புருஷன் மனைவி சண்டையில் மனைவி தீக்குளிப்பு. இறந்த உடலுடன் கணவனின் வெறியாட்டம். பத்திரிகை செய்திக்குன்னு பரபரப்பான தலைப்பு. ஆனால் சம்பவம் நடந்த சமயம் இருந்த மீடியா(?!) ....வெறும் செவிவழிச்செய்தி மட்டும்தான் சொல்லிக்கிட்டு இருந்திருக்கணும். காலம் அப்படி ! வெறும் சன் & மூன் தான்.
பொதுவா புருசன் பெண்டாட்டி சண்டைன்னாவே அது ரெண்டுபேரில் யாராவது அடுத்தவுங்க குடும்பத்தைக் குறை சொன்னதுலேதான் ஆரம்பிக்கும். அதான் உப்புப்போட்டுச் சோறு திங்கறமே...ரோசம் இருக்காதா?
பொண்ணோட பொறந்த வீட்டுலே ஒருவிசேஷம். பொண்ணு மாப்பிளைக்கு அழைப்பு இல்லே. மருமகனுக்கு எரிச்சல். சேதி கேள்விப்பட்ட பொண்ணு, புருசனை மதிச்சுக் கூப்புடலைன்றது ஒரு பக்கம் இருந்தாலும், அது நம்ம பொறந்தவீடாச்சே, அங்கே நமக்கில்லாத உரிமையான்னு எண்ணம். 'நீங்க சும்மா இருங்க. அதெப்படி எங்க வீட்டாம்பளையை மருவாதையில்லா நடத்தறேன்னு நாக்கைப் புடுங்கிக்கிறமாதிரி எங்கப்பனை நாலு வார்த்தைக் கேட்டுட்டு வாரேன்'ன்னு கிளம்புனா. 'அடிப்போடி....பைத்தியகாரச்சி. மதியாத வீட்டு வாசலை மிதிக்கலாமா'ங்கறான் புருசன். 'மரியாதை தெரியாத குடும்பம் உங்களுது. நல்ல வம்சத்துலே போய் பொண் எடுத்தேன். என்னைச் சொல்லணும். உங்கப்பனுக்கு நேரம் சரியில்லை. பொட்டுன்னு போகப்போறான் பாரு'ன்னான். 'அட நீங்க வேற. என்னாத்துக்கு எங்கப்பனுக்குச் சாபம் கொடுக்குறீர்? எங்க வம்சத்துக்கு என்னா கொறச்சல்? நான் போய் அங்கே என்னதான் நடக்குதுன்னு பாத்துட்டு வரேன். எங்கூடு தானே? கூப்புடாமப்போனா என்ன'ன்னா இவ.
"அதெல்லாம் ஒன்னும் வேணாம் நீ தா தைன்னு குதிக்காம உள்ளாற போய் வீட்டு வேலையைப் பாரு."
"இல்லே போகத்தான் போறேன். போனா என்ன செய்வே?"
"போவே? உன் காலை ஒடிச்சு அடுப்புலே வச்சுருவேன்."
"வப்பே வப்பே. நான் அங்கே விருந்து தின்னவா போறேன்? நீ என் அப்பனே இல்லைன்னு சொல்லிட்டு வரப்போறேன். இன்னியோட உன் சங்காத்தமே இல்லேன்னு காறி மூஞ்சுட்டு வரத்தான் போறேன்."
"போ போ. என் பேச்சை மீறிப்போனா...அப்படியே போயிறனும். திரும்பி இங்கே வர்ற வேலை வச்சுக்காதே."
பேசாம இருந்துருக்கலாம். ஆனால் இவளுக்கு இப்போ நேரம் சரியில்லை. வீம்பு புடிச்சுக்கிட்டுக் கிளம்பிப்போனா அப்பன் வீட்டுக்கு. 'எங்கே வந்தே' ன்னு கேட்டான் அப்பன். இவளுக்கு வந்துச்சே ஒரு கோவம்! 'அதெப்படி நீ மருமகனைக் கூப்புடாம விசேஷம் நடத்தப் போச்சு'ன்னு குதிக்கிறாள்.
"அவன் என் மருமகனே இல்லை. என்னோட எதிரி நம்பர் ஒன்."
"நல்லா இல்லே உம் பேச்சு. நீதானே, அவரு உன் மருமகனா வரணுமுன்னு தவமான தவமிருந்தே? அவர் சரின்னதும் என்னைப் பெத்து வளத்து ஆளாக்கி அவருக்குக் கட்டிவச்சே. இப்போ எதிரி கிதிரின்னா என்னா அர்த்தம்?"
"ஆமாம். இல்லேங்கலை. உலகத்துக்கே ராஜாவை, மகளுக்குக் கட்டிவச்சு
மருமகனாக்குனா என் பேச்சு கேட்டு நடப்பான்னு இருந்தேன். ஆனா....இவன் சொல்பேச்சும் கேக்கறதில்லை. மதிச்சும் நடந்துக்கலை. சுடுகாட்டுலே திரியற சொறிப்பயலை உனக்குக் கட்டிவச்சதுதான் இப்போ தப்பாப் போயிருச்சு."
விசேஷத்துக்கு வந்துருந்த எல்லாப் பெருந்தலைகளுக்கும் முன்னாலே, தன் புருசனை அவமானப்படுத்திப் பேசுனதைக் கேட்டவுடன் இவ சாமியாடறாள். போன இடத்துலே இவளுக்கு என்ன ஆகுமோன்னு அதுக்குள்ளே அவ புருசன், ஒரு அடியாளைப் பின்னாடியே அனுப்பி வச்சான். அவன் வந்து எல்லாததையும் அடிச்சு நொறுக்கி அப்பன்காரனையும் கொன்னுபோட்டான்.
இந்த கலாட்டாலே அந்த இடமே பத்தி எரியுது. இவ பார்த்தா..... போவாதே போவாதேன்னு சொல்லச்சொல்ல அதைக் கேக்காமப் போயிட்டேனே.... இப்ப எந்த மூஞ்சை வச்சுக்கிட்டு அங்கே திரும்பப்போறதுன்னு அழுதுகிட்டே ஆங்காரத்தோடு அந்த தீயிலே விழுந்து உயிரை மாய்ச்சுக்கிட்டாள்.
விஷயம் தெரிஞ்சு புருசன்காரன் மார்லே அடிச்சுக்கிட்டு ஓடியாந்தான். வந்தா, இவ பொணமாக் கிடக்கா. 'ஐயோ பாதகத்தீ, என் பேச்சைக் கேக்காம இப்படி வந்து உசுரை விட்டயே'ன்னு அலறிக்கிட்டே, அவ பொணத்தை எடுத்துத் தோளில் போட்டுக்கிட்டு வெறிபிடிச்சு ஆடிக்கிட்டே உலகமெல்லாம் சுத்தறான். சரி....... கொஞ்ச நேரத்துலே துக்கம் அடங்கிருமுன்னு பார்த்தா .............எங்கே? இவன் ஆடுற ஆட்டத்துலே அகில உலகமே நடுங்குது.
மச்சினன்காரன் பார்த்தான். இதென்னடா கோராமைன்னு..... செத்த நேரத்துலே அடங்குவான்னு பார்த்தா............ வெறி கூடிக்கிட்டே போகுது. இது நல்லதில்லை. போனவளை நல்லடக்கம் செய்யாம பொணத்தை வச்சுக்கிட்டே இதென்ன போராட்டம்? நாமாச்சும் போய் அதை வாங்கி செய்யவேண்டியதைச் செஞ்சுறலாமுன்னாலும் அவன் முன்னே போகவே பயமா இருக்கு. பேசாம ஒரு காரியம் நாமே செய்யவேண்டியதுதான்னு தீர்மானிச்சு, கையிலே சுத்திக்கிட்டு இருந்த சக்கரத்தை ஏவுனான். சர்ன்னு அது போய் பொணத்தைத் துண்டுதுண்டா அறுத்து வீசிறிச்சு. மிக்ஸியிலே அடிச்சமாதிரி ஆகிருச்சு. மொத்தம் 51 துண்டு:(
மூக்கொரு பக்கம்,. கண்ணொரு பக்கம், காது ஒரு பக்கம், கையொரு பக்கம், காலொரு பக்கம்ன்னு ஊர் உலகமெல்லாம்(ஒரு பேருக்குத்தான் உலகமுன்னு சொன்னது. இங்கே பாரத தேசத்துலேதான் (பிரிவினைக்கு முன்னால் இருந்த பாரதம்) போய் விழுந்துச்சு. இந்த 51 இடங்களைத்தான் சக்தி பீடமுன்னு சொல்றாங்க. அதுலே வலது கால் வந்து விழுந்த இடம்தான் இப்போ நாம் நிக்குமிடம்.
பத்ரகாளி கோவில்ன்னு பெயர் போட்டு வச்சுருக்காங்க. கோவிலில் பராமரிப்பு, பழுது பார்த்துப் பெயிண்ட் அடிக்கும் வேலை ஒரு பக்கம் நடந்துக்கிட்டு இருக்கு. திருவிழா வருதாம். அவ்வளவாக் கூட்டமில்லை.அலங்கார தோரணவாசலில் ரெண்டு பக்கமும் சிங்கம் உறுமுது. ஒரு பக்கம் ஹனுமன் நிக்கிறார். அடுத்த பக்கம் கவனிக்க விட்டுப்போச்சு:(
அளவான சின்ன கோபுரம். உள்ளே நுழைஞ்சவுடனே ஒரு பெரிய தாமரை மலர் பீடம். அதுலே நடுவாந்தரமா கணுக்கால் வரையில் ஒரு பளிங்குக்கால். கொலுசு அணிஞ்ச அழகான பாதம்.
அதைக் கடந்தால் சின்னதா கருவறை. பளிங்குலே தேவி உருவம், கால் எல்லாம் இருக்கு. அழகா ஒரு க்ரீடம் போல காலுக்குச் சார்த்தி இருக்காங்க. நவராத்ரி காலங்களில் கூட்டம் நெரியுமாம். பஞ்ச பாண்டவர்கள் பாரதப்போரில் வெற்றி கிடைக்கணுமுன்னு இங்கே வந்து தேவியிடம் பிரார்த்தனை செஞ்சாங்களாம். இவுங்க கூடவே ஸ்ரீ கிருஷ்ணனும் வந்தாராம். கேட்ட வரம் கிடைக்குமாம். அதுதான் இன்னும் சிறப்புன்னு ஹரியானா டூரிஸம் வச்ச தகவல் பலகை சொல்லுது.
எங்க பாட்டி எப்பவும் சொல்றது, 'யத்தனம், ப்ரயத்தனம், தெய்வத்தனம்'ன்னு. அதாவது ஒரு காரியம் நிறைவேறணுமுன்னா கடவுள் அனுக்கிரஹம் வேணும். அது எப்போ கிடைக்குமுன்னா, நாம் தீவிரமா அதைப்பற்றி ஆலோசிக்கணும். அப்புறம் அதை அடையத் தேவையான எல்லா முயற்சியையும் எடுக்கணும். அதைப் பார்த்துட்டுத்தான் கடவுள் ,உண்மையான முயற்சி வெற்றி அடையட்டுமுன்னு நிறைவேற்றிக் கொடுப்பார். (கடவுளே பார்த்து நடத்தித் தரட்டும்னுன்னு ச்சும்மா உக்கார்ந்திருந்தா ஒன்னும் நடக்காது!)
பஞ்சபாண்டவர்கள் ஒரு பக்கம் போருக்குத் தேவையான எல்லா முயற்சிகளும் எடுத்துக்கிட்டே, ஒரு கோவில் விடாமப்போய் கடவுளை வேண்டிக்கிட்டு இருந்துருக்காங்க.கோவிலை விட்டு வெளியே வரும்போது மணி பனிரெண்டரை. என்னோட அரைநாள் முடிஞ்சு போச்சு. ஆனால் இன்னிக்குத்தான் ஞாயித்துக்கிழமை லீவாச்சே!
