Showing posts with label ஒப்பிலியப்பன். Show all posts
Showing posts with label ஒப்பிலியப்பன். Show all posts

Tuesday, March 31, 2009

விடுறதா இல்லை, கும்பகோணத்தை:-)......(2009 பயணம்: பகுதி 5)

நம்ம 'வீட்டு ஜன்னலுக்கு' எதிரில் தகப்பனுக்கு உபதேசம் செய்யும் மகனை, மலைமேலேயும் போய்ப் பார்க்கணும். இன்னிக்கு முதல் வேலையே இதுதான். ச்சலோ, ஸ்வாமி மலைக் கோயில். படிகள் ஏறிப்போனதும் கண்ணுக்கு எதிரா புள்ளையார் சந்நிதி. 'வா வா'ன்னு கூப்புட்டதும் கோபால் அங்கே போய் நின்னார். தீபாராதனை. தட்டுலே 'சில்லரை' போடச் சட்டைப் பையிலேக் கைவிட்டதும், புள்ளையார் தன்னோடக் குசும்பைக் காமிச்சுட்டார். கையோட வந்துச்சு அஞ்சு மடங்கு 'சில்லரை' நோட்டு. இடது பக்கம் இருக்கும் உள்ளே இருக்கும் முருகன் சிரிச்சுக்கிட்டேப் பார்த்துக்கிட்டு நிக்கிறார். கோயிலின் வெளி மாடியில் அருமையான வண்ணச் சிலைகள். நாரதரும் அகத்தியரும், பிள்ளையாரும், நந்தியும் மயிலும்கூட இருக்காங்க. ஆனால் சீனில் நம்ம பார்வதி பாய் மட்டும் மிஸ்ஸிங்(-: மதிள் பூராவும் யானைகள்.
ராமர் கோயிலுக்குப் போயிருங்கன்னு சொன்னதும் கோபுரத்தை அடையாளமா வச்சு நம்ம வினோத் எங்களை இறக்கி விட்ட இடம் ஆதி கும்பேஸ்வரர் கோயில். திருவுளம் அப்படியோ? இங்கே யானையை நல்லாவே பராமரிப்போமுன்னு உறுதி சொல்லிக்கிட்டு ஒரு அறிவிப்புப் பலகை. (இப்படி ஒன்னும் இல்லாமலேயே கோபால் ஏறக்குறைய முப்பத்தியஞ்சு வருசமா சேவை செய்ஞ்சுக்கிட்டுத்தான் இருக்கார்,இல்லை?)

கும்பகோணத்துலே 'பீச்' இல்லாத குறையைக் கோயில்கள்தான் தீர்க்குது.
கும்பேஸ்வரர் வெளிப்பிரகாரத்தில் கடலை வகைகள். நந்திகளே, நீரே சாட்சி.

'ராமசாமியின் தூதன் நானடா ராவணா என்றான்'னு பாடிக்கிட்டே ராம(ர்)சாமி கோயிலுக்குள் நுழைந்தேன். வயதான பட்டர், ராமலக்ஷ்மண சீதை திருமேனிகளைக் காமிச்சு விளக்கிக்கிட்டு இருந்தாலும் என் மனசென்னவோ வீணை வாசிக்கும் ஹனுமானைப் பார்க்கப் பரபரத்துக்கிட்டே இருந்துச்சு. இரா.முவின் பத்திகளில் படிச்சேனே...... மலர்வனம் லக்ஷ்மியும் மடலில் நினைவுபடுத்திட்டுப் போயிருந்தாங்களே......உள்பிரகாரத்தை ரெண்டு முறை வலம்வந்தேன். கண்ணில் அனுமனைக் காணோம்....
"இன்னும் எத்தனை முறை சுத்தறதா இருக்கே? காணோம் காணோமுன்னா ..... யாராவது எடுத்து ஒளிச்சுவச்சுட்டாங்களா என்ன? பேசாம யாரையாவது கேளேன்" ( 'பேசாம' எப்படிக் 'கேக்கறதாம்'?)

