Tuesday, May 08, 2007

நியூஸிலாந்து பகுதி 57






பள்ளிக்கூடத்தை அரசு நடத்துனாலும், இன்னும் அது சம்பந்தப்பட்டப் பொறுப்புகளை முக்கியமா வரவு செலவுகளைக் கவனிச்சுக்க புதுசா ஒரு ஏற்பாடு உருவாச்சு. Board of Trusteesன்னு அந்தந்தப் பள்ளிக்கூடத்துக்குன்னு பெற்றோர்கள்,ஆசிரியர்கள், இன்னும் விருப்பம் இருக்கும் பொது மக்கள்னு யார்வேணுமுன்னாலும் இதுக்குண்டான தேர்தலில் பங்கு பெறலாம். அந்தந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர் இதில் ஒரு உறுப்பினராக இருப்பார். உயர்நிலைப் பள்ளிகளில் மட்டும், மாணவர் சார்பாக ஒரு மாணவரும் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.

அரசாங்கம் பள்ளிகளுக்குத் தரும் மானியம் மட்டும் போதாதுன்னு பெற்றோர்கள் கிட்டே ஒரு விதமான டொனேஷன் வாங்கும் வழக்கம் இருக்கு. அது எவ்வளவுன்றதை இந்த போர்டு தீர்மானிக்கும். ஒரு குழந்தைக்கு இவ்வளவு, ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டப் பிள்ளைகள் பள்ளியில் இருந்தால் இவ்வளவுன்னு சொல்வாங்க. அதுவும் ரொம்பக் காசெல்லாம் கிடையாது. வருஷத்துக்கு 30$ வரைக்கும் இருக்கலாம். முதல் குழந்தைக்கு 30ம், அடுத்து வரும் குழந்தைகளுக்கு 20ம் வாங்கறதும் உண்டு. ஆனா எல்லாக் குடும்பத்துக்கும் இது ஒண்ணுபோலத்தான்.இதைக் கட்டாயம் தரணுமுன்ற நிர்பந்தமும் கிடையாது. முடியாதுன்னுக் கூட சொல்லலாம்.

அதே மாதிரி பள்ளியின் வருமானத்தைக் கூட்ட எதாவது 'ஃபண்ட் ரெய்சிங்' நிகழ்ச்சிகளும் நடத்துவது பள்ளிக்கூடத்துக்கான சீருடைகள் தெரிவு என்று எல்லாமே இவங்க பொறுப்புதான். இந்த போர்டு உறுப்பினர்கள் அப்பப்ப ஒன்றுகூடி விவாதிச்சு, பள்ளிக்கூடத்துக்கு வேண்டியதைச் செய்வாங்க. வருசக் கடைசியில் அரசாங்கத்துக்கு இவுங்க செஞ்ச விவரங்களோட அறிக்கையை அனுப்பணும்.


எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் குறைஞ்சது ரெண்டு வருசத்துக்கு ஒரு முறை School Fair நடத்துறது உண்டு. ( இந்த மாதிரி ஒருஸ்கூல்ஃபேர் படங்கள்தான் இந்தப் பதிவுலே போட்டிருக்கேன். )பெற்றோர்களுக்கும் வீட்டுலே இருக்கும் வேண்டாத சாமான்களைக் கழிச்சுக்கட்ட வழி கிடைச்சுருச்சு. ஒருத்தருக்குத் தேவை இல்லாதது அடுத்தவங்களுக்குத் தேவைப்படலாம் இல்லையா? எதைத்தான் பள்ளிக்கூடத்து ஃபேர்லே கொடுக்கறதுன்னு இல்லாம டி.வி, கட்டில், மேசை நாற்காலி முதற்கொண்டு, போடாம சும்மாக் கிடக்கற செருப்பு வரைக்கும் கொண்டு வந்து குமிச்சுருவாங்க. இப்பக் கொஞ்சவருஷமா கணினியும் வந்துருது:-))))

