Wednesday, April 03, 2019

அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பன்... (பயணத்தொடர், பகுதி 87 )

ரொம்பநாளாச்சுல்லே இங்கே வந்து.....    சரியா ஒன்னும் ஞாபகம் இல்லையேன்னு  நினைச்சுக்கிட்டே  ஸ்வாமிமலை முருகன் கோவில் வாசலில் இறங்கினேன்.
காலையில் குளிச்சு முடிச்சு, ப்ரேக்ஃபாஸ்ட் ஆனதும் கிளம்பி இங்கே வந்துருக்கோம். ராயாஸில் இருந்து ஒரு ஏழரை கிமீ தூரம்தான். கிழக்குவாசல் வழியாத்தான் உள்ளே போறோம். அஞ்சு நிலை  ராஜகோபுரம் தெற்குவாசலில் இருக்கு!

உள்ளே நுழைஞ்சவுடன்  முதலில் தரிசனம் கொடுத்தவர் நம்ம வல்லபகணபதிதான்!   அண்ணனை வணங்கிட்டுத்தான் தம்பியை வணங்கணும்.  வயசுக்குன்னு ஒரு தனி மரியாதை இருக்குல்லே?
சாமி வேஷ்டி இருக்கும் அழகைப் பாருங்க.....ப்ச்....
கீழ் ப்ரகாரத்தில்  அம்பாள், சிவன், நவகிரகம் சந்நிதிகள் இருக்கு. ஆனால்  ஒத்தை ஆள் கிடையாது. நாமும்  போற போக்கில் கும்பிட்டதுதான்.



பளபளன்னு கல்யாணமண்டபங்கள் மூணு கட்டிவிட்டுருக்காங்க. ஆடி  என்பதால் ஒரு மாசம் லீவு. அதுவரை சுத்தமா இருக்கும் :-)   கோவில்களில்  கடைகண்ணிக்கு இடம் ஒதுக்கிட்டு, வாடகை வராமக் கஷ்டப்படும் நிர்வாகம் இப்படிக் கல்யாண மண்டபம் கட்டிவிட்டால் கைமேல் காசு பார்த்துடலாம். இல்லே?
'மலை'யேறி முருகனைப் பார்க்கலாமுன்னு போறோம். இது ஒரிஜினல் மலை இல்லை. கட்டுமலை.... முருகன் மலைமேலேதான் நிப்பானாம்! நிறைய   படிகட்டுகள் வச்சு மாடிக்கு ஏறிப்போகும் அமைப்பு.   ரெண்டு செட் படிகளா அமைச்சுருக்காங்க. மொத்தம் அறுபது. நல்லவேளை குறுகலாக் கட்டிவிடாம.... அகலமாவே இருக்கு. எவ்ளோ கூட்டம் வந்தாலும் தாங்கும்!


மேல்தளத்துக்குப் போய்ச் சேர்ந்ததும், இங்கேயும்  கண்ணுக்கு முன்னால் அண்ணன்தான். புள்ளையார் பெயர் நேத்ர கணபதி!  இவர்தான் போனமுறை 'நம்மவரை' ஏமாத்துனவர் :-)   கண்பார்வைக் குறைபாடு இருப்பவர்களுக்குக் கூடுதலாக் கருணை காட்டுவாராம்!  அப்படியே ஆகட்டும்.... ததாஸ்த்து.......
கோவில் குளத்துக்கும் நேத்ர தீர்த்தமுன்னுதான் பெயர்.  முருகனின் கையில் இருக்கும் சக்திவேலை பூமியில் குத்தியதும் உருவானதுன்னு சொல்றாங்க.

நிறைய தூண்களுடன் இருக்கும் பெரிய மண்பத்தைக் கடந்து முருகன் சந்நிதிக்குள் போறோம். உள்ளே பயங்கரக் கூட்டம்! என்ன விசேஷமுன்னு தெரியலை.  பெரிய குழுவாக வந்துருக்காங்கன்னு  சிலர் நாட்டாமையைப் பார்த்துத் தெரிஞ்சுக்கிட்டேன்.
விஸ்தாரமாப் பூஜை நடக்கும்போலத் தெரியுது. அவ்ளோ நேரம் அங்கே இருக்க நமக்கியலாதுன்றதால்  சட்னு மூலவரைக் கும்பிட்டுட்டுத் திரும்பிட்டோம்.  நல்ல பெரிய திருவுருவம். எதோ மேடையில் ஏறி நிக்கறாப்லெ தெரிஞ்சது!
மேலே:  ரெண்டு படங்கள் கோவில் வெப்சைட்டில் இருந்து எடுத்தவை. நன்றி !

மூலவர் முருகனுக்கு முன்  பொதுவா மயில் இருக்குமில்லையா..... இங்கே யானை ! (வாவ்! )இது முருகனின் சொந்த யானை.  பெயர் பிணிமுகம் !

கோவிலைக் காலை அஞ்சு மணிக்கே திறந்துடறாங்க.  பகல் பனிரெண்டுவரையும், மாலை நாலு முதல் இரவு பத்துமணி வரையும் முருகனை தரிசிக்கலாம். ஆறுகால பூஜை நடக்குது.

பிரகாரம் சுற்றி வந்தப்ப ராஜகோபுரமும், கருவறை விமானமுமாய் ஒரு காட்சி!  கீழ்தளத்து அம்மன் சந்நிதி விமானமோ?

சுவரில் அங்கங்கே சிலபல கல்வெட்டுகள்.  கந்த சஷ்டி கவசம் பொறித்த  கரும்பளிங்கு வகைதான்.
இங்கேயும் ஒரு திருவெழுக் கூற்றிருக்கை பார்த்தேன். அருணகிரி நாதர் இயற்றியதாம். நேத்துக்கூட நம்ம சார்ங்கபாணி கோவிலில் ஒன்னு பார்த்தோமே   .... அதே வகை!
மொட்டைமாடி தளத்தில்  அப்பனுக்குப் பாடம் சொல்லும் அழகனின் அழகான காட்சி!
தகப்பன் மடியில்  சிறுவன் முருகன்.  ஒருபக்கம் திருமால், அடுத்த பக்கம்  ப்ரம்மா !  நாரதர், புள்ளையார் , அகத்தியர், இன்னொரு  சிறுவன் (?)!  அடுத்த படி, பார்க்கிங் ஏரியா !  ரிஷபம், மூஞ்சூறு, மயில்!
ஒருமுறை ப்ரம்மனும், முருகனுமா பேசிக்கிட்டு இருக்காங்க.  பேச்சுப்போன போக்கில் , ப்ரம்மாவின் தொனியில் கொஞ்சம் ஆணவம் இருக்கறாப்பல முருகனுக்குப் படுது!  ஒன்னுமே இல்லாத மனிதப்பதர்களுக்கே  அகம்பாவம், ஆணவம் எல்லாம் இருக்கும்போது, படைப்புத்தொழில் செய்யும் ப்ரம்மனுக்கு இருந்தால் தவறா?   இது முருகனுக்குப் பிடிக்கலை......

(சாமிகளுக்கும் கூட அடுத்த சாமி எப்படி இருக்கணுமுன்னு ஒரு எண்ணம் இருக்கு, பாருங்க....)

கர்வத்தை அடக்கறேன்னு  ஒரு கேள்வி கேட்கறான்......  'ஓய் ப்ரம்மா,   ஓம் என்னும் ப்ரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா?'

சிலபஸ்லே இல்லாத கேள்வி வரும்போது  திகைப்பா இருக்காதா? என்னவா இருக்குமுன்னு யோசிக்கிறார். அதுவும் நாலு தலை இருக்கே ..... அந்த நாலிலும் யோசிச்சும்  பொருள் புரிபடலை....


 'இதுகூடத் தெரியாம நீர் என்ன படைக்கும் தொழில் புரிகின்றீர்?'னு கேட்டு நாலு தலையிலும் நாலு குட்டு வச்சுச் சிறையில்  அடைச்சு வச்சுடறான் முருகன்.

வயசுக்கு ஒரு மரியாதை தரவேணாமா? சின்னப் பையன்.... ப்ச்.  எல்லாம் தான் தேவ சேனாதிபதியா இருக்கோம் என்ற கர்வம் இல்லையோ? போதாததுக்கு  தன்னுடைய தகப்பன்  வெரி பவர்ஃபுல் சாமி என்ற அகம்பாவம். தாய்மாமனோ..... உலகத்தையேக் கட்டிக் காப்பாத்தும்  வளம் படைத்தவன்...... இப்ப யாருக்கு ஆணவம், சொல்லுங்கோ....

உயிர்கள் பிறக்கப் பிறக்கக் காப்பாத்தும் வேலை செஞ்சுக்கிட்டு இருந்த  காக்கும் கடவுள் திருமாலுக்கு..... சட்னு அஸெம்ப்ளி லைனில் ஒரு உயிரும் வரலையே.....  ஏன் நின்னு போச்சுன்னு திகைப்பு.  என்னடா இப்படின்னு பார்த்தால்.....   படைப்பவன் ஜெயிலில் இருப்பது தெரிஞ்சது.

நேரே மச்சானிடம் போய், 'உங்க புள்ளை பண்ண காரியம் பார்த்தீங்களா?  ப்ரம்மனை தண்டிக்கறேன்னு என்னை வேலையில்லாதவனா செஞ்சுட்டானே  என் மருமகன்'னு புலம்பறார்.

அடப்பாவத்த....ன்னு  தகப்பன், மகனைக் கூப்புட்டு 'மொதல்லே ப்ரம்மனை விடுதலை செய்'ன்னு சொல்றார்.  'தந்தை சொல் மிக்க மந்திரமில்லை'ன்னு உடனே விடுவிச்சுடறான் மகன்.

'இப்பச் சொல்லு.... எதுக்காக அவரை ஜெயிலில் அடைச்சே?"

" இல்லைப்பா.....  அது வந்து....  ஓம் என்ற மந்திரச் சொல்லுக்குப் பொருள் தெரியலைன்னு ........ "

" உனக்குத் தெரியுமா?"

"தெரியும்ப்பா"

" அப்பச் சொல்லு, பார்க்கலாம்"

பக்கத்துலே ப்ரம்மன் நிற்கறதைப் பார்த்துட்டு, ' இது பரம ரகசியம்.  'எல்லோரும்' கேக்கும்படி உரக்கச் சொல்ல முடியாது' ன்னதும், தகப்பனுக்குரிய வாஞ்சையோடு புள்ளையை வாரி மடியில் உக்காரவச்சு, 'அந்த ரகசியத்தை எனக்கு மட்டும் ரகசியமாச் சொல்லு'ன்னு  கேட்க, தகப்பன் காதில் பொருள் உரைத்தார்னு புராணக் கதை!  (வெரி லிட்டில் ஸ்பைஸஸ் ஆடட்)

கொஞ்சம் சத்தமாச் சொல்லி இருக்கப்டாதா? நமக்கும் தெரிஞ்சுருக்குமே.....

அப்பனுக்குப் பாடம் சொன்னது இப்படித்தான்.  முருகனின் அறுபடை வீடுகளில் இந்தக் கோவிலும் ஒன்னு!

வெவ்வேறு ஊர்களில் இருக்கும்  இந்த ஆறு கோவில்களையும்   ஒரே நாள், ஒரே இடத்தில் கூட தரிசனம் செஞ்சுக்கும் வகையில் நம்ம சென்னை பெஸன்ட் நகரில் அறுபடைவீடு கோவில் ஒன்னு கட்டி இருக்காங்க. ஆறு சந்நிதிகளிலும்,  அந்தந்த ஊர் சந்நிதியில்  எந்தத் திசை பார்த்து மூலவர் இருப்பாரோ அதே ஸ்டைலில்  அமைச்சுருக்காங்க. சந்தர்ப்பம்  கிடைச்சால் தவற விடாதீங்க.....

சென்னைக்கு இப்ப எங்கெ போறதுன்னா......   ஒரு க்ளிக்கில் எட்டிப் பார்க்கலாம்!





கீழே படி இறங்கி வரும்போது  படிப்புள்ளையாரையும் கும்பிட்டுக்கலாம்.  மேலேயும் கீழேயுமா முருகனின் திருவிளையாடல் சித்திரங்களையும்  ரசிச்சுப் பார்த்துக்கலாம்!
வெளிப் பிரகாரம் நல்ல சுத்தம்தான்!  மனசால் ஒருமுறை முருகனை நினைச்சுத் தலை உயர்த்தி மேலே பார்த்துக் கும்பிடும் போது, மதில் மேலே மயில் வரிசை, அழகோ அழகு!


இன்றைக்கான முதல் கோவில் தரிசனம் ஆச்சு.

அடுத்து.....?

வாங்க போகலாம்.

தொடரும்....:-)


10 comments:

said...

சில நாட்களுக்கு முன்பு அறுபடை வீடுகள் என்று தேர்ந்தெடுத்து கூகுள் வழியாக பயண நேரம் கிலோ மீட்டர் என்று என்ன வருகின்றது என்று மகளுடன் சேர்ந்து கணக்கிட்டு பார்த்தோம். ஆயிரத்து சொச்சம் கிலோ மீட்டர் வந்தது. நினைவில் உள்ளது. பார்க்கலாம்.

said...

சுப்ரசமணியர் தரிசனம்...


அமைதியாக...மிக அருமை மா

said...

பல முறை சென்ற கோயில். இன்று உங்கள் பதிவு மூலமாகச் செல்லும் வாய்ப்பு.

said...

சிறப்பான தகவல்களும் படங்களும்.

நன்றி.

said...

அருமை நன்றி

said...

வாங்க ஜோதிஜி.

அறுபடை வீடுகளை ஒரே பயணத்தில் தரிசிக்கணும் என்றால் கொஞ்சம் சிரமம்தான். பிள்ளைகளுக்கு லீவு நாட்கள் வரும்போது சில கோவில்கள் என்ற கணக்கில் போய் வரலாம். ஆனால் பிள்ளைகளுக்குக் கோவில் விஸிட் விருப்பம் இருக்கணும். சின்ன வயசு பாருங்க....

said...

வாங்க அனுப்ரேம்

நன்றிப்பா !

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

உங்க ஊர் கோவில்! நீங்க பலமுறை தரிசனம் செஞ்ச பாக்கியசாலி !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !