என்ன ஒரு பத்து நிமிட் இருக்குமோ.... டாக்ஸி போய் கோவிலுக்கு முன் நிக்கும்போது ?இவ்வளவு கிட்டேயா இருக்குன்னு வாய்பிளந்தது உண்மை. அப்புறம் பார்த்தால் ரெண்டு கிமீ தூரம்தானாம்
அழகான ராஜகோபுரத்தடியில் நீளமா இருக்கும் படிவரிசைகளில் கூட்டமா மக்கள் நிக்கறாங்க. உள்ளே போகக் காத்திருக்காங்களாம். இங்கத்து வழக்கம்போல் கோபுரவாசலுக்கு நேரா மூலவர் சந்நிதி !
ஏழுபடிகளிலும் கடைசிப்படிவரை சனமே சனம் ! நான் போய் கடைசிப்படியில் ஏறுவதா வேணாமான்னு ஒரு யோசனையில் இருக்கும்போது , நம்மவர் வந்து 'இன்னொரு கேட் வழியாப்போகலாம் வா'ன்னு கூப்புட்டுப்போறார். வளாகம் முழுசும் வண்டிகள் தாறுமாறா நிக்குது..... அது கோவிலுக்கான ஆஃபீஸ் இருக்கும் வழியோன்னு யோசனையில் இருக்கேன். அப்புறம் பார்த்தால் பெரிய கேட் ! கோவில் கட்டடத்திற்குப் பொருட்கள் கொண்டு போகும் வாகனங்களுக்கான பக்கவாட்டு வழியாக இருக்கு. அஞ்சே அஞ்சு படிகள் உயரத்தில் கோவில் மண்டபம். அங்கங்கே தனிச் சந்நிதிகள்... சிசிடிவியில் மூலவர் தரிசனம்......ஆஹா.....

ஒரு நாலெட்டு வச்சு உள்ளே போனால் கண்முன்னால் ஏகப்பட்ட கூட்டம்..... எல்லோரும் பார்க்கும் திசையில் பார்த்தால் மூலவர் ! இன்றைக்கு கந்த சஷ்டிக் கடைசிநாள் !!!!
கூட்டத்துக்குள் நுழைஞ்சு மெதுவாக முன்னேறி கருவறைகிட்டே போயாச்சு. வெளிப்புறம் வாசலுக்கு ரெண்டு பக்கங்களிலும் இடும்பரும், ஜம்பு விநாயகரும் அழகான மாடங்களில் !
கருவறை வாசலே ஏழு படிகள் உயரத்தில் ! அர்ச்சகர்கள் அசராமல் ஏறி இறங்கி ஏறி இறங்கின்னு.... பத்தாயிரம் ஸ்டெப்ஸ் ஒரு நாளில் ஈஸி !!!
கருவறைக்குள்ளே அட்டகாசமான பூவலங்காரத்துக்கு நடுவில் மூலவர் ! நாலுமுகம் கண்ணில் பட்டதும், இன்னும் ரெண்டு முகங்கள் பின்பக்கம் இருக்கோன்னு உத்துப் பார்த்ததும்தான் புரிஞ்சது, அந்த நாலும் வேல் முகங்கள் !
( அப்புறமா படங்களை நிதானமாப் பார்த்தால் சிசிடிவி படத்தில் ஆறுதலைகளும் தெரியுது. நான் நின்னுருந்த ஆங்கிளில் பூமாலைகள் ரெண்டு தலைகளை மறைச்சுருக்கு... ப்ச்..... ஆனால் எல்லாம் முன்பக்கம் நோக்கியே ! )
அப்போ முருகன்?
மலர்க்குவியலுக்குள்ளில் இருந்து எட்டிப்பார்க்கிறான் ! தங்கத்தின் பளபளப்பினூடே சட்னு கண்ணுக்குப் புலப்படலை ! ரொம்பவே சின்ன சிலைதான் ! ரெண்டரையடி இருந்தாலே அதிகம் !
பதினாலு வருஷங்களுக்கு முன் இந்தக் கோவிலைப்பற்றிய இடுகையின் சுட்டி கீழே ! நேரமிருந்தால் பாருங்கள்! அப்ப விழாக் காலம் இல்லையென்பதால் எல்லாமே எளிமையா இருந்தது !
https://thulasidhalam.blogspot.com/2011/10/2011-6.html
தைப்பூசத்தன்று, நம்ம சிங்கைச்சீனு கோவிலில் இருந்து புறப்படும் காவடி, பால்குடம், அலகு குத்திக்கொண்டு வர்றவங்க இப்படி எல்லோரும் செராங்கூன் ரோடு வழியா, இங்கே இந்தக் கோவிலுக்கு நடந்துவந்துதான் ப்ரார்த்தனைச் சடங்குகளை முடிப்பாங்க. ஒரு முறை தைப்பூசத்துக்கு முதல்நாள் சிங்கையில் இருந்தோம். ராத்ரி மூணு மணிக்கே ஊர்வலம் ஆரம்பிச்சு நடந்துபோகும் பக்தர்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அழகான முன்மண்டபத்துத் தூண்கள்! கருவறையைச் சுற்றி வலம் போறோம். கோவில் மணி 'டாண் டாண், கலகல கலகல' ன்னு ரெண்டுவிதமா ஒலிக்குதேன்னு பார்த்தால் அமைப்பே அப்படித்தான் இருவகையா இருக்கு ! மேலே இருக்கும் பெரிய மணியும், அதையடுத்துச் சங்கிலியில் தொங்கும் அஞ்சுமணியும் ஒரே சமயத்தில் ஆரவாரம் ! கோவில் ஊழியர் அஞ்சுமணியை ஒரு கையால் ஆட்டறார். இதைப்போல் அஞ்சுமணியை நான் முதல்முறை பார்க்கிறேன் !
கோஷ்டத்தில் இருக்கும் கடவுளர்களும் வெள்ளிக்கவசத்தில் ஜொலிக்கிறார்கள் !
அடுத்து இருக்கும் தனித்தனி சந்நிதிகளில் ஈசன் சுந்தரேஸ்வரரும், மதுரை மீனாக்ஷியும் ! தங்கக்கவசங்களில் மின்னறாங்க. நந்தியாருக்கும், பலிபீடத்துக்கும் கூட...... தங்கம் ! கோவில் செழிப்பாக இருப்பது நல்ல நிர்வாகத்தின் கைங்கரியத்தால்தான் என்பது நிரூபணம் !



அம்மனின் சந்நிதிக்கு இந்தாண்டை நவக்ரஹ சந்நிதி ! அவர்களை வணங்கி ஒரு சுற்று மட்டும்... அடுத்துள்ள இடத்தில் இன்னொரு கூட்டம்.... எட்டிப்பார்த்தால் வஸந்த மண்டபம். புறப்பாட்டுக்குத் தயாராக உற்சவர், அருமையான அலங்காரத்தில் !
கூட்டத்தோடு கூட்டமாக் கொஞ்சநேரம் நின்னுருந்தேனா............ நம்மவர் அந்தப்பக்கம் நின்னு, போகலாமான்னு கேக்கறார். இல்லை.... முருகன் கிளம்பட்டும்னு சொல்லிட்டு, அவன் புறப்பட்டவுடன் நாங்களும் கிளம்பினோம். கோவில் உள்ப்ரகார ஊர்வலம்தான் !
https://www.facebook.com/share/v/17gqiu5r39/
போனமுறை பார்த்ததைவிடக் கோவிலில் புது சமாச்சாரங்கள் நிறைய இருக்குன்னாலும்.... கூட்டம் காரணமாக எங்கேயும் கிட்டக்கப்போய்ப் பார்க்க முடியலை.
இப்பத் திரும்பிப்போக வழி எங்கே, எப்படி, டாக்ஸி கிடைக்குமான்னு நூறு யோசனைகளோடு மெயின் ரோடில் ஏதாவது டாக்ஸி கிடைக்காதா என்னன்னு போனால்.... அங்கே ஒரு எம் ஆர் டி ஸ்டேஷன் இருக்கு !
உள்ளே நிறைய தூரம் நடக்கணுமே என்ற பயத்தில் அந்தப் பக்கம் வந்த ஒருவரிடம், டாக்ஸி எங்கே கிடைக்குமுன்னு விசாரிச்சால் ஸ்டேஷனுக்குள்ளே போய் அந்தாண்டை போனால் டாக்ஸி கிடைக்கும்னு சொன்னார்.
கீழே போகத்தான் எஸ்கலேட்டர் இருக்கேன்னு போனால் இன்னொரு பக்கம் இருந்த எஸ்கலேட்டர் கண்ணுக்குப் பட்டது. அதுலே போனால், ஒரு திருப்பம். அங்கே இன்னொரு எஸ்கலேட்டர். அதுலே ஏறிப்போனால் நாம் முன்வாசலில் நின்ன இடத்துக்கே போயிட்டோம் !
