Thursday, March 16, 2006

கண்ணன் மனநிலையை.......


பயண விவரம் பகுதி 4


பல்வேறு முக்கியஅலுவல்களுக்கிடையிலே பழக்கம்(!) வுட்டுப்போயிறக் கூடாதுன்னு தங்க மாளிகைகளுக்கும்,ச்சென்னை சில்க்குகளுக்கும், சரவணாக்களுக்கும்,அடுத்தகட்ட முக்கியமாக தையல்கடைகளுக்கும் ஓடிநடந்த விவரங்கள் எல்லாம் பயண விவரமாப் பதிக்கலைன்னாலும் இங்கே ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றேன்.( ஐய்யோ தேர்தல் வருதாமே..... வருதுன்னு கேட்டமுதலே இப்படித்தான் பேச்சை ஆரம்பிச்சாநிறுத்த முடியலை!)


ரங்கநாதன் தெருவிலே இருந்த சரவணா ஸ்டோர்ஸ், இப்ப (அண்ணந்தம்பிங்க பிரிவினையாமே!) விஸ்வரூபமெடுத்துகிளை பிரிஞ்சு ஒண்ணையொண்ணு மிஞ்சிக்கிட்டு இருக்குதுங்க. 90 ரூபாய்க்கு சுரிதார் துணிங்க கிடைக்குதுன்னாபாருங்களேன். கடை வாசல்லேயே 12 இளம்பெண்கள் ரெண்டுவரிசையா அணிவகுத்து நிக்கறாங்க. ஒரே மாதிரிப்பட்டு(!)புடவை, கையிலே சீர்வரிசை வச்சிருக்கறமாதிரி தாம்பாளத் தட்டுங்க. அதுலே கல்கண்டு, சந்தனம், குங்குமம்,மிட்டாய்/சாக்லேட்டு வகைகள்ன்னு. வரவேற்புக் குழு! பலத்த வரவேற்புதான்.


என் வாய் ச்சும்மா இருக்குமோ? 'இது என்ன ஒரே மாதிரிப் புடவைங்க? யூனிஃபார்மா? தினமும் இதேவா, இல்லை வேற வேற கலர்களா?' கிடைச்ச பதில்கள், ரெண்டு நிறங்களிலே புடவைகளை நிர்வாகம் கொடுத்திருக்கு. இன்னிக்கு ஒரு கலர்ன்னாநாளைக்கு இன்னொண்ணு. ஆனா ப்ளவுஸ் அவுங்களே எடுத்துக்கணும். நாள் போகப்போக நம்மளைப் பாத்ததும்'நல்லா இருக்கீங்களா மேடம்?' கேட்கறவரை ஒரு அன்னியோன்யம் ஏற்பட்டுப் போச்சுன்னா பாருங்க.


கடையிலும், விற்பனைப்பிரிவு, துணிமணிகளை அடுக்க இப்படி ஏராளமான இளைஞர், இளஞிகளின் படை,மக்களுக்கு சேவை செய்யவே ஓடியாடிக்கிட்டு இருக்கு. இதனாலே எவ்வளோபேருக்கு வேலை வாய்ப்பு ஏற்பட்டிருக்கு நினைக்கறப்ப ஒரு சந்தோஷம்தான். வேலை செய்யற இடத்துலே கஷ்டநஷ்டங்கள், ச்சின்ன சம்பளம்னு பலதும்இருக்குன்னாலும், இந்த சந்தர்ப்பமே இல்லைன்னு வச்சுக்குங்க, இவுங்கெல்லாம் என்ன செஞ்சுக்கிட்டு இருப்பாங்க?ஆண்பிள்ளைங்களாவது வெளியே வாசல்லே 'சுதந்திரமா'ப்போய் வருவாங்க.ஆனா இத்தனை பெண்களும் இந்தடிவி சனியனைக் கட்டிக்கிட்டுல்லே மாரடிச்சிருக்கணுமுன்னு ஒரு நினைப்பு.


ஆங்.... இந்த இடத்துலே ஒரு 'டிஸ்க்ளெய்மர்' கொடுத்துரணுமில்லை? எதுக்கா? அந்த 'டிவி சனியன்' பதப்பிரயோகத்துக்குத்தான்.டிவின்றது ஒரு நல்ல சாதனம்தான்.ஆனா இப்ப அதுலே வந்துக்கிட்டு இருக்கற மெகா சீரியல்கள்.....இதுலே தமிழ், தெலுங்கு,ஹிந்தின்னு வேறுபாடில்லாம ஒண்ணுக்கொண்ணு சளைக்கலைன்னு, சமத்துவமாத்தான் இருக்கு.இந்தியாவுலே எத்தனை மொழி இருக்கு? ஹூம் .....அத்தனையிலும் இதே நிலமைதான்.


மற்ற நாடுகளில் எப்படியாம்? எனக்குத் தெரிஞ்சவரை தேசங்கள் தோறும் பாஷைகள் ( மட்டுமே) வேறு. சரியான நேரம் கொல்லி.'தமிழ்மணம்' இந்தக் கணக்குலெ வராதுல்லெ? :-)))))))


ஆங்... என்ன சொல்லிக்கிட்டு இருந்தேன்? ம்ம்ம்ம்ம்ம்ம்... சரவணா ஸ்டோர்ஸ்,இல்லே? கடைக்குள்ளே வரவேற்பைத்தாண்டி நுழைஞ்சதுமே நம்ம நா. கண்ணனை நினைச்சுக்கிட்டேன். 'சிங்கப்பூர் முஸ்தாஃபா' கடையிலே தமிழன், தமிழனை நம்பாம பையைக் கட்டிட்டான்னு புலம்புனது தான் காரணம். அங்கெயாவது, வெளிநாடு, தமிழனுக்கு மட்டும்மில்லைஅங்கே ஷாப்பிங் செய்யற எல்லார் பையையும் அதுவும் அந்தக்கடையிலே நாம் வாங்கின சாமான்கள் அடங்கிய பையோட 'வாயை'த்தான் கட்டுறாங்கன்னு ஒரு சமாதானம் சொல்லிக்கலாம்.


ஆனா இங்கே? தமிழ்நாட்டுலேயே, ஒரு தமிழர் நடத்துற கடையிலேயே , அங்கே கஸ்டமராப் போறத் தமிழனையே நம்பலையேங்க?சில கடைகளிலே நாம கொண்டுபோற பையை வாங்கி வச்சுக்கிட்டு ஒரு டோக்கன் தர்றதும், நாம வெளியே வந்தாவுட்டு டோக்கனைக் காமிச்சு நம்ம பையை வாங்கிக்கறதும் பழக்கத்துலே இருக்கறது உங்களுக்குத் தெரியாததா,என்ன? இங்கே அதெல்லாம்வேலைக்காகாதுன்னு, 'நீ கொண்டுவந்த பையை நீயே சுமந்துக்கிட்டுப் போ'ன்றமாதிரி ஒரு பெரீய்ய ப்ளாஸ்டிக் பையிலேநம்ம (பாவ)மூட்டையை வச்சு, வாயைக் கட்டி நம்மகிட்டேயெ கொடுக்கறாங்க. இந்த வேலைக்குன்னே ரெண்டு பக்கம் இருக்கறமாடிப்படியின் ஆரம்பத்துலேயே சில இளைஞர்கள். கடையோ ஆறு அடுக்கு மாடி. எல்லா அடுக்குலேயும் இப்படியே! வாயைக் கட்டி,வயித்தைக் கட்டிச் சேர்த்துவச்ச காசைச் செலவு செய்யவந்த ஜனங்களுக்கு இப்படி ஒரு மரியாதை(-:


லிஃப்ட்டுலே போனா என்னா செய்வே?ன்னு நைஸா நினைச்சீங்களா? ம்ஹூம்... தப்பிக்கவே முடியாது. மின்தூக்கி(நன்றி ஜெயந்தி)வாசல்லெயும் இந்தப் பைக்'கட்டு' ! திரும்ப இறங்கி வரும்போது கட்டை அவுத்துக் கொடுக்கவும்ஆள் இருக்கு. ஒரு அடுக்குக்கு ஆறு வீதம் 'ஆறாறு முப்பத்தாறு பேருக்கு வேலைவாய்ப்பு'ன்னு சந்தோஷப் பட்டுக்கலாம்.


தோல் பொருட்கள் கண்காட்சி ஒரு மூணுநாளைக்கு நடக்குதுன்னும், அன்றே அது கடைசிநாள்னு தெரிஞ்சுஅங்கே போனதும், ( 200 ரூபாய் நுழைவுச்சீட்டு) தோல் பதனிடறது, அதுக்குச் சாயம் ஏத்தறது, தோலாடை உற்பத்திக்குனு இருக்கற மெஷினுங்களைப் பாக்கறதுன்னு கொஞ்சம் அறிவை விஸ்தரிச்சுக்கிட்டு, நங்கைநல்லூரில் இருக்கும் குடும்ப நண்பரைப் பார்க்கப் போறவரை அன்னிக்கு ஒரு வலைப்பதிவர் சந்திப்பு நடக்கப்போகுதுன்னு மெய்யாலுமே தெரியாது.


நங்கைநல்லூர்ன்னதும் மூளையில் ஒரு மணி அடிச்சுது. பயணம் முழுசும் என்னைவிட்டகலாது இருந்த மூணுதாளைப்பார்த்ததும் புரிஞ்சுருச்சு. நம்மளைச் சந்திக்க விருப்பம் தெரிவித்திருந்த வலைஞர்கள் விவரம் அடங்குனதுதான் இந்த மூணுதாள் மேட்டர்.அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா... எத்தனை பேர்ங்கறீங்க?


அவர் தந்த தகவலின்படியே போய் இதோ வீட்டுக் கூடத்துலே நுழைஞ்சாச்சு. ஹை... ஊஞ்சல்!!!!ஓடிப்போய் உக்காந்துக்கிட்டேன். அவரோட மகளையும் சந்திச்சோம். பேச்சு பலவிஷயங்களைத்தொட்டுப் போய்க்கிட்டு இருந்தது. எங்க இவர் எப்பவாவது சில பதிவுகளை, நகைச்சுவையா எழுதறவங்களோடது படிச்சிருக்காரே தவிர, தமிழ்மணத்துலே அன்னாட நிகழ்ச்சிகளா(!) நடக்கறதை எதுவுமே அறியாதவர். சில விஷயங்களைக் கேட்டுட்டு இப்படியெல்லாம் கூட நடக்குமான்னு அதிசயப்பட்டுட்டார். போட்டும்,அப்பாவி!!!! பேசிக் களைச்சுட்டோமோன்னுச் சுடச்சுட ஒரு காஃபியும் தன்கையாலேயே(!)போட்டுக் கொடுத்தார் நண்பர். வீட்டுக்காரம்மா கோயிலுக்குப் போயிருந்தாங்க.


அப்படியே 'ஆஞ்சநேயரையும்' பார்த்துட்டுக் குசலம் விசாரிச்சுட்டுப் போகலாமுன்னு நினைச்சுக்கிட்டே, வழியனுப்பிவைக்க கூடவே வந்த நண்பரிடம், உங்களைப் பார்த்ததுலே ரொம்ப சந்தோஷங்க. போயிட்டு வரோம் 'டோண்டு'ன்னுசொல்லி ஆட்டோவுலே ஏறி உக்கார்ந்தாச்சு.


கோயிலுக்குப் போனா ,'அலங்காரம்' நடந்துக்கிட்டு இருக்கு. பிரமாண்டமான கதவுகள். சாத்தியிருக்குன்னு பேரே தவிர தெரிஞ்ச இடைவெளியில் துல்லியமாப் பார்க்க முடிஞ்சது. ஹைய்யோ... எவ்வளவு பெரியவர்?
அண்டா அண்டாவா, தோளில் சுமக்க முடியாமல் சுமந்துக்கிட்டு, கனம் தாங்கமுடியாம ஓடோடி வராங்க கோயிலைச்சேர்ந்த பரிசாரகர்கள். சூடாயிருக்கும் போல, பாத்திரங்களின் அடியிலெ கனமான துண்டு. எல்லாம் பிரசாதங்களாம்!!


இதோ எல்லாம் ஆச்சு. மூடுன கதவுக்குள்ளே நைவேத்தியங்களைப் படைச்சுட்டு, மறுபடி அதெ ஓட்டமும் நடையுமாவெளியே போனாங்க இந்த 'அண்டா'தூக்கிகள்.


மேள வாத்தியங்களோட சப்தம் உச்ச ஸ்தாயிலே ஒலிக்க, ரெண்டு கதவுகளும் திறக்க ஒரு ஜ்வொலிப்போட நம்மஆஞ்சநேயுடு! பார்க்கவே பரவசமா இருந்தது. திரும்பிப் பாக்கறேன், எனக்குப் பின்னாலே இவ்வளவு கூட்டம்! எப்பவந்தாங்க இவுங்கெல்லாம்?போகும்போது கிடைத்த பிரசாதங்களை( புளியோதரை) நாங்க பூ வாங்கின அம்மாவின் கையில் கொடுத்துட்டுதிருப்தியோடு கிளம்புனோம். பாவம் அந்த அம்மா, 'உள்ளெ போய் சாமியைக் கும்பிட நேரமில்லம்மா. இங்கெயேஇருந்து கையெடுத்துக் கும்புடறதோட சரி' சொன்னாங்களே, நான் போட்டு வாங்குனப்ப!

18 comments:

said...

நீங்கள் என் வீட்டுக்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சி துளசி அவர்களே. நீங்கள் அனுப்பித்த போட்டோக்களும் வந்து சேர்ந்தன. அதற்கும் நன்றி.

உட்லேண்ட்ஸ் சந்திப்பைப் பற்றியும் எழுதுவீர்கள் என நினைக்கிறேன்.

வழக்கம்போல எலிக்குட்டி சோதனையை செய்து உண்மையான டோண்டுதான் இப்பின்னூட்டம் இட்டான் என்பதை கண்டுகொண்டு மட்டுறுத்தல் செய்யவும்.

இப்பின்னூட்டத்தின் ந்கலை என்னுடைய இப்பதிவிலும் பின்னூட்டமாக இட்டுவிடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/02/12022006.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

வாங்க டோண்டு. நல்லா இருக்கீங்களா?
உட்லண்ட்ஸை கட்டாயம் படமோடு போட்டுரணுமுல்லே:-)

said...

ஆகா! சரவணா ஸ்டோருக்குப் போனீங்களா! நான் அந்தக் கடைக்குள்ள எட்டிப் பாத்தது கூட இல்லை. ஆனா திருவிழாக்கூட்டமாட்டம் மக்கள் உள்ளே வெளியே விளையாண்டுகிட்டு இருப்பாங்க.

வெலை குறைவா இருக்குமுன்னு சொல்வாங்க....சரி...தரமாவும் இருக்குமா? பாத்தவங்க நீங்கதான் சொல்லனும்.

நங்கநல்லூருக்கு ஒரே வாட்டிதான் போயிருக்கேன். என்னுடைய நண்பன் அங்க தங்கீருந்தப்ப....ஆஞ்சநேயரையெல்லாம் பாத்ததில்லை......

கையில் கிடைத்த புளியோதரையை பூக்காரிக்குக் குடுத்துட்டீங்களா...பெரிய மனசுதாங்க.....நானும் ஒரே ஒரு வாட்டி.....ஒரே ஒரு வாட்டிதான்...கையில் கிடைத்த திருத்தணி பிரசாத புளியோதரையை குரங்குக்குக் குடுத்தேன். மத்தபடி எல்லாவாட்டியும் புளியோதரையை விட்டுக் கொடுக்க முடியாது. :-))

said...

//நாள் போகப்போக நம்மளைப் பாத்ததும்'நல்லா இருக்கீங்களா மேடம்?' கேட்கறவரை ஒரு அன்னியோன்யம் ஏற்பட்டுப் போச்சுன்னா பாருங்க.//
ஆஹா.ரயில்வேல ரெகுலராப் போரவிங்க வசதிக்கு சீசன் டிக்கெட் தார மாதிரி,உங்கள் மாதிரி ரெகுலர் என்.ஆர்.ஐ. மக்களுக்கு ஏதாவது வசதி செஞ்சு கொடுக்கலாம் இல்லையா???

நங்கைநல்லூர் ஆஞ்சனேயர் கோயில்ல மொளகுவடை கிடைக்கலியா???

நேத்தைக்கு ஹோலி கொண்டாடுனீங்களா?

said...

ராகவன்,

சரவணா ஸ்டோர்ஸ் மத்த கடைங்க மாதிரிதான். ஆனா விலை குறைஞ்சதுலே இருந்து விலை மிகக்கூடுதல்
வரை இருக்கு. 'எல்லாம் மாவுக்கேத்த பணியாரம்.' நம்ம ஐவேஜுக்குத் தகுந்தபடி வாங்கிக்கலாம்

//புளியோதரையை குரங்குக்குக் குடுத்தேன்//

நீங்களாக் குடுத்தீங்களா இல்லே அது தானா பிடுங்கிக்கிட்டுப் போயிருச்சா? ( எல்லாம் ஒரு அனுபவம்தான்)

அடுத்தமுறை போனா அந்தக் கோயிலுக்குப் போயிட்டு வாங்க. நிஜமாவே பிரமாண்டமான சிலை!

said...

சுதர்ஸன்,

மொளகு வடையை எல்லாம் கண்ணுலெயே கட்டலையேப்பா(-:

ஹோலி இந்த ஞாயிறுதான் நம்ம இந்தியன் க்ளப்லே கொண்டாடுறோம். கோபாலும் வந்துருவார்னு
நினைக்கறேன்.
இந்த முறை விழாவுக்கு 5$ டிக்கெட் வச்சுருக்கோம். ஒரு ஃபிஜி குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடக்கப்போகுது. அதுக்கு
ஃபண்ட்ரெய்ஸிங்.

said...

//பல்வேறு முக்கியஅலுவல்களுக்கிடையிலே பழக்கம்(!) வுட்டுப்போயிறக் கூடாதுன்னு தங்க மாளிகைகளுக்கும்,ச்சென்னை சில்க்குகளுக்கும், சரவணாக்களுக்கும்// அதானே பார்த்தேன், செம வேட்டு வச்சிருப்பீங்களே! அதென்ன சென்னை போனோன பாண்டி பஜார், ரங்கநாத்ன் தெரு மேலே அவ்வளவு பாசம் உங்களுக்கு!

said...

நீங்கவேற, ஞாபகப்'படுத்திட்டீங்க' மனசு கிடந்து அல்லாடுது! ரங்கநாதன் தெருவுக்குள்ளெ போகாம வந்துட்டேன் இந்த முறை.

said...

துளசி,

பாண்டி பஜார்லருக்கற கடைகளையும் ரங்கநாதன் தெருவிலிருக்கற கடைகள், முக்கியமா நீங்க சொன்ன சரவணா, ரத்னா, ஸ்டோர்ஸ் இப்போ புதுசா முளைச்சிருக்கற ஜெயசந்திரன் டெக்ஸ்டைல்ஸ்.. சுமார் கடந்த பத்தாண்டுகளில் வளர்ந்திருக்கிற விதம் மேனேஜ்மெண்ட் ஆய்வாளர்களுக்கும் புரியாத ஒரு பாடம். இந்த மூன்று கடைகளுக்கும் என்னுடைய வங்கியிலிருந்தும் ஃபைனான்ஸ் செய்திருக்கிறோம். இப்போதல்ல, அவர்கள் வளர்ந்துக்கொண்டிருக்கும் நேரத்தில்.

