Friday, May 18, 2007

நியூஸிலாந்து பகுதி 61


அரசியலுக்குள்ளெ நுழைஞ்சுட்டா வெளியே வர வழி தெரியாம உங்களையும் இழுத்துக்கிட்டு எங்கியோ போயிட்டேன் பாருங்க. அந்தக் காலக்கட்டத்துலே 'நாட்டுலே நடந்தவை'களைப் பார்க்கலாம் வாங்க.

'ச்சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம்'னு நியூஸியின் முதல் சூதாட்ட விடுதி(casino) திறந்தாங்க. அதுவும் எந்த ஊருலே? நான் இருக்கற கிறைஸ்ட்சர்ச் மாநகரத்துலே! இந்த ஊர்லேதான் சுற்றுலாப் பயணிகள் அதிகம்.அவுங்களுக்குப் பொழுது போக்காம். உள்ளூரு சனம் ச்சும்மா இருப்போமா? உள்ளே அருமையான ரெஸ்டாரண்ட்இருக்காம். ஆனா உள்ளே அனுமதி 20 வயசுக்கு மேலே இருக்கறவங்களுக்கு மட்டும். ட்ரெஸ் கோட் இருக்கு.ஜீன்ஸ், ஸ்போர்ட்ஸ் ஷூ எல்லாத்துக்கும் தடா. ஆசையா இருக்கு, உள்ளே வேடிக்கை பார்க்கவாவது போகலாமுன்னு.11 வயசு மகளை வீட்டுலே விட்டுட்டுப் போக மனசு வரலை(-:

இங்கே அரசாங்க விதிப்படி 16 வயசு வரை பிள்ளைகளைத் தனியா வீட்டுலே விட்டுட்டுப் போகக்கூடாது. பார்த்துக்க வீட்டாளுங்க இல்லைன்னா ஒரு 'பேபி சிட்டரை' ஏற்பாடு செஞ்சுக்கலாம். வர்ற பேபி சிட்டர் எப்படி இருப்பாங்களோ?நமக்கு இதெல்லாம் பழக்கமில்லாத காரணத்தால் எதுக்கு வம்புன்னு நாங்களே பார்த்துக்குவோம். தனியா விட்டுட்டுப்போன சேதி தெரிஞ்சா போலிஸ் கேஸ் புக் பண்ணிருவாங்க.

நல்லா இருந்த மக்களுக்கு இதைக் காமிச்சுட்டு, இப்ப அரசாங்கம் சூதாட்டப் பழக்கத்துக்கு 'அடிமை'யா ஆனவங்களுக்கு'ஹெல்ப் லைன்' வச்சுருக்கு. ஏற்கெனவே லாட்டோ விளையாட்டுலே கணக்கு வழக்கில்லாம செலவு பண்ணுறவங்க அதிகமாகிக்கிட்டு வர்றாங்க. வெறும் லாட்டோன்னு இல்லாம, ஒரு டாலர், 2, 5, 10ன்னு சுரண்டல் சீட்டுவேற வந்துக்கிட்டு இருக்கு. இதுலே பார்த்தீங்கன்னா............. அரசாங்கத்துக்கிட்டே உதவிப்பணம் வாங்குற மக்களில் பலர் வாராவாரம் கிடைக்கும் தொகையில் கணிசமானதை இங்கே அழறாங்க. எப்படியாவது பணக்காரனா ஆயிரணும்.அதுவும் கொஞ்சம்கூட உழைக்காமல். உலகம் பூராவும் இப்படிப்பட்ட மக்கள் இருக்காங்க(-:

இந்த நாடு வடக்கு, தெற்குன்னு ரெண்டு பெரிய தீவுகள் கொண்டது. இங்கிருந்து அங்கே போகணுமுன்னா ஃபெரிலேபோகணும். இல்லைன்னா விமானம். ஏற்கெனவே ஒரு கடல்வழிப் போக்குவரத்து நடந்துக்கிட்டு இருக்கு. மூணு மணிநேரம் ஆகும். இப்ப இன்னும் வேகமாப் போறதுக்காக இன்னொரு தனியார் கம்பெனி முன்வந்துச்சு. ஒன்னரை மணி,இன்னும் அதிகமாப் போனா ரெண்டு மணி நேரத்துலெ போயிரலாமாம். மெதுவாப் போறதுலே போனோமுன்னா, பலசமயங்களில் டால்ஃபின் மீன்கள் நம்மோடு வரும்.

நியூஸிதான் விளையாட்டுக்களில் ரொம்ப ஆர்வம் காட்டுற நாடுன்னு சொல்லி இருக்கேனில்லை. அமெரிக்கா கோப்பைன்னு சொல்லி ஒரு படகுப்போட்டி நடக்குதுல்லே? பாய்மரப் படகு. இந்தப் போட்டி ஆரம்பிச்சு முதல்132 வருஷம் அமெரிக்கர்களே ஜெயிச்சுக்கிட்டு இருந்தாங்க. அதுக்கப்புறம், 1983லே ஆஸ்தராலியா ஜெயிச்சுருச்சு.அதுக்கப்புறம் நடந்த மூணு போட்டிகளில் கப் மறுபடியும் அமெரிக்கா பக்கமே போயிருச்சு. ஆஸ்தராலியா ஜெயிச்சா நாங்களும் ஜெயிச்சே ஆகணுமே. அப்படி ஒரு உறவு & அன்பு(!!) எங்களுக்குள்ளே இருக்குல்லே?

1995 வருஷம் இந்தக் கப்பை நியூஸி ஜெயிச்சு, இங்கே கொண்டாந்துருச்சு. நாடே கோலாகலமாயிருச்சு. வழக்கம்போல எல்லா ஊருக்கும் கொண்டாந்து காட்டிட்டுப் போனாங்க. நானும் போய் பார்த்தேன். இங்கே அநேகமா எல்லா ஊர்களிலும் விசேஷங்களுக்கு கூடறதுக்குன்னே ஒரு மைதானம்(??) /சதுக்கம் இருக்கும். எங்க ஊருக்கு இது சிட்டி ஸ்கொயர். அன்னிக்கு மட்டும் ஒரு லட்சம்பேர் கூடுனாங்க. ஊரோட ஜனத்தொகை மூணு லட்சம்தான்.

காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் இந்த வருஷம் இங்கே கூடுனாங்க. மக்கள் தலைவர் நெல்சன் மாண்டேலா வந்துருந்தார். பயங்கர வரவேற்பு. மக்கள் உள்ளத்தை அப்படியே கொள்ளை அடிச்சுக்கிட்டு போனார்.
அரசியல்வாதிகள் அவர்கள் வழக்கம்போல புதுக் கட்சிகள் ஆரம்பிக்கறதும், பழைய கட்சிகளுக்குப் பேர் மாத்தறதுமா பிஸியா இருந்தாங்க.

மவொரிகளுக்கு அந்தக் காலத்துலே அநீதி செஞ்சுட்டோமுன்னு அரசாங்கம் மன்னிப்புக் கேட்டுக்கிட்டு, அவுங்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்கலாமுன்னு அவுங்க குறை கேட்க ஒரு ட்ரிப்யூனல் அமைச்சதில்லையா? அது ரெண்டு குழுக்களுக்கு,170 மில்லியன், 40 மில்லியன் டாலர்களைக் கொடுத்துச்சு.
இதெல்லாம் முடிச்சுத்தான் 1996 தேர்தல் வந்துச்சு.
இந்த தேர்தல் தேர்தல்னு சொல்றது இங்கே மஜாவா இல்லீங்க(-: லட்டுக்குள்ளே ஒரு மூக்குத்தி உண்டா, குடம் உண்டா? என்னவோ ஒரு நாள் நிச்சயம் செஞ்சு தினசரிப் பத்திரிக்கை,தொலைக்காட்சின்னு சொன்னாப் போதுமா? ஒரு பொதுக்கூட்டம் உண்டா? ஒலிபெருக்கி வச்சு அண்ணனுக்கோ, அக்காவுக்கோ,அம்மாவுக்கோ, அய்யாவுக்கோ ஓட்டுப்போடுன்னு, மக்கள் காது சவ்வைக் கிழிச்சுக்கிட்டுக் கூவறது உண்டா? வூட்டாண்ட வந்து நம்மளைக் கண்டுக்கறது உண்டா? அங்கங்கே போஸ்டர் அடிச்சு ஒட்டி, நம்ம வீட்டுச் சுவத்தையெல்லாம் பாழ்படுத்தற விதரணை உண்டா? ஒருத்தர் போஸ்டர் மேலெ இன்னொருத்தர் அவுங்க போஸ்டரை ஒட்டிட்டா, போனாப் போகுதுன்னு ஒட்டுனவன் கை எடுக்கற கலாச்சாரம் உண்டா?

அட அத்தை விடுங்க......... ஓட்டுப்போட ஒரு லீவு உண்டா? பொல்லாத தேர்தல்......... சனிக்கிழமையாப் பார்த்து நடத்துறது என்னாங்க கணக்கு? அந்தந்த பேட்டையில் இருக்கும் பள்ளிக்கூடத்து ஹாலிலே போலிங் பூத் வச்சுடராங்க.காலையில் 9 மணிக்கு ஆரம்பிச்சு மாலை 7 வரை திறந்திருக்கும். அதுகூடப் பாருங்க, இங்கத்து சம்மர்தான் தேர்தலுக்கு.குளிர்காலமுன்னா யாரும் மெனெக்கெட மாட்டாங்களாம்.
அன்னிக்குக் கடைகளுக்குப் போக நாம் கிளம்புவோமில்லையா,அப்படியே போய் நம்ம ஓட்டையும் போட்டுட்டுப் போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான். நாலு ஆளுக்கு மேலே லைன்லே நின்னாங்கன்னா நான் பயங்கரக் கூட்டமுன்னு சொல்லிருவேன். அந்த ஓட்டுப் பெட்டிக் கூட ஒரு அந்தஸ்த்து இல்லாம வெறும் அட்டைப் பொட்டிங்க. ஒரு பூட்டு உண்டா? அந்த வளாகத்துலே ஒரு போலீஸ் உண்டா? ஹூம்...... வேஸ்ட்ங்க!

தேர்தலுக்கு ஒரு மாசம் முன்னால்கூட வாக்காளராப் பதிவு செஞ்சுக்கலாம். ஒரு இமெயிலோ, இலவசத் தொலைபேசியோகூடப் போதும். என்ன செய்யணும், எப்படி ன்னு எல்லா விவரமும் கதறிக்கிட்டு ரெண்டு மூணு நாளுக்குள்ளே வந்துரும்.

வாக்குப்பதிவுக்கு ஊர்லே இருக்கமுடியாதா? ரெண்டரை வாரத்துக்கு முன்னெயே ஸ்பெஷலா ஓட்டுப் போட்டுக்கலாம்.
தேர்தலுக்கு ஒரு மாசம் இருக்கறப்பவே ஏற்கெனவே பதிவு செஞ்ச வாக்காளர்களுக்கு 'ஈஸி ஓட்டு கார்டு'ன்னு நம்ம விவரம் அடங்குன கடுதாசியை நம்ம வீட்டுக்குத் தேர்தல் வாரியம் அனுப்பி வைக்கும். அதைக் கொண்டுபோனாப் போதும்.

17 வயசானதும் பதிவு செஞ்சுக்கலாம். 18 வயசு ஆனதும் போட்டுறலாம் உங்க ஓட்டை:-)
ஆனா ஒண்ணு, நாமேதான் போய் ஓட்டுப்போடணும். வீட்டாண்டை வந்து கூட்டிக்கிட்டுப் போக மாட்டாங்க.நம்ம ஓட்டை யாராவது போட்டுக்கட்டுமுன்னு இருக்க முடியாது. என்னவோ போங்க.ம்ம்ம்ம்ம்,புலம்பல்தான்.

22 comments:

said...

வோட்டுப்போடரதப்பத்தி நல்லா சொன்னீங்க. நானும் ரெண்டு தடவை இங்க வந்து வோட்டு போட்டுட்டேன். கூட்டமான கூட்டம். ஈ ஓட்டரதுக்குத்தாங்க. 2 நிமிஷத்தில கூட வோட்டுப்போடமுடியும்னு இங்க வந்துதான் தெரிஞ்சுது

said...

16 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை தனியா வீட்டுல விடக்கூடாது...நல்ல சட்டமா இருக்கே. ஆனா இதை இந்தியாவுல கொண்டு வர முடியாது. கொண்டு வந்தாலும் எந்த வீட்டுல அப்படி விட்டுட்டுப் போயிருக்காங்கன்னு பாக்குறதுக்குள்ளயே போலீஸ் கீலீஸாயிரும். ஆனா உண்மையிலேயே நல்ல சட்டம். நான் இதை ஆதரிக்கிறேன்.

என்னது..இதுக்குப் பேரு தேர்தலா? தேறாததல்லுன்னு பேர மாத்தி வெச்சிரலாம். ஒண்டிக்கு ஒண்டி வர்ரியான்னு கூட கேக்க மாட்டாங்களா? சல்லாத்துணி போட்டுக்கிட்டு ஆடுனாங்க...ஒன்னுக்கு மூனு பொண்டாட்டி..குடிகாரன்..கச்சிமாறி....இதெல்லாம் இல்லையா...என்னவோ போங்க...எப்படித்தான் தேர்தல் கொண்டாடுறாங்களோ! தேர்தல் வன்முறையாவது உண்டா? பூத்தப் பிடிக்கிறது..கள்ள ஓட்டு போடுறது..இந்த மாதிரி.

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

தனியா இங்கே, நியூஸியிலே நின்னு புலம்புறொமேன்னு பயமா இருந்துச்சு:-)
நல்லவேளை, கூட்டுக்கு நீங்க வந்தீங்க.

said...

வாங்க ராகவன்.

அதாங்க ஒரே மனக்கஷ்டமாப் போச்சு. ஆசைக்கு ஒரு கள்ள ஓட்டுப்போடலாமுன்னா
கூட, அங்கே போலிங்பூத்லே அஃபிசியலா இருக்கறவங்க எல்லாம் அந்த வட்டாரத்துலே இருக்கறவங்க.
அநேகமா தினப்படி நாம பார்க்கற பேரண்ட்ஸ்தான்!

பொதுவா, நாமளும் நம்ம புள்ளைங்க படிக்கிற பள்ளிக்கூடத்துலேதானெ
ஓட்டுப்போடப் போவோம்.

'கட்சி மாறி'ன்னு சொன்னீங்க பாருங்க , அப்பாடா அது(வாவது) இங்கே இருக்குங்க.
இதுக்கு இங்கே 'வாகா ஜம்பிங்'ன்னு பேர். மவொரிங்க பயன்படுத்தும் ஒரு படகுதான்
இந்த 'வாகா'. ஒரு படகு மூழ்கறாப்போல இருந்தா இன்னொண்ணுலே தாவிடறது:-)

இதுவரை ஒரு ஆறேழு (பெரிய)தலைங்க படகு மாறி இருக்கு:-)

ச்சின்ன வீடு ஆளுங்களுக்கு............. என்னாத்தைச் சொல்றது?

மோனிகா விஷயம் என்னா பாடு பாடுபட்டுச்சு. ஊஹூம். நோ ச்சான்ஸ்

said...

//வழக்கம்போல எல்லா ஊருக்கும் கொண்டாந்து காட்டிட்டுப் போனாங்க///

அதெல்லாம் நாங்க ஜெயிக்க மாட்டோமுன்னு தெரிஞ்சு போட்டி ஆரம்பிக்கறது முன்னாடியே கப்பை கொண்டு வந்து காமிச்சுட்டோமில்ல.

said...

வாங்க கொத்ஸ்.

அதான் உங்களுக்கு எப்பவுமே எல்லாமெ 'தனி வழி'தானே? :

இன்னும் 'இம்பீரியல் அளவைகள்' வச்சுருக்கறது உள்பட:-)

said...

டீச்சர், நான் நாங்கன்னு சொன்னது இந்தியாவை!! :))

said...

அன்னிக்கு மட்டும் ஒரு லட்சம்பேர் கூடுனாங்க. ஊரோட ஜனத்தொகை மூணு லட்சம்தான்.
லாரி,பிரியாணி இல்லாமலேயா??அதிசியம் தான்.
படிச்சு முடிக்கும் வரை பத்திக்கு பத்தி சிரிப்பா வருது.
அதுக்கு கீழே பார்த்த, கலக்கன்னு ஒருத்தர் திரும்ப வந்துவிட்டார்.இ.கொத்தனார்.

said...

கொத்ஸ்,

//டீச்சர், நான் நாங்கன்னு சொன்னது
இந்தியாவை!! :)) //


எப்பய்யா கொண்டுபோய் காமிச்சீர்?
அதுக்குதான் இப்பப் போயிட்டு வந்தீரா?

அப்படியே இங்கேயும் கொண்டுவந்து
காமிச்சுட்டுப் போயிருக்கலாமுல்லே?:-))))

said...

வாங்க குமார்.

என்னங்க இது? நம்ம பொழைப்பு இப்படிச்
'சிரிப்பாணியா' ஆயிருச்சு:-))))

//லாரி,பிரியாணி இல்லாமலேயா??//

பி.கு: இந்தப் பயலுவளுக்குப் பிரியாணி செய்யத் தெரியாதுல்லே:-)
லாரியும் சிட்டிக்குள்ளே ஓட்டக்கூடாது(-:

said...

//எப்பய்யா கொண்டுபோய் காமிச்சீர்?
அதுக்குதான் இப்பப் போயிட்டு வந்தீரா? //

இதுக்குத்தான் வெறும் சரித்திரமே படிச்சுக்கிட்டு இருக்கக்கூடாது. உலகக்கோப்பை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே நம்ம ஊருக்கெல்லாம் அந்த கோப்பையை கொண்டு வந்து காமிச்சுட்டாங்க. அதுல கொல்கொத்தாவில் அதை உடைக்க வேற உடைச்சுட்டாங்க.

ஹூம் உங்களுக்கு இதெல்லாம் எங்க தெரியப் போகுது. ரக்பி, படகுப் போட்டின்னா பாக்கறீங்க. கிரிக்கெட்டுன்னா கிலோ என்ன விலைன்னு கேட்கறீங்க.

said...

நல்ல ஊருதான் போங்க!! :-)

said...

கொத்ஸ்,

//அந்த கோப்பையை கொண்டு வந்து காமிச்சுட்டாங்க.
அதுல கொல்கொத்தாவில் அதை உடைக்க வேற உடைச்சுட்டாங்க. //

அட! இங்கேயும் ஒரு ஆள் இந்த அமெரிக்கக் கோப்பையை ஒருநாள்
கட்டிடத்துக்குள்ளே புகுந்து உடைச்சுட்டார். அப்புறம் ஏராளமா செலவு பண்ணி
புதுப்பிச்சாங்க( பேசாம புதுசாவே ஒண்ணு வாங்கி இருக்கலாம்!)

என்னா ஒத்துமை பாருங்க.

என்னாத்தை கிரிக்கெட்டு? நாங்களும் தோத்துட்டுத்தான் வந்தோம், அதுவும்
பக்கத்தூட்டுக்காரர்கிட்டே(-:

said...

