ராஸ்தா பேட் . பேட் என்ன பேட் எல்லாம் நம்ம 'பேட்டை'தான். ஹிந்தியிலே சுருங்கிருச்சு!
அங்கெதான் தமிழ்ப் பத்திரிக்கைங்க கிடைக்கும். அதுக்காகவே வாரம் ரெண்டுதடவை ஓடுவொம். விக்கறவர்
மராத்திக்காரர்தான். அந்த ஏரியாவே நம்ம மாம்பலம் மாதிரி இருக்கும்.எல்லாம் நம்ம தமிழ்நாட்டைச் சேர்ந்த
தமிழர்கள்தான். ரொம்ப காலத்துக்கு முன்னெயே இங்கே வேலைக்கு வந்துவிட்ட குடும்பங்கள்!
அவுங்க புள்ளைங்கெல்லாம் இங்கெயெ பிறந்து வளர்ந்த காரணத்தாலே மராத்தியிலே வெளுத்துக் கட்டிக்கிட்டு இருக்கும்!
கூடவே தமிழும் பேசுதுங்க! பொட்டைப் பசங்கெல்லாம் பேண்ட் ஷர்ட் போட்டுக்கிட்டு இருக்கும்! இதுலே என்னா
இருக்கு புதுசான்னு நினைக்கிறீங்கதானே? இது 27 வருசத்துக்கு முந்தி! அப்ப மெட்ராஸுலே என்ன ஸ்டைல்?
யாருக்காவது ஞாபகம் இருக்கா?
ராமர் கோயில், ஹனுமார் கோயில் இப்படி நமக்குத் தேவையான கோயிலுங்க வேற இருக்கற இடம்! ஹனுமார்
கோயில் இங்கே 'மாருதி மந்திர்'! நாமே சாமியைத் தொட்டுப் பூஜை செஞ்சுக்கலாம்! செம்மண் கலருலெ ஒரு
ஆரஞ்சுச் சாயம் பூசுன ஹனுமார். மூக்கு முழி ஒண்ணும் தெரியாம பூசிமெழுகின உருவம்!( ஐய்யய்யோ! சாமியை
அப்படியெல்லாம் சொல்லக்கூடாதுல்லே? தப்பு தப்பு! கன்னத்துலே போட்டுக்கறேன்!)
சாயந்திரம் அஞ்சுமணியானா அந்த ரோடுக்கே ஒரு களை வந்துரும்! நடைபாதை(!) எல்லாம் கடைங்க! காய்கறி
வியாபாரம்தான்! நேரம் ஆக ஆக நம்ம 'ரங்கனாதன் தெரு'வேதான்!
வீடுங்கெல்லாம் அரதப் பழசா இருக்கும். 'வாடா'ன்னு சொல்ற இடத்துலே போனா, அசந்துருவீங்க! உள்ளெ போற
வாசல் சாதாரணமான ஒரு கதவுதான்! அதுக்குள்ளே போயிட்டா, ஒரு பெரிய்ய்ய்ய முற்றம். அதைச் சுத்தி நிறைய வீடுங்க!
அந்த முன்வாசக் கதவை சாத்தவே மாட்டாங்க. அதான் எப்பவும் குடித்தனக்காரங்க வரவும் போறதுமா இருக்காங்களே!
வீடுன்னா ரெண்டு ரூம் இருந்தாலே மாளிகை ரேஞ்சு! ரெண்டு ரூமுன்னா ரெண்டு பெட்ரூமில்லை! ஜஸ்ட் ரெண்டு ரூம்.
அவ்வளவுதான்! அதுலே ஒண்ணு சமையல், ஸ்டோர்ரூம் இப்படி எல்லாமே. இன்னொண்ணுலே ஒரு கட்டில் இருக்கும்.
அதுதான் விருந்தினர் வந்தா உட்கார சோபா, நாற்காலி இன்ன பிற! அநேகமா எல்லா வீட்டுலெயும் இதே கதைதான்.
