Wednesday, November 28, 2018

கொடுப்பினை......... !!!!! (பயணத்தொடர், பகுதி 39 )

அடுத்து வந்த சில நாட்களில்  பதிவுலக நண்பர்கள் சந்திப்புதான் முக்கியம். நண்பர் அருள்நம்பியும் அவர் மனைவியும் ஸ்வீட் & காரத்தோடு நம்மை லோட்டஸில் வந்து சந்திச்சாங்க. பேச்சு சுவாரஸியத்தில் படங்கள் எடுக்கவே மறந்துட்டேன் என்பதே உண்மை. கடைசியில்  ஒரு செல்ஃபியும், சில படங்களுமா.....   குடும்பம் இருப்பதால் படங்களை இங்கே போடலை.  குறைஞ்சபட்சம் நம்மவரும் அருள்நம்பியும் இருக்கறமாதிரி ஒரு க்ளிக் எடுத்துருக்கலாம்.....ப்ச்.... விட்டுப்போச்சு.

அடடா.....  ஆள் யாருன்னு தெரியலையேன்னு உங்களுக்குத் தோணாமல் இருக்க.... :-)
மேலே படம்: ஃபைல் ஃபோட்டோ

அன்றைக்கு மாலை நாத்தனார் வீட்டுக்குப் போனோம். ஓலாவில் போகும்போது பிரச்சனை ஒன்னும் இல்லை. திரும்பி வர்றதுக்குப் புக் பண்ணிட்டுக் காத்திருக்கோம் வீட்டு வாசலில். ஒன்னையும் காணோம்.  எங்கே இருக்கீங்கன்னு கூப்பிட்டுக் கேட்டால்,  வாசலில் நிக்கிறேன்னார். எந்த வாசலில்?    தெருமுழுக்க  இருட்டு வேற !  கொஞ்சம் வண்டியின் லைட்டைப்போடுங்கன்னு சொன்னதுக்கு, விளக்கைப் போட்டார். வண்டி தெருவின் இன்னொரு கோடியில் நிக்குது!   'அந்த வீடில்லை. இந்தப் பக்கம் வரணுமு'ன்னு சொன்னதுக்கு, ஒன்னுமே சொல்லாம வண்டியைக்  கிளப்பிக்கிட்டுப் போயே போயிட்டார்.  ஓலாவால் ஏற்பட்ட சில கசப்பு அனுபவங்களில் இதுவும் ஒன்னு.

இதெல்லாம் நடந்ததுக்கு  கேன்ஸல் பண்ணோமுன்னு முப்பது ரூ பிடிச்சுக்குவாங்களாம். அடராமா.....  தங்கை ஃபோனில்தான் எல்லாம்....

அப்புறம் நாத்தனாருக்குத் தெரிஞ்ச  இன்னொரு ஆட்டோ சர்வீஸைக் கூப்பிட்டு, மச்சினர் வீட்டுக்குப் போயிட்டோம்.  தங்கை (மைத்துனர் மனைவி) எங்களுடன் கூடவே இருந்ததால்  அங்கே போய் சாப்பாட்டை முடிச்சுக்கிட்டுப் போக ஒரு திட்டம்.
தங்கை வீட்டின் புதுவரவு என்னோட ஃப்ரண்ட் ஆனது சுவாரஸ்யம்.  அவள் பெயர் ஜின்னா :-)என்னைப் பார்த்தால் அவளுக்கும் பிடிச்சுப்போச்சு. தலைப்பூவை ஒன்னு விடாமல் தின்னு பார்க்கணுமாம்!

அங்கிருந்து லோட்டஸ் திரும்பி வர திரும்பவும் ஓலா கூப்பிட்டது நம்மவர் செல்லில் இருந்து என்பதால் அதில் ஒன்னும் பிரச்சனை இல்லை. நம்ம சீனிவாசன் இல்லாமல் போன கஷ்டம் தினமுமே  இருந்துக்கிட்டு இருக்கு.

மறுநாள்  நம்மவருக்கு, ரங்கநாதன் தெருவை தரிசனம் பண்ணி வைக்கலாமேன்னு தோணுச்சு.  முதலில் பெயரைச் சொன்னதும் நடுங்கிட்டார்.  மகள் கேட்ட சில பொருட்கள் அங்கேதான் கிடைக்குமுன்னு ஒரு கொக்கி போட்டு இழுத்துக்கிட்டுப் போனேன்.

தி.நகர் ஏரியாவுக்குள் சுத்தணுமுன்னா ஆட்டோ தான் சரி. பொதுவா  லோட்டஸ் வாசலுக்கு அந்தாண்டை ரெண்டுமூணு ஆட்டோஸ் எப்பவும்  காத்து நிற்கும். அதுவும் அந்தாண்டை திரும்பி நின்னுதான். ஆனாலும்  நாம் யாராவது லோட்டஸ் வாசலுக்கு வந்து  நின்னால் போதும், சர்னு வட்டம்போட்டு நம்மாண்டை கொண்டுவந்து நிறுத்திடுவாங்க. எப்படிப் பார்க்கறாங்க?  ரியர் வியூ மிர்ரர்?

இதுலே பாருங்க...  ஒரு கஸ்டமரை அவுங்களே தத்து எடுத்துப்பாங்க போல.....  ஒரு குறிப்பிட்ட ஆட்டோக்காரர்தான் எங்களுக்குக் கிடைச்சுக்கிட்டே இருந்தார், வேற வண்டிகள் இருந்தாலும் கூட! வாடிக்கையா அவுங்க வண்டியிலே போகும் வாடிக்கையாளர்கள்!

சென்னை வழக்கப்படி (அதான் மீட்டரே போடமாட்டாங்களே!) வண்டியில் ஏறுமுன் எவ்வளவு ன்னு கேட்டுக்கணும். 'நீங்க ஏறுங்க ஸார்'னு பதில் வரும். அப்புறம் ஒரு சிரிப்பு. (ஆப்ட்டான்.... ஒருவன்? )  'இல்லே சொல்லுங்க..... பாண்டி பஸார், ரத்னா ஸ்டோர்ஸ், கீதா கஃபே'  இப்படி ஒரு இடம் சொன்னதும் அம்பதுன்னுவார்.  அஞ்சு நிமிஷ ரைடு.

ரங்கநாதன் தெருன்னதும், சுத்திக்கிட்டுப்போகணும்மா..... எழுவது கொடுங்கன்னுட்டு, சென்னை ஸில்க்காண்டயே நிறுத்திட்டு எதுத்தமாதிரி கை நீட்டிக் காமிச்சு அதோ  ரங்கநாதன் தெருன்னு நம்மை இறக்கி விடுவதுதான் நடக்கும்.  எதிர்வாடைக்குப் போறதுக்குள்ளே நாம் டான்ஸ் கத்துக்குவோம். பாலத்துக்கடியில் போகணும்.





அன்றைக்கென்னமோ அவ்வளவாக் கூட்டமில்லை. தரை தெரிஞ்சதே!

ச்சும்மா ஒரு வேடிக்கை. கடைகளின் முகங்கள் மாறி இருக்கு! மெயின் ரோடுக் கடைகள் மாதிரி முன்னலங்காரம்!
எழுபதுகளின் ஆரம்பத்தில் இருந்த ரங்கநாதன் தெருவை நினைச்சுப் பார்த்தது மனசு.   போகட்டும்.... காலத்தின் வளர்ச்சி.....  மக்கள் தொகை இப்ப  ரெண்டரை மடங்கு அதிகம்....
ஜெயசந்திரன் டெக்ஸ்டைல்ஸ், கேட்ட பெயர்னு அதுக்குள்ளே நுழைஞ்சோம். போட்டுப் பார்க்கலாமுன்னா, எள் கையிலே இல்லே..... ஆடித் தள்ளுபடியாம்.  குழந்தைகளும் குட்டிகளுமாப் பெரிய பெரிய கும்பல்கள் தரையில்  கொத்துக்கொத்தா உக்கார்ந்துருக்காங்க. அவுங்க குடும்ப நபர்கள்  தள்ளுபடிக்குவியல்களில் இருந்து துணிகளை உருவிக்கொண்டுவந்து அவுங்கவுங்க கும்பலுக்கு நடுவே குவிச்சுக்கிட்டு இருக்காங்க. கும்பலில் இருந்த பெரியவர்கள்,  துணிகளை எடுத்துப் பிள்ளைகள் உடம்புலே வச்சுப் பார்த்து அது யாருக்குன்னு அலாட் பண்ணறாங்க!  அட!  இது நல்லா இருக்கே!

குழந்தைகளுக்கான ஆடைகள் பிரிவுக்குப் போனோம். ஜன்னுவுக்கு ஒரு கலம்காரி கிடைச்சது. அப்புறம் மாடிக்குப்போய் புடவைத் தலைப்புக்கு வைக்கும்  குஞ்சங்கள் இத்யாதி..... மகள் கேட்ட சில சமாச்சாரங்களும்....
நம்ம முயற்சி எடுத்து நடக்கெல்லாம் வேணாம். கூட்டம் நம்மைத் தள்ளிக்கிட்டே கொண்டுபோகுது. அந்தந்த  இடத்தில் நாம்  சட்னு வெளியே  வந்துடணும்.
ஆயிரம்தலைகளைப் பார்த்தால் புண்ணியமாம்!   அளவில்லாமல் கிடைச்சது.

சரவணனுக்கும் ஜெயச்சந்திரனுக்கும்தான் போட்டி போல!  கோல்ட் வார் :-)
சாயங்காலம் ஒரு நாலரைவாக்கில் கிளம்பி நம்ம அநந்தபதுமனை தரிசிக்கப் போறோம்.   மூலவருக்கு எதிரே இருக்கும்  மேடையில் போய் உக்கார்ந்து மனம் குளிரப் பார்த்துட்டு, பிரகாரம் வலம் வந்தால் தங்கத்தேர் அலங்கரிச்சுக்கிட்டு ஜொலிக்குது!  ஆஹா....   இருந்து பார்த்துட்டே போகணும். ஆனால்  இங்கே சாயரக்ஷை பூஜை முடிஞ்சாட்டுதான் தங்கத்தேர் என்பதால் எப்படியும் ஏழுமணி ஆகிரும்.  பொடிநடையில் க்ராண்ட் ஸ்வீட்ஸ் போய் ஒரு காஃபி குடிச்சுட்டு வரலாமுன்னு போனோம்.
காம்பவுண்டுக்குள் காலடி எடுத்து வைக்கும்போதே.... 'துளசிதளம். துளசி கோபால்'னு  அசரீரி !  யார் சொல்றாங்கன்னு திரும்பிப்பார்த்தால் ...  அழகான யுவதி!  நெடுநாள் வாசகியாம்!  பின்னூட்டுனதே இல்லையாம்.... போச்சுடா...... அதான் தெரியாமப் போயிருக்கு!

அமெரிகா, லீவு, அப்பா அம்மாவைப் பார்க்க, குழந்தைகள் அம்மாகூட வீட்டுலே,ஜெட்லாக், அப்பா கூட  க்ராண்ட் ஸ்வீட்ஸ் கடை.   தந்திமொழியில் தகவல் பரிமாற்றம்.
கட்டிப்புடி வைத்தியம் ஆச்சு :-)

மனசு பூரிச்சுப்போனது உண்மை. நாலு எழுத்துக்குள்ள சக்தி இவ்வளவா?  ஆஹா..... பஜ்ஜி காஃபி முடிச்சுட்டுத் திரும்பக் கோவில்.
தேர் ரெடியா நிக்குது.  சாயரக்ஷை பூஜையும்  முடியும் நேரம்.  ச்சும்மாச் சொல்லக்கூடாது.....  மின்னும் தங்கமும், உள்ளே  ஜொலிக்கும் பெருமாளும் தாயார்களுமா  .....  காணக் கண் கோடி வேணும்! இன்றைக்குன்னு அமைஞ்சது பாருங்க..... பெருமாளே....
நாதஸ்வரம், தவில்  முழங்க மூணு சுத்து. ஒவ்வொருமுறை மூலவருக்கு முன் வரும்போதும்,   அஞ்சு நிமிட் நின்னு தீபஆரத்தி!!


வெளியே வந்து நவகிரஹ சந்நிதி சுத்திட்டு வழக்கமா உக்காரும் பெஞ்சு வரிசைக்குப்போனால்....  அந்தாண்டைக் கோடியில் இருக்கும் சிவன் சந்நிதிக்கு அம்பு போட்ட அறிவிப்பு!  புதுசா எழுதிப்போட்டுருக்காங்களேன்னு கண்ணை ஓட்டினால்.... சிவனுக்கு ஒரு புது முகப்பு, தோரணவாசல்!  அட! மண்டபம்....




இதுநாள் வரை பெயர் ஒன்னுமில்லாமல் சிவனேன்னு இருந்தவருக்கு இப்போ புதுப்பெயர்!  அருமை! ஆமா....  அரசமரத்தடி,  புள்ளையோட  பெர்மனன்ட் அட்ரஸ் இல்லையோ?
கும்பிட்டு வலம் வந்தோம்.  மரமும், சந்நிதியும், துளசியும் அப்படிக்கப்படியே!  வாசல்தான் புதுசு.  எப்போன்னு குருக்களிடம் கேட்டேன். ஒரு மாசமாச்சாம்!

திரும்ப லோட்டஸ்.

தொடரும்............ :-)


4 comments:

said...

அருமை நன்றி.

said...

ஆஹா ஒரு வாசகர் சந்திப்பும் நடந்திருக்கிறது. வாவ்.

ரங்கநாதன் தெரு - கும்பல் பார்க்கும்போதே மலைப்பு. அங்கே இதுவரை ஒரு பொருளும் வாங்கியதில்லை! அங்கே நடப்பதே பெரிய விஷயம் எனக்கு :)

said...

நடுவில் வேலையாகி பதிவுக்கு வரமுடியாமப் போனதைப் பொறுத்துக்கொள்க. :)

// ஒன்னுமே சொல்லாம வண்டியைக் கிளப்பிக்கிட்டுப் போயே போயிட்டார். ஓலாவால் ஏற்பட்ட சில கசப்பு அனுபவங்களில் இதுவும் ஒன்னு. //

எல்லாரும் அப்படியில்லைன்னாலும் ஒரு சிலர் அப்படித்தான் இருக்காங்க. ஒருமுறை இதே போலொரு குழப்பம். கஸ்டமர் சர்வீசில் சொன்ன பிறகு பணம் திரும்ப வந்துருச்சு.

// மகள் கேட்ட சில பொருட்கள் அங்கேதான் கிடைக்குமுன்னு ஒரு கொக்கி போட்டு இழுத்துக்கிட்டுப் போனேன். //
பிள்ளைகளுக்குன்னு சொன்னா பெற்றோர்கள் எதுவும் செய்வாங்க. அதுவும் நம்மூர் மக்கள். ரங்கநாதன் தெரு என்ன... இமயமலையே கூட ஏறுவாங்க. பெத்த மனம் பித்து. :)

அனந்துவைப் பாக்க வீட்டுப்பக்கம் வந்திருக்கீங்க. ஆகா... தெரியாமப் போச்சே. உங்களுக்கு கிராண்ட் சுவீட்சில் காபி வாங்கிக் கொடுக்க முடியாமப் போச்சே.

உங்க மனம் போல தேரோடிக் காட்டியிருக்காரு அனந்தர். அரசமரத்தடியில் தனியா இருந்தவரைக்கும் அந்த சிவனை ரொம்பப் பிடிக்கும். இப்போ தோரணம் மண்டபம் பக்கத்துல போக முடியாம தடுப்புன்னு வசதி வந்தப்புறம் அவர் அந்த அளவுக்கு ஈர்க்கல. சிவனுக்கு எளிமையே பெருமை.

// நாலு எழுத்துக்குள்ள சக்தி இவ்வளவா? //
எழுத்துன்னா சும்மாவா. தொல்காப்பியம் தொடங்கும் போதே எழுத்ததிகாரம்னுதான் தொடங்குது. வேற எந்தச் செம்மொழிக்கும் அந்தச் சிறப்பு கிடையாது.
உங்க எழுத்தைப் படிச்சு இரசிச்சு நேர்ல அடையாளமும் கண்டுபிடித்தமை சிறப்பு.

// பஜ்ஜி காஃபி முடிச்சுட்டுத் திரும்பக் கோவில். //
ஒருவாட்டி கிராண்ட் சுவீட்சுல பஜ்ஜி சொன்னோம். வாழக்காய்ச் சீவலை மாவுல முக்கி, அந்த மாவை சட்டி விளிம்பில் திருப்பித் திருப்பி வழிச்செடுத்து எண்ணெய்யில் போட்டாரு. அன்னைக்கு முடிவு செஞ்சதுதான். அதுக்கப்புறம் அங்க பஜ்ஜியே சாப்பிடல. பக்கத்துலயே சங்கீதாவில் இதவிட நல்லாவே இருக்கும்.

said...

teacher,

our family favorite shop is saravana stores (all) and earlier we used to by cellphone from them itself now also new padi saravana become favorite one as it was just 2 kms from house.
some of weekend we will by vegetables also from them but we have to go very early 10am to shop vegetables good quality and great price for vegetables we will get there.. saravana stores and ranganathan street our most favorite destination of our family in mid 80s myself and grandappa (mother's father) used to walk from baroda street ,west mambalam to ranganathan street and other parts of west mambalam and east mambalam( renamed to t.nagar) to buy daily items like betel leaves, banana leaves and household things and have special tiffin at some cafes great time spent by me in bi-cycle from west mambalam to mount road to my office during 1993-94 old memories with west mambalam are great