Wednesday, July 19, 2017

சென்னை கொஞ்சம் அடாவடிதான்ப்பா :-( (இந்திய மண்ணில் பயணம் 32)

நம்ம  ஷிவாலிக்வியூ ஹொட்டேல் இருப்பதே செக்டர் 17தான். இதுதான் சண்டிகரின் மெயின் ஷாப்பிங்  சென்ட்டரும் கூட.  கடைகள் பத்து  மணிக்குத்தான் திறக்கறாங்க என்பதால் நாமும் கொஞ்சம் நிதானமாகவே கிளம்பினோம். கீழே ரெஸ்ட்டாரண்டில் ப்ரேக்ஃபாஸ்ட் ஆச்சு. பஃபேதான்.  ஊத்தப்பம் இருந்தது.  பார்த்தேன் :-)

 மகள் கல்யாணத்துக்கான உடுப்பு வாங்கிக்கணும். அதுவுமே கூட  நம்ம இஷ்டத்துக்கு வாங்க முடியாது !  டிஸைன், கலர்  எல்லாம் மணப்பெண் விருப்படி இருக்கணும்தானே?  நாம் சண்டிகரில்  கொஞ்சநாள் வசித்தப்ப,  மகள் கல்யாணத்துக்கு  உடைகள் இங்கே வாங்குவோமுன்னு கனவில் கூட நினைச்சதில்லை.

மகளுடைய  கல்யாணம் நிச்சயமானதும்,  மணப்பெண் உடுப்பு என்னன்னு தீவிரமா உக்கார்ந்து பேசுனப்பதான்....  பொதுவா வெள்ளைக்காரங்க போட்டுக்கும் கல்யாண கௌன் மேலெ அவளுக்கு  அவ்வளவா ஆசை இல்லைன்னும்,  கொஞ்சம் இண்டியன் டச் இருக்கணுமுன்னு  ஆசைப்படறதாகவும் சொன்னதே எனக்கு பெரிய மகிழ்ச்சி.  புடவை அழகு என்றாலும் கூட  ஒருமுறைக்குப்பின்  கட்டிக்கவும் இங்கே என்ன சான்ஸ் இருக்கு?  லேய்ங்கா (காக்ரா)வாங்கினால் பார்ட்டி ட்ரெஸாக் கூடப் பயனாகும்.

வலை எதுக்கு இருக்காம்?  மேய்ச்சலில் பலவிதமான  வகைகளைப் பார்த்ததும்  சரின்னுட்டதால், பயணத்துலே இவ்ளோதூரம் போகப்போறோமே.... அப்படியே  சண்டிகரில் வாங்கிக்கலாமுன்னு  முடிவு செஞ்சோம்.
இந்த செக்டர் 17 ஷாப்பிங்  ஏரியா ரொம்பவே பெருசு.  மால் என்று சொன்னாலும்...  பெடஸ்ட்ரியன் மால் என்றே சொல்லணும்.  பிரமாண்டமான கட்டடங்கள்  எல்லாம் இல்லை.  சண்டிகர் நகர அமைப்பில்  இந்த பிரமாண்டங்களுக்கு அனுமதி இல்லை. அதிகப்படி தரைதளம் தவிர மேலே ரெண்டு/ மூணு மாடிவரைதான். கட்டடங்களும்  ஒன்னோடொன்னு  இடிச்சுக்கிட்டு நிக்காது. ஒரு சாம்பிள் படம் இங்கே பாருங்க.
திறந்த வெளி தாராளமாக இருக்குமிடம். அங்கங்கே மரங்கள். நீரூற்றுகள்னு  பார்க்கவும்  நல்லாவே இருக்கும்.  கலைநிகழ்ச்சிகள் கூட  இந்தத் திறந்த வெளியில் நடத்துவாங்க.  சுருக்கமாச் சொன்னா இதுதான்  சண்டிகரின் மெரினா பீச் :-)  கடைகளுக்கு  முன்னால்  அகலமான வராந்தா  ஓடும்.  நிம்மதியாக நடக்க முடியும்.  சும்மா ஒன்னும் வாங்காமல் சுத்திப் பார்த்தாலே  ஏழெட்டு கிலோமீட்டர் நடந்துருப்போம்.
கட்டடத்துக்குள் இருக்கும் கடைகளைத்தவிர  திறந்த வெளியில்  ஏகப்பட்ட சிறு வியாபாரங்கள். கைவினைப் பொருட்கள் வாங்க வேறெங்கேயும் அலைய வேணாம்.  பேரம் பேசிக்கலாம் என்பது கூடுதல்  சுவாரஸ்யம் :-)
பார்க்கிங் கூட பிரச்சனையே இல்லை. எப்படியும் இடம் கிடைச்சுரும். நமக்குத்தான் இப்ப வண்டி கிடையாதே :-)



ஏழெட்டுக்  கடைகளுக்குள்  போய் வந்துக்கிட்டு இருக்கோம். எதுவும் சட்னு எனக்கே  பிடிக்கலை.  அப்புறம்  ஒரு கடையில் (இது  மணமக்களுக்கான விசேஷக் கடைகளில் ஒன்னு)  நாலைஞ்சு  உடுப்புகள் நல்லாவே இருக்குன்னு அவைகளைப் படங்களாக  மகளுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பினோம்.   நியூஸியின் நள்ளிரவு வரை மகள் லைனில் இருக்கணுமுன்னு  சொல்லி இருந்தேன்.
இங்கேயும் அங்கேயுமா தகவல்கள் பரிமாறி கடைசியில்  ஒரு உடுப்பு  தேர்ந்தெடுத்தாச்சு. நம்ம அளவின்படி தைச்சுக்  கொடுப்பாங்களாம். அளவெல்லாம் எழுதிக்கொடுத்து,  உடையில் சில மாற்றங்கள்  செய்யச் சொல்லி  எல்லாம்  ஒருவழியா முடிஞ்சது.

பொதுவா இந்த மாதிரி உடைகளை சினிமாவிலும், இங்கே  நியூஸியில்  வடக்கர்கள் அதிகமா வரும் விழாக்களிலும் (அதிலும்  அப்பதான் ஊரில் இருந்து புதுசா இங்கே வந்தவங்களா இருக்கணும்!) பார்த்துருக்கேன் என்றாலும் கூட  இப்படித் தொட்டுப் பார்த்ததெல்லாம் இல்லை.  உடுப்பைத் தூக்கி எடுத்துக் காமிக்கும் உதவியாளர் ஏன் ஒரு பக்கமா சாயறாருன்னு  நான் அதைக் கையில் வாங்குனப்பத் தெரிஞ்சு போச்சு. யம்மாடி.... என்னா கனம்!   இதுவே அஞ்சாறு  கிலோவுக்குக் குறையாது போல!

நாளைக்கு  மாலை  எல்லாம் ரெடி ஆகணும்.  அதுக்கு அடுத்த நாள் காலையில் கிளம்பிருவோம்.
கடையில்  நம்மைக் கவனிச்சுக்கிட்ட அனிதா,  'சாயங்காலம் ஆறு மணிக்கு  வந்துருங்க.  நான் கேரண்டி'ன்னு வாக்கு கொடுத்தாங்க.

மணி ரெண்டாகப் போகுது. இங்கேயே  ஏகப்பட்ட  ரெஸ்ட்டாரண்டுகள் இருக்குன்னாலும்  நாம் போனது  ஸ்ரீரத்னம்.  முந்தி இது சாகர் ரத்னாவா இருந்தது.  இப்ப  வியாபாரம் கை மாறி இருக்கு போல!  நம்ம வகை சாப்பாடு நல்லாவே கிடைக்கும்.    இட்லி வடையும், தோசையும் ஃபில்டர் காஃபியுமா லஞ்ச் முடிஞ்சது.