யாருமே கண்ணுலே படலையே.....'பேசாம ' அந்தப் பட்டரையே 'கேக்கலாமு'ன்னு மூலவர் சந்நிதிக்குள் பாய்ஞ்சேன். பாவம் ரொம்பவே வயசானவர். கண்ணும் மங்கலா இருக்கு போல. ரெண்டு நிமிசத்துக்கு முன் என்னைக் 'கண்ட' பாவம் அடியோடு இல்லை. ஆள் நடமாட்டம் பார்த்ததும் 'டகால்'னு எண்ணெய் தீபத்தின் பிடியைப் பிடிச்சுத் தூக்கியபடி ஸ்ரீ ராமர், லக்ஷ்மணன், சீதாப் பிராட்டின்னு டேப் ரிக்காடர்போல ஆட்டோமாடிக்காச் சொல்ல ஆரம்பிச்சுட்டார். வீணை வாசிக்கும் ஹனுமார் எங்கே இருக்கார்ன்னு தவிப்போட கேட்டேன். அதே தீபத்தால் இங்கேன்னு வலதுபக்கம் கையைக் காமிச்சார். அட! கர்ப்பகிரகத்துக்குள்ளேயே ஓசைப்படாம உக்கார்ந்துருக்கார், காலை மடிச்சு அரைமண்டி போட்டவிதமா. வெயிஸ்ட் கோட்டா போட்டுருக்கார்? தங்க(???)க்கவசம் போல இருக்கே!!!!
சைடு போஸ் மட்டும்தான் தெரியுது. ராமனுக்கு மட்டுமே முகம் காட்டும்விதமா.......... நான் ஒருத்தி...முதலில் இங்கே சந்நிதிக்கு வந்தப்பயே கண்ணைச் சுழற்றி இருந்தால்..... பட்டுருப்பார். நான்தான் ஒரு மனசா, ஒரு முகமா ராமன் மேல் கண்ணு நட்டுவச்சுட்டேனே...

பிரகாரம் முழுசும் ஸீன் பை ஸீனா ராமாயணம்தான். அழகானச் சித்திரங்கள். சுவர்களில் காமிக்ஸ் புத்தகம். கும்பகர்ணனை எழுப்பும் யானைகள். ஹைய்யோ..........
இப்படிச் செடி முளைச்சுக் கிடந்தா கோயிலின் கதி?
தலைகளற்றக் குதிரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அடுத்த திருவிழாவரை ஓய்வு! தலைமட்டுமே புல்மேயப் போயாச்சு!
வெளியே வந்ததும், கோவிலையொட்டியே அரிசிக்கடை ஒன்னு. சதுரமான ஆளுயர ஸ்டீல் ட்ரம்களில் வகைவகையா அரிசி. (இங்கே நியூஸியில் அரிசித் தட்டுப்பாடு. இந்திய அரசு ஏற்றுமதியைத் தடை செஞ்சுருக்காம். தாய்லாந்து அரிசியைத்தான் தின்னாறது பலவருசங்களா. இதுவாவது கிடைக்குதேன்னு இருக்கும்போது 'வகை'க்கு எங்கே போவோம்?) ச்சின்னச் சின்ன அரிசிகள்.(ஐயோ....எவ்வளோ நாளாச்சு இப்படிப்பார்த்து. எனக்குக் கிடைப்பதெல்லாம் எமலோகத்து அரிசிதான். அங்கேதான் பெரிய பெரிய அரிசிச்சோறு போடுவாங்களாம் போன உடனே) இட்லி அரிசின்னு ரெண்டுவகை தடிமனா இருக்கு. எந்த அரிசிம்மா வேணும்னு கேட்டக் கடைக்காரரிடம், ச்சும்மாப் பார்க்கணும். வாங்கலைன்னேன். சட்னு அவர் முகத்தில் ஒரு பரிதாபம். பாருங்க நல்லாப் பார்த்துக்குங்கன்னார். சாப்பாட்டு அரிசி 25 ரூபாய். இட்டிலி அரிசி விலை 80 ரூபாயாம். அட! எப்படிக் கட்டுப்படியாகும்? அதான் ஹோட்டல் இட்லி இந்த அழகில் இருக்கா?

சாரங்கா..... தோ...வந்துட்டேன். கோபுரத்திலேயே ஸ்ரீசார்ங்கா, ஸ்ரீசார்ங்கா ஸ்ரீசார்ங்கா எழுதிவச்சுருக்கு. சாரங்கபாணி கோயில்.
தேரின் மேல் ஸ்வாமி. மண்டபமே இப்படித்தான் அமைஞ்சுருக்கு. கடவுள் 'கிடக்கிறார்'. பனிரெண்டாம் நூற்றாண்டில் சோழர்கள் கட்டுனதாம். அவுங்களுக்குப் பெரியமனசு. எல்லாமே பிரமாண்டம்தான். மனசு நிறைவான தரிசனம். இது நூற்றியெட்டில் ஒன்னு!
தாயார் கோமளவல்லி. மாமி நினைவு வந்தது. 'கோமளா'ன்னு குண்டக்க மண்டக்கப் போடும் கையெழுத்து. கையோடு ஒப்பில்லாத அந்த உப்பிலியப்பனையும் சேவிச்சுட்டே போகலாமேன்னு போனோம்.
தென் திருப்பதி. ஸ்ரீநிவாசனாக இருக்கார். கழுத்தில் எப்போதும் ஒரு துளசிமாலை உண்டாம். திருப்பதிக்கு நேர்ந்துக்கிட்டுப் போகமுடியலைன்னா இங்கேயே செலுத்திறலாமாம். வசூல் ராஜா தான்!

திருவிண்ணகர். இதுவும் நூற்றியெட்டில் ஒன்னுதான். ஒப்புவமை இல்லாத ஒப்பிலியப்பன், உப்பிலியப்பனா மாறி அதுக்கும் ஒரு கதையை வச்சுருக்கார். மனைவியா வந்த இளம்பெண்ணுக்கு, சாப்பாட்டுக்குத் தேவையான உப்புப்போட்டுச் சமைக்கத் தெரியலை. குழந்தை அவள். மன்னிக்கணுமுன்னு பொண்ணின் தோப்பனார் கேட்டுண்டதுக்கு இணங்கி உப்பில்லாமச் சாப்பிடறாராம் எ(ன்)ம்பெருமாள். (இந்தக் கணக்கில் கோபாலும் ஒரு உப்பிலியப்பந்தான். டாக்குட்டர் சொன்னபடி உப்பைச் சேர்க்காமல் இருக்கார் துளசித்தாயார்).

(ஆமாம். இந்த உப்பு என்ற சமாச்சாரத்தைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிஞ்சுக்கிட்டாத் தேவலைன்னு இருக்கேன். எப்போ முதல் இது சமையலுக்கு வந்துச்சு? எப்படி மனுசன் இதைப் பயன்படுத்தத் தெரிஞ்சுக்கிட்டான்? எப்படி முதல்முதல் உப்பு கிடைச்சது? வெள்ளைக்காரன், சம்பளத்தின் ஒரு பகுதியா உப்பைக் கொடுத்தான்னா..... அவனுக்கு உப்போட 'மகிமை' எப்படித் தெரிஞ்சதுன்னு ஏகப்பட்ட சுவையான தகவல்கள் இருக்குமே...... ஆராயத்தான் வேணும். உப்பில்லாப் பதிவு குப்பையிலேன்னு புதுமொழி வந்துறப்போகுது!!!)

திருப்பாற்கடலைக் கடைஞ்சப்ப லக்ஷ்மியுடன் துளசி தேவியும் தோன்றினாளாம். ஆனால் லக்ஷ்மிக்கு விஷ்ணுவின் மார்பில் இடம் கிடைச்சது. துளசிக்கு இடமில்லை. 'இதுக்காக வருத்தப்படாமல் இந்த இடத்தில் போய் துளசிச் செடியா வளர்ந்துக்கோ. அர்ச்சனை என்ற பெயரிலும் மாலை என்ற பெயரிலும் உன்னை(யும்) மார்பில் தாங்கிப்பேன்'னு பெருமாள் சொன்னதை நம்பி இங்கே துளசி 'துளசி'யாக அவதரித்ததாக ஸ்தலபுராணம்..............(அவதாரமுன்னு சொன்னதும், இந்தப் பயணத்தில் பார்த்த ஒன்னு ஞாபகத்துக்கு வருது. 'அம்மா'வின் பிறந்தநாளுக்கு அடிப்பொடிகள் வச்ச ஒரு பேனரில் 'அஞ்சாமை அவதரித்த நாள்' னு எழுதி விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் நிற்கும் அளவில் அம்மாவின் படம்!)

கோயில் குளம் அட்டகாசமா நடுவில் சின்ன நீராழி மண்டபத்துடன் இருக்கு. பொதுவாக் கோயில் குளங்களில் விளக்கு வச்சபின்னே இரவுநேரத்தில் தீர்த்தாடனம் (இது வேறவகை)செய்யக்கூடாதுன்னு ஒரு விதி இருக்குல்லே. அது இங்கே மட்டும் கிடையாது. பகலோ இரவோ எப்பவேணுமுன்னாலும் நீராடலாம். இதுக்குத் தோதா, குளமும், கோயிலுக்கு வெளியே இருக்கு!

சொல்லமறந்துட்டேனே..... இந்தக் கோயிலின் ஸ்தலவிருட்சம் என்னன்னு தெரியுமா? வேற யார்? சாக்ஷாத் 'துளசி'தான்:-)

பகலுணவு நேரமாகிருச்சே.... டவுனில் போய்ச் சாப்பிடலாமுன்னு வண்டியை விரட்டுனப்ப... ஐய்யோ..... அய்யாவாடி. 'அம்மா'வால் பிரபலமடைஞ்ச ப்ரத்தியங்கரா தேவியின் கோயில். தெருவில் இருந்து பிரியும் சந்துலே, கொஞ்சம் உள்ள தள்ளி இருக்கு. நாங்கள் கோவிலில் நுழையவும், நடையைச் சாத்திக்கிட்டுப் பூஜாரி நடையைக் கட்டவும் சரியா இருந்துச்சு. இனி மாலை நாலு மணிக்குமேல்தானாம். யாகசாலையைப் பார்க்கணுமுன்னா பின்பக்கமாப் போய்ப் பாருங்கன்னார். கோவிலையொட்டி மூணுபுறமும் கம்பிச் சுவர்கள் போட்டுவச்சுருக்கும் பிரமாண்டமான ஹால். நடுவிலே ஹோமகுண்டம். இந்தக் கோயில் எட்டு மயான பூமிக்கு மத்தியில் கட்டப்பட்டுள்ளதாம். தேவி ரொம்பவே உக்கிரமா இருப்பாங்களாம்.

அமாவாசை சமயம் ரெண்டு கிலோமீட்டருக்கு 'க்யூ வரிசை' நிக்குமாம். முந்தி ஒரு காலத்துலே இங்கே ஈ, காக்கை இல்லாம வெறிச்சோடிக்கிடக்குமாம். அம்மா யாகம் செஞ்ச மறுநாள் திருவிழாபோலக் கூட்டம் கூடிருச்சாம். என்னமோ இருக்கு இந்தக் கோவிலில்....அம்மாவே வந்துருந்தாங்கன்னா........ மக்கள் முண்டியடிச்சுக்கிட்டுக் கூடி, இப்போ கோயில் நல்லா செழிப்பா 'ஜெஜெ'ன்னு இருக்கு:-)

