Saturday, December 06, 2025

மல்லிகையும் மாம்பழமும்..............

கிட்டக்க வந்தாச்சுன்னு சேதி......  வரவேற்புக்கு ஓடினேன். ரங்கூன் ரோடு வாசல் வழியாக வர்றாங்க.  கண்களில் பேரன்பும் மலர்ந்த முகமுமாக ! குசலவிசாரிப்புடன் அறைக்குப் போனோம்.  மல்லிகை என் கையிலும் மாம்பழம் நம்மவர் கையிலுமாக இடமாற்றம்.
ஃபேரர்பார்க் நிறுத்தமுன்னு நான் சொல்லியிருந்தாலும், இதுக்கு முன்னே இருக்கும் லிட்டில் இண்டியா நிறுத்தத்தில் இறங்கி நடந்து வந்துருக்காங்க. அடராமா..... இந்த வெயிலிலா..... ஏனாம்? எல்லாம் நல்ல சுவையுள்ள பழம் தேடி !!!!

அப்பப்ப வாட்ஸப்பில் பேசிக்கிட்டாலும், எப்போ நேரில் பார்த்தேன் ?    ஏழு மாசத்துக்கு முன் ஏகாம்பரியின் வீட்டில்........ ஆனால் ரொம்பநாளான மாதிரி இருக்கு! நாங்கள் தொடர்ப்பேச்சில் இருக்கும்போது, நம்மவர் அவுங்க செல்ஃபோனைக் கடன் வாங்கி, பொட்டி தேடித்தரும்  ஆஃபீஸுக்கு ஃபோன் செஞ்சார்.  பொட்டி படம் அனுப்பலையான்னு கேட்டதும், அதையும் அனுப்பியாச்சு. 'தேடல் தொடர்கின்றது 'என்று பதில் !
பொடிநடையில் நாகர்கோவில் ஆர்ய பவனுக்குப் போனோம்.  நம்மவருக்கு தாலி. நமக்கு ரவாதோசை.  ஆறிய பவனாக  இல்லாமல்  சுடச்சுட வந்தது !   மூத்த வயதினர் பணியில் இருந்தார்கள்.  எனக்கு மனசுக்குள் ஐயோன்னு இருந்தது. ஜெ வின் பார்வையில்,  உழைத்துப்பிழைக்கும் பெண்களைக் கண்ட பெருமிதம் ! அங்கே இருக்கும் படங்களைப் பற்றிப் பேச்சு.....  லிங்கபைரவின்னு ஜெயந்தி சொன்னாங்க. நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை. ஏற்கெனவே சில சிங்கைப்பயணங்களில் இங்கே பார்த்திருந்தாலும் என்னன்னு விசாரிக்கத் தோணவே இல்லை.... அடுத்துத் தமிழின் சிறப்பு !  'ழ'




லஞ்சு முடிச்சுட்டு நிதானமாப் பொடிநடையில் நோவாடெல் வழியா ஹாலிடே இன்  வந்தோம்.

பேச்சு இன்னும் பாக்கி  இருந்தாலும்...... இன்னொரு நாள் வச்சுக்கலாமுன்னு நினைச்சோம்.  ஜெயந்தியும் கிளம்பிப்போனாங்க.  வெயிலுக்கு  ஏங்கும் நாங்க....  இங்கே அடிக்கிற வெயில் தாங்க முடியாம ஒரு தவிப்பு.  நம்மூர் ஃபோன் கம்பெனிக்குக் கூட  ஃபோன் பண்ண முடியாமல் இருக்கேன்னு 'உக்கார்ந்து' யோசிச்சதில்  பேசாம உள்ளூர் 'சிம்' ஒன்னு வாங்கிப்போட்டால் ஆச்சு.  பனிரெண்டு டாலர்தான். நேத்து ஏர்ப்போர்ட்டில் இருந்து  டாக்ஸியில் வரும்போது விளம்பரம் பார்த்தேன்னேன். 
கிளம்பி செரங்கூன் ரோடு..... கண்ணில் பட்ட முதல் ஃபோன் சமாச்சாரக் கடையில் விசாரிப்பு. ஏதாவது செட்டிங் மாறி இருக்கோன்னு நம்மவருக்கு ஒரு சம்ஸயம்.  ஃபோன் கடையில் நமக்கு உதவி செஞ்சவர், (பெயர் கோபால்)  ஃபோன் சரியாகத்தான் இருக்குன்னார்.  நம்ம பிரச்சனையைச் சொல்லி ஒரு புது ஸிம் போட்டுத் தரணும்னதும்,  ஐடிக்காக பாஸ்போர்ட் காண்பிக்கச் சொன்னார்.  திரும்பத் திரும்ப நடை ஆகாதுன்னு சொன்ன நம்மவர், அவர்மட்டும் போய் , கொண்டு வரேன்னார்.  நல்லது. எனக்கும் வேடிக்கை பார்க்க நேரம் கிடைச்சது.  அக்கம்பக்கத்துக் கடைகளில் புகுந்து புறப்பட்டேன். 

