Monday, November 19, 2018

கிரிஜ கல்யாணம் !!!!! (பயணத்தொடர், பகுதி 35 )

பல சமயங்களில் இப்படி எதாவது ஒன்னு நடக்குதுன்ற விவரம் தெரியாமலேயே போயிருக்கோம். தெரிஞ்சுருந்தால்..... கூட்டம் அதிகம்னு போயே இருக்கமாட்டோமே!  எல்லாம் 'அவன் 'செயல். நமக்குன்னு சிலதைக் காட்டணுமுன்னு நினைச்சுட்டால்  அதை நம்மாலே மாத்த முடியுமோ?

காலையில் பறவைகளின் ஒலியையும், டைகரின் குலைப்பையும் கேட்டே  நாள் ஆரம்பிச்சது. கதவைத் திறந்து பார்த்தால் வீட்டுவாசல் ஸிட்டவுட்டில்  ம்யாவ் தரிசனம் :-) டைகரும்  வந்தது. உடனே வீட்டுக்குள்  வந்த   ம்யாவ் உள்ளே கொஞ்ச நேரம் சுத்திப் பார்த்துட்டுப் போனான். பாவம் ரஜ்ஜுன்னு நினைப்பு வந்தது.  காஃபிக்கு ஃபோன் பண்ணதும்   உடனே வந்ததைக் குடிச்சுட்டுச்  சட்னு குளிச்சு ரெடி ஆனோம்.


ஒரு ஒன்பதரைக்குக் கிளம்பலாமுன்னு  அசோக்கிடம் நேத்து சொல்லி வச்சதால் அவர் இன்னும்   எழுந்து வரலை. ரிஸார்ட் எப்படித்தான் இருக்குமுன்னு பார்க்கப்போனோம். காலை நடையும் ஆச்சு:-) டைகர் என் கூடவே வந்தான். நல்ல பயல். உண்மையில் இவந்தான் கூடக் கூட்டிட்டுப்போய் சுத்திக் காமிச்சான் :-)




மினிக் காடு போலத்தான் இருக்கு. நிறைய தேக்கு மரங்கள். வராஹங்களும் ஓடியாடிக்கிட்டு இருக்குதுகள்.  சின்னக்காட்டில் கேம்ப் ஃபயருக்கு ஒரு அமைப்பு.
இதெல்லாம் இல்லைன்னா ரிஸார்ட்டுக்கு அழகில்லை போல....  அறைகள் இருக்கும் பகுதியிலும்  இன்னொரு கேம்ப் ஃபயர்  அமைப்பு இருந்தது.
நீச்சல்குளம் தனிப்பகுதியில். இங்கேயே  ஒரு பக்கம்  கேரம்போர்டு ,  செஸ் போர்டு, டேபிள் டென்னிஸ்ன்னு இன்னபிற விளையாட்டுக்கான  இடம்.


சுத்திப்பார்த்துட்டு அறைக்கு வரும்போதே மணி எட்டே முக்கால். காலை ப்ரேக்ஃபாஸ்ட்டுக்குப் போனோம். இட்டிலி இல்லை. பூரி இருந்தது.  காலங்கார்த்தாலை எண்ணெய் சமாச்சாரம் வேணாம்.  தோசை போட்டுத்தர்றாங்க. சாப்பிட்டு முடிச்சு வெளியில் வந்தால் அசோக் ரெடியா இருந்தார்.   ஹொட்டேல் கெஸ்டுகளோடு  டைனிங்ஹாலில் ட்ரைவர்களுக்குப் பரிமாறுவதில்லையாம். தனி இடம் அடுக்களை பக்கத்துலேயே  இருக்காம். அட்லீஸ்ட் நேரத்துக்குச் சாப்பாடு கொடுத்துடறாங்க.



அறைக்கு வந்து மூட்டை முடிச்சுகளைக் கட்டும்போது, ஆஞ்சி வந்து வீட்டுவாசல் மரத்தில் உக்கார்ந்து தரிசனம் கொடுத்தார்:-)  'பத்திரமாப் போயிட்டு வா'ன்னு சொல்லிட்டு நடையைக் கட்டினார்.  சகுனம் சரியா இருக்கு!  ஒன்பதரைக்குக் கிளம்பிட்டோம்.
போற வழியில்  நேத்து இங்கே வரும்போது பார்த்த பெரிய நந்தியைக் கவனிச்சுட்டு சின்னதா ஒரு ஸ்டாப்.  காலையில் கோவில், கோபுரம் எல்லாம் தரிசனம் செய்யறது நல்லதுதானே?


சிவன் கோவில் . கிராமக்கோவிலா இருக்கலாம்.  கோவில் கட்டடம் சின்னதா இருந்தாலும் தொட்டடுத்து அந்த வளாகத்துலே பெரிய சிவன் சிலை வச்சுருக்காங்க. கோவிலுக்குள் நுழையும் முகப்பு வாயில்மேலே தான் நந்தி  உக்கார்ந்துருக்கார். கோவில் கேட் மூடி இருந்தது.
நாலைஞ்சு க்ளிக்ஸும் ஆச்சு.
போறவழியெல்லாம்  சூரியகாந்தியே!   நேத்து நாம் கபினியில் இருந்து வந்த அதே வழி . பாதிதூரத்துலே இடப்பக்கம் திரும்பினால் கபினிக்காடு வந்துரும். நாம் எங்கேயும் திரும்பாம நேரப்போய்க்கிட்டு இருக்கோம்.  எம் ஸி ரிஸார்ட்லே இருந்து ஒரு அம்பத்தியஞ்சு கிமீ, இப்போ நாம் போகும் நஞ்சன் கூடு. இந்தப்பெயரில் ஒரு காலத்தில் பல்பொடி  ரொம்பவே ஃபேமஸ். இப்ப இருக்கான்னு தெரியலை.

ரோடோரமா இருக்கும் கல்யாண மண்டபத்துலே ஒரு கல்யாணம் நடக்குது போல. அரசியல்வியாதி யாரோ வர்றதால்  கூட்டமும், போலீஸுமா அமர்க்களம்.  சனம் இப்படி அ. வியாதிகள் பின்னால் கூடிக்கூடி வாழ்க்கையைத் தொலைச்சுக்கிட்டு இருக்காங்க.
ஒருமணி நேரப்பயணத்தில் கோவில் வாசலுக்கு வந்துட்டோம். அசப்புலே நம்ம செலுவநாராயணர் கோவிலாட்டம் இருக்கு!  இங்கத்துக் கட்டட ஸ்டையில் இதுதான் போல!
பயங்கரக்கூட்டம்.  நஞ்சுண்டேஸ்வரர் கோவில்.  ஆலகால விஷத்தை விழுங்கிவச்ச சிவன் உள்ளே இருக்கார். என்ன விசேஷமுன்னு விசாரிச்சால் 'கிரிஜ கல்யாண மஹோத்ஸவம்' திருவிழா!  கிரிஜா.... மலைமகள் இல்லையோ? அம்பாளுக்கும், ஐயனுக்கும் திருக்கல்யாணம்!

மொத்தம் எட்டுநாள் உற்சவம். நம்ம ஆனிமாசம் பௌர்ணமி முடிஞ்சதும்(தேய்பிறை) வரும்  சதுர்த்தியில் ஆரம்பிச்சு, ஏகாதசிக்குத் தெப்போற்சவம் நடந்ததும்  முடியும் விழா!  இன்றைக்கு சதுர்த்தி. விழாவின் முதல்நாள். இதெல்லாம் ஒன்னும் தெரியாமலேயே இங்கே வந்துருக்கோம், பாருங்க!
எங்கிருந்து தொடங்கறாங்களோ தெரியலை, கோவில் ராஜகோபுர வாசலுக்கு முன்னால்வரை  அங்கபிரதட்சணம் செஞ்சு முடிக்கிறாங்க மக்கள். 120 அடி உசர ஏழு நிலை ராஜகோபுரம் ரொம்பவே அழகு! நம்மூர்க் கோவில்களில் பலவண்ணங்களில் பொம்மைகளை கோபுரத்தில் ஏத்திவைக்கிறதெல்லாம் கர்நாடகத்தில் இல்லை.  ரொம்ப ப்ளைனாக, நீட்டாக ஒரு சில பொம்மைகளோடு   இருக்கறதும்  அழகுதானே!  (உடிபி ஸ்ரீ கிருஷ்ணன் கோவில்  ராஜகோபுரத்தில் டெர்ரகோட்டா சிலைகள் இருந்தது நினைவுக்கு வருதே!)

கூட்டம் சேர்ந்தால் வியாபாரிகளும் வந்துருவாங்கதானே?   கனகாம்பரம் கிடைச்சது. பெரியண்ணன் அசோக்தான் பூ வாங்கலையான்னு ஞாபகப்படுத்தினார் :-)
இவ்ளோ கூட்டத்துலே நின்னு கோவிலுக்குள் போகமுடியுமான்னு தெரியலை. விசாரிச்சதில் ஒரு கட்டணம் கட்டினால் வரிசையில் இருந்து தப்பிக்கலாமாம். கொடிமரத்தாண்டை போய் வரிசையில் சேர்ந்துக்கலாம். அப்படியே  ஆச்சு.

விழாக்கோலம் பூண்டதுன்னு சொல்வாங்களே  அதேதான்.... எல்லா இடங்களிலும் மலர் அலங்காரங்கள். களைகட்டி நிக்குது அக்கம்பக்கம்!

முதலில் போய் மூலவரை தரிசனம் பண்ணிக்கிட்டோம். நல்ல அலங்காரம்! இந்தப்பக்கங்களில் எல்லாம் சிவலிங்கத்துக்கு ஒரு 'முகக்கவசம்' போட்டு வைக்கிறாங்க. எனக்கு ரொம்பவே பிடிச்ச சமாச்சாரம்.  முகம் இருந்தால்தான் பார்த்துப் பேசமுடியுமுன்னு எனக்கொரு எண்ணம்.

படம் உதவி: கூகுளாண்டவர்

அப்புறமாக் கோவிலுக்குள் சுத்திவந்தோம்.  அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்து  வேண்டுதல் செலுத்தும் மக்கள் வந்து குமிஞ்சுருக்காங்க. சின்னப்பொண்களுக்கு அலங்காரம் செய்து, கையில் கலசத்தில் தண்ணீர் கொண்டுவந்து அபிஷேகம் செய்வதும் வேண்டுதல்களில் ஒன்னாம். இதுக்கு தனியா ஒரு சந்நிதி இருக்கு!ரெண்டு குட்டிப்பொண்கள் அழகா இருந்தாங்க. உறவினர் அனுமதியோடு ஒரு க்ளிக் ஆச்சு!  ஆனாலும் கூட்டம் காரணம் கோணம் சரியா வரலை....
அடுத்தாப்லெ ஸ்ரீ சரஸ்வதிக்கு ஒரு சந்நிதி. இங்கே வித்யாரம்பம் நடக்குது . குழந்தையைப் பார்த்தால் பள்ளிக்கூடம் போற வயசாகலை. ஒருவேளை Pre K G அனுப்புவாங்களா இருக்கும்!  எல்லா வேண்டுதல் குழுவுக்கும் தனித்தனி மேளதாளம் என்றபடியால்  எல்லா திசைகளில் இருந்தும் நாதஸ்வரமும் மேளமும் கலந்துகட்டி வரும் ஒலியை என்னன்னு சொல்றது?
அப்பதான்  அஞ்சுபேர் நம்மூர் தெருக்கூத்துலே ராஜா வேஷம் போட்டு வர்றதைப்போல் வந்தாங்க. ஜடாமுடியும், கையில் வீரவாளுமா......  சந்நிதி  முன்னால் நின்னு  ஆட ஆரம்பிச்சாங்க. கூட்டமா வந்தாலும் ஒரு சந்நிதிக்கு ஒருவர் என்ற கணக்குலே தனித்தனியாத்தான் ஆடறாங்க.
இவுங்களுக்கு தனியா மேளதாளம் உண்டு. இதுவும் வழிபாட்டில் ஒரு வகைதானாம். ஆட்டக்காரர்களுக்கு ஒரு கட்டணம் செலுத்தினால் போதும்.  ஆங்.... சொல்ல மறந்துட்டேனே... இந்த ஐவர் பஞ்ச பாண்டவர்கள் !

அம்மனுக்குத் தனிச்சந்நிதி.  உள்ளே போய் கும்பிட்டுக்கிட்டோம்.  கிரிஜகுமாரி! பார்வதி! கொஞ்சம் பெரிய உருவம்தான். நம்ம  நெல்லை காந்திமதி உசரம் இருப்பாள்!

பெருமாளுக்கும் ஒரு தனிச்சந்நிதி கோவிலுக்கு நட்ட நடுவில், சிவன் பார்வதி சந்நிதிகளுக்கிடையில்  இருக்கு! ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸேவை சாதிக்கிறார். பக்கத்துச் சுவரில் ஆஞ்சி!  பெரிய திருவடியைக் காணோமேன்னு தேடுனதும், உள்ளே பாருங்கன்னு கைகாட்டினார் பட்டர்.  அப்புறம்  தீர்த்தம், சடாரி கொடுத்து ஆசி வழங்கினார்.  ஆமாம்.... பெருமாள் இங்கே எப்படி?  தங்கச்சியைக் கல்யாணம் பண்ணிக்கொடுக்க வந்தவர் இங்கேயே தங்கிட்டார்.

இந்த சிவன், நாராயணன் ரெண்டுபேருக்கும் தாய்தகப்பன் இல்லை பாருங்க. அதனால் ஒருத்தருக்கொருத்தர் உதவி செஞ்சுக்கறாங்க. விஷ்ணு கல்யாணத்தை சிவன் நடத்தி வைப்பார். சிவன் கல்யாணத்தை விஷ்ணு. இப்படி ஒரு ஒப்பந்தம் இருக்கு போல!

அது இருக்கடும், கோவில் கதைன்னு பார்த்தால் நான் நினைச்சதுபோல் நஞ்சு விழுங்கிய  சம்பவம் இல்லை. ஒரு காலத்துலே கேசியன் என்ற பெயரில் அசுரன் ஒருத்தன் இருந்துருக்கான். உடம்பு பூராவும் விஷமே! அசுரனாகப் பிறந்ததால் அவனுடைய கடமையைச் செஞ்சுக்கிட்டு இருக்கான். அது என்ன? தேவர்களைத் துன்புறுத்துவதுதான். வேறென்ன?  இம்சை பொறுக்காத தேவர்கள், சிவனிடம் முறையிட்டாங்க.

அவர் சொல்றார், 'நீங்க போய் கபிலா, மணிகர்ணிகா, கவுண்டினி என்ற மூணு ஆறுகளும் சேரும் சங்கமத்தாண்டை ஒரு யாகம் செய்யுங்க! அதுக்கு அசுரன் எப்படியும் வருவான். அவனை அந்த யாககுண்டத்தில்  நைஸாத் தள்ளிவிடுங்க. பாக்கியை நான் பார்த்துக்கறேன்'னு சொல்லி இருக்கார்.

அந்த கபிலா நதிதான் இப்போதைய கபினி ஆறு.  இந்தக்கோவிலும் கபினி ஆற்றின் கரையில்தான் இருக்கு!
அதேபோல் யாகம் செய்ஞ்சுக்கிட்டு இருக்கும்போது அதைக் கெடுக்க அசுரன்  கேசியன் வந்தான்.  அவனை ரொம்பவே அன்பா வரவேற்கிறமாதிரி 'நடிச்ச' தேவர்கள், சமயம் பார்த்து அக்னிகுண்டத்தில் தள்ளி விட்டுடறாங்க. யாககுண்டத்தில் அக்னி ரூபத்தில் இருந்த சிவன், கேசியனை 'ஸ்வாஹா' பண்ணிடறார். ஒழிஞ்சான் கேசியன்.

தேவர்களுக்குப் பரம திருப்தி.  சிவனை வணங்கி இங்கேயே எழுந்தருளணுமுன்னு  வேண்ட சுயம்பு லிங்கமா அங்கேயே  தங்கிட்டார்.  விஷமயமான கேசியனை விழுங்கியதால்  நஞ்சுண்டேஸ்வரர் என்ற பெயரும்  அமைஞ்சது.

('நஞ்சு உண்ட' என்று கேட்டதும் தமிழ்ப்பெயரா இருக்கேன்னு ஒரு யோசனை. சோழர்கள் ஆட்சி இதுவரையிலும் பரவி இருந்ததால் தமிழ்ப்பெயர் இருக்க வாய்ப்புண்டு. சோழர்கள் கட்டிய கோவிலாக இருக்கவேணும்.  சின்ன விசாரிப்பில்  ஸ்ரீகண்டேஸ்வரா என்ற பெயரும் இருப்பது தெரிஞ்சது.  கண்டம் என்றால் தொண்டைதானே?  நீலகண்டர்.... அப்ப...கன்னடர்களுக்கு இவர் ஸ்ரீகண்டேஸ்வரா. நமக்கு நஞ்சுண்டார்! சரியா வருதுல்லே? ) 

தேவர்களும் இவரை வழிபட்டுக்கிட்டு இருந்துருக்காங்க. அப்புறம் என்ன ஆச்சோ? இல்லை ... அரக்கன் தொல்லைதான் இல்லையேன்னு அலட்சியமா இருந்தாங்களோ என்னவோ...
காலப்போக்கில் சுயம்புமூர்த்தியைக் காணோம்.

அப்புறம் ஒருகாலத்தில் பரசுராமர், தன் தாய் ரேணுகா தேவியைக் கொன்ற பாவம் தீர , (தாயைக்கொன்னதுக்குத் தனிக்கதை இருக்கு! அழகை ரசிச்சதுக்குப் புருஷன் கொடுத்த தண்டனை!  ஒரு ஒன்பது வருஷங்களுக்கு முன் புலம்பி இருப்பது இங்கே! சுட்டியைக் கிளிக்கினால் போதும் !) 

தவம் செய்யறதுக்கு இந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார்.  குடில் அமைக்கவோ என்னவோ இடத்தைச் சுத்தம் செய்யும்போது அரிவாளால் வெட்டுப்பட்டு, ரத்தகாயத்தோடு லிங்கம் ஆப்ட்டு இருக்கு!  அதையே பிரதிஷ்டை செஞ்சு வழிபட்டுருக்கார். அந்த லிங்கம்தான் இது !!

(கர்நாடகா மாநிலத்தில் ரேணுகா தேவிக்கு ஏகப்பட்ட கோவில்கள் இருக்கு தெரியுமோ? )

பாவம் இந்த சிவன். அசுரனை விழுங்கிவச்சதால் எப்பவும் உக்ரமாகவே இருப்பாராம். போதாததுக்குப் பரசுராமரால் அரிவாள் வெட்டு வேற ! ப்ச்...

இந்த உக்ரம் கொஞ்சம் அடங்கணுமுன்னு  தினமுமே இவருக்கு அன்னாபிஷேகம் நடத்தறாங்களாம்!  அரிவாள் வெட்டுக்கு? அதுக்குத்  தனி மருந்து!   சுக்கு, வெண்ணெய், சர்க்கரை சேர்த்து சுகண்டித சர்க்கரைன்னு படைக்கிறாங்களாம்.





இப்போ இருக்கும் இந்தக்கோவிலுக்கு வயசு, ஒரு ஆயிரம் இருக்கலாம்.   பெருமாள் சந்நிதிக்கு எதிரில் இடப்பக்கம் முழுசும் தனித்தனியாக மூர்த்தங்கள். எல்லாமே அழகோ அழகு.  என்ன ஒன்னு..... தமிழ்நாட்டுக்கோவில்கள் போலவே சுத்தக்குறைவு. ப்ச்.... அந்தக்கூட்டத்திலும்  அவை என்னென்ன மூர்த்தங்கள்னு ஒரு பெண் என்னிடம் சொல்லிக்கிட்டே வந்தார்தான்.  ஆனால்  படங்கள் இருக்கே தவிர என்ன பெயர் சொன்னாங்கன்றது  நினைவில் இல்லை.....  (வயசாகுதுப்பா..... யானைக்கு மறதி வந்துருச்சு ) கன்னடம் வாசிக்கத் தெரிஞ்சவங்க பார்த்துப் பெயரைச் சொல்லுங்க. புண்ணியமாப்போகும்!
புருஷனும் அப்பப்ப முறுக்கிக்குவார் போல!   அடச்செல்லமே எதுக்கு இப்படி? 
வெளியே பிரகாரத்துக்கு வந்தப்ப அங்கே ஒரு பெரிய நந்தி, வாசலில் இருக்கும்  ராஜகோபுரத்தைப் பார்த்தபடி இருக்கார்! நாம் வேற வழியில் கோவிலுக்குள் போனதால் போகும்போது இவரைப் பார்க்கலை....   நல்ல அலங்காரம். பிரதோஷ நந்தியாம். இவருக்குத்தான் அபிஷேகம் எல்லாம்!  எதுக்கு ஸ்வாமியைப் பார்க்காமல் இப்படி?
(ஹிஹி.... அதொன்னுமில்லை.... புதுமணத்தம்பதிகள் இருக்குமிடத்தில் சந்நிதியைப் பார்த்தபடிக் கொட்டக்கொட்ட முழிச்சுக்கிட்டு உக்கார்ந்தா நல்லாவா இருக்கும்?)

ராஜகோபுரமே  லிங்கம் என்ற  எண்ணமாம். அதுதான் அங்கே பார்த்துக்கிட்டே உக்கார்ந்துட்டார்.  கோவிலுக்கு எதிரே வெட்ட வெளியில்  ஒரு மேடையில் சின்ன நந்தி உக்கார்ந்துருக்கார். அநேகமா அவரைப்பார்த்தபடி இவர்னு சொன்னால் பொருத்தமா இருக்காது?
நந்தி சந்நிதிக்குக் கொஞ்சம் அந்தாண்டை துலாபாரம்!  (இப்பெல்லாம் இதுவும் பலகோவில்களில் நடைமுறைக்கு வந்துருக்கு! ) ஆனாலும் சிவன் கோவிலில் பார்ப்பது எனக்கு  முதல்முறைன்னு நினைக்கிறேன்.
நந்திக்கு  முன்பக்கம் பிரகாரத்தில் நிறைய நாற்காலிகள் போட்டு வச்சவங்க நல்லா இருக்கணும். நம்மோடது ஸ்பெஷல் தரிசன டிக்கெட் இல்லையா? அதுக்கு ஒரு டிக்கெட்டுக்கு ரெண்டு லட்டுன்னு பிரஸாதம் வேற கிடைச்சது. லட்டு சமாச்சாரம் முதலில் நமக்குத் தெரியலை.  பக்கத்து நாற்காலிக்காரர்தான் லட்டு வாங்கிக்கலையான்னு கேட்டு விவரம் சொன்னார்.  (இந்த லட்டு பிரஸாதம் கூட பலகோவில்களில் நடைமுறைக்கு வந்தாச்சு. அதனால் வெறும் லட்டுன்னு சொல்லாமல் திருப்பதி லட்டுன்னால்தான் அதுக்குப் பெருமை!  இந்தத் திருப்பதி லட்டுமே சுமார் நூறு வருஷத்துக்கு முன் வந்த சமாச்சாரம்தான்! )





அப்போ.... உச்சிகாலபூஜைக்கு முன்  புறப்பாடு. கௌதம மஹரிஷி இங்கே உச்சிகால பூஜை செய்வதாக ஐதீகம்.    மேளதாளத்துடன் சின்னப்பல்லக்கில் பிரகாரத்தைச் சுற்றி வந்தார்.  கோவில் தலவிருட்சமான  வில்வ மரத்தடி மேடையில் ரெண்டு நிமிஷம் உக்கார்ந்தார்!  மரத்தில் ஏராளமான  காய்கள்!
மற்ற நாட்களில்  கோவில் திறந்திருக்கும் நேரம் இப்படி. ஆனால் இன்று விசேஷதினம் என்பதால் பகலில் கோவிலை மூடுவதில்லை!
கோவிலை விட்டு வெளியில் வந்தால்  வலப்பக்கம் புள்ளையார் தனிக்கோவிலில். சங்கடஹர கணேஷ்! இன்றைக்கு சதுர்த்தி என்றதால் இங்கேயும் கூட்டமோ கூட்டம். உள்ளே போய் கும்பிட்டுக்கிட்டோம்.

கோவிலுக்கு அந்தாண்டை கொஞ்ச தூரத்தில் பிரமாண்டமான சிவன் சிலை!  கூட்டம்காரணம், இந்த  வழியில் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அதனால் கொஞ்சம் சுத்திக்கிட்டுப் போகவேண்டியதா இருந்தது.
முன்னழகும் பின்னழகும் அருமை கேட்டோ!

'தென்காசி'ன்னு இன்னொரு பெயரும் இருக்கும் இந்த நஞ்சன்கூடு க்ஷேத்ரத்தில்  ரதோத்ஸவமும் ரொம்பப் பிரபலம்.  கர்நாடகாவில் இருக்கும் தேர்களில் இங்கேதான் உயரம் அதிகமுள்ள தேர் இருக்காம். 90 அடி உசரம். பார்க்கச் சாதாரணமாத்தான் ஒரு மூலையில்  கோவிலுக்குப் போகும் வழியில் நின்னுருந்துச்சு.  அதன் தலைக்குமேலே கும்மாச்சியாட்டம் கட்டி எழுப்பி தொன்னூறு அடி பண்ணிட்டாங்கன்னு நினைக்கிறேன்.
நம்ம திப்பு சுல்தான் , தன்னுடைய  பட்டத்து யானைக்குக் கண்பார்வைக் குறைபாடு வந்தப்ப , இந்தக் கோவிலில் வேண்டிக்கிட்டாராம். கண் சரியானதும் ஒரு மரகத லிங்கத்தைக் கோவிலுக்குக் கொடுத்துருக்கார்.கூடவே கொஞ்சம் நகையும் நட்டும்!  (இப்ப இருக்கான்னு தெரியலை..... )

வீரபத்திரருக்கு இங்கே விசேஷ பூஜை இருக்கு. நிறைய ஆயுதங்களோடு அற்புதமான சிலைன்னு கேட்டுருந்தாலும், கூட்டம் காரணம் எங்கேயும் நின்னு விசாரிச்சுப் பார்க்க முடியலை...

மைசூரில் இருந்து ஒரு இருபத்தினாலு கிமீ தூரம்தான் நஞ்சன்கூடு.  மொதல்லேயே தெரிஞ்சுருந்தால், சாதாரண நாளில் வந்து தரிசனம் செஞ்சுக்கிட்டுக் கோவிலை இன்னும் நல்லாவே சுத்திப் பார்த்து இன்னும் கதைகளைச் சேகரிச்சு இருக்கலாம்தான்.

 தொடரும்.......:-)


7 comments:

said...

நன்றி.
சிலைகளில் மார்க்கண்டேயர் (திருக்கடையூர்) இருக்கார்.

said...

நஞ்சுண்டேஸ்வரர் கோவில்போய் வந்த நினைவுகளை மீட்டெடுத்தது

said...

நஞ்சண்கூடு அழகான சிற்றூர். போயிருக்கேன். இப்ப எவ்வளவோ மாறியிருக்கு போல. அப்பல்லாம் இவ்வளவு கூட்டமிருந்த நினைவில்ல. ஒருவேளை நீங்க திருவிழா நேரத்துல போனதால கூட்டம் இருந்திருக்கலாம்.

நஞ்சுண்டய்யா - இது கருநாடகத்திலேயே பரவலமாக இருந்த பெயர். சுரேஷா ரமேஷா கிரீஷா பேர்கள் பிரபலமாறதுக்கு முன்னாடி இந்தப் பேர் நிறைய இருந்தது. முந்தைய தலைமுறையோட வழக்கொழிந்த பேர். இப்ப யாரும் வைக்கிறதில்ல.

நஞ்சு உண்ட ஐயா தான் நஞ்சுண்டய்யா. சோழர்கள் ஆட்சிக்கு உட்பட்டு இருந்ததாலன்னு இல்ல. கன்னட மொழியில் வடமொழியை நீக்கீட்டா அப்படியே தமிழ்தான். ஹளைய கன்னடா கிட்டத்தட்ட செந்தமிழ் நடைக்கு பக்கத்துல வரும்.

புருஷன் முறுக்கிக்குவார்னு நீங்க போட்டிருக்கும் சிற்பம் நஞ்சு உண்ட நாதன் கழுத்தைப் பிடித்து நஞ்சு உள்ள போகாம மனைவி தடுக்கும் சிற்பம். கதைதான்னாலும் சுவையான கற்பனை.

நீங்க பாத்த பிரம்மாண்ட சிவன் முன்னாடி கிடையாது. இப்பத்தான் வெச்சிருக்காங்க போல.

நல்லா மழை பெய்யும் இடமான கொரங்கு பன்னி நாய்னு எல்லா விலங்குகளும் வாழுது. நம்மூர்லயும் நல்ல மழை பெஞ்சா நல்லது.

said...

வாங்க விஸ்வநாத்.

ஆமாம். நானும் கவனிச்சேன்தான். என்ன பெயர் எழுதியிருக்காங்கன்னு தெரியலை.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

பழைய நினைவுகள், பரம சுகம்!

said...

வாங்க ஜிரா.

சொன்னது அத்தனையும் ரொம்பச் சரி!

அந்தக் கொஞ்சல் சிற்பம், மென்னியைப் பிடிக்கறதா? ஹாஹா.... முதலில் அது தோணவே இல்லை எனக்கு !

இப்பெல்லாம் பெரியபெரிய சிலைகள் வைக்கறது ஒரு காலத்தின் கட்டாயமோ என்னவோ!!!

said...

சிற்பங்கள் அனைத்தும் அழகு.