந்தேன். தேடல் தவம் பலிச்சுருச்சு. நாலு வருஷங்களுக்குப்பின் படம் ஒன்னு கிடைச்சது.  அதே அர்ஜுன் இல்லைதான். ஆனால் ஏறக்கொறையன்னு  சொல்லிக்கலாம்.  அந்த அர்ஜுன் இன்னும் அழகு!  உயரமும் கூடுதல்.   வலப்பாதம் இடது முழங்காலோடு ஒட்டியே இருந்தது. அதே வேணுமுன்னு இன்னும் தவம் செய்யலாமா ?  ஊஹூம்... நடக்காத வேலை. அதைப்போலன்னு சொல்லி இங்கே அந்தப் படத்தைச் சேர்த்துட்டேன்.  பார்த்துக்குங்க.  இதை ஒரு மாதிரிப் படமா வச்சுக்கிட்டு, நேரில் பார்க்கும்போது  ஆறு வித்தியாசம் சொல்லணும், ஆமா :-)

இப்படி இருக்குமிடத்திலும் கூட யாரோ கருவறையைப் படம் புடிச்சுருக்காங்க. கூகுளாண்டவர் அருளிச்செய்தார்! அதைத்தான் மேலே போட்டுருக்கேன்.
கோவிலைவிட்டு வெளியே வந்து  பத்து நிமிட் போல சிம்ம வாசல்   வெளிப்படிக்கட்டில்  உக்கார்ந்துருந்துட்டு பாலத்துக்கு வரும் வழியில்  வலதுபக்கமாப் போகும் வழியில் என்னதான் இருக்குன்னு பார்க்கப்போனால்...


ரெண்டுபக்கமும் அடை அடையாக் கடைகள். சாமிச்சாமான்கள்தான். போர்டில் பார்த்த சரண்பாதுகா என்ற  இடம் எங்கெருக்குன்னு  விசாரிச்சதில்...  இப்படியே ஒரு அரைக்கிமீ தூரம் நடந்து, அப்புறம் லெஃப்ட்லே போகணுமாம்.  பாமனி காவ் வரும் அதையும் தாண்டி மலைப்பாதையில்  போகணும்.  எல்லாம் அஞ்சாறு கிலோமீட்டர்....   'ஆமாம்... இப்ப இருட்டுனபிறகு எப்படிப் போவீங்க?'
ஐயோ.... அதானே...  இருட்டிப்போச்சே.... இனி போகத்தான் முடியாது :-(

 (மனசுக்குள்ளே ஒரு ஆசுவாசம்.... ஆறு கிமீ? )

அங்கே என்ன விசேஷமாம்?  மஹாவிஷ்ணுவின் பாத அடையாளம் இருக்காம் ஒரு குகைக்குள்ளிலே.....  இருக்கட்டும்.    வலைக்கண்ணில் பார்த்துக்கலாம்....

திருமங்கை கூட மனக்கண்ணில் பார்த்துத்தான் முதலில் பாடி இருப்பார்....   பாரோர் புகழும் வதரின்னு ஆரம்பிச்சு....  நிறுத்தாம  சரசரன்னு  மடலூர்தல் வரை பாடிக்கிட்டே போனால்  என்னன்னு சொல்றது?

பாரோர் புகழும் வதரி வடமதுரை
ஊராய வெல்லாம் ஒழியாமே நானவனை
 ஓரானை கொம்பொசித் தோரானை கோள்விடுத்த
சீரானைச் செங்கணெடியானைத் தேந்துழாய்த்
தாரானை தாமரைபோல் கண்ணனை யெண்ணருஞ்சீர்ப்
பேராயிரமும் பிதற்றி பெருந்தெருவெ.....

22 பாசுரங்கள் பாடி மங்களாசாஸனம் செஞ்சுருக்கார். நம்ம பெரியாழ்வாரும் விட்டு வைக்கலை!