அவர்களுடைய வியாபார முறைகளும், இன்வெண்டரி மேனேஜ்மெண்ட் முறைகளும் நம்மால் கற்பனையிலும் நினைக்கமுடியாத ஒரு சவால்..

அதற்காகவே நான் சென்னை வட்டார அலுவலகத்தில் பணிபுரிந்த நேரத்தில் வாரம் ஒரு நாள் விசிட் என்ற பெயரில் போய் மணிக்கணக்கில் ஊழியர்களுடன் அமர்ந்து அவர்கள் செய்வதைப் பார்த்திருக்கிறேன்..

இன்னும் எனக்குப் புரியாத பல விஷயங்களில் ஒன்று இத்தனை விதமான பொருட்கள் (inventory) கடையில் இருந்தும் எப்படி எல்லாவற்றின் விலையையும் அதில் எத்தனை மார்க்கப் செய்து விற்றால் லாபம் கிடைக்கும் என்று மேனேஜ்மெண்ட் கோர்ஸ் படிக்காத ஒருவரால் (கவனியுங்கள் ஒரே ஒருவரால் மட்டும்) தீர்மானித்து வெறும் பத்தாவது அல்லது அதற்கும் கீழ் படித்தவர்களை வைத்துக்கொண்டு.. தொடர்ந்து வர்த்தகத்தில் வளர்ந்து.. கோடிக்கணக்கில் வங்கிகளிடமிருந்து கடன் பெற்று.. சூப்பர்ங்க.. அவங்க ஃபாலோ பண்ற அக்கவுண்டிங்க் முறைகள் கூட மிகவும் விசித்திரமானவை.. எந்த கணினியாலும் சால்வ் பண்ண முடியாதவை..இதை என்றாவது ஒருநாள் விலாவாரியாக தி.பா. தொடரில் எழுதுவேன்..

said...

டிபிஆர்ஜோ,


//மேனேஜ்மெண்ட் கோர்ஸ் படிக்காத ஒருவரால்
(கவனியுங்கள் ஒரே ஒருவரால் மட்டும்) தீர்மானித்து வெறும் பத்தாவது....//


இதுதான் 'ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது'ன்றதா?

சேமிப்புத்திட்டமுன்னு எல்லாம் பேங்குங்க வந்து சொல்றதுக்கு முன்னாலேயே அந்தக் காலத்துலே
அஞ்சரைப்பெட்டியிலே சேமிச்சுவச்சவங்களையும் இதுலே சேர்த்துக்கலாம் தானே?

படிப்புவேற (பிராக்டிக்கல்)அறிவு வேற!

தி.பா.லே எழுதுங்க ப்ளீஸ்!

said...

துளசி உண்மையாவே உங்க திறமைக்கும் `பொறுமை'க்கும் அளவே இல்லை. ச்த்யராஜ் படமும் விடறதில்லை. சரவணா ஸ்டோரும் விடறதில்லை. ஒவ்வொருதரமும் அதைக் கடக்கும்போது, கூட்டத்தைப் பார்த்துட்டே நான் ஓடிடுவேன். நீங்க அங்கே போய் பேட்டி வேறே! கோபால் சார் கூட வந்தாரா? பாவம்ங்க அவரு!

said...

தாணு,

//கோபால் சார் கூட வந்தாரா? ...//


பின்னே வராம? கூட்டத்துலே தொலைஞ்சுட்டா அப்புறம் நான் எங்கேன்னு போய்த் தேடுறதாம்?:-))))

said...

துளசியக்கா!
சரவணா ஸ்டோர்ஸ் போய்ட்டு வரதுக்கெல்லாம் நமக்கு பொறுமை பத்தாது. தவிர அந்த அளவு கூட்டம் நமக்கு அலர்ஜியும் கூட.(இப்போதான் கல்யாணத்துக்கு முன்னாடி இல்லை)

உள்ளே போயிட்டு வெளியில வரதுக்குள்ளே மூச்சு திணறும் எனக்கு!
கஷ்ட காலம்.

நானும் திருமணமான புதிதில் நங்கைநல்லூரில்தான் ஒரு வருடம் வசித்தேன். ரங்கா காலணியில். வேலன் தியேட்டர் அருகிலேயே! ஆனா பாருங்க! ஒரு முறை கூட ஆஞ்சநேயர் கோவில் பக்கம் போனதில்லை.

(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

said...

சிபி,


//கூட்டம் நமக்கு அலர்ஜியும் கூட.(இப்போதான் கல்யாணத்துக்கு முன்னாடி இல்லை)//

அதானே பார்த்தேன்:-))) இப்பப்போனா கையைக் 'கடி'ச்சுருமே.

வெளியேதான் கூட்டமெ தவிர உள்ளே போயிட்டா எக்கச்சக்கமான சேல்ஸ் ஆளுங்க இருக்காங்க.
காத்திருக்கவே வேணாம். நல்ல சர்வீஸ்தான். உங்க 'ரேஞ்சை' சொல்லிட்டாப் பாய்ஞ்சு துணிகளை
எடுத்துப் போடுறாங்க.

கோயில் போகவும் கொடுப்பினை வேணுமோ என்னவோ?

said...

துளசியக்கா!

//இப்பப்போனா கையைக் 'கடி'ச்சுருமே.//

:-) அதுவும் ஒரு காரணம். (!?)

//காத்திருக்கவே வேணாம். நல்ல சர்வீஸ்தான். உங்க 'ரேஞ்சை' சொல்லிட்டாப் பாய்ஞ்சு துணிகளை
எடுத்துப் போடுறாங்க.//

அவங்க எடுத்துப் போடுறாங்க சரி. அவங்களை ஏண்டா இந்த வேலைக்கு வந்தோம்னு நினைக்கற அளவுக்கு நம்ம ஆளுங்க(அதாங்க நம்ம வீட்டு ஹோம் மினிஸ்டரி) செலக்ஷன் இருக்கே!
நிறைய முறை நானே அவங்களுக்காக பரிதாபப் படுவேன்.

அது என்னங்க அது? எனக்கு வேணும்னா நான் போய் "ஏம்பா அதை எடு, அந்த இன்னொன்னை எடு, ஓ.கே இரண்டாவதா எடுத்ததை பேக் பண்ணு" ன்னு சொல்றோம், ஆனா பெண்களுக்கு அப்படி முடியறதில்லை. :-)

//கோயில் போகவும் கொடுப்பினை வேணுமோ என்னவோ?//

ஆமாங்க! ஊழ்வினைப் பயன்னு ஒண்ணு இருக்கே!(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

said...

என்ன சொல்லுங்க..சரவணா, ஜெயச்சந்திராவில போய் 'அள்ளுறது' இருக்கே அது ஒரு தனி 'இது'தான்! பிள்ளைகள் நான் வருவதற்காகவே காத்திருப்பார்கள்.

said...

சிபி,

//......ஆனா பெண்களுக்கு அப்படி முடியறதில்லை. :-) ...//

ஏங்க முடியாது? அடுத்தவங்களுக்கு, அதுலேயும் புருஷனோட சொந்தக்காரங்களுக்கு
எடுக்கணும் ,இல்லே புருஷனுக்கே எடுக்கணுமுன்னு சொல்லுங்க , ஒரு அரை மணி ச்சீசீ
இல்லே ஒரு பத்து நிமிஷத்துலேயே பர்சேஸ் முடிஞ்சிருமுல்லே:-))))

said...

வாங்க தருமி,
க்ளப்லே சேர்ந்ததுக்கு தேங்க்ஸ். ஆயுள்கால மெம்பர்ஷிப் போட்டுரலாமுல்லெ?