ராத்திரி இந்த ரெண்டு ரூமுமே பெட் ரூமா மாறிடும்! ச்சின்ன சின்ன பொந்தா இருக்கறதும் இருக்கு! அங்கே, மேலே சொன்ன
எல்லாமெ அந்த ஒரே ரூமிலே!
ஆங்... சொல்ல மறந்துட்டேனே, அந்தச் சமையலறையிலேயே ஒரு சின்னப் பகுதியைத் தடுத்து அங்கே குளிச்சுக்கணும்! மத்த
நித்தியப்படி வேலைகளுக்கு, ரெண்டு கழிவறை எல்லாக் குடித்தனக்காரர்களுக்கும் பொது! காலையிலே அங்கே எப்படி இருந்திருக்கும்
என்றதை உங்க கற்பனைக்கே விட்டுடறேன். அதான் ஹிந்திப் படங்களிலே ( 1970, 1980 களில்)அடிக்கடி இந்த மாதிரி ஸீன்கள் வருமே!
அப்பெல்லாம் இந்த ஃப்ளாட் கலாச்சாரம் பாம்பேலெதான் அதிகமா இருந்தது! அதிசயமா சிலவீடுகளிலே சமையலறைக்குப் பக்கத்துலே
குட்டியூண்டு பால்கனி இருக்கறதும் உண்டு.அப்ப அதுலே ஒரு தடுப்பு மறைவை வச்சுட்டா, 'கொல்லைப்புற செபரேட் பாத்ரூம்' ஆயிரும்!
ஊரு முழுக்க இந்த மாதிரி 'வாடாங்க' இருக்கு! சொந்தக்காரரோட பேருலே அதுக்கு அட்ரஸ் இருக்கும். கோர்புடே வாடா, குல்கர்ணி வாடான்னு!
இந்த வீடுங்களுக்கு வாடகை எவ்வளவுன்னு நினைக்கறீங்க? சொன்னா நம்பமாட்டீங்க. அஞ்சு ருபா, பத்து ரூபாதாங்க! பெரிய அஞ்சு பத்து
இல்லீங்க. வெறும் அஞ்சு, வெறும் பத்தேதான்! அந்தக் காலத்துலே இந்த மாதிரி குறைஞ்ச வாடகைக்கு இடம் கிடைச்சதாம். அப்ப ரூபாயோட
மதிப்பு நல்லா இருந்த காலம். தங்கம்கூட பவுனு 10 ரூபான்னு இருந்ததாமே! அப்ப இடம் பிடிச்சவுங்க, தலைமுறை தலைமுறையா இதே
வீடுகளிலே, அதே வாடகையை மட்டும் கொடுத்துக்கிட்டு இருந்துக்கிட்டு வராங்க! வீட்டு சொந்தக்காரர்களுக்கு வசதியான சட்டம் ஒண்ணும்
இல்லாததாலே, அவுங்களுக்கு ஒண்ணுமே செய்யமுடியலையாம்! வாடகையையும் ஏத்தமுடியாதாம்! இது எப்படி இருக்கு!
நிறைய இடங்களிலே வீட்டுக்குச் சொந்தக்காரங்களே, அவுங்களோட குடித்தனக்காரங்களுக்கு நிறையப் பணம் கொடுத்து, அவுங்களைக் காலி
(வீட்டைதாங்க) பண்ண வச்சுக்கிட்டு இருந்தாங்க!
ஆமாம். இதெல்லாம் இவ்வளவு விலாவரியா எனக்கு எப்படித் தெரிஞ்சது? அதுக்கும் ஒரு கதை இருக்கு!
வாங்க, நம்ம 'அரண்மனை' வாசத்துக்கே திரும்பப் போலாம்!
நாங்க அரண்மனையிலே தங்க ஆரம்பிச்சு கிட்டத்தட்ட ஒரு மாசம் ஆகப் போகுது! எவ்வளவு வாடகை(!) தரணுமுன்னு அவுங்க சொல்லலே.
நாங்களும் கேட்கலே! எப்படி கேட்க முடியும்? என்னன்னு மதிப்புப் போடறது?