பாலம் கடந்து  கடைகளைத் தாண்டினதும் தெருமுக்கிலேயே இருந்த முகேஷ் நம்மைக் கண்டுக்கிட்டு  வண்டியைக் கொண்டு வரேன்னு போனார். இருட்டுலே எங்கே போய் தேடுவாங்கன்னு நினைச்சுருக்கலாம்.  கண்ணுக்கு முன்னால் இருந்த ஒரு கடைக்குள் எட்டிப் பார்த்தேன்.  ஷால், போர்வை, கம்பளின்னு விக்கறாங்க.  ஒரு ஜோல்னாப் பை ஆப்டது. யானை  பார்டர்!  வாங்கியாச். ஆனால் அந்தப் பை எவ்ளோ வசதியா இருக்குன்னு  பாக்கிப் பயணத்தில் தெரிஞ்சுக்கிட்டேன்.  அருமை.
ஹொட்டேலுக்கு வந்து சேர்ந்தோம். அஞ்சு முகமும் பளிச்ன்னு எரியும் குத்துவிளக்கு ! நாராயணனும் புள்ளையாரும்  அமைதியா இருக்காங்க.
அப்புறம் எட்டரைக்குச் சாப்பிடப்போனோம். பஃபே டின்னர்தான்!

காலையில் சீக்கிரம்  எழுந்தால் .....  கோவிலுக்கு இன்னொருக்காப் போய் வரலாம்.  சரியா?

குட்நைட்.

தொடரும்...........  :-)


14 comments:

said...

பத்ரிநாதரைப் பற்றி வலைப்பதிவில் படித்து, படங்களில் பார்த்துக் கொண்டால் புண்ணியம் இருக்கா என்று வசிஷ்டரைக் கேட்டுச் சொல்லங்க ப்ளீஸ்...!!

அபர்ணா தன் ராமனை மன்னிச்சுட்டாங்களாமா?!!

படங்கள் பிரமாதம் - வழக்கம்போல்.

said...

வாங்க ஸ்ரீராம்.

அதுக்கென்ன கேட்டால் போச்சு! ஆனாக் கொஞ்சநாள் ஆகும், பரவாயில்லைதானே? அதுக்குள்ளே அங்கேயும் இதெல்லாமும் வந்துரும்தானே? வைஃபை பிரச்சனை இருக்காது :-)

அபர்ணாவின் ராமன் மண்டையைப் போட்டதுதான் பிரச்சனையே.... ப்ச்....

said...

// வாங்கி அங்கேயே சாமிக்கு முன்னால் போட்டுட்டு வந்துட்டேன். //
மகாலக்ஷ்மி கிட்டேயே மால் கேட்டா, கோபம் வரத்தானே செய்யும்.

//ஆறுதலை இப்படிக் காமிச்சது சரிதானே?//
நடமாடும் கோவிலுக்கு எவ் உதவி செய்தாலும் அது படமாடும் கோவிலுக்குப் போகும்னு திருமூலர் சொல்லியிருக்காரே


said...

அடடா... ஒரு தரிசனம் முடிந்து மறுதரிசனமா. அருமை. ஒரு முறை சமயபுரத்தில் அந்தத் தாய் இப்படிதான் கூட்டமில்லாமல் தரிசனம் கொடுத்தாள். ஒரு தரிசனம் முடிந்து சட்டென்று மறுபடியும் உள்ளே சென்று தரிசித்தோம். அதுதான் இப்போது நினைவுக்கு வருகிறது.

அந்தத் துளசியை அங்கயே விட்டுட்டு வந்தது நல்லது. இவங்க கொடுக்குற பிரசாதம் பரசாதம். உண்டியலை அவங்களே திறந்துக்கலாம். எடுத்துக்கலாம். மூடிக்கலாம். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோயில் இல்லாட்டி இதுதான் நிலை. தமிழ்நாட்டுல கோயில்களை அறநிலையத்துறை கட்டுப்பாட்டுல இருந்து எடுக்கனும்னு ஒரு கூச்சல். எல்லாம் எதுக்கு? இதுக்குதான். ஆனா போலிக் கரிசனக் காரணங்களை மட்டும் அடுக்குவாங்க.

அபர்ணாவுக்கு நீங்க செய்த சிறு உதவி, பதரிநாதனுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். கைம்பெண்களுக்கு வடக்கு எப்பவும் இடக்குதான். அபர்ணா அகமும் புறமும் மகிழ்ந்து வாழும் வழியை பதரிநாதன் கொடுக்கனும்னு வேண்டிக்கிறேன்.

said...

என்னவோ தெரியலை.. இந்தக் குறிப்பிட்ட யாத்திரை மட்டும் என்னை ரொம்பவும் கவர்கிறது. ஒருவேளை நான் போகவேண்டும் என்று நினைத்துள்ள கங்கைப் பாதையில் வரும் ஆலயங்களினாலா தெரியவில்லை.

