Sunday, March 19, 2006

நம்பிக்கைதான் வாழ்க்கையா?

பயண விவரம் பகுதி 6


குஷ்டரோக வியாதியஸ்தர்களுக்கு சேவை செய்யற மிஷன்லே சேர்ந்து, அதன்காரணமா தமிழ்நாட்டுப் பக்கம்வந்துட்ட இவுங்க ரெண்டு பேரும் 'ஆதி'யிலே பெங்களூருவைச் சேர்ந்தவுங்க. அங்கே 'பிபிஎல்' கம்பெனியிலே வேலை செஞ்சுக்கிட்டு இருந்த கேரளத்துக் கொல்லம் சந்தோஷ், கர்நாடகாவைச் சேர்ந்த நளினியை( இவுங்க டீச்சர்)க் காதல் மணம் செஞ்சுகிட்டவர். ஏதோ ஒரு நிமிஷத்துலே 'டக்'ன்னு முடிவு செஞ்சு வேலையை விட்டுட்டுஇந்த மிஷன்லே சேர்ந்துட்டாங்க. இது நடந்து ஒரு ஒம்போது வருசமாச்சு.


இங்கே ச்சென்னைக்கு வந்தப் பிறகு தாம்பரம் டி.பி.சானடோரியத்துலே வேற யாரையோ பார்க்கப்போக, அங்கே 'போற இடம் தெரியாம' தவிச்சுக்கிட்டு இருந்த எய்ட்ஸ் நோயாளிகளோடு ஒருவித இரக்கம் ஏற்பட்டு, அவுங்களுக்கு எதாவது செய்யணுமுன்னு 'ஹோப் பவுண்டேஷன்'கூடச் சேர்ந்து இப்ப ஒரு சேவை மையம் நடத்திக்கிட்டு இருக்காங்க.


கிராமத்துலே இருந்து வியாதி( என்னன்னு தெரியாமலேயே) பிடிச்சு டி.பி. ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ற ஜனங்களிலே 78% திரும்பப்போக வழி இல்லாமப் போயிருது. உறவினர்கள், சிலசமயம் சொந்தப் பெற்றோர்கள் கூட இவுங்களைத் தள்ளி வச்சுடறாங்களாம்.மூணுமாசம்,ஆறுமாசம் சிகிச்சைக்குப் பின்னே நோய் ஓரளவுக்குக் கட்டுப்பட்டாலும்....... ஆஸ்பத்திரியோ காலம் பூராவும் வச்சுக்காது.


இதுலே ஆம்பிளைங்க அங்கெ இங்கேன்னு இடம்மாறிப் போயிடறாங்க. சிலர் தெருக்களிலே பிச்சை எடுத்து வாழறாங்க. பெண்களுக்கோ இதுலே 'வேற'மாதிரி தொல்லை. இதுலே பலரும் ரொம்ப இளவயசுப் பெண்கள், கேக்கணுமா?


மொதல்லே ஓரளவு குணமான இவுங்களைத் தங்க வைக்க வீடு வாடகைக்கு எடுக்கவே தலையிலே தண்ணி குடிச்சுட்டாங்களாம்.அக்கம்பக்கத்து ஆட்கள் ஒரே புகார். எல்லாத் தடைகளையும் காவல்துறை உதவியோடு(!) சமாளிச்சு மொதல்லே ஏழு பேரோடஇந்த ஹோமை ஆரம்பிச்சிருக்காங்க. அப்புறம் அவுங்க குழந்தைங்களையும் சேர்த்துக்கிட்டாங்க. அந்தப் பிள்ளைகளைத் தத்துக்கொடுக்கலாமுன்னா, 'ஹெச் ஐவி பாஸிட்டிவ்' இருக்கற குழந்தைகளை யாரு எடுத்துப்பாங்க?


மொதல்லே கொஞ்சம் குணமான பெண்கள் திரும்ப நோய்வாய்ப்பட்டு இறக்கவும், அவுங்க பிள்ளைங்க அநாதைங்களா ஆயிருச்சுங்க.சொந்தக்காரர் யாரும் சட்டையெ செய்யறதுல்லை. வேணாம்னே சொல்லிடறாங்களாம். பாவம், அந்தப் பிஞ்சுங்க.செய்யாத தவறுக்கு தண்டனை(-:


சரியான பராமரிப்பு , மருந்து, சாப்பாடுன்னு பலதுக்கும் பணம் வேண்டியிருக்கே.ஆனா எப்பவும் பத்தாக்குறைதான்.அதுலெயும் ச்சின்னக்குழந்தைகள் இறப்பு நிறையவே இருந்துருக்கு. கொஞ்சம் குணமான பெண்களுக்கு இந்தக் குழந்தைகளை பாத்துக்க, நேரத்துக்கு மருந்து கொடுக்கன்னு பயிற்சி கொடுத்துருக்காங்க. ஓரளவு விவரம்தெரிஞ்ச புள்ளைங்களுக்கும் எந்த மருந்து எப்பெப்ப சாப்புடணும், ஓடி விளையாடறப்ப கீழே விழுந்து அடிகிடி பட்டுட்டா உடனே என்ன செஞ்சுக்கணுமுன்னெல்லாம் நல்லாச் சொல்லிக் கொடுத்துருக்காங்க.


பெண்களுக்கு தையல் வேலை, சில கம்பெனிகளில் சின்னச்சின்ன வேலைன்னு தேடிக் கொடுத்துருக்காங்க.கொஞ்சம் பொருளாதார நிலையில் சமாளிக்கத் தெரிஞ்ச பெண்கள் தனியா வீடு எடுத்தும் வசிக்க ஆரம்பிச்சிருக்காங்க.பெண்களுக்குத் தன்னம்பிக்கையை வளர்த்து, அவுங்க காலுலேயே நிக்க வைக்கிற முயற்சியிலே ஓரளவு வெற்றியும்கிடைக்க ஆரம்பிச்சிருக்கு.


சமீபத்துலே ஒரு 21 வயதுப் பொண்ணுக்கும் இதே நிலைமையிலே இருந்த 25 வயது இளைஞருக்கும் நடந்த கல்யாணம்தான்இந்த 'ஹோம்' லே நடந்த முதல் கல்யாணம்.


ஒவ்வொரு பிள்ளைக்கும் மாசம் 2000 ரூபாய் மருந்து செலவு மட்டுமே. இப்பக் கணக்குப் போட்டுப் பாருங்க 23பிள்ளைங்களுக்கு எவ்வளோ ஆகுமுன்னு?அரசாங்கம் கொடுக்கற நிதி கிடைக்குதுதானாம். ஆனாலும் அது எந்த மூலைக்கு?


இவ்வளோ காசை எப்படி சேர்க்கப் போறொமுன்னு, அதுவும் மாசாமாசம் கவலை பிடுங்கித் தின்னுக்கிட்டு இருந்த நிலமை இப்பக் கொஞ்சம் சீர் அடைஞ்சிருக்கு. உலக சுகாதார மையம் இப்ப உதவி செஞ்சு மருந்துங்களை இலவசமாக் கொடுக்குதாம்.


ஆனா தலைவலி போனாத் திருகுவலி வந்துச்சுன்னு சொல்றது மாதிரி இப்ப இன்னொரு கவலை வந்து சேர்ந்திருக்கு.அது என்னன்னா இந்த வியாதியிலே இறந்துட்டவங்களை கடைசி யாத்திரைக்கு அனுப்பறது. ஆஸ்பத்திரியிலேயே இறந்து போனவங்களை, அவுங்க குடும்பத்துக்குத் தகவல் சொல்லி அனுப்புனாலும் யாரோ ஒருத்தருக்குத்தான் உறவுங்க கையாலே கொள்ளி கிடைக்குதாம். அப்ப மத்தவங்களுக்கு?


"என்னக்கா செய்யறது? அப்படியே விட்டுற முடியுதா? அரசாங்கம் கேட்டுக்கிச்சேன்னுதான் செய்ய ஆரம்பிச்சேன்."


" ஏன், அவுங்க உங்களைக் கேட்டாங்க? "


" 'ஹோம்'க்கு நிதி உதவறாங்களே. அப்ப ஒரு சந்தர்ப்பத்துலே கேட்டாங்க. நானும் சரின்னுட்டேன். இப்ப ..."

" அப்படியா? எவ்வளோ செலவாகுது?"

" ஒருத்தருக்கு 1200 ரூபாய் ஆகுதுக்கா. அதுலே அரசாங்கம் 800 தருது. பாக்கியை நாங்களே போடறோம்.அதுவும் அந்தக்காசு உடனே கிடைக்காது. அது பாஸ் ஆகி வர நாள் செல்லும்"

" அரசாங்க இயந்திரம்? எண்ணெய் ரொம்பப் போடணும்.இல்லே?"

" ஆஸ்பத்திரியிலே மார்ச்சுவரியிலே இருந்து உடலை எடுத்து வெள்ளைத்துணி சுத்தித் தயார் செஞ்சு கொடுக்கவும்அங்கத்து ஆட்களுக்கு காசு வெட்டணும். அதுக்கப்புறம் உடலை மின்சார மயானம் கொண்டு போகணும். அங்கேயும்மூங்கில் முளை கட்டி, உடலை வைக்கவும் இன்னும் சில சில்லரை செலவுமுன்னு ஆகிருது. அதைச் செய்யன்னுஅங்கெ இருக்கறவங்களுக்குக் காசு கொடுத்தாத்தான் வேலையே ஆகுது."

"அடிக்கடி மரணம் நடக்குதா?"

"மாசத்துக்கு எப்படியும் 20 ஆகிருது."

"எப்படிக் கொண்டு போறீங்க?"

" இப்ப சமீபத்துலே ஒரு பழைய மாருதி வேன் வாங்கியிருக்கோம். ட்ரைவர் எப்ப வேணுமோ அப்ப சொல்லிட்டா வந்துருவார். அவருக்கு அன்னைக்கு மட்டும் சம்பளம் கொடுத்துருவோம். மொதநாளே சொல்லிருவோம். காலையிலே அஞ்சு மணிக்கு ஆஸ்பத்திரிக்குப் போய் உடலைத் தயார் செஞ்சு எடுத்துக்கிட்டு 6 மணிக்கு முன்னாலேமயானம் போயிரணும். நேரமாயிருச்சுன்னா விஷயம் பரவிடும்."


மனுஷனோட கடைசிப் பயணம்ன்றது எவ்வளவு முக்கியம்? ஒரு 'டீசெண்ட்டான எக்ஸிட்' வேணுமா இல்லையா?

கத்ரீனா ஆடிட்டுப் போனப்பறம் மொதந்த உடல்களை டிவி யிலே பார்த்தது ஞாபகம் வந்துச்சு.

'அக்கா, நீங்க இந்தியா வரப்போறிங்கன்னு மலர்விழி (Director-Women and Children Program) சொன்னாங்க.சரியான தேதி தெரியலைன்னாங்க. வாங்கக்கா, ஹோமுக்குப் போய் புள்ளைங்களைப் பார்க்கலாம்' சொன்னது நளினி( ஹோப் ப்ரோக்ராம் கோ ஆர்டினேட்டர் & கேர் கிவர்)

மூணு வருசத்துக்கு முன்னாலெ அவுங்களை மொத மொதல்லெ சந்திச்சப்பவும் இப்படிக் கூப்புட்டாங்கதான்.ஆனா, எனக்கு அவ்வளோ மன தைரியம் கிடையாது. ரொம்ப முடியாம மரணப்படுக்கையிலெ இருக்கும் குழந்தையை என்னாலெ எப்படிப் பார்க்க முடியும்? நானும் அழுது அரட்டிருவேனே. அப்ப நான் தனியாப் போயிருந்தேன், எப்படியோ சால்ஜாப்பு சொல்லித் தப்பிச்சுட்டேன். இப்ப எங்க இவர் வேற இருக்கார். இவருக்கும் மனசு தாங்காது.இப்ப என்ன சொல்லலாமுன்னு யோசிச்சது நளினிக்குப் புரிஞ்சு போச்சு போல.


"பிள்ளைங்கெல்லாம் இப்ப நல்லா இருக்காங்கக்கா. இந்த ரெண்டு வருசமா ஒரு மரணம்கூட நடக்கலை."

'அம்மாடி, வயித்துலே பாலை வார்த்தேம்மா'ன்னு நினைச்சுக்கிட்டுச் சரின்னு கிளம்புனோம்.

மாடி வீடு. தனிவீடுதான். நாங்க போன சமயம் சிலர் விளையாட்டு, சிலர் தூக்கம், சிலர் வீட்டுப்பாடம்னுஇருந்தாங்க. ஆறு பிள்ளைங்க பள்ளிக்கூடம் போறாங்க. இவுங்களைப் பத்தின விவரம் அந்த ஸ்கூல்தலைமைக்கு மட்டுமே தெரியும். விஷயம் பரவுனா மற்ற பிள்ளைகளோட பெற்றோர்களின் எதிர்ப்பு வரும்என்ற பயம். பிள்ளைகளுக்கு நல்ல பயிற்சி கொடுத்து வச்சிருக்காங்க. இவுங்கள்ளே ஒரு குழந்தை வகுப்பிலேயேமுதல் மாணவி. பேரு தமிழரசி.
'வாங்க பசங்களா'ன்னு கூப்புட்டவுடனெ எல்லோரும் ஓடிவந்து சூழ்ந்துக்கிட்டாங்க. ச்சின்னப் பிஞ்சுங்க எல்லாம்,பார்க்கவே ச்செல்லம் போல இருந்துச்சுங்க. ஒருத்தர் மட்டும் (9 வயசு) பத்து நிமிஷம் லேட்டா வந்தார். பார்த்தவுடனேதெரிஞ்சது காரணம். முகம் கழுவித் தலை வாரி, பவுடர் அடிச்சுக்கிட்டு( நிறைய) வர நேரம் ஆகாதா?


இவுங்களுக்குக் கொடுக்கற மருந்தோட வீரியம் கூடுதல். அதுகாரணமா கொஞ்சம் தோல் சொரிச்சல், நமைச்சல்எல்லாம் பலர்கிட்டே இருக்குது. மருந்து சாப்பிட்ட நாளில் இன்னும் கூடுதலாம். 'இன்னிக்குப் பரவாயில்லை'ன்னு சொல்லுச்சுங்க பசங்க

.
'பிள்ளைகளுக்கு ஒண்ணும் வாங்கிவரலையே'ன்னு எங்களுக்கு ஃபீலிங்கா இருந்துச்சு. இங்கே வர்ற ப்ளான் இல்லைதானே?நளினிகிட்டே ஒரு தொகையைக் கொடுத்து எதாவது வாங்கித்தரணுமுன்னு கேட்டுக்கிட்டேன். 'என்னென்னு நீங்களேசொல்லுங்கக்கா'ன்னாங்க. கொஞ்சம் யோசிச்சுட்டு, எல்லோரையும் ஒரு நாள் அவுட்டிங் கொண்டு போய் நல்ல ஹொட்டலிலே சாப்பிட வையுங்க'ன்னு சொன்னென். பசங்களுக்கு அப்பவே 'பிக்னிக்'போற சந்தோஷம் ஒட்டிக்கிச்சு.


ச்சும்மா ஒரு 500 ரூபாயில் ஆரம்பிச்ச உறவு. இப்ப மற்ற நிறுவனங்களுக்குக் கொடுத்துக்கிட்டு இருந்ததை நிறுத்திட்டு இவுங்களுக்கே கொடுக்கறதாலே கணிசமாக் கொடுக்க முடியுது. மற்ற இடங்கள்? அவுங்க ஏற்கெனவே நல்லாஎஸ்டாப்ளிஷ் ஆயிட்டாங்க. அங்கெ பிள்ளைகளும் ஆரோக்கியமானவுங்கன்னு மனசுக்குச் சமாதானம் சொல்லிக்கிட்டேன்.


இப்ப சந்தோஷ், இந்த நோய் தடுப்பு முறை, எப்படி வராம பாதுகாத்துக்கலாம்ன்ற விழிப்புணர்வு ப்ரோக்ராம் வெவ்வேற ஊர்களில் போய் கேம்ப் போட்டு நடத்தறார். இவுங்களுக்குத் தெரிஞ்சு 5 லட்சம் கேஸ் கவனத்துக்கு வந்திருக்காம்.


இப்பவும் அரசாங்கம் அறிவிச்சிருக்கற '10 ரூபாய் கட்டி நோய் இருக்கா இல்லையான்ற பரிசோதனை' ரொம்பவும்நல்லதுன்னு சொன்னார். அதான் தமிழ் டிவி சானல்லே கிளி சீட்டு எடுத்துக் கொடுக்குதே அது:-)


பின் குறிப்பு: இந்த விஷயங்கள் அடங்கிய சந்தோஷ்-நளினி தம்பதியரின் பேட்டியை 'திசைகள் -பிப்ரவரி' இதழுக்குத்தருவதாக நம் அருணாவிடம் கூறியிருந்தும், சிலபல காரணங்களால் குறிப்பிட்ட நேரத்தில் எதுவும் செய்யமுடியாமல் போய்விட்டது.அதற்காக நம் 'அலைகள்' அருணாவிடம் மன்னிக்க வேண்டுகின்றேன்.


