Friday, April 06, 2012

அறுபடை வீடு கொண்ட திருமுருகா.........

ஒரே நாளில் இன்னின்ன கோவில்களில் போய் கும்பிட்டால் இன்ன பலன், இதுக்கு ரொம்ப விசேஷம் என்றெல்லாம் சொல்லி மக்களைப் பைத்தியமா அடிப்பதைக் கேட்டுருக்கீங்கதானே? சிவாலய ஓட்டம் என்ற பெயரில் ஏகப்பட்ட சிவன் கோவில்கள் லிஸ்ட். வைகுண்ட ஏகாதசிக்கு இந்திந்த பெருமாள் கோவில்கள். சக்தி வழிபாடுன்னு ஏகப்பட்ட அம்மன் கோவில்கள்.இப்படிப் புதுசுபுதுசா பக்தி பெருகி வழிஞ்சோடும் காலம் இது. முருகனை மட்டும் சும்மா விடமுடியுமா? பங்குனி உத்திரத்துக்கு அறுபடை வீடுகளையும் ஒரே நாளில் கும்பிடணும். அப்பத்தான் முக்தின்னு சொன்னாங்கன்னு வையுங்க...... ( யாரும் சொல்லலையா? போகட்டும் இப்ப நாம் சொல்லலாம்!) ஒரு நாள் எதுக்கு? ஒரே எட்டுலே , பத்தே நிமிசத்தில் பரபரன்னு ஆறுமுருகன்களையும் தரிசனம் செஞ்சுருவொம்லென்னு சவால் விடலாமா?

நம்முடைய இடப்பெயர்ச்சியில் இந்தியா, சென்னை, பெஸண்ட் நகர் என்று அமைஞ்சதும், அப்பாடா..... இனி குளிருக்கு நடுங்க வேண்டியதில்லை. அதிகாலையில் பீச் வாக்கிங் போயே ஆகணும். திரும்பி இங்கே வரும்போது முப்பது கிலோவைத் தொலைச்சுட்டு வரலாமுன்னு மனசு பரபரத்தது உண்மை!

நினைப்புதான் பொழைப்பக் கெடுக்குதாமே! கடைசியிலே நம்ம பில்டிங் லிஃப்ட் பழுதாகிப்போய் ரெண்டு மாசம் மாடிப்படி ஏறி இறங்கி இருவது கிராம் இளைச்சேன்:-)))))))))))

இந்த வீட்டுக்கு வந்த மறுநாள் காலை ஒரு அஞ்சரைக்கு எழுந்து அடுத்தாப்லே இருக்கும் அஷ்டலக்ஷ்மியை ஸேவிச்சுக்கிட்டு இளைக்க ஆரம்பிக்கலாமுன்னு கோவிலுக்குப்போனால்........ நம்ம தெரு முனையில் இடப்பக்கம் திரும்பி உடனே வலப்பக்கம் போகுது தெரு. வழி எங்கும் அழுக்கும் புழுக்குமா.....யக்:( குப்பைத்தொட்டிகள் நிறைஞ்சு வழிஞ்சு , தெருமுழுக்க வாரித் தெளிச்சுருக்கு. கண்ணை மூடிக்கிட்டுத் தாண்டித்தாண்டி எகிறிக்குதிச்சுப்போக வேண்டிய நிலமை. மூலவர் மஹாவிஷ்ணு, மஹாலக்ஷ்மி சந்நிதிக்கு எதிரில் அடைத்த பெரிய கதவு. பாவம் சாமி. கதவுக்கப்பால் என்ன நடக்குதுன்னு அவரைக் கவலைப்பட வைக்கலை நிர்வாகம். போய்ப் பார்த்துருந்தாருன்னா..... பேஷ் பேஷ் எல்லாம் மச்சாவதாரங்கள் என்று மெச்சி இருப்பார்.

சோகமாத் திரும்பிவந்தேன். மறுநாள் கடற்கரைப்பக்கம் உலா. அழகாக் கட்டிவிட்ட நடைபாதைகள் முழுக்க ஆக்ரமிச்சு மக்கள் தூக்கம். பெரிய மீன்மார்கெட் போல ஒன்னு. காலங்கார்த்தால் வயித்தைப் பிரட்டும்......கந்தம். ஊஹூம்.... இதுவும் சரிப்படாது.

