Tuesday, October 24, 2006

வடைப்பதிவாளர் மாநாடு (A t d - பகுதி 2)

கோயிலுக்கு வெளிப்புறம் சனி பகவானுக்கு எள் விளக்கு ஏத்தறதுக்காக ஒரு இடம். உள்ளெ அதுக்குண்டான சாமக்கிரியைகள் விற்பனை. கருப்புத்துணியில் எள்ளைச் சின்னமூட்டையாக் கட்டி எள் எண்ணெயில் முழுக்காட்டி அகல்விளக்கில் வச்சு வரிசையா நிக்குது. வெளியே மூணு மேஜைகள் போட்டு ஒரு போர்டு வச்சுருந்தாங்க.வயதானவர்களுக்கு மட்டும். சாப்பாட்டு வரிசை. ஓ நமக்காத்தான் இருக்குன்னு சந்தோஷமா அதைப் பார்த்தேன். நம்ம பார்வையின் 'பொருள்' அங்கே ஏற்பாடு செஞ்சுக்கிட்டு இருந்தவருக்குப் புரிஞ்சு போச்சு. இந்த வரிசை, வயது போனவங்களுக்காகன்னு சிரிச்சுக்கிட்டே சொன்னார். பாவம், மனிதர். கண்ணுலே போட்டுருக்கற பவர் லென்ஸ் வேலை செய்யலைபோல இருக்கு. இல்லாட்டி, நம் 'இளமைத் தோற்றம்' தந்த மாயையோ?



கோயிலுக்குப் பின்புறம் ஒரு பெரிய ஹால். கோயிலைக் கட்டிக்கிட்டு இருக்கும்போது அங்கேதான் முதலில் விக்கிரகங்களை வச்சுப் பூஜை நடத்திக்கிட்டு இருந்தாங்களாம். இப்ப அது சாப்பாட்டுக்கூடமாவும், திருமணம், வளைக்காப்புன்னு விசேஷ நிகழ்ச்சி நடக்கும் இடமாவும் பயன்படுதாம். அங்கே ஒரு மேடை அமைப்பும் இருக்கு. ஹாலின் வெளிப்புறத்தில் சாப்பாட்டு வரிசை, நம்மைப்போன்ற இளைஞர்களுக்கு! பெரிய பெரிய பாத்திரங்களில், சோறு, பருப்பு, காய்க் கூட்டு,ஸாலட், பொரியல் அப்பளம், ஊறுகாய், பச்சடி,பாயாசம்ன்னு அமர்க்களம். நாங்க ஒரு பத்துபேர் அதையெல்லாம் வாங்கிக்கிட்டு,ஹாலில் போய் உக்கார்ந்தோம். அட,அது எப்படி பத்து வலைப்பதிவாளர்கள்? மாநாடுன்னாவே பிரியாணிப் பொட்டலம்கொடுத்துக் கூட்டம் சேர்க்கணுமுன்னு ஒரு நியதி இருக்கே. அதையொட்டி வலை மாநாட்டுக்கும் ஒரு அஃபிஷியல்போட்டோக்காரர், பல(சில)பார்வையாளர்கள்னு ஒரு கூட்டம் (தானாவே) சேர்ந்துபோச்சு:-) இது போதாதுன்னா,கோயிலுக்குவந்த 300 பேரையும்கூட நம்ம கணக்குலே சேர்த்துக்கலாம். பிரச்சனையில்லை.



அறுசுவை உணவோடு மாநாடு ஆ.....ரம்பம். வழக்கமான முதல் கேள்வி. " சிட்னிக்கு வருவது இதுதான் முதல் முறையா?"

" ஆமாம். எழுத்தாளராக( அட எல்லாம் தமக்குத்தாமாய் கொடுத்துக்குற பட்ட(ய)ம் தான்) ஆனபிறகுஇதுதான் முதல் முறை( அப்படிப்போடு அருவாளை!!!!)"

அறிமுகங்கள் ஆச்சு. நெல்லிக்குப்பம் என்ற ஊரைச் சேர்ந்தவர் நம்ம டீக்கடைக்காரர். "டீயிலே கொஞ்சம் சக்கரையைத் தூக்கலாப் போடுப்பா. அதான் அந்த ஊர்லே சக்கரை ஆலை இருக்குல்லே"

நம்ம கனக்ஸ் (ஆன்மீகமா எழுதறார்) அமைதியான தோற்றம். இலங்கைப் பூர்வீகம்.

கானா பிரபாவைப் பத்திச் சொல்லவே வேணாம். ரேடியோக்காரர். அன்னிக்கும் ராத்திரி ரேடியோவில் அவர் நிகழ்த்தும் நிகழ்ச்சி இருக்காம். அலை வரிசையைக் கேக்க மறந்துட்டேன். அப்புறம் தெரியவந்தது, அது கட்டணம் கட்டுனாத்தான் கிடைக்கிற சேவையாம். (சேட்டிலைட் ரேடியோன்னு சொல்றாங்களெ அதுவோ?)அதை விடுங்க. ஆனா நம்மையெல்லாம் உப்பங்கழியிலே படகு வீட்டுலேக் கூட்டிக்கிட்டுப் போய் மீன் பொரிச்சுக் கொடுத்தது நினைவிருக்குல்லே? ( அய்யய்யோ..... வாட் டூ யூ மீன்? கோயிலே உக்கார்ந்துக்கிட்டு மீனைப் பத்திப் பேச்சா?அபச்சாரம்.)


கஸ்தூரிப்பெண். வலை பதிய ஆரம்பிக்கப் புனைப்பெயர் தேடுனப்ப 'சட்'ன்னு ஒண்ணும் மனசுக்குள்ளே தோணலையாம். 'அம்மா'பேரையே வச்சுக்கலாமுன்னு 'கஸ்தூரி' பெண் ஆயிட்டாங்க.


அடுத்து மழைன்ற பதிவின் ஸ்ரேயா. ( எல்லாம் விவரமாத்தான் தொடங்கி இருக்காங்க. உக்காந்து யோசிச்சிருப்பாங்க போல)இவுங்களுதும் பூனைப் பெயர்தான். வலைபதியும் பெண்கள் சொந்தப் பெயரில்தான் பதியுறாங்கன்ற என் நினைப்பில் மண்ணள்ளிப் போட்ட ரெண்டு பேர் இதோ என் கண்ணு முன்னாலே. சிட்னி ச்சைனா டவுன்லே நல்ல பாய்கள் கிடைக்குதாமே.நம்ம ஸ்ரேயாகிட்டே சொல்லித்தான் ஒரு கண்டெயினர் பாய்கள் அனுப்பச் சொல்லணும். ஏற்கெனவே நம்ம வீட்டில்இருந்த பாய்கள் எல்லாம் (அவுங்க பதிவைப் படிச்சுட்டு பிறாண்டுனதில்) கிழிஞ்சு போச்சு:-))))


பார்வையாளர்கள் விவரமும் சொல்லிறட்டா?


துளசியின் மறுபாதியும், எழுத்தாளரின் கூடப் பயணம் செய்யும் போட்டோக்காரருமான கோபால். அப்பப்ப வேண்டாத ஆங்கிளில் இருட்டிருட்டாப் படம் புடிச்சுருவார். 'கொஞ்சம் அழகாத் தெரியறமாதிரி படம் எடுங்கோ'ன்னு சொல்லி அலுத்துப்போச்சு:-)


கஸ்தூரிப்பெண்ணின் மறுபாதி. சேவை செய்வதற்கே அவதாரம் எடுத்தவர். பதிவாளர்கள் சேவையே பிறவிப்பயன். ஒருமுகச்சுழிப்பு? ஊஹூம்.......... எள்ளுன்னா எண்ணெய்.


கஸ்தூரிப்பெண்ணின் மாமனார் & மாமியார்.( ஏம்மா.... கஸ்தூரிப்பெண்ணே, இப்படியும் ஒரு பழிவாங்குதல் முறைஇருக்கா?:-))) தெரியாமப்போச்சே!)
கஸ்தூரிப்பெண்ணின் மகள். வருங்கால வலைப்பதிவாளர்? இருக்கலாம். இப்பவே ஏகப்பட்ட பாஷை தெரிஞ்சிருக்கு,தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தின்னு. பதின்ம வயசு.( நம்ம மீட்டிங்குக்கு டீனேஜ்க்காரங்களும் வராங்கப்பா!!)


