Wednesday, March 06, 2019

விண்ணை முட்டும் பெருமாள் !!!!!(பயணத்தொடர், பகுதி 75 )

ரெண்டுமுறை மாயூரம் போயும்  நம்ம வானமுட்டிப் பெருமாளை விட்டுருக்கோம்.... ப்ச்.....    நாளைக்கு முதல் விஸிட் கோழிக்குத்திக்குதான்னு கிளம்பிய  நாம் ....  வழியில்   விட்டலனை தரிசனம் செஞ்சுட்டு, இதோ வானமுட்டியை தரிசிக்கப்போய்க்கிட்டு இருக்கோம். நெரூர் தாண்டிட்டோமுன்னு கொஞ்ச நேரத்துக்கப்புறம்தான் புரிஞ்சது.  அடடா.....  திரும்பி வரும்போது கட்டாயம் .....  மூளையில் முடிச்சு.
அதிக தூரம் ஒன்னுமில்லை. விட்டலன் கோவிலில் இருந்து சுமார் இருபத்தியொரு கிமீ. முப்பத்தைஞ்சு நிமிட்டில் கோவில் வாசலுக்கு வந்து சேர்ந்தாச்சு! சிம்பிளா ஒரு மூணுநிலை ராஜ கோபுர வாசலில்  வாழைமரம்,மாவிலை தோரணம்னு இருக்கு!  எதோ விசேஷமோன்னு நினைச்சுக்கிட்டே உள்ளே போனோம்.
ரொம்பச் சரி. பவித்ரோத்ஸவம், நேற்று, இன்று நாளைன்னு மூணுநாள் விழா!  வாத்யகோஷ்டியினர், வாசிக்கத்தயாரா இருக்காங்க!

பலிபீடம், மின்னும் கொடிமரம், கண்ணுக்கு நேரா மூலவர்  அதோ.... அங்கே தெரிஞ்சார்.  கருவறை இருட்டில்  மின்னும் திருமண்!

கோடிப்பாவங்கள் செய்திருந்தாலும்  அதையெல்லாம் போக்கும் கருணைக்கடல் இங்கிருக்கார்!  கோடிபாபஹத்தி என்ற பெயர்.... காலப்போக்கில் கோழிக்குத்தியாக மாறிக்கிடக்கு!

நாம் கோடிப் பாவம் செஞ்சுருக்கமா என்ன?  இருக்கலாம். இருக்கும். நடந்து போகும்போது நம்மை அறியாமல் ஒரு எறும்பை மிதிச்சுருந்தாலும் அது பாவக்கணக்கில் சேர்ந்துரும். ஆ.....  அதான் சமண சந்யாசிகள் நடக்கும்போது, முன்னால் பெருக்கிக்கிட்டே நடக்கறாங்க ! 
பிப்பலர் என்ற முனிவர், ஒரு சமயம்  சரும நோயால் அவதிப்பட்டுருக்கார். பெருமாளிடம் நோய்நீங்க வேண்டும்போது  ' போன ஜன்மத்தில் உம்மால் ஒரு உயிர் போயிருக்கு. அதன் காரணமாத்தான் இப்ப நீர் அவதிப்படுகின்றீர்.  காவிரிக் கரையோரமாப் பயணம் போனால் அங்கே ஒரு இடத்தில் உமக்கு வழி காட்டப்படும்.  அதன்படிச் செய்யும்'னு உத்தரவாகி இருக்கு!

அதே மாதிரி இவரும் காவிரிக்கரையோரமாப் போறார். மூவலூர் என்னுமிடத்தில்  ஸ்ரீமார்க்க சகாயேஸ்வரர் கோவில்  கண்ணில் பட்டது. அங்கே போய்  சிவபெருமானையும் நந்தியையும் கும்பிட்டு  எந்த வழியாகப்போகணுமுன்னு  கேட்ட, வடக்குத் திசையில் போகச் சொன்னதும்  அப்படியேன்னு  முனிவர்  வடக்கே போறார்.

போகப்போகக் கொஞ்சதூரத்தில்  ஒரு பெரிய அத்திமரம் கண்ணில் பட, அங்கே போனால், சங்குசக்ரதாரியா  பெருமாள் அந்த மரத்தில்  இவருக்குத் தரிசனம் கொடுக்கறார்.  'பெருமாளே'ன்னு அவரை ஸேவிச்ச மாத்ரத்தில்  சரும நோய் 'காணாமப் போயிருது'!!!

வந்த வேலை முடிஞ்சதுன்னு திரும்பிப் போகலை இவர்!  பேசாம அங்கேயே உக்கார்ந்து தவம் செய்ய ஆரம்பிச்சுட்டார்!  அந்தப்பகுதியில் இருக்கும் காவிரி ஸ்நானகட்டத்தை பிப்பலர் மகரிஷி தீர்த்தம்னு  சொல்றாங்க.
( கோவிலில் எழுதிப் போட்டுருக்கு!)

பல காலம் கழிந்தபிறகு,   சோழ மன்னர் ஒருவர்,  'நாமும் தான் பல போர்களில் எத்தனை உயிர்களைப் போக்கியிருப்போம். அந்தப் பாவங்கள் சேர்ந்து போயிருக்குமே.....   இந்தக் கோடிப் பாப ஹத்தி என்ற ஊருக்குப்போய் அங்கிருக்கும் பெருமாளை வேண்டிக்கலாம்'னு கிளம்பி வர்றார்.

அதே அத்திமரம்!  அதே பெருமாள் !அரசருக்கு(ம்) காட்சி கொடுக்கறார்!  பார்த்துப் பரவசமான  மன்னர், அத்திமரப் பெருமாளை எல்லோரும் தரிசனம் செஞ்சுக்கத் தோதாகத் தன்னுடைய நாட்டில் இருக்கும் சிற்பக்கலை வல்லுநர்களைக் கொண்டு பெருமாளின் திருவுருவை நிறுவினார்னு கோவில்கதை!
சிலை அமைச்சதோடு விட்டுடாமல் ஏழு பிரகாரம் உள்ள கோவிலையும் சோழமன்னர் கட்டி இருக்கார்! இந்தப் பகுதிக்கே சோழன்பேட்டை என்ற பெயரும் வந்துருக்கு!  இதுக்கெல்லாம் சான்றாக இப்ப நிலைச்சு நிக்கறது அந்தப் பெயரும், ஒரே ஒரு பிரகாரமும் மட்டுமே!

நல்ல உயரம். பதினாலு அடியாம்!  வேர்ப்பகுதிதான்  திருப்பாதங்கள் !  தலை உயர்த்திப் பார்த்தப்ப நெடுமாலாக நிற்கிறாரேன்னு இவர் வானத்தையே தொட்டுவிடுபவர் என்ற கணக்கில்  வானமுட்டிப் பெருமாள்னு  பெயர் சூட்டிட்டாங்க!  நாலு கரங்களில்  மூன்றில் சங்கு, சக்கரம், Gகதைன்னும், ஒரு கரம்  நமக்கெல்லாம் அபயம் கொடுக்கும் விதத்திலும்  அமைஞ்சுருக்கு!  இவருக்கு இன்னொரு பெயர் இருக்கு தெரியுமோ?   ஸ்ரீநிவாஸன் !வானமுட்டிப்பெருமாள் என்ற ஸ்ரீநிவாஸன்.

வண்ணம் தீட்டினாங்களா, இல்லை மரத்தில்  செதுக்கினாங்களான்னு விவரம் கிடைக்கலை.  ரெண்டுவிதமாவும் இருக்கு. நாம் தரிசனம் செய்யும்போது  மரத்தால் ஆன வடிவமாத்தான் தெரிஞ்சார்.

தாயார், பெருமாளின் திருமார்பில் உறைகிறார் என்பதால் தனிச்சந்நிதி  இல்லை.  மரப்பெருமாள் என்பதால் திருமஞ்சனமும் கிடையாது. தைலக்காப்பு மட்டும்தானாம்!