கேக் ஸ்டால்னு விதவிதமா பிஸ்கெட், மஃப்பின், கேக் பண்ணிக் கொண்டுவந்து கொடுப்பாங்க. நான் ஒரு சமயம் ரெண்டு பக்கெட் நிறைய முறுக்கு பண்ணிக் கொடுத்தேன். ஒரு சமயம் நானும் கோபாலுமா சேர்ந்து இண்டியன் சமையல்ன்னு ஃப்ரைடு ரைஸ், உருளைக்கிழங்கு கறி, அங்கே பள்ளி வளாகத்துலேயே செஞ்சோம். 120 பேருக்கு அதை வித்துட்டோம்:-)))))

வர்றவங்களுக்குப் போரடிக்காம இருக்க இசை நிகழ்ச்சி, face painting, மிஸ்ட்ரி பாட்டில்ஸ்ன்னு பேப்பர்லே பொதிஞ்சு வச்சுவிக்கறது( உள்ளே நல்ல சாமான்கள்தான் சாக்லேட், பிஸ்கட், மிட்டாய்ன்னு) குதிரை வச்சுருக்கறவங்க அதை இங்கே கொண்டு வந்து பிள்ளைங்களை சவாரிக்கு ஏத்தி விடறதுன்னு கலகலன்னு இருக்கும். பண்ணை வச்சு இருக்கும் பெற்றோர் காய்கறி, பழங்கள்னு கொண்டுவந்து விப்பாங்க. எல்லா வருமானமும் அன்னிக்குப் பள்ளிக்கூடத்துக்குத்தான். நான்கூட ஒரு பாட்டில் எலுமிச்சை வாங்குனேன்.
ஆனா கடைசியில் விக்காத சாமான்களை பத்து காசு, அம்பது காசுன்னு தள்ளிவிட்டுருவோம். அப்படியும் பாக்கி ஆனது இங்கே இருக்கும் சிட்டி மிஷன் வந்து எடுத்துக்கும். அவுங்களுக்கும் வேண்டாத பொருள்? நேரா டம்ப் தான்(-:

ஞாயித்துக்கிழமைகளிலும் கடைகளைத் திறந்துக்கலாமுன்னு ஆரம்பிச்சதும் இந்த வருசம்தான். முக்கியமா சூப்பர்மார்கெட்டுகள் இதை வரவேற்றுச்சு. மக்களும்தான். லீவுன்னுட்டு முடங்கிக் கிடக்காம 'மால்' சுத்த வசதியாப் போச்சு.

