Friday, November 09, 2018

நாகரஹோளே நேஷனல் பார்க் !!!!! (பயணத்தொடர், பகுதி 31 )

இந்தப் பெயரை விடக் கபினின்னு சொன்னாச் சட்னு புரிஞ்சுருக்குமே! கபினி அணைக்கட்டு இந்தப் பகுதியில்தான். கேரளாவில் உற்பத்தியாகும் கபினி ஆறு, வர்ற வழியிலேயே இன்னும் ரெண்டு ஆறுகளைக் கூடச் சேர்த்துக்கிட்டு, கர்நாடகா மாநிலத்துக்குள் வந்து நம்ம காவிரியோடு கலந்துருது. இந்த இடத்தில்தான் அடர்ந்த காடு உருவாகி இருக்கு! வனவிலங்குகள் ஏராளமா இருக்குமிடம். போதாததுக்குப் பொன்னம்மான்னு இங்கே ஒரு அணைக்கட்டும் கட்டி இருக்காங்க. கபினி அணைக்கட்டு.

இந்த ஆறு/நதிகளுக்கு ஒரு விவரமும் இல்லை.... பொறக்கறது ஓரிடம், போய் வாழறது வேறிடமுன்னு.....   அதான் எல்லா ஆறுகளுக்கும் பொண்கள் பெயர் வச்சுருக்காங்க போல!   நம்ம பக்கம் பார்த்தீங்கன்னா ரெண்டே ரெண்டு நதிகள்தான் ஆண்கள் பெயரில், பிரம்மபுத்திரா, கிருஷ்ணான்னு.  இவைகளும்  எல்லைதாண்டிப் போனாலும் வீட்டோடு மாப்பிள்ளைன்னு வச்சுக்கலாம். இதுலே பாருங்க... இந்த கிருஷ்ணா நதியைக் கிருஷ்ணவேணின்னும் சொல்றாங்க. அப்போ அதுவும் பொண்ணுதான், இல்லே! தப்புனது பிரம்ம்மபுத்திராதான். பொறந்ததும் வேற நாட்டுலே என்பதால் வீட்டோடு மாப்பிள்ளையேதான் :-)
ஆரம்பத்துலே நம்ம பயணத்தைப்பற்றி  யோசிச்ச காலத்துலே  தலக்காவிரி மட்டும் போயிட்டு, அந்தாண்டை ஆந்த்ராவுக்குப் போகலாமுன்னு......   நம்ம டென்டிஸ்ட் ஒருநாள் சொன்னாங்க, 'கபினி காட்டுக்குள் போய்ப் பாருங்க. உங்க யானைஸ் இருக்கு'ன்னு.  வேறொரு இடத்தில் யானை பார்க்கும்  எண்ணம் இருந்ததால் வேணுமான்னு முதலில்  இருந்தாலும்,  கடைசியில்  கபினிக்காடு  நம்ம திட்டத்துக்குள் வந்துருச்சு.
காலையிலும் மாலையிலும் ஸஃபாரி இருக்காம். காட்டுக்குள் கூட்டிப்போய்க் காட்டுவாங்க. காலையில் ஆறு மணிக்குக் கிளம்பிப் போய்  ஒன்பதரைக்குத் திரும்பிடலாம். இதுக்கு முதல்நாள் மதியம் மூணு மணிக்குள்ளே புக் பண்ணிக்கணும்.  இன்னொன்னு மாலையில் மூணு மணிக்குக் கிளம்பி  ஆறரைக்குத் திரும்பிடலாம்.  இதுக்கு அன்றையதினம் காலை 12க்குள் புக் பண்ணிக்கணும். வர்ற கூட்டத்தைப் பொறுத்து  இடம் கிடைக்கலாம். கிடைக்காமலும் போகலாம்.

வலையில் பார்த்து தங்குமிடம் ஒன்னு புக் பண்ணிட்டார் 'நம்மவர்'. கபினி லாட்ஜ்லே இடம்  கிடைக்கலை. லேக்வியூ ரிஸார்ட் கிடைச்சது.  தங்கக்கோவிலில் இருந்து ரெண்டுமணி நேரத்துலே  வந்துட்டாலும், முதலில் ஸஃபாரிக்கு, இன்றைக்கு மத்யானம் போக இடம் கிடைக்குமான்னு தெரிஞ்சுக்கணும். அதனால் நேரே ஃபாரஸ்ட் ஆஃபீஸுக்குப் போய்ச் சேர்ந்தோம்.  மணி பனிரெண்டேகால் ஆகி இருந்துச்சு. பனிரெண்டுக்குக் கவுன்ட்டர் மூடிட்டாங்கன்னா, நாளைக் காலைக்கு புக் பண்ணிக்கலாம்.

உள்ளே போய் விசாரிச்சால் இன்றைக்கே இடம் இருக்குன்னாங்க. நமக்கு ஆதார் இல்லாததால்  வெளிநாட்டுப் பயணிகளுக்கான  வகையில் கட்டணம் கட்டினோம்.  டிக்கெட்டுன்னு ஒன்னும் கொடுக்கலை.  டிக்கெட் கொடுப்பவர், சாப்பிடப்போயிருந்தார்.  அதனால்  நாம் ஸஃபாரிக்குப் போக இங்கே வரும்போது டிக்கெட் தருவாராம். ரெண்டரைக்கு வந்துருங்கன்னு சொன்னார் ட்யூட்டியில் இருந்தவர்.

இந்த இடத்தில் இருந்து ஒரு பத்துப்பனிரெண்டு நிமிட்டில் இருக்கு நாம் தங்கும் இடம்.  கபினி லேக் வ்யூ ரிஸார்ட்க்குப் போய்ச் சேர்ந்தோம். மினி காடுன்னு சொல்லலாம்.
நல்ல வசதியான காட்டேஜ் ஸ்டைல் அறைகள்.  ஒரு கட்டடத்தில் ரெண்டு அறைகள் என்ற  கணக்கில் நாலு கட்டடங்கள் அங்கங்கே!  எதிரில் பெரிய ஏரி. கபினி ஏரிதான்.
வட்டமான ஒரு  தனி அமைப்பில் டைனிங் ஹால். அதையொட்டி அந்தாண்டை அடுக்களை.  பணியாளர்கள் தங்குமிடம் இப்படி....

மூணு வேளை சாப்பாடும் இங்கேயே கொடுத்துடறாங்க. நிம்மதியா ஒரு வாரம் போய் தங்கலாம்.  ஆனால்.... நாம் இங்கே ஒருநாள் தான் தங்கறோம்.

இதுக்குண்டான படங்களை  அடுத்த பதிவில் சேர்க்கணும். இப்போ முன்னுரிமை  காட்டுவாசிகளுக்கே! 

ஓனர் பெங்களூரில் இருக்கார்.  இங்கே வேலைக்கு ஒரு ஏழெட்டுப்பேர் இருக்காங்க.  அதில் முக்கால்வாசிப்பேர் தமிழர்னு தனியாகச் சொல்ல வேண்டியதே இல்லை! நல்லா பொறுப்பா எல்லாத்தையும் நிர்வகிக்கறாங்க சமையல் உள்பட!  ஓனரோடுத்தான் நமக்குத் தொடர்பு. அவர் நமக்கு ஃபோன் பண்ணி என்னமாதிரி சாப்பாடு வேணும் என்றெல்லாம் கேட்டுட்டு அங்கே செய்யச் சொல்லிடறார்!  வைஃபை இருக்கு. ஆனால் அந்த டைனிங் ஏரியாவில் நல்லா வேலை செய்யுது!   நம்ம வீட்டு வெராந்தாவில் வந்து உக்கார்ந்தால் சிலசமயம் ஓக்கே! அறைக்குள்ளே  வேலையே  செய்யாது.  இன்னொன்னு....  அறையில் ஃபோன் வசதிகள் கிடையாது.  சல்லியம் ஒழிஞ்சது போங்க :-)

வீக் எண்டில் இந்த எட்டு  அறைகளும் நிரம்பிடுமாம்.  இன்றைக்கு வெள்ளிக்கிழமை. சாயங்காலம்   பயணிகள் வர ஆரம்பிச்சுருவாங்களாம்.  இப்போதைக்கு நாமும், இன்னொரு ஆந்திராக் குடும்பமும்தான்.

பனிரெண்டே முக்காலுக்கு வந்துட்டோம்.   ஒரு மணிக்கு லஞ்ச் ரெடின்னாங்க.  போய்ச் சாப்பாட்டை முடிச்சுக்கிட்டுச் சின்ன ரெஸ்ட்.  ரெண்டேகாலுக்குக் கிளம்பி ஃபாரஸ்ட் ஆஃபீஸுக்குப் போய்ச் சேர்ந்தோம்.

 வாசலில் ரெண்டு பஸ் நிக்குது.  வண்டி நம்பர் சொல்லி அதுலே ஏறிக்குங்கன்னதும்  வண்டிக்குப் போனால் அது சாத்தி இருக்கு.  அப்ப  கையில் பெரிய கேமெரா  வச்சுருந்த ஒருத்தர் கதவைத் தள்ளித் திறந்துவிட்டார்.  ட்ரைவருக்கு இடது பக்கம் முன்னால் இருந்த  சிங்கிள் ஸீட்டில்  கெமெராக்காரர் போய் உக்கார்ந்தார். 

அட... நமக்கு இந்த இடம் கிடைச்சால் நல்லாப் படம் எடுக்கலாமேன்னு  நினைக்கும்போதே....  'நீங்க உக்காரணுமுன்னா  இந்த ஸீட்லே உக்கார்ந்துக்குங்களேன்'னு  இடம் விட்டுக் கொடுத்துட்டார். மைண்ட் வாய்ஸ் கேட்டுருக்குமோ?   'நம்மவரிடம்' நீங்க அங்கே போறீங்களான்னு கேட்டதுக்கு, இல்லை. நீ போ. உனக்குப் படம் எடுக்க வசதியா இருக்கும்னு சொல்லிட்டார்!  (அடிச்சேன் ப்ரைஸ்!)
பெரிய கெமெராக்காரரின் நண்பர் ஒருவரும் இன்னொரு பெரிய கெமெராவுடன் வந்து சேர்ந்தார். மெள்ள மெள்ள மற்ற பயணிகள் வந்து சேர்ந்துட்டாங்க.   மூணு இருபதுக்கு  வண்டி புறப்பட்டது.  ஒரு பத்து நிமிட்டில் கொஞ்ச தூரம்  போனவுடன்,  ஃபாரஸ்ட் செக்போஸ்ட் கேட் வந்தது.  எத்தனை பேர் என்ற விவரமெல்லாம்  எண்ணிப் பார்த்துட்டுக் கேட்டைத் திறந்தவுடன்  வண்டி உள்ளே நுழையும்போது 'சிறுத்தை இருக்கு'ன்ற போர்ட் பார்த்துட்டு த்ரில்லிங்கா இருந்தது உண்மை.


புல்  மேய்ஞ்சுக்கிட்டு இருந்த சில மான்கள், தலையைத் தூக்கிப் பார்த்துட்டு,  'போங்க போங்க ரைட்' ன்றாப்லத் தலையை ஆட்டினாங்க.   அடுத்த  அஞ்சாவது நிமிஷத்தில் முதல் தரிசனம் ! இருவர்.  ராஜண்ணா  (நம்ம  ஸஃபாரி பஸ் ட்ரைவர்) வண்டியை நிறுத்தி அந்தப் பக்கம் கை காமிச்சார்.  ஒரே க்ளிக்ஸ்தான்.  அடுத்ததா தரிசனம் கொடுத்தார் தம்பி.




புள்ளிமான் கூட்டங்கள் தான் அங்கங்கே!  மூடி வச்சுருக்கும் சாலையைத் திறப்பதும், பஸ் கடந்த பின் மூடுவதுமா ஒரு உதவியாளர் நம்ம வண்டியிலேயே வந்துக்கிட்டு இருக்கார்.
'காட்டுவாசிகள்' கண்ணில் பட்டதும் வண்டியை   ரொம்பவே மெதுவா ஓட்டறார் ராஜண்ணா. என்னமோ வருதுன்னு நாங்கெல்லாம் சுதாரிச்சுக்கிட்டு  கண்ணுக்கெட்டினதூரம் காட்டை  அலசுவோம்.




காட்டுக்குள்ளே பாதைகள் அங்கங்கே பிரிஞ்சு போகுது. நாற்சந்திகளும் இருக்கு!  சில வண்டிகளும் அங்கங்கே  குறுக்காகப் போகுது.

பாம்புப் புத்தோன்னு எனக்கொரு சம்ஸயம். ஒவ்வொன்னும்  ஆளுயரத்துக்கு வளர்ந்து நிக்குதே!  பாம்பு தெரியுதான்னு எட்டிப் பார்த்துக்கிட்டே இருந்தேன். இருந்தால் 'நம்மவரு'க்குக் காட்டணும் :-)
கோயில்  ஒன்னு காட்டுக்கு நடுவில். பார்க்க வீடு போலத்தான் இருந்தது.

தேவி கோவிலாம்.(Bisalavadammana Temple)   அதைத் தாண்டி ஒரு  அஞ்சாறு நிமிஷ ட்ரைவில் ரெஸ்ட் ஏரியா இருந்தது.  வண்டியை நிறுத்தினார் நம்ம ராஜண்ணா. டாய்லெட் கட்டடம் ஒன்னு இருக்கு.  ஆண்கள் பலர் இறங்கிப்போனாங்க.  பெண்கள் யாருமே வண்டியை விட்டு இறங்கலை. (அதானே திடீர்னு சிறுத்தைப்புலி வந்துருச்சுன்னா? )
அப்பதான் நம்ம ராஜண்ணாவுக்கு செல்லில் ஏதோ சேதி வந்தது.  கீழே இறங்குனவங்களை வாங்கன்னு  சைகை காமிச்சுட்டு வண்டியை கிளப்பிட்டார். சத்தம் கேட்டதும் எல்லோரும் ஓடிவந்து ஏறிக்கிட்டாங்க.  மெள்ள வேற பகுதிக்குப் போய்க்கிட்டு இருக்கோம். திடீர்னு    வண்டியின் குறுக்கே அதிவேகமா ஒரே பாய்ச்சலில் யாரோ  தாவி ஓடுனாங்க. கண் வழியாக் காட்சி  உள்ளே போறதுக்குள்ளே மாயம்.... என்னன்னு தெரியலையே

சண்டை போடறாங்கன்னார் ராஜண்ணா.  இவுங்களுக்கு இருக்கும் கூர்மையான பார்வை எனக்கில்லை.  எங்கெங்கே என்னன்னு  போறபோக்கில் கண்டுபிடிச்சுடறாங்க.
அஞ்சு நிமிசப் பயணத்தில் ஒரு இடத்துலே வண்டியை நிறுத்தி எஞ்சினையும் அணைச்சுட்டாரா..... முதலில் ஒரே நிசப்தம்.  எல்லோரும்  அவரவருக்குத் தோணின திசையில் பார்வையைச் செலுத்தினோம்.

என் தோளைத் தட்டி, இடதுபக்கம் பாருன்னார் 'நம்மவர்'.
செடிகளுக்கு  நடுவில் சிறுத்தை!   வாவ்!!!!   தலயைத் திருப்பி எங்கியோ பார்க்குது....



பெரிய கெமெராக்காரர்கள்  இருவரும்,  சின்ன மணல் பைகளை  பஸ்ஸின் கதவுலே தொங்கப்போட்டு அதன்மேலே கெமராவை வச்சுப் படம் எடுக்கறாங்க.  ஆஹா.....   கெமெரா ஆடாம இருக்க இப்படியெல்லாம் இருக்கா?
இவுங்க ரெண்டுபேரும் வைல்ட் லைஃப் பொட்டாக்ராஃபி எடுப்பதில் ஆர்வம் இருக்கறவங்களாம்.  ஹாபி !
இவுங்களைப்போலவே எதிரில் வந்த வண்டிகளிலும் சிலரைப் பார்த்தேன்.  காட்டுக்குள்ளே பளிச் னு தெரியாதபடி காடோடுகாடாய் ஒன்றிப்போகிற  டிசைன் (camouflage )உள்ள உடைகள் போட்டுருக்காங்க.   ஆர்மி போட்டுக்கறது போல.
நான் இடதுபக்கம் பார்த்து சிறுத்தையைக் க்ளிக்கிக்கிட்டே இருக்கேன், என் ஒன்றையணா கேமெராவில் :-) 
சட்னு வலப்பக்கம் கை காமிச்சார் ராஜண்ணா.  கொஞ்சதூரத்துலே  யம்மாடியோவ்..... கரும்புலி!   ஆக்ரோஷமா சண்டை போட்டதுலே வாயிலே இருந்து  எச்சில் ஒழுக,  ரொம்பவே கோவமா இந்தப்பக்கம் பார்த்துக்கிட்டு இருக்கு. இன்னும் அதோட உடம்பு  கோவத்துலே நடுங்கறது நல்லாவே தெரியுது!
காட்டுக்குள்ளே இப்படி புலிகளைப் பார்க்கிறது எனக்கு முதல் முறை! அப்படியே ஆடிப்போயிட்டேன்.... பெரிய கெமெராக்காரர்,  கரும்புலியை க்ளிக்கிட்டுக் காமிச்சார் பாருங்க.... ஹைய்யோ!!!

P C   Narayan Rangarajan.  Thanks.

ராஜண்ணாவுக்கு வந்த சேதி, மத்த  டிரைவர்களுக்கும்  போயிருக்கு போல....  ஒரு நாலைஞ்சு வண்டிகள் எதிர்திசையில் இருந்து வந்துசேர்ந்தாங்க. இத்தனை ஆட்களும், வண்டிகளும் இருந்தாலுமே...  எதிரியைக் கவனிப்பது மட்டுமே குறியாக இருந்ததுகள் அந்த ரெண்டும்!  என்ன கோபம். என்ன ஆங்காரம்.....
P C Jaya Prakash  .Thanks. இந்தப்படத்தைத் துளசிதளத்தில்  போட்டுக்க அனுமதி கேட்டப்ப, தாராளமாப் போட்டுக்குங்க. இதைவிட நல்ல ரெஸல்யூஷன் வேணுமுன்னா சொல்லுங்க. அனுப்பறேன்னார். நமக்கு இதுவே  போதும்தானே?  :-)

கொஞ்ச தூரத்துலே புதருக்குள்ளே இன்னொரு கரும்புலி இருக்குன்னும், ரெண்டும் உல்லாசமா இருக்கும்போது, 'சிவபூஜையில்  சிறுத்தை புகுந்ததால்' இவ்ளோ சண்டைன்னு  விளக்கம் கிடைச்சது.  அதானே.... பெட் ரூமுக்குள் எட்டிப் பார்த்தால் கோபம் வராதா?


கரும்புலி, கோபம் அடங்காமலேயே  விறு விறுன்னு  நடந்து , அந்த புதராண்டை போய் நின்னு, திரும்பிப் பார்த்துட்டு உள்ளே போயிருச்சு.

கடி வாங்கினவன்,' இதெல்லாம் ஜூஜுபி.  கீழே விழுந்தாலும் என் மீசையில் மண்ணே ஒட்டலை பார்த்தியா'ன்னு சின்னதா கெத்து காமிச்சுட்டு மெள்ள இந்தாண்டைக் காட்டுக்குள் போனான் :-)
உண்மையில் இவுங்க ரெண்டு பேருமே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவங்கதான்.  சிறுத்தைப்புலி, ப்ளாக் பாந்த்தர்னு அஞ்சு  வகை இருக்காமே!  மொத்தத்துலே  Cat Family  :-)

எட்டு நிமிட் ஷோ முடிஞ்சது!  இனி அவரவர் வழி அவரவருக்குன்னு  வண்டியை எடுத்தார் ராஜண்ணா. திரும்பவும் புள்ளிமான் கூட்டங்கள், மயில்கள், பாம்புப் புத்துகள்னு  முக்கால்மணி நேரம் காட்டுக்குள்ளேயே சுத்திட்டு ஃபாரஸ்ட் ஆஃபீஸ் வந்து சேர்ந்தோம்.
பெரிய கெமெராக்காரர் பெயர் நாராயண் ரங்கராஜன். இப்ப இவர் நம்ம ஃபேஸ் புக் ஃப்ரெண்டு ! பெங்களூர்வாசி.  வொயில்ட் லைஃப் பொட்டோக்ராஃபி மேலே அப்படி ஒரு ஆர்வம்!   அஞ்சு வருஷமா, இந்தக் கரும்புலியைப் பார்க்கணுமுன்னு  அநேகமா வாராவாரம் வந்துக்கிட்டே இருந்தாராம்!

இன்னொரு பெரிய கெமெராக்காரர் ஜயப்ரகாஷ். இவரும் பெங்களூர்வாசியே!   பலவருஷங்களா இவுங்க ரெண்டுபேரும் இப்படிக் 'கரும்புலி வேட்டை'யாடி இன்றுதான்  ஆசை நிறைவேறி இருக்கு!  ( இவுங்க ரெண்டு பேரின் க்ளிக்ஸ் நம்ம பதிவில் சேர்த்துருக்கேன்!) 

'எல்லாம் நியூஸி மக்கள் வந்ததாலே  உங்களுக்கு அதிர்ஷ்டம் அடித்தது'ன்னேன்:-) உண்மைதானே?  ஹாஹா

நாங்கெல்லாம் எடுத்தக்  கரும்புலி க்ளிக்ஸை அவுங்கவுங்க கெமெராவில் என்னமாதிரி வந்துருக்குன்னு  ரிவொய்ன்ட் பண்ணிப் பார்த்தோம்.  நம்ம கெமெராவில் (கூட )அருமையா வந்துருக்குன்னு பாராட்டு கிடைச்சது!

இதுலே  நம்ம கூட பஸ்ஸில் வந்த இன்னும் ரெண்டுபேர் கலந்துக்கிட்டு, அவுங்க  மெயில் ஐடி, ஃபோன் நம்பர் எல்லாம் கொடுத்து, படங்களை அவுங்களுக்கு அனுப்பித்தரணுமுன்னு  கேட்டுக்கிட்டாங்க!  அட!  நம்ம படத்துக்குக் கிராக்கி பாருங்க!  அடுத்த முறை நம்ம டி எஸ் எல் ஆர் தூக்கிக்கிட்டுப் போகணும், இல்லே?  கனம் அதிகம், கைவலின்னு பலகாரணங்கள் இருந்தாலும்,  நம்மாண்டை மணல் மூட்டை இல்லைன்றதுதான் இப்போதையக் காரணம் :-)

நாராயண் ரங்கராஜனிடமிருந்து நானும் சில படங்களை வாங்கிக்கிட்டேன் !   'என்னம்மாப் படம் எடுத்துருக்கார், பாருங்க'ன்னு 'நம்மவர்' கிட்டே சொல்லிச் சொல்லி மாய்ஞ்சு போனது உண்மை.  இந்தப் பயணத்துலே எனக்கு ஏழெட்டு ஃபேஸ்புக் ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சாங்க!
கரும்புலியைக் கண்டதில் எல்லோருக்கும் மனசு நிறைஞ்சு போயிருந்தது!

ராஜண்ணா,  அவரது உதவியாளர்  பொம்மன், நம்ம நண்பர்கள் நாராயண் ரங்கராஜன், ஜயப்ரகாஷ் மற்றும் சிலருடன்  க்ளிக்ஸ் ஆச்சு :-)

தொடரும்............ :-)


9 comments:

said...

வித்தியாசமான பயணம். படித்துக்கொண்டிருக்கும்போதே பின்னால் ஏதாவது மிருகங்கள் வருகிறதோ என்ற எண்ணம். மிருகங்கள் நம்மைப் பார்க்கும்போது அவற்றை நாம் தொந்தரவு செய்கிறோமோ என்று அவை நினைப்பதைப் போலத் தோன்றுகிறது.

said...

சிறுத்தை செஞ்சது ரொம்பத் தப்பு. காதலர்கள் தனியா இருக்குறப்ப இப்படியா போய் எட்டிப் பாத்து தொந்தரவு பண்றது. சேச்சே. ஒரு இங்கிதமே இல்லையே. அதான் கருஞ்சிறுத்தைக்கு அந்த அளவுக்கு ஆத்திரம் வந்திருக்கு.

படங்கள் எல்லாமே அட்டகாசம். இவ்வளவு பக்கத்துல சிறுத்தையையும் கருஞ்சிறுத்தையையும் பாத்த பிறகு ஒடம்பெல்லாம் சிலிர்த்துப் போயிருக்குமே. அன்னைக்கு முழுக்க மண்டைக்குள்ள அதுதான் ஓடியிருக்கும்னு நெனைக்கிறேன்.

said...

வாவ்....

காட்டுக்குள் பயணிப்பது அலாதியான அனுபவம். சில காடுகளில் பயணித்தது உண்டு.

said...

ஆகா! அருமையான பயணம்.நமக்கும் பிடிக்குமே.
அண்மையில் பிள்ளைகளுடன் நமது நாட்டு 'யால'சரணாலயம் சென்று தங்கிவந்தோம்.கரடியார்அணிவகுத்துச் சென்றார்.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

பலநாட்கள் கனவு இப்படிப் பலித்தது :-)

அதுகளுக்கும் இன்னொரு விஷத்தன்மையுள்ள விலங்குகளைப் பார்க்கத் தோணாதா? அதுதான் மனுசப்பயல்களா நாம் அங்கே போறது :-)

said...

வாங்க ஜிரா.

இங்கிதம் அதுக்கு(ம்) தெரியலையே.....

கருஞ்சிறுத்தை..... சொல் அருமை! இனி ஒருக்கில் பயன்படுத்திக்கணும்!

அந்தப்பயணம் முடிஞ்சாலும், கபினின்னு பேச்சு வரும்போது கருஞ்சிறுத்தையும், வெறுஞ்சிறுத்தையும் பேச்சில் வராமல் போகாது! அன்றைக்கு நாம் பார்த்தவர்களிடம் எல்லாம் இதேதான் சொல்லிக்கிட்டு இருந்தோம். மனம் நிறைஞ்சு நின்னாங்க ரெண்டுபேரும்.!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

உங்க காட்டு அனுபவங்களைக் கண்டு பிரமித்து நின்னாலும், கொஞ்சம் பொறாமையும் பட்டுருக்கேன்:-) ஆணாய் இருப்பதில் உள்ள சுகங்களில் அதுவும் ஒன்னு! நினைச்சாச் சட்னு கிளம்பிடறீங்க !

said...

வாங்க மாதேவி.

கரடியார் அணிவகுப்பா !!!! பேஷ் பேஷ்!

said...

wow..என்ன அருமையான படங்கள் ...

சூப்பர்