Monday, March 27, 2006

எதுக்கெடுத்தாலும் விளம்பரமுன்னா எப்படிங்க?





பயண விவரம் பகுதி 10


அம்மாவோட பொறந்தநாள் வருதுன்னு எங்கே பார்த்தாலும் பேனருங்க. ஒவ்வொண்ணும் ஜெய்ஜாண்ட்டிக்காஇருக்கு. அம்மாவோட படம் பெரூசாப் போட்டு, யார்யார் (இந்த பேனர் வைக்க செலவு செஞ்சவுங்க?) அம்மாவை வாழ்த்தியோ/வணங்கியோ இருக்காங்கன்னு அவுங்க பெயர்களும், சில பேனர்களிலே இவுங்களோட படமும்(ச்சின்ன சைஸு!)போட்டு இருந்துச்சுங்கதான். ச்சென்னையிலே ஒரு பேனருலே '.............நாச்சியாரே'ன்னு கூடப் பார்த்தேன்.


தமிழ்நாடு பூராவும் இப்படியே இருக்கறப்ப மதுரை மட்டும் என்னாங்க, மட்டமா? அதுவும் தமிழ்நாட்டோட ஒரு பகுதிதானே? உசிலம்பட்டிலே போஸ்ட்டர் பார்த்துக்கிட்டே போறப்ப, திடீர்னு ஒரு பேனருலே என்னமோ வித்தியாசமாக்கண்ணுலே பட்டுச்சு. ஆங்......அம்மா படம் இல்லை. ஆனா மாலையும் கழுத்துமா ஒரு ஜோடி! வண்டியை நிறுத்தச் சொல்லிப்பார்த்தா நிஜமான கல்யாண ஜோடிங்கதான் அவுங்க. யாரோ, அரசியல்வாதி வீட்டுக் கல்யாணமுன்னு நினைச்சுக்கிட்டேன்.நம்ம தெய்வராஜ் இருக்கார் பாருங்க, அவரோட ஊரும் இதே உசிலம்பட்டின்றது ஞாபகம் வந்துச்சு.


நமக்காகஎதாவது மலர் வளையம்...ச்சீச்சீ மலர் அலங்கார வளைவு ஏற்பாடு செஞ்சிருக்காரான்னு கவனிச்சேன். ஊஹூம்...அப்படி ஒன்னுமே இல்லை(-:


ஆண்டிப்பட்டி வந்துச்சு. நல்ல அகலமான ரோடுங்க, தெரு விளக்குன்னு ஏரியாவே அட்டகாசம். என்ன இருந்தாலும் அம்மாவோட தொகுதி இல்லீங்களா? ஆனா இந்தக் கல்யாண பேனர்கள் மட்டும் விதவிதமாக் கண்ணுலே பட்டுக்கிட்டே இருந்துச்சுங்க.நம்ம ஷங்கரும்,'மதுரையிலேகூட நிறைய இப்படிச் செய்யறாங்க. நீங்க கவனிக்கலே போல'ன்னு சொல்லி நம்ம கவனிப்புத் திறனுக்கு ஒரு 'பஞ்ச்'வச்சார். ஏங்க நீங்களே சொல்லுங்க. கல்யாணம்ங்கறது நம்மோட சொந்த விஷயம் இல்லையா, அதை என்னத்துக்கு இப்படி ஊர்ச்சாலைகளிலே எல்லாம் விளம்பரப்படுத்தணும்ன்றது புரியாம இருந்தது. 'ஜனங்களுக்கு ரொம்பத்தான் ஆயிக்கிடக்கு'ன்னு சொல்லிக்கிட்டே வந்தேன்.


தேனி வந்தோம். பாரதிராஜா நினைவும் ஆட்டோமேட்டிக்கா வந்துச்சு. இதுதான் கொஞ்சம் பெரிய ஊர். மணியோ ரெண்டடிக்கப் போகுது.பேசாம இங்கேயே சாப்புட்டுப் போயிரலாமுன்னு ஒரு இடத்துலே சாப்ட்டோம். இருக்கறதுலேயே பெரிய ஹோட்டலாம். வீட்டுச் சாப்பாடுமாதிரி இருந்துச்சு. ஒரு கீரைக் கூட்டும், பீன்ஸ் பொரியலும். அவ்ளோதான். வேற ஒண்ணும் இல்லையாம் சைவத்துலே! நான் வீட்டுச்சாப்பாடுன்னு சொன்னது எங்க வீட்டுச் சாப்பாடு:-) நானும் தினப்படிக்கு வகைவகையாச் செய்ய மாட்டேன். ஒரு குழம்பு, ஒரு காய் மட்டும்தான்.வகைவகையாச் செஞ்சாலும் திங்கஆள் வேணாமா? இது வீட்டுக்குச் சரி. ஆனா ஒரு ஹோட்டலுக்கு? ஆனா இந்தக் குறையைச் சரிசெஞ்சுட்டாங்க, வெளியே முகப்புலே ஒரு யானை( சிலை)யை வச்சு.


தேனியிலே இருந்து போடி வந்து சேர்ந்தோம். வந்த காரணம்? குடும்பத்துலே ஒரு கல்யாணம். உசிலம்பட்டி தாண்டுனவுடனேஎங்கே பார்த்தாலும் கொஞ்சம் பசுமை கூடுதலாத்தான் இருந்துச்சு. அதிலும் போடி போற வழியெல்லாம் இன்னும் நல்லாவே இருந்துச்சு.மாமியார் வூடு இருக்கற இடமாச்சே, விட்டுக் குடுத்தற முடியுங்களா?:-)


எங்க இவர் ஏறத்தாழ 32 வருசத்துப்பிறகு பொறந்த ஊருக்கு வரார். அவர் என்னதான் கஷ்டப்பட்டு முகத்தைப் 'பாவமா வச்சுக்கமுயன்றாலும் கண்ணுலே ஒரு உற்சாகம் கொப்புளிக்கறதைத் தடுக்க முடியலை. நானும் எங்க கல்யாணத்துக்குப் பிறகு மொதமொத ஊருக்கு வரேன். தூரத்துச் சொந்தங்களையெல்லாம் பாக்கணும்.


ரெண்டுபக்கமும் வயல்கள், கரும்புன்னு இருந்த ரோடு 'சட்'னு திரும்புது. ஊருக்குள்ளே வந்துட்டோம். புழுதியோடு இருக்கும் தெரு பெருசாதான் இருக்கு. போடி ஜமீந்தாரின் அரண்மனைச் சுற்றுச்சுவர் கொஞ்சம்கூடப் பொலிவில்லாமல் இருக்கு. வெள்ளை கண்டு எத்தனை மாமாங்கம் ஆச்சோ?


இன்னும் ஊருக்குள்ளே போகப்போக குறுகலான தெருக்கள். நகரத்துக்கும் கிராமத்துக்கும் இடைபட இருக்கற ஊர்.வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம். கல்யாண வீடுகளுக்கே உரிய கூட்டம். நட்பும் சுற்றமுமா பரபரன்னு கல்யாண வேலைகளில் மும்முரமா இருந்தாங்க.


கல்யாண மண்டபம், இங்கே பக்கத்துலேதான் இருக்குன்னு,(ஒரு மூணு நிமிஷ நடை) அங்கே போனா....அடக்கடவுளே! நம்ம வீட்டுக் கல்யாண பேனர்! இதுலே பொண்ணுக்கும் பையனுக்கும் நெருங்கிய சொந்தங்கள்பேரெல்லாம் போட்டு வச்சிருக்காங்க. அதுலெ நம்ம பேரும் இருக்கு. போச்சுரா!


ஆமாம், கல்யாணச் செலவுகள் போதாதுன்னு இதுவேறயா? மேற்கொண்டு சேகரிச்ச விஷயம்,' ஊரோடு ஒத்துப்போகவேண்டியிருக்கு. செலவு பொண்ணு வீட்டுக்காரங்கதான்.( நாங்க பையன் வீட்டுக்காரங்க!) ஒவ்வொரு கல்யாணத்துலேஇந்த மாதிரி வெவ்வேற இடத்துலே நாலஞ்சு வைக்கறதும் உண்டு. நம்ம வீட்லே இது ஒண்ணு மட்டும்தான்'.


கிட்டெப்போய்ப் பார்த்தப்ப, நல்ல ப்ளாஸ்டிக் ஷீட்லே ப்ரிண்ட் செஞ்சு, போட்டோவெல்லாம் அழகா, மென்மையாஇருக்கறது தெரிஞ்சது. பையனுக்கு நிறம் கூடி இருந்ததே! ச்சும்மா ஒரு பத்தடிக்கு இருபது அடி சைஸு, பானரைச்சொல்றேன்!


ஆமாம், முந்தியெல்லாம் புது சினிமாப் படங்கள் விளம்பரத்துக்கு அங்கங்கே பெருசா வைக்கற விளம்பரத்துக்கு மூங்கில் ஏணி, சாரம் மாதிரி கட்டி ஆட்கள் வரையறதையெல்லாம் பார்த்திருக்கேன். சுவத்துலே ஒட்டுற பெரிய போஸ்டருங்களைக்கூட நாலா எட்டாப் பிரிச்சு ப்ரிண்ட் செஞ்சு கவனமாப் பார்த்து ஒட்டுறதையும் பார்த்திருக்கேன்.கொஞ்சம் ஒரே ஒரு மில்லிமீட்டர் ஏறத்தாழ இருந்தாலும் வாயும் கண்ணும் இன்னும் என்னெல்லாமோ கோணலா ஆயிரும். இப்ப அதெல்லாம் குறைஞ்சு போச்சு போல. பிரிண்ட்டிங் டெக்னாலஜி ரொம்பவே வளர்ந்துருச்சு. ப்ளாஸ்டிக் பேனர்மழையிலே நனைஞ்சாலும் ஒண்ணும் ஆகாம அப்படியே பளிச்'னு இருக்கு.

எல்லாஞ் சரிதான். ஆனா அந்த பேனரைக்கையால் எழுதும் தொழில் இப்ப போயிருச்சே! அப்படி எழுதிக்கிட்டு இருந்த ஆர்ட்டிஸ்ட்டுங்க இப்ப என்ன செய்யறாங்க?ச்சின்ன ஸ்டில்லை வச்சுக்கிட்டு பிரமாண்டமா எப்படி எழுதுவாங்க தெரியுமா? அதுலே இருக்கற நடிக,நடிகையர்யார்யாருன்னு 'டக்'னு கண்டுபிடிச்சுறலாம். கெட்டிக்காரங்கப்பா! இதெல்லாம் வந்து நாளாயிருக்கும் போல. மெல்ல வந்த இந்த மாறுதலைப் புரிஞ்சுக்காம இருந்துருக்கேனே.


வர்றவழியெல்லாம் இன்னொண்ணையும் கவனிச்சேன். வேல்முருகன் ஜுவல்லரி! ரோடுக்கு ரெண்டு பக்கமும் பச்சைப்பசேர்னுவயலும் பயிருமா இருக்கேக்க, மோட்டார் ஷெட் அங்கங்கெ நிக்கத்தானெ வேணும். அதோட சுவத்துலே எல்லாம்ப்ரவுண் நிறம் அடிச்சு, 'பளிச்'னு மஞ்சக்கலருலே விளம்பரம் 'நகைக்கடை'க்கு. மதுரையிலே இருக்கற கடைக்கு பட்டிதொட்டியெல்லாம் விளம்பரமப்பா. பொண்ணுங்க கண்ணுலே இருந்து தப்பவே முடியாது. அவுங்க நோக்கமும்அதுதானே! காசு கிடைச்சவுடனே வீட்டு ஆளுங்களைப் பிச்சுப் புடுங்கிறணுமில்லெ.


ரெண்டு நாள் கல்யாண ஆர்ப்பாட்டங்களிலே கலந்துக்கிட்டு நேரம் ஓடிப்போச்சு. இங்கெ முக்கியமா நான் கவனிச்சதுஎன்னன்னா, டைனிங் ஹால் சுவத்துலே கல்யாண சாப்பாடு 'மெனு' ஒட்டி வச்சிருந்தது. இது நல்ல ஐடியாவா இருக்கே. இங்கே ஒண்ணும் சரிப்படலைன்னா, இதோ நாலு கட்டிடம் தள்ளி இருக்கே இன்னொரு கல்யாண மண்டபம் அங்கே போயிரலாம்.இல்லே?


உறவினரில் ஒருத்தர், இங்கே நியூஸியிலே ஒரு ஸ்போர்ட்ஸ் க்ளப்க்கு ஸ்பெஷலா டி ஷர்ட், ஸ்வெட் ஷர்ட்னுதயாரிச்சு அனுப்பறார். இருக்கட்டும். அதுக்கென்ன? ......என்னவா?


விருந்து சமைச்சுப் பரிமாறும் க்ரூவுக்கு ஸ்வெட் ஷர்ட் சப்ளை செஞ்சிருக்கார். அவுங்களும் 'குவீன்ஸ் டவுன், நியூஸி'ன்னுபோட்டுக்கிட்டு இட்டிலி அவிக்கறதும், இலைகளிலே கொண்டுவந்து போடறதுமா இருந்தாங்க. இங்கே 18 வருசமாஇருக்கேனே, பாசம் இருக்காதா? ஓடிப்போய் படம் புடிச்சுக்கிட்டேன்.


விடியக்காலையிலே தாலிக் கட்டு. ஒம்பது மணிக்கெல்லாம் காலை உணவு முடிஞ்சு ஹாலே முக்காவாசி காலி. வேலை நாளாச்சே. எல்லோரும் ஜோலிக்குப் பொயிட்டாப்பலெ. பகல் விருந்துக்கு நெருங்குன சொந்தம் மட்டும்தானாம்.250 பேர்னு மெனு லிஸ்ட்டுலெ எழுதிப்போட்டுருந்தாங்க. பகல் பன்னெண்டரை வரைக்கும் அரட்டைக் கச்சேரியா?


சொந்தக்காரங்க எல்லாம் எங்க வீட்டுக்கு வாங்க, எங்க வீட்டுக்கு வாங்கன்னு விடாமக் கூப்புடறாங்க. அதுலே ஒருத்தர் 200 வருஷப் பழைய வீட்டுலே இருக்காங்களாம். போய் பார்க்கணுமுன்னு மனசு அடிச்சுக்கிச்சு. அவுங்க கொஞ்சம்(!)தூரத்துச் சொந்தமாம். மத்தவங்க வீட்டுக்குப் போகாம இங்கே மட்டும் போயிட்டு வந்தா நல்லா இருக்காதுல்லெ?அதுக்குன்னு 150 வீடுகளுக்குப் போக முடியுமா? இந்தக் கஷ்டத்துலெ இருந்தும் எனக்குக் கை கொடுத்தது யானைதான்!

25 comments:

said...

டி ராஜ்,

ஊர்ப்பாசம்ன்றது சும்மாவா? பாருங்க மொத ஆளா வந்து பதில் சொல்லிட்டுப் போறீங்க:-))

போஸ்ட்டர் கலாச்சாரம் கேரளத்துக்கு புதுசா? இன்னுமா அவுங்க நம்மகிட்டே இருந்து கத்துக்கலை? அவுங்களுக்கும்
கத்துக் கொடுத்துட்டுத்தான் மறுவேலை. இதை அப்படியே ச்சும்மா வுட்டுறக்கூடாது இல்லே?:-)

said...

உங்களைவிட வயது குறைந்த ஒருவரை அம்மா என்று அழைக்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

அதுசரி நீங்க மட்டுமா சொல்றீங்க... ஊரே சொல்லுது!!!

said...

சா'நக்கி'யரே,

இந்த வயசுக் கணக்கை எப்படிப் போட்டிங்க?

அது இருக்கட்டும். ஊர் என்ன உலகமே 'அம்மா'ன்னுத்தான் சொல்லுது. இல்லீங்களா?

said...

அக்கா,
சூறாவளி சுற்றுப்பயணத்துல ஒரே ஒரு போஸ்டர். அதுவும், தக்கணூண்டுக்கு பேர் போட்டிருக்காங்க. பெரீய்ப்பா அப்புறம் மிச்ச ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் டீச்சருக்கு சரியான வரவேற்பு கொடுக்கலையா?

யானைக்குட்டியப் பாத்தா உங்களுக்கு ஆச்சு. மாமா என்ன செஞ்சார்?

மெனு எழுதிப்போடறது நல்ல ஐடியாவா இருக்கே. நேரம் ஆக ஆக லட்டுவ உதிர்த்து பூந்தின்னு சொல்லாமலாவது இருப்பாங்க. :))

said...

