Monday, August 15, 2011

பாகம் பிரிச்சதில் கிடைச்ச பதினெட்டு கைகள்!........... (ராஜஸ்தான் பயணத்தொடர் 40)

தகப்பன் சொத்துலே எல்லாப் பிள்ளைகளுக்கும் பங்கு இருக்கும்போது 'எனக்கேன் ஒன்னுமே கொடுக்கலை'ன்னு ராஜா ராவ் பிகாவுக்குக் கோபம். நேராக் கிளம்பி ஜோத்பூர் போனார். 'அதான் உனக்குன்னு தனியா அரசாள இடம் கொடுத்தாச்சே'. இன்னும் இங்கிருந்து என்ன கொடுக்கனுமுன்னு 'அண்ணன்' கேட்டார்.

ராத்தோடு வம்சத்துக்கு ஏகப்பட்ட சமாச்சாரங்கள் வம்சாவளியா வருதுல்லே அதுலே இருந்து எனக்குச் சேரவேண்டிய பங்கைக்கொடுன்னு சின்னதா ஒரு 'குடுமி பிடி' சண்டை. ராஜா ராவ் பிகாவுக்கு முன் தலைமுறைகளில் அண்ணந்தம்பி எத்தனைபேர் அரசகுடும்ப வாரிசுகளா லைன்கட்டி இருந்தாலும் மூத்தவருக்கே பட்டம். மத்தவங்க எல்லாம் ராஜாங்க காரியங்களில் மூத்தவருக்கு உதவும் இளவரசர்கள்தான் கடைசி வரை. இந்த நியமத்தை உடைச்சு வெளியேறி தனி ராஜ்யம் அமைச்சுக்கிட்ட ராஜா பீகாவுக்கு 'தன் வழி தனி வழி' கொள்கை.

கொண்டுவாங்க 'குடும்பச் சொத்துப் பட்டியலை'ன்னதும் எல்லோரும் உக்கார்ந்து பேசி ராவ் பிகாவுக்கு பதினாலு பொக்கிஷங்கள் கிடைச்சது. அதுலே ஒன்னு இவுங்க 'குல்தெய்வமா' வச்சு வழிபடும் அம்மன் சிலை. பதினெட்டு கைகள், ஒவ்வொன்னிலும் விதவிதமான ஆயுதங்கள். இனி எதிரிகளைக் கண்டு பயப்படவே வேணாம். அதான் இருக்கே பதினெண்வகை:-)

சாமியோடு தன் பிகானீர் கோட்டைக்குத் திரும்பிய ராஜா ராவ் பிகா, கோட்டைக்குள்ளே சிலையை வச்சு வழிபட ஆரம்பிச்சார். கோட்டை கட்டும் வேலைகள் முடிஞ்சு அதைச் சுத்தி நகரை நிர்மாணிக்க 1488 வது வருசம் ஒரு இடத்துலே பூஜை செஞ்சு அஸ்திவாரம் தோண்டினாங்க. சாமிக்கு முன்னுரிமை என்ற கணக்கில் அந்த இடத்துலே முதல்முதலா ஒரு கோவில் நிர்மாணம். ஸ்ரீ லக்ஷ்மிநாத்ஜி கோவில்.

இப்போ நாம் நின்னுக்கிட்டு இருக்கும் கோவிலில் சாமியைக் கும்பிட்டுக்கிட்டு அப்புறமா லக்ஷ்மிநாத்ஜியைப் பார்க்கலாம். சரியா?

ராஜபுத்திரர்கள் நாட்டில் நவராத்ரி ரொம்பவே விசேஷம். வருசத்துக்கு நாலுமுறை கொண்டாடுவாங்க. நகரம் நிர்மாணமாகி மக்கள் குடியேறிய பின்பு நவராத்ரி சமயங்களில் பதினெட்டுகைகள் அம்மனை தரிசிக்க மக்களைக் கோட்டைக்குள் அனுமதிச்சுக்கிட்டு இருந்தாங்க. மன்னர் ராய் சிங்ஜி காலத்துலே (பதினாறாம் நூற்றாண்டு) பவன்புரின்னு இப்போ குறிப்பிடும் இந்த ஏரியாவில் இருக்கும் சின்னக்குன்று ஒன்னில் புதுக்கோவிலைக் கட்டி அம்மனை இங்கே குடியேற்றிட்டாங்க. அரண்மனைக்கு வந்து கூட்டம் போடாம மலை மேலே ஏறிக் கும்பிட்டுக்குங்க மக்கள்ஸ்!

அம்மனுக்குப் பெயர் நாக்னேச்சி ஜி மாதா.(Nagnechi Ji Mata) நாம் போன சமயம் சைத்ர மாசத்தில் வரும் நவராத்ரி உற்சவம் நடப்பதால் பயங்கரக் கூட்டம் அங்கே. பிரமாண்டமான பந்தல் போட்டுத்திருவிழா நடக்குது. முக்கால்வாசிக் கூட்டம் பந்தலில் மொய்ப்பதால் நாம் நிம்மதியாப் படிகளேறிப் போனோம். கோவில் வாசல்
சிவனுக்கு ஒரு தனிச்சந்நிதி, சாமுண்டிக்கு ஒரு தனிச்சந்நிதி, யாகசாலைன்னு அங்கங்கே கட்டி இருக்காங்க. பார்வையை ஓட்டிக்கிட்டே நாம் நேரா மூலவரைத் தரிசிக்க மேலே போனோம். சக்தி வழிபாடு! அஞ்சு நிமிசக் காத்திருப்பு.

ஜிலுஜிலுன்னு ஜொலிக்கும் பளபள அலங்காரத்தில் மா(த்)தா, அஞ்சாறு படியேறி கருவறைக்கு முன்வரை போகலாம். உயரமான இடம் என்பதால் வரிசையில் நிக்க கோவில் முன்மண்டபத்தில் நுழையும்போதே அம்மன் கண்ணில் படுகின்றாள். சின்ன சிலைதான். ஒன்னரை அடி இருக்கலாம். தலையில் உள்ள க்ரீடத்தால் ரெண்டடி உசரமா காட்சி கொடுத்தாள். நல்லபடி தரிசனம் ஆச்சு. கருவறையைச் சுற்றி வலம்கூட வரும் வகையில் கட்டி இருக்காங்க. சிகப்புக் கற்களும் வெண்பளிங்குக் கற்களுமா ஜெய்ஸல்மீரில் இருந்து கொண்டு வந்தாங்களாம். இந்தச் சிகப்புக் கற்கள் பளிங்கைவிட விலை உயர்ந்தது. மூணே வருசத்தில் கட்டி முடிச்சுருக்காங்க. கருவறைக்கு மேல் வடக்கு வழக்கத்தின்படி கூம்புக் கோபுரமும் கொடியுமா இருக்கு.(படம் எடுக்கத் தடை) சிங்கவாஹினியைச் 'சுட்டு'ப்போட்டுருக்கேன் பாருங்க.
அடுத்த கோவிலா நாம் போனது ஸ்ரீ லக்ஷ்மிநாத் ஜியைத் தரிசிக்க, பெரிய கோட்டை வாசலுக்கு வெளியில் ஆட்டோவை நிறுத்திட்டு நீங்க போய் பார்த்துட்டு வாங்கன்னார் ஆட்டோக்காரர். சதசதன்னு ஈரமா இருக்கும் கொஞ்சம் இருட்டான வழியில் போறோம். இதுக்குத்தான் ஒரு ஊரில் ரெண்டு நாள் தங்கணும் என்றது. பகலில் நின்னு நிதானமாப் பார்க்க வேண்டிய இடங்களைத் தட்டுத் தடுமாறிப் பார்ப்பதால் என்ன சுகம்? இந்தக் கோவிலுக்குப் பக்கத்துலே இருக்கும் ஒரு குன்றில்தான் ( Bhandeshwar and Sandheswar jain Temple) பந்தேஷ்வர் & சந்தேஷ்வர் என்ற அண்ணந்தம்பிகளால் கட்டப்பட்ட கோவில் இருக்கு. சமணர்களின் இருபத்தி மூணாவது தீர்த்தங்கரர் பர்ஸ்வநாத் ஜி மூலவராகவும், அட்டகாசமான வேலைப்பாடுகளுடன் அலங்காரத்தூண்களால் நிறைஞ்ச கோவிலாம். நம்ம அதிர்ஷ்டம் பாருங்க இப்போ பழுது பார்க்கும் வேலைக்காகக் கோவிலை மூடி இருக்காங்களாம். தலையை உசத்திப் பார்த்தால் இருளில் கோபுரம் மசமசன்னு நிக்குது.
இருட்டில் ஜெயின் மந்திர் கோபுரம்:(
பகலில் அதே ஜெயின் கோவில் கோபுரம்
ஜெயின் கோவில் உள்ளே இப்படி(யாம்) சுட்டது.

லக்ஷ்மிநாதனையாவது பார்க்கலாமுன்னு இன்னும் கொஞ்சம் உள்ளே நடந்ததும் இடதுபக்கம் பளீர்ன்னு வெளிச்சம். சின்னக் கடைவீதிபோல் கடைகளால் நிறைஞ்ச பகுதி. அங்கே இடதுபக்கமா ஸ்ரீ லக்ஷ்மிநாத் கோவில் வாசல். வெள்ளை மண்டபம் போல் இருக்கு. படிகள் ஏறி உள்ளே போனால் விசாலமான முற்றம். சின்னச்சின்னதா சந்நிதிகள். ஸ்ரீ பத்ரிநாராயணர், ஸ்ரீ நீல்கண்ட் மஹாதேவ், ஸ்ரீ ரூப்சதுர்புஜ் ஜி, ஸ்ரீ சூர்யநாராயண், ஸ்ரீ மஹாவித்யான்னு எல்லாமே பளிச்சுன்னு படு சுத்தம்.
ஸ்ரீ லக்ஷ்மிநாத் கோவில் வாசல்


மஹாராஜா ராவ் லுனகரன் ஆட்சி காலத்தில் 1504 இல் கட்ட ஆரம்பிச்சு 1526 இல் முடிச்சுருக்காங்க. எதுக்காக இந்த 22 வருசம் எடுத்துக்கிட்டாங்கன்னு தெரியலை:(

நம்ம திருவனந்தபுரம் ராஜாக்கள் ஸ்ரீ பத்மநாபதாஸான்னு அனந்தபத்மநாபனின் பிரதிநிதிகளா ஆட்சி செய்வதுபோல் இங்கேயும் பிகானிர் ராஜாக்கள் மஹாவிஷ்ணுவை அரியாசனத்தில் இருத்தி விஷ்ணுதாசர்களா அவுங்க பகுதியை ஆட்சி செய்றாங்களாம். கருவறையின் உள்ளே சதுர மேடையில் ஒன்னரை அடி உயரமே இருக்கும் விஷ்ணுவும் லக்ஷ்மியும் ஒருவரை ஒருவர் தழுவிப்பிடித்தபடி இருக்கும் அழகான சிலை. வைஷ்ணவ சம்ப்ரதாயப்படி பூஜைகளும் நிவேதனங்களும் நாளுக்கு நாலு தடவை ஆரத்தியுமா நடத்தறாங்க.

நாம் கருவறைக்கு முன்னே போய் நின்னு தரிசனம் முடிச்சு முன்மண்டபத்துலே ஒரு ஓரமா உக்கார்ந்தோம். பெருமாளின் அழகை மனசுக்குள் இழுக்க ஆரம்பிச்ச ரெண்டாவது நிமிஷம் சட்ன்னு திரை போட்டுட்டாங்க! பக்தர்கள் பஜனை பாடிக்கிட்டு இருந்தாங்க. சாமி சாப்பிடப்போகுது! சரின்னு எழுந்து ஒரு எட்டு வைக்கும்போதே ஆரஞ்சு அணிஞ்ச பண்டிட் ஒருத்தர் பதற்றமான குரலில் அந்தப் பக்கம் போங்கன்னு கை காமிக்கிறார். நாமும் சாமிகூடவே உக்கார்ந்து சாப்பிடப்போறோமுன்னு நினைச்சுட்டார் போல! கோவில் நிர்வாகம் எந்தப்பிரிவு வைஷ்ணவர்கள்ன்னு தெரியலை!

கோவிலின் உள்முற்றத்தை வலம்வந்துட்டுக் கிளம்பினோம். கடைவீதிக்குப்போய் கொஞ்சம் வளையல்கள் வாங்கிக்கலாமுன்னு ஆட்டோக்காரரிடம் கடைகள் பகுதிக்குக் கொண்டு போங்கன்னால்....... அடிச்சுவிரட்டி ஓட்டிக்கிட்டுப் போனார். சின்னச் சந்தா இருக்கும் கடைவீதிகளில் வளையல் கடைகளா ஒன்னுமே கண்ணுலே படலை. பாத்திரக்கடைகள்தான் எல்லாமே! கோபாலுக்கு (மனசுக்குள்) மகிழ்ச்சி. கண்ணுலே ஒன்னும் படலையேம்மான்னு குரலில் சோகத்தை வரவழைச்சுக்கிட்டுச் சொன்னதும்.......பேசாம ஹொட்டேலுக்கேப் போகலாமுன்னு ஆகிருச்சு.

'ஆட்டோக்காரர் சொன்ன கெடு வந்துருச்சே'ன்னால்..... ஹொட்டேலுக்குன்னா நானே கொண்டுபோய் விட்டுடறேன்னு சொல்லி எட்டு நாப்பதுக்கு சவாரியை முடிச்சுக்கிட்டார்.

ரூம்சர்வீஸ்லே சாப்பாட்டை வாங்கி உள்ளே தள்ளிட்டுப் படுக்கையில் விழுந்தோம்:-)

தொடரும்.............:-)

PIN குறிப்பு: அடுத்த பகுதியில் பயணம் நிறைவு பெறுகிறது.

10 comments:

said...

அட பதினெட்டு கைகளா கிடைச்சது... கூடவே ஆயுதங்களும் இல்லையா... :)

அட அடுத்த பகுதியில் முடியப்போகுதா ராஜஸ்தான் பயணத்தொடர்... :(

said...

எல்லாக்காலங்கள்லயும் உடன்பிறப்புகளுக்கிடையே பகைமூட்டுவது பணம்தான், அதுக்குமுன்னால பாசம் தோத்துப்போயிடறது வேதனை..

மொத்தமா கேக்கவேணாம்ன்னு முதல் தவணையா வளையல் கேட்டதுக்கா நிம்மதிப்பெருமூச்சு :-))). அப்ப கிரீடம், ஒட்டியாணமெல்லாம் கேட்டா?.....

கோயிலும் மாத்தாவும் ரொம்ப அழகு.

said...

இருள் என்றாலே கோபுரத்துக்கும் பயம் வந்திடும்போல அழுதிட்டே இருக்கு :) பகலில் நல்லா ஒளிர்கிறது.

தாமதமான வருகை... நலமின்மை... விடுபட்டவற்றைப் படிக்கின்றேன்.

said...

ஜெயின் கோயில் ரொம்ப அழகா இருக்கு..

என்ன சோகமா முகத்தை வச்சிக்கிட்டு கண்ணுல படலன்னாங்களா.. ம்.. எல்லாம் பயங்கரமான ஆளா இருக்காங்களே..:)

said...

அழகான பயனங்கள் :)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

பதினெண்வகை இருந்தால் யாருக்குமே பயப்படவேணாம். வெற்றியோ வெற்றிதான் இல்லையா!!!

கூடவே பயணிச்சதுக்கு நன்றி.

said...

வாங்க அமைதிச்சாரல்.

அதுதான்........பணமா? பாசமா?

ஆஹா.... உங்க 'அண்ணனுக்கு' ஏன் இப்படின்னு இப்போ புரிஞ்சு போச்சு.

தங்கமாக் கேக்கலைன்னு மனவருத்தமாகிட்டார்:-))))

said...

வாங்க மாதேவி.

அடடா.... உடம்பு சரியில்லையா? கவனிச்சுக்குங்கப்பா.

துளசிதளம் எங்கே போயிடப்போகுது?

said...

வாங்க கயலு.

உண்மைதானப்பா. சொன்னா நம்புங்க:-) மனிதருக்குள் எத்தனை முகங்கள்!!!! என்ற ஈற்றடி வருமாறு கவிதை ஒன்னு எழுதுங்க.

said...

வாங்க சாய் பிரசாத்.

ரசிப்புக்கு என் நன்றிகள்.