நாலு தெரு சந்திக்கும் இடங்களில் எல்லாம் அழகான சிலைகளை வச்சுருக்காங்க. ரெண்டு பக்கமும் வெவ்வேற சிலைகள். கதைதான் தெரியலை:(
ஜ்யோதிசர் சரோவர்ன்னு பெயர் பார்த்தமே. அங்கே போகலாமுன்னு சொன்னால்................. அங்கே ஒன்னும் இல்லையாம் வெறும் குளமாம். முக்கிய கோவில்களை நீங்க விட்டுறக்கூடாதுன்னுதான் இங்கெல்லாம் கொண்டு வந்தேன்னு ரோஹித் சொன்னதும், ஆமாமாம். நேரமாகுது. லஞ்ச் டைம் வேற 'எங்கியாவது போய் சாப்டுட்டு டெல்லி போற வழியைப் பார்க்கலாம் 'என்றார் கோபால்.
"இல்லையே...அங்கே முக்கியமா என்னவோ இருக்குன்னு எங்கியோ படிச்சேனே"
"அதையெல்லாம் அடுத்தமுறை (?) பார்த்துக்கலாம். பாவம் இந்த ரோஹித். காலையில் 7 மணிக்கு வந்த ஆள். பசிக்காதா? ம்ம்ம்ம்...சலோ...கிதர் பி அச்சா ஜாகா மே கானா காயே(ங்)கா "கடைசியில் 'குருக்ஷேத்ரத்தில் அரை க்ஷேத்ரம்' பார்த்துட்டு வந்துருக்கேன். அடுத்து எப்பவாவது போனால் கீதை உபதேசம் நடந்த இடத்தைப் பற்றி எழுதுனால் ஆச்சு.
நல்ல இடத்தைத் தேடித்தேடி ஒரு மணி நேரம் கழிச்சு வரும் வழியில் கர்னால் என்ற ஊரைக் கடந்ததும் நெடுஞ்சாலையில் பகலுணவு ஆச்சு. நடுக்காட்டிலே முளைச்ச அற்புதமான கட்டிடம். கலைப்பொருட்கள் விற்கும் கடையுடன் சேர்ந்த 'வசதியான ' நியூ வொர்ல்ட் ஃபாஸ்ட் ஃபுட். படு சுத்தம். சாப்பாடும் நல்லாவே இருந்துச்சு. என் கவலை எல்லாம் இவ்வளவு அழகான கலைப்பொருட்களை யார் இங்கே வந்து வாங்குவாங்க? ன்றது. கடையின் உரிமையாளர் சொல்றார் இந்தியாவில் எந்த இடத்துக்கும் அனுப்பி வைப்பாராம். எல்லாமே வெளியூருகளுக்குத்தான் போகுதாம்!
ஒன்னரை மணி நேரம் பயணம் செஞ்சு டெல்லியின் எல்லைக்கு வந்து, அங்கிருந்து ஊர்ந்து ஊர்ந்து ஹொட்டேல் போக ஒன்னரை மணி நேரம்(தான்) ஆச்சு. ஏன்னா....ஞாயித்துக்கிழமை பாருங்க. அதான் ட்ராஃபிக் அவ்வளவா இல்லையாம்:-)
மறுநாள் நடக்கவிருந்த பதிவர் சந்திப்பை ( ஜஸ்ட் ஒன் டு ஒன்) கேன்ஸல் செய்யும்படியா ஆயிருச்சு, அங்கே போக வர நாலு மணிநேரம் ஆகும் என்பதால்:( ஒரு முக்கால் மணி நேரம் தொலைபேசி வழியா பதிவர் சந்திப்பு நடந்துச்சு.
போகட்டும். பொழைச்சுக்கிடந்தா அடுத்த முறை பார்க்கலாம். வரட்டா.......
Showing posts with label Badrakali. Show all posts
Showing posts with label Badrakali. Show all posts
Saturday, March 27, 2010
குடும்பச் சண்டையில் மனைவி தீக்குளிப்பு:(
Posted by
துளசி கோபால்
at
3/27/2010 06:44:00 PM
53
comments
Subscribe to:
Posts (Atom)