Wednesday, April 24, 2019

கனவு மெய்ப்பட....... (பயணத்தொடர், பகுதி 95 )

ராமராஜ்யத்தில் இருந்து திரும்பி வரும் வழியில் அடையார் வந்துருச்சு :-)சட்னு போய் நம்ம  அநந்தபதுமனைக் கும்பிட்ட கையோடு தோழி வீட்டுக்கும் போய் தலையைக் காமிச்சுட்டு வந்தோம்! 
"இப்படி ஃப்ளையிங் விஸிட் நல்லாவா இருக்கு?  வந்து இருந்து பேசி மகிழ்ந்து , சாப்பிட்டுப் போகாம.... "   திட்டுனாங்க. வாங்கி வச்சுக்கிட்டேன்.

ரொம்ப நேரம்  இருந்து பேச ஆசைதான்..... ஆனால்.....

 லோட்டஸுக்குப் போய் வண்டியைக் 'கணக்குத் தீர்த்து' அனுப்பியும் ஆச்சு!

அதுக்குள்ளே நம்ம  சீனிவாச ஆச்சாரி (மங்கேஷ் தெரு ) வேலை முடிஞ்சதுன்னு சேதி அனுப்பினார்.  என்ன ?  ஹாஹா.... இதே பயணத்தொடர் முப்பத்தியெட்டுலே சொன்ன  வேலைதான்!


கொஞ்சம் வெயில் தாழ வர்றோமுன்னு சொல்லி, அதே போல் ஒரு நாலரைக்குக் கிளம்பிப் போற வழியிலேயே கீதா கஃபே கீரைவடையையும் காஃபியையும் விட்டு வைக்கலை.  ஸ்டாண்டர்டு ரேட்.... அம்பது ஆட்டோவுக்கு!

நான் மருமகன் மெச்சிய மாமியார்னு சொல்லி இருந்தேனே....  ஓர்மையுண்டோ?

சீனப்பயணத்தில் நமக்குக் கிடைச்ச மூன்று முத்துகளுடன், மருமகன் கொடுத்த  முத்து (கரீபியன் க்ரூஸ் போன  மகளும் மருமகனும் கொண்டுவந்த  முத்துகளில் மருமகன் தன் பங்கை எனக்குக் கொடுத்தார்) சேர்த்துச் செய்த பென்டன்ட் நல்லாத்தான்  இருக்கு!
மகளுக்காக  சில மூக்குத்திகள், சில பல ரிப்பேர் வேலைகள்,  பழசை அழிச்சுட்டுச் செஞ்ச செயின் இப்படி  எல்லாத்தையும்  கணக்குப் பண்ணி வாங்கினதும் திரும்ப பாண்டிபஸார் வந்தோம்.
டெக்னாலஜி மாறும்தோறும் நாமும் நம்மை மாத்திக்க வேண்டித்தான் இருக்கு இல்லையோ.....

நமக்குக் கிடைத்த தகவலின் படி இன்னொரு 'கடை' யைத் தேடிப்போய்க்கிட்டு இருக்கோம்.  வழியில் நடைபாதை பூக்கடையில் கண்ணைக் கட்டி இழுக்கும் பூக்களை அப்படியே விட்டுட்டுப் போக முடியுதா?
அதுபாருங்க.....   வீடியோ கேஸட்டுகள் நிறைஞ்ச  உலகில் நாம்  இருந்தப்ப, நாம் எடுக்கும் வீடியோக்கள் எல்லாம்  விஹெச்எஸ் கேஸட்டில் பதிவு பண்ணதுதானே.....   சரித்திர சம்பவங்கள் நிறைஞ்ச அதுகளை..... ச்சும்மாப் போட்டு வச்சு என்ன பயன்?  வரலாறு முக்கியம் இல்லையோ.....

எப்பவாவது போட்டுப் பார்க்கலாமுன்னா இப்ப வீடியோ கேஸட் ப்ளேயர்க்கு எங்கே போறது?
அதனால்  அவைகளை டிவிடியாக  மாத்திக்கணும்னு  ஒரு ஏழெட்டைக் கொண்டு போயிருந்தோம்.  நம்ம குமார் கடையின் மாடியில்தான்( 101 பாண்டி பஸார், பிக் பஸாருக்கு எதிர்வாடையில்)  ஃபோட்டோ ஸ்டுடியோவுடன் இந்தக் கடை(!)யும் இருக்கு.  ஓனர் எஸ். ஆனந்த். (Zenith Photo Studio)  'அது ஒன்னும் பிரச்சனையே இல்லை. டிவிடியில் எல்லாத்தையும் மாத்திப் பதிஞ்சுட்டு அப்படியே உங்க பென்ட்ரைவிலும் போட்டுக்கொடுத்துடறேன்'னு  சொல்லிட்டார்.
நாலைஞ்சு நாள் ஆகுமே பரவாயில்லையான்னதுக்கு, நாம் சொன்னோம் 'அது ஒன்னும் பிரச்சனையே இல்லை' :-)

அறைக்கு வந்தவுடன்,  இப்போ கையில் இருக்கும் மாலை நேரத்தை என்ன செய்யலாமுன்னு பார்த்த 'நம்மவர்'  நாடகம் ஒன்னு இருக்குன்னார்.

நம்ம பொழைப்பே நாடகமான்னா இருக்கு :-) இல்லையோ!!!

எனக்கு நாடகம் ரொம்பவே பிடிக்கும். அதுலே நடிக்கணுமுன்னா அப்படி ஒரு ஆர்வம். நம்ம தமிழ்ச்சங்கத்துலே ஒரு காலத்துலே  மூணு நாடகம் இயக்கியும் இருக்கேன்.  நாடகம் எழுதுனது  யாராம்?  நம்ம ரங்கா !   அந்தக் காலத்தில் ஃபோரம்ஹப்   ஒரு யாஹூ குழு இருந்துச்சு.  தமிழில் பேசி எழுதறாங்கன்ற  சேதியைச் சொன்னவர் 'நம்மவர்'தான். எப்படிக் கண்டுபிடிச்சார்னு நான் கேட்டுக்கவே இல்லை. அப்பம் தின்னால் போறாதா? குழி எத்தனைன்னு ஏன் எண்ணனும்?

நாமும் வீட்டுக்கம்ப்யூட்டர் வாங்குன புதுசு(1994) என்பதால் எப்பவும் அதுலே என்ன செய்யலாமுன்னு  அதீத ஆர்வம் வேற :-)

அந்தக் குழுவில் போய்ச் சேர்ந்துக்கிட்டேன்.  இப்ப இருப்பதுபோல் எளிதாத் தமிழ் எழுத முடியாது...... டிஸ்க்கின்னு  ஒரு எழுத்துருவில்  வரும். இப்ப நினைச்சால் கனவு போல இருக்கு! அப்ப இருந்து துளசிதளம் ஆரம்பிக்க பத்துவருசம் ஆகி இருக்குன்னு சொன்னா நம்பணும், ஆமா!  நல்லவேளை நம்ம காசி ஆறுமுகம், யூனிகோடு தயாரிச்சு வாழ்க்கையை எளிதாக்கினார் !  அவருக்கு என் நன்றியை இங்கே பதிவு செஞ்சுக்கறேன்.

ஃபோரம் ஹப்பில் சிறுகதைகளும், நாடகங்களும் நிறைய வந்துக்கிட்டு இருந்துச்சு. அதுலே இருந்து,  நம்ம ரங்காவின் 'தச்சக் கவிஞர்' நாடகத்தை அவர் அனுமதியோடு நம்ம தமிழ்ச்சங்கத்துலே நடத்தினோம். நான் தான் அந்த தச்சக் கவிஞன் :-) அது பயங்கர வெற்றி !  அதற்குப்பின் இன்னும் ரெண்டு நாடகங்களையும்  நடத்தினோம்.  அதெல்லாம் ஒரு 'கனவுக் காலம்'!!!  போகட்டும்.... இப்போ நனவுக்கு வரலாம்.
இங்கே பக்கத்துலே வாணிமஹாலில்தான் கனவு மெய்ப்பட என்ற நாடகம் ஆறேமுக்காலுக்கு இருக்குன்னார்.  சட்னு கிளம்பிப் போனோம்.  டிக்கெட் வாங்கிக்கலாமுன்னு போனால்....   ஆல் ஆர் வெல்கம்னு சொல்லிட்டாங்க.   அட!  நாடகமுமா!!!  இதுவரை இலவச நாடகம் ஒன்னுகூடப் பார்க்கலையேன்னு இனி நினைக்கக்கூடாது....  எல்லாம் ஒரு அனுபவம் :-)
டம்மீஸ் ட்ராமான்னு ஒரு குழு சென்னையில் நாடகம் நடத்திக்கிட்டு இருக்காங்க.  ஸ்ரீவத்ஸன், கிரிதரன் அண்ட் கிருஷ்ணமூர்த்தி என்ற மூவரின்  கனவு,  நலிந்துபோய்க் கொண்டிருக்கும் நாடகக்கலைக்குப் புத்துயிர் கொடுத்து அதை மக்களுக்குக் கொண்டு செல்வது!  இதுக்காக  அவுங்க ஆரம்பிச்ச இந்த டம்மீஸ் ட்ராமா க்ரூப், டம்மீஸ் க்ரியேஷன்ஸ் என்ற  அமைப்பில்  1998 இல்  முதல் நாடகமான Womens Rea  மேடையேறி இருக்கு. 

நாடகம் முழு வெற்றி !  அதுக்குப்பிறகு   மேலேமேலே  வெற்றிப்படிகளில் ஏறிப்போய்க்கிட்டே இருக்காங்க. இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் நாடகம் இந்த வரிசையில் முப்பத்தியொன்னு! 

