Monday, October 01, 2018

ஸோம்நாதபுரா கேசவா.... சென்னக்கேசவா...(பயணத்தொடர், பகுதி 16)

இவன் வெறும் கேசவன் இல்லையாக்கும்..... சென்ன கேசவன் !
சென்னன்னா....  சூப்பர்னுதான் பொருளே!  கேசவன், சொல்ல முடியாத அழகு, ரொம்ப நல்லா இருக்கான்.... அதுதான் சென்னகேசவனாகிட்டான்!
நாப்பத்திமூணு நிமிட்லே முப்பத்திரெண்டு கிமீ தூரத்தில் இருக்கும் ஸோம்நாதபுரா வந்துட்டோம்.

கோவில் வளாகத்தின் ஆரம்பத்துலேயே  உள்ளே போக ஒரு கட்டணம் வசூலிக்கறாங்க. இந்தியத் தொல்துறையின் ஆதிக்கத்தில் இருக்கும் இடம்!  அப்பாடா.... அப்ப நல்ல சுத்தமாத்தான் இருக்க வேணும்!


கம்பி வேலிபோட்ட கேட்டுக்குள்  நுழையும்போது பெரிய வளாகமும் புல்வெளியும், இடமும் வலதுமா தூரத்தில் ரெண்டு சிற்பங்களும், மரத்தடி மேடை ஒன்னுமா இருக்கு!
மரத்தில் ஒரு தபால்பெட்டி தொங்குது!  ஆஹா... ஒரு காலத்துலே (சின்னப்பிள்ளையா இருக்கும்போது) இப்படித் தொங்கும் தபால் பெட்டி மரத்துமேலே ஏறிப்போய் அம்மா, அக்கா கொடுத்தனுப்பும் கார்டுகளைப் போட்ட நினைவு வருது.  (அப்பெல்லாம் குரங்கு வேலையெல்லாம் ஜோராய் செய்வேனாக்கும்)
அந்தாண்டை கொடிமரமும் மதில்வாசலும்.  மூணு கோபுரங்கள் வேற  எட்டிப் பார்க்குதே ! மதில் சுவரில் இருக்கும் வாசலுக்குள் ஏறிப்போறோம்.  வாசத்தூணே சொல்லிருது... இது ஹொய்சாளப் பேரரசின் கலைன்னு!  கடைஞ்செடுத்த உருளைகள் !
வாசலைக் கடந்து உள்ளே போனதும் இடதுபக்கம் நெடுநெடுன்னு கூரையைத் தொடும் உசரத்துக்கு ஒரு பெரிய கல்வெட்டு நிக்குது! எல்லாம் நெருக்கியடிச்சுக்கிட்டு ஜிலேபி ஜிலேபியா கன்னட எழுத்துகள்!  முக்கிய சமாச்சாரமாத்தான்  இருக்கணும்! வாசிக்கத் தெரிஞ்சவங்க யாராவது என்ன ஏதுன்னு சொல்லப்டாதா? கைடு கூட யாரும் கிடைக்கலையே.....
நேராக்  கண் போகும் திசையில் இருப்பதைப் பார்த்து மூச்சு நின்னு போச்சு!  பேச்சும்தான்..... ஹா....... ஹா......
பெரிய முற்றம் போல உள்ப்ரகாரம்.  சுத்திவர தூண்கள் வரிசைகட்டி நிக்கும் திண்ணை!  நட்ட நடுவில் ... ஹைய்யோ!   என்னன்னு சொல்வேன்!

அஞ்சு படி ஏறிப்போகும் உயரமான நக்ஷத்திர மேடையில் நடுநாயகமா ஒரு அற்புதம்!  படிகள் ஆரம்பிக்கும் இடத்தில் இடமும் வலதும்  குட்டியூண்டு சந்நிதி அறை!  உள்ளே சிலைகள் ஏதுமில்லை... அதுக்காக விட்டுடமுடியுதா?
வெளி அழகு அப்படியே ஆளைக் கட்டி இழுக்குது. அங்கே போயிட்டால் மீண்டுவருவது கஷ்டமுன்னு தோணுச்சு. எதுக்கும் முதலில், இவுங்களோட சென்னக்கேசவன்  எவ்ளோ  அழகுன்னு பார்த்துட்டு வந்துடலாமுன்னு உள்ளே போறோம்.
என்ன ஒன்னு வாசலுக்கு மேலே சின்னதா  ஒரு கோபுர அமைப்பு மிஸ்ஸிங். மொட்டையா நிக்குதே!  இதுவும் ஹொய்சாளர்களின் ஸ்டைல்களில் ஒன்னு, இல்லையோ!
சரியான லைட்டிங் இல்லை.  தூங்குமூஞ்சி பல்ப் ஒன்னு எரிஞ்சுக்கிட்டு இருக்கு. சின்ன வாசல் என்றதால் பயணிகள் கூட்டம்   வாசலுக்கு உள்ளே நுழையும்போதெல்லாம் ஒரு இருட்டும் வந்துட்டுப்போகுது !

ரெண்டு பக்கமும் வரிசை கட்டி நிற்கும் உருளைத் தூண்களுக்கு மத்தியில்   செவ்வகமா ஒரு கூடம்! நடுக்கூடம் தாண்டிப்போய் நின்னா நம்மைச் சுத்தி மூணு கருவறைகள் அமைப்பு! நேரா ஒன்னு, மத்தபடி இடமும் வலதுமாய் ரெண்டு!
கம்பிக் கதவு போட்டு வச்சுருக்காங்க. கதவினூடாக் கெமெராவை அனுப்பிக் கம்பி வராமல் படங்கள் எடுக்க முடிஞ்சது!
கிழக்கு பார்த்து நிற்கும் கேசவன் நடுநாயகமா........  பார்த்த விழி பார்த்தபடி நின்னுடறோம்....  மினுமினுன்னு கருத்த உருவம்! மேடையில் நிக்கறான். மேடையின் கீழ்ப்பகுதியில் பெரிய திருவடி, இவனை சுமக்கும் பாவனையில் இறக்கையை விரிச்சு, ஒரு பக்கமாய் தலை சாய்ச்சு ஒரு பார்வை!  கருடபார்வை :-)

ஒரு வழியாக் கண்களை மீட்டெடுத்து இடதுபக்கத்துக்குச் சந்நிதிக்குப்போனால்.....  ஹைய்யோ..... நான் என்னன்னு சொல்வேன்.....   வேணுகோபாலன்....  குழலூதிக்கிட்டு நிக்கறான்!
தலையில் முண்டாசு! சுத்திவர தேவர்களும், பசுக்களுமா நின்னு குழலிசையை ரசிக்கிறாங்க. பீடத்தின் அடியில் பெரிய திருவடி!
கோபாலுக்கு நேரெதிர் சந்நிதியில் ஜனார்த்தனன்! சங்கு சக்ரத்துடன் ஒரு கையில் Gகதையும் !

சென்னக்கேசவன் மட்டுமில்லை, சென்ன வேணுகோபாலும், சென்ன ஜனார்த்தனனும் கொள்ளை அழகு!
மூணு சந்நிதியும் ஒரே போல பீடமும் அளவுமா இருந்தாலும் மூர்த்திகள் மூவர்!

மாக்கல் சிற்பங்கள்! இதை ஸோப் ஸ்டோனுன்னு சொல்றாங்க இல்லே! உண்மைதான்.  செதுக்கும்போது ரொம்ப லகுவா இருக்குமோ! இல்லைன்னா இவ்ளோ  துல்லியமான  அலங்காரம், நகைநட்டு எல்லாம் எப்படி? பளபளன்னு ஒரு மினுமினுப்பு!

சந்நிதிகள் மட்டுமில்லாமல் உள்ளே சுவரில் ஒரு இடம் பாக்கி விடலை, மேற்கூரை விதானம் உட்பட!   இழைச்சுட்டாங்க !
இந்த விதானப்பூ டிஸைனை பத்மநாபபுரம் அரண்மனையில் பார்த்துருக்கோம். அங்கே மரத்தில், இங்கே கல்லில்! நடுவிலே வாழைப்பூ  தொங்குது!
ஹொய்சளப் பேரரசு கட்டுன கோவில்களில் இதுதான் கடைசிக்கோவிலாம்!  இது மனசுக்குத் தெரிஞ்சுருக்கும்போல.... அழகு இனி பாக்கி இல்லைன்னு சகலத்தையும் கொண்டுவந்து கொட்டிக் குவிச்சு வச்சுட்டாங்கன்னு சொல்லலாம்!

எத்தனை சிற்பிகள்! எத்தனை காலம்! இப்பவே கொஞ்சம் இருட்டாத்தெரியும் இடத்துக்குள் எங்க எப்படி நின்னு செதுக்கி இருப்பாங்க !  நினைக்க நினைக்க....மனசு அதிர்ந்துபோய் குழைஞ்சுருது! ரெண்டே கண்கள்  மட்டும் கொடுத்தவனைக் கோச்சுக்கத் தோணுது...


நின்னா நின்னபடி, பார்த்தால் பார்த்தபடின்னு.....  இது ஆகாது. கால்களைப் பெயர்த்து எடுத்துக்கிட்டு வெளியே வர்றோம்.

வெளியே அதுக்கு மேலே.....!!!

இந்திரனுக்கு ஆயிரம் கண்களாமே!   அதுலே பாதியாவது மனுசனுக்குக் கொடுக்கப்டாதா?


யானை வரிசை, குதிரை வரிசைன்னு வரிவரியா, அடுக்கடுக்கா அதுபாட்டுக்குக் கோவிலைச் சுத்தி போய்க்கிட்டு இருக்கு!   எல்லாமே போர்க்களக் காட்சிகள்! அங்கங்கே  கொஞ்சம்  மனிதர்கள், ஸ்ருங்கார பாவனையில்!  இதுவும் ஒரு போர்க்களம்தான். என்ன ஒன்னு வெற்றி இருபாலருக்குமுன்னு  வச்சுக்கலாம்.
மெஷீன் வச்சுச் செஞ்சு போட்டதைப்போல வரிசைவரிசையா ஒரே மாதிரி  சிற்பங்கள். ஒரே சிற்பி செதுக்கி இருக்கமாட்டார்னு நினைக்கிறேன். வாழ்நாள் எல்லாம் ஒரு வரிசைக்குக் காணாதே....
ஸ்ரீவேணுகோபாலன்கள் :-)

நாற்பது சிற்பிகளின் பெயர்  நுழைவாசல் மண்டபத்துக் கல்வெட்டுலே இருக்காமே! கோவிலை டிஸைன் செஞ்சக் கட்டடக்கலைஞர் பெயர்  Ruvari Malithamma . இவர் செஞ்ச சிற்பங்களில் எல்லாம் தன்னுடைய பெயரையும் செதுக்கி வச்சுருக்காராம்!  Malli ன்னு சிலசமயம்   Maன்னு சில இடங்களில்  கன்னடத்துலே  கையெழுத்து !
ஆமாம்.... நம்ம தஞ்சைப் பெரிய கோவில், பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கம்,  மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில்னு பெரிய பெரிய அழகான கோவில்கள் இருக்கே நம்ம பக்கங்களில்....  யாரு டிஸைன் பண்ணி இருப்பாங்க?  ஒருவேளை கோவிலில் இருக்கும் கல்வெட்டுகளில் எதாவது குறிப்புகள் இருக்குமோ?

பதினாறு கோண நக்ஷத்திர மேடை! நாம் நடந்து ரஸிக்கத் தாராளமா இடம் விட்டே கட்டியிருக்காங்க. கீழே இருந்து அஞ்சாவது வரிசையில் சாமி. அதுக்குமேலே ஆ....சாமி!  எதோ கணக்கு இருக்கணும், சிற்ப சாஸ்த்திரத்தில்.

உள்ளே மூணு  தனித்தனி சந்நிதிகள்னு சொன்னேனே....  அதுக்கு மூணு தனித்தனி விமானங்கள்.  சந்நிதியின் வெளிப்புறச் சுவர்களில் பெரிய சைஸ் கடவுளர்கள். நிறைய நரசிம்ஹரும், வராஹருமாத்தான்  இருக்காங்க. ராமாயணத்தை நினைவுபடுத்தறமாதிரி ஆஞ்சீஸ் !
ஒரு யோகவிஷ்ணு கூட இருக்கார்!  164208



ப்ரஹ்மா !





 ரதம்!  பாண்டவாஸ்?

மஹிஷாசுரமர்த்தினி
யோகநரசிம்ஹர்,   தியான விஷ்ணு !

யானைகள், ஆதி சேஷன் சிற்பங்களில் எல்லாம் மூக்கும் முகமும் சிதைஞ்சுருக்கு.  'எதிரிகளின் கைவேலை' ? 

இவ்ளோ அருமையா இருக்கும் கோவிலில் தினப்படி பூஜைகள் ஒன்னும் நடக்கறதில்லை. கேசவன் சிலை காணாமப் போயிருச்சுன்னு கேள்வி. ஆனால் நாம் பார்க்கும்போது உள்ளே சிலை இருக்கே!  அப்ப இது நகலா இல்லை  அசலா?

மற்ற ரெண்டு சந்நிதிகளில் இருக்கும் வேணுகோபாலனும் ஜனார்த்தனனும் கூட  அடிபட்டுருக்காங்கன்னு சேதி.  அன்னியர்கள் படைகளால் சேதம்....   ப்ச்.....

கேக்கவே சங்கடமா இருந்துச்சு.  எங்கே என்ன சேதமுன்னு தெரியலை. கம்பிவழி தரிசனத்துலே   இந்த விவகாரம் ஒன்னும் தெரியாது என்பதும் மனசுக்கு ஓரளவு சமாதானம் கொடுத்தது  உண்மை.

வெளியே கோவிலைத் சுத்திவரச் சுவரில்  இருக்கும் சிற்ப அடுக்குகளில் இருக்கும் சிலைகளில் ஒரு காவாசி, கொஞ்சம் பின்னப்பட்டுத்தான்  இருக்கு. காரணம் எதிரிகளா இல்லை காலப்போக்கான்னு தெரியலை.  மேடையையொட்டிக் கீழே இருக்கும் யானைகள் கை ஒடிஞ்சு இருப்பது காலப்போக்கினால் இல்லை என்பதுமட்டும் நிச்சயம்.
இன்னொன்னு.... இவை எல்லாம் மாக்கல் சிலைகள் என்பதால்  சட்னு உடையும் அபாயமும் இருக்கே!  எங்க அம்மம்மா வீட்டுலே நல்ல கற்சட்டிகள் சில சமயம் உடைஞ்சும் போயிருக்கு.  அம்மம்மா என்ன எதிரியா? 

ஹொய்சளப் பேரரசில் மூன்றாம் நரசிம்ஹர் ஆட்சியில் படைத்தளபதி சோமா என்பவரின் கனவு, நனவாகி இருக்கு! இந்த ஊரே அவர் பெயரில்தான்!  அரசர் தாராளமாப் பொருளுதவி செஞ்சுருக்கணும், இல்லே!

  தமிழில் எழுதும் போது சோமநாதபுரம் என்றதும் குஜராத்தில் இருக்கும் சோம்நாத்தோடு குழப்பிக்கக்கூடாது!  இது சோமநாதபுரா. அங்கே சிவன், இங்கே விஷ்ணு! அதுவும் மூவர்!

கோவில் பிரகாரத்தைச் சுற்றி வலம் வந்தோம்.  நமக்கிடப்பக்கம் நல்ல உயரமான திண்ணைகள் ஓடுது!   நட்ட நடுவில் நிற்கும் கோவிலுக்கு வலமும் இடமும் இருக்கும் திண்ணைகளுக்குக் கடைஞ்செடுத்த தூண்களும், பின்னால் இருக்கும்  திண்ணையில் அங்கங்கே சாதாரணச் சதுரத் தூண்களுமா இருக்கு!  உடைஞ்ச தூண்களுக்குப் பதிலா வச்சுருக்காங்களா என்ன?



இந்தத் திண்ணைகளில் ஏறி வெராந்தா முழுசும் நடக்கலாம். இதுலே அங்கங்கே சந்நிதிகள் இருந்தாலும் சிலைகளே இல்லை.  நுழைவுவாசல் மண்டபத்துலே இருந்து இடமும் வலமுமாய் இருக்கும்  வெறும் திண்ணை மேடையில்  வரிசையாக் கொஞ்சம் சிற்பங்கள் இருக்கு. அவையெல்லாம் ஒருவேளை இந்தச் சந்நிதிகளுக்குள் இருந்ததோ என்னவோ.....

அஞ்சரைக்குக் கோவில் மூடும் நேரம் ஆனதால் கிளம்பவேண்டியதாப் போச்சு.  இவ்ளோ அழகுன்னு தெரிஞ்சுருந்தால் இன்னும்  கூடுதல் நேரம் ஒதுக்கி இருக்கலாம். காலை ஒன்பதுக்குத்  திறந்துடறாங்க !
வளாகத்தின் எதிரே நாலைஞ்சு கடைகள். அதில் ஒரு கடையில்  ஆளுக்கொரு டீ, எதிரில் உக்கார்ந்துருந்த  செல்லத்துக்குக் கொஞ்சம் பிஸ்கெட்ஸ். ரெண்டுநாள் நம்ம கூட வந்த ட்ரைவர் ஜெய் இன்றோடு கடைசி.

திரும்ப ராடிஸன் வந்து சேர்ந்தப்ப டெனிஸ் ஜோஸஃப் (ட்ராவல் டெஸ்க்) நமக்கான  விவரங்களைத் தயாரிச்சு வச்சுருந்தார். இங்கெல்லாம் வண்டி  வெளியூர் போகுதுன்னா அதுக்கு வேற மாதிரி சார்ஜ் செய்யறாங்க. தினம் 250 கிமீன்னு கணக்காம்.  நாம் எவ்ளோ குறைவாப் பயணம் செஞ்சாலும்  250க்கு எவ்வளவோ அவ்வளவு காசு. கூடுதல் பயணிச்சால்  அதுக்கு கிமீக்கு இவ்ளோன்னு தனிச் சார்ஜ்.

இருநூத்தியம்பது கிமீ போய்க்கிட்டே இருந்தால்  எப்போ எங்கேன்னு நிறுத்தி இடங்கள் பார்ப்பது?  சாலைகள் இருக்கும் அழகில் இதுக்கே பத்துமணி நேரம் ஆகிடாதா?
என்னவோ போங்க.....

ராச்சாப்பாடு ரூம் சர்வீஸில் ஆச்சு. நாளைக்குப் பத்துமணிக்குக் கிளம்பலாம்.

நல்லா ரெஸ்ட் எடுங்க!

தொடரும்......... :-)

14 comments:

said...

ஒவ்வொரு சிற்பமும் கண்ணுக்குள்ளே யே நிக்கிது ..அவ்வொலோ அழகு..

மூலவர்கள்,வராகர்,யோக நரசிம்மர் எல்லாமே ரொம்ப ரொம்ப அற்புதம்...

இப்பவே போய் நேரில் பார்க்கும் ஆசையும் கூடவே வருது மா..இன்னும் இங்க போனது இல்ல போகணும் விரைவில்...

said...

சிற்பங்கள் மிக அருமை. நன்றி.

said...

கோவில் அழகு.. சென்ன கேசவன் அழகு..

said...

சிற்பங்களின் அழகுக்காகவே பார்க்க வேணும் எனத் தோன்றுகிறது. எத்தனை கலைநுணுக்கம். ஒவ்வொன்றும் அழகு - எதைச் சொல்ல எதை விட.

உங்கள் மூலம் நாங்களும் பார்த்து ரசித்தோம். நன்றி.

said...

அழகு என்றால் அழகு பல வருடங்களுக்கு முன்பு கண்டு கொண்டது .
உங்கள் பகிர்வில் மீண்டும் கண்டது மகிழ்ச்சி.

said...

அன்பு துளசி ,
ஒவ்வொரு , படமும் அழகோ அழகு . நேரில் சென்று பார்த்தது போன்று உணர்ந்தேன் . நன்றிகள் .
வெகு நாளைக்கப்புறம் எழுதுகிறேன் . எப்படி இருக்கீங்க துளசி .
சசிகலா

said...

அடடா... ஒவ்வொரு சிற்பமும் அருமை. படத்துலயே இப்பிடியிருக்கே. நேர்ல எப்படியிருக்கும். கண்ணுக்குள்ளயே வெச்சு சிற்பிகள் செதுக்கியிருப்பாங்க போல. அவங்க எத்தனை ஆண்டுகளா வேலை செஞ்சாங்களோ. அதுவும் பகல்ல மட்டுந்தான் முடியும். லேசா மூடினாலும் செதுக்க முடியாது. அத்தனையையும் மீறி இப்படியொரு படைப்பு.

சோமநாதபுரா போனதில்ல. போகனும்னு இப்பத் தோணுது.

கொஞ்சம் யோசிச்சா... பூசைகள் இல்லாம தொல்லியல்துறையிடம் இருக்கும் கோயில்கள் நல்லாயிருக்கு. எல்லோரா சோமநாதபுரான்னு எடுத்துக்காட்டு சொல்லலாம்.

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

ஒரு நாலைஞ்சுநாள் மைஸூர்லே தங்கினால் ஏகப்பட்ட கோவில்களைப் பார்த்துடலாம். மழை, அதிக வெயில் இல்லாத காலமாப் பார்த்துக்குங்க!

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி ! கொள்ளை அழகே!

said...

வாங்க ஸ்ரீராம்.

கண்களுக்கு விருந்து !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

உங்க கெமெராவுக்கு நல்ல தீனி கிடைக்கும்! போதுமுன்னு சொல்ல மனசே வராது !

said...

வாங்க மாதேவி.

கொசுவத்தி ஏத்திட்டேனா? :-)

எந்த வருஷம் இந்தியா வந்தீங்க?

said...

வாங்க சசி கலா.

ஆஹா.... எவ்ளோ நாளாச்சு பார்த்து! நலமா?

வருகைக்கு நன்றி.

said...

வாங்க ஜிரா.

கோவிலுக்குள் வெளிச்சம் கூட அவ்வளவா இல்லை. கற்பலகணிதான்.

சில கோவில்கள் நூறு வருசத்துக்கு மேலேயே கூட ஆகி இருக்கு, கட்டி முடிக்க ! அவ்ளோ நாள் ஆர்வம் குறையாம இருந்தது சிறப்பு!

பூஜை நடக்கும் கோவில்களையும் மக்களுக்கு மனம் இருந்தால் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும்தான்! ஆனால் மெத்தனம் அதிகம் :-(

தனியார் கோவில்கள் பல அருமையாகவும் சுத்தமாகவும் இருக்கே!