நம்ம சந்திப்புக்கு இன்னொருத்தரும் ஆர்வமா வந்து சேர்ந்துக்கிட்டார். அவர்தான் மிஸ்டர் சூர்யா. 15 டிகிரியிலே இருந்து போன எங்களை வரவேற்க வந்துட்டார் 35 டிகிரியிலே. சூடு கனகனன்னு உள்ளே தகிக்க ஆரம்பிக்குது.


பேசுனோம், பேசுனோம் பேசிக்கிட்டே இருந்தோம். மணி மூணரைக்கு பக்கம் ஆச்சு. ஒரு 'உண்மை'(???)யைத் தெரிஞ்சுக்கிட்டு( அந்த 'உண்மை' அப்புறம் )அங்கிருந்து எல்லாரும் கிளம்பிக் கஸ்தூரிப்பெண்ணின் வீட்டுக்குப் போனோம். மாநாட்டின் மிச்சம் மீதிகள்( அட......டிஸ்கஷன்கள்) நிறைய இருக்கே. கிளம்பறதுக்கு முன்னாலே கோயில் அடுக்களையையும், மெனு போர்டு( இது இல்லாமலா?ஆனா திருவிழாக் களேபரத்துலே இன்னிக்குண்டான மெனுவை எழுத மறந்துட்டாங்க போல), அடுக்களை உதவிக்கு வந்த தன்னார்வலர்களையும் சந்திச்சு சில படங்களைக் க்ளிக்கினேன். கோயிலே இருந்து வீடு ஒரு அஞ்சு நிமிஷ ட்ரைவ்தான், கூடுதல் ட்ராஃபிக் இல்லேன்னா.


அழகான வீடு. அமைதியான இடம். வசதியா உக்கார்ந்தாச்சு. குளுமையான இடம். உண்ட மயக்கம் பார்வையாளர்களை இழுக்குது.நாங்க வலைஞர்கள், முழுமூச்சோட வலைப்பதிவுகளைப் பத்தின கலந்து உரையாடல். நீங்கள் எல்லாம் ஆச்சரியப்பட்டுப் போகும்வகையில் பேச்சு. ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி நாங்க யாருமே யோசிக்கவும் இல்லை பேசவும் இல்லை. (அதுவே எனக்கு இதை இப்ப எழுதும்போதுதான் ஞாபகம் வருது)


ச்சும்மா வெட்டிப்பேச்சா இல்லாம(!!!) இருக்கணுமேன்ற 'கவலை'யிலே பதிவுகளில் படங்கள் போடறதைப் பத்தியும்,அவைகளை எப்படி பிரச்சனையில்லாமப் பதியறதுன்றதைப் பத்தியும் கூடப் பேசுனோம். எப்படி பதிவுகளில் வரிகளுக்கிடையில் படத்தைக் கொண்டு வர்றதுன்றது என் இப்போதையத் தலையாய பிரச்சனை. ப்ளொக் ஸ்பாட்லே படத்தை ஏத்திட்டு,அதை அப்படியே இழுத்துக்கிட்டு வந்து எங்கே விருப்பமோ அந்த வரிகள் கீழே விட்டுருங்கன்னு பிரபா சொன்னார். ஊருக்குப் போனதும் செஞ்சு பார்க்கணும்னு இருந்தேன்.( அது வெற்றிதான். போன பதிவுலேயே இழுத்தாந்துட்டேனே, பார்க்கலையா? )


