Friday, March 31, 2006

அழகரும் முருகனும்

பயண விவரம் பகுதி 13


'கூடலழகர் கோயிலுக்குப் போயிட்டு வாங்களேன். இது 108 திவ்ய தேசத்திலே ஒண்ணு. இங்கே என்ன விசேஷமுன்னா நவகிரஹங்களுக்கு ஒரு சந்நிதி இருக்கு. வழக்கமா பெருமாள் கோயில்களிலே நவகிரஹம் இருக்காதில்லையா'னு நண்பர் சொன்னதும் இதோன்னு கிளம்பியாச்சு.

அதுக்குக் கொஞ்ச நேரம் முன்னாலேதான் இவுங்க வீட்டுக்கு ரெண்டு வீடுதள்ளி இருக்கற சின்மயானந்தா மிஷனோட தியான மண்டபம் போயிட்டு வந்தோம். நல்ல பெரிய ஹால். அங்கேஒரு விளக்கு மாத்திரம் இருந்ததாக நினைவு. ஆனா எங்க இவர் சொல்றார்,மேடையிலே சிவலிங்கம் ஒண்ணு வச்சிருந்தாங்கன்னு.( கண்ணை மூடி தியானம் செஞ்சதுலே மேடையை(யே)கவனிக்கலே!)


ஷங்கர் காலையிலேயே வந்துட்டார். தோழி மட்டும் கூட வந்தாங்க. கோயில் வாசலில் பயங்கரக்கூட்டம். உள்ளே அதுக்கு மேலே. அன்னிக்கு நல்ல முஹூர்த்தநாளாம். இன்னிக்குக் கோயிலிலே மட்டும் 25 கல்யாணம் நடக்குதாம். கோவில்உத்தியோகஸ்த்தர்களுக்கு, நம்ம தோழியையும் அவங்க வீட்டுக்காரரையும் நல்ல பழக்கமாம். அவர் பெரிய உத்தியோகத்தில்
இருந்தாருல்லெ. சீக்கிரம் போங்க. தாயார் சன்னதியை மூடிருவாங்கன்னு அவசரப்படுத்தினார். 'அம்மா, மதுரவல்லி'ன்னுநாங்க போய்ச்சேரவும், திரையை இழுத்து மூடவும் சரியா இருந்துச்சு. அங்கேயும் ஏகப்பட்டக் கூட்டம். இனி அலங்காரம்முடிஞ்சுதான் திரை விலகும். ஆனா என்ன ஆச்சரியம்!


தோழி, அங்கிருந்த பட்டரிடம்( மூடுன திரையை இன்னும் கையில் பிடிச்சுக்கிட்டு இருந்தவர்) நம்மை அறிமுகப்படுத்தினார்.அடுத்த க்ஷணம் திரை விலகியது. அடக்கடவுளே, இது என்ன? கோயிலில் அலங்காரத்துக்குத் திரையை மூடிட்டா,ஆனானப்பட்ட மகாராஜாவே வந்தாலும் திரையை விலக்கக்கூடாது. ஆனா இங்கெ மதுரவல்லி நமக்கு ஸ்பெஷலா தரிசனம் தர்றாள். அங்கே காத்துக்கிட்டு இருந்தவங்க முகத்திலே பரம சந்தோஷம்.


'உங்க ஊர்லே கோயிலுக்கு பூஜைக்கு வேணுமுன்னா நான் வரனே.ஏதாச்சும் சான்ஸ் இருக்கா?' கேட்டார் பட்டர்.


' இல்லயே. அங்கே நாங்க இருக்கற ஊருலே கோயிலே கிடையாது. கட்டணுமுன்னு ஒரு ஐடியா இருக்கு. அப்பப் பாக்கலாம்' சொன்னது நான்.


'என்ன அக்கிரமம் பாருங்க. அப்படியே கோயில் கட்டுனாலும் இவருக்கு இடம் இல்லை. நியதியை மதிக்காம இருக்கறார்'னுமனசுக்குள்ளே நினைச்சுக்கிட்டேன். கடவுளுக்கு முன்னாலே எல்லாரும் சமம் இல்லையோ?


அடுத்துப் போனது கூடலழகர் சன்னதி. பெருமாள் ஆஜானுபாகாக உட்காந்துருக்கும் திருக்கோலத்திலே இருக்கார். வலது கைவிரல்கள் மட்டும் நம்மை 'வா'ன்னு கூப்புடறமாதிரி முன்னாலே குமிஞ்சிருக்கு. இந்தக் கோயிலிலே நின்றார், இருந்தார்,கிடந்தார்னு மூணு விதமாவும் பெருமாள் காட்சி கொடுக்கறார்னு பட்டர் விளக்கிச் சொன்னார். மேலே கோபுரத்துலே போய்ப் பாருங்கன்னும் சொன்னார்.


கோயில்லே குடமுழுக்கு நடக்கப் போகுதுன்னு நிறைய வேலைங்க நடந்துக்கிட்டு இருந்துச்சு. கோபுரத்தை ஓலைகளாலே மறைச்சிருந்தாங்க. நாங்க மேலே படிக்கட்டுலே ஏறிப்போனோம். இதுவரை எந்தக் கோயில்லேயும் இந்த மாதிரி மேலே ஏறிப்போனதே இல்லை. சினிமாலே 'க்ரூப் டான்ஸ்' கோபுரம் பின்னணியா வச்சு ஆடுனதைப் பார்த்ததோடச் சரி.


மேலே வந்து பார்த்தா, அப்பாடா எவ்வளோ பெரிய இடம். பிரமாண்டமான மொட்டை மாடி போல இருக்கு.கோபுரம்அங்கிருந்து ஆரம்பிக்குது. ச்சின்னப் படிக்கட்டுகளிலெ ஏறினோம். கம்பி அழி போட்ட ச்சின்னக்கதவுக்குப் பின்னாடிஸ்ரீதேவி, பூதேவி சமேதராக நிற்கிறார். எத்தனையோ நூற்றாண்டுகள் ஆகியிருந்தும், வர்ணமெல்லாம் இன்னும் நல்லாவே இருக்கு.முகத்தில் 'பெருமாளுக்கே' உரிய அந்த வசீகரம். சினிமாலெ கிருஷ்ணனையோ, விஷ்ணுவையோ என் டி ஆர் ரூபத்துலேபார்த்துப் பார்த்துச் சாமியை நினைக்கறப்ப சினிமாலே பார்த்தமாதிரியே மனக்கண்ணுலே வர்றது நினைவு வந்துச்சு.


அதுக்கும் மேலே இன்னும் குறுகிய படியிலே ஏறிப் போனோம்.

ஆஹா.....அங்கே அனந்த சயனத்தில் இருக்கார்பள்ளி கொண்ட பெருமாள். அவரைச் சுத்திவரச் சுவத்துலே தசாவதாரங்களை வரைஞ்சு வச்சிருக்காங்க. காலடியிலே முனிவர்கள்.நாக்கை வெளியே நீட்டிக்கிட்டு இருக்கற அனந்தன். அழகோ அழகு. என்ன வர்ணங்கறீங்க? எவ்வளவு நாள் ஆகியிருக்கும்இதையெல்லாம் இப்படிப் பாத்துப்பார்த்து பெயிண்ட் செஞ்சதுக்கு? அடடாடா.... எப்படிங்க இதையெல்லாம் செஞ்சுருப்பாங்க?
ஒரு ஃப்ரேமுலெ அடங்குறதுல்லெ. ரெண்டுரெண்டா இப்படியும் அப்படியுமா கம்பிக்குள்ளே படம் எடுத்தோம்னு வையுங்க.


மனசில்லா மனசோட கீழே இறங்குனோம். 'ஜேஜே'ன்னு கல்யாணக் கூட்டம். மாலையும் கழுத்துமா சுற்றம் சூழ மாப்பிள்ளைகளும், பொண்களும். ஒரு கல்யாண ஜோடியைக் கிளிக்குனேன். அவுங்க பேரைக் கேட்டுக்கிட்டு,நல்லா இருங்கன்னு ஆசி வழங்கிட்டு போற போக்குலெயே பல ஜோடிகளையும் 'கிளிக்'கினேன். அதுலே ரொம்பக் கூட்டமில்லாம ஒரு ஜோடி இருந்தாங்க. பொண்ணு பேரு ஷர்மிளா. அவுங்களே சொன்னாங்க, 'நாங்க காதல் கல்யாணம்'னு.


'அடிச் சக்கை.சந்தோஷமா இருங்க. நாங்களும் 32 வருசத்துக்கு முன்னாலே காதல் கல்யாணம்தான். நீங்க நல்லா இருப்பீங்க. ஒரு குறைவும்வராது'ன்னு மனசாரச்சொல்லி வாழ்த்திட்டு வந்தோம். கோயில் பிரகாரங்களைச் சுத்தி வந்தப்ப அங்கே ஏகப்பட்டவாகனங்கள் அழகழகா இருந்துச்சுங்க. சேஷவாகனம் பலே ஜோர். இதை வெள்ளை யானைகள் தாங்கிக்கிட்டு இருக்குங்க.எங்க இவருக்கு பாம்புன்னா பயமாச்சா, அதனாலே இன்னும் கொஞ்சம் கலாய்ச்சிட்டு வந்தேன். படம் எடுத்தப்ப ரெண்டு பாகமாஎடுக்கவேண்டி இருந்துச்சுங்க. பாம்பு நல்லா வந்துச்சு. யானைதான் கொஞ்சம் அவுட் ஆஃப் ஃபோகஸ் ஆயிருச்சு.


நவகிரக சன்னதியிலே கும்பிட்டுக்கிட்டு வராந்தாலெ இறங்குனா 'மதுரவல்லி' நிக்கறாள். கோயில் பிரசாதம் விக்கற கடையிலே வாழைப்பழம் வாங்கிக் கொடுத்தோம். இப்ப மருந்து கொடுத்துருக்கு. கொஞ்ச நேரம் கழிச்சுக் கொடுக்கறேன்னுபாகர் வாங்கி வச்சுக்கிட்டார். மதுரவல்லி ஓரக்கண்ணாலே அவரை முறைச்சது.


108 திவ்ய தேசத்துலெ எத்தனை பார்த்துருக்கேன்னு எண்ணிப் பார்த்தா ஒரு பத்துதான் தேறுது. மீதியை எப்பப் பார்க்கப்போறேன்னு தெரியலையே!


'வேல்முருகனை' பார்க்கணுமுன்னு இருந்தேன். அப்ப சங்கர் சொன்னார், 'தங்கமயில் நல்லதுங்க. அங்கே ஹால்மார்க் கிடைக்குது'னு.ஆமாம், சில இடங்களிலே பார்த்தேனே, 'தங்கம் வாங்க, தங்கமயிலுக்கு வாங்க'ன்னு. தோழியும் அங்கே இதுவரை போனதில்லைன்னு சொன்னாங்க. சரின்னு தங்கமயிலுக்கே போனோம். பழைய கால டிஸைனுலே எதாவது வாங்கணுமுன்னுஇருந்தேன். ஆனா எல்லாம் நவநாகரீக டிஸைன்கள், தேசலா இருக்குங்க. கொஞ்ச நேரம் தேடுனபிறகு, பழங்கால'கெஜ்ஜலு மாலை'ன்னு ஒண்ணு கண்ணுலே பட்டுச்சு. சரின்னு அதை வாங்கிக்கிட்டு வீட்டுக்குப்போய்ச் சேர்ந்தோம்.எங்கெயாவது ஊர்களுக்குப் போனா நினைவுப்பொருள்னு ஒண்ணு வாங்கிறணுமுல்லே அதுக்குத்தான்.........இதையே அக்ஷ்யதிருதியைக்கு வச்சுக்கிட்டா ஆவாதுங்களா? நிபுணர்களைக் கேக்கணும்:-)


அன்னிக்கு இரவுக்காக ஏற்கெனவே ராயல் கோர்ட்டுலே இடம் போட்டு வச்சுருந்ததாலே அங்கே இடத்தை மாத்திக்கிட்டோம்.தோழிக்கு வருத்தம்தான். ஆனா மருந்தும் விருந்தும் மூணு வேளையில்லையா?சாயங்காலமாக் கிளம்பி திருப்பரங்குன்றம் போயாச்சு. மறுநாள் தைப்பூசம். அதனாலேயோ என்னமோ மூலவருக்குமுன்னாலே இருக்கற மயிலுக்கு எண்ணெய்க்காப்பு போட்டாங்க. பக்கத்துலே உக்கார்ந்து பார்த்தோம். ஒரு குழுவினர்அங்கே உக்காந்து பஜனைப் பாடல்கள் பாடிக்கிட்டு இருந்தாங்க. இன்னொரு பக்கம் அங்கே வேதபாடசாலைன்னு ச்சின்னப் பிள்ளைங்கவேதம் படிச்சுக்கிட்டு(!) இருந்தாங்க. கையிலே நிஜமாவே நோட்டுப் புத்தகம்.


அங்கிருந்து கிளம்பி வண்டியூர் தெப்பக்குளம். தண்ணி எக்கச் சக்கம். படகு சவாரி நடந்துக்கிட்டு இருந்துச்சு. பெடல்போட்டுக்கூட இருந்துச்சு. படகுக்காக ஒரு குடும்பம்(?) வரிசையா உக்கார்ந்து இருந்தாங்க. எதுருலே மாரியம்மன் கோவிலுக்குப் போகணுமா,வேணாமான்னு கொஞ்சம் யோசிச்சுட்டு, தெப்பக்குளத்தையே பார்க்கலாமுன்னு அங்கேயே கொஞ்சம் உக்காந்தாச்சு.தண்ணிக்கு நடுவிலே மண்டபம் ஒய்யாரமா இருந்துச்சுங்க.


அங்கிருந்து கிளம்பி ச்சும்மா மருதையை ஒரு சுத்து சுத்துனப்ப ஒரு சர்ச், ரெட்டைக் கோபுரத்தோட ஸ்பானிஷ்ஸ்டைலா இருந்துச்சுங்க.சுத்துனப்பக் கண்ணிலே பட்டுச்சு ஒரு வாட்டர் டேங்க். அதுமேலே அனுமான் உக்காந்துருக்கார்.அப்புறம் உத்துப் பார்த்தப்பத்தான் தெரிஞ்சது அது வாட்டர் டேங்க் இல்லே, உண்மைக்குமே அனுமார் கோயில்.அந்த ஆஞ்சநேயர் வாலைச் சுருட்டிச்சுருட்டி, ராவணன் சபையில் ஆசனமாக்கி உசரத்துலே உக்காந்தாரே அப்படிஇங்கே உக்காந்துருக்கார்னு. நல்ல யுக்திதான்.


நாளைக்கு இன்னும் சில இடங்களைப் பாக்கலாமுன்னு முடிவு செஞ்சுட்டு ரூமுக்கு திரும்ப வந்தோம். அந்த ஹோட்டலிலேஒரு 'ரூஃப் கார்டன் மொஹல் ரெஸ்டாரண்ட்' இருக்கு. சாப்பாடும் சரி, சைட்டும் சரி அட்டகாசம். இளந்தென்றல் வீசறப்ப,மொட்டை மாடியிலே இருந்து, லைட்டுக்களாலே ஜொலிக்கிற கோபுரங்களையும், ஊரையும் பார்த்துக்கிட்டேச் சுடச்சுடருமால் ரோட்டியும் இன்னபிற வஸ்துக்களையும் சாப்புடற ஆனந்தம் இருக்கே.......... அற்புதம். விலையும் ரொம்ப இல்லைங்க. ரீஸனபிள்தான்.


-----ப்ளொக்கர் சொதப்புவதால் படங்கள் இருந்தும் போடமுடியவில்லை(-:

27 comments:

said...

//என்ன அக்கிரமம் பாருங்க. அப்படியே கோயில் கட்டுனாலும் இவருக்கு இடம் இல்லை. நியதியை மதிக்காம இருக்கறார்'னுமனசுக்குள்ளே நினைச்சுக்கிட்டேன்.//
இதென்ன பிரமாதம்... இந்த தடவை திருத்தணி போனீங்களா? போகாம விட்டுட்டீங்களே.. அம்பது ரூவா காமிச்சா, டிரைவ் இன் மாதிரி முருகனை கார்கிட்டக்கேயே கொண்டு வந்து காமிச்சுட்டு போயிடுவாங்க.


மூணு அடுக்கா கூடலழகர் கோயில் நிஜமாவே அழகுதான். அதுவும் அவ்ளோ பிஸியான இடத்தில். உள்ளே என்னவோ அமைதிதான்.

//கொஞ்ச நேரம் தேடுனபிறகு, பழங்கால'கெஜ்ஜலு மாலை'ன்னு ஒண்ணு கண்ணுலே பட்டுச்சு. //
அதென்ன கெஜ்ஜலு மாலை? அக்ஷ்யதிருதிக்குத்தானே.. மாமா என்ன சொல்றது நான் சொல்றேன். தாராளமா வச்சுக்கலாம். :))

said...

ராம்ஸ்,

நிஜமாவா? அடடா திருத்தணிக்குப் போகலையே(-:
கெஜ்ஜலுன்னு தெலுங்குலே சலங்கைன்னு அர்த்தம். ஆனா இந்த மாலையில்
தங்கமுத்துக்கள் ஒரு தங்கக்கயித்துலே வரிசையா ஒட்டிவச்சிருக்கு. நடுவிலே கொஞ்சம் பெருசு.அப்புறம்
ரெண்டுபக்கமும் போகப்போக சிறுசாயியிடுது. முந்திக்காலத்துலே எல்லா முத்தும் ஒரே அளவா இருக்குமாம்.
இப்ப இதுவும் கொஞ்சம் மாடர்ன் ஆயிருக்கு.

அது போட்டும். அக்ஷ்யதிருதியைக்குப் புதுசா இருக்க வேணாமா? ஒருக்கா போட்டுட்டேனே. பழசாயிருச்சே:-)

கூடலழகர் நிஜமாவே அட்டகாசமா இருக்கார்.

said...

நாங்களும் 32 வருசத்துக்கு முன்னாலே காதல் கல்யாணம்தான். //

என்ன துளசி ஒரேயொரு வரியில முடிச்சிட்டீங்க? சின்னதா ஒரு ஃப்ளாஷ் பேக் குடுங்களேன்..

said...

ஏங்க டிபிஆர் ஜோ,
இது உங்களுக்கே நல்லா இருக்கா? இப்ப மதுரையை அம்போன்னு விட்டுட்டு
போகவேண்டியதுதான்:-))
ச்சின்னதா முடியுமா 32 வருசக்கதை?

இன்னொரு நாளு சொல்றேன். ஹேப்பி எண்டிங் தான்.

said...

ஓகோ...திருத்தணில அம்பது ரூவாயா....திருச்செந்தூர்ல நூறு ரூவா....அப்பப்பா....அக்கிரம்...கோயில்கள் எப்படி மாறனும்னு ஒரு பதிவு போட இருக்கேன். எப்படியும் ஒரு மாசம் ஆகும். மொதல்ல இந்த வியர்வைக் கசகசப்பில இருந்து வெளிய வர்ரேன்.

கூடலழகர் கோயிலுக்கு நான் போனதில்லை...கள்ளழகர் கோயிலுக்குத்தான் போயிருக்கேன்.

said...

// அது போட்டும். அக்ஷ்யதிருதியைக்குப் புதுசா இருக்க வேணாமா? ஒருக்கா போட்டுட்டேனே. பழசாயிருச்சே:-) //

அதெப்படி டீச்சர்....புது டிரஸ்ஸ போட்டுப் பாத்துதான் வாங்குறோம். அதுனால பழசாயிருதா? இல்லையே...அப்படித்தான் நகையும். பொங்கலுக்கு எடுத்து வெச்சுட்டீங்கன்னா...நடுவுல போட்டுப் பாத்தாலும் அது பொங்கலுக்குப் புதுசுதான். அதே மாதிரி இந்த நகையை அஷய திருதியைக்குப் போட்டுக்கலாம்.

said...

-----ப்ளொக்கர் சொதப்புவதால் படங்கள் இருந்தும் போடமுடியவில்லை//

ஆமாங்க துளசி. தாங்க முடியலை.. ப்ளாகருக்கு நாம எல்லாருமா சேர்ந்து ஒரு பெரிய சர்வர் வாங்கி குடுத்துரலாமா?

said...

ராகவன்,

அடுத்த முறை கட்டாயம் போங்க. மேலேயும் ஏறிப் பாக்கணும். அங்கேதான் இருக்கு அழகு!

கோயில் பத்திப் பதிவா? கண்டிப்பாப் போடுங்க.

said...

ஆமாங்க டிபிஆர் ஜோ.
இது நல்ல ஐடியாவா இருக்கே! அருமையான படங்கள் கைவசம் இருக்குல்லெ.

said...

கூடல் அழகரை காட்டாமல் காட்டிவிட்டீர்கள். நன்றி.

//ஒரு சுத்து சுத்துனப்ப ஒரு சர்ச், ரெட்டைக் கோபுரத்தோட ஸ்பானிஷ்ஸ்டைலா இருந்துச்சுங்க//

கீழவாலுக்கருகில் உள்ள C.S.I. சர்சாகவோ, செயின்ட் மேரீஸ் சர்சாகவோ இருக்க வேண்டும்.


//சுத்துனப்பக் ... வாட்டர் டேங்க் ... அனுமான் உக்காந்துருக்கார்....வாட்டர் டேங்க் இல்லே ... அந்த ஆஞ்சநேயர் வாலைச் சுருட்டிச்சுருட்டி//

மதுரையில் சௌராஷ்ட்ரா ஆண்கள் பள்ளிக்கு எதிரில் உள்ள அனுமார் கோவிலை பார்த்துள்ளீர்கள்.

//ராவணன் சபையில் ஆசனமாக்கி உசரத்துலே உக்காந்தாரே அப்படிஇங்கே உக்காந்துருக்கார்னு. //

அது மகிராவணனிடமிருந்து ராம லக்ஷுமனரையும், வானர சேனையையும் காக்க, தன் வாலால் ஒரு கோட்டயை கட்டினார் ஹனுமார். அதிலும் நுழைந்து தன் கைவரிசை காட்டியது மகிராவணனின் மாயாசக்தி. அதை சந்தித்து வெற்றி பெற்றது அனுமனின் பக்தி.

said...

/சாப்பாடும் சரி, சைட்டும் சரி அட்டகாசம்.//

டீச்சர், எங்களை மாதிரி சின்ன பசங்களை வச்சுகிட்டு பேசற பேச்சா இது?

ராம்ஸும் ஜிராவும் திருத்தணி பத்தியும் செந்தூர் பத்தியும் பேசிட்டாங்க. என் பங்குக்கு பழனி. அங்கயும் அதே கதைதான்.

என்ன எல்லாரும் முருகனையே தாக்கறோம். என் கஸின் ஒருத்தர் சொல்லுவாரு, அவர் திருப்பதி போனாருனா அரசியல்வாதி ஸ்டைலில கதர் சட்டைதான் போடுவாராம். அதுவும் அந்த மெலிதான சட்டைப் பையில் நூறு ரூபாய் நோட்டுகள் வைத்துக் கொண்டால் அப்படியே வெளியில் தெரியுமாம். அப்புறம் என்ன அவருக்கு மட்டும் ஜருகண்டி மெதுவாத்தான் வரும். ஹூம். என்னவோ போங்க.

said...

துளசி அம்மா,

நம்ம ஊர் வாசனை வருதேன்னு எட்டிபாத்தா, இங்க இருந்து எந்த செலவும் இல்லாம விர்சுவல் டூர் அடிக்கவச்சிட்டீங்க.

// இனி அலங்காரம்முடிஞ்சுதான் திரை விலகும்.

இதுதான் சரி. சாமி அலங்காரம் நடக்குறப்ப பார்க்ககூடாதுன்னு எங்க அம்மா சொல்லுவாங்க. நாங்க போறப்ப அம்மா பட்டர் கிட்ட கை காட்டி திரைய எடுக்கவேணாம்ன்னு முதல்லயே சொல்லுவாங்க.

// கோயில்லே குடமுழுக்கு நடக்கப் போகுதுன்னு

எங்க அம்மா கூட சொன்னங்க.

// முகத்தில் 'பெருமாளுக்கே' உரிய அந்த வசீகரம்

சாமி கண்ணுகுள்ளயே இருக்கு. காண கண் கோடி வேண்டும் அப்படின்னு பெரியவங்க இதுக்காகத்தான் சொல்லிருங்காங்க

//அக்ஷ்யதிருதியைக்கு வச்சுக்கிட்டா ஆவாதுங்களா

ஆவதுன்னு எங்க அம்மா சொல்லுவாங்க. அன்னைக்குத்தான் புதுசா வாங்கணுமாம்

//இளந்தென்றல் வீசறப்ப,மொட்டை மாடியிலே இருந்து, லைட்டுக்களாலே ஜொலிக்கிற கோபுரங்களையும், ஊரையும் பார்த்துக்கிட்டேச் சுடச்சுடருமால் ரோட்டியும் இன்னபிற வஸ்துக்களையும் சாப்புடற ஆனந்தம் இருக்கே.......... அற்புதம். விலையும் ரொம்ப இல்லைங்க. ரீஸனபிள்தான்

இப்படி கொசுவத்திய சுத்துனா எங்க எப்படி வேலை பாக்குறது :-(. எற்கனவே பலவிதமான nostalgia ல அல்லாடுறேன்.

எடுத்த சாமி போட்டோக்ளை சீக்கிரம் upload பண்ணுங்க pls

said...

ராகவன்,

நீங்க இப்படி கோபால் பக்கம் சாஞ்சுருவீங்கன்னு கொஞ்சமும் எதிர்பார்க்கலை நான்.
'நறநற'....... பல்லைக் கடிக்கறேன்:-)

said...

வாங்க சிவமுருகன்.

உங்க பேரே ரொம்ப நல்லா இருக்கு. வீட்டுக்கு மொதமுறையா வந்துருக்கீங்க போல.

