Wednesday, March 20, 2019

மாதா சரஸ்வதி...... ஷாரதே...... !!!!!(பயணத்தொடர், பகுதி 81 )

இந்தமுறை இன்னும் ஒருநாள் கும்மோணத்துலே தங்கறோம். எல்லாம் என் பிடிவாதத்தினால்தான்.... எப்ப வந்தாலும்  குறிப்பிட்ட சில கோவில்களோடு முடிச்சுக்கிட்டுக் கிளம்பிடறோம்....  மனசுலே இருக்கும் ஒரு சில கோவில்களையாவது  பார்த்துக்கணுமுன்னா  ஒரு ரெண்டுநாள் கூடுதலாத் தங்கத்தானே வேணும்?  அடிச்சுப்பிடிச்சு ஒருநாள் எக்ஸ்ட்ராவாக் கிடைச்சதோ?  இல்லை.... மதுரை ரெஸிடன்ஸி புண்ணியம் கட்டிக்கிச்சு.  அங்கே ஒருநாளைக் கேன்ஸல் பண்ணினதால் இன்றைக்கு என் நாள் :-)

முப்பத்தி மூணு கிமீ போக ஒன்னரை மணி நேரம்  அதிகம் இல்லையோ?  ரோடு அழகு இப்படி... ப்ச்  ....
கூத்தனூர் மஹா சரஸ்வதியம்மன் திருக்கோவில்!  கோவில் வாசலுக்கு ஒரு  அம்பது மீட்டர் இருக்கும்போதே  தகரக்கூரையின் கீழ் ரெண்டு பக்கமும் கடைகள் தொடங்கிருது.
முக்காலும்...  பேனா, பென்ஸில், நோட்டுப்புத்தகம் விற்பனைதான்.  கல்விக் கடவுள் ஆச்சே.....

கோவிலுக்குச் சின்னதா ஒரு மூணு நிலை ராஜகோபுரம்.  இங்கேயும் மேற்கூரைக்கான  ஏற்பாடு நடக்குது. போட்டு முடிச்சுட்டா, ராஜகோபுரம்  நம் கண்பார்வையில் இருந்து மறைஞ்சுரும்..........  ப்ச்...

உள்ளே போறோம்.  கண் எதிரே கருவறையில் தாமரை மலரில் அமர்ந்த திருக்கோலத்தில்  நான்கு கரங்களுடன் ஸேவை சாதிக்கிறாள்!  வலப்பக்கம் மேற்கையில்  அக்ஷரமாலை,  கீழ்க்கை சின்முத்திரை காண்பிக்க, இடப்பக்கம் மேற்கையில் அமிர்த கலசம், கீழ்க்கையில் சுவடியுடன் மடியில் ஒரு வீணை!
அடுத்த பிறவியிலாவது  கல்வியறிவைக்கொடுன்னு வேண்டிக்கலாமான்னு நினைச்சேன். சரின்னுட்டு அடுத்த பிறவி எடுக்கும்படி ஆகிருச்சுன்னா?  இனி...பிறவி வேண்டேன். பிறவி கிடையாதுன்னு பெருமாளே சொல்லிட்டான்.  அதனால்  இந்தப் பிறவியில் எழுத வேண்டிய  பதிவுகளை நல்ல முறையில் எழுதும் அறிவைக்கொடுன்னு மனசார வேண்டிக்கிட்டேன்.  கொஞ்சம்  முன்னாதாகவே ஒரு பதினைஞ்சு வருசத்துக்கு முன்னால் வந்துருக்கணுமோ? 
கோஷ்டத்தில் ப்ரம்மா......

கருவறையைச் சுத்தி ஒரு பிரகாரம். அவ்ளோதான் கோவிலே!  எல்லா இடத்திலும் டைல்ஸ் போட்டு வச்சுருக்காங்க.  இதெல்லாம் ஒரு இருவது முப்பது வருசங்களில்  போட்டுருக்கலாம்.
கோவிலுக்கு வயசுன்னு  ஒரு ஐநூறு முதல் ஆயிரமுன்னு சொல்றாங்க.
(இருக்கும் ஒரே ஒரு பிரகாரத்தை நல்லா சுத்தமா, நீட்டா வச்சுக்கக்கூடாதா?  )

புலவர் ஒட்டக்கூத்தர் காலம் என்ன?   ராஜராஜ சோழன் இவருக்கு ஒரு ஊரை மான்யமாக் கொடுத்தாருன்னும்,  அதனால் ஊருக்குக் கூத்தனூர் என்ற பெயரும் வந்ததுன்னும்  ஒரு தகவல் உலவிக்கிட்டு இருக்கு!

சரஸ்வதிக்குன்னு தனிக்கோவில் இருப்பது  தமிழ்நாட்டுலேயே இங்கே மட்டும்தானாம்!   நிறைய கோவில்களில் சரஸ்வதிக்குன்னு சந்நிதிகள் இருப்பதைக் கணக்கில் எடுக்கலை, கேட்டோ !  இதைப்போலவே  பலகோவில்களில் கோஷ்டத்தில் ப்ரம்மா இருந்தாலும், தனிக்கோவிலாத் தமிழ்நாட்டில் இல்லை.  திருப்பட்டூர் கோவிலில் பிரம்மாவும்  முக்கியமானவராக இருக்கார் என்றாலும் கோவில் அவருக்கு மட்டுமானது இல்லையே...  ராஜஸ்தான் புஷ்கர் நகரில் மட்டும்தான் ப்ரம்மாவுக்குத் தனிக்கோவில் இருக்கு. அவரை நாம் நம்ம ராஜஸ்தான் பயணத்தில் பார்த்துருக்கோம். நினைவிருக்கோ?

இந்தக் கணக்கில் புருஷனுக்கும் மனைவிக்கும்  தனிக்கோவில்  ஆளுக்கு ஒன்னுதான். அதுவும் வடக்கில் ஒன்னு, தெற்கில் ஒன்னு :-)  அது ஒரு கோடி, இது ஒரு கோடி.......

சத்யலோகத்தில் (ப்ரம்மாவின் இருப்பிடம்! ) கணவனும் மனைவியுமா உக்கார்ந்து ஒருநாள் பேசிக்கிட்டு இருக்காங்க. பேச்சுப்போனபோக்கில் வாக்குவாதம் வந்துருது....எல்லாம் யார் வல்லவன்/ள் னுதான்....  மொத்தத்துலே ஈகோ  க்ளாஷ்...

இதைத்தான் சண்டைன்னுது சனம் ....  கணவன் மனைவிக்குள் சண்டையாம். ரொம்ப சண்டை போட்டுக்கறாங்க. குடும்பத்துலே எப்பப் பார்த்தாலும் சண்டை.   ஒத்துமையே இல்லைன்னு சொல்லும்...ஊர்.   ஆனால் இந்தச் சண்டையே போடாத  கணவன் மனைவி  பூலோகத்திலும் இல்லை,   ஈரேழுலகங்களிலும்கூட   இல்லைன்னு இப்பத் தெரிஞ்சு போச்சு பாருங்க  இவுங்களால்... 

பேச்சு தடிச்சுப்போய்  ரெண்டுபேரும் ஒருவரை ஒருவர்  சபிச்சுடறாங்க. சாபம் கிடைச்சதும்....... பூலோகத்தில் வந்து ஒரே வீட்டில் அண்ணன் தங்கையாப் பிறந்துடறாங்க.......

(சாபம் கூடச் சரியா விடத்தெரியலை பாருங்க...!  என்னத்தை ஈகோ வேண்டிக்கிடக்கு?  ஒருத்தர் கோபத்துலே சொன்ன வார்த்தையை இன்னொருத்தர் ரிபீட் பண்ணி இருக்காங்க போல . காப்பிக் கேட்... )

வளர்ந்து பெரியவங்களானதும், தாய் தகப்பன்  இவுங்களுக்கேத்த  ஜோடிகளைத் தேட ஆரம்பிக்கறாங்க. அப்பதான் இவுங்க ரெண்டு பேருக்கும்  தாங்கள் யார் என்ற  உண்மை விவரம்   புத்தியில் உரைக்குது.  அடடா.....   நம்மை வேறொருத்தருக்குக் கல்யாணம் கட்டிக்கொடுத்துருவாங்க போல இருக்கே....  நாமேதான் ஜோடி என்றாலும், அண்ணன் தங்கையா பொறந்து தொலைச்சுட்டோமே....  ப்ச்....

(ஒரு  அத்தை பொண், மாமன் பையனாப் பொறந்துருக்கக்கூடாது?  உறவுக்குள்ளே கல்யாணம்னு செஞ்சுக்கிட்டு இருக்கலாமுல்லே? )

இப்ப என்ன ஆயிருச்சுன்னா.... இவுங்க வேறொருத்தரைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது. அண்ணன் தங்கையா பிறப்பெடுத்ததால் தங்களுக்குள்ளும் கல்யாணம்  செஞ்சுக்க முடியாது.  நியதின்னு ஒன்னு இருக்குல்லெ...

தர்மசங்கடமாப் போச்சேன்னு முழிக்கிறாங்க.  பேசாம, பூலோக வாழ்க்கையை விட்டுட்டுக் கிளம்பி இருக்கலாம்.  சிவனிடம் போய்  தீர்ப்பு சொல்லக் கேட்டதும், அவரும்....  'ஆமாமா..... இப்ப இருக்கும் உறவு முறையில் கல்யாணம் பண்ணிக்கிட்டால் அது சமூக விரோதச் செயல். க்ரைம். உள்ளே தூக்கி போட்டுருவாங்க.  அதனாலே....   ப்ரம்மனே... நீ இல்லாததால்  படைப்புத் தொழிலுக்கு அங்கே ஆளில்லாம ஏற்கெனவே  கஷ்டம்.  பேசாமக் கிளம்பிப்போய் உன் உத்யோகத்தை ஒழுங்காச் செய்.'

'சரஸ்வதிப் பொண்ணே .....  நீ என்ன பண்ணறேன்னா.... பூலோகத்துலேயே தங்கி இம்மக்களுக்குக் கொஞ்சம் கல்வி அறிவைக் கொடுத்துக்கிட்டு இருந்துரு'ன்னு தீர்ப்பு சொல்லிட்டார்.  அதுதான் சரவஸ்வதியம்மன் இங்கே கோவில் கொண்ட 'வரலாறு' !

(சொன்ன தீர்ப்பின்படி நடக்கலைன்றது வேற விஷயம். பலருக்குக் கல்வி மட்டும் கொடுத்துட்டு அறிவைக் கொடுக்கலை பாருங்க.....  படிப்பு வேறு, அறிவு வேறு!!! )

கணவனும் மனைவியும் வெவ்வேற லோகத்தில் இருந்தால் சண்டையே வராதுன்னு என்னமா  கணிச்சுருக்கார் பாருங்களேன், நம்ம சிவன் !!!
இப்பெல்லாம் வெவ்வேற நாடுகளில் இருந்தாலும் ஸ்கைப், வாட்ஸப் மூலமெல்லாம்  சண்டை போட்டுக்கற அளவுக்கு முன்னேறி இருக்கோம்.  மனுஷன் லேசுப்பட்டவனா?  இதெல்லாம் கூட  வித்யா ரூபிணி சரஸ்வதி   மனுசனுக்குக் கொடுத்தக் கல்வியறிவை வச்சுக் கண்டு புடிச்சதுதானே :-)

விஜயதசமி சமயம் கூட்டம் அப்படி வருமாம்  இந்தக் கோவிலுக்கு!  அக்ஷராப்யாஸம்தான் காரணம்! மற்ற நாட்களில்  சுமாராத்தான் மக்கள் வருகைன்னு  ஒரு கடைக்காரம்மாவோடு பேசுனதில் தெரிஞ்சது.
ஒரு கடையில்  ரொம்பவே அழகழகான பொம்மைகள்  வச்சுருக்காங்க. எடைப் பிரச்சனை காரணம் ஒன்னும் வாங்கிக்கலை.....
காலை ஆறுமுதல் பகல் பனிரெண்டு,  அப்புறம் மாலை நாலு முதல் ஒன்பதுவரை கோவில் திறந்துதான் இருக்குமாம்.
முப்பெரும் தேவியருக்கான நவராத்ரி விழாக்களில்  ஷாரதா நவராத்ரியும், வஸந்த நவராத்ரியும்  இங்கே சிறப்பாகக் கொண்டாடறாங்களாம்!  ஆமாம்.....   வருசத்துலே  மொத்தம் நாலு நவராத்ரிகள் இருக்குன்னு தெரியுமோ?
ஆடி அமாவாசைக்கு மறுநாள் வராஹி நவராத்ரி,  புரட்டாசி அமாவாசைக்கு மறுநாள் ஷாரதா நவராத்ரி  (இதைத்தான்  தென் இந்தியாவில் கொலு வச்சுச் சிறப்பாக் கொண்டாடறோம்.)

தை அமாவாசைக்கு மறுநாள் ஷ்யாமளா நவராத்ரி, பங்குனி அமாவாசைக்கு மறுநாள்  வஸந்த நவராத்ரினு  இருக்கு.  என்னுடைய வட இந்தியத் தோழி ஒருவர் இந்த நான்கு நவராத்ரிகளிலும் விரதம் இருப்பாங்க !


 இதுவரை வரணுமுன்னு  ரொம்பநாளா  நினைச்சுக்கிட்டே இருந்த கூத்தனூர் சரஸ்வதி கோவிலைத் தரிசனம் செஞ்ச திருப்தியோடு இங்கிருந்து கிளம்பறோம்.

கூடவே வாங்க,  இதுவரை போகாத இன்னுமொரு கோவிலுக்குப் போகலாம். சுவாரஸ்யம் இருக்கு அங்கே !!!
இன்றைக்கு ரொம்பத்தான் சுத்தப்போறோமோ...... 

தொடரும்....... :-)


15 comments:

said...

சரஸ்வதிக்கான கோவில்... சிறப்பாக இருக்கிறது கோவில்.

ஆங்காங்கே சில வரிகளில் நகைச்சுவை... மகிழ்ச்சி.

படங்கள் வழமை போல சிறப்பு. பாராட்டுகள்.

said...

அம்மா அந்த பொம்மை கடை ரொம்ப அழகான பொம்மைகள் இருக்கும் .நாங்களும் கூத்தனுர் போயிருந்தபோது அழகிய சரஸ்வதி பொம்மை வாங்கினோம் கொலு விற்கு பொம்மை அம்சமாக இருந்தது .

said...

பளிங்கு சிலை விலையும் கம்மி

said...

அண்மையில்கூட சரஸ்வதி கோயில் சென்றுவந்தேன். 30 வருடங்களுக்கு முன்பு சென்றதற்கும் தற்போது சென்றுவருவதற்கும் அதிக வித்தியாசம். முழுக்க முழுக்க வணிக நோக்கமே பிரதானமாக..வேதனையாக இருந்தது.

said...

அருமை நன்றி

said...

கடைல, ஓலைச்சுவடின்னு போட்டிருக்கே. சாம்பிளுக்கு நீங்க வாங்கினீங்களா?

said...

விஜயதசமிக்கு அக்ஷரப்யாஸம் அதனால கூட்டம்னு சொல்லிட்டு, சுவாரஸ்யமான தகவல் ஒன்னு விட்டுட்டீங்களே டீச்சர்?

சரஸ்வதிக்கு விஜயதசமி சமயம் கால் நீண்டு வளரும்...
எவ்வளவு நீளம்னா அவள் பாதம் கருவறை படி தாண்டி வெளிய இருக்கும்!
அந்த சமயம் கோவிலுக்கு போகும் பக்தர்கள் நிஜமாவே சரஸ்வதி பாதம் பணியலாம்!

ஜோடனை தான் ஆனாலும் அதன் தாத்பரியம் அழகு!

said...

கூத்தனூர் கோயில் சின்னதுன்னாலும் அழகு. அதிலும் கருவறையும் கலைமகளும் அழகு.

என்னது? ராஜராஜசோழன் கூத்தருக்கு நிலம் கொடுத்தான்னு சொல்றாங்களா? கூத்தர்னு ஒருத்தர் வருங்காலத்தில் வரப்போறான்னு ராஜராஜசோழன் முன்கூட்டியே தெரிஞ்சு கொடுத்தான்னு சொல்லாம விட்டாங்களே.

ஆனா... ராசராசன் கூத்தருக்கு நிலம் கொடுத்திருக்க வாய்ப்பிருக்கு. ஏன்னா... அது இரண்டாம் ராசராசன். இரண்டாம் குலோத்துங்கனின் மகன். மூன்றாம் இராசராச சோழன்னும் பின்னாளில் ஒரு மன்னன் உண்டு. பலப்பல ஔவையார்கள் இருக்க... எல்லாக் கதைகளையும் ஒரே ஔவையார் மேல ஏத்துன மாதிரி, பலப்பல ராசராசன்கள் இருக்க, எல்லாத்தையும் ஒரே ராசராசன் மேல ஏத்திருவாங்கன்னு நெனைக்கிறேன்.

அதெல்லாம் சரி... கூத்தனூர் போய் பேனா பென்சில் எதாவது வாங்குனீங்களா?

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

வருகைக்கு நன்றி. விரைவில் உங்களுக்கு இப்பயணம் அமையட்டும்!

said...

வாங்க செந்தில்பிரசாத்.

அழகுதான். ஆனாலும் வெயிட் பிரச்சனை இருப்பதால்தான் வாங்கிக்கலை. இவ்ளோ தூரம் கொண்டு வர்றதும் சிரமம்தான். விலை நான் கேக்கவே இல்லை....

கனமில்லாதா பேப்பர்மேஷின்னா கொஞ்சம் பரவாயில்லை.....

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா,

எல்லாக் கோவில்களும்தான் இப்படி வியாபாரமா ஆகிக்கிடக்கு...... கார்பார்க் செய்யறது முதல் காசுதான்.....

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி!

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

ஓலைச்சுவடி எல்லாம் இங்கே கொண்டுவர முடியாது. அதை ஃப்யூமிகேட் பண்ணனும். அதுக்கும் பயங்கர செலவுதான்.

said...

வாங்க ரமேஷ்,

எப்படி இருக்கீங்க? நலம்தானே?

அந்தக் கால் சமாச்சாரம் இதுவரை தெரியாமல் போச்சே..... சுவாரஸ்யமான தகவல்!

தொட்டுக்கும்பிட்டு வரலாம்!!!

நன்றி!

said...

வாங்க ஜிரா,

அரசர் புலவர் இது ரெண்டும் சரியாச் சொல்லிட்டாங்களே! முதலா, மூணாவதான்னு யார் கேக்கப்போறாங்கன்ற நினைப்புதான்....

ஒன்னும் வாங்கிக்கலை. வாங்கி இருக்கலாமோ..... ப்ச்...