Friday, July 28, 2017

நைமிசாரண்யம் (இந்திய மண்ணில் பயணம் 36 )

காலையில் கோம்தி தரிசனம் ஆச்சு.  வெளுத்துக்கிட்டு இருக்காங்க  சிலர்!  இந்தக் காட்சி பார்த்தே எத்தனையோ வருசங்களாச்சுல்லே?

   எதிரே    ஹஸ்ரத் மஹல் பூங்காவில் காலை நடைப்பயிற்சி !
சலோ   நைமிஷாரண்!      இங்கே வந்ததே இதுக்குத்தான்.....    லக்நோவில் இருந்து சுமார் ரெண்டு மணி நேரப் பயணம். பாதி தூரம் நல்ல ரோடு. ஸீதாப்பூர்  ஹைவேயில் ( டோல் ரோடு)   ஒரு அம்பது கிமீ போயிட்டு  லெஃப்ட் எடுக்கணும். மொஹப்பத்பூர் ரோடாம் இது!  ஹைய்யோ!!! என்னமா ஒரு பெயர்!  மொஹ்ஹபத் !

இதுவரை வந்த டோல் ரோடை விட்டு மொஹ்ஹபத் சாலையில் போறோம்.  மணி  எட்டே முக்கால் ஆச்சு.  வண்டியில் ஜிபிஎஸ் போல ஒன்னு மாட்டி இருக்குன்னாலும்... அது ஒன்னும் வழி சொல்றாப்போல தெரியலை.  நம்மவர்தான் செல்லில்  கூகுள் வழி சொல்லச்சொல்ல அதை ட்ரைவருக்குக் கடத்திக்கிட்டு இருக்கார்.
நம்ம டிரைவர் பெயர் பாதக் ( Pathak)  .  வினோத் பாதக் .  இவர்தான் நேத்து நமக்காக ஏர்ப்போர்ட் பிக்கப் வந்தவர்.  ஒரு  பலகாரக்கடை போல ஒன்னு கண்ணுலே பட்டதும்,  டீ  கிடைக்குமான்னு பார்க்கலாமுன்னு நம்மவர் சொன்னார். வண்டியை நிறுத்தி விசாரிச்சதும்,  டீ  தயார் பண்ணிடறேன்னு    அடுப்பிலே பால் பாத்திரம்  எடுத்து வச்சார்  கடைக்காரர்.

 பக்கத்துலே இன்னொரு பெரிய  அடுப்பில் இரும்பு வாணலியில் என்னமோ பலகாரம்  வேகுதுன்னு எட்டிப் பார்த்தால் பஜ்ஜியா. (  சின்ன போண்டா மாதிரி இருக்கும் )   அது ஒரு ப்ளேட்  வாங்கிக்கலாம்.  கூடவே மூணு டீ.


நமக்கு ஹொட்டேலில் கொடுத்த  ப்ரேக்ஃபாஸ்ட் பொட்டியைத் திறந்து பார்த்தா....   வெஜிடபிள் சாண்ட்விச், மஃப்பின், ஆப்பிள், வாழைப்பழம்னு இருக்கு.   எல்லாம் ரெண்டு செட்!  வினோதுக்கு  இதுலே  ஒரு செட் எடுத்துக் கொடுத்துட்டு  நாங்க  சாண்ட்விச், பஜ்ஜியா, டீன்னு  முடிச்சுக்கிடோம். பழம் இருக்கட்டும். அப்புறம்  வேணுமுன்னா சாப்பிட்டுக்கலாம்.


அஞ்சு பஜ்ஜியா  ஒரு ப்ளேட் , மூணு டீக்கு  எவ்ளோ ஆச்சு தெரியுமோ?  இருபத்தியஞ்சு ரூ!  (எங்கூர் காசுலே அம்பது சென்ட்!  மகளுக்கு சேதி அனுப்பணும்! ஹா.....ன்னுவாள் ! )

ஓம் ப்ரகாஷ்  பாஜ்பாய் இதே தொழிலைத்தான் ஆரம்பம் முதலே செஞ்சுக்கிட்டு இருக்காராம். அப்பா ஆரம்பிச்ச வியாபாரம் !   வியாபாரம் நல்லாவே நடக்குதாம். 'கோவிலுக்கு யாத்ரை வர்றவங்க எண்ணிக்கை இப்பெல்லாம் அதிகமாத்தான் இருக்கு'ன்னார்.    என்னோடு பேசிக்கிட்டே இருந்தாலும் கை பரபரன்னு  பலகாரங்களைச் செஞ்சு குவிக்குது!
எண்ணெய் காய்ஞ்சதும் முதலில் சோம்பு போட்டு நல்லா வெடிக்கவிட்டுட்டு அப்புறம்  வெங்காயம் சேர்க்கணுமுன்னு சமையல் டிப்ஸ் வேற கொடுத்தார் பாஜ்பாய்!  இவருடைய செல்லம் ஒன்னு.... நாந்தான் இங்கே எல்லாம் என்ற மாதிரிபோஸ் கொடுத்துச்சு :-)  பெயர் டைகர்!  (எழுதப்படாத விதி !)

கொஞ்ச தூரம் போனதும் கோவிலுக்கான  நுழைவு வாசல் போல் ஒன்னு....   ஊருக்கான நுழைவு வாசலாம். ஊருக்குள்ளே வர்றதுக்கு  ஒரு  கட்டணம் கட்டிடணும். ரசீது புத்தகத்தோடு  ஆட்கள் வழி மறிக்கிறாங்க. இதுவேதான் நம்ம ஸ்ரீரங்கத்திலும். அம்மா மண்டபம் ரோடுக்குள்ளே நுழைஞ்சதும் கட்டணம் வசூலிச்சுடுவாங்க.
தேங்காய்ச் சில்லு தீனி வகையில் சேர்த்தி , இந்தப் பக்கங்களில் !
இங்கே கோவில்னு  ஒன்னும் தனியா இல்லை. கோவிலைத் தேடாதீங்க. காடுதான் இங்கே கடவுள்னு  நண்பர்கள் சொல்லி இருந்தாங்க.

 நாராயணனே  வனமாகவும், அதிலுள்ள மரமாகவும் இருக்கானாமே!  ஓ.....

நாங்களும் விநியாவை செல்லில் கூப்பிட்டோம். நேத்தே லக்நோவில் இருந்து கூப்பிட்டுப் பேசுனோம்தான்.  ஊருக்குள் வந்தவுடன் கூப்பிட்டால் வழி சொல்றேன்னு சொல்லி இருந்தாங்க.

நமக்குத்தான் திவ்யதேசக் கோவில்களிலும்கூட  பெருமாளைத் தவிர வேற யாரையுமே தெரியாதே.... இந்த விநியா எப்படி?    'அததுக்கு ஒரு ஆள் இருக்கான் பாஸ்' என்றதைப்போலத்தான்  :-)

நாம் முக்திநாத் கோவிலுக்குப் போனப்ப  சென்னைக்காரர்கள் மூணு பேரைப் பார்த்தோமுன்னு சொன்னது நினைவிருக்கோ?  அந்த பாலாஜிதான்  விநியா ஃபோன் நம்பரைக்  கொடுத்துருந்தார். அப்ப என்ன ஏதுன்னு ரொம்ப விசாரிச்சு வச்சுக்கலை.  இருக்கட்டுமுன்னு  நம்பரை எழுதி வச்சுக்கிட்டதுதான்.
விநியா சொன்ன அடையாளங்களைப் பார்த்தபடியே  அவுங்க சொன்ன இடத்துக்கு வந்து சேர்ந்தோம்.  வாசலில் பார்த்தால் அகோபிலமடம்னு போட்டுருக்கு!  உள்ளே போய் விசாரிச்சால் இதுதான் சரியான விலாசம். கரெக்ட்டா வந்து சேர்ந்துருக்கோம் :-)
இங்கே விநியாவும், அவுங்க கணவருமா மடத்தைப் பார்த்துக்கறாங்க. கணவருக்கு சில வருசங்களா உடம்பு சரி இல்லையாம். விநியாதான் இப்போதைக்கு முழுப்பொறுப்பும்ன்னே வச்சுக்கலாம்.