அங்கே தங்க ஆரம்பிச்சது முதல் நானும், எங்க இவரும் பேசும்போதெல்லாம் எவ்வளவு வாடகை கொடுக்கலாம் என்றதைப் பத்தியே
பேசிக்கிட்டு இருப்போம். எவ்வளவு கொடுத்தாலும் தகும்தான். ஆனா நமக்கு வர்ற கொஞ்சமே கொஞ்ச சம்பளத்துலே எவ்வளவுன்னு
தர்றது? அவ்வளோ பெரிய மனுசங்க கிட்டே எப்படிப் போய்க் கேட்கமுடியும்? ஒரே குழப்பம்.மாசம் முடியட்டும், மாசம் முடியட்டும்
பார்க்கலாம்ன்னு நினைச்சுக்கிட்டு இருக்கறப்பவே மாசம் முடியற நாள் வந்துடுச்சு!
நம்ம வீட்டுக்கு பிரதம ஆலோசகர் நாந்தானே! 'அந்த ஹோட்டலிலேயே தங்கி இருந்தா எவ்வளவு வாடகையோ அதுலே பாதி கொடுக்கலாம்.
அது ஜாஸ்தின்னு அவுங்க நினைச்சா, அவுங்களே பாக்கியைத் திருப்பிக் கொடுக்கட்டும்'! எப்படி என் யோசனை?
மறுநாள் சாயங்காலம், நாங்க முடிவு செஞ்சமாதிரி, பணத்தை அவுங்க கையிலே கொடுத்தோம். என்னன்னு கேட்டாங்க. 'தப்பா நினைச்சுக்காதீங்க.
ச்சும்மாத் தங்கியிருக்க என்னவோ மாதிரி இருக்கு, அதுக்குத்தான்.....'ன்னு இழுத்தோம்.
சரி. உங்க இஷ்டம்ன்னு சொல்லிட்டு, அதை எடுத்துவச்சிக்கிட்டாங்க. இப்படியே மூணு மாசம் போயிருச்சு! அப்போ 'நவராத்திரி விழா' வந்துச்சு.
அந்த ஊர்லே இருக்கற ஒரு தமிழ்க்காரங்க வீட்டுக்கு, கொலு பார்க்க போகணும், நீங்களும் வாங்கன்னு எங்களையும்கூட்டிக்கிட்டுப் போனாங்க.
அங்கே போனப்ப,அந்த வீட்டுக்கு இன்னோரு குடும்பமும் வந்திருந்தாங்க. கொஞ்சம் வயசான தம்பதிங்க.ஏறக்குறைய எங்க வயசிலே இருந்த மகளும்,
மகனும் அவுங்ககூட!
அந்த 'மாமி'யைப் பார்த்தவுடனே எனக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு! சிலபேரைப் பார்த்தவுடன் மனசு ஒட்டிக்குது பாருங்க! அந்த மாமியும்
என்னோட ரொம்ப வாஞ்சையா, பிரியமாப் பேசுனாங்க! எங்களோட 'சரித்திரம்' சொன்னோம். அவுங்கைைளப் பத்திக் கேட்டப்ப, அவுங்க
வீடு 'ராஸ்தாபெட்'ன்னு சொன்னதும்,
" அங்கெ எங்கே?"
" அந்த ஏரியாவுக்கு வந்துருக்கீங்களா?"
" தமிழ்ப் பத்திரிக்கை வாங்கவும், காஃபி பவுடர் வாங்கவும் அங்கேதான் வர்றோம்"
" பரசுராம்லேயா காஃபி வாங்கறீங்க?"
" ஆமாம் மாமி."
" அந்தக் கடைக்குப் பின்னம்பக்கம்தான் நம்ம வீடு! கட்டாயமா வாங்க"
மறுநாளே காஃபிப் பொடி தீர்ந்து போச்சு! அந்தப் பரசுராம் பாலக்காட்டைச் சேர்ந்தவர். தமிழ்க்காரங்க இருக்கற பகுதின்னு அங்கெ
ஒரு நாள் ச்சும்மா சுத்தப் போனப்ப இந்தக் காஃபிப்பொடி அரைக்கற வாசம் 'கம்முன்னு' வந்தது. அதை வாசம்புடிச்சுக்கிட்டேப் போய்ச்
சேர்ந்த இடம் இந்தக் கடை. அப்ப இருந்து அங்கே காஃபிப் பொடி சுடச்சுட அரைச்சு வாங்கிக்கிட்டு வர்றது ஒரு வழக்கமாப் போச்சு!
