Tuesday, January 07, 2025

சீனக்கோவிலில் விஜயதரணி !

நம்மூரில் ஒரு ஆறேழு  புத்தர் கோவில்கள் இருக்குன்னாலும்......  ஒவ்வொன்னும் புத்தரைக் கும்பிடும் ஒவ்வொரு நாட்டு மக்களும் தனித்தனியாக் கட்டிக்கிட்டவைகளே. கோவில்னு சொல்லும் வெளித் தோற்றத்தோடு இருப்பது ஒன்னே ஒன்னுதான், இப்போதைக்கு.  அது தாய்லாந்து புத்த சந்யாசிகளால் நடத்தப்படுது !
நம்மூட்டாண்டை இருக்கும் கோவில் தாய்வான் நாட்டு  புத்த மடத்தின்  வகையில் இருக்கு.  வெளிப்புறம் பாரம்பரிய புத்தர்கோவில் போல இருக்காது.  நகரத்துக்குள்ளே இருப்பதால்  அப்படித் தனிப்பட்டத் தோற்றத்தில் கட்ட அனுமதி கிடைக்கலை போல்......
இந்தக்கோவிலில் ஒரு விசேஷம் என்னன்னா.....   மாடியில் சந்நிதியும், கீழ்தளத்தில் ஒரு எக்ஸிபிஷன் ஹாலுமா வச்சுருக்காங்க என்பதே!  சீனக்கலாச்சாரத்தையொட்டிய சிலபல அபூர்வ சமாச்சாரங்களை  அப்பப்பக் காட்சிக்கு வைப்பாங்க.  நாங்களும் இதுவரை ஒன்னுவிடாமப் போய்ப் பார்த்துருக்கோம். 
'கோவில் நண்பர்கள் 'கூட்டத்தில் நாம் இருப்பதால்.... கோவில்  முக்கிய நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்களையும்,  தொடக்கவிழா அழைப்பையும், அப்பப்ப அனுப்பிருவாங்க. பொதுவாக் கண்காட்சிகள் மூணு மாசம் வரை  இருக்கும்.  இந்த முறை என்னவோ நாலே வாரங்கள் !   Soaring Through The Sky  என்ற தலைப்பை பார்த்ததும் விமானம் சம்பந்தப்பட்ட சமாச்சாரமுன்னு நினைச்சேன்.  ஆனால்.......  கண்காட்சிப் பொருள்..... நாலாம் நுற்றாண்டு குகைகள் ! 

விளக்கிச் சொல்லும்  கைடு சர்வீஸ், குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட நேரங்களில் இருக்குன்னாலும்.....   பார்வையாளர்களுக்கீடா நடக்க எனக்குக் கொஞ்சம் கால் சரியில்லாத காரணத்தால் அப்புறம் போகலாமுன்னு தள்ளிப் போட்டுருந்தேன்.  அதுக்கான வேளையும் வந்து, அங்கே போய்ச் சேர்ந்தோம்.
முற்றத்தில் நிற்கும் புத்தரை வணங்கிட்டு, எக்ஸிபிஷன் ஹாலுக்குள் போறோம்.......
ஒரு மலைத்தொடரில்  ரெண்டு கிலோ மீட்டர்  நீளம் வரை நாலாம் நுற்றாண்டிலிருந்து பதிநாலாம் நூற்றாண்டுவரை புத்த சந்யாசிகளால்  உருவாக்கப்பட்ட குகைகள் ! 735  குகைகள் இருக்காம். அதில் 492 குகைகளைத் திறந்து பார்த்து ஒழுங்குசெஞ்சு வச்சுருப்பதாக ஒரு தகவல். இதுலே அந்த  ரெண்டு கிமீ இடைவெளியில்  ரெண்டு பக்கமும் இருந்து குடைய  ஆரம்பிச்சு இருந்தாங்க போலே..... வடக்கே 248, தெற்கே 487 ன்னு குகைகள் நீண்டுகிடக்கு !

அதென்னன்னு தெரியலை.... புத்தமதம் பரவியுள்ள  இடங்களில் , புத்த சந்யாசிகளுக்கெல்லாம்  மலையைக்குடைஞ்சு, குகைக்குள் போய் இருக்கத்தான் பிடிக்குது போல !  அங்கே த்யானம் பண்ணறேன்னு போய் உக்கார்ந்தாலும்..........  முதலில் மனசு வெளியில் சுத்திக்கிட்டுத்தானே இருந்துருக்கும், இல்லே ? அப்புறம் அதை ஒருமுகப்படுத்த ஏதாவது ஒரு சமாச்சாரத்தில் மூழ்கிப்போறதுதான் நடந்துருக்கும் என்பது என் அனுமானம். அந்த ஏதாவது....  ???     சிற்பம், ஓவியம் இப்படிக்  கலைகள்தான்.....   

நமக்குத்தான்  இந்தியாவில்,  எல்லோரா, அஜந்தாக் குகைகள், ஸ்ரீலங்காவில்   Dambulla Caves போய்வந்த அனுபவம் இருக்கே ! 
 இந்த மலைக்குகைகள் (Mogao Caves)  இருக்குமிடம்  சீனாவில்  Gansu மாநிலத்தில் Dunhuang என்ற பகுதியில் இருக்கு. நாம் 'ஸில்க் ரூட், ஸில்க் ரோடு' ன்னெல்லாம் கேள்விப்பட்டுருக்கோமே....  அந்த வழியில் இருக்கும் இடமாம்.  அந்தப் பாதையில் பயணம் போறவங்களுக்கு இது இளைப்பாறும் இடம். பாலைவனத்து சோலை போலன்னு சொல்லலாம்.




சீனத்துலே இருந்து கிளம்பிக் கிழக்கு ஆஃப்ரிகா வரை போய்  பட்டு வித்துட்டு வந்துருக்காங்க சீனவியாபாரிகள். எப்போவாம்?  யேசு பிறக்கறதுக்கு  ரெண்டு நூறு வருஷம் முந்தியே.....    இந்த  வியாபாரம் சமீபத்தில்  15 ஆம் நூற்றாண்டில் பாதிவரை இருந்துருக்கு !  (second century BCE until the mid-15th century.)

ஆஹா....  நம்ம சீனப்பயணத்தில் பார்த்த 26 மீட்டர் உயர   மைத்ரேயா  புத்தர் சிலை(எனெக்கென்னவோ  விஸ்வரூபம் காமிக்கும்   எம்பெருமாளாகத்தான் தோணுச்சு ) திபெத்துலே இருந்து கொண்டுவரப்பட்டதுன்னு  கைடு சொன்னப்ப, எப்படிக் கொண்டு வந்துருப்பாங்கன்னு  மனசுக்குள்ளே ஒரே யோசனையா  இருந்ததே.... அதுக்கு விடை ஏழு வருஷம் கழிச்சுக் கிடைச்சுருச்சு, பாருங்க !

குகைகளுக்குள்ளில் ஓவியங்களா வரைஞ்சு தள்ளியிருக்காங்க.  ஓவியங்கள் மட்டுமே 45000 சதுர மீட்டர் பரப்பளவில் வருதாம் !  நல்ல வண்ணங்கள் பூசி அழகுபடுத்தியிருக்கும் களிமண் சிலைகள்  ரெண்டாயிரத்துக்கும் மேலே  !!!! இப்ப இந்த குகைகள், சுற்றுலாப் பயணிகளால்  நிறைஞ்சு வழியுது.... நாட்டுக்கும் நல்ல வருமானம்தான் ! 

