Thursday, January 02, 2025

புத்தாண்டில் ஆரம்பம்.......

வணக்கம். வணக்கம். வணக்கம். நம் துளசிதளத்தின் அன்பு வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.

'பொது'வருட வாழ்த்துகளுடன்,  பதிவுகளை எழுத ஆரம்பிக்கிறேன்,
உங்கள் அன்பும் ஆதரவும் வழக்கம் போல் தொடரும் என்ற  நம்பிக்கையுடன்!

அஞ்சு மாசம் ஆகியிருக்கு, இங்கே வந்தே...... எல்லாப்பழியும்  'கால்'நிலைக்கே.....

அதை அப்புறம் பார்க்கலாம். 

இந்த வருஷத் தொடக்கம் எப்படி இருந்ததுன்னு இப்போ பார்க்கலாமா ?

நேத்து இரவு ஒரு பதினொன்னரை மணிவாக்கில்   நம்ம வீட்டுக்கு அருகில் (!) இருக்கும் அன்புவிநாயகர் கோவிலுக்குக் கிளம்பினோம். போகுமுன் மறக்காமல் நம்ம வீட்டு முகப்பு அலங்கார விளக்குகளை போட்டாச்.
பொதுவா நம்ம முக்கிய  பண்டிகைகள் நாட்களுக்காக சாமி அறை ஜன்னல்களில்  நிரந்தரமாகவே ஒரு அலங்காரவிளக்கு தோரணத்தை மாட்டி வச்சுருக்கோம்.  நமக்குப் பண்டிகைகள் எண்ணிக்கை குறைவா என்ன ?  ஆன்னா ஊன்னா விளக்கை எரியவிடறதுதான். ஹிஹி....

நம்ம தெருவில் இப்போ பல வருஷங்களா, வீட்டு ஜன்னல் விளக்கு போடறது நாம் மட்டுமே.....  முந்தி இன்னொரு வீட்டிலும் க்றிஸ்மஸ் பண்டிகைக் காலத்தில்  அலங்காரவிளக்கு தோரணம் போடுவாங்க. ரெண்டு வீடுகளா இருந்தது..... அவுங்க வீடு மாறிப்போனதும் தெருவுக்கே ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு நம்ம வீட்டில் மட்டும்தான் !

இங்கே வந்த நாள் முதலாக (ஆச்சு 37 வருஷங்கள் )  க்றிஸ்மஸ்  அலங்காரங்களும் ஓரளவு செய்யறோம்தான். இந்த வழக்கம் நம்ம ஃபிஜி வாழ்க்கையில் கத்துக்கிட்டது.  அங்கே மத வித்தியாசம் பார்க்காமல் எல்லோரும்  பண்டிகைகளைக் கொண்டாடறாங்க.  அது நல்ல வழக்கம் என்பதால் நாமும் ஜோதியில் கலந்தாச்சு !

அன்பு விநாயகர் கோவில் உரிமையாளர்களான பவித்ராவும், சந்தீப்பும்  நம்ம நண்பர்கள்தான்.  நாங்கள் போய்ச்சேரும்போது அவுங்க ரெண்டுபேரும் விளக்கு வரிசைகளை அடுக்கிக்கிட்டு இருந்தாங்க.  இன்னும் நாலு கைகள் சேந்ததும்  பரபரன்னு  வேலை நடந்தது.  முடியும் நேரம் மற்ற நண்பர்களும் பக்தர்களும்  வந்து சேர்ந்தாங்க.
பனிரெண்டுக்கு அஞ்சு நிமிட் இருந்தப்ப, விளக்குகளை ஏற்றத் தொடங்கினோம்.  இந்தக் கோவில் ஆரம்பிச்சதில் இருந்து ஒவ்வொரு வருஷமும் ஜனவரி முதல் தேதி பொறக்கும் நேரம்  நள்ளிரவு ஜோதி தரிசனம் நடந்துவருது.  மூத்தகுடிமகள் என்ற வகையில் முதல்விளக்கேற்றும் வாய்ப்பு எனக்குத்தான் ! (வயசாகறதால் இருக்கும் முன்னுரிமை இல்லெ !!! இதுகூட நல்லாத்தான் இருக்கு  ! )
வழக்கம்போல் விளக்கேற்றித் தொடங்கி வச்சதும், வந்திருந்த அனைவரும் பங்கெடுத்தாங்க.  ( இந்த முறை விளக்குகள் எண்ணிக்கை கொஞ்சம் குறைவுதான் ! ) 




