Wednesday, November 13, 2019

சம்பந்தப்பட்டவர்களுத்தான் சுவாரஸ்யம். இல்லையோ? (பயணத்தொடர், பகுதி 168 )

நம்ம சிங்கை எழுத்தாளர் சித்ரா ரமேஷைப்பத்திச் சொல்லி இருக்கேன்தானே? அவுங்க அப்பாம்மா இதே அடையார் ஏரியாவில்தான். மாமி, மாமான்னு கூப்பிட்டாலும்  நமக்கும் அப்பாம்மாதான்.  அங்கே போகலாமுன்னு நினைச்சு, எப்ப ஃபோன் செஞ்சாலும் கேள்வியும் பதிலும்  எப்பவும் ஒன்னே!
"மாமி, நீங்க ஃப்ரீயா?  நாங்க வரலாமா?"

"இதென்ன கேள்வி? இது உன் வீடு, பேசாமக் கிளம்பி வா "

சரியா மணி பனிரெண்டு பத்து. உள்ளே நுழைஞ்சதும் முதல் கேள்வி, 'சாப்ட்றயா?' 

"பசி இல்லை. ஹெவி ப்ரேக்ஃபாஸ்ட் இன்றைக்கு!"

வீட்டுக்கதை, நாட்டுக்கதை, சிங்கைக்கதை, நியூஸிக் கதையெல்லாம்  பேசிக்கிட்டே இருக்கோம். அப்படியும் எலுமிச்சை சாதமும், கேரட் ஸாலடும், பப்படமுமா  உள்ளே தள்ளியும் ஆச்சு.
வீட்டைப் பளிச்ன்னு வச்சுருப்பாங்க. வீடு முழுக்க மாமியின்  கைவேலைப்பாடுகள், சித்திரங்கள் , தஞ்சாவூர் பெயின்ட்டிங்  இப்படி வகை வகையா.....


ரிட்டயர்டு டீச்சர்!  டான்ஸர் என்பதால்  பேசும்போதே சட் சட்னு  மாறும் முகபாவங்கள்,  கைகளின் அபிநயம்னு எதைச் சொல்ல எதைவிட? பள்ளி ஆண்டுவிழா சமயம் நடனம் ஆடுனப்ப எடுத்த படம் எனக்கு ரொம்பவே பிடிச்சதும் கூட !
எல்லாத்தையும் விட, எப்பப் போனாலும் பளிச்ன்னு மின்னுவாங்க. இதுலே அவுங்களுக்கு நூத்துக்கு நூறுன்னா....  எனக்கு  நூத்துக்கு பூஜ்யம்தான் கிடைக்கும் :-)  நான் ஒரு  சோம்பேறி !
சந்திக்க வர்றதா இருந்தாச் சொல்லிட்டு வாங்க :-) 
ரெண்டெ நாளில் கிளம்பறேன்னு சொல்லிட்டு அங்கிருந்து  இன்னொரு தோழியின்(நியூஸித்தோழி )பெற்றோர் இருக்கும்  ஓய்வில்லத்துக்கு போறோம்.  வழக்கமா வீட்டுலே நடக்கும் சந்திப்பு இந்த முறை இங்கே....

சரியான விலாஸம் கைவசம் இருந்தாலும்  இடத்தைக் கண்டுபிடிக்க முடியலை. சுத்திச் சுத்தி வந்துக்கிட்டு இருக்கோம்.  கடைசியில் அந்ததெருவில் இருக்கும் ஒரு டாக்டர் க்ளினிக்கில் போய் விசாரிச்சேன். நடுவில் இருக்கும் பார்க்குக்கு அந்தாண்டையும் இதே வீதிதானாம் !

கீழ்தளத்தில் குட்டியாப் புள்ளையாரும் துளசிமாடமும், கூடவே நம்மை ஓரக்கண்ணால் பார்க்கும் ஜார்ஜும் :-)


மருத்துவ வசதியுடன் கூடிய இல்லம் என்பதால் சட்னு டாக்டரைத் தேடி ஓட வேண்டாம்.  தென்தமிழ்நாட்டுப்பக்கம் இருந்து வந்துருக்கும்  உதவியாளர்கள்.  எல்லாம் சின்ன வயசு! சிரிச்சமுகத்துடன்  முதியோர்களைக் கவனிச்சுக்கறாங்க.
வசதியான இடம்தான். நமக்கும் வயசாகிக்கிட்டே போறதால்....  தேவைப்படுமோன்னு  கொஞ்சம் நல்லாவே கவனிச்சுப் பார்த்து வச்சுக்குவேன்.  நம்ம பக்கங்களில் என்றால் குறைஞ்ச பட்சம் நம்மவருக்கு ரசஞ்சாதமும், எனக்குக் கொஞ்சம் பருப்பு சாதமும்  கிடைக்காதா என்ன என்ற எண்ணம்தான்.....

பெரியவர்களிடம் கொஞ்சநேரம் பேசிட்டுக் கிளம்பினோம்.
 ஓல்ட் ஏஜ் இஸ் வெரி ஸ்கேரி.... ப்ச்.....   பெருமாளே.... யாரையும் கஷ்டப்படுத்தாதே......

திருவான்மியூரில் இருந்து திநகர் வரும்வழியில்  அடையார், நேரு நகரில் நம்ம ஹோப் ஃபவுண்டேஷன் ஆஃபீஸ் இருக்கு. ஏற்கெனவே தகவல் சொல்லி இருந்ததால்  மலர்விழி (டைரக்டர் ஆஃப் விமன் & சில்ட்ரன் ப்ரோக்ராம் )நமக்காகக் காத்திருந்தாங்க.  ஒரு பதினாறு வருசங்களா இவுங்க கூட நமக்குத் தொடர்பு இருக்கு!   நம்ம துளசிதளத்தில் பலமுறை ஹோப் செய்யும் சேவைகளைப் பற்றி விளக்கிப் பதிவுகள் போட்டுருக்கேன்.  சமீபகாலமா, ஹோமில் குழந்தைகள் நல்லாவும் ஆரோக்கியமாகவும் இருக்காங்க என்பது மனசுக்கு மகிழ்ச்சி தரும் சமாச்சாரம். 
முன்னாலே ஹோம் இங்கே தாம்பரத்தில் இருந்தது. இப்போ ஒரு அஞ்சாறு வருஷங்களா, மேல்மருவத்தூர் பக்கம் இடம் மாறிட்டதால், போய்வர சந்தர்ப்பம் சரியா அமையலை.  பார்க்கலாம்.... அடுத்த முறை கிடைக்குதான்னு...

கொஞ்சம் நிதி உதவி செஞ்சுட்டு, நேரா தி நகர்தான்.  இன்றைக்கு ஒரு ட்ராவல் வண்டி எடுத்திருப்பதால்  செய்ய வேண்டியவைகளை முடிச்சுக்கத்தான் ஒரே ஓட்டம். ட்ரைக்ளீனிங் செய்யக் கொடுத்தவைகளை வாங்கிக்கலாமுன்னு போனால்.....  வழக்கம்போல் 'இன்னும் ரெடி ஆகலை மேடம்.... நாளைக்குக் காலை, கட்டாயமா வந்துருமு'ன்னு சொன்னாங்க ரமோலாவும் உதவியாளர் மேரியும். நம்பலாமா?   வேற வழி?
கீதாவில் கீரைவடையிலும் பஜ்ஜிகளிலும் நம்ம பெயர்கள் 'பொரிக்கப்பட்டு' இருந்தன.

லோட்டஸ் வந்து சேர்ந்தாச்.இனி எங்கேயும் போகும் உத்தேசமில்லை.....

அப்ப ராச்சாப்பாடு?  இருக்கவே இருக்கு க்ரீன்வேஸ் & ரூம் சர்வீஸ்.

தொடரும்.....  :-)


11 comments:

said...

சரியான விலாஸம் கைவசம் இருந்தாலும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியலை. சுத்திச் சுத்தி வந்துக்கிட்டு இருக்கோம். /எல்லா இடத்திலேயும் இதுதானா

said...

அருமை நன்றி

// 'பொரிக்கப்பட்டு' // பெரிய றி வரணுமா ?
கீரை வடை - செம்ம, செம்ம;

said...

நல்ல, மகிழ்வான சந்திப்புப் பகிர்வுக்கு நன்றி.

said...

/ஓல்ட் ஏஜ் இஸ் வெரி ஸ்கேரி.... ப்ச்..... பெருமாளே.... யாரையும் கஷ்டப்படுத்தாதே......// - மனசுல நான் நினைத்ததை நீங்க எழுதியிருக்கீங்க. சிங்கம் போன்ற டி.என்.சேஷனையும் கை நடுங்கி ஓல்டேஜ் ஹோம் வீடியோ பார்த்தபோதும் இப்படித்தான் தோன்றியது.

said...

மாமியின் தஞ்சாவூர் பெயின்டிங்,கைவண்ணம் மிகவும் அழகு.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

ஹாஹா..... மாறாதது இது ஒன்றே! இருக்கற குழப்பம் போதாதுன்னு சென்னையில் புது எண், பழைய எண் என்றொரு சமாச்சாரம்.....

said...

வாங்க விஸ்வநாத்.

சமையலில் சின்ன ரி தான். அதுலே பெயரைப் போட்டுக்கணுமுன்னா பொறிக்கலாம் :-)

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா,

மகிழ்ச்சியே!

வருகைக்கு நன்றி !

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

உண்மையிலேயே பயமாத்தான் இருக்கு! அதிலும் வெயிட்டிங் ஃபார் GOD என்ற நிலையில் உள்ளவர்களைப் பார்த்தால் கிலிதான்....

said...

வாங்க மாதேவி,

மாமியின் கைவண்ணம் உண்மையில் பிரமிக்க வைக்கும்!

said...

மாமியின் கை வண்ணங்கள் மிக அழகு ...


வயதாகும் போது ....ஒவ்வொருவருக்கும் பல பல அனுபவங்கள் ...