Wednesday, October 31, 2018

காவிரித்தாயே...... காவிரித்தாயே..... !!!!!(பயணத்தொடர், பகுதி 27 )

இவ்ளோதூரம் பயணம் செஞ்சு மடிகேரி வரை வந்ததுக்குக் காரணமே காவிரிதான். தலைக்காவேரி போகணுமுன்னு ரொம்பநாள் ஆசை.  என்னம்மாத்தான் வர்றாள்னு பார்க்கணும்...  ஆனா.....இருந்துருந்து நாம் வந்த சீஸன் இப்படி மழைகாலமாகிப் போச்சு.
காலையில் வசதியில் ப்ரேக்ஃபாஸ்ட் ஆச்சு.  பாய்ஸ் மாடியில் கிச்சனில்  தோசை சுட்டுக்கொடுக்கறாங்க.  இட்லி, வடை, பொங்கல், உப்புமா  எல்லாம் கீழே கிச்சனில் இருந்து வருது.
ஒன்பதுக்குக் கிளம்பிட்டோம்.  அடுத்த அஞ்சாவது நிமிட்டில் பூக்கடையைப் பார்த்துட்டு வண்டியை ஓரங்கட்டினார் அசோக் :-)  கனகாம்பரம் கிடைக்கலை. ஆனால் மல்லி  இருந்துச்சு. அதுவும் நம்மூர் மல்லி இல்லைப்பா.... காட்டுமல்லி.  சரி ஏதோ ஒரு பூவுன்னு வாங்கிக்கிட்டாள் இந்தப் பூப்பிசாசு :-)


முதல் முப்பத்தியேழு கிமீ தூரம்  சதசத மழையில் அங்கங்கே, சின்ன ஊர்களையும்  மஸாலாத் தோட்டங்களைக் கடந்தும் போறோம்.  ஒரு திருப்பத்தில் நமக்குமுன்னே ஏகப்பட்ட வண்டிகள் கோணாமாணான்னு கண்ட இடத்தில் நிக்குதேன்னு  அசோக்  வண்டியை நிறுத்திட்டுப் போய் தகவல் கொண்டு வந்தார்.  ஆறு குறுக்கிடும் ரோடு. அதுலே வெள்ளம் கரைபுரண்டு ஓடுது! இனி முன்னேற ச்சான்ஸே இல்லை!
வெள்ளமுன்னதும் நாங்களும் இறங்கிப்போனோம்.  சாலை (!) ஓரத்துலே  பலர் இங்கும் அங்குமா  கொஞ்ச தூரம் நடந்து போயிட்டுத் திரும்பி வர்றாங்க.  ஆனால் நாம் அப்படிப்போய் அதுக்குப்பிறகு எங்கே?
இப்போதைக்கு வெள்ளம் வடியாது. மலையில் கனமழைன்னு தகவல். ரெண்டு மூணுநாள் ஆகலாமாம்.  காவிரிக்கு நம்மப் பார்க்க விருப்பம் இல்லை... திரும்பவேண்டியதுதான் போல.....  ப்ச்....


அங்கே நின்னுக்கிட்டு இருந்த மக்கள் கூட்டத்தில் இருந்து வெவ்வேற  கைடன்ஸ் நமக்குக் கிடைச்சுக்கிட்டே இருக்கு!  எப்படியாவது (?)இந்த ஆற்றைக் கடந்து போயிட்டால்.....   அந்தப்பக்கம் இருந்து  வண்டி கிடைக்குமாம்.  ஆறு பெருகி ரோடை மறைச்சதால் எது ரோடு, எது ஆறுன்னு புரிஞ்சால்தானே அந்தாண்டை போறதைப்பற்றி யோசிக்க முடியும்?

பெருமாள் உடனே  உதவிக்கரம் ஒன்னு அனுப்பினார்.  ஜீப் ஒன்னு  சிமெண்டுக் கற்களை எடுத்துக்கிட்டு அந்தாண்டை போகுதாம். பழக்கப்பட்ட உள்ளூர் வாசி என்பதால்   ரோடெல்லாம் நல்லாவே தெரியுமாம்.  வர்றீங்களான்னு கேட்டார்  ஜீப்பில் இருந்தவர். அவர் வீட்டுக்குத்தான் கல் எடுத்துக்கிட்டுப் போறாராம்.
பெருமாளே.... நீயே  கதின்னுட்டு அதுலே ஏறிக்கிட்டோம். கற்குவியலின் மேலே ஒரு ஓரமா உக்கார்ந்தோம்.  இஞ்ச் இஞ்சா நகர்ந்து போகுது ஜீப்.  நான் கேசவா நாராயணா சொல்லிக்கிட்டு (மனசுக்குள்ளேதான்) இருந்தேன். ஒருவழியா அந்தாண்டைப்பக்கம் போயிட்டோமுன்னு வண்டியை நிறுத்தினதும் நாங்க இறங்கி நன்றி சொல்லிட்டுக் கொஞ்சம் அன்பளிப்பு கொடுத்தால்  வாங்கிக்கமாட்டேன்னுட்டார் கல்காரர். 
வாடகை ஜீப்தானாம். அதனால் ட்ரைவருக்கு அதைக் கொடுத்தார் 'நம்மவர்'. நம்ம கூடவே இறங்கின கல் ஓனர்,   நின்னுக்கிட்டு இருந்த ஆட்டோக்களில் ஒன்றைக் கைதட்டிக் கூப்பிட்டு சார்ஜ் எல்லாம் பேசி முன்னூறு கொடுங்கன்னுட்டு அதுலே நம்மை ஏத்தி விட்டுட்டார்.  இது போகவும் வரவும் அங்கே அரைமணி நேரக் காத்திருப்புக்கும் சேர்த்துதானாம்.
நல்ல ஏத்தமான ரோடு. ஆட்டோ  உம் உம்னு முனகிக்கிட்டே  மேலே போகுது.  மழைச்சாரல் உள்ளே அடிக்காமல்  மூடிவிட்டதால் பக்கவாட்டுக் காட்சிகள் ஒன்னும் தெரியலை. க்ருஷ்ணார்ப்பணமுன்னு  அப்பப்ப ச்சும்மா க்ளிக் பண்ணிக்கிட்டு இருந்தேன். வர்றது வரட்டும்.
சுமார் இருபத்தியஞ்சு நிமிட்லே  ஆட்டோ நின்னதும் பார்த்தால்  நம்மை வரவேற்க மூணு செல்லம்ஸ் தயாரா இருக்காங்க!  'நம்மவர்' கையில் இருக்கும் மஞ்சப்பையைக் கவனிக்குது கண்கள். பைக்குள் குடை..... அடடா... இப்படி ஒரு வரவேற்பு இருக்குமுன்னு தெரிஞ்சுருந்தா எதாவது வாங்கியாந்துருக்கலாமே....




'ஒரு ஓரமா நான் நிப்பாட்டிக்கிறேன்.  செருப்பை வண்டியிலே விட்டுட்டு, ஒரு அரைமணியில் போயிட்டு வந்துருங்க'ன்னார் ஆட்டோக்காரர்.  பெருசா ஒரு நுழைவு வாயில் மண்டபம் போல ! நான் வழி காமிக்கிறேன்னு செல்லம் ஒன்னு முன்னாலே கூட்டிக்கிட்டுப் போகுது.

மழை நிக்கறதும் வலுக்கறதுமா அதுபாட்டுக்கு விளையாடுது. நாங்களும் குடையை விரிப்பதும் மடக்கறதுமா எதிர்விளையாட்டில்.
படிகளேறிப்போனால்  மேலே நல்ல அழகான தரையுடன் முற்றம். கோவில் மணி வரைக் கூட்டிப்போன செல்லம் அதுதான் அதுக்கான எல்லை என்றதுபோல் நின்னுட்டு, 'நீங்க போயிட்டுவாங்க'ன்னு சொல்லுச்சுன்னு எனக்குப் பட்டது :-)  என்ன அறிவுப்பா !!

கூட்டத்தை மேனேஜ் பண்ணும் கம்பித்தடுப்புகள் ஒரு ஓரமா! நவ்வாலு பேரா ரெண்டு குழு நமக்கு முன்னால் போய்க்கிட்டு இருக்காங்க. முற்றத்தின்  பாதி தூரத்தில்  மேலே போகும் படிகள். நமக்கு வலப்பக்கம் கீழே போகும் படிகள்.  கீழேதான் காவிரியம்மன் சந்நிதி!


நாங்க கீழே இறங்கிப்போனோம். நமக்கு ஏகாந்த ஸேவை லபிச்சது!  பட்டரையும் காணோம். சின்னதா ஒரு சந்நிதியும், அதுக்கு எதிரில் சின்னதா தொட்டிபோல ஒரு அமைப்பும் அதுக்கு எதிரில் செவ்வகவடிவில் ஒரு குளமும், குளத்துப்படிக்கட்டில் சந்நிதியைப் பார்த்து ஒரு நந்தியும்!
 தொட்டிக்குளத்துக்கு வெள்ளியில்  கரை கட்டி, திருவாசி வச்சு , அதுக்கொரு பூச்சரமும் சூடியிருந்தாங்க. சின்னதா ஒரு மூணடுக்கு வெள்ளிக்குடையும் !  அழகு !


 நாம் படி இறங்குவதைப் பார்த்துட்டாரோ என்னவோ...   அதுக்குள்ளே அந்தாண்டை இருந்த படிகளில்   பட்டரும் கீழிறங்கி வந்தார்.  'அர்ச்சனை செய்யணுமா'ன்னு கேட்டதும், அதுவரை அதைப்பற்றி யோசனையே இல்லாம இருந்த நான் ஆமாம்னு தலையை ஆட்டினேன். மழையில்  நனையாமல் இருக்க சந்நிதியைத் தொட்டடுத்துக் குடை ஒன்னு வச்சுருந்தாங்க.

சந்நிதிக்குப்பின்னால் கைநீட்டி அங்கிருந்த குங்குமப் பாக்கெட்டையும், அர்ச்சனைத் தட்டையும் வெளியில் எடுத்த பட்டர், என்கையில் தட்டைக் கொடுத்துட்டு, அதில் குங்குமப்பொதியைத் திறந்து குங்குமத்தைக் கொட்டினார். நான் ஒரு கையில் குடையும் ஒரு கையில் தட்டுமா நிக்கறேன்.
'நம்மவர்' உடனே என் குடையை வாங்கி என் தலைக்கு மேலே பிடிச்சார். அவர் கையில்  இப்போ ரெட்டைக்குடை :-)

பட்டர் கையில் இப்போ இன்னொரு தட்டு!  சங்கல்பம் செஞ்சதும் அவர் மந்திரம் சொல்லச் சொல்ல நான் சிட்டிகை சிட்டிகையா குங்குமத்தை எடுத்து அந்தத் தட்டில் போடறேன். ஸ்வாஹா........  இல்லை. ஸமர்ப்பியாமிதான் !

பத்து நிமிஷம் போல குங்கும அர்ச்சனை! அப்புறம் குட்டியா இருக்கும் சந்நிதிக் கதவுக்குள் கைவிட்டு ஒரு வில்லை கற்பூரம் எடுத்து ஆரத்தியும் ஆச்சு.

'அம்மா தாயே காவிரி, உன்னை வச்சு அரசியல் செஞ்சுக்கிட்டு இருக்காங்க... இந்த அரசியல் வியாதிகளை நம்பவே கூடாது.

அதையெல்லாம் கண்டுக்காமல் காய்ஞ்சு கிடக்கும் தமிழ்நாட்டுக்குக் கொஞ்சம் இரக்கம் காட்டு! தமிழ் நாட்டை வாழ வை! ' னு மனசார வேண்டி நின்னேன். கொஞ்சம் கண்கூடக் கலங்கிருச்சு.... ப்ச்...

பட்டரிடம் ஒருக்களிச்ச 'சந்நிதிக்குள்ளே என்ன சாமி இருக்கு... சிலையா'ன்னு கேட்டதுக்குக் கதவைத் திறந்து காமிச்சார். சின்னதா ஒரு குழிக்குள் தண்ணீர்!!  உள்ளே ஒரு குத்துவிளக்கு எரிஞ்சுக்கிட்டு இருக்கு. காற்றுக்குப் பயந்து கதவை மூடிவச்சதாச் சொன்னார்.

படம் எடுக்கலாமான்னு கேட்டதுக்கு,  'அனுமதி இல்லை'ன்னார்.  அப்ப சரி. நாங்க இன்னொருமுறை கும்பிட்டுக்கிட்டுப் படியேறி மேலே வந்துட்டோம். அடுத்து மேலேறிப்போகும் படிகள் வழியா மேல்முற்றத்துக்குள் போனால் இங்கே நாலைஞ்சு தனித்தனி சந்நிதிகள்!  எல்லாம் கேரளா கோவில்களில் இருக்கும் வகையில், இங்கேயும்!  சிவன், புள்ளையார், அகஸ்தியர், விஷ்ணுன்னு நினைக்கிறேன்.  சட்னு நினைவுக்கு வரமாட்டேங்குது.....

சுத்திவர மலைகள். ப்ரம்மகிரி என்று பெயராம். காவிரிநதியின் உற்பத்தி ஸ்தானம் இதுவே!  கடல்மட்டத்தில் இருந்து நாலாயிரத்து நானூறு அடிகள் உயரத்துலே பிறந்து,  ஐநூறு மைல்கள் ஓடிக் கடைசியாக பூம்புகார் நகரில்  கடலோடு கலக்கின்றாள். இயற்கையின் கொடையை அரசியல் எப்படியெல்லாம் ஆக்கிவிட்டுருக்குன்னு பாருங்க....
திரும்பப் படியிறங்கிவந்து கீழ்தளத்துக்குப் போறோம்.   மேலே குளத்தில் இருந்து வரும் தண்ணீர் வெளியேற ஒரு அமைப்பு!  தண்ணீர்  அடைப்புகளை மீறி பீறிக்கிட்டு வருது!
அங்கே  ஆண்கள்  உடை மாற்றிக்கொள்ளும் அறைகள் இருந்தது. அப்போ ரெஸ்ட் ரூம் இருக்குமோன்னு தேடிக்கிட்டே  கீழ்தளத்து வெளிப்பக்கத்துலேயே  போயிட்டோம்.  அதுபோய்க்  கடைசியில்  முகப்பு மண்டபத்தாண்டை  கீழ்ப்பகுதியில்  சேருது.  நல்ல சுத்தமான கழிப்பிடம். அதானே ....  தண்ணிக்கென்ன பஞ்சம்?  ஆனால் போதுமான வெளிச்சம் இல்லை.  பெண்கள் உடை மாற்றிக்கொள்ளும் இடமும் இங்கேயே......

காலை ஆறு முதல் மாலை ஆறுவரைதான் இந்தக் கோவில் திறந்துருக்கும். ஆறுக்கு மேல் அனுமதி இல்லை!
மண்டபத்தாண்டை நமக்காகக் காத்திருக்கும் செல்லங்களைப் பார்த்ததும் மனசு இளகினது   உண்மை.  ஆட்டோ நிக்கற இடத்துக்குப் பக்கத்துலே ஒரு சின்ன அறையில் பொட்டிக்கடை போல இருக்கேன்னு பிஸ்கெட் கிடைக்குமான்னு  பார்த்தால்.... கடலை முட்டாய் இருக்காம்.


அப்பதான் நம்மவர்  சொல்றார், 'Bபேக் Pபேக்'கிலே  முறுக்கு இருக்குன்னு!  கடலை முட்டாய்க்கு,  முறுக்குத் தேவலைன்னு  எடுத்து உடைச்சுப்போட்டா பசங்க தின்னாங்க.   சென்னை சுஸ்வாத் முறுக்கில் அவுங்க பெயரை எழுதி இருந்தான் 'அவன்'!  வேறொன்னும்  கொடுக்க முடியலைன்னு  அவுங்ககிட்டே மன்னிப்பு கேட்டுக்கிட்டேன்.   கையில் மிஞ்சி நின்ன  கடைசி முறுக்கை நம்ம ஆட்டோ ட்ரைவருக்குக் கொடுத்துட்டு  வண்டியில் ஏறி உக்கார்ந்தோம்.

இறக்கம் என்பதால்  இருவது மினிட்லே கீழே இறங்கியாச்சு.   கீழே ஆட்டோவில் ஏறும்போதே  அங்கே ஒரு கோவில் இருந்ததைக் கவனிச்சு மனசில் வச்சுக்கிட்டதால்  கோவிலாண்டை இறக்கிவிடச் சொன்னேன். அதே போல் ஆச்சு.  ஆட்டோக்காரரிடம் பெயரைக் கேட்டால் நந்தகுமார் எம் எஸ்ன்னு சொன்னாரா.... தூக்கிவாரிப் போட்டுச்சு !  எம் எஸ் படிச்சுட்டா ஆட்டோ ஓட்டுறீங்கன்னதுக்கு, அது இனிஷியல்னு சொன்னார் :-)
அவருக்கான முன்னூறை நீட்டுனதும்,  அம்பதைத் திருப்பிக் கொடுக்கிறார். 'இருநூத்தியம்பது போதுமாம்' !!  ஹா.....
இதுவே நம் சிங்காரச் சென்னையா இருந்தால் என்ன நடந்துருக்கும்? போகவர 18  கிமீயும் வெயிட்டிங் அரைமணி நேரமும். அதுவும் கொட்டற மழையில்!   நேர்மைக்குப் பரிசா இன்னும் ஒரு நூறை அவர் கையில் கொடுத்ததும்தான் மனசு சமாதானமாச்சு!
இப்படியும்  'நல்லார் ஒருவர்'  இருப்பதால்தான் மழை இப்படிக் கொட்டோ கொட்டுன்னு கொட்டுது!

தொடரும்....... :-)


6 comments:

said...

அருமை நன்றி

said...

பாருங்க.... இத்தனை பிரச்சனையிலும் உங்களுக்கு காவிரி ஆரம்ப இடத்துக்குப் போகணும்னு இருந்திருக்கு.... வெள்ளச் சூழலிலும் போயிட்டுவந்திட்டீங்களே... வெகு அருமை.

said...

நாங்கள் தலைக்காவிரி போனபோது , அமைதியோ அமைதி.

3 வயது, ஒண்ணரை வயதில் பையனும், பெண்ணும், சின்னவன் வயிற்றில்.1969.
உங்கள் படங்கள் அப்படியே நினைவைக் கொண்டு வந்தன. அந்த ஆட்டோக்காரரும்
செல்லங்களும் இனிமை. மேகம் சூழ்ந்த படங்கள் மிக அருமை. எப்பொழுதும் வளமாக இருக்கணும் துளசி.

said...

ரொம்பப் பெருசெல்லாம் சின்ன எடத்துல இருந்துதான் தொடங்கும். சிப்பியோட சதைக்குள்ள முத்து. மண்ணுக்கும் கல்லுக்கும் இடையில தங்கம் வெள்ளி வைரம் வைடூரியம். மானோட வயித்துக்குள்ள கத்தூரி. இன்னும் நிறைய சொல்லலாம். அது மாதிரி சின்ன எடத்துல காவிரி உருவாகுது. அது நாடு செழிக்க உருளுது ஓடுது நடுக்குது.

கர்நாடக மாநிலம் ஒருவகையில குடகை வஞ்சிக்குதுன்னு சொல்லலாம். குடகு மக்கள் பேசும் துளு மொழிக்கு உரிய மதிப்பு கொடுக்காம கன்னடம் நெருக்கி நிரம்புது. குடகு மக்களும் பல காலமா தனி மாநிலம் கேட்டுட்டிருக்காங்க. கிடைக்கும் போது தமிழகத்துக்கு உரிய நீரைக் கொடுக்குறதாகவும் சொல்றாங்க. அவங்களுக்கும் தனி மாநிலம் கிடைச்சா நல்லாத்தான் இருக்கும்.

படங்கள் எல்லாம் ரொம்ப குளுகுளுன்னு இருக்கு.

குடகுல உங்களுக்குக் கிடைச்ச ஆட்டோ டிரைவர் சென்னைல மட்டுமில்ல பெங்களூரிலும் கிடைக்க மாட்டாரு. இவர் தனிப்பிறவி போல.

said...

புகைப்பட அனுமதி இல்லாத இவ்விடத்தில் எனது கிளிக்குகள்:
https://photos.app.goo.gl/BDlkWnAEsjD1wsb92

said...

ஆஹா ...அற்புதம் அழகு ..