இதுவரைக்கும் இங்கே ரெண்டே ரெண்டு டிவி சேனல்கள்தான் அரசு நடத்திக்கிட்டு இருந்துச்சு. இப்ப ஒரு தனியார் ஒளிபரப்பு மூணாவது சேனலா ஆரம்பிச்சது. அவுங்க நல்லா நடத்த ஆரம்பிச்சதும், முதல்லெ இருந்த ரெண்டுசேனல்களும் கொஞ்சம் தரத்தை(?)க் கூட்டுச்சு. இதுலே சேனல் ஒண்ணு, இங்கிலாந்து தேசத்து நிகழ்ச்சிகளுக்கு இங்கே ஆதரவா செயல் பட்டுச்சு. சேனல் ரெண்டு, அண்டை நாடான ஆஸ்தராலியா நிகழ்ச்சிகளை இங்கே காமிச்சது.மூணாவது சும்மா இருக்குமா? நான் அமெரிக்காவுக்குன்னுட்டு, அமெரிக்கன் நிகழ்ச்சிகள். எல்லாம் அங்கெ இருந்து இங்கேன்னு 'ரிப்பீட்டு'தான். நாடு சின்னதா இருக்கறதாலே நியூஸும் கொஞ்சமாத்தானே இருக்கும். பின்னே எப்படி நேரத்தை இட்டு நிரப்பறது? 'போதாக்குறைக்குப் பொன்னம்மா'ன்னுட்டு இந்த சானல் 3 என்னடான்னா, 24 மணி நேரமும்ஒளிபரப்புச்சு. மத்தவங்க ச்சும்மா இருக்கமுடியுமா? நாங்களுமுன்னு போட்டிக்கு வந்தாங்க. இதனாலே என்ன ஆச்சு?தேசிய கீதத்துக்கு ஆப்பு! தினமும் காலையிலே பத்து மணிக்கு ஆரம்பிச்சு, ராத்திரி பத்தரை, பதினொண்ணுவரை மட்டும் இருந்த குறிப்பிட்ட நேரத்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆரம்பிக்கும் சமயம் நியூஸி தேசிய கீதம் பின்னணியில் ஒலிக்க, இங்கத்து இயற்கைக் காட்சிகள் அப்படியே திரையில் ஓடும். பார்க்கவே ரம்மியமான காட்சிகள். மாலை எட்டரை ஆச்சுன்னா பிள்ளைங்களுக்குப் படுக்கற நேரம் என்றதாலே 'குட் நைட் சில்ரன்'னு கார்டு காமிச்சுருவாங்க. எதாவதுவயது வந்தவர்கள் மட்டுமே பார்க்கும் காட்சிகள் உள்ள திரைப்படங்களோ, மத்த விஷயங்களோ அதுக்கு அப்புறம்தான் ஒளிபரப்பு. இப்படி இருந்த நேர்த்தியான ஒழுங்கு முறை எல்லாம் போய் 24 மணி நேரமும் 'லோ லோ'ன்னு தொலைக்காட்சிஓட ஆரம்பிச்சது. இந்த லட்சணத்துலே தேசிய கீதத்தை எப்பப் போடறது?

மவொரிகள், மீன் பிடிக்கும் உரிமை அவுங்களுக்குதான்னு சொல்லிக் கொஞ்சம் ஆர்ப்பாட்டமெல்லாம் செஞ்சு,ஆறுகளிலும், சில கடல் பகுதிகளிலும் அவுங்களுக்கு மட்டுமே மீன் பிடிக்க உரிமைன்னு அரசாங்கத்துக்கிட்டே இருந்து அனுமதி வாங்கிக்கிட்டாங்க. அதுக்குன்னு ஒரு சட்டம்கூட வந்துருச்சு. ச்சும்மாப் பொழுது போக்கா மீன் பிடிக்க விரும்பும் மத்தவங்களுக்கு என்ன இடம், எங்கேன்னு சொல்லி ஒரு லைசன்ஸ் வாங்கிக்கணும். இங்கே கட்டுமரம் எல்லாம் இல்லாததால் மீனவர் கடற்கரையில் குடி இருக்கும் நிலமை கிடையாது. எல்லாமே இயந்திரப்படகுகள். மீன் வியாபாரம் இன்னும் மவொரிகள் நடத்தும் நிறுவனங்களின் கைகளில்தான்.

இதுவரை லேபர் கட்சியின் தலைவரா இருந்தவர் கருத்து வேறுபாடு காரணம் தனியாப் பிரிஞ்சுபோய் 'புது லேபர் கட்சி'ன்னு தொடங்குனார். ( தி.க, திமுக, அதிமுகன்னு பிரிவுகளைப் பத்தித் தெரிஞ்சதாலே இது ஒண்ணும் அதிர்ச்சிதரும் புதுவிஷயமா எனக்குப் படலை.ஆனா....) மக்களுக்கு ரொம்ப ஆச்சரியமாப் போச்சு. அவர் கட்சிக்கும் ஆதரவாளர்கள் இருந்தாங்க.

16 comments:

said...

"தி.க, திமுக, அதிமுகன்ன"விஜயகாந்த் பங்குக்கு இன்னும் யாரும் வரவில்லையா?

said...

படங்கள் சூப்பருங்க. அந்த பொட்டலம் என்னாங்க? அது தான் school fair things-ஆ?

said...

