Friday, January 24, 2025

நவராத்ரி............. விழா !

போன வருஷக்கொலு முடிஞ்சாட்டு வந்திறங்கிய கொலுப்படிக்கு இந்த வருஷம்தான்  முதல் நவராத்ரி.   நல்லா வருதான்னு பார்க்க செட் பண்ணிட்டுத் திரும்பப் பிரிக்க முடியாமல் அப்படியே வச்சுட்டதால்..........  படி அடுக்கும் வேலை இனி மிச்சம் ! 
அப்போப் படிகள் செட் செஞ்சு பார்த்தப்ப நம்ம ரஜ்ஜு இருந்தான். படிகள் ஏதோ ஜங்கிள் ஜிம்  என்ற நினைப்பில் அதுலே ஏறுவதும் அங்கிருந்து குதிப்பதுமாக ஒரே விளையாட்டு. படிகளுக்கடியில் போய் அங்கிருந்து குதிச்சு மேலே  வருவான்.  அதனால்  படிகளின் பக்கவாட்டில் இருக்கும் பகுதியை மூடி வைக்கணும்னு தேடியதில் திருப்பதி தேவஸ்தான பழைய காலண்டர் கண்ணில் பட்டது.  அந்தப் படங்களையே  ஒட்டியதில்  ஆன்மிகக்களை வந்துருச்சுப் படிகளுக்கு ! 

அந்தப் படிகளுடன் மேலே போட்டுவைக்க உறையும் சேர்த்தே வாங்கியிருந்தோம். அதைப் போட்டுப் பார்த்தால் நல்லாவே இருக்குன்னாலும்,  நம்மவன் அதுலே ஏறி விளையாடும்போது கால் கை நகங்கள் மாட்டி, துணியையே இழுத்துத் தள்ளிட்டான்.  சரியாப் போச்சு..... இருக்கும் நாலு பொம்மைகளுக்குத் தலைவலி இல்லையோன்னு, அந்த துணி உறையை எடுத்து வச்சுட்டோம்.  படிகளுக்கிடையில் இடைவெளி தெரியாமல் இருக்க, வால்பேப்பர் எடுத்து கட் பண்ணிப் போட்டேன். ஒரு விதமாச் சரியாத்தான் இருக்கு.  
இதையெல்லாம் செய்யும்போது, மனசு மட்டும் ரொம்ப பேஜாரா இருந்தது.  பாவம்.... ரஜ்ஜு.....  பெருமாள் கிட்டே போனவனை நினைச்சு ஒரு பாட்டம் அழுதேன். 
தாம்பூலத்தட்டுக்காக மூணேமூணு தேங்காய்கள் ஆச்சு. சுமாராகத்தான் வந்துருக்கு..... ப்ச்..... ஒரு தேங்காயை உடைச்சும் பார்த்தாச் !
மரப்பாச்சிகளுக்கு உடுப்பு மாத்தினேன்.  மாளய அமாவாசைக்குச் சின்னதா ஒரு படையல்.  அன்றைக்கு இரவே கொலுப்பொம்மைகளை அடுக்கியாச்சு.  பொழுது விடிஞ்சா நவராத்ரி முதல்நாள்.  

இந்த ஒன்பது நாட்களுக்கு என்ன ப்ரஸாதம் புதுசாச்  செய்யறேனோ இல்லையோ..... கோலம் மட்டும் விதவிதமா........ கார்பெட் தரையில் ஏது கோலம் போடறதெல்லாம்.?  காலத்துக்கேத்த மாடர்ன் வகைதான்.  ஒரு பத்து செட் வரை சேர்ந்துருக்கு.  அதை வச்சே நாளும் ஒரு வகை......
அதிசயமா.... முதல்நாள் கொலு விஸிட்டர், வடக்குத்தீவில் இருக்கும் நம்ம வலைப்பதிவர் தோழிதான் !  நம்மூருக்கு வர்றதா நேத்துத் தகவல் சொன்னபோது, லஞ்சு நம்ம வீட்டில்னு மட்டுமே சொன்னேன். கொலு சமாச்சாரம் மூச் விடலை. சர்ப்ரைஸாக இருக்கட்டுமே!  அப்படியே ஆச்சு ! 




