ஆட்டோ மீட்டர் 60 காட்டும். நீங்க 90 கொடுத்தாப் போதும்! என்ன என்ன?
அப்பவே மீட்டருக்குமேலே போட்டுக் கொடுக்கறது வந்துருச்சா? அது என்ன பாதி
அளவு போட்டுக் கொடுக்கறது? இருங்க,விஷயத்தைச் சொல்லிடறேன்.
இது மாமியோட பொண்ணு எனக்குக் கொடுத்த இன்ஸ்ட்ரக்ஷன்! அப்பத்தான் ஆட்டோ
சார்ஜையெல்லாம் மாத்தியிருந்தாங்க. ஆரம்பத்துலே சார்ஜே வெறும் 60 பைசாதான் இருந்துச்சாம்.
அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா ஏறுனப்ப மீட்டரைப் புதுசா மாத்தியமைக்க முடியாத நிலமையாம்!
( இப்ப ஒரு இடைச் செருகல். ஆமா, நீங்க ஆட்டோவிலே போறப்ப எப்பவாவது மீட்டர் எங்கே
செஞ்சிருக்காங்கன்னு கவனிச்சிருக்கீங்களா? எங்கே? அதான் மீட்டர் கிடுகிடுன்னு ஏறுறதைப் பார்த்தே
மயக்கமாயிட்டேன்னு சொல்லாதீங்க! கொஞ்சம் யோசனை செஞ்சு வையுங்க! மீட்டர் விஷயம் அப்புறம்...)
இப்ப ஸ்டார்ட்டிங்கே 90 பைசா ஆக்குனதாலேதான் இந்த மாதிரியாம்! அது சரி, அப்புறம் மைலேஜுக்கு
எவ்வளவு கூடும்ன்னு கேக்கறீங்களா? யாருக்குத் தெரியும்? நம்ம வீட்டுலே இருந்து ராஸ்தாப்பெட் இந்த
90 பைசா தூரம்தான்!
எனக்கு அம்மாவீடு மாதிரி ஆகிப்போச்சு நம்ம மாமி வீடு! குறைஞ்சது வாரம் ஒரு நாள் கிளம்பிருவேன்.
காலையிலே இவர் வேலைக்குப் போனதும், என் கடமை(!)களை முடிச்சுட்டுப் பத்து, பத்தரைமணி வாக்குலே
பொடிநடையாக் கிளம்பினா, பன்னிரெண்டு மணிக்கு முன்னாலே அங்கெபோய்ச் சேர்ந்துடுவேன்.அப்பெல்லாம்
ச்சின்னவயசு. நடக்கத் தெம்பிருந்துச்சு! ஊருவெயிலே என் தலையிலேன்ற மாதிரி வெய்யிலைப் பத்தின
சுரணைகூட இல்லாத வயசு!
எங்க இவரு ஆட்டோலே போகச் சொல்லிட்டுத்தான் இருப்பாரு.ஆனா எனக்கு வேடிக்கைப் பாக்கற புத்தி! ச்சின்ன
வயசுலே இருந்தே இந்தப் பழக்கம். போற இடத்துக்கு 'டக்'குன்னு போயிற மாட்டேன்.அங்கங்கே நாட்டுநடப்பை
யெல்லாம் தெரிஞ்சுக்கிட்டேப் போனாத்தான் திருப்தி. மெட்ராஸுலே இருந்தப்பவும் இப்படித்தான். ஒவ்வொருநாளு
ஒவ்வொரு தெருவழியாத்தான் போவேன். ச்சும்மா, இந்தத்தெரு எங்கெ போகுதுன்னு பாக்கணும்!
மாமி வீட்டுக்குப் போற வழியிலே, கன்டோன்மெண்ட், கேம்ப் ஏரியா முடிஞ்சு, சிட்டி தொடங்குற இடத்துலே ஒரு
தள்ளுவண்டியிலே, அழகழகான கண்ணாடிப் பொருட்கள் வச்சு வித்துக்கிட்டு இருப்பாங்க.எதையெடுத்தாலும் ஒரு
ரூபாய்! அதுலே எனக்குப் பிடிச்சதா ரெண்டை வாங்கிக்கிட்டு, மாமி வீட்டுக்குப் போய்ச் சேர்வேன். எந்தநேரமானாலும்
அந்த 'வாடா' ஒரே கலகலப்பாத்தான் இருக்கும்! அங்கேயும் வேடிக்கைதான்! அந்த 'வாடா'விலே வீட்டுவேலை
செய்யற 'கோதா பாய்' போட்டுக்கிட்டு இருக்கற ப்ளவுஸைப் பாக்கணுமே! ஆளும் நெடு நெடுன்னு கொஞ்சம்
உயரமா இருந்துக்கிட்டு, ச்சிக்குன்னு இழுத்துப் பிடிக்கற மராட்டி ஸ்டைல் ரவிக்கையை முன்னாலே முடிஞ்சுக்கிட்டு,
புடவையையும் மராத்திக் கட்டுலே ( அதான் சினிமாவுலே பார்த்திருப்பீங்களே!)கட்டிக்கிட்டு, பாண்டியைத் தலையிலே
தூக்கிவச்சுக்கிட்டு போறது இருக்கே, அடாடாடாடா.....நம்ம ஊருலே கட்டிட வேலை செய்யற இடத்துலே பாத்திருக்கீங்களா?