டீச்சர்..
அந்தப் படத்துல பொட்டலம் பொட்டலமா கட்டி வச்சிருக்கீங்களே! என்னன்னு சொல்லவே இல்லியே!

//உயர்நிலைப் பள்ளிகளில் மட்டும், மாணவர் சார்பாக ஒரு மாணவரும் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.//

கொத்ஸ்
இந்த நேரம் பாத்து நீங்க ஆளைக் கானோமே! எங்கிருந்தாலும் டீச்சர் பதிவிக்கு உடனடியா வரவும்!
பதிவுக்கு வந்தாப் பதவி நிச்சயம்!:-)

said...

// ஒரு சமயம் நானும் கோபாலுமா சேர்ந்து இண்டியன் சமையல்ன்னு ஃப்ரைடு ரைஸ், உருளைக்கிழங்கு கறி, அங்கே பள்ளி வளாகத்துலேயே செஞ்சோம். 120 பேருக்கு அதை வித்துட்டோம்:-)))))//
அதுக்கு அப்புறம் வாங்கினவங்களுக்கு என்ன ஆச்சுன்னு சொல்லவே இல்லையே!! :-D

பொட்டலங்களை நம்ம ஊரு மளிகை கடையில் கட்டி தரப்படும் உளுத்தம்பருப்பு,துவரம் பருப்பு போலத்தான் இருக்கு!! ;-)


தொடர் சூப்பர்ன்னு நான் சொல்லி தெரியவேண்டியது இல்லைனு நினைக்கிறேன்!!
எப்பவும் போல கலக்கியிருக்கீங்க!!
வாழ்த்துக்கள்!! :-)

said...

துளசி வரவர ஒங்க ப்ளாக் வெறும் ப்ளாகா இல்லாம ஃபோட்டோ ப்ளாகா மாறிருச்சி...

ஒரு ப்ளாக் எழுதறதுக்கு நல்லாவே மெனக்கடறீங்க...

படிக்கறதுக்கு மட்டுமில்லாம பாக்கறதுக்கும் நல்லாருக்கு...

ஃபோட்டால்லாம் கோபால் சார் கைங்கரியமா இல்ல நீங்களேவா:-)

said...

வாங்க குமார்.

//விஜயகாந்த் பங்குக்கு இன்னும் யாரும் வரவில்லையா?//

அதெல்லாம் நிறைய கட்சிங்க இருக்கு. இப்ப ஒரு 27 இல்லே 28 இருக்கு:-))))

said...

வாங்க காட்டாறு.

அந்தப் பொட்டலம்தாங்க'மிஸ்ட்ரி' பொதி.

வாங்குறவங்க பிரிச்சாத்தான் உள்ளெ என்ன இருக்குமுன்னு தெரியும்.
ஒரு பையன் வாங்கிப் பிரிச்சப்ப நான் பார்த்தேன். ட்ரிங்கிங் சாக்லேட் பவுடர்
பாக்கெட் இருந்துச்சு. ஒரு டாலருக்கு இது மகா மலிவுதானே?

said...

வாங்க KRS.

மேலே காட்டாறுக்குச் சொன்ன பதில்தான் உங்களுக்கும்
ரிப்பீட்டே:-)

கொத்ஸ், ஊரில் இல்லை(-:

said...

வாங்க CVR.

//அதுக்கு அப்புறம் வாங்கினவங்களுக்கு
என்ன ஆச்சுன்னு சொல்லவே இல்லையே!! //

இதானே வேணாங்கறது:-)))

சாப்புட்டுட்டு சிலர் பார்ஸல்கூட வாங்கிக்கிட்டுப் போனாங்க.

said...

வாங்க டிபிஆர்ஜோ.


//ஃபோட்டால்லாம் கோபால் சார் கைங்கரியமா இல்ல நீங்களேவா:-)//

ஆள் ஊர்லே இருந்தாத்தானே? எல்லாம் 'ஒன் வுமன் ஷோ'தான்:-)

said...

