Wednesday, July 05, 2017

நீச்சல்குளத்தில் அந்த ஸெவன் சிஸ்டர்ஸ் !!!(இந்திய மண்ணில் பயணம் 26)

ஜோஷிமத்,  ஊரே ஒன்வே என்பதால் திரும்பவும் கடைவீதிவழியாச் சுத்திக்கிட்டு ஊரைவிட்டு வெளியில் வந்து  ஹைவேக்குள் நுழைஞ்சாச்சு.  இன்னும் நூத்திப்பதிமூணு  கிமீ பயணம் பாக்கி இருக்கு!  அங்கங்கே  பாதை கொஞ்சம் கீக்கிடம்தான். கவனமாகப் போகணும்.


சட்னு ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தினார் முகேஷ். என்னன்னு பார்த்தால்....   ஸ்வாச் பாரத் புண்ணியம் கட்டிக்கிட்ட கழிப்பறை வசதி.  சுலப்!  வெளியே இருந்து பார்க்க ஒரு வீடு போல் நல்லாத்தான் இருக்கு.  நம்மவரும்  போயிட்டு வந்து நல்ல சுத்தமா இருக்குன்னு பரிந்துரைச்சதால்......  எனக்கும் பயனாக இருந்துச்சு.  இதே போல் ஒவ்வொரு ஊரிலும் கட்டிவிட்டால் தேவலை. எப்போ நடக்குமோ?




இந்தியப் பயணங்களில்  இந்தப் பிரச்சனைக்காகவே   தண்ணீர் அதிகம் குடிக்கவே மாட்டேன். ரொம்ப தாகம் என்றால்  நாக்கை  சொட்டு நீரால் நனைச்சுக்குவேன்.  ஹொட்டேலுக்கு வந்தபிறகுதான்  ஒரு பாட்டில் தண்ணீரை ஒன்னாக் குடிச்சு வைப்பேன்.

 நந்தப்ரயாக் வந்துருச்சு.  வண்டியை விட்டு இறங்காமலேயே   போற போக்கில் சில  க்ளிக்ஸ்....



கர்ணப்ரயாக்  வந்தும்  இறங்கலை. 
இரும்புப் பாலங்கள்.... கடந்து போனவழியாகவே திரும்பிக்கிட்டு இருக்கோம். ஒரு இடத்தில்  தள்ளுவண்டியில் பழக்கடை.  கொஞ்சம் பழங்கள் (ஆப்பிள், வாழை, கொய்யா) வாங்கி முகேஷோடு  பகிர்ந்தாச்சு. நாமும் எங்கேயும் லஞ்சுக்கு நிற்கலை. முகேஷும் உப்வாஸ் னு ஒன்னும் சாப்பிடலையே....

ருத்ரப்ரயாக் மோனல் ரிஸார்ட்ஸ் வந்து சேர்ந்தப்ப மணி மூணு!   இந்தமுறை  வேற  அறை கிடைச்சது.  அதனால் என்ன? எல்லா  அறைகளிலும் இருந்து அலக்நந்தா தெரியுதே!

 கொஞ்ச நேரம் ஓய்வுக்குப்பின்  கீழே ரிஸார்ட்டைக் கொஞ்சம் சுத்திப் பார்க்கலாமேன்னு போனோம். டைனிங் ஹாலைக் கடந்து  பின் முற்றத்துக்குப் போனப்ப நம்ம அஸ்ஸியைப் பார்த்தோம்.  ஒரு டீ கொண்டு வரச் சொல்லலாமேன்னு  நினைச்சு, வேற எதாவது ஸ்நாக்ஸ் இருக்கான்னு கேட்டதுக்கு,  பகோரா பண்ணிக் கொண்டு வரட்டான்னார்.  இவுங்களுக்கு  வ வும் வராது, ட வும் வராது !  வடையே இங்கே பரா தான் :-) சரின்னுட்டு நாங்க இன்னும் கீழே இறங்கி தோட்டத்தைச் சுத்திப் பார்த்துக்கிட்டு இருந்தோம்.


ரொம்ப அழகாத்தான் இருக்கு இடம்.  வேறெங்கேயும் போகாம ரெண்டு நாள்  ரெஸ்ட் எடுத்தாக்கூடத் தேவலைதான். நமக்குத்தான் கால்லே சக்கரம் இருக்கே.....  அப்படி ரெண்டு நாள் தங்குனா மட்டும் ச்சும்மா இருந்துருவொமா? அக்கம்பக்கத்துலே என்ன இருக்கு பார்க்கன்னு தேடிக்கிட்டு ஓடமாட்டோம்?
தோட்டத்தில் இருக்கும் குட்டி நீச்சல்குளத்தில் அந்த ஸெவன் சிஸ்டர்ஸ் ஒன்னாவே நீந்திக்கிட்டு இருக்காங்க. என்ன ஒத்துமைப்பா!!!
கொஞ்ச நேரத்துலே  ஆள் வந்து நம்மைக் கூப்புட்டுட்டுப்போனார்.  புழக்கடை முற்றத்தில் நமக்கான தீனி ரெடி!   தட்டு நிறைய பஜ்ஜி!  ஆஹா....  இதுதான் அந்த பகோராவா!!!!  சென்னையில் இருந்தாரே... அப்ப கத்துக்கிட்டதுதானாம்!  அப்டிப்போடு!  கூடவே அட்டகாஸமான மஸாலா டீ!

கொஞ்சநேரம் அங்கே இங்கேன்னு சுத்திட்டு,  மூணுநாளா  வைஃபை  இல்லாத  வாழ்க்கையாப் போச்சேன்னு இப்பக் கிடைச்சதை விடமுடியாம வலை மேயறதும் வாட்ஸப்பில் பேசறதுமா இருந்தோம்.

இன்றைக்கும் நல்ல கூட்டம். ஏற்கெனவே சொன்னாப்லெ   கேதார் பத்ரிக்கு இது சென்ட்டர் பாய்ண்ட்.  சென்னைத் தோழிகள் ரெண்டு பேர்  ஒரு குழுவில் சேர்ந்து வந்துருந்தாங்க.  கலா, சுஜாதான்னு பெயர்கள்.   கேதார்நாத் தரிசனம் ரொம்ப நல்லா அமைஞ்சதாம்.  நாளைக்கு பத்ரி!  நானும் பதிலுக்கு.... பத்ரி தரிசனம் நல்லா அமைஞ்சது, நாளை  ரிஷிகேஷ்னு  சொன்னேன் :-)

கீழே கொஞ்ச தூரம் போனால் ஒரு கோவில் இருக்காம்,  வர்றீங்களான்னு  கூப்ட்டாங்க.  கொஞ்சம் நடக்கணும்.  பாதை அவ்வளவா சரி இல்லைன்னு  சேதி.   ஒழுங்கா ஊர் திரும்பணுமேன்னு  என் கவலை.  நீங்க போயிட்டு வாங்கன்னுட்டேன். அவுங்க   மோனால் தோட்டத்துக்குள்ளே இறங்கி நடந்து போனாங்க.
நாங்க அறைக்குப்போயிட்டோம். அங்கே அலக்நந்தா!

ராத்ரி சாப்பாட்டுக்கு  டைனிங் ஹால் போனால் அங்கே கலாவும் சுஜாதாவும் இருந்தாங்க.  ரொம்பச் சின்னக் கோவிலாம். உள்ளே ஒரு சிவலிங்கம்.  அங்கிருந்த பூஜாரி, கோவிலுக்கு எண்ணெய் வாங்கித் தரச் சொல்லிக் கேட்டாராம். இவுங்களுக்குக் கடை கண்ணி விவரம் இல்லாததால்... திரும்ப மோனல் வந்து இங்கத்து  பணியாளர்களில் ஒருவரிடம்  உதவி கேட்டுருக்காங்க. அவர் போய்  வாங்கி வந்து  கொடுத்துருக்கார்.  அதைக் கொண்டுபோய் கோவிலில் கொடுத்துட்டு வந்தாங்களாம்.  ரொம்ப நல்ல சமாச்சாரமுன்னு பாராட்டி வாழ்த்தினேன்.  சாமியும் தனக்கு வேண்டியதை இப்படி பக்தர்கள் மூலமாத்தான் நிறைவேத்திக்குது!

நம்ம கொ ப செ. துளசி(தளத்தின்)மஹாத்மியத்தை அவுங்களுக்கு எடுத்துரைத்தார்.  செல்லில் சாம்பிள் காமிச்சதும் (அதான் வைஃபை இருக்கே!) உடனே வாசகர் சதுரத்தில் சேர்ந்துட்டாங்க!!!

பேசிக்கிட்டே சாப்புட்டு முடிச்சு அறைக்குத் திரும்பினால் அவுங்களும் நம்ம தளத்தில்  பக்கத்து அறையில்தான்! நல்லதாப் போச்சு. காலையில் சந்திக்கலாம்.

நல்லாத் தூங்குங்க!  குட் நைட்.

தொடரும்.............  :-)


11 comments:

said...

அப்படி அவ்வளவு சிக்கனமா தண்ணீர் குடிக்காமல் இருப்பது உடம்புக்குக்கெடுதல் இல்லையோ!

said...

பொதுவெளிகளில் கழிப்பறை இந்தியாவில் மிகப்பெரிய பிரச்சனை. குறிப்பாக பெண்களுக்கு. ஒரு முறை திருத்தணியில் கழிப்பறைக்குள் நுழைந்துவிட்டு உயிரே போனாலும் போகட்டும் என்று வெளியே ஓடி வந்ததெல்லாம் நினைவுக்கு வருகிறது. ஐரோப்பிய அமெரிக்க ஆசிய நாடுகளுக்குப் போயிருக்கிறேன். எந்த ஊரை எடுத்துக் கொண்டாலும் ஆண்களை விட பெண்களுக்குச் சற்றுத் திண்டாட்டாட்டம் தான். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கழிப்பறை பார்க்க நன்றாகப் பராமரிக்கபடுவதைப் போலத் தெரிகிறது. தொடர்ந்து பராமரித்தான் நன்று.

ஓட்டலில் இருக்கும் தோட்டம் மிக அழகு. அந்தத் தொங்கும் ஊஞ்சலில் உயரம் மிகக் குறைவாக இருக்கிறதே. கிட்டத்தட்ட தரையில் உட்கார்ந்தது போல இருக்கிறது.

அடடா... பஜ்ஜியை பக்கோரான்னு சொல்லிட்டானே. என்னவொரு வேதனை. வடக்கே பக்கோரக்களை மக்கள் சாலையோர உணவுவிடுதிகளில் விழுங்குவதைப் பார்த்திருக்கிறேன். பக்கோரா என்றால் நம்ம ஊர் பக்கோடா போல இருப்பதில்லை. கிட்டத்தட்ட பஜ்ஜி போலத்தான். பிரட் பக்கோரா என்பார்கள். என்னவென்று பார்த்தால் பிரட் பஜ்ஜி.

said...

கோவில் தரிசனம் தொடர்கிறேன்.

நந்தப்ரயாக் கரைகள்ல நிறைய மரக் கட்டைகள் இருக்கே. அதெல்லாம் தண்ணீரில் அடித்துவரப்பட்டதா அல்லது இறந்தவர்களை கரையோரமாவே எரித்து தண்ணீரில் தள்ளுவதற்காக உபயோகப்படுகிறதா? காய்கறி கடை-கண்ணுக்குக் குளிர்ச்சி.

ஸ்வச் பாரத்-இப்படில்லாம் கொஞ்சமாவது டெவெலப்மென்ட் இருக்கா?

said...

அருமை நன்றி தொடர்கிறேன்.

said...

நமக்குத் தேவைப்படும்போது இந்த கழிப்பறைகள் கண்ணில் படாது

said...

வாங்க ஸ்ரீராம்.

இந்தியாவில் மட்டும்தான் இப்படி. மற்ற நாடுகளில், பொருளாதாரத்தில் ரொம்பவே கீழ் நிலையில் இருக்கும் நாடுகளில் கூட கழிப்பறை வசதிகள் நல்லாவே இருக்கு. அதிலும் பயணிகளுக்கான ஏற்பாடுகள் நல்லாதான் செஞ்சுருக்காங்க.

ஏன் இந்தியா இப்படிக் கிடக்குன்னுதான்..... செல்ஃபோனுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் இதுக்கு இல்லை பாருங்களேன்..... :-(

said...

வாங்க ஜிரா.

பயணிகளுக்குப் பெரிய பிரச்சினை இருக்குன்றதை.... சுற்றுலாத்துறை புரிஞ்சுக்கவே இல்லை....

தொங்கு ஊஞ்சல் ஏன் அப்படி உயரக்குறைவுன்னு தெரியலை. ஒருவேளை சங்கிலி அறுந்துபோயிருச்சோ என்னவோ....

போண்டா மாதிரி இருப்பதை இங்கே பஜ்ஜியான்னு சொல்றதை கவனிச்சீங்களா? :-)

எப்படியோ நாமும் புரிஞ்சுக்கிட்டுத் தின்னு வைக்கலாம் :-)

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

அதெப்படி நீங்களாகவே எரிச்சுத் தண்ணீரில் தள்ளுறாங்கன்னு சொல்றீங்க? இப்பெல்லாம் இதைத் தடை செஞ்சாச்சே....

வெள்ளத்தில் அடிச்சுக்கிட்டு வந்த கட்டைகளாத்தான் இருக்கும்.

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

கண்ணில் படும்போது பயன்படுத்திக்கணும். பயணங்களில் இதுதான் .....

said...

இந்தியாவில் பயணிப்பவர்களுக்கு பெரும் தொல்லையே கழிப்பறை வசதிகளும் உணவும் தான். உணவாவது அந்த அந்த ஊர் உணவினை உண்டு கொள்ள முடியும். முதலாவது கடினமான விஷயம் - குறிப்பாக பெண்களுக்கு. ஹிமாச்சலப் பிரதேசம் பகுதி முழுவதும் பேருந்து பயணத்தில் சாலையோரத்தில் நிறுத்தி “போய்ட்டு வாங்க”ன்னு சொல்லும் ஓட்டுனர்கள் தான்!

தொடர்கிறேன்.