Monday, March 11, 2019

ராம ராம ராம !!!!!(பயணத்தொடர், பகுதி 77 )

திரு இந்தளூரில் இருந்து கிளம்பி சீர்காழி கும்பகோணம் நெடுஞ்சாலை வழியே  முக்கால் மணி நேரப் பயணத்தில்  கோவிந்தபுரம் வந்துட்டோம்.  மூளையில் போட்டுவச்ச முடிச்சு, சரியா ஞாபகப்படுத்தியிருக்கு :-)
ஸ்ரீ பகவன் நாம போதேந்திராள் ஸ்வாமியின் அதிஷ்டானம், வேதபாடசாலை இருக்கும் மடம் இது.
ஸ்ரீ ராமநாமமே முக்கியமான மந்த்ரம் !
நியூஸி நண்பர் ஒருவரின் பெற்றோர்  நியூஸிக்கு வந்துருந்த ஒரு சமயத்தில் (அது ஆச்சு ஒரு பதினெட்டு, பத்தொன்பது  வருஷம்..... ) கோவிந்தபுரம் பாடசாலையைப் பற்றிச் சொன்னார்கள்.  எனக்கென்னமோ சட்னு மனசுக்குப் பிடிச்சுப் போச்சு.  ஒருவேளை 'அம்மா வந்தாளின்' தாக்கமோ?  இருக்கலாம்.  

எனக்கு இப்படி வேதம் பயிலும் சிறுவர்களை ரொம்பவே பிடிக்கும். கம்ப்யூட்டர் படிக்கணும், அமெரிக்கா போகணும்னு  பெரும்பாலும் நினைக்கும் நம்ம மக்களிடையே....  இப்படிப் பிள்ளைகளை சாமிக்கே தத்துக் கொடுத்ததுபோல  வேதபாடசாலைக்கு  அனுப்பும் பெற்றோர்களை  எவ்ளோ வணங்கினாலும் தகும்.

அப்புறம் கொஞ்சநாள்  கழிச்சு,  மனசு சொல்லிய ஒரு நாளில் ஒரு தொகையை கணேசன் மாமாவிடம் (நண்பரின் தந்தை ) கொடுத்து அந்தப் பாடசாலையில் சேர்ப்பித்து விடணுமுன்னு கேட்டுக்கிட்டேன். அப்புறம் அதை மறந்தும் போனேன்.
திடீர்னு ஒருநாள்  இந்தியாவிலிருந்து ஒரு கடிதம்!  ஸ்ரீமடத்திலிருந்து அனுப்பி இருக்காங்க. ரசீது, பிரஸாதம், கூடவே ஒரு குட்டிப் புத்தகம். ஸ்ரீ பகவன் நாம போதேந்த்ராள் வாழ்க்கை வரலாறு! (திவ்ய சரித்திரச் சுருக்கம்)
அதையே நான் இன்னும் சுருக்கமாச் சொல்லணுமுன்னா.... (!!!) இப்படி....  ரொம்ப லைட்டாத்தான் துள்ஸீ'ஸ் மசாலா தூவி இருக்கேன்  :-)

காஞ்சிபுரத்தில் வசிக்கும் மோஹன பாண்டுரங்கன், தன் மனைவி சுகுணாவுடன் சங்கர மடத்திற்குப்போய் அவுங்களுக்குக் குழந்தை இல்லை என்ற மனக்குறையை அப்போ அங்கே  மடாதிபதியா இருந்த ஸ்ரீ ஆத்ம போதேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகளிடம் (அம்பத்தியெட்டாம் பட்டம்)  சொல்லிக் குழந்தையில்லா தம்பதியர்  என்ற  அவச்சொல்லை நீக்கணுமுன்னு வேண்டிக்கறாங்க.  அவரும் 'காமாக்ஷி உங்க குறையைத் தீர்த்துவைப்பாள்'னு  ஆசி வழங்கறார்.

கொஞ்ச காலத்துக்குப்பின் சுகுணா தாய்மை அடைஞ்சு ஒரு மகனைப் பெற்றெடுத்தாங்க. புருஷோத்தமன் என்ற பெயருக்கேத்தாப்ல குழந்தை நல்ல ஒழுக்கமான பையனாகவும், சூட்டிகையாகவும் இருக்கான். அவனுக்கு உபநயனம் செய்யும் காலம் வந்ததும், மடத்துக்குக் கூட்டி வர்றாங்க.

பையனுடைய தேஜஸ் பார்த்துட்டு,  மடாதிபதி குழந்தையை மடத்துக்குத் தரும்படி கேட்டதும், பெற்ற மனம் கொஞ்சம்  தடுமாறினாலும்,  இதுவே இறைவன் அருள்னு சம்மதிச்சுடறாங்க.

மடத்துலேயே உபநயனம் நடத்தி, வேதம் வேதாந்த சாஸ்த்திரம் எல்லாம்  முறைப்படிச் சொல்லிக் கொடுத்துடறாங்க.  அந்த சமயம்,  வேதபாடசாலையில் கூடவே படிக்கும் ஞானஸாகரன் என்ற மற்றொரு சிறுவனுடன் நட்பு ஏற்படுது.  ரெண்டுபேரும்  ஜிக்ரி தோஸ்த்!

மடாதிபதி ஸ்ரீ ஆத்ம போதேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள், காசி யாத்திரை போனவர் அங்கே காசியிலேயே தங்கிடறார். அந்தக் காலத்தில் இப்படி யாத்திரை போறவங்க  அங்கே  சில மாசங்கள், வருசங்கள் தங்கி இருந்து  கோவில் தரிசனம், தியானம்,  செய்ய வேண்டிய கர்மாக்கள் இப்படி எல்லாத்தையும் நின்னு நிதானமாத்தான் செஞ்சுட்டு ஊர் திரும்புவாங்க.  குருவை சந்திக்க ரெண்டு பேரும்  (புருஷோத்தமனும், ஞானஸாகரனும்) காசிக்குக் கிளம்பிப் போறாங்க.

இப்போ மாதிரி பயண வசதிகள் எல்லாம் அந்தக் காலத்தில் ஏது?  ஒரு வாரப் பயணமா நாம் காசிக்குப் போயிட்டு வந்துடறோம் இப்பெல்லாம்!  காட்டுவழியில் நடைதான். போனவர் திரும்பி வந்தால் அதொரு  அதிசயம்!!  காசிக்குப்போய் வந்தவர்களை ஊர்சனம் முழுக்கக் கொண்டாடி வணங்குன காலம் அது!

மொதல்லே பத்திரமாக் காசிக்குப் போய்ச் சேருவோமான்னு கூடத் தெரியாதே....  'போறவழியில்  நம்மில் யாராவது ஒருவர், சாமிகிட்டே போனால், பிழைச்சுருப்பவர்  போனவருக்கு ஈமக்கடன் செஞ்சுட்டுக் காசிக்குப்போய்  கங்கையில் விழுந்து உயிரை விடணும்.  மேலோகத்தில் போய் அங்கே  நாமிருவரும் நம்ம நட்பைத் தொடரலாமு'ன்னு பேசி வச்சுக்கிட்டாங்க.

பயணத்தில், ஞானஸாகரன், கடுமையான காய்ச்சல் வந்து சாமிகிட்டேயே போகும்படி ஆச்சு.  பேசிவச்சுக்கிட்டதைப் போலவே  சவத்தை எரிச்சுட்டுக் காசிக்குப்போய்ச் சேர்ந்த புருஷோத்தமன்,  குரு ஸ்வாமியைத் தேடிச் சந்திச்சு நடந்ததைச் சொல்லி,  கங்கையில்  மூழ்கி உயிரை விடப்போறேன்னு கிளம்பும்போது......  குருஜி அதைத் தடுத்து நிறுத்திட்டு, 'சந்யாசம்  வாங்கிகோ. அது மறு ஜென்மம் எடுத்ததுக்கு சமம்' னு உபதேசிக்க அப்படியே ஆச்சு.

சந்யாசம் கொடுத்ததும் .... பூர்வாஸ்ரமப்பெயர் புருஷோத்தமன் என்றது போய், ஸ்ரீ பகவன்நாம போதேந்த்ர சரஸ்வதின்னு தீக்ஷை நாமம்  கிடைச்சது.

