Tuesday, March 28, 2006

சாம்பாரா இல்லே சட்டினியா?





பயண விவரம் பகுதி 11


"பதினொன்னரைக்கு ஒரு போட் இருக்கு. இப்பவேக் கிளம்புனா சரியா இருக்கும். என்னா, ஒரு ஒண்ணரை மணி நேரம்தான் ஆகும். சீக்கிரம் கிளம்புங்க."


" இப்பப் போனா அப்புறம் மத்தியானச் சாப்பாடு? விருந்து தயாராகுதுலெ?"


" சாப்புட்டுப் போட்டு போங்க. நாலரைக்குக்கூட ஒரு போட் இருக்கு"


ஆளாளுக்கு நம்ம பயணத் திட்டத்தை வகுக்குறாங்க. பகல் உணவுக்கு 250 பேராமே. அதுலெ மூணு கட்! மெனுவேற அவ்வளவாச் சரியில்லே :-) பேசாம கிளம்பிப் போயிட்டு வந்துரலாமுன்னு புறப்பட்டாச்சு. எங்கே? தேக்கடிக்கு!

போடிலே இருந்து கிளம்பினா சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம்,குமிழி, தேக்கடி.

வழியெல்லாம் நல்ல பசுமைதான். அதிலும் அந்த 'உத்தம பாளையம்' பேருக்கேத்த மாதிரியே உத்தமமா இருக்கு.ச்சின்ன வாய்க்கால்/ ஆறு பாலம். ரெண்டு பக்கமும் தென்னந்தோப்புன்னு.அடாடாடா....


குமிழியிலேயே கடைகளிலே இருக்கற போர்டுகளிலே 'மலையாளம்' ஆரம்பிச்சுருது. எங்கே பார்த்தாலும் டூரிஸ்ட்நடமாட்டம். வெள்ளைத்தோல்கள் அதிகமாத் தெம்படுது. அங்கங்கே ஆயுர்வேத மசாஜ்'க்கு ஏற்ற இடமுன்னுகட்டி விட்டிருக்காங்க. அங்கேயே தங்கி மசாஜ் செஞ்சுக்கிட்டு இயற்கையோடு சேர்ந்து இருந்துட்டு வரலாமாம்.ஊர் எல்லை முடியுற இடத்துலே செக் போஸ்ட். கேரள மாநில பார்டர்! உள்ளே போக அனுமதி வாங்கிரணும்.


காருக்கு 50 ரூபான்னு நினைவு, இல்லே 100 ரூபாயா? உள்ளே மலைப்பாதை. ச்சின்னதுதான். வழியெல்லாம்அடர்த்தியான மரங்கள். தேக்கு நிறைய இருந்துச்சு. புலி, யானை, குரங்கு, காட்டெருமைன்னு ரோடுக்கு ரெண்டுபக்கமும் நிக்குதுங்க, கட் அவுட்டா!


சரியா 11.25க்கு போயிட்டோம். போட் நிக்குது. 'ஆனா டிக்கெட் கொடுக்க முடியாது. கணினி 11.20க்கே டிக்கெட் பதிஞ்சு கொடுக்கறதை நிறுத்திரும். ஒரு அஞ்சு நிமிஷம் முன்னாலே வந்துருக்கலாமே'ன்னு மலையாளத்துலே பரஞ்ஞு அவிடே. ஆனா நின்னுக்கிட்டு இருந்த போட்11.40க்குத்தான் கிளம்பி நம்ம வயித்தெரிச்சலைக் கொஞ்சமாக் கொட்டிக்கிட்டுப் போச்சு.


போனாப்போட்டுமுன்னு அப்படியே ஒரு சுத்து நடக்கலாமுன்னு போனா..... அட! நமக்கு வேண்டப்பட்டவங்க!


மரத்துக்கு மரம் தாவறதும், ஒண்ணோட ஒண்ணு சண்டை போடறதும், ஒண்ணை ஒண்ணு துரத்தறதுமா அடாடாடா.. அங்கே ஒரு குடும்பம்( மனுஷக் குடும்பங்க) உக்கார்ந்துக்கிட்டு இருக்காங்க. தலைவர் உரிச்ச வேர்கடலையைக் கையிலே அள்ளி நீட்டறார். நம்மாளு ஒண்ணு, அருமையாப் பக்கத்துலேயே உக்கார்ந்துக்கிட்டு ச்சின்னக்கையாலெ கொஞ்சமா வாரி எடுத்து, ரெண்டு கைக்கு நடுவிலே வச்சுப் 'பரபர' ன்னு தேய்ச்சு, தோலையெல்லாம் 'ஃப்பூ' ஊதிட்டுதிங்கற அழகை இன்னைக்கெல்லாம் பார்த்துக்கிட்டே நிக்கலாம். தலைவரோட தலைவியும் புள்ளைங்களும் பயந்துக்கிட்டுத்தள்ளி நின்னு வேடிக்கை பாக்கறாங்க. அவர் 'ஒரு போட்டோ எடு'ன்னு சொல்றார். அந்தம்மா பயந்துக்கிட்டு தூரக்க நின்னுஎடுக்க முயற்சிக்கறாங்க. நடக்கற காரியமா? நாம எதுக்கு இருக்கோம்? உடனே அந்தம்மாகிட்டே இருந்து கேமெராவை வாங்கி, அந்தம்மாவையும் அவருக்கு அந்தப் பக்கத்துலே ஃப்ரேம்லெ வர்ற மாதிரி நிக்கவச்சு படம் எடுத்துக் கொடுத்துட்டோமுல்லெ.ஆனா அவர் அதை டெவலப் பண்ணும்போது தான் தெரியும் நாம எடுத்த லட்சணம்!


இந்த வேர்க்கடலை எங்கெ விக்குதுன்னு கேட்டதுக்கு, வீட்டுலே இருந்தே கொண்டு வந்தாராம். நீங்களும் போடுங்கன்னு சொன்னார்தான். ஆனா பரவாயில்லெ, நீங்கதான் போடுங்கன்னு சொல்லிட்டேன். அடுத்த போட் ரெண்டு மணிக்குதான்.அதுக்குள்ளே சாப்பாட்டை முடிச்சுக்கலாமுன்னு திரும்ப குமிழிக்கே வந்தோம். நாலு கிலோ மீட்டர்தான்.

வழியெங்கும் மிருகங்கள் நின்றிருந்தன:-)))


சாப்பாட்டுக்கு வந்தோமுன்னு செக்போஸ்ட்டுலே சொல்லிட்டுப் போனோம்.
சாப்பாடு சுமாரா இருந்தது. கேரளா செஃப்தான். ஆனா நல்ல இடம். ரெஸ்ட் ரூம் பரவாயில்லாமல்( மோசமா இல்லாமல்)இருந்துச்சு. இந்த மாதிரி பயணங்களில் 'ரெஸ்ட் ரூம்'தான் கொஞ்சம் பிரச்சனையாப் போகுது. இந்த செளகரியம்இருந்துச்சுன்னா, சாப்பாடு கொஞ்சம் சுமாரா இருந்தாலும் பரவாயில்லேன்றதுதான் நம்ம சாய்ஸ். இங்கே வாசலிலேஒரு மரத்தோட வேர்ப்பகுதியை அப்படியே வெட்டி வச்சிருந்தாங்க. புள்ளையார் மாதிரியே இருக்கு. வெளியே ஒரு கடையிலேரெண்டு பாக்கெட் நிலக்கடலை வாங்கிக்கிட்டோம்.