மணி பனிரெண்டானதும்  பூஜை, தியானம் எல்லாம் நடந்து புதுவருஷ வாழ்த்துகளைப் பரிமாறிக்கிட்டு  வீட்டுக்கு வந்து சேரும்போது மணி ஒன்னு. 
உண்மையில் அந்த நிமிட்தான் புது வருஷம் பொறக்குது. நமக்கு இங்கே நியூஸியில் கோடைகாலம் என்பதால் 'டே லைட் சேவிங்க்ஸ்' ன்னு ஒரு மணி நேரம் முன்பாக்கி வச்சுருக்கு அரசு.  ( உண்மையில்  காலை 6 மணின்னா, உள்ளூர் நேரம்  7 மணின்னு காட்டும் ) 

நியூஸிலாந்து நாடு, டேட்லைனில் வேற  இருக்கு.   இந்தக் கணக்கில் ஊர் உலகத்துக்கு பொழுது விடியறதே இங்கிருந்துதான் ஆரம்பம்.  போதாக்குறைக்குப் பொன்னாம்மான்னு  இப்ப டேலைட் சேவிங்ஸ் இருப்பதால்  ராத்ரி 11, இங்கே  ராத்ரி 12 ! 

பொழுது விடிஞ்சதும்  கடமைகளை முடிச்சுத் தயாராகி பத்துமணிக்கு  நம்ம சநாதன் சபாவிற்குப் போனோம்.  எல்லாம் நம்ம ஃபிஜி மக்கள்தான்.  வருஷப்பிறப்புக்கு இங்கே ஹவன் நடத்துவது வழக்கம். நம்ம இந்தியாவில் மாநிலவாரியா வருஷப்பொறப்புகள் வர்றமாதிரி ஃபிஜியில்  இல்லை. ஜனவரி முதல்தேதின்னு  ஒரே ஒரு வருஷப்பிறப்பு மட்டுமே !


ஒரு நாலுவருஷமா ஆஞ்சு ப்ரதிஷ்டை நடந்ததுமுதல் , சந்நிதிக்கு முன்னால்தான் இந்த ஹவன் (ஹோமம்) நடக்கும்.  இன்றைக்கு மழையும் குளிருமாக ( வெறும் 13 டிகிரி.  இது நம்ம கோடைகாலம்)  இருந்ததால்...... ஹவனை, ஹாலுக்குள் நடத்த ஏற்பாடாகி இருந்தது.  முதலில்  வெளியில் ஹனுமன் சந்நிதியில் பூஜையும், ஹனுமன்சாலீஸா வாசிப்புமா நடத்திக்கொடுத்தார் நம்ம பண்டிட் ரூப் ப்ரகாஷ் ஜி ! பூஜை முடிஞ்சு எல்லோரும் ஹாலுக்குள் போனோம். 
ஹாலில் மேடையின் ஒருபக்கம்  ஸ்வாமி சிலைகள் ப்ரதிஷ்டை போனவருஷம் (April 2024 )நடந்தது.  இப்போ   ஒரு மூணு மாசத்துக்கு முன்னால்  நவராத்ரி சமயம் புதுசா  ராதா  & க்ருஷ்ணா  சிலைகள்  பிரதிஷ்டை ஆச்சு.  என் உடல்நலக்குறைவு காரணம்  நம்மால் அதில் கலந்துக்க முடியலை. இன்றைக்குத்தான்  முதல்முறை தரிசனம் செஞ்சோம். அழகோ அழகு !