( எத்தனையோ கோயில்கள் இப்பவும் ரொம்ப ஏழ்மை நிலையிலே பாழடைஞ்சுக்கிட்டு இருக்கே. அம்மா மனசில் இரக்கம் வச்சு அங்கெல்லாம் ஒருமுறை போயிட்டு வந்தாங்கன்னா..... நல்ல காலம் (கோயிலுக்குங்க) பொறக்காதா? அம்மாகிட்டே இந்த விண்ணப்பம் போடலாமுன்னு யோசனையா இருக்கேன்)

அம்மா, 'யாரையோ' அழிக்க இங்கே யாகம் செஞ்சாங்கன்னு கேள்வி. எனக்குப் புரியாத ஒன்னு என்னன்னா..... ஒருத்தரை ( அவர் பெயரை 'ஏ'ன்னு வச்சுக்கலாம்) அழிக்கணுமுன்னு சாமிகிட்டே போய்க் கேப்பாங்களா? எனக்கு நல்லவாழ்க்கையைக் கொடுன்னு கடவுள்கிட்டே கேட்டு மன்றாடுவது உலகில் உண்டு. ஆனால் ஒருத்தர் அழியணுமுன்னு சாமிகிட்டே கேக்கலாமா? அதே சாமியை அந்த 'ஏ' கும்பிட்டு இன்னொருத்தரை ( இவுங்களை 'பி'ன்னு வச்சுக்கலாமா?) அதாவது அந்த 'பி'யை அழிக்கணுமுன்னு யாகம் செஞ்சா சாமி யார் பேச்சைக் கேப்பாரு? நியாய அநியாயம் பார்த்தா? இல்லே ஃபர்ஸ்ட் கம் ஃபர்ஸ்ட் செர்வ்டு மாதிரியா? இல்லே இந்த ஏ & பி ரெண்டையும் போட்டுத் தள்ளுவாரா?

இதேபோலத்தான் நாங்க ஃபிஜியில் இருக்கும்போது இந்தியர்களுக்குள்ளே அதுவும் தென்னிந்தியர், குறிப்பாத் தமிழ்க்காரர்களிடம் இப்படி பரவலான ஒரு எண்ணம் இருந்துச்சு. (இப்ப அதெல்லாம் நியூஸி, ஆசின்னு பரவி இருக்கணும். ராணுவப்புரட்சிக்குப் பின் இவர்களில் பலரும் வேற நாடுகளுக்குப் போயிட்டாங்களே). செய்வினை வச்சுட்டாங்கன்னு சொல்லிக்கிட்டு இருப்பாங்க. இதுலே நம்ம அக்காவேற 'ஆமாம்ம்மா.... பூஜாரி ஐயா வந்து நம்ம தோட்டத்துலே செடிகிட்டே தோண்டி ரெண்டு ஏலக்காய், கிராம்பு எடுத்தாரும்மா. மந்திரிச்சுப் புதைச்சுட்டாங்க யாரோ'ன்னு சொல்வாங்க. மசாலா அரைக்காம மந்திரிச்சு வச்சுட்டாங்களா? ஒரு குழம்புக்குள்ளது வீணாப்போச்சே:-))))

சாமிகிட்டேயோ இல்லை ஆசாமிகிட்டேயோ இப்படி ஒருத்தரை அழிக்கணுமுன்னு சொல்றதே அசிங்கமா இருக்காதா? மனசுலே அவ்வளவு ஆங்காரமும் அழுக்கும் இருந்தா சாமி நம்மையே கோச்சுக்காதா? என்னவோ போங்க.......

கோயிலில் வச்சுருந்த அறிவிப்பைப் பார்த்ததும் நான் நினைச்சது சரின்றமாதிரி இருந்துச்சு. மனித வாழ்க்கையை நிர்ணயம் செய்வது கடவுள் மட்டுமே. அதுக்கெதிரா யாரும் யாரையுமே ஒன்னும் செய்ய முடியாது.

தொடரும்......:-)