கும்பாபிஷேகத்தை நடத்திக்கொடுக்க அஞ்சு பண்டிட்டுகளைக் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செஞ்சுருந்தாங்க. ஆக்லாந்து, வெலிங்டன், ஹேமில்டன் என்ற ஊர்களில் இருந்து வந்த மூவருடன், உள்ளூர் பண்டிட்டுகள் இருவரும் (நம்ம கோவில் பண்டிட்டுகள்தான்) இவர்களில் வெலிங்டன் ஸ்ரீ பத்மன் ஐயர், நாம் கோவில் கட்டும் எண்ணத்தோடு சத்சங்கம் தொடங்கின காலத்திலிருந்து நம்மோடு இருக்கிறார். முக்கிய விழாக்களை இவர், வெலிங்டனில் இருந்து வந்து நடத்திக்கொடுப்பது வழக்கம்.
மற்ற சத்சங்கப் பூஜைகளுக்கு உள்ளுரில் இருக்கும் நேபாள நாட்டு பண்டிட் வந்து நடத்திக்கொடுப்பார். நம்முடைய தென்னிந்திய முறைப்படி பூஜைகள் செய்ய ஓரளவு பழக்கப்படுத்திக்கொண்ட அருமையான மனிதர். சத்சங்க காலம் முடிஞ்சு, இப்ப கோவிலுக்காக ஒரு இடம் வாங்கி கோவிலை நடத்த ஆரம்பிச்சு ரெண்டு வருஷம் ஆகுது. இப்போ சமீபத்தில் இவருடைய மைத்துனர் நம்மூருக்கு வந்திருப்பதால் அவரும் கோவில் பண்ட்டிட்டாக செயல்படுகிறார்.
கோவில் நடத்த ஆரம்பிச்சுட்டோமே தவிர, பூஜைகள் எல்லாம் உற்சவமூர்த்தங்கங்களுக்குத்தான். மூலவர் இன்னும் வரலை. ஒருவழியா கடந்த ஏப்ரல் மாசம் கற்சிலைமூலவர், மண்டபம், பெருமாள் & தாயார்கள் விக்ரஹங்கள்னு கோவிலுக்குண்டானவர்கள் வந்திறங்கினாங்க. மற்ற ஏற்பாடுகளைச் செய்து முடிக்க நாலுமாசம் போல ஆகிருச்சு. இதோ இப்பக் கும்பாபிஷேகம் செய்யும் நாள் வந்தாச்சு.
பெரிய பொதிகளைப் பிரிச்சு மண்டப பாகங்களைச் சேர்த்து இணைக்கும் பணி, அபிஷேக நீரைத் தனியாக வெளியேத்தறதுக்கான ப்ளம்பிங் வேலை, ஹோமப்புகை வெளியேற எக்ஸாஸ்ட் இப்படி எல்லாத்துக்குமான ஏற்பாடுகள் பரபரன்னு நடக்க ஆரம்பிச்சது.
மூணுநாள் வைபவம். செப்டம்பர் 13 வெள்ளிக்கிழமை ஆரம்பிச்சு 15 ஆம் தேதி ஞாயிறு பூர்த்தி.
முதல்நாள் கணபதி ஹோமத்துடன் தொடக்கம். உடல்நலக்குறைவு காரணம் நாம் போகலை.
இரண்டாம் நாள் காலை ஹோமம் , மற்ற சாஸ்த்திர சம்ப்ரதாயங்கள் எல்லாமும். அன்றைக்கு மாலை நாலுமணி வரை மூலவருக்குத் தைலம் பூசுதல். இதில் பக்தர்கள் அனைவரும் எண்ணெய் பூசலாம். இதைத் தவறவிடக்கூடாதுன்னு மத்யானமாக்கிளம்பிப் போனோம்.
இந்தக் கோவில் இருக்கும் வளாகத்தில்தான் நம்ம யோகா வகுப்புகள் ஆறு வருஷமா நடக்குது. இப்போ புள்ளையாரும் வந்துட்டதால் இது நம்ம கோவில் என்ற எண்ணம் எங்க யோகா குழுவுக்கு ஏற்பட்டுப்போச்சு. அவுங்களும் நம்மோடு வந்து கலந்துக்கிட்டாங்க. நாந்தான் சொல்லி வச்சேனே..... இந்த எண்ணெய் பூசும் சடங்கு ஒன்ஸ் இன் அ லைஃப் டைமுன்னு !
