Wednesday, March 13, 2019

அழகிய கண்ணே........... !!!!!(பயணத்தொடர், பகுதி 78 )

நம்ம ஒப்பிலியப்பன் கோவில் போகும்போதெல்லாம் பிரஸாத ஸ்டாலின் தலையில் திருவிடை மருதூர் கோவில் திருக்கோவில் சிறப்புகள்னு ஒரு போர்டு இருப்பதைப் பார்த்துருக்கேன். பெருமாள் கோவிலில் சிவன் கோவில் விளம்பரமா......  ஆஹா....  மச்சானைப் பார்த்தீங்களான்னு பெருமாள் நம்மை அங்கே அனுப்பிவிடறார் போல.....  ஒருநாள் போகணும்.... போகலாம்....
அந்த ஒருநாள் இன்றைக்குத்தான் வாய்ச்சது.  ஒரு  முக்கால்மணிக்கு முன்புவரை, இங்கே வரப்போறோம் என்றே நமக்குத் தெரியாது!  உண்மையைச் சொன்னால்...  பரிமளரெங்கந்தான் நம்மை இங்கே அனுப்பி வச்சதும் என்று சொல்லலாம்.

ஸ்ரீ பகவன் நாம போதேந்த்ராள் அதிஷ்டானத்தில் இருந்து கிளம்பிய ஆறாவது நிமிட்,  திருவிடைமருதூர் மஹாலிங்கஸ்வாமி கோவில் வாசலுக்கு வந்து சேர்ந்தாச்சு!   இவ்ளோ... பக்கமா......  வாவ்....
அஞ்சுநிலை ராஜகோபுரம் !
ஆஹா....   மணி இப்போ பதினொன்னரைதான்.  பகல் கோவில் சந்நிதி மூடறதுக்குள்ளே வந்துட்டோம்னு  மகிழ்ச்சியோட கோவிலுக்குள் போனால்......  ஷாக் கொடுத்தாங்க.  தரிசன நேரம் காலை ஆறு முதல் பதினொன்னு வரை தானாம்!   மாலையில் நாலு முதல் எட்டரை வரை....
அட ராமா.....  சரி....  கண்ணுக்குமுன்னே கம்பீரமா உக்கார்ந்துருக்கும் அழகான நந்தியை மட்டுமாவது தரிசனம் பண்ணி, க்ளிக்கலாமுன்னு கிட்டே போனால்......
ரொம்ப தூரத்துலே மூலவர் சந்நிதியில் முணுக் முணுக்ன்னு விளக்கு தெரிஞ்சது. ஆஹா..... கருவறை திறந்துதான் இருக்குன்னு ஓடுனோம்!
'வாங்க..... மச்சான் அனுப்புன ஆளுங்களா..... உங்களுக்காகத்தான் காத்துக்கிட்டு இருந்தேன்'னு  மஹாலிங்க ஸ்வாமி  தரிசனம் கொடுக்கறார்!  ஹைய்யோ..... எவ்ளோ பெரிய மனசு!  சுயம்புலிங்கமாம்!

குருக்கள் கூட அங்கே இல்லை. ஏகாந்த தரிசனம் தான்!   கும்பிட்ட கையோடு திரும்ப முன்மண்டபத்துலே இருந்த நந்தியைக் க்ளிக்க வந்தேன். ஹைய்யோ.... என்ன ஒரு அழகு!  இதைப்போல ஒரு நந்தியை திருநெல்வேலி  நெல்லையப்பர் கோவிலில் பார்த்துருக்கோம்.  அப்புறம் ராமேஸ்வரம் கோவிலில் கூடப் பார்த்திருக்கோமே.... இல்லையோ?
சும்மாச் சொல்லக்கூடாது..... அந்தக் கண்ணழகு இருக்கே....  ஆஹா.... அபாரம். எப்படி சுண்டி இழுக்குது பாருங்க!

 எனக்கு எப்பவுமே  மாடுகளின் கண்கள் ரொம்பப்பிடிக்கும். அதிலும் கன்னுக்குட்டியின் கண்கள் என்ன ஒரு அழகுன்னு  பார்க்கவே ஆசையா இருக்கும்.  அதென்ன மான் கண்ணைவிட மாட்டுக்கண் அழகான்னு கேட்டால்......   மாடுதானே சுலபமாப் பார்க்கக்கிடைக்குது இல்லையோ?
அப்பதான் கவனிக்கிறேன்.... ரெண்டு கொடிமரங்கள்  ரெண்டு நந்திகள், ஒரு பலிபீடமுன்னு அமைப்பு !  ஒரு நந்தி சின்னது. கல்லில் வடிச்சது!   பெருசு சுதைச்சிற்பம்!
மாடு கால் நீட்டி உக்கார்ந்தால் ஆடும் கால் நீட்டி உக்காராதான்னு ஒரு Copy Goat போஸ் கொடுத்துச்சு:-)
வைணவர்களுக்கு  நூத்தியெட்டு திவ்யதேசக்கோவில்கள்  முக்கியமானவைன்னு இருக்கறதைப்போல சிவனை வழிபடும் சைவர்களுக்கு  இருநூத்தி எழுபத்து நாலு  கோவில்கள் பாடல் பெற்ற தலமாக இருக்கு!  அங்கே ஆழ்வார்கள்  பாடி வச்சாங்க. இங்கே நாயன்மார்கள்  பாடி வச்சுருக்காங்க.
இந்த திருவிடைமருதூர் மஹாலிங்கஸ்வாமி கோவில் பாடல் பெற்ற தலங்களின் பட்டியலில் தொன்னுத்தி மூணாவதா  இருக்காம்.
சோழர்கள் கட்டுன கோவில். விஸ்தாரத்துக்குக் கேட்பானேன்!  ஆயிரத்து இருநூறு வருஷங்களுக்கு மேலே வயசாச்சுன்னு கணக்கு சொல்றாங்க.
திருவாவடுதுறை  ஆதீனத்துச் சொந்தமான கோவில் இது.  அவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதால்... நியமங்கள், நேரங்கள் எல்லாம் அவர்கள் சொல்படியே!
அஸ்வமேதப்ரகாரம், கொடுமுடிப்ரகாரம், ப்ரணவப்ரகாரம்னு மூணு பிரகாரங்கள் இருக்கு என்றாலும்  நாம்  அந்தக் கொடுமுடியை வலம் வர முடியலை.  வழியில் உள்ள  கம்பிவாசல் அடைச்சுருந்துச்சு.


உள்ப்ரகாரம்  வலம் வந்தப்ப, கோஷ்டத்தில் லிங்கோத்பவர், துர்கைன்னு அழகோ அழகு!  ஒரு இடத்தில் நம்ம ராவணன்!  கையில் வீணையோடு சாமகானம் பாட,  கயிலையே  மனம் உருகி இளக, சட்னு மேருவைத் தூக்கும்  முயற்சியில்னு நினைக்கிறேன்.


பெரிய பெரிய ப்ரகாரங்கள்தான்!   ஹோ..........ன்னு இருக்கு!
'அம்பாள் சந்நிதியில் பூஜை'ன்னு  எதிரில் வந்த ஒருத்தர்  சொன்னார்.   அம்பாள் பெயர் கொள்ளை அழகு!  அன்பிற்பிரியாள் !!!!   போய்  ஸேவிச்சுக்கிட்டோம்.

வெளிப்ரகாரத்தில் ஓரு மண்டபத்துக்குள் நிறைய பெண்கள் சத்சங்கம் போல் கூடியிருந்து  தேவாரம் வாசிக்கறாங்க!
இன்னொரு மண்டபத்தில் அன்னதானம்  நடக்குது.
நாளைக்கு ஆடி பிறக்குதாம். அம்மன்  தங்கப்பூச்சுக்குக் காத்திருக்காள் !
காசிக்குச் சமமான  ஆறு சிவன் க்ஷேத்ரங்கள் இங்கே காவிரிக் கரையிலே இருக்கு. அதில் ஒன்னுதான் இந்தத் திருவிடைமருதூர்  க்ஷேத்ரம். மற்ற ஆறும்....  திருவையாறு, திரு சாய்க்காடு, திரு வாஞ்சியம், திருமறைக்காடு  & மாயூரம் என்பவை!
கோவிலின் தலவிருக்ஷம் மருதமரமே!   இந்தியாவில் மொத்தம் மூணே மூணு சிவன் கோவில்களில்தான் மருதமரம் தலவிருக்ஷமாக இருக்காம்.  தலை, இடை, கடைன்னு....  தலையாக இருப்பது ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன ஸ்வாமி கோவில், வடமருதூர். மல்லிகார்ஜுனம்.   கடையாக இருப்பது திருநெல்வேலி அம்பாசமுத்திரம் பக்கத்துலே  திருப்புடைமருதூர் என்ற  புடார்ச்சுனம். இந்த ரெண்டு தலங்களுக்கும் இடையில் இருப்பது  திரு இடை மருதூர் என்ற மத்யார்ச்சுனம். (இதுதான் புராணப்பெயராம் ! )

கோவிலில் பராமரிப்பு, பழுதுபார்க்கும்  வேலைகள் அங்கங்கே நடக்குது.   அவர்களுக்கான  வேலை நேரத்தில் நாம் குறுக்கும் நெடுக்குமாய்ப் போனால்  எப்படின்னு.....


திரும்ப நந்தி மண்டபத்துக்கு வந்துருந்தோம்.  பைரவர் நல்ல உறக்கம். ஆனாலும் நடமாட்டத்தை ஓரக்கண்ணால் கவனிச்சார்.  பசி அந்தக் கண்ணில் தெரிஞ்சது. 'நம்மவர்' பிஸ்கெட் பாக்கெட்டை வெளியில் எடுத்ததும்,  எழுந்து நின்னு குட்மார்னிங் சொன்னார்:-)
நாலைஞ்சு பிஸ்கெட்ஸ் வயித்துக்குள் போனப்புறம் நமக்குத் துணையா அவரும்  ப்ரகாரம் சுத்தக் கிளம்பிட்டார்.  என்ன நன்றி பாருங்க....இந்த ஜீவன்களுக்கு.....



ராமேஸ்வரம் கோவிலில்தான்  இருபத்தியோரு தீர்த்தமுன்னு நினைச்சுருந்தேன். இங்கே வந்தபின் பார்த்தால்  இந்தக்கோவிலில் முப்பத்தியிரண்டு தீர்த்தங்கள் இருக்காமே!!!!
இன்னொரு சுவாரஸ்யமான கதை !!!

ப்ரம்மஹத்தி தோஷம் நீக்கும் தலம் இது. பாண்டியமன்னன் வரகுணப்பாண்டியனுக்கு ஒருமுறை  இந்த தோஷம் (அந்தணனை அறியாமல் கொன்றதால்) பிடிச்சுக்கிச்சு.  இதை நீக்கிக்க  இந்தக் கோவிலுக்கு வர்றான். ப்ரம்மஹத்தி பீடிச்சால் அது பீடித்தவரை விடாது கூடவே தொடர்ந்து வருமாம்.  அதே போல இங்கேயும் பின் தொடர்ந்து வந்து இருக்கு.   கோவிலுக்குள் போக அதால் முடியாதுன்னு, எப்படியும் அரசன் திரும்பி இந்த வழியாத்தானே வரணும். அப்போ தொடர்ந்தால் ஆச்சு. அதுவரை ரெஸ்ட்ன்னு அங்கேயே உக்கார்ந்துருக்கு.

உள்ளே போன வரகுணன், மனம் உருகி சிவனை வணங்குனதும்,  தரிசனம் முடிச்சுத் திரும்பிப்போகும்போது  வேற வாசல் வழியாப் போன்னு அசரீரி கேட்டுருக்கு. அதே போல அவனும் வேற வாசல் வழியா வெளியே போயிட்டான்.
இவன் திரும்பி  வருவான்னு இன்னும்  அரசன் நுழைஞ்சு போன வாசலிலேயே  ப்ரம்மஹத்தி காத்திருக்காம்!

அதனால்..... மேற்படி தோஷம் இருக்கறவங்க  உள்ளே போகும் வாசல் வழியாத் திரும்பி வராமல், வேற வாசலைப் பயன்படுத்தணுமாம்.

இந்த சமாச்சாரமெல்லாம்  ஒன்னும் தெரிஞ்சுக்காம நாம் உள்ளே போன வாசல் வழியாகவே வெளியில் வந்திருந்தோம். இங்கேதானே வண்டியை நிறுத்தி இருக்கார் ரமேஷ்.
ரொம்பவே பெரிய வளாகம்!  இன்னும் கொஞ்சம் சரியாச் சுத்திப் பார்த்திருக்கலாம்.  அதுக்கு ஒருநாள் காலையில் வந்தால் நல்லது. கும்மோணத்தில் இருந்து வெறும் ஒன்பது கிமீ தூரம்தானே..... அடுத்த முறை வரணுமுன்னு மூளையில் முடிச்சுப் போட்டு வச்சுட்டுக் கிளம்பியாச்.

நேரா  கும்மோணம் ராயாஸ்தான்!

தொடரும்........ :-)

14 comments:

said...

என் சித்தப்பா ஒருவர் வருடத்துக்கொருமுறை திருவிடைமருதூர் சென்று வருவார். எவ்வளவு பெரிய கோவில்? மக்களைத்தான் காணோம்! பைரவர் நிகழ்ச்சிகள் படித்ததில் நெகிழ்ச்சி. படங்கள் அற்புதம்.

said...

இந்தக் கோவிலில் பெரிய பாவை விளக்கு, அது சம்பந்தமான வரலாறைப் பார்க்க விட்டுப்போயிடுத்தா? எப்படி அதை மிஸ் பண்ணிணீர்கள்?

said...

"திருவாரூர் தேரழகு திருவிடைமருதூர் மதில் அழகு " என்பார்கள் ஆனால் அந்த மதில் அழகை காணவே முடியாத படி வாசல் பூட்டியே இருக்கு அம்மா. எப்போது திறந்து இருக்கும் என்ற தகவல் கூட இல்லை . மிகவும் வருத்தம் அந்த மதில் அழகை கேள்விப்பட்டு பார்க்க பொண்ண போது ஏமாற்றம் மிஞ்சியது .

said...

வாங்க ஸ்ரீராம்,

ஆடிமாசத் திருவிழாவுக்கு மக்கள் திரண்டு வருவார்கள் போல.... நாம் போன நாளும் நேரமும் இப்படி அமைஞ்சு போச்சு.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

பாவை விளக்கு மட்டுமா, சிங்கக்கிணறு, மூகாம்பிகை சந்நிதி, நக்ஷத்திர லிங்கம்னு பலதும் பார்க்கலை. இன்னொருக்கா வரச் சொல்லிட்டான்னு இருக்கேன். இது நம்ம பயணத் திட்டத்தில் எதிர்பாராமல் கிடைச்ச கோவில்!

said...

வாங்க செந்தில்பிரசாத்,

மதிலழகு..... மன்னார்குடி மதிலழகுன்னுதானே இருக்கு! திருவிடைமருதூருமா?

பொதுவா கோவில் மதிலை வெளியே இருந்தே பார்க்கலாமே......


மண்டபத்தில் ஒரு இடத்தில் சொர்கவாசல் கதவு போல ஒன்னு இருந்தது. அது என்னவாக இருக்குமுன்னு இப்போ யோசனை....

said...

கொடுமுடிப்ரகாரதில் தன நிறைய சுதை சிற்பங்கள் கூடிய பிரகாரம் உண்டு அதுதான் அழகு அதுதான் மூடியே இருக்கு

said...

@ செந்தில்பிரசாத்,

அடுத்தமுறை அவுங்க ஆஃபீஸ் எதாவது இருக்கான்னு பார்த்து அனுமதி வாங்கலாம்

said...

பார்க்க வேண்டிய அருமையான கோயில். பல முறை சென்றுள்ளேன். இக்கோயிலில் சென்ற வாயில் வழி திரும்பக்கூடாது, பிரம்மஹத்தி தோஷம் பிடித்துவிடும் என்பர். அது தொடர்பான சிற்பங்களும் நுழைவாயிலில் வலப்புறம் உள்ளன.

said...

அழகான கோவில். இப்படியான பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் ஒவ்வொன்றிற்கும் செல்ல வேண்டும் என ஆவல் உண்டு. சிவன் அருள் புரியட்டும்....

said...

அருமை சிறப்பு, நன்றி.

said...

மாட்டின் கண்களும் அழகுதான். ஐயமே இல்லை. காளையின் கண்களில் அழகும் ஆண்மையும் இருக்கும். ஆவின் கண்களில் அழகும் அமைதியும் இருக்கும். எருமையின் கண்களுமே அழகுதான். நாமதான் எருமைன்னாலே கருமைன்னு விலக்கி வைக்கிறோம்.

நாய்களோட நன்றியுணர்ச்சிக்கு அளவே கிடையாது. கடவுள் மனிதனைப் படைச்ச பிறகு, இவ்வளவு மட்டமான உயிரினத்தைப் படைச்சிட்டோமேன்னு யோசிச்சாராம். இந்த உயிரினத்துக்கு எதாவது நல்ல உதவி செய்யனும்னு நெனச்சு ரெண்டு கொடுத்தாராம். ஒன்னு தாய். இன்னொன்னு நாய்.

said...

கும்பகோணம் சென்றதில்லை. உங்கள் தரிசனத்தில் இணைந்து மகிழ்ந்தேன்.

said...

அன்பிற்பிரியாளின் புகை படத்தை வெளியிடுங்களேன் !