Friday, November 23, 2018

எட்டிப் பார்க்கும் ஆஞ்சி !!!!! (பயணத்தொடர், பகுதி 37 )

கோவில் வாசலில் சொட்டு மழையில்லை!  இது வெறும் கோவில் மட்டும் இல்லை. ஒரு ஆஸ்ரமம். உள்ளே கோவில்கள் இருக்கு!  அவதூத தத்தா பீடம் ஸ்ரீ கணபதி சச்சிதானந்த ஆஷ்ரம் னு பெயர். SGSன்னு சொன்னாத்தான் உள்ளூர் மக்களுக்குத் தெரியுமாம்.

அவதூத தத்தா பீடமுன்னு  ஒரு புதிய பிரிவு /  இயக்கம்  (செக்ட்?) ஆரம்பிச்சவர் சத்யநாராயணா என்ற பூர்வாஸ்ரமப் பெயர் இருந்த ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஸ்வாமிஜி.   இந்த  தத்தா என்பது தத்தாத்ரேயர்தான்.  ஞானமூர்த்தி.  விஷ்ணு, சிவன், பிரம்மா மூவரும்  சேர்ந்த த்ரிமூர்த்தி ! பெருமாளின் அவதாரம்.
1966 ஆம் வருஷத்தில்  இந்த இயக்கத்தின் முதல் ஆஷ்ரம் சின்ன  ஓலைக்குடிசையில் ஆரம்பிச்சு  இப்போ  நாப்பது ஏக்கர் நிலத்தில்   பரவி இருக்கு. வேதம்,  சமஸ்க்ருதம், யோகா, ஆன்மிகம், பஜனைப்பாடல்கள், இசைன்னு பல பிரிவுகளில் வகுப்புகள் நடக்குமிடம் இது!
1976 இல் தத்தாத்ரேயருக்கு ஒரு கோவிலைக் கட்டி இருக்கார். இப்ப  இந்தியாவிலும், உலகின் பலபாகங்களிலும்  இந்த இயக்கம் கட்டி இருக்கும் அம்பது கோவில்களில் மூத்தது இதுதான்!

சென்னையில் கூட நம்ம வேளச்சேரியில்  ஒரு ஆஸ்ரமக்கோவில் இருக்குன்றது இப்பதான் தெரிஞ்சது. ஒருநாள் போகலாமா?

ஏழை எளியவர்களுக்கான மருத்துவ சேவை, கல்வி,  அனாதைக்குழந்தைகள் இல்லம், ஆதரவற்ற பெண்கள் முன்னேறத் தேவையான உதவிகள், முதியோர் இல்லம், இயற்கைப்பேரழிவு சமயத்தில் உதவின்னு பலவித சமூகஸேவைகளும் செய்யறாங்க.

மனித இனத்துக்கு மட்டுமில்லாமல் பறவை இனத்துக்கும்  இவரின் பரிவு இருக்கு!

ஆஷ்ரமத்துக்குள்ளே  வண்டியை நிறுத்திட்டுச் சுத்திவரப்போனோம்.
 கட்டடத்துக்கு மேல்  நிக்கிறார் ஆஞ்சி!  கிட்டப்போனதும் தெரிஞ்சது  இவர் நிக்கறது  கார்யசித்தி ஹனுமன் கோவில் மாடியில்!  எழுபதடி உயரச் சிலை. (ஓ....அதான் நாம் சாலையில் போகும்போது, எட்டிப்பார்ப்பது போல தெரிஞ்சாரா! )  இப்ப ஒரு ஆறு வருசத்துக்கு முன்னே பிரதிஷ்டை செஞ்சாங்களாம்.  பதினெட்டு சிற்பிகள் சேர்ந்து பத்து மாசத்தில் வடிச்ச ஒத்தைக்கல் சிலை!
கீழிருக்கும் கோவில்  சந்நிதியில் ஆஞ்சி இருக்கார்.  நல்ல அலங்காரம்!  சந்நிதிக்கு எதிரே பெரிய கல்பாவிய முற்றம்!  அங்கே சந்நிதியைப் பார்த்தாப்போல இருப்பது  யார் தெரியுமோ?  ஒரு ஒட்டகம்!  காலை மடிச்சுப்போட்டு உக்கார்ந்துண்டு இருக்கு!  பெரிய தீபஸ்தம்பம் !

இந்த ஒட்டகம் எப்படி ஆஞ்சிக்கு வாஹனமாச்சுன்னு ஒரே குழப்பம். இதை ஃபேஸ்புக்கில்  போட்டுருந்தப்ப, நம்ம  நண்பர்கள் வீரமணி வீராஸ்வாமி ஐயாவும், நியாண்டர் செல்வனும் ஒரு சுட்டி அனுப்பி இருந்தாங்க.  அதிலே ஒரு விளக்கம் இருந்தது.  நண்பர்களுக்கு நம் நன்றி!

ஒரு காலத்துலே ஒரு ஆஞ்சநேய பக்தருக்கு, ஆஞ்சியை 'நேரில்' தரிசிக்கணுமுன்னு ஆசை வந்துருக்கு.  முனிவர்கள் தவம் செய்து சாமிகளை தரிசனம் செய்வது போலத் தானும் செய்யலாமுன்னு  தவம் செய்ய ஆரம்பிச்சுருக்கார். 

தவத்தைக் கவனிச்ச ஆஞ்சி, 'பக்தா!  இதோ என்னைப்பார்'னு காட்சி கொடுத்துட்டுப் போனார். சட்னு வந்து சட்னு போனதால் பக்தருக்கு நின்னு நிதானமாப் பார்க்க நேரம்  கொடுக்கலை.  பக்தருக்கு மீண்டும் மனக்குறை. திரும்பவும் தவம் செய்யறார். இந்த ஆளுக்கு என்னதான் பிரச்சனைன்னு கேக்கத் திரும்பவும் ஆஞ்சி வந்தார். 

"என்னய்யா... இப்படிச் சும்மாச்சும்மாக் கூப்ட்டுக்கிட்டு இருக்கே?"

" ஆஞ்சி, நீ வாயு புத்ரன் என்றபடியால்  உன் சுபாவப்படி காத்துப்போல வந்துட்டுப் போயிடறே!  நின்னு உன்னை நிதானமாப் பார்க்க எனக்கு டைம் வேணும்"

 "இப்ப என்னான்றே? " 

"நீ காத்துலே ஏறிப்போகாம ஒட்டகத்துலே ஏறிப்போ. அப்ப நான் உன்னை நல்லாப் பார்க்க முடியும்"

"சரி. உனக்காக நான் ஒட்டகத்தையே என் காரா வச்சுக்கறேன். திருப்திதானே? "

இப்படித்தான் ஒட்டகம்  வந்து ஆஞ்சிக்கு வாஹனமா அமைஞ்சதுன்னு கதை!

இதுலே ரெண்டு விஷயம் எனக்குத்தோணுது. ஒன்னு...பக்தர் ராஜஸ்தான்காரரா இருக்கணும். இல்லையா.... துபாய் ரிட்டர்ன் !  இல்லேன்னா எல்லாத்தையும் விட்டுட்டு ஒட்டகத்தைச் சொல்வானேன்?

இன்னொன்னு....   நானாக இருந்தால்  நின்னு நிதானமாப் பார்க்கணுமுன்னா,  பேசாம ஆமை, இல்லை நத்தைன்னு சொல்லி இருப்பேன். ஆமை கூட வேணாம். ஏற்கெனவே பார்வதிக்கு  வாஹனமா இருக்கு. அதான் பக்தர்கள் உதவி கேட்டதும் ஆமை வேகத்துலே வந்து அருள் செய்யறாள். அதுவுமில்லாம  ஆமையும் நினைச்சாக் கொஞ்சம் வேகமாத்தான் நடக்கும். நத்தை தான் சரி.  இல்லையோ? 


கோவிலைச் சுத்திக் கம்பித்தடுப்புகளாப் போட்டு அதில் காய்ஞ்சு போன தேங்காய் நெத்துகள் கட்டி வச்சுருக்காங்க. பக்தர்கள் அவுங்க காரியம் நிறைவேறணுமுன்னு பிரார்த்தனை செஞ்சுக்கிட்டுக் கட்டித் தொங்க விட்டவைகளாம்.

(இதேபோல  நம்ம சென்னையில்  ஜிஎஸ்டி சாலையில் தாம்பரம்போகும்  வழியில் ஒரு ராம ஆஞ்சநேயர் கோவில் இருக்கே.... அங்கேயும் தொங்கவிட்டுருப்பதைப் பார்த்த நினைவு!)  இங்கே  A to Z  வரிசை வேற ! அவரவர் பெயருக்கான எழுத்து வரிசையில்,   தேங்காய்நெத்தில் தேதி, பெயர் எல்லாம் எழுதிட்டுக் கட்டி வச்சுட்டுப் போயிருக்காங்க. என்ன வேண்டுதல்னு மட்டும் எழுதலை. பிரார்த்தனை நிறைவேறினதும் வந்து கட்டிவச்சதை அவிழ்த்துருவாங்க போல!.  எத்தனை விதமான நம்பிக்கைகள்! நம்புனாத்தானே கடவுளும். நம்பிக்கை இருந்தால் என்ன தப்பு?  எதோ ஒருவகையில் மனசுக்கு ஆறுதல் கிடைக்குதுல்லே?
பெருமாள் தரிசனத்துக்குக் கோவிலுக்குள் போறோம். தத்த வெங்கடேஸ்வரா!  எல்லா சாமிகளுக்கும் தத்தான்னு தத்தாத்ரேயர் பெயரில் பாதி அடைமொழியா வச்சுருக்காங்க. (உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை)
தத்தாத்ரேயரை முதல் குருவாகவும்,  தன்னுடைய தாய் ஸ்ரீமதி ஜயலக்‌ஷ்மி மாதாவை நேரடி குருவாகவும்,  அப்புறம்  இவரே குருவாகவும் ஆரம்பிச்ச குரு பரம்பரையில்  இப்ப  இளைய ஸ்வாமிஜி ஒருத்தரும் இருக்கார். இங்கே  வேதபாடசாலையில் படிச்ச சமயம்,  மூத்த ஸ்வாமிஜியால் தெரிவு செய்யப்பட்ட இளையவர் இவர்.

பெருமாள், தாயார்கள், புள்ளையார், விஷ்ணுதுர்கைன்னு சந்நிதிகள். கோவிலுக்கு வெளியில் ஒரு பெரிய பாறை! விஷ்ணுபாறை ! இதில் ஸ்ரீ லக்ஷ்மிவராஹர் !

யாகமண்டபங்கள், வாஹனமண்டபங்கள் எல்லாம் அருமை!  ருத்ராக்ஷத்தேர் இருந்தது!  இன்னொரு ஆஞ்சி சந்நிதியில்  உள்ளே ஒட்டகம்!

ஆஷ்ரமத்தோட்டம், ஏராளமான சிற்பங்களுடன்! சகஸ்ரலிங்கம், ருத்ராக்ஷலிங்கம்,  கருடவாஹனத்தில் பெருமாள், ரதத்தில் சூரியன் இப்படி....  முனிவர்கள், மகரிஷிகளுக்கும் குறைவில்லை. எல்லாம் டெர்ரக்கோட்டா வகைகள். ராசித்தோட்டத்தில் ஒவ்வொரு ராசிக்கும் தூண்கள்! பளிங்கு சிற்பங்களும் இருந்தன.



சுகவனம் போனோம்.  சுக மஹரிஷி நினைவிருக்காரோ?  ஏராளமான கிளி வகைகள். எல்லாம் வெளிநாட்டுப் பறவைகள்!  இதுக்கு மட்டும் ஒரு ஏக்கர் ஒதுக்கியாச்சு !  இங்கேயும் படம் எடுக்க அனுமதி இல்லை. நெருக்கமான கம்பிக்கூண்டில் இருப்பதால் படங்கள் சரியாவே  வரவும் வராது.

இங்கே அவுங்களே ஒரு கட்டணத்துக்குப் படம் எடுத்துக் கொடுக்கறாங்க.  அங்கெபோய் பறவையோடு படம் எடுத்துக்கிட்டோம். ஒருநாளைக்கு ரெண்டு பறவைகள்னு கணக்காம். பர்ட்ஸ் ஆஃப் த டே! ரெண்டு ஃபொட்டாக்ராஃபர்ஸ் எடுத்தாங்க. நல்லா ஊர்சுத்திக் களைச்ச முகங்களோடு நாங்களே காக்கா போலத்தான் இருந்தோம். நம்ம கூட ஒரு கிளி :-)
வெளியே  ஒரு ஹாலில்  நம்ம படங்ளை கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில் காட்டி எது வேணுமுன்னு கேட்டாங்க. காமிச்ச ஆறு படங்களில் கொஞ்சம் பரவாயில்லைன்றதை (மற்றதெல்லாம் த்ராபை) சொன்னதும் ப்ரிண்ட் போட்டு அப்பவே கொடுத்தாங்க.


இந்த அவதூதா தத்தா இயக்கத்துக்கும் ஜப்பானுக்கும் என்ன தொடர்போ தெரியலை..... ஜாப்பனீஸ் கோவில்,  போன்ஸாய் தோட்டம் எல்லாமும் இருக்கு இங்கே!  எனக்கு போன்ஸாய் அவ்வளவா விருப்பம் இல்லை.  இயற்கையா வளரவிடாம பண்ணறாங்களோன்னு இருக்கும். அதனால் அந்தப் பகுதிக்குப் போகலை. நானூத்தியம்பது  செடிகள்/மரங்கள் இருக்காம்.

எக்கச்சக்கமானஆஷ்ரம நடவடிக்கைகள் இருக்கு போல..... நாப்பது ஏக்கரும் சுத்திவர முடியுதா என்ன?  பார்த்தவரை போதுமுன்னு  கிளம்பணும்தான். இப்பவே மணி அஞ்சேகால்.
உள்ளே காஃபி கிடைக்குதுன்னார்'நம்மவர்' நெஸ்காஃபி போட்டுத் தர்றாங்க. பத்து ரூபாய்.  வேணாம் ஃபில்டர் காஃபி குடிச்சுக்கலாமுன்னு  மத்யானம் சாப்பிட்ட அந்த அம்ருதாவுக்கேப் போனோம். எப்படியும் ஏர்ப்போர்ட் போற வழிதானே?


காஃபியைக் குடிச்சதும் கிளம்பி நேரே மைஸூரு ஏர்ப்போர்ட்.

இத்தனைநாள் நம் கூடவே வந்த அசோக்கின் ட்ரைவிங் ஓக்கே! அதுக்காக அவருக்குக் கொஞ்சம்  அன்பளிப்பையும் கொடுத்து நன்றி சொல்லிக்கிட்டோம். எந்த அபகடமும் இல்லாமப் பத்திரமா நம்மைக் கொண்டுவந்து சேர்த்துட்டார், இல்லையோ?
எழுபது நிமிஷ ஃப்ளைட் சென்னைக்கு. அதே ஓட்டை விமானம்தான். லொட லொட.... ட்ரூஜெட் கம்பெனி.
ஏர்ப்போர்ட் நல்லாவே இருக்கு!  ஆனால்....ரொம்ப தூரம் நடக்க வைக்கிறாங்க.
நம்ம சென்னை  விமானநிலைய உள் அலங்காரம்  இப்பெல்லாம்  நல்லாவே இருக்கு!





சென்னைக்கு வந்து, ஒரு டாக்ஸி பிடிச்சு நம்ம  லோடஸ் போகும் வழியில் நம்ம கீதா கஃபேக்குப்போய்  மினி இட்லி பார்ஸல். பத்தேகால் மணிக்கு டின்னருக்கு எங்கே போக?
ஆச்சு நம்ம மைஸூரு பயணம்.  ஹாலிடேன்னு சொல்றோமே தவிர  அந்த சமயங்களில்தான் அலைச்சல் அதிகம்.
முதல்லே ரெண்டு நாளைக்கு நல்லா ரெஸ்ட் எடுக்கலாம். ஓக்கே?

தொடரும்...... :-)


10 comments:

said...

நாங்களும் எட்ட இருந்து பார்த்தோம் :-)

அருமை.

said...

ஒட்டகக்கதையைச் சொல்லாம எப்படி விட்டே? கோபாலுக்கு மனக்குறை!

கதையை இப்போ சேர்த்துருக்கேன். பார்த்துக்குங்க!

யாருக்கும் மனக்குறை இருக்கப்டாது...... துளசிதளத்தில்!!!

சரிதானே? :-)

said...

வாங்க நன்மனம்.

நலமா? எங்கே 'ரொம்பநாளா' இந்தப்பக்கம் காணவே காணோம்?

said...

லோட்டஸ், வைஃபை, டிஃபன், வடை, பக்கத்துல சரவண பவன் - துளசி டீச்சர், என்ஜாய்

said...

Lotus service and cleanliness going down recently. I noticed it during my last visit, do you notice anything different?

said...

மைசூர் பயணம் அருமை. தொடர்கிறேன். (ஆனா நிறைய கோவில்கள் கவர் பண்ணினதால ரொம்ப அலைச்சல் இருந்த மாதிரித் தோணுது. எப்படித்தான் ஒவ்வொண்ணுக்கும் நடந்தீங்களோ)

said...

வாங்க தெய்வா,

பொதுவாவே எல்லா இடங்களிலும் இப்படித்தான் ஆகிக்கிட்டு வருது. காஸ்ட் கட்டிங், வேலை செய்யும் நபர்கள் தகராறு, ஒழுங்கீனம் எல்லாமும் காரணம்.

ஆனாலும்.... ஒவ்வொரு இடங்களில் பார்த்து வரும்போது இங்கே தேவலையோன்னு தோணும். குறைஞ்சபட்சம், சுட்டிக் காட்டினால் வந்து சரி செஞ்சுட்டுப்போறாங்க. நாமும் ஒரு பத்துவருஷக் கஸ்டமர்/ க்ளையன்ட் என்பதால் ஒரு மாதிரி சரி செஞ்சுக்கிட்டுப் போயிருவோம். வீடு போல ஆகிப்போச்சு நமக்கு. பாதுகாப்பும் ஒரு காரணம்.

அப்புறம் இங்கே ஹெட்க்வாட்டர்ஸ் வச்சுக்கிட்டு ஊர் சுத்திட்டு சுத்திட்டு வந்து சேர்ந்துக்குவோம். அந்த வகையில் வசதியே. மற்ற பணியாளர்களும் பழக்கமானவங்க ஆகிட்டாங்களேப்பா.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

இந்தப்பயணம் பரவாயில்லை. அநேக இடங்களில் ரெண்டுநாட்கள் தொடர்ந்து இருந்தோம். முந்தியெல்லாம் டூர் கம்பெனி போல ஒரே ஒருநாள் போட்டுருவாரு இவர். அப்ப ஓட்டம் இன்னும் அதிகமே......

கிடைச்சவரை பார்த்துட்டு வந்துடணும். இதுக்காக இன்னொரு முறை போறதெல்லாம் 'நடக்குமா?'

said...

ஏர்போர்ட் நடை - கொஞ்சம் கஷ்டம் தான். சமீபத்தில் போன ஒரு ஏர்போர்ட் மஹா திராபை! இத்தனைக்கும் மாநிலத் தலைநகரம்!

ஒட்டக வாகனம் - புதியதாக இருக்கிறது. ராஜஸ்தானில் கூட இப்படி ஹனுமனுக்கு ஒட்டக வாகனம் பார்த்ததில்லை.

சிறப்பான தகவல்கள்..... நிறைய பகுதிகள் விடுபட்டிருக்கிறது. படிக்க வேண்டும்.

தொடர்கிறேன்.

said...

ஒட்டகம் ஆஞ்சிக்கு வாகனமானது அறிந்து கொண்டோம்.