ஹேமில்டன் பாலாஜி கோவில் பட்டர் கிஷோர்ஜி, மூணுநாள் விழாவையும் நடத்திக்கொடுக்க வந்துருந்தார். நமக்கு அவர் நல்ல நண்பர்தான். அவருடைய புது மனைவியும் வந்துருந்தாங்க. அவுங்களை இப்பதான் நாங்க முதல்முறையாப் பார்க்கிறோம்.
மூணாவது நாள், காலை ஆறு மணிமுதல் உபயதாரர்களுக்கான சங்கல்ப்ப பூஜை. ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனித்தனி நேரம் ஒதுக்கியிருந்தாங்க. நமக்குக் காலை ஆறுமணி ! நொண்டிக்காலை வச்சுக்கிட்டு அவ்வளவு காலையில் போய் பங்கேற்க இயலாதுன்னு சொல்லவேண்டியதாகப்போச்சு. பெருமாளுக்குத் தெரியாதா நம்ம லக்ஷணம் ? வீட்டிலிருந்து லைவா பார்த்துக்கவேண்டியதுதான்.
அன்றைக்கு ஓணம் பண்டிகை வேற ! வாமன ஜயந்தி ! நம்ம வீட்டில் பூஜைகளை முடிச்சுட்டுத்தான் கோவிலுக்குப் போகணும். ஓணசத்ய ஒன்னும் சமைக்கலை. அதான் ரெண்டு வாரம் முந்தியே நம்ம கேரளா அசோஸியேஷனில் ஓணம் கொண்டாடி, ஓணசத்ய அனுபவிச்சாச்சு இல்லையோ !
வீட்டுப் பூஜைக்குச் சக்கப்ரதமன் செஞ்சாச்சு. பதினொன்னரை வாக்கில் கோவிலுக்குப் போனோம். ப்ராணப்ரதிஷ்டை கோலாகலங்கள் அமர்க்களமா இருக்கு.
உள்ளூர் அரசியல் வியாதிகள் வந்துருக்காங்க. பார்லிமென்ட் அங்கங்கள். எங்க தொகுதி எம் பி நமக்கு நல்லாவே பரிச்சயமானவர்தான். நம்மவர் வரவேற்பு முடிஞ்சதும், நம்ம பதுமன் ஐயரின் விடாமுயற்சியைப் பற்றியும், அவரின் தூண்டுதலால்தான் இவ்வளவு தூரம் நாம் மூலவர் ப்ரதிஷ்டை, மஹாகும்பாபிஷேகம் வரை வந்துருக்கோம் என்றும் மனதாரப் பாராட்டி வாழ்த்தினார்.
ச்சும்மாச் சொல்லக்கூடாது, புள்ளையார் வெள்ளிக்கவசத்தில் ஜொலிக்கிறார் !
பெருமாளுக்கும் தாயார்களுக்கும் அலங்காரம் அருமை ! பூஜைகள் எல்லாம் முடிஞ்சதும் அன்னதானம் ! பெரிய விருந்துதான் !
விருந்து முடிஞ்சது.இப்பவே மணி ரெண்டரை. பண்டிட்டுகள் அனைவருக்கும் கொஞ்சநேரம் ஓய்வு. திரும்ப அஞ்சுமணிக்குப் பூஜைகள் ஆரம்பிக்கறாங்க. இடைப்பட்ட நேரத்தில் நம்ம கிஷோர்ஜி நம்ம வீட்டுப்பெருமாளை ஸேவிக்க வந்தார். எப்பவும் படங்களிலே பார்த்தவரை நேரில் பார்க்கவேணாமா? ( இவர் நம்ம ஃபேஸ்புக் ஃப்ரெண்ட்! )
நம்ம பெருமாளுக்கு தீபாரத்தி ஆச்சு. நம் பெருமாள் முகத்தில் புஞ்சிரி ! சின்னதா ரெண்டு வீடியோ க்ளிப்ஸ் ஃபேஸ்புக்கில் போட்டுருந்தேன். விருப்பமானால் கீழே சுட்டிகளில் பார்க்கலாம்.
https://www.facebook.com/1309695969/videos/1069725037838749/
https://www.facebook.com/1309695969/videos/377373012093071/
நம்ம அத்திவரதர், இவருக்கு ஏற்கெனவே பரிச்சயமானவர்தான். நம்மூரில் 2021 இல் நடந்த சுதர்ஸன ஹோமத்துக்கு அத்திவரதர்தான் Chief & Special Guest அப்போ !
ஓணம் ஸ்பெஷல் நம்ம சக்கப்ரதமன் அருமையாம் ! ஒரு மணி நேரம் போல இனிமையான பேச்சு. இன்னொரு நண்பர் இவுங்களை அழைச்சுப்போக வந்தார். இதோ..... சக்கப்ரதமன் !
0 comments:
Post a Comment