அனுமார் விளக்கம் ரொம்ப நல்லாச் சொல்லியிருக்கீங்க.

இன்னொரு மருதைக்காரரையும் இங்கெ பார்த்தது ரொம்ப சந்தோஷம்.

நல்லா இருங்க.

said...

கொத்ஸ்,

இது நல்ல ஐடியாவா இருக்கே. ஆனா சுடிதார்லே பாக்கெட் வச்சுத் தைக்க முடியாதேப்பா(-:

பேசாம, தோமல சேவா, அர்ச்சனை, சுப்ரபாதமுன்னு போனமுன்னா நிம்மதியா சாமியைப் பார்க்கலாம். என்ன,
அர்த்தராத்திரியிலே கோயிலுக்குப் போவோம். அது பரவாயில்லைதானே.

நானும் ரெண்டு சேவைகளைப் பார்த்துருக்கேன். நல்லா இருந்துச்சு.

said...

கார்த்திக்,

உங்க அம்மா பேச்சைத்தான் கேக்கப்போறேன் இந்த் அக்ஷ்யதிருதியை விஷயமா. ராகவன் பேச்சு 'கா'
இன்னிக்கு பார்க்கலாம் படங்கள் லோட் ஆவுதான்னு.

said...

ஏங்க அப்பாவித்தமிழரே,

அப்படி இப்படின்னு நம்மளையே சொல்லிட்டீங்க பார்த்தீங்களா?

காத்துக்கிடந்து சாமியைப் பாக்கறதே தனி அனுபவம்தாங்க.
இப்படி திடீர்னு திரையைத் திறந்துருவாருன்னு நான் நினைச்சிருப்பேனா?

என்னவோ போங்க.

ஆனா நம்மாலே அங்கே இருந்த கூட்டத்துக்கு தரிசனம் கிடைச்சது பாருங்க. அது

said...

அழகரை அழகாக எங்களுக்கு தரிசனம் தந்த எங்கள் அருமை துளசிக்கு ஆயிரம் கோடி நமஸ்காரம் :)

உண்மையாவே நேரில் போய் கும்பிட்ட உணர்வு!!நன்றி துளசி

said...

கூடல் அழகர் கோவிலைப் பற்றிச் சொல்லச் சொல்லி நாமக்கல் சிபி நச்சரிச்சுக்கிட்டு இருந்தார். இந்தப் பதிவைப் படித்தாரா தெரியவில்லை. உள்ளூர்காரர்கள் சொல்வதை விட உங்களைப் போல் வெளியூரிலிருந்து வந்து பார்த்து சொன்னால் அது தனி அம்சமாகவே இருக்கிறது. ரொம்ப நல்லா இருந்தது அக்கா இந்தப் பதிவு.

பெரியாழ்வார் திருப்பல்லாண்டு பாடிய பெருமாள் இந்த கூடல் அழகர் தான். என்னுடைய விஷ்ணு சித்தன் வலைப்பூவில் பெரியாழ்வார் கதையை மெகா சீரியல் அளவிற்கு தொடராய் எழுதியிருக்கிறேன். சீக்கிரம் திருப்பல்லாண்டு பாடல்களுக்குப் பொருள் சொல்லத் தொடங்க வேண்டும்.

உங்களுக்குக் கிடைத்த தகவலின் படி நவகோள்களின் சன்னிதி இருக்கும் ஓரிரு பெருமாள் கோவில்களில் இதுவும் உண்டு.

இந்தக் கோவிலின் விமானத்திற்கு அஷ்டாங்க விமானம் என்று பெயர். எட்டு அடுக்குகளாய் இருக்கும் விமானம். இதில் தான் நீங்கள் கீழே அமர்ந்த திருக்கோலத்துடனும், நடுவில் நின்ற திருக்கோலத்துடனும், மேலே சாய்ந்த திருக்கோலத்துடனும் பெருமாளைத் தரிசனம் செய்திருக்கிறீர்கள். இப்போது திருப்பணி நடக்கிறதா? ரொம்ப நல்லது. நான் பிறப்பதற்கு முன்னால் திருப்பணி நடந்ததாய் சொல்வார்கள். எங்கள் உறவினர் குடும்பத்தினர் வாசல் கோபுர திருப்பணி செய்ததாய் அங்கிருக்கும் கல்வெட்டில் படித்திருக்கிறேன்.

நண்பர் சிவமுருகன் சொன்ன மாதிரி நீங்கள் அனுமார் வாலை சுற்றி கோபுரம் அமைத்து அதில் அமர்ந்திருக்கும் படியாய்ப் பார்த்தது சௌராஷ்ட்ர ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் எதிரில் இருக்கும் இராமர் திருக்கோயில் கோபுரம். நான் படித்த பள்ளி அது. தினமும் மதியம் இராமனின் தரிசனம் எனக்கு இந்தத் திருக்கோயிலில் கிடைத்தது. இராம நவமி பண்டிகையை இந்தத் திருக்கோயிலில் உபயதாரர்களாய் எங்கள் தாய்மாமன் வீட்டிலிருந்து (பாட்டி வீடு) நடத்துவார்கள். அமெரிக்கா வந்த பிறகு அந்த கொண்டாட்டங்கள் எல்லாம் நினைவில் மட்டுமே.

said...

குமரன்,

ஊர் ஞாபகம் வந்துருச்சா? அனுபவிச்சுப் பின்னூட்டம் போட்டுருக்கீங்க.

நன்றி குமரன்.

எட்டு அடுக்கு கோபுரத்திலே இன்னும் மேலே போக முடியலை(-:
அங்கெல்லாம் இன்னும் என்ன சிற்பங்கள் இருக்குன்னு தெரியுமா குமரன்?

said...

எட்டு அடுக்குகள் இருந்தாலும் கோபுரத்தில் இரண்டு பெருமாள்களும் கீழே ஒரு பெருமாளும் தான் உண்டு.

அது சரி. எட்டு அடுக்கு என்றவுடன் எது நினைவிற்கு வருகிறது? எனக்கு இந்தப் பின்னூட்டம் இடும் போது எட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்த என் தலைவன் பாட்டு நினைவிற்கு வந்தது. அதில் சொல்லப்படும் எட்டடுக்கு மாளிகையைக் குறிப்பது தான் இந்த கோபுரமும் (விமானமும்). :-)

said...

குமரன்,
அடடே, எனக்கும் இந்தப் பாடல்தான் நினைவுக்கு வந்தது:-)))

said...

சரி. அந்த எட்டு அடுக்கு மாளிகை அந்தப் பாடலில் எதைக் குறிக்கிறது என்று சொல்லவில்லையே?

said...

குமரன்,
அப்ப அந்தப் பாட்டுதான் ஞாபகம் வந்துச்சே தவிர, ( எட்டு, விட்டுன்னு ரைம்) வேற ஒண்ணும் தோணலை.
இப்ப நீங்க கேட்டபிறகுதான் நம் உடம்பில் எட்டு நிலை இருக்குன்னு சொல்றாங்களே இந்த 'யோகா' சொல்லித்
தரப்ப அதுவோன்னு சந்தேகம் வருது.

எதுன்னு விளக்கம் சொல்லுங்களேன். கொஞ்சம் எல்லாருமே தெரிஞ்சுக்கலாம்.

யப்பா, நான் ஆன்மீகம் அறியாதவப்பா.

said...

பாட்டெழுதுன கவிஞரே (கண்ணதாசன் என்று எண்ணுகிறேன்) எட்டடுக்கு மாளிகைன்னா என்னன்னு சொல்லியிருக்கார். தலை மேல வச்சுக்கிட்டு என்னைக் கொண்டாடின என் தலைவன் இன்று என்னை விட்டுவிட்டுப் போனானடி என்பதைத் தான் கவிஞர் அப்படி எழுதியிருக்கார். எண் சான் உடம்புன்னு சொல்லுவாங்களே. அது தான் எட்டு அடுக்கு மாளிகை. அதன் மேலே (தலை மேலே) ஏற்றி வைத்து (என்னைக் கொண்டாடிய) என் தலைவன்... இப்ப பொருள் சரியா வருதா?

அஷ்டாங்க விமானமும் உடலைக் குறிப்பதே. அம்புட்டுதான் ஆன்மிகம்.

said...

அடடா, கலக்கியிருக்கீங்க டீச்சர்....
உங்க நடையில் படிக்க சூப்பர்... :-)

said...

வாங்க மதுரையம்பதி.

இன்னும் கொஞ்சம் படங்களை ஒரு ஆல்பத்தில் போட்டு பிக்காஸாவில் ஏத்தி இருக்கேன்.

நேரம் கிடைக்கும்போது பாருங்கள்.

http://picasaweb.google.com/tulsi.gopal/Koodalazhagar#