ராம்ஸ்,

இது நல்லா இருக்கே! நேரமாக ஆக லட்டு பூந்தியாப் போறது:-)

பெரியப்பா & கோ வெல்லாம் அங்கெ மருதையிலே இல்லெ இருந்தாங்க.

//யானைக்குட்டியப் பாத்தா உங்களுக்கு ஆச்சு. மாமா என்ன செஞ்சார்?//

அவர்தான் வாழ்க்கை முழுசும் 'யானைக்குட்டி' பார்த்துக்கிட்டு இருக்காரே:-)

பழைய நண்பர்களை எல்லாம் பேர் மறந்துட்டு 'திருதிரு'ன்னு முழிச்சுக்கிட்டு இருந்தார்:-)

said...

எல்லாஞ் சரிதான். ஆனா அந்த பேனரைக்கையால் எழுதும் தொழில் இப்ப போயிருச்சே!//

ஆமாங்க துளசி.. நா சின்ன வயசுல மெட்றாஸ்லருக்கற பேனர்ஸ் எழுதறது மணிக்கணக்கா நின்னு பார்ப்பேன். அப்பல்லாம் ஜெமினி ஸ்டுடியோ முன்னாலதான் சிட்டியிலயே பெரிய பேனர்ஸ் இருக்கும்.. சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினின்னு..

பேசிக் ஸ்கெட்ச போட்டுட்டு கண்ணு, மூக்குன்னு பெயிண்ட் பூசும்போது அப்படியே நம் கண்ணு முன்னாலயே நடிகர்ங்க உயிர் பெறும்போது ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும்..

ஆனா இப்போ..

என்ன பண்றது? எல்லாமே மாறும்போது இது மட்டும் மாறாம இருந்தா என்னாவறது?

அப்புறம் ஒரு ந்யூஸ். எங்கப்பா ஊரும் தேனிதான். ஆனா அங்க போயி ரொம்ப நாளாவுது. நான் மதுரையில மேனேஜரா இருக்கும்போது போயிருக்கேன். அப்பாவோட தம்பிங்க இன்னமும் அங்கதான்.. உசிலம்பட்டியில என்னோட கசின் டீச்சரா இருக்காங்க.. உங்க பதிவ படிச்சதும் என்னமோ நானே அங்க போய் வந்தா மாதிரி ஒரு சந்தோஷம்.. அதாங்க உங்க எழுத்தோட விசேஷம்..

said...

ஏங்க டிபிஆர் ஜோ,

இன்னும் நல்லாச் சுத்திப் பாக்க நேரமில்லாமப் போச்சு. பேசாம அங்கே தேனிப் பக்கம் ஒரு வலைஞர் மாநாடு
நடத்திறலாம் அடுத்தமுறை. நகரத்தை விட்டு கொஞ்சம் ஓய்வாவும் இருக்கலாமே.

said...

நீங்கள் போஸ்டரில் வாழ்த்தும் மணமக்களுக்கு இனிய இல்லறம் அமைய என்னுடைய வாழ்த்துக்களும் சொல்லிடுங்க. தொழில்நுட்ப வளர்ச்சிகள் கைதொழிலாளரை பாதிப்பது பேனர் வரைதலில் மட்டும் தானா? பெரிய அளவில் நெசவாளர்கள் பாதிக்கப் பட்டிருக்கிறார்களே.

said...

வாங்க மணியன்,

கட்டாயம் உங்க வாழ்த்துகளைச் சொல்லிடறேன். நன்றி.
புது மணத்தம்பதிகள் இங்கிலாந்து போயாச்சு. ரெண்டு பேரும் கணினிதான். இன்னும் ப்ளொக் ஆரம்பிக்கலை:-)

நெசவாளிகள் பிழைப்பும் இப்படி அநியாயத்துக்குக் கஷ்டமாயிருச்சுங்களே. வேற எதாவது நல்ல வழி பிறக்காதா
அவுங்களுக்கு? என்னதான் பட்டு நெசவு இருக்குன்னாலும், எத்தனை பேருக்கு அந்த வேலை அமையுது?

said...

ஆகா! மதுரையத்தாண்டி தேனிப்பக்கம் போயிட்டு வந்திருக்கீங்க....நல்ல இடங்கள். நானும் போய்ப் பாக்கனும். கூடப் பொறக்காத ஒரு அண்ணன் அங்க இருக்காரு. ஒரு ரெண்டு நாளு அவரு வீட்டுல டேரா போடனும். ஆனா எப்போன்னுதான் தெரியலை...

போஸ்டர் பழக்கம் இப்ப எல்லா இடத்துலயும் இருக்கு. கலர்கலரா போஸ்டர்...அதுலயாவது தன்னுடைய பெயர் தெரியனுங்குற ஆவல்.....தமிழ்நாட்டுல நெறைய இருக்கு. கடந்த மூனு நாளா தமிழ்நாட்டில் சுத்தினேன். பாத்த பல விஷயங்கள் வருத்தமா இருந்தது....பதிவுகள்ள சொல்லனும்.

said...

ராகவன்,

//அதுலயாவது தன்னுடைய பெயர் தெரியனுங்குற ஆவல்.....//

இந்தக் கணக்குலே பார்த்தா நம்ம பேர் வந்துருச்சுங்க :-))))

சீக்கிரம் உங்க அனுபவங்களைப் பதிவாப் போடுங்க. வெவ்வேற கண்ணொட்டத்துலே படிக்கறதும் ஒரு அனுபவமாச்சுங்களே

said...

போஸ்டர் அடிப்பது போல நகரங்களில் சில புது வழக்கங்கலை பார்க்கிறேன். நான் சென்னையில் கலந்துகொண்ட சில திருமணங்களில், DDLJ போல மஹந்தி, கீத், மாப்பிள்ளை அழைப்பில் அனைவரும் கூத்து என்று ஒரு வடநாட்டு தாக்கம். வரவேற்பிற்கு வட இந்திய புடவை வேறு. இருவீட்டாரும் தமிழ்குடும்பத்தினரே :)) விட்டால் தாலிக்குப் பதிலாக அக்னிவலம் வந்து திருமணத்தை முடித்துவிடுவார்களோ :(

said...

மணியன்,

இந்த மெஹந்தி, வடநாட்டுப்பாணி( சரியாச் சொன்னா குஜராத்தி ஸ்டைல்)யிலே வரவேற்புக்குப் புடவை எல்லாம் ஒரு
13, 14 வருசத்துக்கு முந்தியே வந்துருச்சுங்க. அண்ணன் மக கல்யாணம் '94 லே நடந்தப்பவே இதெல்லாம் இருந்துச்சு.

ஆனா இப்படிப் புடவை கட்டுறதுலே ஒரு ஆறுதல் என்னன்னா, நம்ம புடவைகளில் இருக்கற முந்தானை டிஸைன் எல்லாம்
பளிச்சுன்னு தெரியும். ஒவ்வொண்ணுலேயும் என்னா வேலைப்பாடுங்கறீங்க. அதை நம்ம ஸ்டைலில் கட்டுனா பின்னாலே கொத்தா
நின்னுடுது பாருங்க.

ஆனா இந்த பாட்டு, டான்ஸ் எல்லாம்கூட வந்துருச்சுங்களா? நான் பார்க்கலையேங்க (-:
அதான் சினிமாவோட தாக்கம். எத்தனை தமிழ் சினிமாவுலே இப்படி புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கறது
வந்திருச்சு.

தாலிக்குப் பதிலா அக்னின்னா நல்லது, பொண்ணு வீட்டுக்கு ஒரு அஞ்சாறுபவுன் தாலிக்கொடி வாங்குற செலவு குறையுமே.
இல்லெ அதையும் 'மங்கள் சூத்ரம்' செய்ய வாங்கிருவாங்களோ?

said...

துளசி
இப்பதான் படிச்சேன். போன வாரம் ஏதாவது எழுதி இருந்தா இனிமேத்தான் படிக்கனும். லேட்டா வந்ததுக்கு சாரி:( நான் கிளாஸ் கட்டடிக்கிற வழக்கம் கிடையாது.
பேனர் அனாவசிய செலவு. கேட்டா அதுக்கும் காரணம் சொல்ல ரெடி

said...

