Wednesday, October 03, 2018

திருநாராயணபுரத்துச் செலுவ நாராயணர்! (பயணத்தொடர், பகுதி 17)

இன்றைய ஸ்பெஷல் பிஸிபேளாபாத்! லோக்கல் சமாச்சாரம்!  எப்படி இருக்குன்னு பார்த்துடணும். கூடவே ரெண்டு வடையும், ஒரு கிண்ணம் தயிரும் !  அருமையான ஃபில்ட்டர் காஃபி!   சும்மாச்சொல்லக்கூடாது..... கர்நாடகாவில் காஃபி நல்லாவே இருக்கு!
'ட்ராவல் வண்டிக்குப் பயணம் முடிஞ்சதும் ஒரே பேமென்ட் கொடுக்கலாமா'ன்னு  கேட்டதுக்கு  பாதிப்பணம் முதலில் கொடுத்துருங்கன்னு  டெனிஸ் சொல்லி இருந்தார்.  கார்டு எடுக்கறதில்லை. கேஷ் நல்லதுன்னார். ப்ரேக்ஃபாஸ்ட் ஆன கையோடு, அடுத்துள்ள ஷாப்பிங் மால் வாசலில் இருக்கும் ஏடிஎம்முக்குப் போனோம். வாசலில் மிஸ்டர் மெக்டொனால்ட் விஸ்ராந்த்தியா உக்கார்ந்துருக்கார். மால் திறக்கலை இன்னும். நானும் அவருக்குத் துணையா ஒரு ரெண்டு நிமிட் உக்கார்ந்தேன்.
அதுக்குள்ளே பணம் எடுக்கப்போன நம்மவர் திரும்பி வந்தார். ட்ராவல் டெஸ்க்கில் இன்னும் யாரும் வரலை.  பத்துமணிக்குத்தான்  எல்லாம்!  நாங்களும்  அறைக்குப் போனோம்.

இன்றைக்கும் காலையில் கண் முழிச்சதும் ஆஞ்சி தரிசனம்தான்  எனக்கு!  அதுவும் குடும்பத்தோடு!  நல்ல சகுனம்!

பத்துமணி ஆனதும் செக்கவுட் செஞ்சுட்டோம். டெனிஸ் வந்துருந்தார். வண்டியும் வந்தாச்சாம். யார் ட்ரைவர்னு பார்த்தேன்.  நடுத்தரவயது மனிதர். பெயர் அசோக் குமார்! நாம் போற இடங்கள் எல்லாம் பழக்கமானதுதானாம்.  நல்லதாப் போச்சு! ஹிந்தி பேசுவீங்களான்னு ஹிந்தியில் கேட்டதுக்கு, தமிழே பேசுவேன்மான்னார்!   பழம் நழுவி......   :-)
பத்தேகாலுக்குக் கிளம்பிட்டோம். முதல் இடம் திருநாராயணபுரம்!  செல்வப்பிள்ளையை தரிசிக்க வேணும்!  நல்ல நிதானமாத்தான் கவனிச்சு ஓட்டறார் அசோக். இருபத்தியஞ்சு வருஷ அனுபவமாம், ட்ராவல்ஸ் வேலையில். சரியா பனிரெண்டுமணிக்குக் கோவில் வாசலுக்கு வந்திருந்தோம்.  ஐயோ மூடி இருப்பாங்களோன்னு எனக்குள்  ஒரு பதற்றம். இல்லையாம்.....  ஒன்னரை வரை திறந்துதான் இருக்குமாம்!

அக்கம்பக்கம் ஒன்னும்  கவனிக்காமல் சட்னு கோவிலுக்குள் புகுந்துட்டேன். இப்படி ஒரு வாசல் இருப்பதை நேத்துக் கண்ணுலே காட்டலை பாருங்க அந்த ஜெய்.

விடுவிடுன்னு நேராப்போனது நாராயணனைத் தரிசிக்கத்தான்! நின்ற திருக்கோலம்!  கையில் Gகதை இருக்கு!  இவரை தரிசனம் செய்வது அந்த பத்ரி நாராயணரையே தரிசனம் செஞ்சதுக்கு ஈடாகுமாம். இங்கேயும் ஸ்தலவிருக்ஷம் பதரி மரமே!  இந்தக் கணக்கில் நமக்கு ரெண்டு முறை பத்ரி ஆச்சு!  இன்னொருக்கா  போகணுமுன்னு  இருக்கேன் பத்ரிநாத்துக்கு. அந்த அர்ஜுனனைப் பார்க்கணும் :-)

உற்சவர்தான் செலுவநாராயணர்/செல்வநாராயணர்.  இவருக்கு ராமப்பிரியான்னு இன்னொரு பெயரும் இருக்கு!

கதைகள், சம்பவங்கள் எல்லாம் வெவ்வேற வகையில்  சொல்லப்பட்டிருக்குன்னாலும், இங்கே எனக்குத் தெரிஞ்சதைச் சொல்லத்தான் வேணும், இல்லையோ!

 இலங்கை மன்னன் ராவணனை வதம் செஞ்சு, சீதையை மீட்டு, அயோத்திக்குத் திரும்பின ஸ்ரீராமனுக்குப் பட்டாபிஷேகமும் ஆச்சு! அப்போ  விழாவுக்கு வந்துருந்த விஐபிக்களுக்கு  ரிட்டர்ன் கிஃப்ட் கொடுக்கும்போது,  சூர்ய வம்சத்தின் குலதனமான  ரங்கவிமானம், விபீஷணனுக்குக் கிடைச்சது. ஒரு நிபந்தனையுடன்தான். வழியிலே எங்கேயும் கீழே இறக்கி வைக்காமக் கொண்டு போகணும். (திரும்பிப் பார்க்காம ஓடு ! ) 

அநேகமா,  அவன் கிளம்புனதும், அயோத்யா  அரண்மனையில் சண்டை ஆரம்பிச்சுருக்கும். " நீங்க செஞ்சது நல்லா இருக்கா?  பரிசு கொடுக்கணுமுன்னா பொன்னும் பொருளுமாக் கைநிறையக் கொடுத்தனுப்பாம,  வழிவழியா நம்ம  முன்னோர்கள்  பூஜித்து வந்த  ரங்கவிமானத்தைத் தூக்கிக் கொடுக்கலாமா?  எப்பேர்ப்பட்ட தேவலோகத்து சமாச்சாரம். இனி அம்மான்னா வருமா? அய்யான்னா வருமா? "  பிடுங்கல் தொடங்கி இருக்கும்! (நானா இருந்தால்...... என்று  நினைச்சுப் பார்த்தேன்..ஹிஹி)

"கொடுத்தது கொடுத்ததுதான்.  அதைப்போய் இப்பத் திருப்பிக் கேட்டால் அல்பமா இருக்காதா?  இப்ப என்னை என்னா செய்யச் சொல்றே? " ( கோபால்)

அப்ப ஒன்னு செய்யலாம். என்னமோ பழமொழி சொல்வாங்களே... அதி ஏமிட்டி? ஆ...  சூழ்ச்சி  சேஸ்த்தாம்னு தேவர்களிடம்  சொல்லப்போக பக்காவா 'ஆபரேஷன் ரங்கவிமானம்'  உருவாச்சு.  தேவர்கள் சூழ்ச்சி செய்வதில் கில்லாடிகள் இல்லையோ! 

'ஆபரேஷன் 'சொல்லுக்கு  நன்றி, அமைதிச்சாரல்!

கூப்பிடு அந்த சூரிய பகவானை. அப்படியே அந்தப் புள்ளையாரையும்! திட்டத்தைத் தெளிவு படுத்துனதும் ஓக்கேன்னு சொல்லிக் கிளம்புனாங்க ரெண்டு பேரும்.

திடீர்னு  இருட்டிக்கிட்டுப் பொழுது போய் சந்தியா நேரமாகுது. கண்ணை உசத்தி சூரியனைப் பார்க்கிறான் விபீஷணன்.  மேற்கே அஸ்தமிக்கும் கோலம் காட்டறான் சூரியன்.  அச்சச்சோ....   மாலை நேரத்து சந்தியாவந்தனம் செய்யணுமே....  கையில் இருக்கும் ரங்கவிமானத்தைக் கீழே வைக்கக்கூடாதுன்னு ஆக்ஞை இருக்கே என்ன செய்யலாமுன்னு சுத்தும் முத்தும் பார்க்க, அங்கே  ஒரு சின்னப்பையன் ஆத்துமணலில் (காவிரி ஆறு)  விளையாடிக்கிட்டு இருக்கான்.

"ஏ பையா, இங்கெ வா. இத்தைக் கொஞ்ச நேரம் பிடிச்சுக்கோ. அஞ்சே நிமிட்லே சந்தி செஞ்சுட்டு வாரேன். தப்பித்தவறிக் கீழே வச்சுறாதே"

"அய்ய... நாமாட்டேன். வூட்டுக்குப் போகணும். ஆத்தா வையும்"

"அதெல்லாம் வையாது ....  நான் பார்த்துக்கறேன்.  செத்தப் பிடி. அஞ்சே நிமிட்"

'ஊம்.... மாட்டேன்....'னு பையன் சொல்ல அவங்கிட்டே கெஞ்சிக் கூத்தாடி(!)  சம்மதிக்க  வைக்கிறான் விபீஷணன்.

பையன் சொல்றான்  'த பாரு, நான்  மூணு வாட்டி உன்னைக் கூப்புடுவேன். அதுக்குள்ள நீ வரலை...  நான் கீழே வச்சுட்டுப் போயிருவேன்'

"அதெல்லாம் அம்மாந்நேரம்  ஆவாது.   தோ... போனேன் வந்தேன்னு  வந்து வாங்கிக்கறேன்"

விபீஷணன், ஆத்துலே இறங்கி  கைகால் கழுவும்போதே,   சீக்கிரம் வாய்யா, சீக்கிரம் வாய்யான்னு மூணுதபா  மெல்லிசாக் கள்ளக்குரலில் ரகசியமாக் கூப்பிட்ட பையன்,  ரங்கவிமானத்தைக் கீழே வச்சுட்டு ஓடிட்டான்.

அவசர அவசரமா சந்தியா வந்தனம் செஞ்சு முடிச்சு  நாலே நிமிட்டுலே ஓடி வந்து பார்த்தா.......  விமானம் கீழே இருக்கு. சட்னு தூக்கி எடுக்கப் பார்த்தால் அது கல்குண்டாக் கனக்குது. கிளப்ப முடியலை :-( அடப்பாவி,  சதிச்சயேன்னு  கண்ணை ஓட்டுனா.... பையன்  அந்தாலெ தூரமா ஓடிக்கிட்டு இருக்கான்.  அவனைத் துரத்திக்கிட்டே  போனால்...   பையனுக்குச் சின்ன வயசுல்லே....  குடுகுடுன்னு ஓடிப்போய் மலைமேலே தாவி ஏறி  ராக் க்ளைம்பிங் செஞ்சு உச்சிக்குப் போயிட்டான். 

விபீஷணனால் அவ்ளோ சட்னு மலை ஏறிப்போக முடியலை.  அப்ப ஏது இந்தப் படிக்கட்டெல்லாம்?   கஷ்டப்பட்டு  மேலேறிப்போய், பையன் தலையில் நறுக் னு ஒரு குட்டு வச்சுக்  காதைப் பிடிச்சுத் திருகப் போறான்.  கையில் சிக்குச்சு யானைக் காது!  என்னடான்னு பார்த்தால் புள்ளையார்  நிக்கறார்.  அப்பப் பார்த்து சூரியன் பளிச்னு ஆகாசத்துலே  வந்து நிக்கறான். அநேகமா மணி ஒரு ரெண்டு ரெண்டரைதான் இருக்கும்:-)

அட ராமா.... இதெல்லாம்  இவுங்க வேலையா?  கைக்கு எட்டுனது, வாய்க்கு எட்டலை பாருன்னு  வெறுங்கையா தன் நாட்டுக்குப்போய்ச் சேர்ந்தான் விபீஷணன்.

விபீஷணன் குட்டியது,  ஒரு தழும்பா புள்ளையார்  மண்டையிலே  இப்பவும் இருக்காம்!

காவிரிக் கரையிலே விட்டுட்டு வந்த அந்த ரங்க விமானம்தான் இப்போ  நம்ம ரெங்கனின்  வீடு!

இது நம்ம துளசிதளத்தில்  ஏற்கெனவே வந்ததுதான் .

எப்படியோ குலதனம் நாட்டை விட்டுப் போகலைன்னாலும், வீட்டை விட்டுப்போயிருச்சே! தினப்படி பூஜைக்குத் தனக்கு ஒரு விக்கிரஹம் வேணுமுன்னு ராமர் கேட்டதும்  ப்ரம்மா, ஒரு விக்ரஹம்   தர்றார். அதுவே ராமர்  தினமும் பூஜிக்கும் ராமப்ரியா !  ராமருடைய காலத்துக்குப்பின்  குசன் (லவ குசா)ராமப்பிரியாவைத் தொடர்ந்து பூஜித்து வரும்போது, குசனின் மகள் கனகமாலினிக்கு யாதவ குல அரசகுமாரனோடு கல்யாணம் ஆனதும், இந்த ராமப்பிரியாவை சீதனமா கொடுத்துருக்காங்க.  அங்கேயே வழிவழியாப் பூஜையில் இருந்த ராமப்ரியா, அடுத்த யுகத்தில் ஸ்ரீ கிருஷ்ணரின் பூஜா விக்ரஹமாச்சு!

பலராமர் ஒருமுறை இந்தக் கோவிலுக்கு வந்துருக்கார். மூலவர்  திரு நாராயணரைப் பார்த்தவுடன், த்வாரகாவில் பூஜையில் உள்ள ராமப்பிரியாவைப் போலவே  இருக்காரேன்னு கவனிச்சுருச்சார். திரும்பிப்போய் கிருஷ்ணனிடம் சொன்னதும், ரெண்டுபேரும் திரும்ப வந்து பார்த்துருக்காங்க.'ஸேம் ஸேம்'னு ஆச்சரியமா இருக்கு!  அப்ப இந்த விக்ரஹத்தை, இந்தக் கோவிலுக்கே கொடுத்துடலாமுன்னு  முடிவு செஞ்சுட்டாங்க. அப்படித்தான்  ராமப்பிரியா இங்கே வந்து சேர்ந்ததா கதை போகுது!

மொத்தத்துலே யுகங்கள் கடந்து போயும் ராமப்பிரியர் விக்கிரஹம் பூலோகத்தில் தங்கி இருக்கு!

கலிகாலம் ஆரம்பிச்சது!

எல்லா கெட்டதும் நடக்க ஆரம்பிச்சது.

இஸ்லாமியர், பாரதநாட்டுக்குள் நுழைஞ்சு ஆட்சி செய்ய ஆரம்பிச்சாங்க. கோவில்களில் செல்வங்கள் இருப்பதைத் தெரிஞ்சுக்கிட்டுக் கொள்ளையடிச்சுக்கிட்டு இருந்தாங்க. நல்லதெல்லாம் சாமிக்குன்னு ஒரு மனசு நமக்கு இருக்குல்லே! அதுதானே  பட்டும், நகையுமா கடவுளரை அலங்கரிச்சுப் பார்த்துச் சந்தோஷப்படறோம், இல்லையா?

மாலிக்காஃபூர் படையெடுத்து வந்து கோவில் செல்வங்களையும் விக்கிரஹங்களையும்  கொள்ளையடிச்சுக்கிட்டுப்போய் தில்லி சுல்தான் கஸானாவில் சேர்த்துக்கிட்டு இருக்கான்.  கூட்டத்தில் ராமப்ரியாவும் தில்லியில்!

பாரதத்தின்  தென்பகுதியில் சோழர் ஆட்சி நடக்கும் சமயம்.  கிருமி சோழன், சைவமே பெருசுன்னு விஷ்ணுபக்தர்களுக்குத் தொல்லை கொடுத்துக்கிட்டு இருக்கான். நம்ம ராமானுஜரை சிறையில் அடைச்சுச் சித்திரவதை பண்ணால், வைணவம் அழிஞ்சுருமுன்னு அவனுக்கொரு தோணல்.  ராமானுஜரின் சிஷ்யன் கூரத்தாழ்வானைப் பிடிச்சு வச்சுக்கிட்டு, உன் குரு எங்கேன்னு கேட்டு சித்திரவதை செஞ்சு (தசாவதாரம் படத்து முதல் ஸீன் நினைவுக்கு வருதா? )கண்களைத் தீய்ச்சுடறான்.   அவர் கடைசிவரை சொல்லவே இல்லை. அவருக்கு(ம்) தெரியாதுன்றதுதான் உண்மை.

ஸ்ரீ ரங்கத்தில் இருக்கும் ராமானுஜரை, அவருடைய பக்தர்கள் வேண்டிக்கேட்டுக்கிட்டு அவரை வேறொரு இடத்துக்கு  ஜாகை மாற்றிடறாங்க.  அப்பெல்லாம் பரதகண்டத்தில் அம்பத்தியாறு தேசம் இருந்ததாம்.  சாளுக்கியர் தேசத்துலே ஒரு ஊரான தொண்டமனூர்லே  இருக்கார் நம்ம ராமானுஜர்.
அப்ப அங்கே மன்னரா இருந்த பிட்டி தேவன் ( விட்டல தேவராயன்) மகளுக்கு உடம்பு சரி இல்லை.  எத்தனையோ அரண்மனை வைத்தியர்கள் பார்த்தும் சுகக்கேடு குணமாகலை. நம்ம ராமானுஜர், பெருமாளின் கிருபையால்  அரசகுமாரியை சுகப்படுத்தினார்.  சமண மதத்தை சேர்ந்த பிட்டி தேவ், வைணவனா மதம் மாறினான்.  விஷ்ணுவர்தன் என்ற பெயரும் ராமானுஜரால் சூட்டப்பட்டது.

திருநாராயணபுரத்துக்குப் பக்கத்து ஊர்தான் இது. இப்ப திருநாராயணபுரத்துக்கு என்ன பெயர் தெரியுமோ?  மேல்கோட்டை !

ஒரு சமயம் நம்ம ராமானுஜருடைய திருமண் தீர்ந்து போயிருக்கு.  அப்ப அவர் கனவுலே பெருமாள் வந்து  இன்ன இடத்துலே தோண்டிப்பாருன்னு  சேதி சொல்றார் .  அந்த இடம் ஒரு புதர் நிறைஞ்ச பகுதி.  அங்கே போனால்  பெரிய புத்து. அதைக் கரைச்சுட்டுத் தோண்டினால்....   பெருமாள் சிலை! மூக்கும் முழியுமா  சங்கு சக்கரம் Gகதைன்னு அமர்க்களமா இருக்கு!

இன்னும் கொஞ்சம்  விவரம் விசாரிச்சதில்,  அன்னியர் படை எடுத்து உள்ளூர் கோவிலை இடிச்சுத் தள்ளியது, மூலவரை யாரோ இங்கே ஒளிச்சுவச்சதுன்னு ... 
தன்னுடைய பக்தனா மாறிய அரசன் விஷ்ணுவர்தனிடம், அங்கே ஒரு கோவில் கட்டித்தர வேண்டியதும், அதே போல் ஆச்சு. மூலவரை பிரதிஷ்டை செய்து, கோவிலுக்கான பூஜை முறைகளை எல்லாம் ஒழுங்கு பண்ணித் தர்றார் ராமானுஜர்.
மூலவர் கிடைச்சாச்சு. உற்சவரைக் காணோம்.  தேடிக்கிட்டே இருக்காங்க. மன்னரும்   ஒற்றர்களை அனுப்பி ரகசியமாத் தேடச்சொன்னார். தில்லி சமாச்சாரம் தெரியவந்ததும், ராமானுஜரே கிளம்பிப்போறார்.

தில்லி பாதுஷாவின் அரண்மனை தர்பார்!  இப்படி வந்தவிவரம் சொல்லி, 'எங்கூர் உற்சவரைத் திருப்பிக் கொடுத்துருங்கோ'ன்னு வினயமா வேண்டுனதும், எதோ நல்ல மூடில் இருந்த பாதுஷா, 'எங்க கஸானாவில் ஏகப்பட்டது கிடக்கு.  எதுன்னு யாருக்குத் தெரியும்? உங்களுக்கு அடையாளம் தெரிஞ்சா எடுத்துக்குங்க'ன்னார்.  ராமானுஜர் மட்டும், பார்த்துருக்காரா என்ன?

ஆனாலும் அந்தக் குவியலில் தேடிப் பார்க்கிறார். ஊஹூம்.....  எதுவுமே அது இல்லை. இது என்னடா நமக்கு வந்த சோதனை பெருமாளேன்னு.....
'என் செல்லப்பிள்ளையே..... எங்கிருந்தாலும் வா'ன்னு மனம் குழைஞ்சு கூப்பிடறார்.  அந்தப்புரத்துலே இளவரசி சுரதானியின் அறையில் இருந்து செல்லம்போல ஒரு விக்ரஹம் 'நடந்து'   ராமானுஜராண்டை வந்து அவர் மடியில் ஏறி நின்னது!  தன்னுடைய பொம்மை ஜல்ஜல்ன்னு சலங்கை ஒலிக்க நடந்து போறதைப் பார்த்துப் பின்னாலேயே ஓடிவர்றாள் இளவரசி.

'இதுதான்'னு ராமானுஜர் சொல்ல,  பொம்மை தானே நடந்து வந்ததைப் பார்த்துத் திகைச்சு நின்ன பாதுஷாவும், 'எடுத்துக்கிட்டுப் போங்க'ன்னுடறார்.  ராமானுஜரும் அவரோடு வந்தவர்களும் கிளம்பிப்போயிடறாங்க.

நடந்ததையெல்லாம் பார்த்து விக்கிச்சு நின்ன இளவரசிக்குத் தாங்க முடியலை.  எனக்கு என் பொம்மை வேணுமுன்னு அழுது அடம் பிடிக்கறாள். அவள் குழந்தையா இருக்கும்போது எதோ ஒரு சமயத்தில்  கஸானாவில் இருந்த 'பொம்மைக்குவியலில்' இதைப் பார்த்து ஆசைப்பட்டுத் தானே எடுத்து வச்சுக்கிட்ட பொம்மை இது! அதைச் சிங்காரிச்சு அழகு பார்ப்பதே இவளுக்கு தினசரி பொழுதுபோக்கு!  இப்போ பொம்மை கையைவிட்டுப்போனதும், அதிர்ச்சியில் காய்ச்சல் வந்து உடம்பு பலஹீனமாகி ஒன்னுமில்லாமல் போய்க்கிட்டு இருக்கு!   பொம்மை பொம்மைன்ற அரற்றல் அதிகமாச்சு.  எங்கே மகள் 'போயிருவாளோ'ன்னு பயந்த  பாதுஷா,  போய் திருப்பி வாங்கிக்கிட்டு வான்னு  படை வீரர்கள் சிலரை அனுப்பறார்.  அவுங்களும் ராமானுஜர் போன திசையில் ( ? !)தேடிக்கிட்டுப் போறாங்க.

அப்பெல்லாம் நேஷனல் ஹைவேவா இருந்துச்சு?  காடு மலைன்னு குறுக்கே போறதுதானே..... ராமானுஜர் குழு ரொம்ப தூரம் பயணப்பட்டுப் போயிட்டாங்க. தேடிப் பார்த்த படைவீரர்கள், திரும்பிப்போய், காணோமுன்னு சொன்னதும்,  இன்னொரு படையை அனுப்பறார். இந்த முறை நோய்வாய்ப்பட்ட இளவரசியும் கூடவே வர்றாள்.

இதுக்குள்ளே ஊரை நெருங்கிய ராமானுஜர் குழுவினரை ஒரு திருடர் கூட்டம் பார்த்துட்டுக் கொள்ளையடிக்க வர்றாங்கன்ற தகவல் கிடைக்குது. அவுங்ககிட்டே இருந்து தப்பிக்க வேண்டி, அடுத்துள்ள சேரிக்குள்ளே போயிடறாங்க. சேரி சனம்  முதலில் பிரமிச்சுப்போய் நின்னு, அப்புறம் சுதாரிச்சுக்கிட்டு  இவுங்க ஒளிஞ்சுக்க இடம் கொடுக்கறாங்க. அப்படியே திருடர்களை அடிச்சு விரட்டியும் விட்டாங்க.

அப்புறம்தான் இவுங்களுக்குத் தெரியுது, இவுங்க காப்பாத்திக் கொடுத்தது  செல்லப்பிள்ளையைன்னு! நன்றி மறவாத ராமானுஜரும்,  இவுங்களைக் கோவிலுக்குள் அழைச்சுப்போய் மரியாதை செய்யறார். இப்பவும் திருக்குலத்தோர் திருவிழான்னு மூணுநாள் உற்சவம் நடத்தறாங்க.

அந்தக்காலத்துலேயே ஆலயப்பிரவேசம்  நடத்திக் காட்டியவர் நம்ம ராமானுஜர்தான் இல்லையோ!

உற்சவ மூர்த்தி ஊர் திரும்பியதும் கோவில் திருவிழாக்கள் எல்லாம் கோலாகலமா நடத்த வகைகள் அமைச்சுக் கொடுக்கிறார் ராமானுஜர்.

'பொம்மை'யைத் தேடி வந்த படைவீரர்களும், இளவரசியும் கடைசியில் இந்த ஊர் கோவிலுக்கு வந்து சேந்தாங்க. உற்சவமூர்த்தியா அலங்காரங்களோடு ஜொலிக்குது அவளுடைய 'பொம்மை'!

பார்த்த மாத்திரத்தில்  இனி பொம்மை தன் கைக்கு வராதுன்னு உணர்ந்த இளவரசி அப்படியே மயங்கி விழுந்து உயிரை விட்டுட்டாள்! இதைப் பார்த்த ராமானுஜர், இவளைப்போலவே ஒரு சிலைசெய்து, பெருமாள் காலடியில் வைக்கிறார்.  வரநந்தினி என்ற பெயரில் இருக்கும் இந்தச் சிலைக்கு பீபிநாச்சியார் என்ற பெயரும் இருக்கு!

இதே போல ஒரு சம்பவம், நம்ம ஸ்ரீரங்கத்திலும் நடந்ததா சொல்லி இருக்காங்க.  துலுக்க நாச்சியார் சந்நிதி கூட அங்கே இருக்கு!

பிரகாரம் சுத்தப்போனோம். வழக்கமா  பெருமாள் கோவில்களில் இருக்கும் ஆழ்வார்கள், ஸ்ரீராமர் அண்ட் கோ, ஆஞ்சி சந்நிதிகள் இருக்கே தவிர நம்ம ஆண்டாளம்மா சந்நிதியைப் பார்த்த நினைவில்லை.  சுத்தி வரும்போது  மூலவருக்கு இடப்பக்கம் வரும் பிரகாரத்தின் கோடியில் ஒரு  மண்டபமும், அதையொட்டி  கொஞ்சம் உயரமான திண்ணையுடன் இருக்கும் நீளமண்டபமும் இருக்கு.


படிகளேறிப்போனால்  தாயார் சந்நிதி ! யதுகிரித் தாயார்!
சந்நிதியில் நல்ல கூட்டம்.  எல்லோரையும் ரெண்டு வரிசையில் நிக்கச் சொல்லிக்கிட்டு இருந்தார் ஒரு பட்டர்! என்னவோ ஏதோன்னு நாங்களும் நின்னோம்.  தாயாருக்கு  அம்சி பண்ண பிரஸாத விநியோகம்! எனக்கு ரெண்டுகைகள் நிறையக் கிடைச்சது. 'நம்மவர்' பின்னால் நின்னதால்.... கிடைக்கலை. அப்புறம் கொஞ்சூண்டு  கிடைச்சது அவருக்கு. அதான் என் கையில் நிறைய இருக்கே! அவருடைய லஞ்ச் முடிஞ்சது :-)



 இந்த மண்டபத்துத் தூண்கள் வரிசையின் அழகையும் கலைநுணுக்கத்தையும்  சொல்ல வார்த்தைகளே இல்லை என்பது உண்மை.  கல்லைச் சுத்திக் கல்லிலேயே மெல்லிசா வளையம் !  சின்னச் சின்னப் பகுதியிலும் சிற்பச் செதுக்கல்கள்!   யம்மாடீ......
மண்டபத்தைக் கடந்து போனால் நம்ம ராமானுஜரின் சந்நிதி. கொஞ்சம் இருட்டாத்தான் இருந்தது.  இங்கே தமர் உகந்த மேனியா இருக்கார்! செப்புச்சிலையோ?
ஸ்ரீரங்கத்தை விட்டு வந்த  ராமானுஜர்,  இந்தப்பகுதியில்  (தொண்டனூர், மேல்கோட்டை)பனிரெண்டு வருஷம் இருந்துருக்கார். அப்போதான்  மேலே சொன்ன எல்லாமே நடந்துருக்கு!

கோவிலில்  பூஜைகள் எல்லாம் நியமப்படி நடக்க ஒழுங்கு செய்து கொடுத்தவர்,  ஸ்ரீரங்கத்தில் இருந்து அம்பத்திரெண்டு பட்டர்களை வரவழைத்தார்!  இப்பவும் இங்கிருக்கும் பட்டர்கள் எல்லோரும்  அவர்களுடைய வம்சாவழியில் வந்தவர்களே!

இதுக்கிடையில்  வைணவர்களுக்குக் கொடுமை செய்த சோழனின் மறைவு தெரிய வந்தது.  இனி ஸ்ரீரங்கம் திரும்பிடலாமுன்னு முடிவு செஞ்சு அதைக் கோவிலில் சொன்னதும், அடியவர்களுக்கு ஒரே ஆத்தாமையா இருக்கு.  நல்ல சொற்கள் சொல்லி அவுங்களைத் தேற்றிட்டுத் தன்னைப் போலவே ஒரு சிலை செய்து  அங்கே கொடுத்துட்டுக் கிளம்பி அரங்கனிடம் வந்து சேர்ந்துட்டார்.

நம்ம ராமானுஜரின்  மூணு சிலைகள்  ரொம்பவே முக்கியமானவை.  தாம் உகந்த திருமேனி, தமர் உகந்த திருமேனி, தானான திருமேனின்னு... இவைகளில் ஸ்ரீ பெரும்புதூரிலும், ஸ்ரீரங்கத்திலும் ரெண்டு சிலைகளை ஏற்கெனவே தரிசனம் செஞ்சுருந்தோம். இப்போ மூணாவதும் தரிசிக்கக் கிடைச்சதில் பரம திருப்தி !

நல்ல பெரிய கோவில்தான். நேத்து வந்துருந்தோமுன்னால் கல்யாணக்கூட்டத்துலே சிக்கிச் சரியாப் பார்க்க முடியாமல் போயிருக்கும், இல்லே? எல்லாம் நன்மைக்கேன்னு நினைச்சு வெளியே வந்தேன். இப்பதான் கோவில் வாசலில் இருக்கும் கொடிமரமும் பெரியதிருவடி சந்நிதியும் கண்ணுலே பட்டது :-)

இந்தப்பக்கமெல்லாம் பழங்காலக்கோவில்களில்  கொடிமரம் கல்லில்தான் செஞ்சு வச்சுருக்காங்க.  இங்கே நாப்பத்தி ரெண்டு அடி, ஒரே கல்லாம்!

கோவில் முகப்பில் ராஜகோபுரமும் அவ்வளவா உயரமில்லை. மூணு நிலைதான்.  கோவிலுக்கு எதிர்வாடையில் சில மடங்கள். அந்தாண்டை அக்ரஹாரம்.  படங்கள் எடுக்கும்போதுதான் பட்டர் ஸ்வாமிகள், சந்நிதியை மூடிட்டு, ப்ரஸாதங்களுடன்  வீட்டுக்குப் போறார். அவரையும் ஒரு க்ளிக் !
இனி கோவில் மாலை 4 முதல்  6 வரை, அப்புறம் ஒரு மணி நேரம் கழிச்சு 7 முதல் 9 வரைன்னு திறந்திருக்கும்.  காலையில் சுப்ரபாதம்  சொல்றதுகூட ஒன்பது மணிக்குத்தானாம். காலை எட்டரைக்குத் திறந்தபின்! சின்னக்குழந்தை செலுவநாராயணனைச் சீக்கிரம் எழுப்ப வேணாமுன்னு.... ! நல்லது. திருப்பதியில்தான் பெருமாளைத் தூங்கவே விடறதில்லையே....

கோவிலையொட்டி ரெண்டு பக்கமும் விஸ்தாரமான நீண்ண்ண்ண்ட திண்ணைகள்!
அந்தக் காலத்துலே  கோவில்குளமுன்னு யாத்திரை போறவங்க வண்டி கட்டிக்கிட்டுக் குடும்பமா  வருவாங்க. அங்கங்கே தங்கி சமைச்சுச் சாப்பிட்டு, படுத்துத் தூங்கி எழுந்துன்னு  நாள் கணக்கா .... நடக்கும். அதுக்கேத்த விதமா  சனம் தங்கவும், இளைப்பாறவும், பேய்மழை போல அடிச்சுப்பேய்ஞ்சு ஊரில் வெள்ளம் தண்ணி வரும்போது ஓடிவந்து தங்கவும் கோவில்களில்தான்  இடம் ஒதுக்கி இருப்பாங்க.  அதுக்காகக் கட்டுனதைப்போல  கோவிலுக்கு ரெண்டு பக்கமும் நீண்டு போகும் வெராந்தா திண்ணைகள்  இங்கேயும் இருக்கு!
மாடவீதி(!?)யில் மணவாளமாமுனிகள் சந்நிதியில் எதோ விசேஷ பூஜை.  கோஷ்டி சொல்றாங்க. .  ட்ரைவர் அசோக் குமாரை இங்கே வந்து பிக்கப் பண்ணிக்கச் சொல்லிட்டு நாங்களும் ஒருபக்கமா நின்னு கொஞ்ச நேரம் கேட்டோம். நல்ல கூட்டம் தான்!

 நம்மாட்கள் நடமாட்டத்தை இப்பதான் பார்த்தேன்.  மனுஷர் சிலர்  உபத்திரவம் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க.  ஆஞ்சி சாபம் கிடைக்குமுன்னு பயமுறுத்திட்டு அங்கிருந்து கிளம்பினோம்.
இங்கே வைரமுடி ஸேவை பெரிய விசேஷமாம். பங்குனி உத்திரம் நாளில் நடக்கும் விழாவுக்குச் சுமார் நாலு லக்ஷம்பேர் வருவாங்களாமே! இந்த விழா ராத்திரியில் தொடங்கி, காலை நாலு நாலரைக்கு முடியுமாம்!  செல்லப்பிள்ளையின் தலையில் வைரக் க்ரீடம்.... வாவ்!  என்ன ஜொலிப்பா இருக்கும், இல்லே?  யூ ட்யூபில் தேடணும்.  இந்த விழாவுக்கும் ஒரு பெரிய கதை இருக்கு.  அதை இன்னொரு சமயம் பார்க்கலாம்.
அசோக் குமார், சாப்பிடணுமேன்னு   எங்கியாவது  ஒரு  ரெஸ்ட்டாரண்டில் வண்டியை நிறுத்தச் சொன்னால், அவர் நாம் கோவிலுக்குள் போனப்ப ஒரு கடையில் சாப்பிட்டாராம்.  ரொம்ப நல்லது.  இனியும் நமக்கு ஒரு ரெண்டரை, மூணு மணி நேரப் பயணம் பாக்கி இருக்கு இன்றைக்கு!

நான் செல்லமுன்னு நினைப்பதைத்தான்  செலுவன்னு சொல்றாங்களோ.... இல்லை செல்வம் என்பதையா?
நம்ம ராமானுஜர், செல்வத்தையா மதிச்சுருப்பார்?
செல்லப்பிள்ளையா இல்லை செல்வப்பிள்ளையா?

இந்தப்பதிவில் சில படங்கள் கூகுளார் அருளியவை. அவை எவை என்று உங்களுக்கே தெரியும் :-)

தொடரும்......... :-)

14 comments:

said...

காலையில் திவ்யமான செலுவ நாராயணர் தரிசனம்.

உங்கள் தயவில் நானும் தரிசனம் கண்டேன். கர்நாடகாவின் சில பகுதிகளுக்கு மட்டுமே சென்றிருக்கிறேன். இன்னும் இங்கே சுற்ற நிறைய இருக்கிறது. காலம் வாய்க்கட்டும்....

தொடர்கிறேன்.

said...

செல்லப் பிள்ளைதான். அதில் என்ன சந்தேகம்.

மேல்கோட்டை பதிவை மிகவும் ரசித்துப் படித்தேன். கதை ஏற்கனவே தெரிந்தாலும் திரும்பவும் படிக்க ரசனையாக இருந்தது.

இவ்வளவுதூரம் சென்றுவிட்டு தொண்டனூர் சென்றீர்களோ? நான் மேல்கோட்டை போனதில்லை. தொண்டனூர், அதை ஒட்டி உள்ள ஏரி, இராமானுசர் சன்னிதி, பெரிய கோவில்கள் (விஷ்ணுவர்தன் கட்டியது) போன்றவைகளைத் தரிசித்திருக்கிறேன்.

said...

ஆஹா செல்ல பிள்ளை தரிசனம் கிட்டி..

அப்படியே நீங்க சொல்ல சொல்ல காட்சிகள் கண்ணுக்கு முன்னே விரியுது மா..

ராமானுஜர்க்கு காலையில் திருமஞ்சனம் நடக்கும் போது பார்த்தால் அவ்வொலோ பளிச் ன்னு அழகா இருப்பார்..

வைரமுடி சேவை அனைக்கி பெருமாள் அசைஞ்சு அசைஞ்சு நடப்பார் நாலு புறமும் திரும்பி திரும்பி ன்னு பார்க்கவே அற்புத காட்சி ...


போன வருசத்துக்கு முந்தின வருடம் நேரில் சென்று பார்த்தோம் ஆன கும்பல் அந்த வெளி திண்ணை முழுவதும் கால் வைக்க இடம் இல்லை ..

பசங்களை எல்லாம் போட்டு நசுக்கி பாவம் கொஞ்சம் கஷ்டம் ஆய்டுச்சு..இரவு முழுக்க இந்த சேவை நடக்கும்..



இனி இங்க சாதா நாட்களில் மட்டும் தான் வரணும் ன்னு அப்பவே முடிவு செஞ்சாச்சு..

said...

ஒரே மாதிரி கதைகள்பல இடங்களிலும் சொல்லப்படுகிறதோ சிற்பவேலைப்பாடுகள் கர்நாடகா கோவில்களில் பிரமாதம்

said...

அண்மைப்பயணத்தின்போது இக்கோயிலுக்குச் சென்றுவந்தோம். செலுவகேசவநாராயணர் கோயிலின் மண்டபச் சிற்பங்கள் தமிழகத்து சிற்பங்களை நினைவூட்டின. நன்கு ரசித்தோம். தற்போது உங்கள் பதிவு மூலமாக மறுபடியும் பார்க்கும் வாய்ப்பு. நன்றி.

said...

//பையனுக்குச் சின்ன வயசுல்லே.... குடுகுடுன்னு ஓடிப்போய் மலைமேலே தாவி ஏறி ராக் க்ளைம்பிங் செஞ்சு உச்சிக்குப் போயிட்டான்//

பையன் அமர்ந்த இடம்தான் உச்சிப்பிள்ளையார் கோவிலோ ?
அருமை நன்றி

said...

மைசூரு பெங்களூருன்னாலே பிசிபேளேபாத்தும் வாங்கீபாத்தும் கட்டாயமாகச் சாப்பிட்டே ஆகனும். குறிப்பா வாங்கீபாத்தும் கூட கொடுக்கும் சட்டினியும் கலந்து சாப்பிட்டா... அடடா... கர்னாடகா காப்பி எனக்கு அவ்வளவு பிடிச்சு குடிச்ச நினைவில்லை. காப்பியே குடிக்கிறதில்லையா... அதுனால காப்பியும் மறந்து போச்சு. கோப்பி தொடர்பான நினைவுகளும் மறந்து போச்சு.

மேல்கோட்டை போனதில்ல. படங்களைப் பாக்குறப்போ கோயிலும் சிற்பங்களும் கண்ல ஒத்திக்கிறாப்புல இருக்கு.

இப்பல்லாம் ஒரே கதையையே மாத்தி மாத்தி சினிமா எடுக்குற மாதிரி, அப்பல்லாம் ஒரே கதையையே மாத்தி மாத்தி கோயில் எடுத்துருக்காங்க போல.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

நல்ல நுணுக்கமான கலையழகுள்ள கோவில்கள் கர்நாடகாவில் நிறையவே இருக்கு! மேலும் அங்குள்ள கோவில்களில் பொதுவா தக்ஷிணை போடு போடுன்னு சொல்றதில்லை. அதுவே ரொம்பப்பிடிச்சிருக்கு :-)

இன்னும் பல இடங்களைப் பார்க்கலை. எனக்கு வாழ்நாள் போதாதுன்னு நினைப்பு.

பார்க்கலாம்...பெருமாள் என்ன நினைக்கிறாரோன்னு :-)

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

தொண்டனூருக்கு இன்னும் அழைப்பு வரலை. எல்லாம் அவனிஷ்டம்தானே!

விஷ்ணுவர்தன் கட்டிய பஞ்சநாராயணா கோவில்களைத் தரிசிக்க ஆசையா இருக்கு! ரெண்டு ஆச்சு. மூணு பாக்கி!

said...

வாங்க அனுராதா பிரேம்.

ஆஹா... வைரமுடி ஸேவை அனுபவமா!!!! பேஷ் பேஷ்!

ரொம்பக் கூட்டமுன்னால் எங்களால் போக இயலாது.

அதிகாலை அபிஷேகம் எல்லாம் கனவுதான் அதே க்ஷேத்திரஸ்தலத்தில் தங்கினாலும் கூட.....

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

ஒரே மாதிரி கதைகள், தொலைத் தொடர்பு இவ்ளோ வேகமா இல்லாத காலத்தில் கூட ஃபார்வேர்டு ஆகி இருக்கு பாருங்க!

கர்நாடகா பழைய கோவில்கள் எல்லாம் அழகே!

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

பயணங்கள் முடிவதில்லை :-)

said...

வாங்க விஸ்வநாத்.


அதே அதே மலை உச்சியில் :-)

said...

வாங்க ஜிரா.

கதைகள் பரவி அங்கே இங்கேன்னு போனதும் கோவிலாக் கட்டிருவாங்க. இப்பத்து டைரக்டர்கள் இன்ட்டர்வ்யூலே சொல்றது போல (இதுமாதிரி யாரும் இதுவரை எடுத்ததில்லை)
அரசர்களும் நினைச்சுருப்பாங்களோ !