மாமி சொன்ன வழியை ஞாபகம் வச்சுக்கிட்டே அவுங்க வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம். மாமி வீடு ரெண்டு ரூம்! பின்னாலே ஒரு ச்சின்ன பால்கனி!
மாமாவும் இருந்தார். அவருக்கு 'சதர்ன் கமாண்ட்ஸ்'லே வேலை. காலையிலே 7 முதல் பகல் 2 வரைதான் வேலை நேரம்!
மேல்வருமானத்துக்காக சாயந்திரம் 6 முதல் 9 வரை ஒரு கடையிலே கணக்கு எழுதுவாராம். நாங்க போனதாலே அன்னைக்கு கடைக்குப்
போகாம லீவு!
மாமியும் நானும் சமையலுள்ளிலே பேசிக்கிட்டு இருந்தோம்.பேச்சுவாக்குலே நாங்க ஏதாவது வாடகை கொடுக்கறோமான்னு மாமி கேட்டதுக்கு
நாங்க கொடுக்கற தொகையைச் சொன்னேன்.
"ஐயய்யோ! ஏன்னா, இந்த அநியாயத்தைக் கேட்டேளா? ச்சும்மாக் கிடக்கிற பங்களாவுக்கு இவ்வளோ காசா?"
மாமிக்கு கணிரென்ற குரல். சாதாரணமாப் பேசினாலே எட்டு வீட்டுக்குக் கேட்கும். இப்ப அதிர்ச்சி வேற!
'நிஜமாவா இவ்வளோ கொடுக்கறிங்க?' இது மாமா!
"மூணு பஸ் பிடிச்சு வேலைக்குப் போறிங்களே. சிரமமா இல்லையா?"
" கஷ்டம்தான் மாமா. என்ன செய்யறது? வீடு கிடைக்கலையே!"
" நான் ஏதாவது ஏற்பாடு செய்யட்டுமா? நாைைளக்குச் சாயந்திரமா வாங்களேன்"
அதுக்குள்ளே, குமுட்டி அடுப்பிலே, வெங்கலப் பானையிலே சுடச்சுட அரிசி உப்புமா தயார்! கூடவே அருமையான காஃபி!
உப்புமாக்குத் தொட்டுக்க மாங்கா இனிப்பு ஊறுகாய்!
இன்னும் வரும்!
Wednesday, March 02, 2005
ரெடிமேட் பகுதி 5
Posted by துளசி கோபால் at 3/02/2005 11:50:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
வால் சாமியார் வடஇந்திய ஸ்டைலில் இருந்தாலும் சுவத்துல நம்மூர் மீனாட்சியம்மன் படம், வாசலில் அபூர்வமாய் கிடைக்கும் வாழைக்காய் காய்கறி கடை, தெரு கடைக்கோடியிலிருக்கும் காபி பவுடர் கடை, பக்கத்துலேயே ஒரு சவுத் இண்டியன் மெஸ், 'இங்கே தமிழ் வகுப்பு எடுக்கப்படும்'னு ஒரு சின்ன போர்டு... மறக்க முடியுங்களா?
துளசி அக்கா,
நானும் சில வருடங்கள் (1987 to 1990) மும்பையில் வாழ்ந்திருக்கிறேன்! கோலிவாடாவில் உள்ள அரசினர் குடியிருப்பில், நண்பர்களோடு தங்கியிருந்தேன். தினமும் நடந்தே கிங்க் ஸர்க்கிள் ரயில் நிலையத்திற்கு செல்வேன். போகும் வழியில் 'கைரலி' என்ற கேரள உணவகத்தில் அருமையான ஆப்பமும் கடலையும் சாப்பிடுவேன். என் நண்பன் அப்போது CPWD-யில் பணியில் (எனக்கு ONGC-யில் வேலை) இருந்ததால், அவனது அதிகாரிக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை எங்களுக்கு வாடகைக்கு விட்டு விட்டார்! அது 3 அறைகளும், சமைலறையும் (ஹால் கிடையாது!) கொண்ட ஒரு வீடு.