பின் குறிப்பு 2: ப்லொக்கர் சொதப்புவதால் நிறைய படங்கள் இருந்தும் இங்கே போட முடியாத நிலை(-:

20 comments:

said...

இந்த மாதிரி நல்ல உள்ளங்கள பார்க்கும்போது ரொம்ப சந்தோஷம், கொஞ்சம் மன உறுத்தல்...

said...

சாரா,

வருகைக்கு நன்றி.

said...

தருமி,

இதுக்கெல்லாம் மன உறுத்தல் படமுடியாது. இப்படி எல்லாருக்கும் அமையாது இல்லையா?
ஆனா நாம ஒண்ணு செய்யலாம். நம்மாலே முடிஞ்ச உதவியைத் தோணும்போது
செய்யலாம்தானே? ஆனா ஒண்ணு, தோணுன உடனே செய்யணும். அப்புறம்னு தள்ளிப் போடறதாலேதான்
நம்மாலெ பல நல்ல காரியங்களிலே பங்கெடுக்கமுடியாமப் போயிருது. இது என் அனுபவம்.

இப்பவும் சில நண்பர்கள் தனிமடல்லே விவரம் கேட்டிருந்தாங்க. அவுங்களுக்கு
சந்தோஷ் & நளினியோட விலாசம் எல்லாம் அனுப்பி இருக்கேன்.
உங்களுக்கும் அனுப்பவா? சிறு துளி பெரு வெள்ளம். இல்லையா?

said...

விலாசம், தொலைபேசி எண் இருந்தா, எனக்கு அனுப்புங்க துளசி.

prajaramin at aim dot com

said...

பூன்ஸ்,
தனிமடல் பாருங்க.

said...

பூன்ஸ்,
மடல் பார்க்கவும்

said...

வாழ்க வளமுடன். நல்ல உள்ளங்கள் இருப்பதால்தான் இன்றும் பூமி சுற்றிக்கொண்டு இருக்கிறது.

said...

ராகவன்,

சொன்னாலும் சொன்னீங்க லட்சத்துலெ ஒரு வார்த்தை. அவுங்க செய்யற தொண்டை நினைச்சாலும்
பிரமிப்புதான் இன்னமும்.

said...

கைப்புள்ள has left a new comment on your post "நம்பிக்கைதான் வாழ்க்கையா?":

இன்னமும் சேவை செய்யற நல்ல உள்ளங்கள் உள்ளன என்பதையே தங்கள் பதிவு தெளிவாக்குகிறது. பதிவு நன்றாக இருந்தது.

said...

meena has left a new comment on your post "நம்பிக்கைதான் வாழ்க்கையா?":

'துளசி.. துளசிம்மா என்ன சொல்றதின்னே தெரியலை..எப்போதும் நல்லாருக்கணும் துளசி..

said...

ப்ளொக்கர் இப்ப கமெண்ட்டுலேயும் கை வச்சுருச்சு.
அதுக்காக அப்படியே விட்டுறமுடியுமோ?
அதான் இந்த வெட்டி ஒட்டும் வேலை.( மேலே இருக்கற ரெண்டும்)

said...

கைப்புள்ளெ & மீனா,

கஷ்டப்படுறவங்களுக்கு கடவுள் இப்படி மனிதர்கள் மூலம்தானே உதவி செய்வார்.
இப்படி உதவறவங்க யாரா இருந்தாலும் அவுங்க எல்லோரும் நல்லா இருக்கணும்.

said...

அன்புள்ள துளசி,

இன்னைக்கி காலைல வந்ததுமே உங்களுடைய பதிவுகளைத்தான் படித்தேன்.

படித்து முடித்துவிட்டு அப்பச்சிளம் குழந்தைகளின் புகைப்படங்களையும் பார்த்துவிட்டு மனம் கலங்கிப்போய் என்ன எழுதுவதென தெரியாமல் தவித்துப்போனேன்.

உங்களுடைய பதிவும், அதற்கு நீங்கள் வைத்த தலைப்பும் மிக அருமை..

எங்கேயோ இருந்துக்கிட்டு நீங்க இந்த மாதிரி விஷயங்கள தெரிஞ்சி வச்சிருக்கீங்க.. நாங்களும் இருக்கோமே.. வேலை, வேலைன்னு மாரடிச்சிக்கிட்டு..

சொல்றதுக்கே வெக்கமா இருக்கு..

பளாக்கர் பிரச்சினை இன்னும் சரியாகலை போலருக்கு. உங்களுடைய நம்பிக்கைதான் வாழ்க்கையா பதிவில பின்னூட்டம் போடறதுக்கு போன அஞ்சி நிமிஷமா க்ளிக் பண்ணிட்டு காத்துக்கிட்டிருக்கேன். இதோ, இதோன்னு இழுத்தடிக்குது..

said...

வாங்க டிபிஆர்,

உங்க பக்கம் இருந்து ஒரு நீண்ட மவுனம் இருந்தப்பவே தெரிஞ்சது நீங்க ஊர்லே இல்லேன்னு.

இதுக்கு ஏன் சங்கடப்படறீங்க? 'மரம் வச்சவன் தண்ணி ஊத்துவான்' பழமொழி தெரியுந்தானே?
என்ன ஒண்ணு தண்ணின்னு வெந்நியை ஊத்தாம இருக்கணும்.

முடிஞ்சவரை உதவணுமுன்னு நினைக்கறோம் பாருங்க அது.

said...

துளசி

ரொம்ப மன நிறைவா, சந்தோஷமா இருக்கு உங்களை பார்க்கும் போது.. எச்ஐவியால பாதிக்கப்பட்டவங்க படற துன்பத்த முழுமையா உணர்ந்து இருக்கீங்க... குடும்பத்தில ஒருவர் HIV கிருமியால பாதிக்கப் பட்டிருந்தாலும்.. அந்த குடும்பமே வேற விதத்தில பாதிக்கப்படுது.. கிருமியால பாதிக்கப்பட்டவங்க ஒரு பக்கம்.. சமூக தாக்கத்தினால பாதிக்கபட்டவங்க மற்றொரு பக்கம்...

தொண்டு நிறுவணங்கள் நிறைய செஞ்சுட்டு இருந்தாலும்.. இன்னும் பல புதிய திட்டங்கள்..எல்லா தரப்பு மக்களும் பங்கு பெற மாதிரியான திட்டங்கள் தீட்டனும்..

நன்றியுடன் வாழ்த்துக்கள்,, உங்க பணி தொடரட்டும்

மங்கை

said...

நன்றி மங்கை.

உங்க சேவையும் தொடரணுமுன்னு வாழ்த்துகின்றேன்.

வணக்கம்.

said...

தலைப்பை பாத்தது உள்குத்து எனக்கோனு நினைத்தேன்..


எனிவே
GOOD POST

said...

வாங்க மி மி
என்ன உள்குத்து? ஒண்ணும் புரியலையே(-:

எதாவது தப்பா எழுதிட்டேனா?

அட தேவுடா!!!!!!!!

said...

'பிள்ளைகளுக்கு ஒண்ணும் வாங்கிவரலையே'ன்னு எங்களுக்கு ஃபீலிங்கா இருந்துச்சு. இங்கே வர்ற ப்ளான் இல்லைதானே?நளினிகிட்டே ஒரு தொகையைக் கொடுத்து எதாவது வாங்கித்தரணுமுன்னு கேட்டுக்கிட்டேன். 'என்னென்னு நீங்களேசொல்லுங்கக்கா'ன்னாங்க. கொஞ்சம் யோசிச்சுட்டு, எல்லோரையும் ஒரு நாள் அவுட்டிங் கொண்டு போய் நல்ல ஹொட்டலிலே சாப்பிட வையுங்க'ன்னு சொன்னென். பசங்களுக்கு அப்பவே 'பிக்னிக்'போற சந்தோஷம் ஒட்டிக்கிச்சு.

Tears in my eyes .no words to express .

said...

வாங்க சசி கலா.

குழந்தைகள் முகம் பார்த்தால் கண்ணில் நீர் கட்டலைன்னாதான் வியப்பே!

பிஞ்சுகள் பாவம்ப்பா:(