சாயங்காலம் நம்ம 'தொரை' வந்துருந்தார். 


இந்தமுறை நிறையப்பேரை அழைக்கலை.  எல்லாம் இந்தக் கால் பிரச்சனைதான் காரணம். பொழைச்சுக்கிடந்தா அடுத்த வருஷம் கொஞ்சம் நல்லாக்  கொண்டாடினால் ஆச்சு ! 

நம்ம புள்ளையார் கோவிலிலும் கம்யூனிட்டிக்  கொலு வச்சுருக்கோம். விருப்பமிருந்தால் நாம் ஒரு பொம்மையைக் கொண்டுபோய்க் கொலுவில் வைக்கலாம்.  நவராத்ரி முடிஞ்சதும் திருப்பிக் கொண்டு வந்துறலாம். ஒருமுறைக் கொலுவில் வச்ச பொம்மைகளை, கொலு  முடிஞ்சாட்டுத்தான் எடுக்கணும். நடுவில் எடுத்துறக்கூடாதுன்னு ஒரு சாஸ்த்திரம் இருக்குல்லே ?  எப்பவும் அதை மட்டும் கவனமா ஞாபகம் வச்சுருப்பேன். நம்மிடம் 'ஒரு பொம்மையைக் கொலுவுக்குத்தாங்க'ன்னதும்,  சாஸ்த்திரத்தை நம்மவருக்கு 'எடுத்துச் சொல்லி'   இண்டியன் கடையில் போய், ஒரு தேவி பொம்மை புதுசா வாங்கிக் கோவில்கொலுவுக்குக் கொண்டுபோய் வச்சாச். நம்மிடம் ஏற்கெனவே இல்லாததா இருந்தால் நல்லதில்லையோ !!!!   ஹிஹி.... கடை ஓனர் நம்ம நண்பர் என்பதால் கொஞ்சம் நல்ல டிஸ்கவுண்ட் கிடைச்சது!
நவராத்ரி மூணாம்நாள் நம்மூரில் திவாலி விழா!    வீட்டில் காலை பூஜையை முடித்துக்கொண்டு, சனிக்கிழமையாக இருந்ததால்  வழக்கம்போல் நம்ம ஹரே க்ருஷ்ணா கோவிலுக்குப்போய் வந்தோம்.  மாலை திவாலிக்குப் போவதால்  இன்று விஸிட்டர்ஸ் வருகை இல்லை. 2024 முதல் தீபாவளி, ஃபிஜி மகளிர் குழு, கலைநிகழ்ச்சி, ராமாயணக்காட்சி நாடகம்னு  அமர்க்களமா இருந்தது உண்மை. 

எப்பவும்   அக்டோபர் முதல் வாரத்தில் இருந்தே திவாலிக் கொண்டாட்டங்கள் ஆரம்பிச்சுரும். சிலசமயம் டிசம்பர் முதல் வாரம் வரை நீண்டுபோகும் தீபாவளி விழாக்களை அனுபவிச்சுருக்கோம். அதான் ஏகப்பட்ட தனித்தனிக் குழுக்கள் இருக்கே!  ஆனால் எதா இருந்தாலும்  சனிக்கிழமைதான். வீக்கெண்ட்!!!  இப்படி ஒவ்வொரு வீக்கெண்டும் திவாலின்னு ஒரு சமயம் 11 சனிக்கிழமைகள் கொண்டாட வேண்டியதாப் போச்சு. அக்டோபர் 26 நம்மூரில் தொழிலாளர் தினம் என்று அரசு விடுமுறை உண்டு. அதையுமே அதேநாள் 26 இல்   வைக்காம, அதையொட்டிவரும் வீக் எண்டில் சேர்த்து லேபர்டே  வீக்கெண்ட்ன்னு சனி ஞாயிறோடு, திங்களையும்  கூட்டி லாங்க் வீக்கெண்ட் ஆக்கிரும் அரசு.  அந்த லாங்க் வீக்கெண்டில்தான் நம்ம இண்டியன் சோஸியல் கல்ச்சுரல் க்ளப்பின் தீபாவளி எப்பவுமே  நடக்கும். நம்மவர்  1997 ஆம் ஆண்டு ஆரம்பிச்ச க்ளப்தான் இது. இந்திய சுதந்திரம் பொன்விழா ஆண்டு அது !   ஆச்சு 27 வருஷம் ! 




நாலாம் நாள் ஞாயிறு, நம்ம யோகா குடும்பத்தினரின் வருகை, நம் வீட்டுக் கொலுவுக்கு !  பாட்டும் பஜனும், இடைக்கிடையே சின்னதா வாய்க்கு வேலையும் !  புழக்கடைத் தோட்டத்துப் புல்வெளியில் கர்பா நடனம் ஆடினோம். எல்லோருமாச் சேர்ந்து ஆரத்தி எடுத்தோம். இனிமையான மாலைப்பொழுது!
அன்று மாலையே இன்னொரு தோழியும்  நண்பரும் கொலு விஸிட் வந்தாங்க.  இன்றைக்குப் புள்ளையார் கோவில் ட்யூட்டி அவுங்களோடது என்பதால் இங்கிருந்து கொஞ்சம் சீக்கிரமாக் கிளம்பிட்டாங்க. பொதுவா  நம்ம கோவிலை தினமும் மாலை ஏழு மணி முதல் எட்டரை வரை திறந்து வைக்கிறோம். 




கோவில் மூடியபின், கோவில் பண்டிட்டுகளின் கொலு விஸிட்.  கொலு விஸிட் நேரம் நம்ம வீட்டில் ரொம்பவே  flexible தான்.  யாருக்கு எப்போ நேரம் கிடைக்குதோ அதைப் பொறுத்தே !

சொல்ல மறந்துட்டேனே..... நம்ம ஃபேஸ்புக் தோழி சிவசாந்தி முத்து அவர்கள், ஆன்லைன் பிஸினஸா புடவைகள் (இப்போ நகைநட்டும் ) விற்கறாங்க. புடவைகள் விலையை நான் எப்பவும் நியூஸி டாலரில் மாற்றிப் பார்ப்பதால் சல்லிஸாகத்தான் தெரியும். எப்பவும் சுண்டைக்காய்க் காப்பணம், சுமைகூலி முக்காப்பணம் என்ற வகைதானே.... கூரியர் செலவு அதிகம்தான். இந்த முறை,  வாங்கிய  புடவைகளை அவர்களையே பாதுகாத்து வைக்கச் சொல்லியிருந்தேன்.  இந்தியப்பயணம் இருக்கே.... அப்போ  நேரில் போய் எடுத்துவர்றதா எண்ணம். எப்படியும்  உறவுகளுக்கும், நட்புகளுக்கும்  கொஞ்சம் புடவைகள் பரிசாகப்போயிரும் . மீதி நமக்குன்னு திட்டம் ! கடைசியில் கால்வலியால் பயணம் ரத்து ஆனது! 

உறவும் நண்பருமான  மகருக்குச் சொன்னதும்,  அவர் போய் புடவைகளை எடுத்துவந்து நமக்கு அனுப்பிட்டார்.  பெருமாள், எல்லாப் புடவைகளிலும் நம்ம பெயரையே எழுதி இருந்தாருன்னு தெரிஞ்சது. தினம் ஒரு புதுப்புடவைன்னு இந்த நவராத்ரிக்குத் தாளிச்சுக்கிட்டு இருக்கேன் ... ஹிஹி....


