Monday, November 05, 2018

ஊர் முழுக்க மஸாலா ! Spice Garden Tour !!!!!! (பயணத்தொடர், பகுதி 29 )

சின்ன ஓய்வுக்குப்பிறகு கிளம்பிப்போனது ஒரு மஸாலா தோட்டத்துக்கு!    அங்கேயும் ஹோம் ஸ்டே இருக்கு. அதே சமயம் வெளிஆட்களையும் கூட்டிப்போய் தோட்டத்தைச் சுத்திக் காமிப்பாங்களாம்.  'நம்மவர்' இருக்காரே......  ஹாலிடேன்னு கொஞ்சம் நிம்மதியா இருக்க விடமாட்டார்.  என்னென்ன இருக்கு, எதையெதை நான் கட்டாயம் பார்க்கணும் என்றெல்லாம் பக்காவா லிஸ்ட் போட்டு வச்சுருவார்!  நம்ம பெர்ஸனல்  ட்ராவல் & டூர்  மேனேஜர்னா சும்மாவா?  :-)



ஏற்கெனவே பாலிப்பயணத்துலே ஒரு காஃபித்தோட்டம் போயிருந்தோமே நினைவிருக்கோ?  அதனால் அவ்வளவா சுவாரஸியம் இல்லாமல்தான் கிளம்பினேன்.

ஸ்பைசஸ் கார்டன்,   நம்ம 'வசதி'யில் இருந்து ஒரு நாலரை கி.மீ தூரத்தில். ஆளுக்கு நூத்தம்பது சார்ஜ்.  ஏற்கெனவே ரெண்டு மூணு கார்கள் பார்க்கிங்லே இருந்தது. இன்னொரு நாலு பேர் கொண்ட குழுவும் தோட்டத்துக்குள்ளே போய்க்கிட்டு இருந்தாங்க.   இங்கே தினமும்  பயணிகள் சுத்திப் பார்க்க வர்றாங்களாம்.  அவுங்களுக்கு வழிகாட்டியா இருந்து எல்லாத்தையும் சுத்திக் காமிக்க ஒரு ஏழெட்டு நபர்கள் வேலை செய்யறாங்க.  இதுவும்  ஒரு தொழில்தானே!

நமக்கு வழிகாட்டியா வந்த இளைஞர் பெயர் திக்ஜித்.  அசப்பில்  கேரளத்து ஆள் போல இருந்தார். ஆனால்  உள்ளூர்காரர்தானாம். கெத்து பார்த்தால்  தோட்ட ஓனரோன்னு ஒரு ஸம்சயம். ஹேய்.... அதொக்க இல்லையாக்கும். இவிடே ஜோலி எடுக்குன்ன ஆளா!
இந்த எஸ்டேட்டுகளில் எல்லாம் காஃபிதான் ப்ரதானம் என்றாலும்  இடைக்கிடையே  மத்த  பாக்கு மரங்கள், அதுலே ஏறிப்போகும் மிளகுக்கொடிகள்,  ஏலக்காய், ஜாதிக்காய்ன்னு  பலதும் போட்டுத்தான் வச்சுருக்காங்க.
ஆரம்பத்தில் கொஞ்சம் பூச்செடிகள் வரிசை.... அதைத்தாண்டி உள்ளே போனதும் காஃபி! இதுலே ஏராளமான வகைகள் இருந்தாலும் ரெண்டு வகைகளைத்தான் நாம் பயன்படுத்திக்கறோம். ரெண்டுமே குத்துச்செடிகளாத்தான்  வளருது. அதிகம் வந்தால் ஆறடி உயரம். அரபிக்காச் செடியின் இலைகள் கொஞ்சம் சின்னதாவும், ரொபஸ்ட்டா வகை இலைகள் கொஞ்சம் நீளமாவும் இருக்கு!
பொதுவா, செடிகளை நட்டு வளர்க்கும்போது, ஒரு நாலு நாலரை வருஷம் கழிச்சுத்தான் பலன் கொடுக்க ஆரம்பிக்குதாம்.  (அட! ஆமாம். நம்ம வீட்டுலே கண்ணே மணியேன்னு ஒரு காஃபிச் செடி வச்சுருந்தது யாருக்காவது ஓர்மை உண்டோ?   அதுவும் இப்படியே அஞ்சாம் வருஷம்  பூத்து நாலு காஃப்பிப் பழத்தைக் கண்ணுலே காமிச்சது.  அந்தப் பழத்தில் இருந்த விதைகளையே நட்டு வச்சேன். ஸ்வாஹா.......  அப்புறம்  ரெண்டு வருசத்துக்கு முன்னால் ஒரு காஃபிச்செடி வாங்கி வந்து  வச்சேன். அது இந்தப் பயணம் முடிஞ்சு நாங்கள் திரும்பி வந்து பார்த்தால்.....  சாமிக்கிட்டே போயிருந்துச்சு.....   ப்ச்   :-(  பார்க்கலாம் வேறொன்னு கிடைக்குமான்னு... )


சரியானபடி கவனிச்சுக்கிட்டால் அம்பது வருஷம் வரை உயிரோடு இருந்தாலும் ஒரு பதினைஞ்சு இருவது வருஷம் வரையில் நல்ல பலன் உண்டாம். ஒரு செடியில் ஏழு முதல் எட்டு கிலோ வரை காஃபிக்கொட்டைகள் கிடைக்குமாம்.    ஏப்ரல் மாசம் பூக்கத்தொடங்கினால்,  அடுத்த பத்தாவது மாசம் ஃபிப்ரவரியில் பழம் பறிச்சுடலாம்.  நல்லா நின்னு நிதானமாத்தான்  பழுக்குது இல்லே? எல்லாத்தையும் திக்ஜித்
சொல்லச் சொல்லக் கேட்டுக்கிட்டோம்.


இப்ப நாம்  ஜூன் மாசம் 28 தேதியில் பார்க்கும்போது, பிஞ்சு பிடிச்சுருக்கு செடிகளில்!  நாலு மாசத்துக்குழந்தைகள் :-)




சந்தனம், பாக்கு, ஜாதிக்காய், சாத்துக்குடின்னு அங்கங்கே மரங்கள். செம்பகம் ஒன்னு பூக்க ஆரம்பிச்சுருக்கு ! 

பலாப்பிஞ்சுகள் வேற ! 



என் கையில் காந்தாரி 

ஏலக்காய்

நம்மவர் ரத்தம் ருசியாமே!  அட்டைப்பாப்பா ஒன்னு  கவ்விப் பிடிச்சுக்கிச்சு....  கஷ்டப்பட்டுப் பிடுங்கிப் போட்டார் திக்ஜித்! 

கரம் மஸாலாவில் சேர்க்கும் பட்டை மரமும் இருக்கு. இதோட இலைகளைத்தான் நாம் பிரிஞ்சி இலை, பிரியாணி இலைன்னு சமையலில் சேர்க்கிறோம்.  நம்ம வீட்டில்  ஒரு  செடி வச்சுருக்கேன்.  மூணு  வயசாகுது.  மரமா வளர நாள் ஆகும் :-)  எனக்கு  ட்ராப்பிக்கல் செடிகள்னாவே  ரொம்பப்பிடிக்கும். நம்ம வீட்டுக் கன்ஸர்வேட்டரியில் சிலவகைகளை வச்சுருக்கேன்.  எக்ஸோடிக் ப்ளான்ட்ஸ்ன்னு ஒரு பெருமை வேற :-)

சுமார் ஒரு மணி நேரம் சுத்திப் பார்த்துட்டு வரவேற்பறைக்கு வந்தால்  ஆளுக்கொரு கப் காஃபி சுடச்சுடக் கொண்டுவந்து கொடுத்தாங்க. நம்ம தோட்டத்துலே விளைஞ்ச நம்ம காஃபி :-) நல்லாத்தான் இருந்துச்சு!
திக்ஜித்துக்கு நன்றி சொல்லி ஒரு க்ளிக் :-)

திரும்பிப்போகும் போது  குதிரையும் வீரரும் கண்ணில் பட்டாங்க. போராளி!
Guddera Appaiah was a leader during the insurgence in 1834 against the British East Indian Company.
நாங்க நேராப் போனது   அரசரின் இருக்கைக்கு :-)  ராஜா ஸீட் னு ஒரு இடம்.
இது ஒரு தோட்டம்தான். பூச்செடிகளும், செயற்கை நீரூற்றுமா இருக்கு! நல்ல உயரமான இடத்துலே இருக்கறதால்  சுத்திவர இருக்கும் மற்ற மலைகளையும், காடுகளையும், இயற்கைக் காட்சிகளையும் பார்த்து அனுபவிக்கும் வகை.  சூரிய உதயமும், அஸ்தமனமும் பார்க்கலாம். ஆனால்  சூர்யோதயம் பார்க்கும்போது எல்லாம் மசமசன்னுதான்...  எப்பவும்  லேசா மூட்டம் போட்டுக்கில்லே இருக்கு ஊரே! அதுவும் காலைநேரமுன்னா கேக்கவே வேணாம்....

அந்தக் காலத்துலே  உள்ளுர் ராஜாவும், அவர் மனைவிகளுமா இங்கே வந்து இயற்கையை ரஸிச்சுட்டுப் போவாங்களாம். அதுக்காக வச்ச பெயர்தான் இந்த ராஜா'ஸ் ஸீட் என்றது.
சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமுன்னு சொல்லிச்சொல்லி,  தகவல் பகுதியில்  & ப்ரோஷரில் போட்டு,  (ஒருமாதிரி விளம்பரமுன்னு வச்சுக்கலாம்)  இப்போ  இங்கே போகலைன்னா தெய்வக்குத்தமுன்னு ஆகிப்போச்சு:-) நாமும் போனோம்.
வாசலில் இந்த காலநிலைக்குத் தேவையான சமாச்சாரம் விற்பனை.  தீனிக் கடைகள் கூட ரெண்டாம்பட்சம்தான்! 3132
உள்ளே போக ஒரு சின்னக் கட்டணம் உண்டு. எல்லாம் பராமரிப்பு செலவுக்காகத்தானாம்.  நல்லது.  இன்னொன்னு கவனிச்சேன்.....  இந்த ஊரிலே பல இடங்களில் அதுவும் மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் ப்ளாஸ்டிக் தடை செஞ்சுருக்காங்க. இது ரொம்பவே நல்லது.  நகராட்சி ப்ளாஸ்டிக்கை ஒழிக்க இவ்வளோ முயற்சி எடுப்பது பாராட்டுக்கு உரியதே!

தோட்டத்தில் சீராக வெட்டிய புல்வெளியும்,  கரைகட்டி நிக்கும் குத்துச்செடி பார்டருமா  அழகு!  பூச்செடிகளை வளர்த்து விற்பனைக்கும் வச்சுருக்காங்க போல...
நாலுபக்கமும் திறந்த மண்டபம் ஒன்னும் இருக்கு!  அரசர் உக்கார்ந்து அனுபவிக்கும் இடம் :-)

கீழே கொஞ்சம் இறக்கத்தில் பள்ளத்தாக்கைப் பார்த்தபடி இன்னொரு அரைவட்ட அமைப்பு.   படம் எடுத்துக்க வாகான இடம் என்பதால் வர்ற கூட்டமெல்லாம் அங்கேதான்.  அவுங்களை இங்கிருந்தே க்ளிக்கியாச். எல்லாம் இது போதும்.  கீழே இறங்க வேணாமுன்னு தோணுச்சு.  மழை விடாது போல. வர்றதும் போறதுமா....

செயற்கை நீரூற்று வேலை செய்யலை. ம்யூஸிக்கல் ஃபௌன்டெய்னாம். 
பார்க்கைத் தொட்டடுத்து ஒரு கோவில்.  அங்கே போகணுமுன்னா  வெளியே போய் சுத்திக்கிட்டுப் போகணும்.....  ஒரு சின்ன கேட் இங்கே இருக்குமோன்னு தேடி, ஏமாந்தேன்.
வெளியே கேட்டுக்குப் பக்கம் சுற்றுலாத்துறை  கவுன்டர் ஒன்னும் சில பல தகவல்களுமா வச்சுருக்காங்க. பயணிகள் கூடும் இடத்துலே இப்படி வச்சுருக்கறது எனக்குப் பிடிச்சுருக்கு.  வரை படத்துலே இருக்கும் சில இடங்களுக்கு நாளைக்குப் போகலாமா?
 
இருட்ட ஆரம்பிக்குதேன்னு வசதிக்குத் திரும்பிட்டோம். ஒரு எட்டுமணிக்குக் கிளம்பிப்போய் அதே அம்பிகா உபஹாரில் ராச்சாப்பாடு ஆச்சு.  தோசையும், ஒரு ஸ்பெஷல் ஃபலூடாவும் எனக்கு :-) நம்மவருக்கு  வெங்காய தோசையும் சாத்துக்குடி ஜூஸும். அசோக் வழக்கம்போல் மூலையில்!  வெஜ். புலாவ் சாப்பிட்டார்.

நம்ம சென்னையை விட விலை மலிவுதான்.

காலையில் ஒரு எட்டுக்குக் கிளம்பிடலாம். நல்லா ஓய்வெடுத்துக்கிட்டு  ரெடியாகுங்க :-)

தொடரும்........... :-)


14 comments:

said...

ஊர் முழுக்க மசாலா ரசிக்கும்படி இருந்தது.

said...

மிக அருமை. நன்றி

said...

என்னாது... ராத்திரிச் சாப்பாட்டில் ஃபலூடாவா? ஃபலூடா பார்க்க அழகா இருக்கு.

இடங்கள், படங்கள், சிலு சிலுன்னு இருக்கு.

said...

ஆஜர் போட்டாச்

said...

இந்தக் கேள்விய முன்னமே கேக்க நினைச்சேன். இப்ப கேக்குறேன். இந்தச் சுற்றுலா உதவியாளர்கள் என்ன மொழியில் பேசுனாங்க? முழுக்க ஆங்கிலமா?

ஆக... காப்பிக் கொட்டை பிறக்கவும் பத்து மாதமாகுது. அதை பத்து நிமிடத்துல குடிச்சிர்ரோம் :)

மிளகுக் கொடியோட எலை பாக்க வெத்திலை மாதிரியே இருக்கு. காந்தாரி மிளகாய் சிறுசுன்னாலும் காரத்தில் பெருசுன்னு சொல்வாங்க.

குட்ட்ட்ட்ட்டி அட்டை. அட்டைப் பாப்பான்னு நீங்க சொன்னது அழகு.

said...

அழகான தோட்டம்.....

ஒன்றிரண்டு தேயிலை தோட்டங்கள் சென்றதுண்டு.

தொடர்கிறேன்.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

தொடர் வருகைக்கு நன்றி !

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றிகள் பல !

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

மறுநாள் காலையில் ஊரைவிட்டுக் கிளம்பிடுவோம் என்றதால் ராத்திரியில் ஃபலூடா :-)

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

நன்றி !

said...

வாங்க ஜிரா.

அங்கங்கே கிடைக்கும் வழிகாட்டிகள் சர்வீஸ்தான். தமிழ் தெரியுமான்னு முதல் கேள்வி. அடுத்த சாய்ஸ் இங்லிஷ். எல்லாம் ப்ரோக்கன் இங்லிஷ்தான். ஆனால் பேலூர் நாராயணன், அருமையாப் பேசறார், நல்ல இங்லிஷில்! கடைசி சாய்ஸ் ஹிந்தி. அதுவும் இல்லையா... மலையாளம். இப்படித்தான் போச்சு.

கலந்துகட்டிப் பேசினாலும் பிரச்சனை இல்லை. மொழி என்பது ஒருவருக்கொருவர் பேச்சு வார்த்தையில் தொடர்புகொள்ளத்தானே! புரிஞ்சால் போதும்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

தொடர்வதற்கு நன்றி! எனக்கும் வாசிக்க ஏராளமான பதிவுகள் (உங்களுடையதும்தான்) இருக்கு. இந்த பண்டிகை காலத்தால் நேரம் கிடைக்கறதில்லை. ஒரு நாலுநாள் இதுக்கே ஒதுக்கணும்!

said...

எங்கள் துளசி டீச்சருக்கும் கோபால் சாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

said...

மண் மணக்குது ...