குகை சமாச்சாரத்தின் புகழ் வெளி வர ஆரம்பிச்சதும்.....  உலக மக்கள் அனைவருக்கும்  இந்த அற்புதங்களைப் பத்திச் சொல்லணுமே என்ற ஆர்வத்தில் இந்தக் கணினி யுகத்தில் டிஜிட்டலைஸ் பண்ணியிருக்காங்க. ஓவியங்களின் ப்ரதிகளைப் பட்டுத்துணிகளிலும் அச்சுப்போட்டுருக்காங்க.  நீராவியன்ன ..... எனச் சொல்லும் வகையில் இருக்கும் மெல்லிசான பட்டு !!!!
இவற்றையும்,  மற்ற ஓவியங்களையும், காட்சிகளின் விவரக்குறிப்புகளையும்  பார்த்தும் படிச்சும்  ரசிச்சுக்கிட்டே வந்தப்பதான் 'விஜயதரணி' கண்ணில் பட்டது.  அட ! இந்தப்பெயர் நம்ம இந்தியப் பெயரில்லையோ  !!!! அதைப் பற்றி அங்கிருந்த உதவியாளரிடம் கேட்டதும்  அந்த ஸில்க் ரோடு வழியாகத்தான் புத்தரும், புத்தமதமும், அம்மதத்தைச் சார்ந்த சூத்திரங்களும் சீனத்துக்கு வந்த விவரம் சுருக்கமாகச் சொன்னார்.  





இந்த விஜயதரணி சூத்திரம் ( ஸ்லோகம்) ரொம்பவே சக்தி வாய்ந்தது. நம் கர்ம வினைகளை அகற்றி, நம்மை பரிசுத்தமாக்கி, நீண்ட ஆயுளையும் ஐஸ்வர்யத்தையும் கொடுக்கவல்லதுன்னு அப்புறம் ஓரளவு தெரிஞ்சுக்கிட்டேன்.  ஸ்லோகம் சமஸ்க்ரத மொழியில்தான் இருக்கு !

புத்தர் கோவில்களுக்குப் போகும்போதெல்லாம் ' I am from the land of Buddha ' என்ற  கர்வம் கொஞ்சம் தலைக்குள்  வந்துரும். அதேதான் அன்றைக்கும்!
1987 இல் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியப் பட்டியலில்  இந்த குகைகளைச் சேர்த்துருக்காங்க. 

நம்மூரில் இருக்கும் சைனீஸ் எம்பஸியும்,  உள்ளூர் கோவிலுமாச் சேர்ந்து ஏற்பாடு செஞ்சுஇவ்வளவு சிறந்த ஓவியங்களை, நமக்கு இருக்கும் இடத்தில் இருந்தே பார்த்து அனுபவிக்க ஒரு வாய்ப்பும் கொடுத்ததற்கு மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் !

அப்படியே மேல்தளத்துக்குப்போய் புத்தர் சந்நிதியில் தரிசனமும் ஆச்சு !
PIN குறிப்பு : ஏகப்பட்டப் படங்களை எடுத்துருக்கேன். நூத்திமுப்பத்தியாறாம் !   நேரம் வாய்த்தால் ஃபேஸ்புக்கில்  ஒரு தனி ஆல்பமாகப் போட்டு, இங்கே லிங்க் கொடுக்கும் எண்ணம் இருக்கிறது. இப்போதைக்கு பதிவில் கொஞ்சம் படங்களைச் சேர்த்திருக்கேன். 


3 comments:

said...

அருமை நன்றி

said...

​கட்டுரைக்கு படமா, படங்களுக்கு கட்டுரையா என்று என்னும் வகையில் இரன்டும் பொருந்தி அருமையாக இருந்தது. காட்சி காண ஆட்கள் வராதது ஏனோ தெரியவில்லை. பொதுவாக சீனர்கள் மதங்களை மறந்து விட்டனர்.

Jayakumar

said...

நாலாம் நூற்றாண்டு குகைகள்...   சுவாரஸ்யம். 

அபார்ட்மெண்ட் கட்டியது போல குகைகளைக் குடைந்து வைத்திருக்கிறார்கள்.  கொஞ்சம் அசந்தால் லிப்ட் கூட வைத்திருந்திருப்பார்கள் போல...!

மிகவும் சுவாரஸ்யமான பதிவு.