வாங்க CVR.

ஊர் மட்டுமா நல்ல ஊரு? :-))))

said...

நாலு ஆளுக்கு மேலே லைன்லே நின்னாங்கன்னா நான் பயங்கரக் கூட்டமுன்னு ....]]
ஐய்யோ சிரிச்சு சிரிச்சு வாய் வலிக்குது..
மகாப்பொறாமையா இருக்குப்பா.
இப்படி ஒரு நாடா. ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

said...

வாங்க வல்லி.

இது அப்பத்து நிலமை.

இப்பத்து நிலமை?

அடுத்தவருசம் தேர்தல் வருது.
பார்த்துட்டுச் சொல்றெனே:-)

said...

நீயெல்லாம் வேஸ்ட்.. டோட்டல் வேஸ்ட் உண்மைத்தமிழா..

நீயெல்லாம் என்னடா எழுதுற? மரமண்டை.. மரமண்டை..

டீச்சர் இன்னாமா கலக்குறாங்க பாரு..

பேசாம நியூஸிலாந்துக்கு வண்டியேறு.. உனக்கு அந்தப் 'புரட்சித்தலைவி'தான் இனிமே லாயக்கு..

கூட இருந்து கொஞ்சம் 'தமிழைக்' கத்துக்கின்னு, அப்பால இங்கன வந்து பீலா வுடு..

எழுதுறானாம்.. எழுத்து.. கம்னாட்டி.. கம்முன்னு அடங்குடா..

முடிவு பண்ணிட்டேன் டீச்சர்.. என் உடல், பொருள், ஆவியையெல்லாம் நீங்க ஆரம்பிக்கப் போற bloggers கட்சிக்கே அர்ப்பணிக்கப் போறேன்..

said...

என்னங்க உண்மைத்தமிழரே,

உங்க பின்னூட்டம் உண்மையானதான்னு எலிக்குட்டி புலிக்குட்டி எல்லாம்
வச்சு சோதனை செய்ய வேண்டியதாப் போச்சு. போட்டோ எல்லாம் வந்தாலும்
இன்னும் கொஞ்சம் சந்தேகமாத்தான் இருக்கு(-:

ஆமாம். அதுலே ஏதும் உ.கு. இல்லையென்று நம்பலாமா? :-)))))

said...

ஆஹா..

இப்படியரு கோணம் இருக்குன்றது எனக்கு மறந்து போச்சு.. ஸாரி டீச்சர்.

நானேதான்.. நிஜ உண்மைத்தமிழன்தான் எழுதினேன்.. எப்படியெல்லாம் சொல்ல வேண்டியிருக்கு பாருங்க..

கொஞ்சம் twist-ஆ இருக்கட்டுமேன்னு அப்படி எழுதினேன்.. அது சந்தேகத்தைக் கிளப்பிருச்சு.. ஸாரி டீச்சர்..

இதுல எந்த உள்குத்தும் இல்லீங்கோ.. வழக்கமா எழுதுற மாதிரிதான்..

said...

அக்காவ்,

அடுத்த தேர்தலுக்கு முகாந்திரமெல்லாம் நல்லாத்தான் இருக்கு..... அப்படியே என்ன சின்னமுன்னு சொல்லி போட்டிங்கன்னா ஒரு ஒட்டு போட்டுருவோமில்ல....

ஹ்ம்ம்ம்ம்.... உங்க ஊருல ஒட்டு போடலனா அபராதம் கிடையாதா???

said...

டெஸ்ட்

said...

வாங்க கஸ்தூரிப்பெண்ணே.

அபராதம் எல்லாம் இதுவரை இல்லை.

இன்னும் நியூஸி கொஞ்சம் அப்பாவியாத்தான் இருக்கு:-)

இந்த நிமிஷம் உங்க நாட்டுலேதான் டேரா. கோல்ட்கோஸ்ட்லே இருக்கேன்.