பத்மா,

லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா பரவாயில்லை.

என்னென்ன தண்ட செலவுன்னு பட்டியல் போட்டா மயக்கமே வந்துரும், அவ்வளோ இருக்கு!

said...

துளசி இந்த இணையத்தொடர்பு கிடைக்காமே நாலைந்து நாளா படுத்திவிட்டது அப்பாடி இப்போத்தான் ஒண்ணொண்ணா படிச்சிட்டு வரேன்

இந்த நாலு நாளா அடிக்கடி'இன்னைக்கு துளசி என்ன எழுதியிருப்பாங்க'ங்ற நெனப்பை நெறுத்த முடியலை!!!

said...

வாங்க மீனா,

எனக்கு இப்படி ஒரு வாசகி!!!!!!!

இனிமே தைரியமா எழுதலாம். அதான் படிக்க நீங்க இருக்கீங்கல்லே? :-)))))

said...

துளசியக்கா,

இதெல்லாம் சரி, உங்க பேர் பளிச்சுன்னு தெரியறமாதிரி போட்டோ எடுக்க வேணாமா? இப்படியா அவுட் ஆப் போகஸ்ல ஒரு மூலைல இருக்கறாமாதிரி எடுக்கறது??

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்!

ம்ம்ம்.. இதென்ன பிரமாதம். நீங்க பெங்களூர் வந்தபோது உங்களுக்கு இதைவிட பெரீரீரீரீரீரீய வினைல் பேனரு ஒசூர் ரோட்டுல வச்சிருந்தோம்! நீங்கதான் அதைப்பார்க்காம ஏர்போர்ட்டோட போய்ட்டீங்க! ஹிஹி...

said...

இளவஞ்சி,

என்னங்க நீங்க, ஒரு வார்த்தை சொல்லியிருக்கக்கூடாது? 'கஷ்டத்தோட கஷ்டமா 'நீங்க வச்ச வைனல் பேனரைப்
பார்த்துட்டு வந்துருப்பெனில்லெ?

அடுத்த முறை ஏர்ப்போர்ட்டுலேயெ வச்சிருங்க, ஆமாம்.

said...

அண்ணன் அஜீத் நல்லாசியுடன் கோவாலுக்கும் குப்பாயிக்கும் கண்ணாலம்னு எந்த போஸ்டரையும் நீங்க பாக்கலையா?

மதுரையில போஸ்டருக்கா பஞ்சம்...இதெல்லாம் நம்ப ஆளுங்களுக்கு ஒரு சந்தோஷங்க.....

said...

பாரதி,

உங்களுக்கு ஸ்பெஷலா ரிவிஷனுக்கு லீவுன்னு வச்சுக்குங்க. நிதானமா வந்தாப் போதும்.
ஆனா அப்புறம் பின்னூட்டம் மட்டும் குறைஞ்சுறக்கூடாது, ஆமாம்:-)

said...

என்னங்க முத்து நீங்க,

'கோவாலுக்குன்னதும் திக்'னு ஆயிருச்சுல்லே:-)

அதான் ஊர்ப் பக்கம் வந்து 16 வருசமாச்சு. போஸ்ட்டர் வந்ததை இப்பத்தானேப் பாக்கறேன்.
நீங்க சொன்னாப்புலே விஜயகாந்த் படம் போட்டு மணமக்களை வாழ்த்தி ஒரு போஸ்ட்டரைப் பார்த்துட்டுப்
படம் புடிச்சாந்துருக்கேன்.

பேசாம படப்பதிவு ஒண்ணு போட்டுறணும்போல:-)

said...

//கோவாலுக்குன்னதும் திக்'னு ஆயிருச்சுல்லே:-)//

இப்பவும (இவ்வளவுக்கு அப்புறமும்) அந்த ஆசை இருக்குமா அவருக்கு(?).....

சொல்லாதீங்க் சந்தோஷத்துல துள்ள ஆரம்பிச்சுடுவார்:)))))

said...

முத்து,

கொஞ்சம் ச்சும்மா இருக்கமட்டீங்களா? மனுஷன் காதுலே வுழுந்துரப்போகுது:-)))

said...

யோகன்,

நீங்க வேற, இதெல்லாம் வந்தாலும் வந்துரும்போல.