திரும்ப வந்து, குரங்குக்குக் 'கடலை போடலாமுன்னு' அதே இடத்துக்குப் போனா, யாருமே இல்லை! மாயமா மறைஞ்சுட்டாங்க.ரொம்ப உச்சாணிக் கிளையிலே சிலர் ஆடிக்கிட்டு இருந்தாங்க. 'வாங்கடா, வாங்கடா'ன்னு கூப்புட்டா, ஒருத்தன் சட்டை செய்யணுமே!ஊஹூம்..... கடலையை அங்கங்கே ச்சின்னக் குவியலா வச்சுட்டு வந்தோம்.அதிர்ஷ்டம்(-:


டிக்கெட் எடுத்துக்கிட்டு ரெண்டு மணி 'போட்'டுலே ஏறி உக்காந்தாச்சு. மேலெ இருக்கற தளம். கொஞ்சம்காசு கூடுதல். அதனாலென்ன? தினமுமா வரப்போறோம்? மேலே யாருமே இல்லை. முன்னாலே வரிசையிலே நாங்க. ஒருஅஞ்சு நிமிசம் இருக்கறப்ப ரெண்டு பஸ் வந்து நின்னுச்சுங்க. திமுதிமுன்னு கூட்டம் வந்து போட், 'ஹவுஸ் ஃபுல்'!


நமக்குப் பக்கத்துலே ஒரு எட்டுப் பேர் கொண்ட குஜராத்தி குடும்பம், தாத்தா முதல் பேரன்வரை. கையிலே பைனாகுலர்.அங்கெயே வாடகைக்குக் கிடைக்குதுதான். ஆனா யானையைப் பார்க்க இது அவசியமான்னு இருந்துட்டோம்.


படகு கிளம்பிருச்சு. 'நெஞ்சினிலே நெஞ்சினிலே'ன்னு ஷாரூக் & ப்ரெய்ட்டி ஸின்டா பாடி ஆடுன இடம் இதோ! பட்டுப்போனமரங்கள் மொட்டையா தண்ணிக்கு நடுவுலே அங்கங்கெ நிக்குது. சிலதுலே 'ஷாக்(shag)' பறவைக்கூடு இருந்துச்சு.


ஏரிக்கு நடுவிலே ஒரு மேடான இடத்துலே டூரிஸ்ட் பங்களா இருக்கு. அங்கே சில நாட்கள் தங்க வெள்ளைக்காரர்கள் நிறைய வராங்களாம். ரெண்டு நாள் அங்கே தங்கி, இயற்கை அழகை அனுபவிச்சால் எவ்வளோ நல்லா இருக்கும்? ஹும்...


'சாம்பார், சாம்பார், உதர் தேக்கோ சாம்பார்'னு பக்கத்துலே இருந்து கூவல். பாத்தா மான் கூட்டம். இந்த மானோடகொம்புகள் மகா உறுதியானதுன்னு கத்தி, துப்பாக்கி இதுக்கெல்லாம் கைப்பிடிக்குப் பயன் படுது. இண்டியன் சாம்பார்!


அங்கங்கே இந்த சாம்பார்கள் இருக்கறதும், பக்கத்து சீட் குஜ்ஜுபாய் கூவுறதுமாப் போச்சு. அப்ப நான் கேட்டேன்,'சாம்பார் த்தோ வஹாங் ,ச்சட்னி கஹாங்?' மொத்த குடும்பமும் 'கொல்'ன்னு சிரிக்கறாங்க. சாம்பாரைப் பாக்க பைனாகுலர்வேணுமான்னு கேக்கறார்.


ஒரு இடத்துலே காட்டெருமைகள் மேய்ஞ்சுக்கிட்டு இருந்துச்சு. அப்ப ரொம்ப தூரத்துலே ஏரியின் அக்கரை ஓரமாசில யானைகள் போகுது. அதுலே ஒரு குழந்தையும் இருக்கு. எல்லாம் சில நொடிதான். அடடா யானையைச் சரியாப்பார்க்கலையேன்னு மனசுக்குள்ளெ ஒரு வருத்தம்.


படகு அதுபாட்டுக்கு ஏரியைச் சுத்தி வந்துக்கிட்டு இருக்கு. வெறும் சாம்பாரையேப் பார்த்துக்கிட்டு இருந்து ஒரு அலுப்புத் தட்டும் சமயம், கரைக்கு மேலே கொஞ்ச தூரத்துலே சாம்பல் கலருலே நாலு மேடுங்க மெதுவா அசையுது.யானைங்க. படகை மெதுவா நிப்பாட்டிட்டாங்க. நாங்க வச்ச கண்ணை எடுக்காமப் பார்த்துக்கிட்டு இருக்கோம்.


திடீர்னு அங்கிருந்து ஒரு யானை( ரொம்ப ச்சின்னது. ஏழெட்டு வயசு தான்இருக்கும்) ஓடிவந்து கரைக்குப் பக்கத்துலே நின்னு தும்பிக்கையை உயர்த்தி ஒரு பிளிறல்...ஹாய் ஹலோ!!!! எங்களுக்கு பயங்கர சந்தோஷம்.அப்புறம் அவரே ஒரு ஸைடா திரும்பி நின்னுக்கிட்டு ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்கறார். க்ளிக் க்ளிக் க்ளிக்.....ஒரு அஞ்சு நிமிஷம் அப்படியே நிக்கறார். நான் அதுக்கு 'டெலிபதி'யிலே செய்தி அனுப்பிக்கிட்டு இருக்கேன்.


அவருக்கே போதுமுன்னு தோணிருச்சு. திரும்பி நேரா நின்னு எங்களைப் பார்த்து தும்பிக்கையைத் தூக்கி சத்தம்கித்தம் போடாம 'டாடா' சொல்றார். 'சரிடா ச்செல்லம் பை பை' ன்னு நான் கத்திச் சொன்னேன். எனக்கென்னமோ என்னைப்பார்க்கவே வந்தார்னு ஒரு தோணல். அப்ப எங்க இவரும், 'அதுக்கும் தெரிஞ்சிருக்கு யானைக்காரி வந்துருக்கேன்னு.அதான் அப்படி ஓடிவந்து போஸ் கொடுத்துட்டுப் போச்சு'ன்னார். மகா திருப்தி.


கரைக்குத் திரும்ப வர்றோம், அடுத்த போட் சவாரிக்கு எக்கச்சக்கக் கூட்டம் நிக்குது. சாயங்காலம் மிருகங்கள் எல்லாம்(!)தண்ணி குடிக்க வருமாம், அதுனாலே நாலரைமணி ட்ரிப் எப்பவும் இப்படித்தானாம். இருக்கட்டும் இருக்கட்டும். நம்ம யானைநம்மளை வந்து கண்டுக்கிட்டுப் போனாரே, இதைவிட வேற என்ன வேணும்?


போனவழியாவே திரும்ப போடிக்கு வந்து சேர்ந்தோம். கல்யாணம் முடிஞ்சாலும், இன்னும் கங்கை பூஜை, அது இதுன்னுசில சாஸ்த்திர சம்பிரதாயங்கள் இருக்காமே!


மறுநாள், ஊரைச் சுத்திப் பாக்கக் கிளம்பியாச்சு. எங்க இவருக்கு ஒரே 'ஆட்டோகிராஃப்'! படிச்ச ஸ்கூலை எனக்குக் காமிக்கணுமாம். போனோம், பாத்தோம். அதுக்கப்புறம் அங்கே 'பரமசிவன்'ன்னு ஒரு மலைக்கோயில் இருக்குன்னுபோனோம். அங்கே ஊருக்கு நல்ல தண்ணி சப்ளை செய்யறதுக்கு ஒரு 'வாட்டர் ட்ரீட்மெண்ட் ஸ்டேஷன்' இருக்கு.மலைமேலே இருந்து ராட்சஸ குழாய்களில் தண்ணி வந்து கீழே பிரமாண்டமான தொட்டிகளில் நிரம்புது.அதைச் சுத்திகரிச்சு ஊருக்குள்ளே போற குழாய்களிலெ அனுப்பறாங்க. பிரிட்டிஷ் காலத்துலே கட்டுனதாம். இதுதான் முதல் ஸ்டேஷனாம். அப்புறம்தான் மத்த ஊர்களிலே வந்துச்சாம். உள்ளெ போய்ப் பார்த்தோம்.


பரமசிவன் மலையிலே இருக்கற கோவிலுக்கு ரெண்டு நாளிலே கும்பாபிஷேகம் நடக்கப்போகுது. வெளியே மலைஅடிவாரத்துலே தரையைச் சமன் செய்ய ஏற்பாடு நடந்துக்கிட்டு இருந்துச்சு. அப்ப நம்ம நிர்மலா( ஒலிக்கும் கணங்கள்)கல்கத்தாவிலெ இருந்து கூப்புட்டுப் பேசுனாங்க. சந்தோஷமா இருந்துச்சு.


அங்கிருந்து கிளம்பி புள்ளையார் அணைன்னு ஒரு ச்சின்ன அணைக்கட்டுக்கு வந்தோம். பேருக்கேத்தாப்புலே அங்கே ஒரு புள்ளையார் கோயில் இருந்துச்சு. அதுக்கு எதுத்த கரையிலே தென்னந்தோப்புங்க ஏராளம். ஆனா அணையிலே தண்ணி இல்லெ. நூலாட்டம் ஒரு ஆறு. அதுலெயும் துண்டை வச்சு அயிரை புடிச்சுக்கிட்டு இருந்துச்சுங்க புள்ளைங்க.


மாப்பிள்ளை வீடு போடற மதிய விருந்து. அதை முடிச்சுக்கிட்டு அங்கெருந்து கிளம்பினோம். இனி என்னோடஆட்டோகிராஃப்!

23 comments:

said...

நம்ம ஊர சுத்தி சுத்தி வந்திருக்கீங்க. போடிலயிருந்து சின்னம்மனூர் வழியா போகாம தேவரம் வழியா போயிருந்தா பண்ணைப்புரம், கோம்பை, முக்கியமா மல்லிங்காபுரம் (நம்ம கைப்புள்ளையோட, சே, வடிவேலுவோட (ராஜ்கிரணோட) ஊர் எல்லாம் வந்திருக்கும். தேக்கடி படம் பார்த்ததும் டென்ஷனாயிட்டேன். எப்படி நம்ம ஊர், செம பசுமையில்ல? எங்க ஊர் (கோம்பை)
ஃபுல்லா தென்னந்தோப்பு.

said...

'ஆனா டிக்கெட் கொடுக்க முடியாது. கணினி 11.20க்கே டிக்கெட் பதிஞ்சு கொடுக்கறதை நிறுத்திரும்..//

கேரளாகாரங்க யூஸ் பண்ற கம்ப்யூட்டர்கூட டைமுக்குதான் வேல செய்யும்போல.. ஏன்னா யூனியன் இருக்குமில்லே அதனாலதான்.:-))

said...

அடடா! இதுதான் சாம்பாரா....நான் ஏதோ போட்டி கீட்டி வெச்சிருக்கீங்களோன்னு ஓடி வந்தேன்..பாத்தா தேக்கடி சாம்பார்...ம்ம்ம்...நானும் தேக்கடி போயிருக்கேன். ஆனா ஒருநாளும் போட்டுல போனதில்லை. எல்லாரும் போறப்போ நான் மட்டும் வரலைன்னு சொல்லீட்டேன். ஏன்னு தெரியலை....மத்த ஊர்லல்லாம் போட்டிங் போயிருக்கேன். தேக்கடீல ஏன் மறுத்தேன்னு இன்னமும் தெரியலை........அடுத்த வாட்டி போனா போகனும்.

said...

ஏங்க பிரேமலதா, இதுக்கே டென்ஷனாயிட்டீங்க?
உங்களுக்காக இன்னும் நாலைஞ்சு படம் நாளைக்குப் போட்டுவிடப் போறேங்க.

ஆமாம், நீங்க கோம்பைக்காரவுகளா?

said...

ஆமாங்க டிபிஆர் ஜோ,

அதான் கணினிக்கும் மனுசனுக்கும் இருக்குற வித்தியாசம். இல்லேன்னா கையிலே டிக்கெட் எழுதிக்குடுத்து போட்டுலே
ஏத்தியிருக்க மாட்டாங்களா?:-)

said...

ராகவன், அடுத்தமுறை கட்டாயம் போய்வாங்க.
ரொம்பப் பிரமாதம் இல்லேன்னாலும் அதுவும் ஒரு அனுபவம்தானே?

said...

தேக்கடியா.. நான் போய் பத்து பதினஞ்சு வருஷமாச்சு. ஆனா கம்பம், சின்னமனூர் ரோடெல்லாம் சூப்பரா இருந்துச்சு போன ஜூன்ல.

எப்படியோ குட்டியானையோட டெலிபதியெல்லாம் செஞ்சு விளையாடிருக்கீங்க. ஆனா தேக்கடிக்குப் போறதுக்காக கல்யாண சாப்பாட்டை யாராவது விடுவாங்களா? :))

said...

என்ன இப்படியொரு கேள்வி கேட்டிட்டீங்க. அப்ப நீங்க நம்ம வலைப்பதிவுப்பக்கம் வந்ததே இல்லனு தெரியுது.

கோம்பைதான்.

தேவாரம், (உத்தம) பாளையம், சின்னம்மனூர், போடி, எல்லா ஊர்லயும் நம்ம சொந்தபந்தம் அதிகம்.

I love Thekkadi boat trip. not for the "sighting" of animals, but it has a lovely waterspread area. enjoy being there. I love eating in teak-leaves. You should go beyond kumuzhi to get a real taste of kerala. Cardamam estates.. wow. I must go there.

said...

ராம்ஸ்,
கல்யாண சாப்பாடு எங்கெ போகுது? நாளைக்கே ( ஒரு பேச்சுக்கு) உங்களுக்குக்
கல்யாணமுன்னா ஓடி வந்துரமாட்டேன், சாப்புட:-)

ஒரு விஷயம் சொல்லலேல்ல! அன்னிக்குப் பகல் அங்கே சாப்புட்ட மச்சினன் பொண்ணுங்க
ரெண்டு பேர் வயித்துவலின்னு
வாந்தி எடுத்துக் கஷ்டப்பட்டுட்டாங்களாம்.
தப்பிச்சோமுன்னு நினைச்சேன்:-)

said...

பிரேமலதா,

ஆமாம் நீங்க சொல்றது (கேரளா அழகு) உண்மைதான். நம்ம சொந்தங்களுக்கும் கொஞ்சம் ஏலத்தோட்டம்
இருக்குல்லெ.

வாங்க, ஒருதடவை சேர்ந்தே அந்தப்பக்கம் போய்வரலாம்.

said...

எனக்கு ஒரு பெரிய்ய்ய்ய ஆட்டோகிராப்ஃ விசிட் pending இருக்கு. அதுல முக்கியமா ஏலத்தோட்டம்தான். கண்டிப்பா போகணும்.

நீங்களும் சேர்ற்தா இருந்தா இன்னும் நல்லா(enjoyableக்கு தமிழ்ல என்ன?) இருக்கும்.

said...

வாங்க கட்டாயம் போயிரலாம்.
என் தமிழிலே அதுக்கு 'அட்டகாசமா இருக்குமுன்னு' சொல்றது:-))))

said...