நவக்ரஹ ஹோமம்  நல்லபடி நடந்து முடிஞ்சதும், ப்ரஸாதம் ஸ்வீகரிச்சுட்டு 
நாங்க கிளம்பி , நம்ம புள்ளையார் கோவிலுக்குப் போனோம்.  இன்றைக்கு அங்கே விசேஷ பூஜையா, காலை எட்டரை முதல்  ஆரம்பிச்சு நடந்துக்கிட்டு இருக்கு. மதியம் ரெண்டு மணி வரை கோவில் திறந்து வைக்கறாங்க. காலை அபிஷேகம், ஆரத்தி எல்லாம் கோவில்  வாட்ஸப் குழுவில்  வீடியோவாகப் பார்த்துக்கிட்டுதான்  இருந்தோம். 
நாங்க போய்ச் சேரும்போது பனிரெண்டு மணி சமீபம். அப்பவும் கோவிலில் நல்ல கூட்டம்தான். ஜொலிக்கும் அலங்காரத்தில் நம்ம 'செல்லப்' புள்ளையார் !  தரிசனம் செஞ்சு, நண்பர்களுடன் புதுவருஷ வாழ்த்துகளையெல்லாம் பரிமாறி மகிழ்ந்து,  ரெண்டுமணிக்குக் கிளம்பி வீடு வந்து சேர்ந்தோம் !
புத்தாண்டு விழா நல்லபடியாக முடிஞ்சது.  


உங்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த இனிய வாழ்த்துகளைச் சொல்லி,  இந்நாளைக்  கொண்டாடியாச் !

எல்லோருக்கும் நல்லபடியாக இந்த வருஷம் அமையட்டும் !  



5 comments:

said...

புத்தாண்டு வாழ்த்துகள்.  மீண்டும் வருக!!  வருக வருக...

said...

பக்திபூர்வமா ஆரம்பிச்சிருக்கு போல புதுவருஷம்.  நல்லபடியாய் தொடரட்டும். 

மணியை ஒரு மணி நேரம் முன்னதாக அரசாங்கமே வைத்துக் கொள்வதில் என்ன ஆதாயம் இருக்குன்னு புரியலை.

said...

வாங்க ஸ்ரீராம்,

நம்மூரில் கோவில் வந்ததுமுதல் பக்தியின் அளவு கூடிப்போயிருக்கு !

நானும் 37 வருஷமா, இந்த ஒரு மணி நேர சமாச்சாரத்தை புரிஞ்சுக்கப் பார்க்கிறேன்..... லாபக்கணக்கு ஒன்னும் புரிபடலை...... ஆறு மாசத்துக்கொருமுறை Body Clock Setting மாற்றிவைக்கிறது மஹா ஸல்யம்......

said...

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் துளசிக்கா.

கோலாகலமா தொடங்கியாச்சு !!! படங்கள் நிகழ்வுகள் எல்லாம் சூப்பர்!.
உங்கள் உடல் நலம் இப்ப ஓகே தானே?

டே லைட் எல்லாம் சூரியன் ஓட்டத்தைப் பொருத்து மாத்துறாங்கன்னு நினைக்கிறேன். இங்க மாத்தறது இல்லை ஆனா பாருங்க குளிர்காலத்துல 5.30க்கு இருட்டா இருக்கும். அதே இது வெயில் காலத்துல வெளிச்சம் வந்திடும். மாலையில் சீக்கிரம் இருட்டு. ஸோ அந்த வெளிச்சத்துக்காக work hours காக அப்படி அங்கெல்லாம் மாத்தறாங்கன்னு தோணுது. இங்க ஓரளவு சமாளிச்சிடலாம்னு செய்யலை போல.

கீதா

said...

வாங்க கீதா,

உடல்நலம் ஓரளவு தேவலை. விசாரிப்புக்கு நன்றி !

சூரிய ஓட்டம் கணக்கு சரிதான். ஆனால் நம்ம உடம்புக்கு அது புரியணுமே..... காலையில் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்துக்கு எழுப்பறதுக்குள்ளே..... அம்மாக்களுக்கு...... ப்ச்.... 11 மணிக்கு, மணி 12 ஆச்சுன்னு லஞ்சு, சாயங்காலம் பசங்க பெட் டைம் இங்கே ஏழரை. அதுலே ஆறரைக்கே ஏழரை ஆச்சுன்னு தூங்கச் சொன்னா எப்படி ?

அட்லீஸ்ட் மனுசனுக்குப் புரிய வைக்கலாம். மாடுகள் பாவமில்லையா.... காலை 5 மணிக்குக் கறக்கும் பாலை 4 மணிக்கே கறக்கணுமுன்னா..... என்னவோ போங்க...... நானும் முந்தியெல்லாம் வருஷாவருஷம் புலம்புவேன். இப்ப ச்சீன்னு ஆகிக்கிடக்கு.