Wednesday, September 07, 2016

நதி என்றால் அது குளம்! நெசமாவா? (இந்தியப் பயணத்தொடர். பகுதி 83)

போன பயணத்தில் (2012) கோவில் திருக்குளத்தைப் பார்க்கவே இல்லை. ஹரித்ராநதியை பார்த்தீங்களான்னு  கேட்டதுக்குப் பேய் முழி முழிச்சது தனிக்கதை:-) கோவில் பாதி, குளம் பாதி ன்னே பேரும் வாங்கிருச்சு. இந்தமுறை விடக்கூடாதுன்னு  முடிவு செஞ்சுக்கிட்டேன்.  தேடிப்போன மூலிகை காலில் ஆப்ட்டாப்ல....  குளம் வழியாகவே  போறார் சீனிவாசன்.  வண்டியை ஓரங்கட்டச் சொன்னேன்.
ஊர்க்காரங்க ரொம்பத் தப்பு பண்ணி இருக்காங்க!  ஹரித்ரா நதியாமே நதி..........   சரியாச் சொன்னால்  ஹரித்ரா கடல்னு வச்சுருக்கணும். ஹரித்ரா சமுத்ரம் கூடப் பொருத்தம்தான்!  1158 அடி நீளமும், 837 அடி அகலமுமாக் கிடக்கு.  சுத்திவர  வீதிகள்!
வாசக் கதவைத் திறந்தால் கடல் தரிசனம், இல்லே!   ஹைய்யோ!  அதுவும் திண்ணை வச்சப் பழங்கால வீடுகள்ன்னா ஜாலியா உக்கார்ந்து பார்த்துக்கிட்டே பொழுது போயிரும்!  போனமுறை  வேற எதோ வழியா வந்தமோ?  ராஜகோபுரவாசல் முன் போய் நின்னதுதான் நினைவிருக்கு!

அப்போதையப் பதிவில் மூலவரே நம்ம செங்கமலம்தான் :-)


குளத்துக்கு நடுவில்  கோபுரத்தோடு ஒரு கோவில்.  ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமிக்கானது !  படகில் போய் வருவாங்கன்னு நினைக்கிறேன். ச்சும்மாச் சொல்லக்கூடாது....    ஆனாலும் அழகோ அழகு!
கேமெராக் கண்ணை  அடுத்த கரைக்கு அனுப்பியப்ப,  அங்கே சிலர் குளத்தில் குளிச்சுக்கிட்டு இருந்தாங்க. சுத்தமான தண்ணீர் என்பது கூடுதல்  மகிழ்ச்சி.
ரசிச்சுக்கிட்டே குளக்கரையில் ஓய்வா அசைபோட்டுக்கிட்டு இருந்தாங்க பலர்!  மாடுமேய்க்கும் கண்ணன் கோவில் கொண்டுள்ள ஊர் இல்லையோ!
 தக்ஷிணத்வாரகை!  கண்ணனென்னும் மன்னன் ஆட்சி செய்யும் மன்னார்குடி! இந்த குடி  தமிழ்க் குடி இல்லை..... தெலுங்கில் சொல்வதைப்போல   Gகுடி.  குடி =  கோவில்!
வடக்குவாசல் வழியாக உள்ளே போறோம். கிழக்கில் ராஜகோபுரம் நெடுநெடுன்னு உசரமா நிக்குது.  வெளிப்ரகாரம்!  அடுத்து  ஆயிரங்கால்  மண்டபம். மண்டபத்தின் ஒரு பக்கம் நம்ம செங்கமலத்துக்குத் தனி வீடு :-) அறையில் ஆள் இல்லை. அதான் கேம்புக்குப் போயிருக்காளே!  மணல் தரையில்  கட்டுச்சங்கிலி மட்டும் கிடக்கு.  எவ்ளோ பெரிய உருவம். இப்படிச் சின்னச்சங்கிலிக்குக் கட்டுப்பட்டுக்கிடக்கேன்னு மனசுக்குள் ஒரு துக்கம் எட்டிப் பார்த்தது உண்மை :-(

போனமுறை எழுதுன பதிவில்  யானைக்காரர் பெயர் மறந்து போச்சுன்னு  எழுதி இருந்தேன். பாபுன்னு  நானே ஒரு பெயர் வைக்கவேண்டியதாப் போச்சு. உண்மைப்பெயரைக் கேட்டுக்கலாமுன்னு  செங்கமலத்துக்கான 'ஆஃபீஸ்' அறையில் இருப்பவரிடம் விசாரிச்சேன்.
யானைக்காரர்னு சொல்லி  அங்கிருந்த அவர் படத்தைக் காமிச்சதும்  ராஜா அண்ணனையா கேக்கறீங்க? அவரும்  கேம்புலதான்  என்றவர், உடனே தன்னுடைய செல்ஃபோனில் ஸ்க்ரீன் ஸேவராப் போட்டுருக்கும்   ராஜா வைக் காமிச்ச கையோடு அவருக்கு ஃபோன் போட்டுட்டார். "ராஜாண்ணே... உங்களை விசாரிச்சுக்கிட்டு ஒருத்தர் வந்துருக்காங்க. அவுங்ககிட்ட  ஃபோனைத் தரேன்"
வணக்கம் சொல்லிட்டு,  போனமுறை செங்கமலத்துக்கும் அவருக்கும் இருந்த பிணைப்பைப் பற்றி  பேட்டி எடுத்ததைச் சொன்னதும்,  'நல்லா இருக்கீங்களாம்மா'ன்னு  கேட்ட குரலில் மகிழ்ச்சி  தெரிஞ்சது. இன்னும் பத்து நாளில் திரும்பி வர்றாங்களாம்.  கேம்புலே செங்கமலம் ரொம்ப மகிழ்ச்சியா இருக்காளாம். படங்களையெல்லாம்  அனுப்பிவிடறேன்னார்.
இளைஞர் மகேஸ்வரன், நம்ம  செல்ஃபோனுக்கு  எல்லாத்தையும் அனுப்பறேன்னு  சொல்லி  நம்ம நம்பருக்கு அனுப்ப ஆரம்பிச்சார். அதுக்குள்ளே  கோவிலுக்குள் போயிட்டு வந்துறலாமா?

23 ஏக்கர் நிலத்துலே கட்டுன கோவில்னா பார்த்துக்குங்க.... எப்படி இருக்குமுன்னு.....  அது பாட்டுக்குப் போய்க்கிட்டே இருக்கு!  உள்ளூர்க்காரர்களுக்கு நடைப்பயிற்சிக்கு  வேற இடம் போகத் தேவையில்லை.  ஒரு சுத்து வந்தாக்கூடப்போதும்.....  உடம்பும் ஃபிட்டு. இலவச இணைப்பா....  குழந்தையை ஸேவிச்ச புண்ணியம்! காலையில் கோவில்,  மாலையில்  ஹரித்ரா நதியை ஒரு சுத்து!  ஹைய்யோ... நினைச்சுப் பார்க்கவே நல்லா இருக்கு!  பேசாம மன்னார்குடியில் வந்து  தங்கிடலாமா?


 முன்மண்டபம் தாண்டி  ரெண்டாம் பிரகாரம் போறோம்.  ஏழெட்டு படிகள் ஏறிப்போகணும் மூலவர் தரிசனத்துக்கு. எல்லாம் பெரிய பெரிய உயரமான மண்டபங்கள்!  வாசலில் ஜயவிஜயர்கள்   ஆஜானுபாகுவான ஆளுயர   உலோகச்சிலை!  வெங்கலமோ?  கருவறை வாசலைப் பார்த்தமாதிரி ஒரு தம்பதிகள் கூப்பிய கைகளுடன்!  யாராக இருக்கும்?   தஞ்சை மன்னர் அச்சுதப்ப நாயக்கரும் அவர் மனைவி மூர்த்திமாம்பாவும்தான்!    உற்சவர்  வீதி உலாவுக்குக் கிளம்பி வெளியே வந்தவுடன், இங்கே நின்னு இவுங்களுக்குத் தன்  அழகைக் காமிச்சுட்டுத்தான்  படி இறங்கறார்!  முன்னுரிமை!!!
மூலவர்  வாசுதேவர். பரவாசுதேவர்.  12 அடி உசரம். நெடுநெடுன்னு நிக்கறார்.   முழு உருவத்தையும் பார்க்க முடியாமல்  அவருக்கு முன்னால் ஒரு மரபெஞ்சு  மேடையில் உற்சவர்கள். நடுநாயகமா நிற்பது  மாடு மேய்க்கும்  குட்டிப்பையன்   ராஜகோபால். அச்சோ......  என்ன ஒரு அழகுமா!!!   வச்ச கண்களை மீட்டு எடுப்பது மகா கஷ்டம்!

இடுப்பை  ஒரு பக்கமா  ஒடிச்சு  நிற்கும் ஒய்யாரம். வலது கையில்  முணு வளைவுள்ள சாட்டை! அதில் குலுங்கும் மணிகள்.  சின்னக்குழந்தைக்கு  இடுப்பில்  மணிச்சரம், காலில் தண்டை கொலுசு , கழுத்து நிறைய பதக்கமும் சங்கிலியுமா  நிறைஞ்சு கிடக்கு!  நகை பாரம்  பிடிச்சு இழுக்குமோ? இடது கை சப்போர்ட்டுக்கு பின்னம்பக்கம் நிற்கும் பசுமாடு.  ரெண்டு கன்னுக்குட்டிகள் தலை உயர்த்திக் கண்ணன் முகம் பார்க்கும் போஸில்.
'மூலவர் பாத தரிசனம் பாருங்க'ன்னு  பட்டர்ஸ்வாமிகள் தீப ஆரத்தி எடுக்கும்போது  பெஞ்சுக்குக் கீழே கைநீட்டினார். குனிஞ்சு பார்த்தோம்.  மஞ்சள்  விளக்கொளியில்.... பார்த்தக் கால்களைக் கட்டிப்                                     பிடிச்சுக்கலாமான்னு  தோணுச்சு.  ரொம்பக் கிட்டக்கத்தான் இருக்கார்!  மூலவருக்கு ரெண்டு பக்கமும் ஸ்ரீதேவியும் பூதேவியும்!  உற்சவரான ராஜகோபாலனுக்கு  ருக்மிணியும் பாமையும் பக்கத்துக்கொருவராக !
போனமுறைமாதிரி கண்ணைக் கட்டிடுவானோன்ற பயத்துலே சந்தான க்ருஷ்ணன் பக்கம்  தலையைத் திருப்பாமல் இருந்தேன்:-) அப்படியும்    ஓரக்கண்ணால் பார்த்துட்டேன்....
தாயார் செங்கமல நாச்சியார்!  கஜலக்ஷ்மி!  தனிச்சந்நிதியில்.
கோவிலில்  மராமத்து வேலைகள் நடப்பதால்  சட்னு  பல சந்நிதிகளுக்குப் போக முடியாமல் இருக்கு.  இங்கே மட்டும் மொத்தம் 24 சந்நிதிகள்!   பெரிய  மண்டபங்கள் 7.    ராஜகோபுரம் சேர்த்து கோவில் கோபுரங்கள்  16.  சந்நிதி  விமானங்கள்  18.  ப்ரகாரங்கள் 7.


ராஜகோபுரத்தைப் பார்த்தபடி,  வெளியே  பெரிய திருவடி 54 அடி உயரக் கருங்கல் தூண்மேலே ஏறி நிக்கறார்.  அழகான சின்னக் கோவில்போல டிஸைன் செஞ்சுருக்காங்க.  கல்தூண் கூட ஒத்தைக் கல்லாமே!!

இவ்ளோ அம்சமான கோவில் நம்ம 108 லே இல்லை பாருங்க....  ஆழ்வார்கள் காலத்துக்குப் பிற்பட்டதாக இருக்க சான்ஸே இல்லை. ரெண்டாயிரம் வருசப் பழசுன்னு (வழக்கம்போல்) கோவிலுக்கு வயசைச் சொல்றாங்க. அப்புறம் கொஞ்சூண்டு  ஆராய்ஞ்சதில் முதலாம் குலோத்துங்க சோழர் ஆட்சி  காலம் 1070 முதல் 1120 என்பதால்  பெருசாக் கட்டி எழுப்பியது இப்படியும், ஆதி காலத்தில்  சின்னக்கோவிலாகவும் இருந்து, மிஸ் பண்ணப்பட்டதாகவும் இருக்கலாம்.

ஒருசமயம் ஆயிரத்தெட்டு முனிவர்கள் சேர்ந்து க்ருஷ்ணனை தியானம் செஞ்சுக்கிட்டு இருக்காங்க. நேரில் பார்க்கணுமாம்!  த்வாரகைக்குப் போங்கன்னு உத்தரவாச்சு.  கிளம்பி வந்துக்கிட்டு இருக்காங்க. நடராஜா சர்வீஸ்தான்.   பாதிவழி போகுமுன்பே....  த்வாபரயுகம் முடிஞ்சு க்ருஷ்ணன் வைகுண்டம் போயிட்டார்னு சேதி.

குளக்கரை சமீபம் கூடி நின்னவர்கள், நடையா நடந்தும் நமக்கு  வாய்க்கலையேன்னு மனத் துக்கம் தாங்காமல் தவிக்கும்போது, அதே குளத்தை யமுனை நதியாகவும்,  அதில்      ஆயிரக்கணக்கான கோபியருடன் கண்ணன் நீராடிக்களித்த  காட்சியுமா  மாற்றிக் காமிச்சு  முனிவர்களுக்கு தரிசனம் கொடுத்தானாம்.........   அந்தக் குளம்தான் இந்த ஹரித்ரா நதி.  அப்போ  தரிசனம் கொடுத்தவந்தான் கோவிலுக்குள் ராஜகோபாலனாக இருக்கான்!

கோவிலும் குளமும்  வந்தபிறகு, ஊரையே  இதைச் சுத்திக் கட்டி இருக்காங்க! என்ன ஒரு ரசனை!

 நியூஸியில் நாங்க இருக்கும் ஊரும் இப்படித்தான் கோவிலைச் சுத்திதான் ஊரே!  ஊருக்குப் பெயரே க்றைஸ்ட்சர்ச்!
கோவில் உற்சவங்கள் எல்லாம் அட்டகாசமா நடக்குதாம்! அதுவும் தெப்பத்திருவிழா நடக்கும்போது...........  ஹைய்யோ   என்னமா இருக்குமுன்னு   கற்பனையில் பார்த்தேன்.
பழுது பார்க்கும் வேலைகள் முடிஞ்சவுடன், கோவில் இன்னும் பளிச்ன்னு இருக்கும். இன்னொருக்கா  சூட்டோடு சூடா வந்தாத் தேவலை! 'கூப்புடுடா கண்ணா'ன்னு  மனசில் வேண்டிக்கிட்டு வெளியே வந்து மகேஸ்வரனைப் பார்த்தப்ப, உங்களுக்குப் படங்கள் எல்லாம் அனுப்பிட்டேன்னார்.
போட்டுருந்த ஷர்ட்டைக் கொஞ்சம் நீவிவிட்டு ஒரு போஸ் கொடுத்தவர், இந்தப் படத்தைப் போடுங்க. அப்ப எடுத்தது வேணாம்ன்னார். ஓக்கே!


ஒரு நிமிசக் கேம்ப் வீடியோ இருக்கு பாருங்க.  யானைகளுக்கு எவ்ளோ மகிழ்ச்சி.   எதுக்காக இப்படிக் கோவில்களில் கொண்டுவந்து  ஒத்தை யானையா வச்சு வளர்க்கறது?  பேசாம எப்பவும் கேம்ப்லேயே இருந்துட்டா நல்லா இருக்குமே!  சாமிக்கு சேவை செய்யுது என்றது  இருக்கட்டும்..........  தனியா  ஒரு பேச்சுத் துணையில்லாம, தன் இனத்தைப் பார்க்காம  வாழ்க்கையை கழிப்பது எவ்ளோ சிரமம்?  கோவிலுக்கு யானை கட்டாயம் வேணுமுன்னா குறைஞ்சபட்சம் ரெண்டு யானைகள் இருக்கட்டுமே...........

செங்கமலத்தின் அறையை இன்னொருமுறை க்ளிக்கிட்டு அதே  வடக்குவாசல் வழியா வெளியே வந்தோம்.

நேத்து  பழைய முதல்வர் அண்ணாதுரை அவர்களின் நினைவுநாளுக்கு இங்கே பொது விருந்து நடந்துருக்கு!  சசிகலா 'மேடத்தின்' ஏற்பாடாக இருக்குமோ?
அடுத்த இடத்துக்குப் போகும் கிழக்குக்கடற்கரைச் சாலையைப் பிடிக்க ஒரு மணி நேரம் ஆச்சு.
 
  தொடரும்.........  :-)


19 comments:

said...

பலமுறை நான் பார்த்த மதிலழகு மன்னார்குடியில் உள்ள கோயிலை தங்கள் பதிவு மூலமாக இப்போது காணும் வாய்ப்பு கிடைத்தது. இக்கோயிலிலிருந்து சிறிது தூரத்தில் சமணக்கோயில் ஒன்று உள்ளது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் சமணக்கோயில்கள் உள்ள இடங்களில் ஒன்றாக மன்னார்குடி முக்கியத்துவம் பெறுகிறது.

said...

அருமையான விவரங்கள். மன்னை - நம்ம பதிவுலகிலும் பலர் மன்னைக்காரர்கள் - RVS, Rajagopalan, Srinivasagopalan Madhavan எனச் சொல்லிக் கொண்டு போகலாம். மன்னை பற்றி RVS நிறைய எழுதி இருக்கிறார்....

தொடர்கிறேன்.

said...

// உள்ளூர்க்காரர்களுக்கு நடைப்பயிற்சிக்கு வேற இடம் போகத் தேவையில்லை. //
கண்டிப்பா டீச்சர். நம்ப முன்னோர்கள் இதையெல்லா மனசுல வச்சித்தா பெரிய பெரிய கோவிலா கட்டிருப்பாங்க. மலை மேல கோவில் கட்டறதெல்லா புண்ணியத்தோட உடற்பயிற்சியு ஆகட்டும்னு ப்ளான் பண்ணிருப்பாங்க. அதிகாரத்தில் இருப்பவங்க இதையெல்லா புரிஞ்சிக்காம இருந்தாலு நாசமாக்காம இருந்தாலே போதும்.

நன்றி, நன்றி, நன்றி.

said...

ஹரித்ராநதியை பற்றிய தகவல்கள் அருமை....

வழக்கம் போல் ராஜ கோபால சுவாமி....அழகு...

said...

நல்ல கோவில், அருமையான தகவல்கள். நன்றி.

said...

ஹரித்ரா நதி, கோபாலசமுத்ரம்,திருப்பார்கடல்,எல்லாமே இங்கு இருக்கிறது.

said...

உண்மையான அழகன் !!! திருமங்கை ஆழ்வார் வந்தாரும்னும் ஆனா பாடலைனும் எங்கவோ படிச்ச ஞாபகம் #ஒரு வேளை அழகிலே மயங்கிருப்பாரோ ?????

said...

மன்னை, மற்றும் ஹரித்ரா நதின்னதும் எனக்கு நம்ம ஆர்வியெஸ்தான் முதல்ல ஞாபகத்துக்கு வந்தார். எவ்ளோ பெரிய குளம்!!!

said...

அடடே... அண்ணாவை அசிங்கப்படுத்தும் இந்தக் காலத்துல அறிஞர் அண்ணாவை நினைவு வெச்சு பொது விருந்து நடத்துறாங்களே. சொன்னாலும் சொல்லாட்டியும் அண்ணா வழி வந்தவங்கதான் பொதுவிருந்து நடத்துவாங்கன்னு தோணுது.

ஆயிரம் ஆண்டுகள்னா ஆழ்வார்கள் காலத்துக்குப் பின்னாடிதான். ஆழ்வார்கள் எல்லாரும் சேர்ந்து 108ன்னு முடிவு பண்ணலை. ஏன்னா.. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு காலகட்டம். எப்படியோ அப்படியொரு கணக்கு வந்துருச்சு. மனிதர்களால 107 திவ்யதேசங்களுக்குத்தான் அதிகப்படியாகப் போக முடியுமாம்.

நல்ல பெரிய கோயிலா இருக்கு. துப்புரவாவும் இருக்கு. தண்ணியும் இருக்கு. அருமை.

செங்கமலத்தை மறுபடியும் அடுத்த முறை பாத்துருங்க. ஆனா.. என்னைக் கேட்டா யானையெல்லாம் கோயில்ல வெச்சுத் துன்புறுத்தக்கூடாது. அதுபாட்டுக்க வாழட்டும்னு காட்டுல விட்டுறனும்.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

சமணக்கோவில் விவரங்களுக்கு நன்றி.

தமிழ்நாட்டுச் சமணக்கோவில்களுக்கு அதிகம் போனதில்லை. கர்நாடகாவில் நிறைய சமணக்கோவில்கள் தரிசனம் கிடைச்சது.

அடுத்து வரும் பயணங்களில் மதுரை அருகில் உள்ள சமணக்கோவில்களுக்குப் போகணும் என்றொரு எண்ணம் இருக்கிறது.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

நம்ம மன்னார்குடி மைனரை நினைவு வச்சுக்காமல் போக முடியுமா? பதிவில் கொடுத்துள்ள லிங்கில் அவரைப் பற்றி நினைச்சது இருக்கு :-)

said...

வாங்க விஸ்வநாத்.

உடற்பயிற்சி செய்ய சோம்பல் என்றாலும் கோவிலுன்னா சனம் போயிருதே!!!

காரைக்காலில் ஒரு கோவில் குளத்தைச் சுத்தி நடப்பதற்கான கற்கள் அமைச்சு, மூணு முறை சுத்துனா ஒரு கிமீன்னு போர்டும் போட்டு வச்சுருந்தாங்க !!!

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

உண்மை உண்மை !

said...

வாங்க பித்தனின் வாக்கு.

ரசிப்புக்கு நன்றி.

said...

வாங்க ஸ்ரீநிவாசன்.

உங்க ஊர் இல்லையோ இது!!

வருகைக்கு நன்றி.

said...

வாங்க நாஞ்சில் கண்ணன்.

உண்மையாக இருக்கச் சான்ஸ் இருக்கு! மயக்கி இருப்பான் மாயக்கண்ணன்!!!!

said...

வாங்க சாந்தி.

எனக்கும் குளம் பார்த்தவுடன் ஆர்விஎஸ் நினைவு வந்து அவர் வீடு எதுன்னுகூட கண்களால் தேடினேன்!

said...

வாங்க ஜிரா.

பூவுலகில் 106 தானாம். மேலுலகில் 2 கேரண்டின்னு சொல்லிட்டான் :-)

உண்மையில் கோவிலுக்கு யானை எதுக்கு? அதுவும் இந்தக் கலி காலத்தில்? அதைப்பட்டினி போட்டு இம்சிக்கவா? காட்டுலே இருந்தாத்தானே அதுக்கு மகிழ்ச்சி. அப்படி யானை வேணுமுன்னால் கோவிலில்குறைஞ்சபட்சம் ரெண்டு யானைகளை வச்சால் தேவலை.

said...

காட்டில் வாழும் யானை பூனை நாய் பன்றி இதையெல்லாம் வீடு கோயில் என்று வளா்த்து அதன் சுதந்திர தன்மையை கெடுத்துவிட்டனா்+