இந்த மாதிரி யாத்திரையின்போதுதான், ஹிந்தி எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்துகொள்ளமுடியும். நஹி மாலும் தவிர வேறு தெரியாமல் எப்படி ஒரு இடம் விடாமல் யாத்திரை செய்வது?

'உண்டியலைக் கண் காட்டுவதற்கு' இதுதான் அர்த்தமா ராகவன் ஜி?

ஸ்ரீராம் பின்னூட்டங்களைப் படிக்கும்போது எனக்குத் தோன்றும். ஏன் அவர் இந்தமாதிரி யாத்திரைக்கு வாய்ப்பே இல்லை என்று நினைக்கவேண்டும்? அவன் நினைத்துவிட்டால், வாய்ப்பு எப்படி வரும் யார் கொண்டுவருவார்கள் என்பது யாருக்குத் தெரியும்? நிச்சயம் அவரும் செல்வார்/செல்லவேண்டிய வாய்ப்பு வரத்தான் செய்யும்.

said...

வசிஷ்டர் சொன்னதை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி.

said...

//ஸ்ரீராம் பின்னூட்டங்களைப் படிக்கும்போது எனக்குத் தோன்றும். ஏன் அவர் இந்தமாதிரி யாத்திரைக்கு வாய்ப்பே இல்லை என்று நினைக்கவேண்டும்? அவன் நினைத்துவிட்டால், வாய்ப்பு எப்படி வரும் யார் கொண்டுவருவார்கள் என்பது யாருக்குத் தெரியும்? நிச்சயம் அவரும் செல்வார்/செல்லவேண்டிய வாய்ப்பு வரத்தான் செய்யும். //

நானும் வரவேண்டும் என்றே விரும்புகிறேன்.

நன்றி நெல்லை.

said...

வாங்க விஸ்வநாத்.

அதான் அவுங்களுக்கு தேவைக்கு மேலேயே சாமி கொடுத்துருக்காரே.... இன்னும் எதுக்கு இந்தப் பேராசை?

said...

வாங்க ஜிரா.

மதுரா விருந்தாவனத்தில் விதவைகள் நிலை பார்த்து நெஞ்சே உடைஞ்சு போச்சு :-( ஒருத்தன் தன் விதி முடிஞ்சு சாகறான். அதுக்கு அந்த மனைவி என்ன செய்வாங்க? ப்ச்....

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

குழுவா யாத்திரைக்குக் கொண்டுபோறாங்களே அதில் போனா மொழிப்பிரச்சினை இருக்காது. சாப்பாடு பிரச்சனையும் இல்லை. அவுங்களே நம்ம சாப்பாட்டை ஆக்கியும் போட்டுருவாங்க. செலவும் ரொம்பவே குறைவு!

எங்களை மாதிரி தனியாப் போனால்தான் சிலபல பிரச்சனைகள். குழுவில் போக நம்ம பயணங்களில் சாத்தியம் இல்லை.

கெட்டதில் நல்லதுன்னா.... நம்ம விருப்பப்படித் தங்கி அக்கம்பக்கம் பார்த்து வரலாம். குழுவில் போனால் கோவில் மட்டும்தான்.சாமி கும்பிட்டயா.... சலோ அடுத்த கோவில்....

said...

எனக்கும் இந்த பத்ரி நாதரை போய் விரைவில் தரிசிக்க வேண்டும் என்ற ஆசை வருகிறது...உங்க படங்களையும் ...செய்திகளையும் படிக்கும் போது...

அப்பா 1௦ வருசத்துக்கு முந்தி அங்க யாத்திரை சென்ற போது அங்கிருந்து போன் செஞ்சு...அம்மா நாங்க எல்லாம் 55 வயசில தான் வந்தோம்..ஆன நீங்க நல்லா தெம்பா இருக்கும் போதே பசங்களோட வந்து பாருங்க..ரொம்ப நல்லா இருக்கும்னு ..சொன்னார்,,,அது இன்னும் நினைவில் இருக்கு..

....நமக்கு ஆசை இருந்தாலும் அவர் நினைக்கனுமே...

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

உண்மை. 'அவன்' நினைக்கணும்.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

நன்றி.

said...

மீண்டும் ஒரு முறை பத்ரிநாதனின் தரிசனம்.....

உங்கள் தயவில்.

தொடர்கிறேன்.