கனவு மெய்ப்பட என்ற இந்த நாடகம்,  இந்த வருஷத்தின் புதுசு. ஜூன் 1, 2018 இல் மேடை ஏறி இருக்கு.  இன்று ரெண்டாம் முறையாக !

வருஷத்துக்கு ஒன்னு இல்லே ரெண்டு, கூடிவந்தால் மூணு இந்தக் கணக்குதான்.  செய்யும் வேலையைத் திருந்தச் செய்யணும் என்ற உணர்வு தான் காரணம்!

அரங்கத்தில் அவ்வளவாக் கூட்டமில்லை. ரெண்டாவது வரிசையில் இடம் கிடைச்சது. முதல்வரிசையில் கண்ணை ஓட்டினப்போ.... ஒரு பிரபலம் கண்ணில் பட்டாங்க.  நாடகக்கலைஞர்  பாம்பே ஞானம்!
சரியா ஆறேமுக்காலுக்கு மேடை நிகழ்ச்சிகள் ஆரம்பம்.  இன்றைய முக்கிய விருந்தினரை மேடைக்கு அழைத்து கௌரவித்தார்கள். சம்ப்ரதாயப் பேச்சுகள் முடிஞ்சதும் ஏழு அஞ்சுக்கு நாடகம் ஆரம்பிச்சது!

சுமார் ஒன்னரை மணி நேர நாடகம் இந்த கனவு மெய்ப்பட!  ஒரு கோவில் குருக்கள்,  அவர் பூஜை செஞ்சுக்கிட்டு இருக்கற சிவன் கோவிலுக்கு ஒரு ராஜகோபுரம் இல்லையேன்னு  மனக்கவலையா இருக்கார். கோவில் தர்மகர்த்தாவும், நிதி நிலமை சரி இல்லாததால்  ராஜகோபுரம் கட்டும் எண்ணமே கனவுதான்னு சொல்லிடறார்.


ஆனால்.... இறைவனின் திருவுளம்?   கனவை நனவாக்கிக் கொடுத்துருது! எப்படி? 

அதை 'மேடையில் காண்க'ன்னு சொல்லணும் :-)

நம்ம மெட்ராஸ்பவன் சிவகுமார், இந்த நாடகத்தின் விமரிசனம் எழுதி இருக்கார்.  இங்கே பார்க்கலாம்.!

கடைசியில் ராஜகோபுரம் கட்டி,  மேளதாளம், பூரணகும்பத்தோடு  கோவில் கும்பாபிஷேகம் நடக்குது!





ச்சும்மா சொல்லக்கூடாது, செட் எல்லாம் அருமையாப் போட்டுருக்காங்க.  ரொம்பவும் ரசித்தேன்!

மூவரின் கனவாக ஆரம்பிச்ச இந்த டம்மீஸ் நாடகக்குழுவில் இப்போ அம்பது கலைஞர்கள் !

நம்ம பயணம்  முக்கால்வாசி ஆன்மிகமா இருப்பதால்  கொஞ்சம் லௌகிகமா இருக்கட்டுமேன்னு  நாடகம் பார்க்கப்போனால், நாடகமும் ஆன்மிகமா இருந்துருச்சு பாருங்க !

எல்லாம் 'அவன்' செயல்!

தொடரும்......:-)

2 comments:

said...

கொலுசு செய்பவரின் முகம் எத்தனை பிரகாசமாக உள்ளது. அற்புதம்.

said...

டீச்சரோட பதிவுகளுக்கு வந்து சிலநாட்களாச்சு. வராம இருந்ததுக்கு பொறுத்துக்கொள்ளவும்.

முத்தும் கெம்புக்கல்லும் வெச்ச தொங்கல் அழகா இருக்கு. கரீபியன் முத்தும் சீன முத்துகளும் இந்திய கெம்புக்கல்லோடு சேர்ந்து தங்கமா சொலிசொலிக்குது.

பாண்டி பஜார்ல நடக்கும் போது நான் இந்தப் பூக்கடைகளை ரொம்பவும் இரசிப்பேன். விதவிதமான மலர்கள். சம்பங்கி, மகிழம்பூ, மல்லிகைன்னு கண்ணுக்கு குளிர்ச்சியா மூக்குக்கு கமகமன்னு இருக்கும்.

கேசட்ல இருந்து டிவிடிக்கு மாத்துறது நியூசில இல்லையா? ஆகா. இங்க சிலர் பண்றாங்க. முழு கேசட்டையும் ஓட விட்டுதான் பதிவு பண்ணனும். எவ்வளவு கேட்டாங்க கேசட்டுக்கு?

நாடகமெல்லாம் பாத்து நாளாச்சு. எதாச்சும் வருதான்னு பாக்கனும்.