அப்போ அங்கே வந்த செக்யூரிட்டியிடம் விசாரிச்சதுக்கு வேறொரு திசையில் உள்ள எஸ்கலேட்டரைக் காட்டினார். அம்மிணி தமிழ்க்காரர்தான். 'கூட வந்து டாக்ஸி எடுக்க உதவி செய்யலாமுன்னா இப்ப டூட்டியில் இருக்கேன்'னார். நன்றி சொல்லிட்டு அவர் காட்டிய வழியில் போய் இன்னொரு சாலைக்கு வந்தாச்சு. கொஞ்சதூரத்துலே டாக்ஸி கிடைக்குமாம். அரை இருட்டான சாலையின் ஓரத்தில் நடந்து போறோம்.
ஒரு இடத்தில் ஒரு நூறுபேர்வரை இருக்கும் மக்கள் தரையில் உக்கார்ந்துருந்தாங்க. காவலாளிகள் போல் நாலைஞ்சு பேர் கையில் ரூலர் தடியுடன் அவுங்களைச் சுத்தி அங்கங்கே நிக்கறாங்க. இருட்டில் சரியாத் தெரியலை. ஆனாலும் எதுக்காக அங்கே உக்கார்ந்துருக்காங்கன்னு மனசுலே குடைச்சல். நம்மவரிடம் கேக்கச் சொல்லலாமுன்னா.... எங்கே......... எதையும் கவனிக்காம விடுவிடுன்னு டாக்ஸியைத் தேடிப்போய்க்கிட்டு இருந்தார். நானோ..... நொண்டிக்கால் என்பதால் மெதுவா நடந்து போறேன். ப்ச்.... பாவம் என்ன ஆச்சோ ? எதுக்கு இப்படி வளைச்சுப்போட்டுருக்காங்க ? பெருமாளே காப்பாத்துன்னு கும்பிட்டுக்கிட்டேன்.
அதுக்குள்ளே ஒரு டாக்ஸி பக்கத்துலே போய் நிக்கிறார் நம்மவர். பத்தே நிமிட்டில் நம்ம ஹொட்டேலுக்கு வந்துட்டோம்.
ராச்சாப்பாடுன்னு ஒன்னு இருக்குல்லே ? இன்னிக்கு காலையிலும் பகலிலும் வேற இடத்தில் சாப்ட்டாச்சு. இப்ப நம்ம ஹொட்டேல் பக்கத்துக் கோமளவிலாஸுக்குப் போகலாமுன்னு கிளம்பிப்போனோம். ஆர்டர் எடுக்க வந்தவரிடம் தோசைக்குச் சொல்லியாச்.
பழக்கத்தோஷத்தால் நம்ம விக்னேஷ் எங்கேன்னு சுத்தும் முத்தும் பார்த்தால் ஆளைக் காணலை. வாரவிடுமுறையாக இருக்கலாமுன்னு நினைச்சேன். தோசை கொண்டு வந்தவரிடம் , விக்னேஷ் வரலையான்னு கேட்டேனா.... வந்த பதில் தூக்கிவாரிப்போட்டது....
விக்னேஷ் வேலையை விட்டு நின்னுட்டாராம் ! அட ராமா......
'நீ, அன்னிக்கு பதிநாலு மணி நேரமா வேலை? ன்னு கேட்டியே.... அதனால் வேலையை விட்டுருப்பார்' நம்மவரின் வேதவாக்கு.
மனசுக்குக் கொஞ்சம் உளைச்சலாப் போச்சு......ப்ச்...... ஏன்? ஏன்? ஏன்? னு கேள்வி....
வாசலில் போட்டுருக்கும் பெஞ்சில் கொஞ்சநேரம் உக்கார்ந்துட்டு, மனசுக்குள் 'பெருமாளே விக்னேஷுக்கு ஒரு நல்ல வழி காட்டு'ன்னு வேண்டிக்கிட்டேன்.
தொடரும்........... :-)
























1 comments:
உங்கள் தயவில் நாங்களும் கோவிலைச் சுற்றி பார்த்து, தரிசனம் ஆச்சு.
இட்லியையே பார்த்த கண்களுக்கு தோசை இதம்! ( நான் என்னைச் சொன்னேன்)
Post a Comment