அடுத்து காஃபியா டீயான்ற இன்னொரு விவாதம். 'மசாலா ச்சாய்'னு முடிவாச்சு. டீயுடன் கூடவே வர்ற தட்டுகளில் கமகமன்னு மணம் வீசும் மசால் வடை, உளுந்து வடை. & வெங்காய வடைகளின் பரேடு, மெகா சைஸில். எல்லாம் நம்ம க.பெ.ணின் மறுபாதியின் சேவைதான். இங்கே ஒரு விஷயம் இருக்கு. சிட்னி நகர மையத்துலே இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் சுற்றுவரைக்கும் நகரம் பரந்து கிடக்கு. ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு நாட்டு மக்கள்ன்னு பிரிச்சுக்கிட்டாங்க போல, க்ரீக், வியட்நாம், ச்சீனர்கள்,தமிழர்கள், பஞ்சாபிகள், ஃபிஜி இந்தியர்கள்ன்னு. அந்தந்த வட்டாரத்து மக்களுக்குத் தகுந்தாப்புலே கடை கண்ணி இன்னும் மத்த விஷயங்கள்.
கஸ்தூரிப்பெண் வசிக்கும் வட்டாரத்துலெ எல்லாம் நம்ம தமிழ்க்காரர்கள்தான்னு சொல்லணுமா என்ன? இடியாப்பம் மொதக்கொண்டு பரோட்டா வரையிலே எல்லாம் ரெடி மேடு. தினமும் வேலைக்குப் போயிட்டு ரயிலடியிலே இருந்து வீட்டுக்கு வர்ற வழியெல்லாம் எண்ணெயிலே முறுமுறுன்னு வெந்துக்கிட்டு இருக்கும் வடைகளின், பஜ்ஜிகளின் வாசமோ வாசமாம். தினம் என்ன வேண்டி இருக்கு? இன்னிக்கே வாங்கவே போறதில்லைன்னு ஒரு வைராக்கியத்தோட அதைக் கடந்து வரணுமுன்னு ஒரு நினைப்போட விறுவிறுன்னு நடந்து வருவாங்களாம். மனசு மட்டும் வீட்டுக்கு,காலு மட்டும் ( எண்ணெய்க்)கடாய்க்குன்னு போய் கடை வாசலில் நிக்குமாம். சரி. இன்னிக்குத் தொலையட்டும். நாளைமுதல்.................. மாட்டேன், சத்தியமடித் தங்கம்.... கதைதான். நாலு வடைகளோட வீட்டுக்கு வந்து ஒரு டீ போட்டுக் குடிச்சால் ஆச்சு அன்னிக்குக் காந்தாயம். கூப்புடு தூரம்தான் வீட்டுக்கும் கடைக்கும். நாலு மசால் வடை பார்ஸேல்ல்ல்ல்ல்ல்,வடை ஆஜர் ஹோ.


மணி அஞ்சரை ஆச்சு. பொட் டீக்கடைக்காரரும், கனக்ஸ் & கானா பிரபாவும் கிளம்பிப் போனாங்க. இவுங்க மூணுபேரைப் பத்துன ஒரு உண்மை: (ஜவ்வரிப்) பாயாசம் பிடிக்காது. அடுத்து வந்தது 'பெண் வலைப்பதிவாளர்களின் சிறப்பு நிகழ்ச்சி. அப்படியே வீட்டுப் பெரியவர்களையும் (போனாப் போகுதுன்னு) சேர்த்துக்கிட்டோம்.க.பெ.ணின் மாமனார் & மாமியார் போடியைச் சேர்ந்தவர்கள்னு சொல்லி இருக்காங்க. என்னோட கதையும் அதேதான்.எங்க மாமியாரைத் தெரியுமான்னு அவுங்ககிட்டே கேட்டேன். ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாங்க. க.பெ.ணின் மாமனாரும், என் மாமியாரும் கஸின்ஸ்! பெரியம்மா பொண்ணும், சின்னம்மா பையனுமாம்! போச்சுரா........


பழைய போட்டோக்கள் அடங்கிய பெட்டி வெளியே வந்துச்சு. க.பெ.வின் கல்யாணத்துலே என் சிறிய மச்சினர்தான் மாப்பிள்ளைத் தோழன். தேவுடா.......... அப்ப, நான் இந்த பிப்ரவரி மாசம் போடியில் ஒரு கல்யாணத்துக்குப் போனேனே,அதுக்கு க.பெ.ணின் மா& மா வந்திருந்தாங்களா? ஆமாம்ங்கறாங்க. என்னைப் பார்த்தீங்களா? திரும்ப ஆமாம். முதல்முறையா நூத்துக்கணக்கான உறவுகளைச் சந்திச்சதில் எனக்குத்தான் இவுங்களைப் பார்த்த ஞாபகம் இல்லை. க.பெ.சொன்னாங்க, 'ஆமாங்க்கா. உங்களைப் பார்த்துட்டு வந்து என்ன சொன்னாங்க தெரியுமா? 'சேட்டுப் பொம்பளை' மாதிரிஇருக்கீங்கன்னு!' ( அதான் விழுந்துட்டான்!!!!) ஐய்யோ........ இது பாராட்டா இல்லே வேறயா?


வெளியே திண்ணை(?)யில் உக்காந்து அரட்டை. இப்ப நானும் ஸ்ரேயாவும் மட்டும். உள்ளெ இருந்து அழைப்பு.போய்ப் பார்த்தால் அடுப்பில் பணியாரம் வெந்துக்கிட்டு இருக்கு. ரெண்டுவகை தொட்டுக்கறதுக்கு. சட்னி & ஒரு வகை இனிப்புஸிரப். ஸ்ரேயா இப்ப எல்லா வீக் எண்டும் இங்கே வந்துடறாங்களாம். 'ச்சும்மா வந்துட்டுப் போகாம, சந்தர்ப்பம் கிடைச்சதுன்னு தமிழ்நாட்டுச் சமையல் கத்துக்குங்கோ'ன்னு சொன்னேன். அப்புறம் கற்ற வித்தையைக் காமிக்க,இங்கே நம்ம வீட்டுக்கு வந்து தங்கி ஒரு வாரம் ஆக்கிப் போடலாமுல்லே:-))


ராத்திரி ஒம்போது மணி ரயிலைப் பிடிச்சு டவுன் ஹாலில் இறங்கி, குவீன் விக்டோரியா பில்டிங் சுரங்கவழியாஅறைக்கு வந்து சேர்ந்தப்ப மணி பத்தைத் தாண்டி இருந்துச்சு. நாளைக்கு நம்ம வெங்கடேசனைப் பார்க்கப் போறதாத் திட்டம் போட்டாச்சு. காலையிலே 10.50 ரயிலப் புடிச்சு 'வாட்டர் ஃபால்ஸ்' லே இறங்கணும். கைவசம் இருப்பது 12 மணி நேரம். குட் நைட்.


ஆங்...... சொல்ல மறந்துட்டேனே...க.பெ. வீட்டுலே நம்ம வீடு போலவே எங்கெங்கும் யானைஸ் & புள்ளையார்ஸ்.எனக்கு வச்சுக் கொடுத்ததும் ஒரு யானைதான். அருமை. கசங்காமத் தூக்கிக்கிட்டு வந்தேன்.


தொடரும்......

27 comments:

said...

டீச்சர், கோயில்ல நீங்க வறீங்கன்னு முன்னமே தெரியுமா? தக்காளி குழம்பு 'காலி' ஆகிடிச்சு!

நல்லா சாப்பிட்டீங்க, நல்லா வம்படிச்சீங்க. வேற என்ன?

said...

வாங்க கொத்ஸ்.

வழக்கம்போல க்ளாஸ் லீடர் ஆஜர்.

ஆமா, வலைமாநாடுன்னா வேற என்னன்னு நினைச்சீங்க?:-))))

பி.கு: எனக்குத் தக்காளிக்குழம்பு பிடிக்காது.

said...

"நீங்கள் எல்லாம் ஆச்சரியப்பட்டுப் போகும்வகையில் பேச்சு. ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி நாங்க யாருமே யோசிக்கவும் இல்லை பேசவும் இல்லை. (அதுவே எனக்கு இதை இப்ப எழுதும்போதுதான் ஞாபகம் வருது)"
அதானே, அந்த விஷயம்தான் முடிஞ்சுப் போச்சே. அதைப் பத்தி ஏன் பேசணும்? நீங்க செஞ்சதுதான் சரி.

பை தி வே, மெதுவடையும் போண்டாவும் ஒரே ஜாதிதான். ஷேப் மட்டும் வேறு வேறு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

வாங்க டோண்டு.

மெதுவடையும் போண்டாவும்தான் ஒண்ணு. மசால்வடைக்கு பருப்பு வேற:-))))

வெங்காயவடைதான் சூப்பரா இருந்துச்சு. பேசாம அதுக்குத் தாவிறலாமான்னு ஒரு யோசனை:-)

பதிவு எழுதும்போது உங்களை நினைச்சேன்.

said...

இன்றைக்குத்தான் நம்ம வடைப்பதிவு சந்திப்பு கண்டேன்:-) பின்றீங்க போங்க

said...

எங்கெங்கு காணினும் யானையடா-தம்பி
ஏழுகடல் அவன் வண்ணமடா
(யாரோட பாட்ட உல்டா பண்ணியிருக்கேன்,சொல்லுங்க?)

said...

வாங்க பிரபா.

எதையாவது விட்டுட்டேனா?

உங்க படங்கள் எதையும் போடாம இருக்கேன். அனுமதி உண்டான்னு தெரியலையே.

என்ன சொல்றீங்க?

said...

வணக்கம் துளசிம்மா

வலைப்பதிவாளர் ஒவ்வொருத்தரின் குணாதிசியம் பற்றி எழுதறதா இருந்தீங்களே, என்னாச்சு.
என் படம் போடுறது பிரச்சனையில்லை, மத்தவங்க எப்படி:-))

said...

வாங்க சிஜி.

முண்டாசோட தாசனின் வரிகள்.

வந்துக்கிட்டு இருக்காராம் உங்களை ஒரு கை பார்க்க:-)))))

ஏழுகடல் அவள் வண்ணமடா.......

Anonymous said...

அஹா போடியில் ஒரு சேட்டு பெம்பளயா? நடத்துங்க நடத்துங்க.

said...

பிரபா,

அதான் எல்லாரையும் ஒரு வார்த்தை கேட்டுக்கணும்.

நேரில் சந்திச்சப்பக் கேக்காம கோட்டை விட்டுட்டேன்.

அதான் அடக்கி வாசிச்சுக்கிட்டு இருக்கேனாக்கும்:-)))))

said...

சுரேஷூ,

சேட்டுங்க இல்லாத ஊரே தமிழ்நாட்டுலே இல்லையாமே:-))))

அவ்வளோ 'மார்வாடி கடைகள்' இருக்கு.

மக்கள் வாழ்க்கை நிலை இன்னும் முன்னேறலைன்றதுக்கு இதுவும் ஒரு அடையாளம்(-:

said...

சேட்டுப் பொம்பளையா?:-0))))))))))))))))))
நீங்களா?
அய்யோடி.
இந்தக் கதையை நீங்க எழுதிதான் ஆகணும்.
போடிக்கதை.
பதிவாளர் மீட்டிங்ல பாய்கள் போட்டு உக்காந்து டிஸ்கஸ் பண்ணுவாங்கனு நினைச்சென். அப்படி இல்லையா.
ப்ராண்ட வசதி இல்லாம போச்சே.
மினிட்ஸ் எடுத்து மீட்டிங் பத்திப் போடவேண்டாமா. ஒரே வடை,கோயில்னு வருதே.
எல்லாம் அங்கே வரமுடியாத ஆதங்கம்தான் மேலே உள்ள வார்த்தைகள்.:-)

said...

// இவுங்க மூணுபேரைப் பத்துன ஒரு உண்மை: (ஜவ்வரிப்) பாயாசம் பிடிக்காது. //

என்னது ஜவ்வரிசிப் பாயாசம் பிடிக்காதா!!!!!!! இவங்க பாக்க வேண்டிய படம் டௌரி கல்யாணம். கிஷ்மூவோட...முந்திரிப்பருப்பு முழுசு முழுசா போட்ட ஜவ்வரிசிப் பாயாசம்........

டீச்சர்....மூனுநாள் ஊர்சுற்றல்ல இருந்ததால பள்ளிகூடத்துக்கு வரமுடியலை. தீபாவளிக்குப் பள்ளிகூடம் லீவுன்னு ஊருக்குப் போயிட்டேன் டீச்சர்.

said...

வாங்க வல்லி.
இப்படி வடைக்கும், கோயிலுக்குமே உணர்ச்சி வசப்பட்டுட்டா எப்படி? இன்னும் வருதேம்மா...:-)))))

said...

ராகவன்,

தீபாவளிக் கொண்டாட்டம் நல்லா நடந்ததா? மூணூ நாள் எங்கெங்கே போனீங்க?
சிட்னி முருகனைப் பார்த்தப்ப உங்களை நினைச்சுக்கிட்டேன். உங்க இஷ்ட தெய்வம்
முருகன்னு அங்கெ நம்ம வலைஞர்கள்கிட்டேயும் கோபாலுக்கும் சொல்லவும் சொன்னேன்.
இதுக்கு அந்த முருகனே சாட்சி:-))))

நம்ம பள்ளிக்கூடமும் 3 நாள் லீவுதான். சும்மா நான் தான்
எட்டிப் பார்த்துட்டு எழுதிவச்சுட்டுப் போனேன்.

'இந்த'ப் பாயசத்துலே முந்திரியைப் பார்த்தா ஞாபகம் இல்லையே...............
பைனாப்பிள் போட்டுருந்தாங்க போல. இல்லேன்னா பைனாப்பிள் எஸன்ஸ் போட்டுருக்கலாம்.
வாசனை வந்துச்சு.

said...

ஆடவரணியைப் புறக்கணித்து மகளிரணி மட்டுமே பணியாரத்தை ரசித்து உண்டதை வன்மையாக கண்டிக்கிறேன்...அப்படின்னு எழுதலாமான்னு தான் தோனுது! மவனே, ஒனக்கு வடை, பக்கோடா, மசாலா டீ யே அதிகம் இதுல பணியாரம் வேற கேக்குதான்னு கேட்டுடுவீங்களோன்னு பயந்து நா அப்பீட்டு...

பதிவரோட குணாதிசயங்களா?... (ஐ ரோலிங்)

பாயாசம் பிடிக்காதுன்னு இல்ல...ஆனா பிடிக்கும்னும் சொல்ல முடியாது... (ஐ ரோலிங்)

said...

பிளாக் ஸ்பாட்டில் படம் போடுவதே கஷ்டம் தான்.இந்த வரிகள் சற்று குழப்பமாக இருக்கிறது.போட்டோ பக்கெட் என்பதற்கு பதில் அப்படி மாறிவிட்டதா?
கொஞ்சம் பாருங்க!!

said...

ஏங்க டீக்கடைக்காரரே,

உங்க கடையிலே பணியாரம் இல்லீங்களா? :-))))

போட்டும், அடுத்த மாநாடு பணியாரத்துக்காகவே கூட்டிறலாம்.
பணியாரச்சட்டி எங்கே கடன் வாங்கலாம்ன்ற வரையில் விவரம் சேகரிச்சாச்சு:-))))

said...

இல்லீங்ககுமார். ப்ளொக் ஸ்பாட்தான்.
இதுலே பல சமயங்களில் படங்களை வலை ஏத்திட்டு அப்லோடு ஆகும்முன்னு நிறைய நேரம் உக்காந்திருப்பேன். ஆற அமறச் சொல்லும்,'திஸ் பேஜ் கேனாட் பி டிஸ்ப்லேய்ட்'னு சொல்லிரும்.

ஒரே ஒரு படமுன்னா சரின்னுரும். அதிகப்பட்சம் 5 படமாம். இன்னிக்குக்கூட 5 படம் போட்டு முடியாம மூணாவது முறை 4 போட்டேன். வந்துச்சு.

said...

ம்ம்.. நடத்துங்க :0)
இதுவரை க.பெ உள்ளத்தால் தோழி. இனி உறவாலுமா ? அவங்க இருப்பது மும்பையின் மாதுங்கா போலவோ ?

மெதுவடை, போண்டா என் பங்கிற்கு.. மைசூர் போண்டாதான் மெதுவடைக்கு சரிநிகர். உருளைபோண்டாவிடம் அதன் ஜம்பம் பலிக்காது.இங்கு வடாபாவ் என்றால் ரொட்டியின் உள்ளே இருப்பது ஆலுபோண்டாதான்.

said...

வாங்க மணியன்.

சரியாப் பிடிச்சீங்க. மும்பை & மாதுங்காதான். ஆனா அவ்வளவு கூட்டம் இல்லை:-)

பட்டடா வடாவை மறந்துட்டீங்களா? நாங்க பூனாவுலே இருந்தப்ப பாவ்பாஜி, வடாபாவ்,
பேல் & பானி பூரிகள், கச்சோரி, சாபுதானா வடா & கிச்சடிகள் எல்லாம் வெட்டியிருக்கோம்:-))))
திரும்ப ஞாபகப்படுத்துனதுக்கு நன்றி. கபர்தார்.......... அதைப்பத்தியும் பதிவுகள் வரலாம்:-))))

said...

வைசா,

காசிக்குப் போனால் பிடிச்சதைத்தான் விடணுமாம்.
இப்ப அதை மாத்திட்டாங்களா?

ஹை... அப்ப நான் தக்காளிக்குழம்பு விட்டுடவா?

அப்படியே பாவக்காயையும் விட்டுருவேன்:-)))

said...

டீச்சர், உங்களுக்கே இது நியாயமா? உங்க கூட்டத்தில் மட்டும் வடை, பாயாசம், பணியாரம்....
ஆனா வகுப்புக்கு வரும் போது மட்டும் கைவீசிக்கினு வந்துடுவீங்க!
வகுப்பில் உள்ள எங்களுக்கு எல்லாம் ஒரு வடை கண்ணுல காட்டி இருக்கீங்களா?(ஃபோட்டோவில் காட்டியது எல்லாம் கணக்குல வராது...ஆமாம்)

//சேட்டுப் பொம்பளையா?:-//

அச்சச்சோ! டீச்சர் நம்பள்க்கி நும்பள் வடை குடுக்காட்டியும் பரவாயில்லை. தமிழ்மணம் விட்டு ஹிந்திமணம் போய்டாதீங்கோ மேம்சாப்! :-)))

said...

KRS,இந்த 'ஹிந்தி மணம்' ஐடியா நல்லா இருக்கேப்பா. கைவசம் 'பராஹா' இருக்க நமக்கென்ன மனக்கவலை?

தனி மடலா ரெண்டாவது? கவனிக்காம போட்டுட்டு டிலீட் பண்ணினேன்.

அந்த டெக்னிக்கைச் சொல்லித்தாங்க.

நானும் 'கோல்மால் டீம் 'மெம்பராயாச்சு:-))))

வடையைக் கவலை வேணாம். பருப்பு ஊறவச்சாச்சு:-))))

said...

//க.பெ.சொன்னாங்க, 'ஆமாங்க்கா. உங்களைப் பார்த்துட்டு வந்து என்ன சொன்னாங்க தெரியுமா? 'சேட்டுப் பொம்பளை' மாதிரிஇருக்கீங்கன்னு!' ( அதான் விழுந்துட்டான்!!!!) ஐய்யோ........ இது பாராட்டா இல்லே வேறயா?//

செம காமெடி. பயங்கரமா சிரிச்சேன். ஜாலியா எழுதிருக்கீங்க. நேரா போய் பாக்குற ஒரு உணர்வு கெடச்சது.
:)

said...

வாங்க கைப்புள்ளெ.

சுகமா இருக்கீங்களா?

இந்த 'சேட்டு' விஷயம் அப்ப எனக்குத் தெரியாமப் போச்சுங்க.
அது மட்டும் தெரிஞ்சுருந்தா, எது கேட்டாலும் ஹிந்தியிலேயே
பேசிக் கலாய்ச்சிருக்கலாம்:-)))))