கடைகளின் வெராந்தா வழியாவும்,  மர நிழல்கள் இருக்கும் இடங்களிலுமா மெள்ள நடந்து  ஷிவாலிக் வியூ வந்து சேர்ந்தோம். நல்ல வெயில்.   நியூஸியில்  என்னதான் வெயில் மேலே ஆசை இருந்தாலும்  இங்கத்து    இந்திய  வெயிலில் நடக்க முடியறதில்லை. ரொம்ப களைப்பா  இருக்கு.  சண்டிகர்  ஒரு வேடிக்கையான  காலநிலை இருக்கும் ஊர். வெயிலும் கடுமை, குளிரும்  கடுமை.  இப்படி இருந்தும் எனக்குப் பிடிச்ச ஊர்களில் இதுவும் ஒன்னு!  நியூஸியில் இருக்கும் அத்தனை பூச்செடிகளின் வகைகளும் இங்கேயும் இருக்கு!

  இன்னொரு  சுவாரசியமான விஷயம் தெரியுமோ?  நம்ம சென்னையை விட இங்கே  சுத்தம் அதிகம் , வீட்டு வாடகையும் கம்மி!  சென்னை வீட்டுக்குக் கொடுத்த வாடகையில்  பாதிதான் இங்கே அதைவிட பெரிய வீட்டுக்குக் கொடுத்தோம்.  இங்கே வீட்டுக்கு அட்வான்ஸ் கூட  அதிகபட்சம்   ரெண்டு மாச வாடகைதான். சென்னை கொஞ்சம் அடாவடிதான்ப்பா  :-(

வந்த வேலை முடிஞ்ச நிம்மதியில்  வேறெங்கும் சுத்தப் போகலை.  அறையில் வைஃபை கிடைப்பதால் வலை மேயல், பகல் தூக்கம்னு பொழுது போயே போயிருச்சு. அப்பதான்  நம்ம கோவிலில் இருந்து சேதி வருது, நேத்து நாம் கொடுத்த செக்கை அவுங்க  கோவில்கணக்குலே கட்டியாச்சுன்னும், ஆனால் கோவில் கணக்குலே  பணம் வரவு  வைக்கலைன்னு.....   இது என்னடா புதுக் கஷ்டமுன்னு நாம் நம்ம பேங்க் பக்கம் போய்ப் பார்க்கிறோம்... நம்ம கணக்குலே இருந்து பணத்தை எடுத்துருக்காங்க. அப்ப அந்த க் காசு எங்கே போச்சு?  மேலும் கோவிலில் அந்தக் காசுக்கான   உடனடிச்     செலவு வாசலாண்டை காத்துருக்கு.

இதுலே கொஞ்சம் விசாரிப்பு என்ன ஏதுன்னு பார்க்கன்னும் நேரம் போயிருச்சு. அப்புறம் நம்மவர் கோவில்  அக்கவுண்டுக்கு நேரடியாவே  காசை அனுப்பிட்டார்.  பாவம் கோவில் மேனேஜ்மென்டுக்கு மன உளைச்சல் ஆகிப்போச்சேன்னு இன்னும் கொஞ்சம் கூடுதல் பணத்தைத் தான்  அனுப்பினார்.   திரும்ப  கோவில் அக்கவுண்ட் இருக்கும் பேங்கைக் கூப்பிட்டுப்பேசி இன்றைக்குக் காலையில் போட்ட செக்கை வாபஸ் வாங்கிட்டாங்கன்னது ஓக்கேன்னாலும்.... நம்ம கணக்கில் இருந்து எடுத்த காசு போன இடம் எதுன்னு  தலைவலி.    அப்புறம் தலைவலி தீர்க்கப்பட்டது :-)

இதுலே என்ன விசேஷமுன்னா... நம்மவர் முதலில் ஒரு தொகையை நினைச்சுருக்கார். அப்புறம்  அதைவிடக் குறைவான தொகைக்கு செக் எழுதியிருக்கார்.  முருகன் இதைக்  கவனிச்சுக்கிட்டே இருந்துருக்கான் போல... ஒரு திருவிளையாடல் பண்ணிப்புட்டான். முதலில் நினைச்சதைத்தான் கோவில் அக்கவுண்டுக்கு நேரடியா அனுப்பினாராம்.  இதெல்லாம் எனக்கு முதலில் தெரியாது. எல்லாம் சுபமாக முடிஞ்சபிறகுதான் என்னிடம் சொல்றார்.... 'இவன் பெரிய ஆளும்மா....  கொஞ்சம் குறைச்சு செக் எழுதுனதுக்கு  என்னமா வேலை காமிச்சு கூடக் காசு வாங்கிக்கிட்டான் பாரு'ன்னு!
"நீங்கதான் அவனுடைய பக்தனாச்சே.....  உங்களைப்போல அவனும் விவரமானவனாத்தானே இருப்பான்"

இப்ப கல்யாண உடுப்பின் கனத்துக்காக கூடுதலா  ஆளுக்கு ஒரு அஞ்சு கிலோவுக்கு எக்ஸ்ட்ரா பேகேஜுக்குப் பணம் கட்டினார் நம்மவர் ஆன்லைனில்.  ஏர்ப்போர்ட் போனபிறகு எடை பார்த்துட்டு வாங்கலாமேன்னேன்.  அதுக்கு  அங்கே போய்க் கட்டுனா  ரெண்டு மடங்கு !
எல்லா நாடுகளுக்கும் பஞ்சாபிகள் மட்டும் எப்படிக் கூட்டங்கூட்டமாப் போயிடறாங்கன்னு  பார்த்தீங்கன்னா......   மேலே  இருக்கு  சூக்ஷமம் :-)
சாயங்காலம்  ச்சும்மா ஒரு  வாக்கிங் மட்டும்தான்.  சாலையின் ரெண்டு பக்கங்களிலும் அகலமான நடைபாதைகள், வா வான்னு கூப்பிடுது!
ராத்திரி டின்னர்  முடிச்சுக்கிட்டு,  தோட்டத்தில் ஒரு நடை.  ஹொட்டேல் தோட்டம் கூட அழகாத்தான் வச்சுருக்காங்க.

அரசு நடத்தும் நிறுவனம்  இப்படித் தனியார் இடம் போல அருமையா இருக்குன்றதை....  நம்பத்தான் முடியலை.    ஏற்கெனவே  இங்கே  குப்பை கொட்டுன காலத்தில்  சில நம்ப முடியாதவைகள் எல்லாம் பார்த்துருக்கேன்.  எடுத்துக்காட்டு.....

அரசு நடத்தும்  சிறார் இல்லம்! 

தொடரும்.......:-)



17 comments:

said...

ரசித்தேன்.

said...

படித்தேன். தொடர்கிறேன்.

said...

சண்டிகரில் பார்க்கும் இடமெல்லாம் சுத்தம் பளிச்சிடுகிறது.. பார்க்கவே மனசுக்கு நிறைவாய் உள்ளது.

மகளின் திருமண உடைத்தேர்வு அனுபவம் சுவாரசியம். :)))

said...

சண்டிகர் - அழகிய நகரம் - வடக்கில் எனக்குப் பிடித்த இடமும் கூட......

said...

சண்டிகர் ரசிக்கும்படி உள்ளது. உங்கள் பாணியில் கூறி விதம் அருமை. எங்களுக்குப் பார்க்க ஒரு வாய்ப்பு தந்தமைக்கு நன்றி.

said...

சண்டிகார் அருமையா இருக்கு, அரசுக்கு நன்றி.

said...

தொடர்கிறேன் மேம்

said...

முருகன் தன் மேல அன்போட இருக்குறவங்க கிட்ட உரிமையோட எதையும் கேட்டு எடுத்துக்குவான். அதே போல அவங்களுக்கு ஒன்னு தேவைன்னா கூப்பிடாமலே வந்து நிப்பான். இது என் அனுபவ உண்மை. உங்களுக்கு நடந்த நிகழ்ச்சியும் அதத்தான் சொல்லுது. கந்தன் கருணைக்கு கணக்கேயில்லை.

சண்டிகர் ஊரைப் பாக்கனும்னு எனக்கும் ரொம்ப ஆசை. ஒரு டிரிப் போடனும். படங்களைப் பாத்தா நல்லாயிருக்கு.

சென்னைல வீட்டு வாடகை எக்கச்சக்கம் தான். பெங்களூரில் இன்னும் கொடூரம். வீட்டு வாடகை ஒரு பக்கம் இருக்க, சில நேரங்கள்ள வீட்டில் குடியிருக்கும் மக்களோட வேலைகளும் எக்கச்சக்கம். எங்க அப்பார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸ்ல ஒரு வீட்டை ஒரு வருடத்துக்குள்ளயே காலி பண்ணீட்டாங்க. ஓனர் வந்து பாத்தா வீடெல்லாம் சொவரு முழுக்க பென்சில் கிறுக்கல்கள். இத்தனைக்கு பத்து மாதத்துக்கு முன்னாடிதான் பெயிண்ட் அடிச்சு வாடகைக்கு விட்டிருக்காரு. இப்படியும் சிலர்.

இன்னைக்கு தொலைக்காட்சில வந்த செய்தி ஒன்னு. சில இளம் பெண்கள் ஒரு வீட்டை வாடகைக்கு கேட்டிருக்காங்க. எதோ மசாஜ் செண்டர் தொடங்கவாம். வீட்டுக்காரர் மறுத்திருக்காரு. வீட்டு மேலயும் அவரோட ஸ்கோடா கார் மேலயும் கல்லைப் போட்டு அடாவடி பண்ணிருக்காங்க அந்த பொண்ணுங்க. வீட்டுக்காரரையும் அந்தப் பொண்ணுகளையும் போலீஸ் கைது பண்ணீருக்காங்க.

said...

வாங்க கந்தசாமி ஐயா.

நன்றி.

said...

வாங்க ஸ்ரீராம்.

தொடர் வருகைக்கு நன்றி.

said...

வாங்க கீத மஞ்சரி.

அப்படி அப்பழுக்கே இல்லாத ஊர் கிடையாது. ஆனால் சென்னைக்கு நூறு மடங்கு சுத்தம் !

காஞ்சிபுரத்துலே போய் புடவைகள் எடுக்க முடியாமப்போயிருச்சேப்பா............ :-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

இப்ப எனக்கும்கூட சண்டிகர் ரொம்பப் பிடிச்சுப்போச்சு. அங்கே போய் செட்டிலாகிடலாமான்னு கூட சில சமயம் தோணுது!

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

அங்கே வசித்த காலத்தில் ஊரைப் பற்றியும் அந்த வாழ்க்கை பற்றியும் எழுதியிருக்கேன். நேரம் இருந்தால் எட்டிப் பாருங்கள் :-)

ஆரம்பம்.... இங்கே !

http://thulasidhalam.blogspot.co.nz/2010/03/blog-post_15.html

said...

வாங்க விஸ்வநாத்.

அரசு நல்லா செய்யுது. அதிகாரிகளும் நாம் பார்த்தவரையில் நல்லவங்களாகவே இருக்காங்க!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

தொடர்வருகைக்கு நன்றிகள்.

said...

வாங்க ஜிரா.

நம்ம மக்களுக்குச் சுதந்திரம் என்றால் என்னன்னே தெரியலை......

அடுத்தவன் பொருளை அழிப்பது சுதந்திரமுன்னு நினைப்பு.

Freedom comes with responsibility என்பதை உணர மறுக்கும் சனம்:-(

சண்டிகர் வாய்ப்புக் கிடைத்தால் தவற விடவேணாம்.

said...

மீண்டும் சண்டிகர் திருமண ஆடை தெரிவு படங்கள் பகிர்வு அருமை.