சித்தாளுங்க சிமெண்டுக் கலவையை எடுத்துக்கிட்டுப் போக, ஒரு பிடியில்லாத கடாய் மாதிரி தகரத்துலே வச்சிருப்பாங்கல்லே,
அதுதான் பாண்டி! கொஞ்சம் பெரிய சைஸிலே இருக்கும்!அதை எடுத்துக்கிட்டுதான் வீட்டுவேலைக்கு வர்றது. தேய்க்கவேண்டிய சாமான்களை அதுலே
அடுக்கிக்கிட்டு, குழாயடிக்குப் போய் அதையெல்லாம் நல்லா மண்ணு போட்டு விளக்கிட்டு, திருப்பி நல்லா அதுலேயே
அடுக்கி வீட்டுக்குள்ளே கொண்டுவந்து இறக்கி வச்சிருவாங்க. அப்புறம் அடுத்த வீட்டுக்குப் போறது அங்கே வேலையை
முடிக்க! 'கரகர'ன்னு மண்ணாலே தேய்க்கறதைப் பார்த்தாலே எனக்கு உடம்பெல்லாம் 'நரநர'ன்னு இருக்கும்!
எனக்கு அடியோடு பிடிக்காத விஷயம் இந்த மண்ணாலே பாத்திரம் தேய்க்கறது!
சிலசமயம் நானும், மாமியுமாக் கிளம்பி'துள்சி பாக்'ன்ற இடத்துக்குப் போவோம்.அந்த இடம் ஒரு கோட்டை
மாதிரி சுத்துச்சுவரோடு இருக்கும். வாசலைத்தாண்டி உள்ளெ போனா, நம்ம மூர்மார்கெட்டு மாதிரி
கடைங்களா இருக்கும்.முக்காவாசி வீட்டுச் சாமானுங்கதான். கரி அடுப்பு, முறுக்கு அச்சு, சப்பாத்திக் குழவின்னு
சாமானுங்க இறைஞ்சு கிடக்கும்! ஒருகடை எங்கே முடியுது, அடுத்தகடை சாமான் எங்கிருந்து ஆரம்பிக்குதுன்னு
நமக்குப் புரியவே புரியாது! காசை நீட்டுறப்பதான்,இதுக்கு அங்கே கொடுங்க, இதுக்கு இங்கெயே கொடுங்கன்னு
சொல்லுவாங்க! எனக்குப் புதிரா இருக்கும். ஒரே மாதிரி இருக்கற ரெண்டு பூரிக்கட்டைங்களிலே எது
அவுங்களதுன்னு, துல்லியமா எப்படிக் கண்டுபிடிக்கறாங்க?
ஒருநா 'துள்சிபாக்'ன்னா, ஒருநா மண்டெ மார்க்கெட். இப்படியே பொழுது போய்க்கிட்டு இருந்தது! சாயந்திரம்
இவர் வேலை முடிஞ்சு நேரா, அங்கெ வந்துருவார். அதுக்குள்ளெ மாமியோட பொண்ணும், பையனும் ஆஃபீஸ்லே
இருந்து வந்துருவாங்க. இப்ப நாங்க இளைஞர்கள் மட்டும் கிளம்பி இன்னோரு ரவுண்ட், அங்கெ இங்கேன்னு.
ராத்திரி சாப்பாடும் அங்கேதான். நான் 'சமைச்சு வச்சுட்டு வந்திருக்கேன்'னு சொன்னாலும் மாமி விடறதில்லை!
அதையெல்லாம் யாராவது பிச்சைக்காரனுக்கு போட்டுருடின்னு சொல்வாங்க. 'அந்தப் பிச்சைக்காரங்களே நாங்க தான்
மாமி'ன்னு சொல்வேன்.