முதலில்  இங்கே உள்ள கோவில்களை (!) தரிசனம் செஞ்சுக்கணும். புது இடத்துலே  தேடிக்கிட்டுத் திரிய முடியாது. அதனால் வழிகாட்ட யாரையாவது ஏற்பாடு பண்ணித்தாங்கன்னு  கேட்டுக்கிட்டோம்.  மரங்கள்தான் என்றாலுமே... எந்த மரமுன்னு காமிக்க யாராவது இருந்தால் நல்லதுதானே?

ஊர்முழுசும் கூட்டங்கூட்டமா   சனம்தான். வரும்போது பார்த்தோமே.....
யாரையோ வரச்சொல்லி ஆள் அனுப்பினாங்க. நாங்களும் மடத்துலெ இருக்கும்  ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மரைத் தரிசனம் செஞ்சுக்கிட்டோம். (ஸ்ரீ லக்ஷ்மி நர்ஸிங் மந்திர்னு வாசல்லே போட்டுருக்கே!)அப்படியே சில  சந்நிதிகளையும்தான்....

நாப்பத்தி மூணாம் பட்டம் ஸ்ரீ வீரராகவ சடகோப யதீந்த்ர மஹாதேசிகன் இங்கே யாத்திரை வந்தப்ப பரமபதம் பதித்தார்( நவம்பர் 24, 1957)  அவருடைய ப்ருந்தாவனம் இங்கே இருக்கு.
அதுக்குள்ளே   ஒரு  இளைஞர் வந்துட்டார். பெயர் ஷ்யாம் மோஹன்.  இங்கே வேதபாடசாலையில் படிச்சுட்டு,  கோவிலில் பண்டிட்டா இருக்காராம். சின்ன வயசுதான். இருவது இருந்தாலே அதிகம். நம்ம கூடவே வந்து  முக்கியமான இடங்களைக்  காமிச்சுக் கொடுக்கணும்னு அவருக்கு உத்தரவாச்சு:-)

நீங்கபோயிட்டு வாங்க.  சமையலை முடிச்சுடறேன்னு சொன்னாங்க விநியா.
ட்ரைவருக்கு  அடுத்த ஸீட்டுலே ஷ்யாமை உக்காரச் சொல்லிட்டு நாங்க கிளம்பிப் போறோம்.    இனி வழி எல்லாம் ஷ்யாம்தான் சொல்லணும்.

பார்த்தனுக்குத் தேரோட்டுனவன், நமக்கு வழிகாட்டியா வந்துருக்கான் பாருங்க !!!

தொடரும்........ :-)


16 comments:

said...

முதல் படம் : "ஆத்து வெள்ளம் காத்திருக்கு.. அழுக்குத் துணி நிறைஞ்சிருக்கு....

அதென்ன மொஹப்பத் சாலை? இப்படிக்கு கூட பெயரா? காதலர்களுக்கு அர்ப்பனமா!

ஓம்பிரகாஷ் ஒரு சைஸாய் உட்கார்ந்திருக்கார்.

அடடே.. நம்ம தோழர் பைரவர்! ஆனால் முகத்தில் கொஞ்சம் கள்ளம் தெரிகிறது!!

விநியா அனீமிக்கா இருக்காங்க!

​எப்பவாவதுதான் தம சப்மிட் ஆகும் போல!

said...

// பார்த்தனுக்குத் தேரோட்டுனவன், நமக்கு வழிகாட்டியா வந்துருக்கான் பாருங்க !!!//

மகாலக்ஷ்மியும் மகாவிஷ்ணுவும் பாற்கடல் விட்டு பாரததேசம் வந்திருக்காங்க. அவர்களுக்கு வழித்துணையா வர்றதுக்கு வலிக்குமா என்ன ?

said...

"நமக்கு வழிகாட்டியா" கீதா உபதேசம் கேட்க ரெடியா :)

தொடர்கிறேன்.

said...

நைமிசாரண்யத்துல நுழைந்துவிட்டீர்கள். நிறைய கோவில்களும் சக்ரதீர்த்தம், கோமதி ந்தி இருக்கின்றன. தொடர்கிறேன்.

தனியா வண்டி எடுத்துக்கிட்டுப் போனா ஆங்க அங்க நிறுத்தி சாப்பிடவும் செஞ்சுக்கலாம்.

said...

வாங்க ஸ்ரீராம்.

காதலுக்கு மரியாதை அப்போ இருந்துருக்கு போல!

முதல் படத்தை நம்ம கோபால் இப்பதான் பார்க்கிறாராம். இது எப்போன்றார் :-)

விநியா.... ரொம்ப வேலை.... சாப்பிடக்கூட நேரம் இல்லைன்னு நினைக்கிறேன்.... :-(

said...

வாங்க விஸ்வநாத்.

ஒருவகையில் நியூஸி பாற்கடல் மாதிரிதான் :-) ஆடுகள் நாடுன்றதுபோய் இப்ப மாடுகள் நிறைஞ்சுருக்கு !

said...

வாங்க மாதேவி.

இப்பக் காலம் மாறிப்போச்சே..... கீதோபதேசம் இங்கிருந்து அங்கெ :-)

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

ஏகப்பட்ட கோவில்கள். நல்ல தரிசனங்கள். எழுதணும்..... அடுத்தடுத்து :-)

குழுவாப் போனால் சாப்பாடு வசதியா இருக்கும், செலவும் குறைவு. தவிர.... நம்ம விருப்பத்துக்கு நேரம் செலவழிச்சுப் பார்க்க முடியாது. தனிப்பயணம்தான் நாங்க பெரும்பாலும். தேவைப்பட்டால் ஒரு கைடு வச்சுக்குவோம்.

said...

சில பதிவுகள் இன்னும் வாசிக்கணும்...

பலகார படங்களும் ,

பானை ...பிரேக் பாஸ்ட் உணவு படங்களும் ...ஆஹா...

said...

வழக்கமான வடக்கின் தேநீர் கடை! இது போன்ற இடங்களில் கயிற்றுக் கட்டில் தான் இருக்கை!

பயணத்தில் நானும் கூடவே....

said...

இந்த மாதிரியான சின்னச் சின்ன கடைகள்ள விலை மலிவுதான். தென்னிந்தியாவில் இப்படியான கடைகள் மிகக்குறைவு. வடக்க வளர்ச்சி குறைவு. அதுனால இது மாதிரியான கடைகள் எல்லாப் பகுதியிலும் உண்டு. பெரும்பாலும் துப்புரவாகவும் இருக்கும்.

நைமிசாரண்யம் வனத்தில் முனிவர்கள் எல்லாம் கூடி மகாவிஷ்ணுவின் பெருமைகளை கலந்து பேசி விவாதிச்சுக்கிட்டிருந்ததாக எங்கயோ படிச்ச நினைவு. நீங்களும் நைமிசாரண்யம் வந்துட்டீங்க. அடுத்த பதிவில் என்ன இருக்கு ஏது இருக்குன்னு சொல்வீங்கன்னு நெனைக்கிறேன்.

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

வலையில் உள்ள வசதியே இதுதான். எப்ப நேரம் கிடைக்குதோ அப்ப வாசிக்கலாம் :-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.


ரொம்பச் சரி. நீங்க பெரும்பாலும் வடக்கில்தான் சுத்திக்கிட்டு இருக்கீங்க ! எல்லாம் நாங்க போகாத இடங்கள்!!! நாங்களும் கூடவே வந்துக்கிட்டு இருக்கோம் அங்கே :-)

said...

வாங்க ஜிரா.

வளர்ச்சி குறைவு, விலை மலிவு, சுத்தம் எல்லாம் வடக்கில்.
இதுக்கு நேர்மாறா இங்கே தெற்கில் அதுவும் குறிப்பா தமிழ்நாட்டில்...... ப்ச் :-(

எம்பத்தியெட்டாயிரம் முனிவர்கள் கூடி இருந்த இடமாம்!!!!

said...

இயற்கயே தெய்வங்களாக ரசித்தேன் நைமிசாரண்யத்திலா

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

காடே கடவுள் !!!

வருகைக்கு நன்றி.