அந்தம்மாவையும் அவருக்கு அந்தப் பக்கத்துலே ஃப்ரேம்லெ வர்ற மாதிரி நிக்கவச்சு படம் எடுத்துக் கொடுத்துட்டோமுல்லெ.ஆனா அவர் அதை டெவலப் பண்ணும்போது தான் தெரியும் நாம எடுத்த லட்சணம்!

என்ன அருமையான ஒரு 'கேமராவுமனா' இருந்துகிட்டு ச்சு...ச்சு..என ஒரு அடக்கம் என்ன ஒரு அடக்கம்! :))

said...

என்னங்க மீனா,

நீங்க வேற, இப்படிச் சமயம் பார்த்து காலை வாரறீங்க?

said...

அடக் கடவுளே,

இப்படி குமுளியைப் போயி குமிழின்னு எழுதிட்டேனே (-:

குமுளிக்காரவுக யாராவது இருந்தா மன்னிச்சிருங்கப்பா.

டிராஜ், நன்றிங்க. 'யானை'க்கும் அடி சறுக்குமாமே? அப்படியா?

said...

துளசி எழுதினபதப்பாத்து நானும் குழம்பிபோய் குமுழின்னு போட்டுட்டேன். எனக்கு ஏற்கனவே கொஞ்சம் தமிழ்குழப்பம். அதனால கண்டிப்பா நான்தான் தப்புன்னு நினைச்சேன். Thanks Draj.

said...

டிராஜ்,

ஆமாமாம். அது லோயர் கேம்ப்தான். அங்கே இருந்து போற பைப் பவர் ஸ்டேஷனுக்குப் போகுதாம்.

said...

//எல்லாம் உசிலம்பட்டி வழியா போற குமுளி பஸ்களை பாத்ததுனால ஞாபகத்துல இருந்தது. :)//

சே. இத வைச்சே இவ்வள்வு ஞாபகமா?

I take kumuli bus from Chennai to go to my place. I have been to kumuli several times.. it is almost like Kombai for me, still I was confused. Shame shame. :(


Yes, it is Lower Camp. and there is Upper Camp too. It is just where the pipes start. :-)

said...

துளசியக்கா,
நானும் குமுளி, தேக்கடி எல்லாம் போயிருக்கிறேன். ஆனால் ரொம்ப்ப்ப வருஷத்துக்கு முன்னால் கிட்டத்தட்ட இருபது வருஷத்துக்கு மேலாகிவிட்டது. நான் பள்ளியில் படிக்கும்போது கூட்டிச் சென்றார்கள். அப்போது எனக்கு எட்டு அல்லது ஒன்பது வயசு இருக்கும், ஆனால் அங்கு பார்த்த அனைத்தும் நன்றாக நினைவு இருக்கிறது.

உங்க பின்னூட்டம் பார்த்தேன், எனது மின்னஞ்சல் முகவரி tamilkathai@yahoo.com .

said...

முத்து,

தனிமடல் பார்க்கவும்

said...

that water irrigates an entire catchement from kerala to cholavandhaan. so many lives, so many farms.. that lovely breeze.. that lovely feeling you get when the bus cross those rivers at veerapaandi, palayam.. lovely sight of rice being thrashed on the roads.. let them take all power they want.
Thank you kerala for that water. :)

said...

பிரேமலதா,

உங்க வர்ணிப்பு நம்மளை அங்கேயே கொண்டு போயிருச்சுங்க. இங்கேயும் பச்சைப் பசேல்னு இருந்தாலும்
நெல்லு வயலோட அழகே தனியாச்சுங்களே!

said...

ரசனையோட எழுதியிருக்கீங்கம்மா,

நாங்க மதுரைலயிருந்து பைக்லதான் போனோம். தேனி - தேக்கடி பயணம் குளு குளுன்னு ரொம்ப அருமையா இருந்தது... :)