அப்புறம் அங்கிருந்து கிளம்பவே ராத்திரி பத்துமணியாகிடும். இப்ப என்ன பயம்? இருக்கவே இருக்கு நம்ம சைக்கிள்!
பத்தே நிமிஷத்துலே வீட்டுக்கு வந்துருவோம்!
காதல்கணவன் மொதமொதலா ஆசை(!)யுடன் எடுத்துத்தந்த புடவையைப்பத்தி மாமிகிட்டே சொல்லிப் புலம்புனேன்.
அவ்வளவுதான்! மாமிக்கு ஆவேசம் வந்துருச்சு! உடனே அந்தப் புடவைக்கடைக்கு படையெடுத்தாச்சு!
அங்கெல்லாம், தென்னிந்தியர்கள்ன்னு ( எல்லாருமே மதராஸிங்கதான்!)சொன்னாலே கடைக்காரங்க மத்தியிலே
ஏகப்பட்ட மரியாதை! 'வாங்கிக்குங்க, பணம் அப்புறமாத்தாங்க'ன்னு கடைக்காரங்க கெஞ்சுவாங்க. நம்ம ஆளுங்க
நம்பிக்கைத் துரோகம் பண்ணமாட்டாங்கன்னு ஏகப்பட்ட நம்பிக்கை நம்ம மேலே!!! கேக்கவே எவ்வளவு நல்லா
இருக்குல்லே! அதுலே எங்களுக்கு பெருமைவேற!
கடைக்காரர் 'ரூப்மல் சேட்' உயரம் குறைஞ்ச புடவை தந்ததுக்கு(?) மன்னிப்புக் கேக்கறார். நாம பாக்காம
வாங்குனது நம்ம தப்பில்லையான்னு மாமிகிட்டே கேக்கறேன்( தமிழுலேதான்) 'நீ சும்மா இரு, உனக்கு ஒண்ணும்
தெரியாது'மாமியோட பதில்!
'இன்னும் ரெண்டு புடவை உன் உசரத்துக்குத் தகுந்தாப்போலேப் பார்த்து எடுத்துக்கோ'ன்னு தடாலடியா
மாமியோட கமாண்ட்!
"ஐய்யய்யோ, இப்ப முடியாது மாமி. காசுவேற இல்லை"
" காசைப் பத்தி உனக்கென்ன கவலை. கொஞ்சம் கொஞ்சமாக் கொடுத்தாப் போதும்"
"அவர்கிட்டே கேக்கணும்"
" நான் சொல்லிக்கறேன். நீ பேசாமப் புடவையைமட்டும் செலக்ஷன் பண்ணு"
பயங்கரமாப் பேரம் செஞ்சு, ரெண்டு புடவை, அதுக்கேத்த ரவிக்கைத்துணி எல்லாம் வாங்கியாச்சு!
கடைக்காரர் நீட்டிய நோட்புக்கிலே "கோமளா'ன்னு கோணக்க மாணக்க ஒரு கையெழுத்தையும் தமிழிலே
போட்டாங்க நம்ம கும்பகோணம் கோமளா மாமி! அங்கேயே பக்கத்துத் தெருவிலிருந்த ஒரு வீட்டுக்குப் போய்,
ப்ளவுஸ் தைக்க அளவும் கொடுத்தாச்சு! அந்த வீட்டுலே ஒரு மராத்திக்காரப்பொண்ணு நல்லாத்தச்சுக் கொடுக்குதாம்!
அங்கேதான் மாமியோட பொண்ணுக்குத் தைக்கறதாம்!
கடன் வாங்குன பயத்துலே மனசுக்குள்ளே ஒரே நடுக்கமா மாமி வீட்டுலே உக்காந்திருக்கேன்.இவர் வந்து
என்ன சொல்லப் போறாரோ?
ஆட்டோ மீட்டர்( சூடு வைக்காதது!)விவரம்:
ஆட்டோ மீட்டர்ங்க செய்யற ஃபேக்டரியே பூனாவிலேதாங்க இருக்காம். அங்கிருந்துதான் எல்லா இடங்களுக்கும்
போகுதாம்! சென்னையிலே ஆட்டோவிலே போறப்ப கவனிச்சது!. இது சரியான்னு தெரிஞ்சவுங்க யாராவது
சொன்னாத் தேவலை!)
இன்னும் வரும்!!!
Tuesday, March 15, 2005
ரெடிமேட் !!!! பகுதி 7
Posted by துளசி கோபால் at 3/15/2005 06:50:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment