Friday, November 02, 2018

திரிவேணி சங்கமத்தில் ஆஸ்ரமம் !!!!!(பயணத்தொடர், பகுதி 28 )

பாகண்ட மகரிஷி இங்கே ஆஸ்ரமம்  அமைச்சுத் தன் சீடர்களுடன் இங்கே தங்கி சிவனை பூஜித்த புண்ணியத்தலமாம் இந்த பாகமண்டலா என்னும் ஊர்! நாம் போய்வந்த தலக்காவேரியும் இதைச் சேர்ந்ததுதான்.
பாகண்ட முனிவர், சிவ பெருமானையும், ஸ்ரீ சுப்ரமண்யரையும் மனதில் நிறுத்தி தவம் செய்யறார்.  தவத்தை மெச்சிய  சிவன் (சின்ன பூஜைக்கே மகிழ்ந்து வரம் கொடுக்கும் பழக்கம் இவருக்கு இருக்கு!) மகரிஷிக்குத் தரிசனம் கொடுத்ததும், அந்தக் கால வழக்கப்படி 'இங்கே தங்கி மக்கள் அனைவருக்கும் அருள்புரியவேணுமு'ன்னு விண்ணப்பிக்க,  சரின்னுட்டு,   மகரிஷி பூஜித்து வந்த சிவலிங்கத்திலேயே  தங்கிட்டார்.  பாகண்ட மஹரிஷி பூஜித்து வந்ததால் ஸ்வாமிக்குப் பாகண்டேஷ்வரர் என்ற திரு நாமம்! தினமும் ருத்ராபிஷேகம் நடத்திக்கிறார்!
அப்பாவே வரம் கொடுத்து இங்கே தங்கி இருக்கும்போது, மகனுக்கு மட்டும் அப்பாகூடவே இருக்க ஆசை இருக்காதா?  அவரும்  இந்த இடத்துக்கு ஸ்கந்த க்ஷேத்ரா என்ற பெயர் சூட்டி, இங்கேயே தங்கிட்டார்.  அப்பாவும்  தம்பியும் இங்கே இருக்கும்போது, அண்ணனுக்கும்   ஆசை இருக்காதா?  புள்ளையாரும் இங்கே வந்துட்டார்.  குடும்பத்துலே மூணு பேர் இங்கே என்னும் போது.... அம்மா?  அவுங்களும்  இங்கே ஒரு சந்நிதியில் இடம் பிடிச்சாங்க!

தங்கச்சி குடும்பமே  அங்கிருக்கும்போது..... நாமும் போனால் என்ன? அண்ணன் வந்து சேர்ந்தார். பௌர்ணமிகளில் சத்யநாராயணா பூஜை அமர்க்களப்படுது இங்கே!
காலை ஆறுமணிக்குக் கோவில் திறந்தால் மாலை எட்டரை மணிக்கு நடை சாத்தறாங்க.  விசேஷ தினங்களைத் தவிர மற்ற நாட்களில் பகல் ஒன்னரை முதல் மூணு வரை சந்நிதியை மூடி வைக்கிறாங்களாம். (பட்டரின் லஞ்ச் டைம்!)

பெரிய வளாகத்தில்  அங்கங்கே கேரளக்கோவில்கள் போலத் தனித்தனி சந்நிதிகள். சுத்திவர திண்ணையோடும் வெராந்தாக்கள், உள் ப்ரகாரம் எல்லாம் அருமையா இருக்கு!
க்ஷேத்ரபாலகர், உள்பிரகாரத்துலேயே  குத்துக்கல்லா உக்கார்ந்துருக்கார்!

 கோவில் குருக்களின் குடை!
கோவிலில் அவ்வளவாக் கூட்டம் இல்லை. நாமும் ஒவ்வொரு சந்நிதியாப் போய்க் கும்பிட்டோம்.  பின்வாசலுக்கு வந்தால்..... இங்கேயும் முன்வாசல் மாதிரியே மூணடுக்குக் கோபுரம்!  அதுக்கு அந்தாண்டை நதி! நிறையப் படிகள் இறங்கிப்போனால் நல்ல டைல்ஸ் போட்ட  வெளிமுற்றம்!  சனமெல்லாம் இங்கேதான் இருக்காங்க. ஒருவேளை இதுதான் முன்வாசலோ என்னவோ?
இந்த இடம் ஒரு திரிவேணி சங்கமம் கூட! கன்னிக்கா நதியும்,  சுஜ்யோதி நதியும் காவிரியுடன் கலக்குமிடம். இதுலே சுஜ்யோதி, அந்தர்வாஹினியா (நம்ம சரஸ்வதி போல) இருக்காளாம்.  பித்ரு தர்ப்பணம் கொடுப்பது விசேஷம் என்பதால்  கூட்டம் இருந்துக்கிட்டேதான் இருக்குன்னு தகவல். இந்த மழை காரணம் அவ்வளவா கூட்டமில்லைன்னு நினைக்கிறேன்.
சனம் இந்த  இடத்துலே 'ஒன்'  போய்வைக்குது போல...........  'போகாதே'ன்னு ஒரு  போர்டு வச்சுருக்காங்க. போர்டு வைக்கிற அளவுக்கு இருக்குன்னா.....  ப்ச்..... என்ன மக்கள்ப்பா?    கொஞ்சம் நாகரிகமா நடந்துக்கக்கூடாதா?
உள்ளே போன அதே வாசல் வழியாக்கோவிலை விட்டு வெளியே வந்தோம். செருப்பு இங்கேதானே விட்டுருக்கோம் :-) திரும்பி எப்படி தண்ணீரைக் கடக்கப்போறோமோன்னு சின்னதா கவலை.

கொஞ்சம் தண்ணீர் ரோட்டுமேலே இருந்து வடிஞ்சுருக்கு. ஆனாலும்  காவிரியில் வெள்ளம்தான்.  ட்ராக்டரும், படகுமா ஆட்களை இங்கிட்டும் அங்கிட்டுமாக்  கடத்தி விடுது. பத்து ரூபாய் சார்ஜ்.


பசங்க சிலர் நின்னுக்கிட்டு இருந்தாங்க. விசாரிச்சேன்.  ப்ளஸ் டு மாணவர்களாம். பஸ் இப்போ வருமாம்.  நல்லது .... பஸ்ஸில் ஏறி அந்தாண்டை போயிடலாமுன்னு நாங்களும் கூடவே நின்னோம். பஸ்  வந்தது.  அடுத்த ஸ்டாப்னு  டிக்கெட் வாங்கிக்கிட்டுத் தண்ணி ரோடைக் கடந்து போனதும் இறங்கிக்கிட்டோம்.
அசோக்கை செல்லில் கூப்பிட்டால், இதோ வரேன்னார்.  எல்லா ட்ரைவர்களுமா அங்கே பெரிய  மீட்டிங்!

திரும்ப  மடிகேரிப்பயணம் சுமார் ஒரு மணி நேரம்.  நேராப் போய் நின்னது அதே  அம்பிகா உபஹாரில்தான்.  ஊரைச்சுத்திச் சுத்தி வரும்போது   மஸாலாப்பொருட்கள்  விற்கும் கடைகள் ஏகப்பட்டவை கண்ணில் பட்டது. மூட்டை மூட்டையாப் போட்டு வச்சுருக்காங்க. ஒரு கடைக்குள் போய் என்ன ஏதுன்னு பார்க்கணுமுன்னு சொல்லிக்கிட்டே இருந்தேனா....
பார்க்கிங் கிடைக்கலைன்னு  இப்போக் கொஞ்சம் தள்ளி வண்டியை நிறுத்தினார் அசோக். அப்பப் பார்த்தால்.....   இதே கட்டடத்தில்  ரெண்டு மூணு மஸாலாக்  கடைகள்! சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு வரணும்.

எனக்கு என்னமோ ரொம்பவே பசி எடுக்குதுன்னு  ஒரு சௌத் இண்டியன் தாலியும், நம்மவருக்கு ஒரு வெஜிடபுள் பிரியாணியும் சொன்னோம்.  அசோக் வேறெங்கியோ போய் உக்கார்ந்துட்டார்.  பிரியாணி ரொம்பவே சுமாராம். எனக்கு  தால் போதும். அதனால்  அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டோம். லிமிட்டட் மீல்ஸ் என்பதால் பிரச்சனை இல்லை :-)
மாடியில் அம்பிகா.... கீழே மஸாலா !
அத்திப்பழ மாலை, ஏலக்காய் மூட்டை, கிராம்பு, பட்டை,  சோம்பு, காஃபின்னு ஏகப்பட்டவைகள்.  கடைப் பணியாளர் ஆஸிஃப், கூடவே சுத்தி வந்து  எல்லாம் விளக்கினார்.     வாசனைத் தைலம்,  மற்ற தைல வகைகள், எல்லாம் ரோல் ஆன் சமாச்சாரமாச் சின்னச் சின்ன புட்டிகளில்.


நாலைஞ்சு பொருட்கள் வாங்கிக்கிட்டோம்.  அதுலே ஜீரா கோலி ஒன்னு!  சாப்பிட்டதெல்லாம் ஜீரணமாகிருமாம் :-)  மகளுக்காக ஒரு காஃபி. இப்பெல்லாம்  காஃபி அதிகம் குடிப்பது மகள்தான்.

'வசதி'க்குப் போய்ச் சேர்ந்தப்ப மணி ரெண்டரை.  ஜெனெரேட்டர் சத்தம் நின்னுபோயிருக்கு. அதனால் நாமும் அறையை மாத்திக்கிட்டோம்.  அரை மணிநேரம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டுக் கிளம்பலாம் ஒரு இடத்துக்கு!

கண்ணை மூடினாலும் காது மூடுதா என்ன? பக்கத்து அறையில்  புதுசா ஒரு கூட்டம் வந்துருக்காங்க போல. ஏழெட்டுப்பேர்  வெராந்தாவில் நின்னுக்கிட்டுச் சத்தம் போட்டுப் பேசிக்கிட்டே..... இருக்காங்க.

கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்த 'நம்மவர்'  பொங்கிட்டார்.  எழுந்து போய் ,  'அறைக்குள் போய் பேசக்கூடாதா? கொஞ்சம் மெதுவாப் பேசுங்க'ன்னு 'சத்தம்' போட்டாரா....  எல்லோரும் கப்சுப். தமிழாட்கள்தான்.  பொறுமையின் திலகமே பொங்கிருச்சுன்னா எவ்ளோ சத்தமா இருந்துருக்கும் பாருங்க !

தொடரும்.........:-)


11 comments:

said...

அருமை நன்றி.

//பொறுமையின் திலகமே பொங்கிருச்சுன்னா // நீங்க screw அவ்ளோ டைட் பண்ணிருப்பீங்க

said...

தொடர்ந்து பயணிக்கிறேன். அருமையான புகைப்படங்களுடன் நேரில் பார்ப்பதைப் போல உணர்த்தும் பதிவுகள். நன்றி.

said...

ரசித்துப் படிக்கிறேன். தொடர்கிறேன்.

said...

பொது இடத்துல சிறுநீர் போறது இந்திய மக்களோட... குறிப்பா ஆண்களோட பலவீனம் போல.

மசாலாக்கடைகள் வழியாகப் போனாலே ஒரு நல்ல கலந்த வாசம் வரும். நீங்க கடைக்குள்ளயே போயிருக்கீங்க. துருக்கி இஸ்தான்புல்ல ஸ்பைஸ் மார்க்கெட்டுன்னே ஒரு எடம் இருக்கு. ஒருவாட்டி நாம உள்ள போயிட்டு வெளிய வந்தா நாமளே கமகமப்போம். ஆனா அந்த ஊர் மசாலாக்கள்ள எத வாங்குறது வாங்கக்கூடாதுன்னு தெரியல.

பொது இடத்துல நட்டநடூல நின்னுக்கிட்டு கச்சாமுச்சான்னு கத்துறதுல நம்மாளுகள அடிச்சுக்கவே முடியாது.

said...

முந்தைய பதிவுகள் நிறைய இருக்கிறது படிக்க.... பிறகு வருவேன்.

திரிவேணி சங்கமம் - நல்ல அனுபவம் தான். கோவில் பளிச்சென்று இருக்கிறது. பார்க்க ரம்யமாய்!

மழைக்காலப் பயணங்கள் எனக்கும் பிடிக்கும்.

தொடர்கிறேன்.

said...

வாங்க விஸ்வநாத்.

நானா? க்க்கும்.... எங்கே டைட் பண்ணறது? நானே ஒரு லூசு :-)

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

மனம் நிறைந்த நன்றி !

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

நன்றி !

said...

வாங்க ஜிரா.

இங்கேயும் ஏராளமான வகைகள். நான் குறிப்பிட்ட ஒரு ஏழெட்டுவகைகளைத்தான் சமையலில் பயன்படுத்தறதால்..... புது வகைகளை ஒன்னும் வாங்கலை.

பயணங்களில் எல்லோரும் கொஞ்சம் பல்லைக் கடிக்கத்தான் வேணும்.

நம்மாட்கள்...... ப்ச்........

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

மழைக்காலம் , ட்ராப்பிக்கல் பிரதேசம் என்றால் பிரச்சனை இல்லை. குளிர் நாடுகளில் எனக்கு மழைக் காலம் கஷ்டமே!

நேரம் கிடைக்கும்போது வாசிக்கணும். எனக்கும் ஏராளமாச் சேர்ந்துபோயிருக்கு!

said...

ரொம்ப நல்லா இருக்கு மா ..

அங்க போகும் போது இங்க வந்து குறிப்பு எடுத்து வச்சுக்கணும்...