காஞ்சிபுரத்துக்குத் திரும்பிப்போகச் சொன்ன  குரு, போற வழியில் பூரி ஜகந்நாதம் போய் லக்ஷ்மிதரக் கவி என்ற மஹான் எழுதிய  நாமகௌமுதி என்ற க்ரந்தத்தைச் சேகரிச்சுக்கிட்டு போகும்படிச் சொன்னார்.  பின்னால் அவர் வந்து சேர்ந்ததும்,   மக்களுக்கு நாமப்பிரச்சாரம்  தொடங்கி வச்சு பஜனை மார்க்கத்தைக் காட்டலாமாம்.

குருவின் ஆக்ஞைப்படியே இவர் பூரி ஜகந்நாதம் போய்ச் சேர்ந்தார். வீட்டை விசாரிச்சுக்கிட்டுப் போகும்போதே இருட்டி ரொம்ப நேரமாகி இருக்கு!  நடுச்சாமத்துலேக்  கதவைத்தட்டி யாரையும் படுத்த வேணாமேன்னு, வாசத் திண்ணையிலேயே இவரும் படுத்துக்கறார்.

 இப்படித் தெருவில் போறவர்ற சனமும், யாத்திரைக்காரர்களும் உக்கார்ந்து கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கவே அந்தக் கால வீடுகளில் திண்ணைகள் கட்டி விட்டுருப்பாங்க. வீட்டு மனிதர்கள் உட்கார்ந்து தெருவை வேடிக்கை பார்க்க, குழந்தைகள் விளையாடன்னு எத்தனை எத்தனை  உபயோகம் பாருங்க  இந்த திண்ணைகளுக்கு.....  ஹும்... இப்பதான்  திண்ணையே அருகிப்போச்சே.....

இதெல்லாம் நடக்கும் சமயம், லக்ஷ்மிதரக்கவியின் காலம் முடிஞ்சு அவர் மகன் ஜகந்நாதப் பண்டிதரின்  காலம் நடந்துக்கிட்டு இருக்கு!

இது இப்படி இருக்க.... பாரதத்தின் தென்பகுதியில் இருந்து ஒரு தம்பதிகள் காசியாத்திரைக்குக் கிளம்பிப்போய்க்கிட்டு இருக்காங்க. எதோ ஒரு கிராமத்தில்  இரவு தங்கி, நடந்து வந்த களைப்பால் அயர்ந்து தூங்கும் சமயம், வேற்றுமத ஆள் ஒருவன்,  அந்தப் பெண்மணியின் வாயைக் கட்டிக் கத்த முடியாமல் செஞ்சு தூக்கிக்கிட்டு ஓடிட்டான்.  காலையில் கண் முழிச்சுப் பார்த்த கணவனுக்கு  மனைவியைக் காணோம் என்ற அதிர்ச்சி.  ஊர் சனமும் விவரம் ஒன்னும் தெரியாதுன்னுருது.

மனைவியைத் தேடிப்பார்த்துக் கிடைக்காமல் அந்தக் கவலையோடவே நடைப்பயணத்தைத் தொடர்ந்த  கணவன், காசிக்குப்போய் கங்கையில் முழுக்கு போட்டு மனசைச் சமாதானப்படுத்திக்கிட்டு  ஊர் திரும்பறான்.  வழியில் வேற ஒரு ஊர் குளத்தங்கரையில்  சாயங்காலம் அனுஷ்டானத்தை முடிச்சுக்கிட்டுக் கிளம்பும்போது,  'வேற்றுமதத்தினரின் உடை' அணிஞ்ச ஒரு பெண், குளத்தில் தண்ணி எடுக்க வந்தவள்,  இவரைப் பார்த்ததும் குடத்தைக் கீழே போட்டுட்டு ஓடிவந்து காலில் விழுந்து அழறாள்.  யார்றா இதுன்னு பார்த்தால்.... அவருடைய மனைவி!

நடந்ததைச் சொல்லி அழுதவள்,  'வேற யாரும் வருமுன் நாம் இங்கிருந்து தப்பிக்கணும். என்னை 'நம்ம'  வீட்டுக்குக் கூட்டிப் போயிருங்க. மனைவியா இருக்க அருகதை இல்லைன்னாலும் ஒரு வேலைக்காரியா உங்களோடு இருக்கறேன்'னு  சொன்னதும் ரெண்டுபேரும் காட்டுக்குள் புகுந்து  ஒளிஞ்சு ஓடறாங்க.  கடைசியில் அவுங்க வந்து சேர்ந்த ஊர்  இந்தப் பூரிஜகந்நாதம்தான்.

தர்மசாஸ்திரம் தெரிஞ்ச யாராவது, பலகாலம்  வேறொருவனால்  கெடுக்கப்பட்டு அடிமையா இருந்த  ஸ்த்ரீக்கு என்ன நியாயம்  சொல்வாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டு அதன்படி நடக்கலாமுன்னு விசாரிச்சதில், ஜகந்நாத பண்டிதரே தர்ம சாஸ்த்திரம் அறிந்தவர்னு விவரம் கிடைச்சது.

நடுராத்ரியானாலும் பரவாயில்லைன்னு  அவுங்க வந்து வீட்டுக் கதவைத் தட்டினதும்,  இந்நேரத்தில் யாருன்ற கேள்வியோடு கதவைத் திறக்கிறார் ஜகந்நாத பண்டிதர்.
நடந்ததைச் சொல்லி அழுதவரிடம்,  'அந்தம்மா 'ராமா ராமா ராமா'ன்னு மூணு முறை  சொன்னதும், சேர்த்து  வச்சுக்குங்க'ன்னார்.

இதைக் கேட்டு வீட்டுக்குள் இருந்து ஓடிவந்த  ஜகந்நாதரின் தாய், 'என்னப்பா இப்படிச் சொல்லிட்டாய்?  ராம நாமத்தின்  மஹிமையைக் குறைத்து சொல்வானேன்? எப்பேர்ப்பட்ட பாவத்துக்கும் பிராயச்சித்தமாய் 'ராமா'ன்னு ஒரு முறை சொன்னால் போதுமுன்னு உன் தந்தை சொல்லி இருக்காரே.... அப்படி இருக்க எதுக்கு மூன்று முறை?'  ன்னு கடிந்து கொள்ள, இதையெல்லாம் திண்ணையில் இருந்தபடி பார்த்துக்கிட்டு இருந்த   பகவன் நாம ப்ரம்மேந்த்ரர் ,  அவர்களை வணங்கி  'நீங்கள் சொன்ன பிராயச்சித்தம் அருமை. அதுக்கு ஏதாவது ஆதாரம் உண்டோ'ன்னு கேட்க,  ஜகந்நாத பண்டிதர் சொல்றார், 'என் தந்தை எழுதிய பகவந்நாம கௌமுதி என்ற  க்ரந்தமே  ஆதாரம்தான்' !

'ஆஹா.... அதைத் தேடித்தான்  தான் இங்கே  வந்ததென்ற ' விவரத்தை இவர் சொல்ல,   ஜகந்நாத பண்டிதருக்கும் வியப்பே!  உள்ளே போய் க்ரந்தச்சுவடியைக் கொண்டு வர்றார்.  அதே திண்ணையில் அமர்ந்து, எண்ணெய் விளக்கு  வெளிச்சத்தில், முழு க்ரந்தத்தையும்  வாசிச்சு மனசில் பதித்தவர், சுவடிகளைத் திருப்பிக் கொடுத்துடறார்.

சாஸ்த்ரம் சத்தியமானாலும், ஊர் உலகம் ஒப்புக்கொள்ளாதே..... சாக்ஷாத் சீதா தேவியையே பழிச்சுப்பேசலையா? ராம நாம மஹிமையை  உலகத்துக்கு உணர்த்த இதுவே நல்ல தருணம்.

' தர்ம சாஸ்த்திரம் தெரிஞ்சுக்க வந்த  கணவனும் மனைவியும் பொழுது விடிஞ்சதும் பிராயச்சித்தம் செய்யலாம். ராம நாமம்  சொல்லி  இதே உடையுடன் மனைவி  திருக்குளத்தில் முங்கி எழுந்து  வரணும்.   அப்படி முங்கி வெளியில் வரும்போது  அன்னிய வேஷம் மறைஞ்சு, ஹிந்து சுமங்கலியாக வெளிப்பட்டால் இவள் பரிசுத்தமானவள் என்று  உலகம் அறியட்டும் !' என்றார்.