என் பொண்ணு பள்ளிக்கூட விண்டர்ஃபேர் ல இதேமாதிரி எல்லா அம்மாவும் சமோசா கேக் செஞ்ச் வித்து பணத்தை ஏழைப்பிள்ளைங்க படிக்க வைக்கிற அவங்க ஸ்கூல் ஃபண்ட்க்கு உதவுனாங்க.
என்பொண்ணு அம்மா இங்க மட்டுமில்ல எல்லா நாளுமே நீ ஒரு இட்லி கடை கேண்டீன் ல போட்டா நல்லா சம்பாதிக்கலாம் உன் இட்லிக்கு என் டீச்சர்லேர்ந்து எல்லா பசங்களும் அடிமையா இருக்காங்க ன்னு சொன்னா...
நீங்க முறுக்கு வித்தீங்களா? :)

said...

அக்கா நிங்க எங்கு இருக்கிங்க,நான் கூட ஆக்லாந்து தான்.நிறைய விஷயம் சொல்லறிங்க. எனக்கு happy யாக இருக்கு...

said...

வாங்க முத்துலெட்சுமி.

நம்ம முறுக்கையெல்லாம் மக்களுக்கு விக்காம டீச்சருங்களும், ஸ்டால்
நடத்திக்கிட்டு இருந்த வாலண்டியர்களுமே வாங்கிக்கிட்டாங்க. 'சாம்பிள்'க்கு
கொஞ்சம் தட்டுலே வச்சது ரொம்பத் தப்பாப்போச்சுப்பா:-)

இதுலே ரெஸிபி கேட்டுப் பிடுங்கி எடுத்துட்டாங்க.

இட்லிக்கடை நல்ல ஐடியா. ஆனா இங்கெ மாவு புளிக்கறது கஷ்டம்(-:

said...

வாங்க நாட்டுக்கோழி.

வருகைக்கு நன்றி. நியூஸியில் நீங்க மூணாவது பதிவாளர்.
எனக்கும் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.

said...

பள்ளிக்கூடத்துல என்னென்ன செய்றாங்க பாருங்க. ம்ம்ம்....குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடம் போகவே ஆசையா இருக்கும். இது மாதிரி நம்மூர்லயும் செஞ்சு பாக்கலாம்.

முந்தி நம்மூர்லயும் ஒரு டீவிதான இருந்தது. பாம்பபாம்பாங்குன்னு செவப்பா சுத்திக்கிட்டே வருமே. அதெல்லாம் போயி இப்ப ஒவ்வொரு டீவியும் 24மணி நேரமும் கதறிக்கிட்டிருக்கு. இருந்தாலும் டிடியில அந்த செவ்வாக்கெழம நாடகம் மட்டும் இன்னும் மாறவேயில்லை.

ஒரு கட்சி ஒடஞ்சதுக்கே இந்த ஆச்சிரியமா? நம்மூர்ல வந்து பாத்தா இவங்கள நேரடியா ஐசியூக்குதான் கொண்டு போகனும்.

said...

வாங்க ராகவன்.

நம்மூரில் கல்வி முறை மாறணுங்க.' மனப்பாடம் செஞ்சு ,வாந்தியெடுத்து'ன்னு
இருந்தா பசங்க எப்ப வாழ்க்கையைப் புரிஞ்சுக்கறது?

'அசோகர் மரங்களை நட்டார்..........' படிக்கத்தான் வேணுமுன்னாலும் அதையும்
விளையாட்டா, ஒரு ப்ராஜக்டா செய்யக் கத்துக்கொடுக்கலாம்.

பழைய தூர்தர்ஷனில் காத்திருந்து பார்த்த சினிமாக்களும்,. 'ச்சாயா கீத்' எல்லாம்
இன்னும் மனசுலே அருமையான இனிய நினைவுகளுக்கு 'கொசுவத்தி' ஏத்துது:-)

அரசியல்னு சொன்னா இப்ப உலகம் பூராவும் ஏறக்குறைய ஒரே மாதிரி:-)))))