கிச்சனையும், ஒரு அறையையும் ஒரு மராத்தி குடும்பத்திற்கும், ஒரு அறையை புதிதாக திருமணமான ஒரு நண்பருக்கும் sublet செய்து விட்டு, மூன்றாவது அறையில் நானும் இன்னும் 2 நண்பர்களும் இருந்தோம். மராத்தி மாமி மிக இனிமையாக ஹிந்தி பாட்டுக்கள் பாடிக் கொண்டே சமைப்பார்! எங்களுக்கு காலையில் அருமையான ஏலக்காய் 'சாய்' தருவார்! அவருக்கு தங்க விக்ரகம் போல், மயூரி, நிகில் என்ற பெயர்களில் இரண்டு குழந்தைகள்.
நண்பரின் மனைவியோ வாய் நிறைய 'அண்ணே' என்று அழைத்து ஒரு பாசமிகு கிராமத்து அண்ணனாகவே என்னை பாவித்தார்கள்! கோலிவாடாவில் நிறைய தமிழ் நண்பர்கள் இருந்தார்கள். மாலைப் பொழுதுகளும் விடுமுறை தினங்களும் மிக இனிமையானவை!!! அரட்டையும், கும்மாளமும், ஊர் சுற்றுதலும், சினிமாவும், சீட்டாட்டமும், கேரமும், பூப்பந்தாட்ட விளையாட்டும் என்று நேரம் போவதே தெரியாது. அடிக்கடி மாதுங்காவில் இருந்த CONCERNS உணவகத்திற்குச் செல்வோம்! மாதுங்காவில் நீங்கள் குறிப்பிட்ட வகை வீட்டிற்கும் (என் நண்பன் ஒருவனை சந்திக்க) சென்றிருக்கிறேன்!
நீங்கள் எழுதியதை படித்தவுடன், மேற்கூறியவைகளும், இன்னும் பல இனிய ஞாபகங்களும் என் நெஞ்சில் அலை மோதின.
"நெஞ்சம் மறப்பதில்லை, அது நினைவை இழப்பதில்லை" :-))
ஞாபகப்படுத்தியதற்கு நன்றிகள்! தொடர்ந்து எழுதுங்கள்!
என்றென்றும் அன்புடன்
பாலா
அன்புள்ள ராம்கி & பாலா,
பழசையெல்லாம் நினைக்கறப்ப நிஜமாவே ஒரு சந்தோஷம் மனசெல்லாம் நிறைஞ்சுடுது இல்லே?
பலசமயம், எப்படி இப்படியெல்லாம் 'அடி முட்டாளா' இருந்திருக்கிறேன்னும் நினைச்சுக்குவேன்! இப்ப
எப்படின்னு கேக்கறீங்களா? முட்டாத்தனம் கொஞ்சம் குறைஞ்சிருக்குன்னு எனக்குள்ளே ஒரு தோணல்!
என்றும் அன்புடன்,
துளசியக்கா
அன்புள்ள துளசி,
கொஞ்ச நாளாத் தான் உங்க பதிவுகளைப் படிக்க முடிகிறது.
உங்களோட விவரிப்பையெல்லாம் படிச்சா அந்த எடத்துக்கே போய் பார்த்து, நுகர்ந்து, சுவைத்து, உணர்ந்து, கேட்டு ரசித்த உணர்வு ஏற்படுகிறது. அதுதான் உங்களின் எழுத்தின் பலம். நான் இரண்டாம் முறை படிக்க வரும் சில பதிவுகளில் உங்களுடையதும் ஒன்று.
நேர்ல உட்கார்ந்துகொண்டு உங்களின் முகம் பார்த்துக்கொண்டே கேட்பதைப்போன்ற உணர்வு,..
வாழ்த்துக்கள்.
அன்புடன் ஜெ
Post a Comment