மூலவர் ஸ்ரீநிவாஸன். உற்சவர் நம்ம நரஸிம்ஹர்!
தேய்பிறை ப்ரதோஷத்துக்கு நம்ம நரஸிம்ஹருக்கு 'அபிஷேகம்' இருக்குன்னு ஒரு தகவல்.
கோவில் ரொம்பப்பெருசுன்னு  சொல்ல முடியாது.  இருக்கும் ஒரே ஒரு பிரகாரத்தை வலம் வந்தோம். ஓரளவு  சுத்தமாத்தான் வச்சுருக்காங்க.

கருவறை விமானம் புதுமாதிரியா அரைவட்டமாத் தெரிஞ்சது!

ஆஞ்சி சந்நிதியில் ஒரு அற்புதம் உண்டாம். சப்தஸ்வர ஆஞ்சநேயர்னு பெயருக்குத் தகுந்தாப்போல ஒவ்வொரு  உடல்பாகத்தில் தட்டினால் ஒவ்வொரு  ஸ்வரம் கேக்குதாம். அதுக்காக நாம் தட்டிப் பார்க்கமுடியுமா? சொன்னால் கேட்டுக்கணும், அவ்ளோதான்! அழகான ஆஞ்சி!

க்ஷேத்ரபாலகரோ?
கோவில் உற்சவத்துக்கு ஒரு தொகை கட்டினோம். அழகான பெருமாள் படத்துடன் குங்குமப்பிரஸாதம் கிடைச்சது.
காலை ஆறுமுதல்  பதினொரு மணி வரையிலும், மாலை நாலுமுதல் எட்டரை வரையிலும் கோவில் திறந்துருக்கும்!
பாவம் தொலையுதுன்னா.....    விடமுடியுமோ?  வாய்ப்புக் கிடைச்சால் விடக்கூடாத கோவில்களில் இதுவும் ஒன்னு!
கடவுள் என்பதே ஒரு நம்பிக்கைதான்!  நம்பினால்தான் கடவுள்!  நம்ம பாவங்கள் தொலைஞ்சதுன்னு மகிழ்ச்சியோடு கிளம்பும் சமயம் இன்னொரு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் 'நம்மவர்' !

தொடரும்......... :-)


7 comments:

said...

வானமுட்டிப் பெருமாள்...அழகான பெயர்

சப்தஸ்வர ஆஞ்சநேயர்...நல்ல தரிசனம் மா

said...

எங்கள் கோயில் உலா பட்டியலில் இக்கோயிலைச் சேர்த்துவிட்டேன். இதுவரை பார்க்காத கோயிலுக்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி.
தாயார், பெருமாளின் திருமார்பில் உறைக்கிறார்....என்றுள்ளதே, உறைகிறார் என்றல்லவா இருக்கவேண்டும்?

said...

வாங்க அனுராதா ப்ரேம்,

ஆமாம்ப்பா.... நல்ல தரிசனமாத்தான் அமைஞ்சது நமக்கும்!

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

என்னதான் சொன்னாலும் கணவர்களுக்கு உறைக்கறதே இல்லை என்பதாக மனைவியரின் மனக்குறை இருக்கே.... அதான் உறைக்கும்படி ஆகிருச்சோ!!! :-)

பிழை திருத்தம் பார்த்தபோது எப்படியோ கண்ணில் படலை. இப்பத் திருத்திட்டேன். கவனக்குறைவு....

கவனித்துச் சொன்னதுக்கு மிகவும் நன்றி !

said...

அருமை நன்றி

said...

ஆஹா அழகான கோவில்...

எத்தனை கோவில்கள்... பார்க்க வேண்டிய பட்டியலில்....

said...

வானமுட்டிங்குற பெயரே அழகு. இப்படியெல்லாம் ஊர்களும் கோயில்களும் இருக்குன்னு டீச்சர் பதிவுகள்ள இருந்துதான் தெரிஞ்சிக்கிறேன்.

கோழிகுத்திங்குற பெயருக்குப் பின்னால எதோவொரு வரலாற்று நிகழ்வு இருந்திருக்குமோ? சோழர்களுக்கு கோழி வேந்தர்னு கூட ஒரு பெயர் உண்டு. எதாவது சண்டை நடந்து... தெரியல. ஊரும் பேரும்னு ஒரு புத்தகம் இருக்கு. அதுல தேடுனா கிடைக்கலாம்.