அஞ்சாம்நாள், அற்புதக் குழந்தை அரோஹாவின் வருகை ! ஆறுவயசுதான் ஆறது.......... பத்தரை நிமிட் நீண்ட 'அயிகிரி நந்தினி....' மஹிஷாசுரமர்த்தினி ஸ்லோகத்தை,  மனப்பாடமாப் பாடுனது க்ரேட் ! நம்ம ஃபேஸ்புக் பதிவு இது...... விருப்பம் இருப்பவர்கள் க்ளிக்கலாம் !

https://www.facebook.com/1309695969/videos/417058704467709/

மறுநாள் பேரன் வரும்நாள். வந்தவுடன்  வழக்கம்போல் நேராப் பூஜை அறைக்கு ஓடினான்.பெரிய பக்தி'மான்' ஆக்கும் கேட்டோ !!!
பிற்பகல் இன்னொரு தோழி வந்தாங்க. எங்க நட்புக்கு வயசு இருபத்தியாறு !   நம்ம ஊரின் முதல் பரதநாட்டியப்பள்ளி இவுங்களோடதுதான் !  நம்ம கொலுவுக்கு இவுங்க நடனம் ஒரு விசேஷம் !  அவுங்களோட  அலுவலக வேலைக்கு நடுவில் நமக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கிருவாங்க.  வீக் எண்டுகளில் நாட்டியப்பள்ளி மாணவிகளுக்கு பயிற்சி கொடுப்பாங்க !
 பார்வையாளருக்கும் நடனம் பார்ப்பது  இதுவே முதல்முறை !!!! தாத்தா மடியில் உக்கார்ந்து ரசித்துப் பார்த்தான் ! பெரிய கொலுப்படி, இடத்தைப் பிடிச்சுக்கிட்டதால் மேடை சுருங்கிப்போச்சு !  இவுங்க நடனத்தையும் ஃபேஸ்புக்கில் பதிவு செஞ்சுருக்கேன்.

https://www.facebook.com/1309695969/videos/8768411283223021/
நவராத்ரி ஏழாம்நாள், எங்க யோகா வகுப்பில்  Gகர்பா யோகா !  நடனமும் ஒரு உடற்பயிற்சிதானே ! ஆளுக்கொரு ஐட்டமா சமைச்சுக் கொண்டு போனோம்.   
தேவி பூஜை ஆரத்தி, பஜனை, கோலாட்டம். Gகர்பா  நடனம் எல்லாம் ஆடி முடிச்சு டின்னர் !  விசேஷ விருந்தினராகப் பேரன் தன் பெற்றோருடன் வந்தான் ! 





எட்டாம்நாள் துர்காஷ்டமி . இன்றும் இரண்டு தோழிகள் வருகை.  எல்லாம் ஆஃபீஸ் முடிச்சு வந்து அவசர விஸிட்.  இதில் ஒரு தோழி குழந்தையைக் கூட்டி வந்துருந்தாங்க. நம்ம பேரனைவிட நாலுமாசம் சின்னவள்.


மறுநாள் மஹாநவமி. சரஸ்வதி பூஜை என்பதால்  ரொம்பவே சுலபமான நைவேத்யம் !  இன்றே கொலுவின் கடைசிநாள் என்பதால்,  நேரம் சரியாக அமையாமல் ஒத்திப்போட்டு வந்த தோழி ஒருவர், காலை பதினொரு மணிக்கு வரலாமான்னு கேட்டாங்க. நோ ஒர்ரீஸ்னு சொன்னேன்.  கைக்குழந்தைக்கு வயசு ஒன்னு ! 
இங்கே எல்லாக் குழந்தைகளுக்கும் நாங்கள்தான்  நியூஸி அம்மம்மா & தாத்தா ! 
நம்ம நவராத்ரி விழா ஓரளவு நல்லாவே  அமைஞ்சதுதானே !

PIN குறிப்பு : கொஞ்சம் நீண்ட பதிவுதான்..... மன்னிக்கணும், கேட்டோ !


0 comments: