Thursday, May 03, 2007

நியூஸிலாந்து பகுதி 54

பத்துமாசம் பள்ளிக்கூடம், பெரிய லீவு ரெண்டு மாசமுன்னு இருக்கற நடப்பு உலகத்துலே,நம்ம வலை உலகப் பள்ளிக்கூடம் மட்டும் அப்படியே தலைகீழ் மாற்றத்துலே போகுது மக்கள்ஸ்.போனவருஷம் ஜூலை மாசம் தொடங்குன லீவு இப்ப முடிஞ்சுருச்சு. இந்த மே & ஜூன் பள்ளிக்கூடம் திறந்து இந்த வருசத்துக்கான 'நியூஸி சிலபஸ்' இன்று முதல் ஆ...........'ரம்பம்'.

இந்த சமயம் பார்த்து 'க்ளாஸ் லீடர்' வேற இல்லை. எல்லாம் கொஞ்சம் 'பார்த்து'ப் படிங்க.:-))))

ச்சும்மா மறந்து போனவுங்களுக்கு எடுத்துக்கொடுக்க, நியூஸிலாந்து பகுதி 53 இங்கே.

இதுவரை இப்படி ஒண்ணும் செஞ்சதில்லை. முன் அனுபவம் இல்லாத காரணம். காசு கொண்டு வந்தா உள்ளேவிடுவோம்னு சொன்னவங்க, காசை எங்கையிலே தாங்கன்னு சொல்லி இருக்கலாமில்லையா? கால் மில்லியன்
காசை அப்படியே வங்கியிலே போட்டுக் கணக்குக் காமிச்சாப் போதும். சரின்னு காசைக் கொடுத்து வங்கிக் கணக்கு ஆரம்பிச்சாங்க. அதைக் காமிச்சு, அவுங்க பாஸ்போர்ட்லே நிரந்தரத் தங்கல் உரிமைக்கான ஸ்டாம்ப் பதிக்கப்பட்டது. இவுங்க மறுபடி சொந்த நாட்டுக்குப் போகணும். அங்கேதானே சொத்து பத்து, செளகரியம் எல்லாம் இருக்கு. அங்கே எதாவது ஆபத்துன்னா, இங்கே வந்துறலாமுன்ற ஒரு முன் ஜாக்கிரதைக்கான ஏற்பாடுதானே இது. அதனாலே ரீ எண்ட்ரி விஸா வாங்கிக்கலாம், ஆனா ஒரு கண்டிஷன். நியூஸியிலே P.R. வாங்கிட்டு வெளியே போனா, மறுபடி வரணுமுன்னா 4 வருஷத்துக்குள்ளே திரும்ப வந்துரணும். அப்படி வரலைன்னா கிடைச்ச நிரந்தரத் தங்கல் உரிமை ரத்தாயிரும்.


நாலு வருசமுன்னா நாலு வருஷம்னுட்டு நிறைய ஃபிஜிவாழ் இந்தியர்கள், அதிலும் முக்கியமா குஜராத்தி இனத்தவர்( வேற யார்கிட்டே இவ்வளவு காசு இருக்காம்?) இங்கே நியூஸிக்கு வந்து செய்யவேண்டியதைச் செஞ்சு ரீ எண்ட்ரி வாங்கிக்கிட்டுப் போனாங்க. போய்ச் சேர்ந்த கையோட இங்கே வங்கியில் காமிச்ச பணத்தை மறுபடியும் அவுங்களோட உள்ளூர் வங்கிக்கு மாத்திக்கிட்டாங்க. இங்கத்து வங்கிகளுக்கெல்லாம் அந்த நாட்டுலேயும் கிளைகள் இருக்கே, அதனாலே மணி ட்ரான்ஸ்பர் சுலபமாப் போயிருச்சு. அரசாங்கம் இதைக் கண்டுக்கறதுக்குள்ளே நிறையப்பேர் வந்துட்டு, வாங்கவேண்டியதை வாங்கிக்கிட்டுப் போயிட்டாங்க.

இப்படித்தான் பிஸினெஸ் மைக்ரேஷன் பேருலே பலர் வந்துட்டுப் போனது நடந்தது. அதுக்கப்புறம் ஒரு 75% மக்கள் நாலு வருஷத்துக்குள்ளே வந்துட்டாங்கதான். நம்மாளுங்களுக்கு எதை எப்படிச் செஞ்சுக்கணுமுன்னு தெரியாதா, என்ன?


சரி. இப்ப எண்பதுகளிலே நடந்த சில விவரங்களைப் பார்க்கலாம். இந்த எம்பதுகளின் ஆரம்பத்துலே நேஷனல் பார்ட்டிதான் அரசு. 1984 ஜூலை வந்த தேர்தலில் லேபர் ஜெயிச்ச பிறகுதான் மாற்றங்கள் வேகமா வர ஆரம்பிச்சது. இப்ப லேபர் கட்சி நாலாவது முறையா ஆட்சிக்கு வந்துருக்கு.


இவுங்க வந்தவுடன் நாட்டு நிதிநிலையைச் சீர்படுத்தறோமுன்னு சொல்லி 20% டாலர் மதிப்பைக் குறைச்சாங்க. போன வகுப்பில் சொன்னது போல நிதிமந்திரி புதுத் திட்டங்களை அறிமுகப்படுத்துனார். இதை அவரோட பெயரை வச்சு'ரோஜர்னாமிக்ஸ்'ன்னு சொன்னாங்க. அவரோட பெயர் ரோஜர் டக்ளஸ்.


இந்த வருசத்துலேதான் இன்னொரு முக்கிய சம்பவம் நடந்துச்சு. பெண்களுக்கு எதிரான எல்லாவித போக்குக்களையும் (Convention on the Elimination of All Forms of Discrimination against Women . CEDAW) தடை செய்யணுமுன்னு ஐ.நா. சபையின் தீர்மானத்துக்கு ஆதரவு தந்தாங்க.
1985 ஜூலை மாசம், க்ரீன்பீஸைச் சேர்ந்த ரெயின்போ வாரியர் கப்பல் ரோந்துக்கு வந்து இங்கே ஆக்லாந்து ஹார்பரில் தங்குனப்ப, ப்ரெஞ்சுஅரசாங்க ஏஜெண்ட் இதுக்கு ரகசியமா குண்டு வச்சு மூழ்கடிச்ச விவரம் பரபரப்பா உலகநாடுகளால் கவனிக்கப்பட்டுச்சு.


பழைய கவர்னர் ஜெனரல் பதவிகாலம் முடிஞ்சு புதியவர் பதவிக்கு வந்தார். இன்னும் பிரிட்டனின் கீழ்தான் நாடுஇருக்குன்னாலும், 1967-இல் இருந்தே உள்ளூர் ஆட்களை இந்தப் பதவிக்கு அமர்த்தும் வழக்கம் வந்துருச்சு.இல்லேன்னா, ராணியம்மா சொல்றவங்கதான் இங்கே வந்து கவர்னர் ஜெனரல் நாற்காலியில் உக்காருவாங்க.


வைட்டாங்கி ட்ரிப்யூனல், இந்த வைட்டாங்கி ஒப்பந்தம் நடந்த முறையைப் பத்தி முறையிடும் மவோரிகளுக்கு,அவுங்க குறைகளைக் கேக்க ஆரம்பிச்சது. இதுவரை இன்னும் பூரணமா குறைகள் நிவர்த்தி செய்யப்படலை. இப்பவும் ஒவ்வொரு வருஷமும் வைட்டாங்கி தினம்( பிப்ரவரி 6) வர்ற சமயம் இதைப் பத்திப் பேச்சு நடந்துக்கிட்டுத்தான் இருக்கு.


1986லே GST ( Goods & Services Tax)ன்னு ஒரு புது வரி வாங்க ஆரம்பிச்சாங்க.10% வரி. எந்தப் பொருள் வாங்கினாலும், ஏன் ஒரு ரொட்டிக்கூட இந்த வரி உண்டு. ஆனா கடைகளில் எல்லாப் பொருட்களிலுமே ஜிஎஸ்டி சேர்த்தபின் இருக்கும் விலைதான் போட்டுருப்பாங்க. அதனாலே நமக்கு, இதுக்கெல்லாம்கூட வரி கொடுக்கறோமேன்னு வருத்தப்பட்டுக்கச் சான்ஸ் இல்லை:-)))) மறைமுகமாக் கொடுக்கும்போது மனக்கவலை இல்லை. கொஞ்ச நாளிலே டாலர் மதிப்பு மீண்டும் மெதுவா பழைய நிலைக்குப் போகவும் ஆரம்பிச்சது.


கத்தோலிக்க மதத்தின் தலைமை குருவான போப் ஆண்டவர் முதல்முறையா நியூஸிக்கு விஜயம் செஞ்சார். இங்கே இருந்த கத்தோலிக்கர்கள் மட்டுமில்லாம நாடே இவர் வருகையைக் கொண்டாடுச்சு.


MMP ன்னு சொல்லும் மிக்ஸட் மெம்பர் பார்லிமெண்ட் வச்சுக்குங்கோ அது நல்லதுன்னு இங்கிலாந்து அரசு நமக்கு பரிஞ்சுரைச்சாங்க. கொஞ்ச நாளிலே, என்னாத்துக்கு எப்பப் பார்த்தாலும் இங்கே நியூஸியிலே என்ன செய்யணும், எப்படிச் செய்யணுமுன்னு பிரிட்டிஷ் பார்லிமெண்ட் மூக்கை நுழைச்சுக்கிட்டு இருக்கு? இனிமேல் நமக்கு வேணுங்கற சட்டதிட்டங்களை நாமே செஞ்சுக்கலாமுன்னு நியூஸி முடிவு செஞ்சதும் இந்த வருஷம்தான். 'ஏறக்குறைய அதையொட்டித்தான் இங்கே எல்லாம் நடக்குதுன்னாலும், அதை நீ சொல்லி, நான் செஞ்சதா இருக்கக்கூடாது.நாங்களே 'யோசிச்சு'ச் செஞ்சதா இருக்கட்டும்.' தமிழ்சினிமா வர்ற பஞ்ச் டயலாக் மாதிரி:-)


ஓரினச்சேர்க்கையாளர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டுக் கொண்டு இருந்த அரசாங்கம், விதிகளைத் தளர்த்தி அவர்களையும் எல்லா மக்களையும் போலவே நடத்தணுங்கற சட்டம் கொண்டு வந்துச்சு. இதுக்கும் ஒரு இருபத்தஞ்சு வருஷ போராட்டம் நடந்துச்சுன்னு வச்சுக்குங்க.


திருமணமான தம்பதிகள் இருவருக்கும் சொத்தில் சரிபாதி பாகம் இருக்குன்ற சட்டமும் இந்த 1986ல்தான் வந்துச்சு.புதுசா எந்த சொத்தும் வீடோ, பண்ணையோ எதுவா இருந்தாலும் கணவன் & மனைவி ரெண்டுபேர் பெயரிலும்தான் பத்திரம் எழுதுனாங்க. இதனாலே பெண்களுக்கு ஒருவித நிம்மதியும் மகிழ்ச்சியும் வந்துச்சுன்றதைக் குறிப்பிடணும்.


ஒருமாதிரி சீரமையத் தொடங்குன நாட்டுக்கு குடிபெயர்ந்து வர மக்கள் உலக நாடுகள் எல்லாத்திலும் இருந்து ஆர்வம் காமிச்சது இந்தக் காலக்கட்டங்களில்தான்.

13 comments:

said...

சோதனைப் பின்னூட்டம்

said...

உள்ளேன் டீச்சர்!!!

said...

பி.ஆர். வாங்கிகிட்டு
ஊருக்குப் போறது, திருப்பி வரது யூரோபிலேயும் இருக்கு துளசி.
எத்தனை பணம் இருந்தாப் போதுமோ.:-(
அதுவும் நீங்க சொன்ன இனத்தவங்களுக்கு இங்கே மகிமை ஜாஸ்தி.
நேத்து ஏர்போர்ட்டில ஒரு பாட்டிம்மா ,அவங்க பக்கம் நான்போனதும் முகத்தை அந்தப் பக்கம் திருப்பிக்கிட்டாங்க.
மதராசி:-)யாம்.

said...

நியூஸி சரித்திரம் நல்லாருக்கு டீச்சர்! அது என்ன..ரோஜர்னாமிக்ஸ்..நம்ம அண்ணாயிசம்..மாதிரியா?

said...

டீச்சர், 10 நாளு வரல... மள மளன்னு 3 பதிவ போட்டுட்டீங்களே! நான் எப்போ படிச்சி... எப்படி படிச்சி... முடிக்கப் போறேன்!

said...

//சோதனைப் பின்னூட்டம் //
டீச்சருக்கே சோதனையா? ;-)

said...

வாங்க நன்மனம்.

ச்சும்மா ஆஜர் கொடுத்துட்டுப் போகற எண்ணமா?
நல்லாக் கவனமாப் படிக்கணும், ஆமா. சொல்லிட்டேன்.
பரிட்சைக்கு இதெல்லாம் வரும் :-)))))

said...

வாங்க வல்லி.

கிராண்ட் கேன்யானை வெற்றி கொண்ட வல்லின்னு சொல்லலாம்.

//நேத்து ஏர்போர்ட்டில ஒரு பாட்டிம்மா ,அவங்க பக்கம் நான்போனதும்
முகத்தை அந்தப் பக்கம் திருப்பிக்கிட்டாங்க.
மதராசி:-)யாம்.//

போட்டும். நம்ம முகத்தைப் பார்க்க அவுங்களுக்குக் கொடுத்து வைக்கலை.

said...

வாங்க நானானி.

அண்ணாயிசம்? இதைப் பத்திச் சரியாத் தெரியலைங்களே. நான் தமிழ் நாட்டை விட்டே
33 வருசமாச்சு. வலையில் பார்த்தப்ப கம்யூனிசம், சோஷலிசம் எல்லாம் சேர்ந்துன்னு
பார்த்தேன். சரியாப் புரியலை(-:

said...

வாங்க காட்டாறு.

இந்த மூணு பதிவை மட்டும் படிச்சாப்போதுமா?

அரியர்ஸ் நியூஸிக்கே 53 இருக்கு:-))))

வாழ்க்கைபூராவும் நாம் படிச்சுக்கிட்டேதானே இருக்கோம்.
அதான் கற்றது கைம்மண் அளவுதானாமே(-:
அதானால் டீச்சரும் ஒரு மாணவிதான்.
சோதனைகள் எல்லாருக்கும் பொது:-)

said...

துளசி டீச்சர்!
அண்ணாயிசம் தெரியாதா? பெயரை
வைத்தே கண்டுபிடித்திருப்பீர்கள் என்று
நினைத்தேன்.
எம்.ஜி.ஆர். 1972-ல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்தபோது கட்சியின் கொள்கைகளுக்கு வைத்த பெயர்தான்
"அண்ணாயிசம்".

பாடத்தில் எனக்குப் பிடித்த போர்ஷன்
கணவன் மனைவிக்கு சொத்தில் 50-50
தான்.
ஆமாம்..? பரீட்சை எல்லாம் உண்டா?
அன்றைக்கு வயிற்றுவலி அல்லது காய்ச்சல் வரும்.இப்போதே லீவு சொல்லிவிட்டேன். ஹி..ஹி..!

said...

துளசி!
வல்லி சொன்னது மிகச் சரி.
அங்கு இந்தியர்கள் குறிப்பாக தென்னாட்டவர்கள் நேருக்கு நேர் பார்த்தால் ஒரு ஹலோ!...ஒரு ஹாய்!கூட சொல்வதில்லை என்பது
வருத்தமான நிஜம்!

said...

என்னங்க அனானி, இது 1972? அப்ப நான் இந்தியாவுலேதானே இருந்தேன்.

அரசியல் ஆர்வம் இல்லாம இருந்துட்டேனோ? ( இப்ப மட்டும் என்ன? அதே கோலம்தான்!)
நானுண்டு, என் வேலை உண்டுன்னு இருந்துருப்பேன். போட்டும். அந்தக் கொள்கை வெற்றியடைஞ்சதா?

//பாடத்தில் எனக்குப் பிடித்த போர்ஷன்
கணவன் மனைவிக்கு சொத்தில் 50-50
தான்.//

இப்ப இது இன்னும் மாறியாச்சு. திருமனம் இல்லாமல் சேர்ந்து வாழும் மக்களுக்கும் ஃபிப்டி ஃபிப்டி.
குறைஞ்சபட்சம் ரெண்டு வருஷம் சேர்ந்து இருந்தால் போதும்.

பெரிய ஊர்களில் இப்படி நம்மவர்கள் நடந்துக்கறாங்க. இதுவரை இங்கே எங்க ஊரில்( கிறைஸ்ட்சர்ச்)
அறிமுகம் இல்லேன்னாலும் ஒரு ஹாய், தலையாட்டல் இருந்துச்சு. இப்ப சமீபமா( ரெண்டு வருசம்)
இந்தியாவில் இருந்து புதுசா வந்தவங்க இதை ஆரம்பிச்சு வச்சுருக்காங்க. பிஜி இந்தியர்கள் எப்பவும் போல
நட்புணர்வோடுதான் இருக்காங்க.