புது ஸிம் போட்டவுடன், நம்ம ஜெயந்திக்கே ஒரு டெஸ்ட் கால். வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தாச்சாம் ! இன்னும் கொஞ்சதூரம் நடந்து கோமளவிலாஸ் (பழசு ) போய் ஒரு காஃபி குடிச்சுட்டு, எதிரில் இருக்கும் வீரமாகாளியம்மன்  கோவிலுக்குள் போனோம். கோவிலில்  சாயரக்ஷை பூஜை நேரம். நல்ல கூட்டம்தான் !  

தெருவாசலுக்கு   நேரா பலிபீடம்,கொடிமரம் கடந்து மூணு சந்நிதிகள்.  நடுச்சந்நிதியில் ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ! அவளுக்கு வலப்பக்கம் புள்ளையார், இடப்பக்கம் பாலசுப்ரமணியன் !


முன்மண்டபத்தின் ஒரு பக்கம், முருகன், தன் மனைவிகளோடு  விசேஷ அலங்காரத்தில்!  கந்தசஷ்டி, நாலாம் நாள் இன்றைக்கு ! 

ப்ரகாரத்தில் வலம் வரும்போது............ திடீர்னு கண்ணில் பட்டவர் முத்தால் ராஜா.......... இதுக்கு முன்னால் பார்த்த நினைவே இல்லை.......... ஒருவேளை கண்ணில் பட்டது, மனசுக்குள் பதியவில்லையோ ?  சிங்கைக்கும் நமக்கும் நாப்பது வருஷ நட்பு இருக்கே ! இதுவரை எத்தனைப் பயணங்களோ அத்தனையிலும் இந்தக் கோவிலுக்கு வராமல் இருந்திருக்கேனா என்ன ?  
மதுரைவீரன், சின்னக்கருப்பன் & பெரியகருப்பன் மூணுபேரும்  நின்ற கோலத்தில் !

அடுத்த சந்நிதியில் ஸ்ரீ லக்ஷ்மிதுர்கை... பதினாறு கைகளுடன் !!!அதற்கு அடுத்துக் கலைமகள் வீணையும் கையுமா.....

அடுத்த சந்நிதி சமயபுரத்தாளுக்கு !  அப்புறம்  மிரட்டும் முகபாவனையில் பெரியாச்சி !!
                       
கோஷ்டத்தில் நரசிம்ஹர் &  ப்ரஹ்மசாஸ்தா !

ப்ரகாரத்தின் மூலையில் நம்ம ஸ்ரீராமர் அண்ட் கோ.  பக்கவாட்டில்  ஆஞ்சு.! ராமலக்ஷ்மண ஜானகி, ஜெய் போலோ ஹனுமானுகி ! 

வலம் முடிஞ்சு முன்மண்டபத்தில் ஏறினோம். குருபகவான் தக்ஷிணாமூர்த்தி!
அவருக்குப்பின்புறமுள்ள சந்நிதி காசி விஸ்வநாதருக்கு!  அவருக்கு இடக்கைப்பக்கம் நம்ம விசாலாக்ஷி!  வெள்ளிக்கவசத்தில் நந்தியார் !
                         
கொஞ்சம் தள்ளி நவக்ரஹ மண்டபம். இந்தப்பகுதியில் இடம் கொஞ்சம் கீக்கிடம்தான். ஆனாலும் எல்லோரையும் சேவிக்கவும்,  நவகிரஹத்தைச் சுற்றி வரவும் முடியுது ! அடுத்துள்ள சுவர் மாடத்துள் நாகர், பைரவர், இடும்பர்னு............


மண்டபத்தில் கோவில் இசைக்கலைஞர்கள்..... தவிலும், நாதஸ்வரமுமா...  வாசிப்பில் !
கடைசிப்பகுதியாக  இந்தாண்டை நம்ம விசாலாக்ஷிக்கு நேரா............  கனகசபை !

திரும்ப மூலவரை  வணங்கிட்டு சாலையைக் கடந்து  எதிர்வாடைக்குப் போனோம். அங்கிருக்கும்  பூக்கடையில் தளதளன்னு வேப்பிலைகள் !  மறந்தே போச்சு... ரொம்பநாள் ஆச்சுன்ற வகையில் !

தொடரும்.............. :-)
















0 comments: