Friday, October 26, 2018

கொடகில் ஒரு 'வசதி'யும் பின்னே ஒரு அருவியும் !!!!! (பயணத்தொடர், பகுதி 25)

காலை ஏழுமணிக்கெல்லாம் ரெடி ஆகிட்டோம்.  பேக்கிங் எல்லாம்  ஆச்சு. நம்ம ட்ரைவர் அசோக் குளிக்க நம்ம காட்டேஜ் சாவியைக் கொடுத்துட்டு, அன்னபூர்ணேஸ்வரியில் போய் ஒரு காஃபி குடிச்சுட்டு வரலாமேன்னு  சின்னநடையில் போய் காஃபி ஆச்சு.  வெளியே வரும்போது ஒரு செல்லம் எனக்காகக் காத்திருந்தது. பக்கத்துப் பொட்டிக் கடையில் ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கி அதுக்குப் போட்டேன். தின்னுட்டுக் கூடவே நடந்து வந்துச்சு :-)

மயூரா வெலாபுரி வாசல் வரைக்கும் துணைக்கு வந்ததை, 'நம்மவர்'  போடா உன் இடத்துக்குன்னதும்  என்னவோ புரிஞ்சமாதிரி திரும்பிப்போயிருச்சு!  என்னதான் சொல்லுங்க.... நாய் என்ற ஜீவராசி காண்பிக்கும் அன்பு அலாதிதான்!  வளாகத்துக்குள் வந்தா தோட்டத்தில் ஒரு ஜோடி! 

அசோக் ரெடியா இருந்தார்.  நேத்து ராத்திரி,  தெருக்கோடியில் ஒரு கையேந்திபவனில்  இட்லி சாப்பிட்டாராம். அங்கேயே இப்பவும் ப்ரேக்ஃபாஸ்டுக்குப் போறதாகச் சொல்லிட்டு, நீங்க அங்கே சாப்பிட வர்றீங்களான்னார். எப்படி இருக்கு இடமுன்னு போய்ப் பார்த்தோம்.  என்னால் முடியாது.....  எங்களை அன்னபூர்ணேஸ்வரியில்  கொண்டுபோய் இறக்கிட்டு அசோக் அங்கே போனார்.  நாங்க  ரெண்டு இட்லி வடையுடன் இன்னொரு காஃபியுமா உள்ளே தள்ளினோம். நாங்க வெளியே வந்தப்ப, வண்டி  வாசலில் வந்து காத்திருந்தது!
எட்டேகாலுக்கு  செக்கவுட் செஞ்சுட்டுக் கிளம்பிப்போறோம். சுமார் 160 கிமீ பயணம் இருக்கு!  கிளம்புன மூணாவது நிமிட், ஒரு பூக்கடை கண்ணில் பட்டதும், அசோக்கிடம் வண்டியை நிறுத்தச் சொன்னேன். எனக்குப் பிடிச்ச கனகாம்பரம் இருக்கு!  அசோக் இதை நல்லா நினைவில் வச்சுக்கிட்டு, பயணம் முழுசும், காலையில் கிளம்பும்போது பூக்கடை பார்த்தால்  அதுவும் கனகாம்பரம் இருக்குன்னா சட்னு  அங்கெபோய் வண்டியை நிறுத்திடுவார்.  பெரிய அண்ணன் கவனிப்பு :-)

எங்க அம்மம்மா ஒரு டீச்சர்! அதுவும் ஒண்ணாங்க்ளாஸ் டீச்சர்.  அந்த ஊர்ப்பிள்ளைகள் எல்லாம்  இவுங்ககிட்டே இருந்தே படிப்பைத் தொடங்கினவுங்கதான்.  பல வருஷங்களுக்குப்பின்னும் கூட,  கல்யாணம், காதுகுத்துன்னு இன்னபிற விசேஷங்களுக்கு வீட்டுக்கு வந்து பத்திரிகை வச்சுக் கூப்பிட்டுப்போறது வழக்கம்!   ஆசிரியர்களுக்கு மதிப்பு இருந்த காலம் அது!

அப்போ ஒரு சமயம், இளைஞர் ஒருவர், வீட்டுக்கு வந்து டீச்சரை வணங்கி ஆசிகள் வாங்கிக்கிட்டார்.  வேலை கிடைச்சு ஊரைவிட்டுப் போறாராம்!  போற இடம் மெர்க்காரான்னு  சொன்னாரா, நான்  அது எங்கியோ ஃபாரின்லே இருக்குன்னு நினைச்சுக்கிட்டேன். பதிமூணு வயசுக்கு அப்போ அவ்ளோதான் அறிவு :-)
அதே மெர்க்காராவுக்குத்தான் இப்போ போய்க்கிட்டு இருக்கோம்!  போற வழி முழுசும் காஃபி எஸ்டேட்!   காஃபியும், பாக்கும், மிளகும், ஏலக்காயுமா ரொம்பவே அடர்த்தியா விளைஞ்சு நிக்கும் தோட்டங்களுக்கு நடுவேதான் சாலையே!  முழு அழகையும் ரசிக்கவிடாமல் மழை ஒரு சல்யம்.
இந்த மெர்க்காராவுக்கு  அதோட பழைய பெயரே இப்பத் திரும்பக் கிடைச்சுருச்சு!  மடிகேரி.  முத்துராஜாகிரி( Muddu Raja Giri) என்ற பெயர், காலப்போக்கில் மருவி முத்துகிரி, முதுகிரி,  மடிகிரி, மடிகெரி, மடிகேரின்னு...... ஆகிப்போச்சு ! கூர்க் பகுதியைச் சேர்ந்த  மலைப்ரதேசம்.

ரெண்டாம் நூற்றாண்டுலே இருந்து  இங்கத்து வரலாற்றுக்கான  தரவுகள் இருக்காம்!  அப்போ கடம்பர்கள் ஆட்சி. அதுக்குப்பின் கங்கையர், சோழர், ஹொய்சாலர்னு ஆட்சிகள் கைமாறி விஜயநகரப் பேரரசின்கீழ் வந்துருக்கு!  இதுவும் சில நூற்றாண்டுகளே.

உள்ளூர் சிற்றரசர் கைகளில் ஆட்சி நடந்த சமயம்தான் நாயக் வம்சத்தின் முத்துராஜா (Muddu Raja) கோட்டை ஒன்னு கட்டி இருக்கார்.  மண் கோட்டையா இருந்ததை, நம்ம திப்பு சுல்தான்  கற்கோட்டையா மாத்திட்டார். திப்புவின் காலத்துக்குப்பின்   கடைசியில்  பிரிட்டிஷ் ஆட்சி.

இந்த இடம் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 1150 மீட்டர் உயரத்தில் இருப்பதால் குளுகுளுன்னு இருக்கும். வெள்ளையருக்குத்தான் சூடு தாங்காதே! நம்ம ஊட்டி, கொடைக்கனால் போல இதை கோடைக்கான இடமா வச்சுக்கிட்டு அனுபவிச்சுருக்காங்க.  முத்துராஜகிரின்னுச் சொல்லிப்பார்க்க முடியாம, மெர்க்காரான்னு ஒரு புதுப்பெயரும் சூட்டிவிட்டது அப்போதான்.  பல ஊர்களை இப்படிப் பெயர் மாத்துனது இவுங்கதான். இப்பதான் பழைய பெயர்கள் எல்லாம் ஒவ்வொன்னாத் திரும்பி வந்துக்கிட்டு இருக்கு.  ஆனாலும் என்னைப்போல பழைய தலைமுறைக்கு, வெள்ளையர் வச்ச பெயரே பழக்கமாப் போயிட்டதால்....  ம்ம்ம்ம் அதொரு கஷ்டம்..... விடுங்க....
கிளம்புன நாலு மணி நேரத்தில், வழியில் ஏகப்பட்ட காஃபித் தோட்டங்கள் , திடுக் திடுக்னு  கண்ணுலே விழும் சின்னச்சின்ன ஊர்கள் எல்லாம்  கடந்து மடிகேரி வந்து வசதியில் செக்கின் ஆச்சு.  'வசதி'ன்னு நான் வாசிச்சேன். வசா(த்)தி னு  சொல்லிக்கிட்டுருக்காங்க  ஹொட்டேல் ஆட்கள்.
எல்லோரும் கேரளமக்கள் என்பதால் எனக்கு 'வசதி'யாப் போச்சு சம்ஸாரிக்க :-) டவுனுக்குள்ளே இருக்கும் இடம் இது.  ஒரே ஒரு கஷ்டம்.... லிஃப்ட் வசதி இல்லை. ரெண்டு மாடி ஏறி இறங்கின்னு....  ஒவ்வொரு மாடி லேண்டிங்லேயும் உக்கார ஸீட் போட்டுருக்காங்க.   ரெண்டு நிமிட் உக்கார்ந்துட்டு அடுத்தமாடிக்குப் படியேறணும்:-)
முதலில் நமக்காகக் கொடுத்த அறை நல்ல பெருசு. டீலக்ஸ் ரூம் புக் பண்ணி இருந்தோம்.  அங்கெ போனா  கார்னர் ரூம் என்பதால்  வெளிப்பக்கம் ஜெனெரேட்டர் ஓடும் சத்தம் தாங்க முடியலைன்னு சாதாரண அறைக்கு மாத்திக்கிட்டோம். அறை சின்னதுதான். போகட்டும்....

இந்தப் பக்கங்களில் ஹோம்ஸ்டே என்பது அதிகம். ரிலாக்ஸா ஓய்வெடுக்கணுமுன்னா இது ஓக்கே!  நமக்கோ.... காலிலே சக்கரம். மேலும் புது இடத்தில் வீட்டாட்கள் எப்படி இருப்பாங்களோ... நம்ம ஓட்டத்துக்கு முடியுமோன்னெல்லாம் யோசனை இருந்துச்சு.

வசதியில் ரெஸ்ட்டாரண்டும் சேர்ந்தே இருக்கு. ஆனால்  கிச்சனில் இருந்து மாடி ஏறி வரும் மசாலா வாசனை.....  ப்ச்....  ப்போர்க்  இந்த ஊரில் ரொம்ப ஃபேமஸாமே!

உடுபி ஹொட்டேல் ஒன்னு இருக்குன்னு அசோக் சொன்னார். 'ச்சலோ'ன்னு கிளம்பிட்டோம்.  ஊரின் போக்குவரத்து முழுசும் ஒருவழிப்பாதை என்பதால்   எப்போதும் வலம் வர்றதுதான்.  மழை வேற விட்டுவிட்டு  மஹா சல்யம்.  கொண்டு வந்த ஒரே குடையும்  பேலூர் காத்துலே பிச்சுக்கிட்டுப் போயிருச்சே....
அம்பிகா உபஹார் போனோம். இதுவும் மாடியில்தான். கீழே கடைகள்!    'நம்மவருக்கு' தாலி!  எனக்கு  புதினா பரோட்டா & ஃபலூடா!

ரொம்ப வருஷங்களாச்சு  ஃபலூடா ருசிச்சு. ஒரு காலத்துலே நம்ம சென்னை மெரினாவில் புஹாரி ஹொட்டேல் ஒன்னு இருந்துச்சு, நினைவிருக்கோ? அங்கே  மொட்டைமாடியில் கடல் பார்த்தபடி ஃபலூடா சாப்பிடுவது (! ?) என் ஹாபிகளில் ஒன்னு :-) உண்மையைச் சொன்னா  இதை மறந்தே பலவருஷங்களாச்சு. இப்போ இங்கத்து மெனுவில் இருந்ததால்...  கொசுவத்தி:-) நாலைஞ்சு வகை போட்டுருக்காங்க. ஒவ்வொன்னா வாங்கிப் பார்க்கணும் :-)
நம்ம கூடவே உக்கார அசோக்கிடம் சொன்னாலும்....  அதென்னவோ அவர் வேறேதோ மூலையில் போய் உக்கார்ந்துக்கிட்டார்.  பரிமாறும் நபரிடம் அவருக்குத் தேவையானதைக் கொடுக்கவும், நம்ம பில்லிலும் சேர்க்கும்படியும் சொல்லிவச்சோம்.

சாப்பாடு ஆனதும் இங்கே பக்கத்துலே ஒரு ஏழெட்டு கிமீ தூரத்தில் இருக்கும் நீர்வீழ்ச்சியைப் பார்க்கலாமுன்னு போனோம்.  Abbi / Abbey Falls  அப்பி அருவி.
வெள்ளையர்கள் ஆட்சியில் இங்கே முதல்முதலாக வந்த  சாப்ளின்,  அருவிக்கு வேற பெயர் வச்சுட்டார். ஜெஸ்ஸி ஃபால்ஸ். மகளோட பெயர் ஜெஸ்ஸியாம்!  கர்நாடகா டூரிஸம் கொடுத்த ப்ரோஷர்லே  மனைவியின் பெயர் ஜெஸ்ஸின்னு இருக்கு. மகளா மனைவியான்னு இப்ப ஒரு புது சந்தேகம்   தேவையா எனக்கு......    அவுங்க வீட்டுப் பூனையாக்கூட இருக்கலாம்...   என்ன நாஞ்சொல்றது....
இந்திய சுதந்திரத்துக்குப்பின், அருவியைச் சுத்தி இருக்கும் இடத்தை ஒருவர் வாங்கி, அதை காஃபி & மஸாலாத் தோட்டமா மாத்தியிருக்கார். ஆனாலும்  அருவி அரசாங்க சொத்து இல்லையோ?  அதனால் அருவிக்குப் போகும் வழி ஒன்னை விட்டு வச்சுருக்காராம்.
காமணி நேரப்பயணத்தில் அருவிக்குப்போகும் தோட்டத்தாண்டைப் போயிட்டோம்.  மழை காரணமாச் சதச்சதன்னு  இருக்கும் பாதை... ஒரு பக்கம் முழுக்கத் தீனிக்கடைகள்.  கொஞ்சநேரம் தின்னாமல் இருக்க முடியாதோ?  ப்ச்....
அருவிக்குப் போக தனியா ஒரு வாசல். காலை 6 முதல் மாலை 6 வரை திறந்து வச்சுருக்காங்க.   ஆளுக்கு இருவது ரூபாய் கட்டணம்.  மழைவேற.....  நிறையப் படிகள்!  நம்மவர் ரெயின்கோட் (!) பைக்குள்ளே வச்சுருந்ததை எடுத்தார்.  நல்ல முன் ஜாக்கிரதை முத்தண்ணர் :-) கெமெரா நனையாம இருக்கணுமே.... என் கவலை எனக்கு...

சுமார் இருநூற்றம்பது படிகள்.  பாதி தூரம் போனதும்... போகணுமான்னு தோணுச்சு. எதிரில் படியேறி வந்தவங்ககிட்டே விசாரிச்சேன். இன்னும் கொஞ்ச தூரம்தான்னு  பால் வார்த்தாங்க.  நல்ல இறக்கம்தான்.
ஹோன்னு சத்தத்தோடு அருவி பாயுது!  மழைக்காலத்துலே  நீர்வரத்து அதிகம். சுமார் எழுபது அடி உசரம்.


கம்பித்தடுப்பெல்லாம் போட்டு நல்லாவே வச்சுருக்காங்க.
தண்ணீர் விழுந்து ஒரு ஆறு ஓடுது... அதுக்குக் குறுக்காக ஒரு கம்பிப்பாலம்.  பாலத்துக்குப் போகும் வழி அடைச்சுருந்தது.  தண்ணீர் வரத்து அதிகம் என்பதால்  மூடி வச்சுருக்காங்களாம். டேஞ்சர் ஸோன்! 
மேற்குத் தொடர்ச்சி மலையில்  இந்தப்பகுதியில் அங்கங்கே பெருகிவரும் ஊற்றுத்தண்ணீர் எல்லாம் சேர்ந்துதான் அருவியாக மலையில் இருந்து கீழிறங்கி ஆறாகப்பெருகிக் காவிரியோடு போய் சேர்ந்துருதாம்.



மழை வலுக்க ஆரம்பிச்சதும்  நாங்க மெள்ள மெள்ள படிகளில் ஏறி வந்துட்டோம். படிகளுக்கு ரெண்டு பக்கமும் கம்பிவலை அடிச்சுருக்காங்க.  மழையில் குளிச்சுத் தளதளன்னு பசுமையான காஃபிச்செடிகள்!  கொஞ்ச நேரம் நின்னு பார்க்கலாமுன்னா..... என்னப்பா  இப்படி ஒரு மழை.....

தொடரும்.........:-)

9 comments:

said...

நயகரா பார்த்தவங்க இந்த அருவியையும் பார்த்து ரசிச்சிருக்கீங்களே... ரெயின் கோட் பார்த்த உடனேயே உங்கள் நயகாரா பயணம்தான் நினைவுக்கு வந்தது.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

அது ஒரு அழகுன்னா இதுவும் ஒரு அழகு இல்லையோ!!!

ரெண்டு அருவிக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு! குளியல் போட அனுமதி இல்லை :-)

said...

நாயின் நன்றியுணர்ச்சிக்கு அளவே கிடையாது. டீச்சருக்கு பூனைகள் ரொம்பப் பிடிக்கும்னு தெரியும். ஆனாலும் மனிதர்களோட பழகி அவங்களுக்கு எல்லா வகையிலும் உதவியாயிருக்கும் ஒரே விலங்கு நாய் தான். நாய்க்கும் மனிதனுக்கும் எப்படி பழக்கம் உண்டாகியிருக்கும்னு யோசிச்சுப் பாக்குறேன். நாய் பழகுன அளவுக்கு நரியும் ஓநாயும் பழகலை பாருங்க. ஆனா அதையும் பழக்குனா நாய் மாதிரிதான் இருக்கும்னு சொல்லக் கேள்வி.

கனகாம்பரத்தோட நிறம் தனித்துவம். மணம் இல்லாட்டியும் அந்த நிறத்துக்காகவே கொண்டாடலாம்.

மடிகேரி ஓட்டல்கள்ள மலையாளிகள் நிறைய வேலை செய்றாங்களோ? கேரளா அங்கருந்து பக்கங்குறதால இருக்கலாம்.

அப்பே அருவி ரொம்ப அழகு. நடுவுல இருக்கும் பாலத்துல நின்னு சாரலை இரசிச்சதெல்லாம் நினைவுக்கு வருது.

said...

அனைத்தையும் ரசித்தேன். அருவியும் கம்பிப்பாலமும் அருமை. இரு குதிரைகளை பார்த்தபோது சிலையோ என்று நினைத்தேன்.

said...

சூப்பர்.

said...

வாங்க ஜிரா.

உண்மையிலேயே நான் நாய் ஆள்தான். நியூஸி வந்தபிறகே பூனைக்கு மாறிட்டேன். எல்லாம் இங்கத்துக் காலநிலையாலேதான். நாய்களுக்கு இங்கே பயங்கரக் கன்ட்ரோல்ஸ். பாவம்.... அதுகள். ராத்திரின் பத்து மணிக்குமேல் குலைக்கக்கூடாது. தமிழ்நாடு தீபாவளிப் பட்டாஸ் விவகாரம் போல இருக்குல்லே!

மேலும் என்ன குளிரானாலும் நாய்களை நாம் நடக்கக்கூட்டிப்போகணுமே.... தேவையான உடற்பயிற்சி கொடுக்கலைன்னா நாய்களுக்கு சீக்கிரம் நோய் வந்துரும்.

ஆனா என்ன ஒன்னு.... நாய் போல வேறெதும் சட்னு அன்பைக் காமிக்காதுதான்!

கனகாம்பரம் கனமில்லாத பூ! சட்னு வாடவும் வாடாது!

கேரளா ரொம்பவே பக்கம்! மாநிலங்கள் எல்லாம் அரசியல் ரீதியாப் பிரிக்காத காலத்துலே எல்லாம் ஒன்னுமண்ணாத்தான் இருந்துருக்காங்க. கேரளபாணி கோவில்களே இதுக்கு சாட்சி!

பாலத்துக்குப் போகும் வழியை மூடியிருந்தாங்க. அங்கே நின்னு அருவியை நேருக்கு நேர் பார்க்கும் வாய்ப்பு கிட்டலை எனக்கு...

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

குதிரைகள் நல்ல விளையாடும் மூட்லே இருந்தாங்க :-) நண்பேண்டா.....ன்னு இருக்குமோ ! :-)

said...

வாங்க மாதேவி.

நன்றி !

said...

பார்க்கவே குளிர்ச்சியா இருக்கு...