இதுக்குள்ளே சேதியைக் கேள்விப்பட்ட  ஊர்சனம் குளக்கரையில் கூடி இருக்கு!  அந்த அம்மாள், தன் கணவரையும் குருதேவரையும் கும்பிட்டு, நம்பிக்கையோடு ராமான்னு கூவி, குளத்துக்குள் முங்கி வெளியில் வந்தாங்க.  ஹிந்துப்பெண்மணியின் உடையில்  நெத்திக் குங்குமத்தோடு வெளிவந்த  அற்புதத்தைக் கண்ட ஊர்சனம் வாயடைச்சு நின்னது! ராம நாமத்துக்கு இவ்வளவு சக்தியா?  எங்கோ ஒரு குரல் ராமான்னு  கூவிய மாத்ரம்,  மொத்த சனமும் ஒரே குரலில் ராமா ராமான்னு ஜெபிக்கத் தொடங்குச்சு!

அந்த அம்மாவையே சமையல் செய்யச் சொல்லி, பிக்ஷை ஏத்துக்கிட்டு ஸ்வாமிஜி, கிளம்பினார்.  காஞ்சிபுரம் வந்து சேர்ந்ததும், குருவின் ஆணைப்படி, பகவந் நாமரஸாயனம், பகவன் நாம ரஸோதயம், நமாம்ருத ரஸார்ணவம், ஹரிஹர பேத திக்காரம், ஹரிஹராத்வைத பூஷணம், நாமாம்ருத சூர்யோதயம், நாமாமிர்த  தரங்கம், மூர்த்த ப்ரம்ஹ விவேகம் என்ற எட்டு க்ரந்தங்களை அருளிச்செய்தார். ஸ்ரீ ஆத்ம போதேந்த்ர குருஜியும் காசியில் இருந்து திரும்பிவந்து  மேற்படி க்ரந்தங்களை கடாக்ஷித்து,  சகல ஜனங்களுக்கும் தாரக மந்த்ர தீக்ஷையளித்து உத்தாரணம் செய்யும்படி  உபதேசித்தார்.

கொஞ்சநாட்களில் ஸ்ரீ பகவன்நாம போதேந்த்ரரை,  மடாதிபதியாக (அம்பத்தியொன்பதாம் பீடம் ) பட்டாபிஷேகம்  செய்தபின் உலக வாழ்வை நீத்தார்! (விதேஹ  கைவல்யமடைந்து ப்ரம்ஹீபூதரானார்)

இதெல்லாம்   ஏதோ புராணகாலத்தில் நடந்ததுன்னு நினைக்க வேணாம். எல்லாம் ஒரு நானூறு வருஷங்களுக்கு முன் நடந்தவைதான்!

58  ஆம்  பட்டமான  ஸ்ரீ ஆத்ம போதேந்த்ர சரஸ்வதி  அவர்களின் காலம் கிபி. 1586 முதல் 1638 வரை.

59 ஆம் பட்டமான ஸ்ரீ பகவன்நாம போதேந்த்ர சரஸ்வதி  அவர்களின் காலம்  கிபி 1638 முதல் 1692 வரை.

நம்ம மஹா பெரியவா 68 ஆம் பட்டம். கி பி 1907 முதல் 1994 வரை.

இதெல்லாம் இவர்கள் பீடாதிபதியாக இருந்த  ஆண்டுகள். தற்சமயம் பீடாதிபதியாக இருப்பவர் 70 ஆம் பட்டம். ஸ்ரீ விஜயேந்த்ர சரஸ்வதி. 

