Monday, March 25, 2019

அன்றைக்கு ஆடிப்பூரமா அமைஞ்சது !!!!! (பயணத்தொடர், பகுதி 83 )

இதுவரை போகாத கோவில்களுக்குப் போகணும் என்று திட்டமிட்டாலும், நடுவிலே வரும் நம்ம பெருமாளை விடமுடியுமோ?
அந்த ஒப்புவமை இல்லாத ஒப்பியப்பனை ஸேவிச்சுக்கிட்டு போகணும். திருமீயச்சூரில் இருந்து ஒரு இருபத்தியெட்டு கிமீ தூரம். கும்மோணம் திரும்பிப்போகும் வழிதான். முக்கால்மணி நேரம் ஆச்சு.

கோவில் வாசலில் நல்ல கூட்டம். என்ன விசேஷமோ?
அழகான அஞ்சுநிலை ராஜகோபுரத்தின் அழகைக் கெடுக்கறதுபோல  குறுகலான தெருவில் கசகசன்னு ஏகப்பட்ட  சமாச்சாரங்கள்.  தெருவில் இருக்கு கோபுரவாசல்.  கொஞ்சம் உள்ளே தள்ளி இருக்கப்டாதோ.....

'நம்மவர்' அவருடைய வழக்கம்போல் விடுவிடுன்னு உள்ளே போக, நான் நம்ம பூமா இருக்காளான்னு பார்த்தேன். இருக்காள் !!! முன்னுரிமை எப்பவும் அவளுக்குத்தான். நானும் விடுவிடுன்னு அவளாண்டை போனேன். செல்லம் அழகோ அழகு!
'உப்பிலியைப் பார்த்துட்டு வந்துடலாம் வா'ன்னார் 'நம்மவர்'.  ஒப்பை உப்பாக்கி வச்சுருக்குல்லே சனம் :-)
பூமாவைப் பார்க்கும் வேகத்தில் போறபோக்கில் கொடிமரத்துக்குக் கும்பிடு போட்டதால்,  திரும்பக் கொடிமரத்தாண்டை போய்  வணங்கிட்டு, பெரிய திருவடியிடம், 'மூலவரைப் பார்க்க   உள்ளே போறேன்'னு தகவல்  சொல்லும்போதே... அங்கே  நின்னுருந்த பட்டர்ஸ்வாமிகள் சிலரில்,  ஒருவர் ஒரு  பொதியை என்னிடம் நீட்டினார்.  முழிச்ச என்னிடம், பஞ்சாமிர்தம்ன்னார்.  கைநீட்டி வாங்கினேன். பிசுக்பிசுக்ன்னு கையெல்லாம்  ஒட்டிப்பிடிச்சது.
இப்ப நான் இதை என்ன செய்ய? பட்டர்ஸ்வாமிகளே வழியும் சொன்னார். "இங்கேயே (பெரியதிருவடி சந்நிதியில்) வச்சுட்டுப்போங்கோ. திரும்பி வர்றச்சே எடுத்துக்கலாம்"  ஆஹா..... அதேபடியே செஞ்சேன்.  இப்பக் கையை அலம்பிக்கணுமே....
அந்தாண்டை  இருந்த குழாயைக் காமிச்சார் 'நம்மவர்' ! ஆச்சு.

ஒப்பியப்பன், நம்ம துளசியைக் கல்யாணம் செஞ்சுக்கிட்ட இடம் !  தகப்பன் மார்கண்டேயன், மகளுக்கு வச்ச பெயர் துளசிதானாக்கும் !

என்னது மார்கண்டேயனுக்குப் பொண்ணு இருக்கா?

இருக்காளே :-) 

அதான் எப்படி?  எப்படின்னா இப்படித்தான்....
மார்கண்டேய மகரிஷிக்குக்  குழந்தை வேணும் என்று தோணுச்சு. பெருமாளை மனதில் இருத்தித் தவம் செய்யறார்.  அதே சமயம்  ஸ்ரீவைகுண்டத்தில் பூமா தேவிக்கு  ஒரு ஆசை. பெருமாளின் மார்பில் மஹாலக்ஷ்மிக்கு இடம்  கிடைச்சது போல் தனக்கும் ஒரு இடம் வேணுமுன்னு....