ஸ்ரீ பகவன்நாம போதேந்த்ர சரஸ்வதி,  ராம நாம கீர்த்தியை தக்ஷிணதேசமெல்லாம்  ப்ரச்சாரம் செய்து,  1692 ஆம்  ஆண்டு இங்கே ஜீவசமாதியில் எழுந்தருளிட்டார். இந்த அதிஷ்டானம்தான் இங்கே!
பொதுவான கோவில்கள் போல் இல்லாமல்  முகப்பில் மட்டும்  ஸ்ரீ ராமர் & கோ சுதைச்சிற்பங்களுடன்  பெரிய மண்டபம். ராமநாம ஸித்தாந்த மண்டபம்!  உள்ளே  போகறதுக்கு முன்னாலேயே கண்ணுக்கு நேரா நம்ம ஆஞ்சி!    பூஜை நடந்துக்கிட்டு இருக்கு!  நாமும் நல்லாவே தரிசனம் பண்ணிக்கிட்டோம். ராம நாமம் ஜெபிக்கறதில் நம்பர் ஒன் இவர்தானே!
(இதை எழுதும்போது எனக்கென்ன தோணுச்சுன்னா.....  ஆதிசங்கரரின் அத்வைதம் எப்பேர்ப்பட்டதுன்ற வியப்புதான்! எதுவுமே தனித்தனி இல்லை.... எல்லாமே ஒன்னு..... சங்கர மடத்தில் ப்ரதானம் சிவன் ஸ்ரீ சந்த்ரமௌலீஸ்வரர் இல்லையோ?  எப்படி ராமனுக்கு இவ்ளோ  இடம்னு!  உண்மையாக ஹரியும் சிவனும் ஒன்னுன்னு இருப்பது  சைவத்தைக் கடைப்பிடிக்கறவங்கதான்  ....போல!  பொதுவா விஷ்ணு கோவில்களில் சிவன் சந்நிதி தனியா இருக்கறது அபூர்வம் இல்லையோ.....  வீடுகளில் கூட அந்தக் காலத்தில்  எங்க அம்மம்மா போன்றவர்கள்  'மறந்தும் புறம் தொழாள்'  வகைதான்...   பரந்த மனசு இல்லைன்னு  இப்போ எனக்குப்படுது....)
மண்டபத்தின் அந்தாண்டைப் பக்கம் இன்னொரு  மண்டபம் போல....   அங்கேதான் நம்ம ஸ்ரீ பகவன் நாம போதேந்த்ராள் அதிஷ்டானம்.  சின்னதா இருக்கும் தடுப்பு மூடி இருக்கு. காலை ஆறுமுதல் பதினொன்னரை வரைதான் உள்ளே போக  அனுமதி.  மணியைப் பார்த்தேன்.... இன்னும் பத்து நிமிட் இருக்குதான்.  ஆனாலும்.....    ட்யூட்டியில் ஒரே  ஒரு பட்டர்தான்  போல........  அவரும் ஆஞ்சி சந்நிதியில் பிஸியா இருக்கார்.
நமக்கு  இங்கிருந்தே தரிசனம் ஆச்சு....
மாலை நாலுமுதல் எட்டுவரையும் தரிசனம் உண்டு.  அதுவரை காத்திருக்க  நமக்கு இப்போதைக்கு  இயலாது.....
அடுத்து இன்னொரு கோவிலுக்கும்  போறோம். அதுவும்  கும்மோணத்தில் இருந்து  இவ்ளோ கிட்டன்னு இப்பத்தான் தெரிஞ்சது.

படங்கள் எடுக்க  அனுமதி வாங்கிக்கலாமுன்னா....   ஆஃபீஸ் போல இருக்கும் முன்வாசலில் யாரும் இல்லை....  அதனால்  கிடைச்சவரை சில க்ளிக்ஸ் மட்டும்தான்.  அடுத்தமுறையில் லபிக்க அவனருள் செய்யணும்.

கோவில் போல் கோபுரம் இருக்கான்னு  கவனிக்கலையேன்னு  இப்ப ஒரு கவலை....

தொடரும்....... :-)

4 comments:

said...

சிறப்பான அதிஷ்டானம்.... எத்தனை எத்தனை பாடல்களை இவர் இயற்றி இருக்கிறார். பஜன் சம்பிரதாயத்தில் இவரது பல பாடல்கள் உண்டு.

உங்கள் மூலம் நாங்களும் இங்கே சென்று வந்த உணர்வு. நன்றி.

said...

நம் வலைப் பதிவர் அப்பாதுரையின் ஊர் என்று சொன்னதாக நினைவு

said...

அருமை நன்றி

said...

பகவன் நாம போதேந்திராளின் சரிதம் விளக்கப்பட்ட விதம் அருமை.!