"அதான் மனசில் நீ இருக்கும்போது....  மார்புலே வேற இடம் வேணுமாக்கும்? "

"வேணும்... அப்பத்தான் நான் இருப்பது பளிச்ன்னு வெளியே தெரியும், இல்லையா!"


அமிர்தம் எடுக்கத் திருப்பாற்கடலைக்  கடைஞ்சுக்கிட்டு இருந்தப்ப  பதினாறு செல்வங்கள்  ஒவ்வொன்னா வெளியில்  வந்துச்சுன்னு  புராணம் சொல்லுது பாருங்க,  அப்போ  லக்ஷ்மி வெளியில் வரும்போது கூடவே வந்தவள் துளசி. ஒவ்வொரு செல்வமும் வரவர, இது எனக்கு  இது உனக்குன்னு  அங்கேயே பாய்ஞ்சு எடுத்துக்கிட்டு இருக்காங்க தேவர்கள்.  லக்ஷ்மி வந்தவுடன், மஹாவிஷ்ணு எடுத்து மார்பில்  வச்சுக்கிட்டார். கூடவே வந்த துளசி பார்க்கிறாள்.... தனக்கு எங்கே இடமுன்னு!

"ஆல்ரெடி  இடம் போயிருச்சுங்க  துளசி.  நீங்க என்ன பண்றீங்க....   பூலோகத்துலே ஒரு  முனிவர்  பெண்குழந்தை வேணுமுன்னு  தவம் செஞ்சுக்கிட்டு இருக்கார். அவர் வீட்டுலே போய் பிறந்து வளர்ந்து வாங்க. நான்  சமயம் பார்த்து                 ( லக்ஸ்க்குத் தெரியாம)  அங்கே வந்து  உங்களைக் கண்ணாலம் கட்டிக்கிட்டு வந்துடறேன்.  அஃபீஸியல்  மனைவி ஆயிட்டால்  இடம் தன்னாலே கிடைச்சுரும்.  போங்க... சொன்னதைச் செய்யுங்க."

"என்ன இப்படிச் சொல்லி விரட்டப் பாக்குறீங்க?  முனிவர் தனிக்கட்டையா இருக்கார்.  கைக்குழந்தையை எப்படி வளர்க்கப்போறார்? கஷ்டமாச்சே.... "

"நோ ஒர்ரீஸ். ஒரு ரெண்டு வயசுக்குழந்தை அளவு இருந்தால்  பாட்டில், நாப்பி இப்படிப் ப்ரச்சனைகள் இல்லை. ஓக்கேவா?"

"ஓக்கே!  ஆனால் எதுக்குப் பொண் குழந்தை வேணுமாம்? பேசாம  மகன் வேணுமுன்னு கேட்டால்  அவனுக்கு இவர் கற்றதையெல்லாம் சொல்லிக் கொடுத்துத் தன்  வாரிசுன்னு பெருமைப்பட்டுக்கலாமே!"

"அது ஒன்னுமில்லை. பொண் குழந்தையா இருந்தால்  அதை எனக்குக் கட்டிக்கொடுத்து, மஹாவிஷ்ணுவின் மாமனார் என்ற பெருமையைத் தட்டிக்கலாமுன்னுதான். நான் வரதக்ஷிணை எல்லாம் கேக்கமாட்டேன்னு எப்படியோ தெரிஞ்சு வச்சுக்கிட்டுத்தான் இப்படியெல்லாம் தவம் செய்யறார் போல!  சீக்கிரம் கிளம்பிப் போம்மா.... அவர்  தவத்தை முடிச்சுக் கண் திறக்கும்போது ஆஜராகிடணும், சரியா?"

கண்ணைத் திறக்குறார் மஹரிஷி. அவரைச் சுத்தி அடர்த்தியா வளர்ந்திருக்கு  துளசிவனம். அதுலே ஒரு அழகான பொண் குழந்தை. ரெண்டு வயசு இருக்கும்:-) 'பாப்பா, நீயார்? உன் பேர் என்ன? உங்க அம்மா அப்பா எங்கே'ன்னா சொல்லத் தெரியலை. தாடியும் மீசையுமா இருக்கும் முனிவரைப் பார்த்துப் பயமே இல்லாமச் சிரிக்குது குட்டிப் பொண்ணு. (ஆமாம்.... பதினாறு வயசுப் பையனுக்கு தாடி மீசை எல்லாம் இருக்குமா? ) துளசி வனத்தில் கிடைச்ச குழந்தைக்குத் துளசின்னு பெயர் வச்சு அவரே வளர்த்துக்கிட்டு வர்றார்.

இளங்கன்னிப் பருவத்தில்  இருக்கும்போது ஆசிரமத்துக்கு  குடுகுடு கிழவர் ஒருத்தர் வர்றார். அதிதியை வரவேற்று, உபசாரம் செஞ்சு என்ன வேணுமுன்னு (வாட் கேன் ஐ டு ஃபார் யூ?) கேட்ட  மார்கண்டேய முனிவரிடம் (இவர் என்றும் 16 வரம்  வாங்கினபடியால் சின்னப்பையனாத்தான் இருக்கார் பார்க்க, என்பதை நாம் மறந்துறக்கூடாது!) பொண்ணு உங்க தங்கையான்னு  கேட்க, 'இல்லைபா.  என் மகள்'னு சொன்னதும்,  ' அட! அப்ப உங்க  மகளை எனக்குக் கண்ணாலம் கட்டிக் குடுங்கன்னார்'.

முனிவருக்குக் கோபத்துலே உடம்பெல்லாம்  ஆவேசம் வந்தாப்லெ ஆடுது. நடந்ததைப் பார்த்துக்கிட்டு அங்கிருந்த துளசி,  வேகமாத் தன் அறைக்கு ஓடிப்போய்  கட்டிலில் விழுந்து குலுங்கிக் குலுங்கி அழறாள். 'கிழவருக்கு என்னா தில்லு? 'போறகாலத்துலே'  வந்து பொண்ணு  கேக்கறதைப்பாரு......'

இவ்ளோ வயசான நீர் ஒரு இளம்பெண்ணைக் கட்டிக்க நினைப்பது பொருந்துமான்னு  முனிவர் கேட்கும் சமயம், 'ஏன் பொருந்தாது'ன்னு  கேட்ட கிழவர், தன்னுடைய உண்மை ஸ்வரூபத்தைக் காட்டறார். ஹா... மஹாவிஷ்ணுவா!!!   அட! அவனா நீயி?  மனசுக்குள்ளே மகிழ்ந்த முனிவர்,  உடனே சரின்னுட்டா எப்படி? கொஞ்சம் பிகு பண்ணிக்கலாமுன்னு, ' குழந்தைப் பெண்ணுக்குச் சமைக்கத் தெரியாதே.... குழம்பு கறிகளில்  உப்பு எவ்ளோ போடணுமுன்னு கூடத் தெரியாது. நீர் பேசாம வேற பொண்ணைப் பாரும்' என்றதும், 'சமைக்கலைன்னா என்ன, உப்புப் போடலைன்னா என்ன? நான் உப்பில்லாமல் சாப்பிடத்தயார் ' என்று சொல்றார்.  'என் பொண்ணுக்குத் தனியா இருக்க பயம்' என்று ஆரம்பிக்கறார் முனிவர்.  'நான் கூடவே வச்சுக்கிட்டு எங்கே போனாலும் கூடவே கூட்டிக்கிட்டுப் போறேன்' னு சொல்லித் 'துளசி என்ற பூமாதேவியை இப்ப நான்  கல்யாணம் கட்டிக்கவா'ன்னார்.
முனிவர் உள்ளே போய் துளசியைச் சமாதானப்படுத்தி 'வந்தவர் வெறும் ஆசாமி இல்லை. சாமியாக்கும்'  என்று சொன்னதும் நம்பாத துளசி வெளியே வந்து பார்க்க,  கன கம்பீரமா ஜொலிக்கும் மஹாவிஷ்ணு!  அழுதபுள்ளை சிரிச்சது.  கல்யாணமும் ஆச்சு.  இது நடந்தது ஒரு  ஐப்பசி மாசம் திருவோண நட்சத்திரம் என்பதால் கோவிலில் கல்யாண உற்சவம்  வருசாவருசம் அதே நாளில்  ஜாம் ஜாமென நடக்குது. கோலாகலம். பெருமாள்  பவனியில் இங்கே தாயாரும் கூடவே போறாங்க!
இவரையும் ஸ்ரீநிவாஸன், வெங்கிடாசலபதின்னே  சொல்றாங்க. திருப்பதியில் இருப்பதுபோலவே நின்ற கோலம். 'மாம் ஏகம் சரணம் வ்ரஜ' என்ற சரமச்லோகப் பகுதி, எம்பெருமானின் வலக்கையில் வைரங்களால் பொறிக்கப்பட்டுள்ளது. பணக்காரர். வைரமா ஜொலிக்கிறார்!  திருப்பதிக்கு நேர்ந்துக்கிட்டு அங்கே போகமுடியாத நிலைன்னா, தென்திருப்பதின்னு இங்கேயே செலுத்திறலாமாம். வசூல் ராஜா தான்!
ஸ்ரீநிவாசருக்குக் கழுத்தில் எப்போதும் ஒரு துளசிமாலை உண்டாம்.   கழுத்திலும் மார்பிலுமா இடம் கொடுத்துட்டார். இப்ப திருப்தியா துளசி?  அந்த மாலை மஹாலக்ஷ்மிக்கும் சேர்த்துதான் என்பதைச் சொல்லலை போல!

திருப்பாவை முப்பதுக்கும் படங்களும் பாசுரங்களுமா  ரொம்ப அழகா வரைஞ்சு வச்சுருக்கும் சுவர் வழியாத்தான்  வரிசை நகரும் விதம். நானும் நம்ம வழக்கத்தை விடாம 'தூமணி மாடத்து'க்கிட்டே நின்னு (மனசுக்குள்) பாடிட்டு வந்தேன்.  தாயாருக்குத் தனி சந்நிதி கிடையாது. இது அவளுடைய பொறந்த வீடு. எல்லாமும் அவளுக்கே!
மூலவரை  நிம்மதியா ஸேவிச்சுக்கிட்டு குசலவிசாரிப்புகள்  ஆச்சு. (அவரோடுதான் பேச்சு  எல்லாம்! ) வாயைத் தொறந்து பதில் சொல்லும் வழக்கம் அவருக்கும் இல்லை. எனக்கும் எந்த  எதிர்பார்ப்பும் இல்லை.  சொல்ல நினைக்கிறதை சொல்லிட்டு வந்துருவேன்.
மூலவர் காலடியில் இருக்கும் என் அப்பன் 'பொன்னப்பன் முத்தப்பன் மணியப்பன்' அண்ட் மனைவிகளைக் காணோம்.   அடுத்தாப்லே இருக்கும் மண்டபத்துக்குப் போயிருக்காங்க.
மண்டபத்துக்குள் நுழைஞ்சால்  ஜம்முன்னு அலங்காரத்தில்  மூவரும்!
கூட்டமில்லை. நின்னு நிம்மதியா ஸேவிக்க முடிஞ்சது.
கொஞ்சநேரம் அங்கேயே உக்கார்ந்துருந்தோம். தக்ஷிணாயணப் புண்யகாலமாம்.  அன்றைக்கு ஆடிப்பூரம் வேற!   கேக்கணுமா? அதுதான் விசேஷ பூஜை!


திரும்ப ஒருக்கா பூமாவாண்டை போய் கொஞ்சம் க்ளிக்கிட்டு, நமக்கான பஞ்சாமிர்தப் பொதியை வாங்கிக்கிட்டு ராயாஸுக்கு வந்தோம்.  ஒரு ஏழு கிமீட்டருக்கும் குறைவுதான்.
அறைக்குப் போனவுடன், நம்ம சுமிதா ரமேஷின் அம்மா 'வச்சுக்கொடுத்த'  எவர்சில்வர் கிண்ணத்தில் பொதியைப் பிரிச்சுப் போட்டால்.... எக்கச்சக்கமான முந்திரிகளுடன் தேனில் மிதக்கும் பழத்துண்டுகள்!
இவ்ளோ ப்ரஸாதங்களை என்ன செய்யறது?   ரூம் பாயைக் கூப்பிட்டு (நாங்க ஆளுக்கு ஒரு ஸ்பூன் எடுத்துக்கிட்டு ) எல்லோருக்கும் விளம்பச் சொல்லிப் பாத்திரத்தைக் கொடுத்தேன்.

"அப்புறம் பாத்திரத்தைத் திரும்பக் கொண்டு வந்து கொடுத்துருப்பா, தம்பி."

மணி ஒன்னே முக்கால். தரிசனங்கள் நல்ல திருப்தியா அமைஞ்சது, பூமா வேற இருந்தாள்!   இதெல்லாமே எனக்கு வயிறு நிறைஞ்ச மாதிரி.  கிளம்பு. கீழே போய் சாப்ட்டுட்டு வரலாம்னார் 'நம்மவர்'.
எனக்கொரு தயிர் சாதம்.  அவருக்கொரு எலுமிச்சம்பழ சாதம்.  உண்ட மயக்கம் தீரக் கொஞ்சம் ஓய்வு.


ஒரு நாலரை, நாலே முக்காலுக்குக் கிளம்பணும். சரியா?

தொடரும்....... :-)

10 comments:

said...

ஒப்பில்லா அப்பனின் சிறப்பான தரிசனம் எங்களுக்கும் வாய்த்தது. நன்றி.

said...

சமீபத்தில் எனக்கு கோவில் மூடும் நேரத்தில் கிடைத்த சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் நினைவுக்கு வந்தது. அந்தக் கோவில்ல பிரசாதம் நேரத்தில் நிறைய கொடுப்பார்கள். திருச்சேறையிலும் பிரசாதம் அந்த அந்த வேளைகளில் கிடைக்கும்.

தரிசனம் கண்டு மகிழ்ந்தேன்

said...

//எக்கச்சக்கமான முந்திரிகளுடன் தேனில் மிதக்கும் பழத்துண்டுகள்! // வாவ், நன்றி

said...

ஒப்பிலியப்பன் கோயிலில் பஞ்சாமிர்தம். இனிமை. இனிமை. அதை எல்லாருக்கும் பங்கிட்டுக் கொடுத்தது இன்னும் இனிமை.

இப்பவும் உப்பில்லாம சமைக்கிறதா கேள்விப்பட்டேன். பிரசாதங்கள்ள உப்பு போடுறதில்லைன்னும் கேள்விப்பட்டேன். சாப்பிட்டுப் பாத்திருக்கீங்களா?

ஒப்பிலியை உப்பிலியாக்கி அந்த உப்பிலிக்கும் பேருக்காத்தாப் போல் ஒரு கதையை ஆக்கி, ஆண்டாண்டாய் உப்பில்லாமல் சாப்பிடும் அந்த ஒப்பிலிக்கு எவ்வளவு பொறுமை.

said...

மீண்டும் ஒரு முறை இங்கு தரிசனம் ....


மகிழ்ச்சி மா

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,


பெருமாள் ரொம்பவே அழகு!

உங்களுக்குச் சீக்கிரம் அவர் தரிசனம் கிடைக்கும்!

said...

வாங்க நெல்லைத் தமிழன்.


ஆஹா..... பிரஸாதம்......

உப்பில்லாமல் செஞ்சாலும் ருசிதான் இல்லையோ!

சக்கரைப்பொங்கலுக்கு உப்பு தேவைதான் இல்லை :-)

நானும் லட்டு மட்டும் வாங்கிப்பேன்.

said...

வாங்க விஸ்வநாத்,

அருமையேதான் !

நன்றி !

said...

வாங்க ஜிரா,

ஒரே பொய்யை சொல்லிக்கிட்டே இருந்தால் காலப்போக்கில் அது உண்மைன்னு தோண ஆரம்பிச்சுரும் இல்லையா?

போகட்டும்... இப்போ ஏகப்பட்ட பேர்களுக்கு ப்ரெஷர் இருப்பதால் உப்பில்லாமல் சாப்பிடறதும் நல்லதுதான்!

said...

வாங்க அனுராதா ப்ரேம்,

நன்றி !