மூணாம் நாள் வலப்பக்கம் போகலாமுன்னு .... இடம் வலம் என்று சின்னதாத் திரும்பினால் கோஸ்ட்டல் ரோடு! அகலமான சுத்தமான சாலை. அட! இந்த சுத்தம் எப்படி வந்துச்சுன்னு யோசனையோடு நடந்தால்..... சாலையின் பாதியில் தடுப்பெல்லாம் வச்சு போலிஸ் செக்யூரிட்டி நிக்கறாங்க. பெரிய போலிஸ் அதிகாரியின் வீடுன்னு தெரியவந்தது. சென்னை கமிஷனரோ இல்லை டி ஐ ஜியோ தெரியலை. நமக்குத் தேவையில்லாத விஷயமுன்னு மறந்துட்டேன். அந்த வீட்டுக்கு எதிரில் ஒரு பார்க். நடைப்பயிற்சிக்காக செங்கல் பாவிய ட்ராக் ஒன்னு சின்னதாப் போட்டுருக்காங்க. ஒரு பக்கம் மணல்பரப்பிய சிறுவர் விளையாட்டுப்பகுதி. பராமரிப்பு பரவாயில்லை. மூளை முடிச்சு போட்டேன். அக்கம்பக்கம் கங்கை, காவேரி வைகை, பாரி, கம்பர்ன்னு தெருக்களுக்குப் பெயர்!!! . பேஷ் பேஷ்!

இன்னும் கொஞ்சம் பத்தடி வச்சால் இதேசாலையில் Shihan Hussaini அவ் அவர்களின் கராத்தே பயிற்சி நிலையம் இருக்கு. கூடவே ஆர்ட், பெயிண்டிங், ஸ்க்கல்ப்ச்சர் என்ற கலைகளையும் சொல்லிக்கொடுக்கறாங்க. வாசலிலும் தெருப்பார்த்த முற்றத்திலும் சிலைகளாச் செஞ்சு வச்சுருக்காங்க. ஒருநாள் உள்ளே போய்ப் பார்க்கணும். மூளை முடிச்சு ரெண்டு.
இடதுபக்கம் கடல் நம்கூடவே வர ....சாலை முடியும் இடத்தில் அறுபடைவீடு முருகன் கோவில். கம்பி கேட் மூடியிருக்கு. கோவில் காலை 7 மணிக்குத் திறப்பாங்களாம். கம்பி வழியாகப் பார்த்தால் மண்டபமும் சின்னச்சின்ன விமானங்களுமா இருக்கு. இன்னும் ஒரு மணி நேரம் காத்திருக்கணும். வீட்டுக்குப்போய் குளிச்சுட்டு நிதானமா வரணும். கோவிலையும் நேரத்தையும் மூளையின் மூன்றாவது முடிச்சாகப்போட்டு வச்சேன்.
இதுக்குள்ளே பத்துநாள் கடந்துபோய் கோபாலும் ஆஃபீஸ்வேலையைக் கவனிக்க ஆரம்பிச்சு அவருக்கான பயணங்கள் தொடங்கிருச்சு. நான் தனியா ரெண்டு, மூணு நாள் அதிகாலை நடைப்பயிற்சிக்குப் போனேன். அப்படியே கோவிலுக்கும் போய் வெளியே இருந்தே ஒரு கும்பிடு. ஆறுமணியாகும்போதே வெய்யில் கடுமையா ஆரம்பிச்சுருது. மருந்தும் விருந்தும் மட்டுமா மூணுநாள்? நடைக்கும்தான்.............

கோபால் சென்னையில் இருக்கும் நாட்களில் சிலசமயம் பொழுது சாய்ஞ்சபிறகு அந்தப் பார்க்குக்குப்போய் நாலு வட்டம் நடந்துட்டு அப்படியே முருகன் கோவிலுக்கும் போய் சாமி கும்பிட்டு வருவோம். நடைப்பயிற்சிக்குக் கேமெரா தேவையா இருக்கலை.

கோவிலைப்பற்றி எழுதிவைக்கணும் என்ற நினைப்பு மட்டும் உள்ளூர இருந்துக்கிட்டே இருந்துச்சு. உள்ளூர் ஆளா இருந்து எழுதக்கூடாதுன்னு முருகன் கட்டளை. போனவருசம் சென்னை விஸிட்டுலே முருகன் கோவிலுக்குப்போய் சாமியைக் கும்பிட்டுக்கிட்டு, கோவில் அலுவலக அறையில் போய் படங்கள் எடுக்க அனுமதி கேட்டேன். அம்பது ரூபாய் கட்டணம் கட்டிட்டு மூலவர்களைத்தவிர எல்லா இடங்களையும் எடுத்துக்கலாமுன்னு சொன்னார்.

கோவில்கதையைப் பார்க்கலாம். டாக்டர் அழகப்ப அழகப்பன் என்றவர் ( இவர் ஐக்கிய நாடுகள் பிரிவொன்றில் முக்கிய பதவியில் இருந்தவர்) கர்நாடகா குல்பர்காவில் முகாம் இட்டு விரத காலத்தைக் கழித்துக் கொண்டிருந்த பெரிய சங்கராச்சாரியாரைத் தரிசனம் செய்யப்போயிருந்தார். அப்போது இந்த அறுபடை மூர்த்திகளை ஒரே கோவிலில் வைத்து வழிபடும் எண்ணத்தைச் சொல்ல..... ஆச்சாரியாரும் அனுகிரகித்தார். காலம் 1984. அறக்கட்டளை ஒன்னு ஆரம்பிச்சாங்க 1986 இல்.
அந்தக் காலக்கட்டத்தில் தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்தவர் நம்ம எம் ஜி ஆர். அறநிலையத்துறை அமைச்சர் ஆர் எம் வீரப்பன். காஞ்சி மடத்தின் மூலம் இவர்களிடம் கோவில் கட்டும் எண்ணம் தெரிவிக்கப்பட்டதும் பெஸண்ட்நகரில் கடற்கரைக்கருகில் ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.

டாக்டர் அழகப்ப அழகப்பன், முதல் இந்துக்கோவிலாக அமெரிக்கா நியூயார்க்கில் மஹா வல்லப கணபதிக்கு ஒரு புள்ளையார் கோவிலைக் கட்டி இருந்தார். அதுக்குப்பிறகு பிட்ஸ்பர்க் பெருமாள், ஹூஸ்டன் மீனாட்சி எல்லாம் அங்கே போய்ச்சேர இவர் அனுபவமும், ஆலோசனையும்,அர்ப்பணிப்பும் பெருமளவு உதவி இருக்கு. இங்கே நம்ம பெஸன்ட் நகர் கோவிலுக்கும், ஸ்தபதிகளையும் மற்ற ஏற்பாடுளையும் இவரே முன்நின்று முடிச்சுக்கொடுத்துருக்கார். கூடவே பெரியவருடைய வழிகாட்டுதல் இருந்துருக்கு.

வேலைகளை ஆரம்பிச்சு முதலில் கட்டுன சந்நிதி உபதேசம் செய்யும் தகப்பன் சாமிக்கு! சுவாமிமலை முருகன். இது கட்டுன வருசம் 1995. இதுக்கே பத்து வருசத்துக்கும் மேலே ஆகிருச்சு! திட்டம் போட்டு சாமான்கள் சேகரிச்சுன்னு ஏகப்பட்ட வேலைகள் இருந்துருக்குமே! அதுக்குப் பிறகு மூணு வருசத்தில் மஹா வல்லப கணபதி ( இவருக்கு நியூயார்க் புள்ளையார்ன்னு செல்லபெயர் இங்கே) பழனி ஆண்டவன், தணிகைநாதன் இப்படி மூணு சந்நிதிகள் கட்டிட்டாங்க.

அடுத்த நாலு வருசங்களில் திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை சந்நிதிகள். 2002 இல் ஆறு படை வீடுகளும் முழுமையாச்சு. பொதுமக்களும் அயல்நாட்டு ஆன்மீக அன்பர்களும் நிறைய பொருளுதவி செஞ்சுருக்காங்க. இந்த ஆறு சந்நிதிகள் தவிர இன்னும் சில சந்நிதிகளும் சேர்ந்து இப்ப அமோகமா இருக்கு.
வாங்க தரிசனம் செஞ்சுக்கிட்டே வலம் வரலாம். கேட் கதவு திறந்துருக்கு:-) உள்ளே நுழைஞ்சதும் நமக்கு இடப்பக்கம் ஒரு கிணறு. தொட்டடுத்து ஒரு அரசமரம். மரச்சுவட்டில் நாகர் பிரதிஷ்டை. கிணறோடு சேர்த்து வலம் வந்தாச்சு அடுத்து ஒரு மண்டபத்தில் நவகிரகங்கள். அடுத்து ஒரு எட்டு வச்சால் சின்னதா இடையில் முளைச்சிருக்கும் சந்நிதி யோக பைரவருக்கு.
வேல்
கோபுர வாசல்
கோபுர வாசலில் கோபால்

வலக்கைப் பக்கம் பார்த்தால் தனியா ஒரு வேல் கம்பீரமா நிக்குது. நல்ல கருங்கல் தூண்! நாம் திரும்பாமல் நின்ன இடத்துலே இருந்தே கும்பிடு போட்டுட்டு இன்னும் பத்தடி நேராகப்போறோம்.இடப்பக்கம் கோபுரவாசல். ராஜகோபுர வரவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் மொட்டைக்கோபுரம் அதுக்குள்ளே போய்ப்பார்த்தால் கண் எதிரே வங்கக்கடல். ரெண்டுக்கும் இடையில் கோவில் காம்பவுண்டுச்சுவர். ஆளுயரத்தில் ராஜகோபுரம் கட்டியபின் கோவிலின் பிரதான நுழைவு வாசல் இந்தப்பக்கம் மாற்றப்படும் என்று நினைக்கிறேன்.
மொட்டைகோபுரம்

திருச்செந்தூர்


வாசலுக்கு எதிரில் நம் வலக்கை பக்கம் பெரிய கொடிமரம். அதுக்குப்பின்புறம் ஒரு மண்டபம். உள்ளே கருவறையில் கடலைப் பார்த்தபடி ஜம்முன்னு நம்ம செந்தில்நாதன் ஆஃப் திருச்செந்தூர் அருள்பாலிக்கிறார். மண்டபத்துப்படிகள் ஏறிப்போய் அவரை தரிசிக்கிறோம். திரும்ப நம் வலத்தை ஆரமபிச்சு ஒரு நாப்பதடி நடந்தால் கோவில் அலுவலகத்தில் போய் நிற்போம்:-) அதனால் ஒரு ரைட் டர்ன். கண்முன்னால் அகலம் அதிகம் இல்லாத நீளமண்டபம். கடைசியில் அதையொட்டிய கருவறை. வள்ளி தெய்வானையுடன் காட்சிதருகிறார் பழமுதிர்ச்சோலை முருகர். இந்த மண்டபத்தின் 12 தூண்களிலும் அழகான சிற்பங்கள். எனக்கு ரொம்பப் பிடிச்ச சந்நிதி இதுதான்.
பழமுதிர்ச்சோலை

வலத்தில் அடுத்து திருப்பரங்குன்றம் சந்நிதி. அப்பா அம்மா கூடவே இருக்கணுமுன்னு மண்டபத்தில் சப்தக்ரீஸ்வரர் தனியா ஒரு சின்ன சந்நிதிக்கான இடம் எடுத்து சேவை சாதிக்கிறார். இப்ப அடுத்து மாம்பழம் வேண்டி ஆண்டியானவன். மொத்தக் கோவிலின் நடுவில் இருக்கும் புள்ளையாரை அப்பறமா வந்து(ம்) கண்டுக்கலாம். அண்ணன் கோச்சுக்கமாட்டாருன்ற தைரியத்தில்தான் வலத்தைவிடாமப்போய்க்கிட்டு இருக்கோம்!
திருப்பரங்குன்றம்
பழனி

பழனிப்பாலகனுக்கு எதிரா மதில்சுவரையொட்டி இடும்பனுக்குச்சின்னதா ஒரு சந்நிதி.. அதுக்குப்பக்கமா நியூஸி இடும்பிக்கும் ஒரு மாடம்:-)))))
இடும்பன் & நான்


கொஞ்சம் குழப்பம் வருகிற மாதிரி இங்கே ஒன்னு. அலங்கார மேடை அரங்கம் ஒன்னு இருக்கு. உற்சவர்களை வச்சுக் கொண்டாடவும், கோவிலில் நடக்கும் உபந்நியாசங்களுக்கான அரங்கமாவும் இருந்திருக்கணும். ஆனால்.... இப்போ அதுக்கெதிரில் இருக்கும் திறந்த வெளி அரங்கில் கந்தசஷ்டி மண்டபமுன்னு ஒரு ஹால் கட்டிவிட்டுருக்காங்க.( கோவிலின் அழகே போச்:( தனியாத் துண்டா நிக்காம இந்த அரங்கத்தையும் சேர்த்தே கட்டி இருக்கப்டாதோ? வலம்வரும் பாதை அடைபட்டுப்போயிரும்தான். ஆனால் மேற்கூரை மட்டும் போட்ட திறந்தவெளி ஹாலாக் கட்டி இருக்கலாம். ( நம்மளை யாரும் கேக்கலை பாருங்க! )
அரங்கம்
கோவில் அழகைக் கெடுக்கும் கந்த சஷ்டி மண்டபம்



மூலையில் ஒரு சின்ன கட்டிடம் பார்த்தால் வீடு போல இருக்கு. அங்கே பூக்கட்டுதல் பரபரப்பா நடக்குது. கடையா இருக்கலாம். நாம் அதுவரை போகாமல் சட்ன்னு ரைட் டர்ன் எடுக்கணும். திருத்தணிகைக்காரர் கோபம் தணிஞ்சு அழகா இருக்கார். எல்லா சந்நிதி போலவும் இங்கே மயில் வாகனம் இல்லாமல் நம்மாள் ஐராவதம் நிக்கறார். அதுவும் மூலவரைப் பார்க்காமல் திரும்பி நின்னு நம்மை வாவான்னு கூப்பிடறார். இந்திரன் தன் மகள் தெய்வானைக்குக் கொடுத்த சீதனத்தில் இவரும் சேர்த்தியாம்! (அந்தக்காலத்தில் யாரையாவது வஞ்சகமா அழிக்கணுமுன்னா யானையைப் பரிசாக் கொடுப்பாராம்
திருத்தணி


அரசர்/பிரபு இப்படி. அரசர் கொடுத்த பரிசு என்பதால் அதை விற்கவோ, இல்லை இந்தக் காலத்தில் கல்யாணப்பரிசாக வரும் ஏகப்பட்ட சுவர்கடிகாரங்களை ரீஸைக்கிள் செய்வதுபோல் எல்லாம் செய்யமுடியாது. பெரிய இடத்துப் பரிசு .மூச்......

அதை வச்சுத் தீனி போட்டே பரம ஏழையாகி மகிழ்ச்சியைத் தொலைச்சுருவாங்களாம். வஞ்சிக்க என்னமாதிரி ஐடியா பாருங்க!!!! நல்ல காலம் ஐராவதம், முருகன் வீட்டுக்குப் போனதால்..... முருகனுக்கு பிரச்சனை இல்லை:-))) அவனிடம் இல்லாத செல்வமா?

வேல், பின்பக்க சந்நிதி சுவாமி மலை . அதுக்கும் பின்னால் திருத்தணி


வலத்தில் கடைசியா வந்து நிற்பது, இங்கே முதலில் உருவான சுவாமிநாதனுக்கான சுவாமி மலை!!! இந்த மண்டபத்து எதிரில்தான் நாம் முதலில் பார்த்த வேலும், இடப்பக்கம் கேட்டு வாசலும். ஆச்சு ஆறு தரிசனமுன்னு அண்ணனைப்பார்க்க குறுக்குவெட்டாப்போறோம்.
குறுக்கு வெட்டாப்போனால் புள்ளையார் சந்நிதி

மிகப்பெரிய மண்டபம். அழகான தூண்களில். வகைவகையான கணபதிகள். மண்டப முடிவில் நியூயார்க் புள்ளையார் ஸ்ரீ மஹா வல்லப கணபதி ஆடம்பரமில்லாமல் அமெரிக்கையா இருக்கார். ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு இடம் விடாமக்கட்டி வச்சுருக்கும் ச்ந்நிதிகளைச் சுத்திச்சுத்தி கால் வலிச்சுருக்குமே! நிதானமாக மண்டபத்தில் உக்கார்ந்து பத்து நிமிசம் ஓய்வெடுத்துக்கிட்டு நடையைக் கட்டறோம். எல்லா சந்நிதிகளின் சுவற்றிலும் உபயதாரர்கள் பெயர்களைப் பொறித்த சலவைக்கல் இருக்கு. ஒரு சில உள்ளூர் பிரபலங்களைத்தவிர அனைத்தும் அமெரிக்க மக்களே! இன்னும் கோவிலுக்கு ட்யூ லைட்டுகள் நம் மக்களயாரும் வழங்கலை போல!

புள்ளையார் மண்டபமும் சந்நிதியும்

விசேஷநாட்களில் கிருத்திகை, கந்த சஷ்டி, பங்குனி உத்திரம் தைப்பூசம் போன்ற நாட்களில் கோவிலுக்குள்ளில் கால் வைக்கமுடியாதபடி கூட்டம் நெரியுது. ரெண்டு தெருவும் சந்திக்கும் மூலை என்றபடியால் தெருக்களை அடைச்சு வண்டிகளைப்பார்க் பண்ணிடறாங்க. பாவம் சாமி, அவர் ஊர்வலத்துக்கே இடமில்லை! ஆனால் இரவு சாமி உலா போய்ப் பார்த்தால் நல்லாவே இருக்கு. கந்த சஷ்டி சமயம் ஒரு நாள் போய் வந்தோம்.

சென்னைக்குப்போகும் சான்ஸ் கிடைச்சால் இந்த அறுபடைவீடு கோவிலை லிஸ்ட்டில் மறக்காம சேர்த்துக்குங்க. நிறைய டிவி சீரியலில் நடிச்ச புகழும் இதுக்கு இருக்கு கேட்டோ:-))))))


PIN குறிப்பு: பங்குனி உத்திரத்துக்குன்னு எழுத ஆரம்பிச்ச பதிவு..... இன்னிக்குத்தான் வெளியிட முடிஞ்சது. எல்லாம் முருகன் செயல்! நமக்கு எல்லா நாளும் நல்ல நாளே!!!!!!

முருகா முருகா முருகா.............


48 comments:

said...

அருமையான பதிவு.
நிறைய தகவல்கள்.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி அம்மா.

said...

இந்தக் கோவிலை பற்றி இப்பத்தான் நான் கேள்விப்படுறேன்..! தகவலுக்கு நன்றி டீச்சர்.. ஏதோ ஒரு கண்டத்துல உக்காந்துக்கிட்டு இன்னொரு கண்டத்துல இருக்கிறவனுக்கு அவன் வீட்டுக்கு பக்கத்துல என்ன இருக்குன்னு சொல்லிக் கொடுக்குறீங்க..!..

ம்.. இனிமே நீங்க கண்டம் தாண்டிய டீச்சர்...!

said...

muruganukku arokaraa

said...

நல்லா விவரமா எழுதியதற்கு நன்றி. இங்கே கோவையிலும் தனியார் ஒருவர் முருகனுடைய அறுபடை வீட்டு சந்நிதிகளையும் ஒரு கோவிலில் வைத்திருக்கிறார்.

Anonymous said...

அருமையான பதிவு!

said...

அறுபடை வீடும் ஒரே இடத்தில் தரிசிக்க வாய்ப்பு... நல்ல தகவல். சென்னை நமக்கு அவ்வளவு பரிச்சயமில்லை என்பதால் இந்த கோவில் இப்பத்தான் தெரிகிறது.

நல்ல தகவலுக்கு நன்றி டீச்சர்.

said...

/கடைசியிலே நம்ம பில்டிங் லிஃப்ட் பழுதாகிப்போய் ரெண்டு மாசம் மாடிப்படி ஏறி இறங்கி இருவது கிராம் இளைச்சேன்:-)))))))))))/
அட! இளைக்கறதுக்கு இப்பிடி ஒரு வழியிருக்கா???
மற்றபடி அருமையா இருக்கு விபரங்கள்!

said...

பங்குனி உத்திரத்துக்குன்னு எழுத ஆரம்பிச்ச பதிவு..... இன்னிக்குத்தான் வெளியிட முடிஞ்சது. எல்லாம் முருகன் செயல்! நமக்கு எல்லா நாளும் நல்ல நாளே!!!!!!//

அருமையான கருத்து.

பங்குனி உத்திரத்திற்கு மட்டும்தான் முருகனை வணங்க வேண்டுமா!

எல்லா நாளும் வணங்கலாம்.

முருகா! முருகா!

said...

அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக!

இது நக்கீரர் சொன்னது. ரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடியே.

நீங்க சொல்ற தர்ஷன் வழக்கத்தைத் தொடங்கி வெச்சதே நக்கீரர்தான்.

மொதமொதலா ஆற்றுப்படை வீடுகள்னு ஆறு கோயில்களைச் சொல்லிப் போகச் சொன்னவர் அவர்தான்.

அறுபடை முருகன் கோயிலுக்குப் போய் ரொம்ப நாளாச்சு. நாளைக்குப் போகனும்.

அப்புறம் அந்த யானையைப் பத்திச் சொன்னீங்களே... இந்திரன் கொடுத்த சீதனம்னு.

அது பின்னாளைய புராணத்துல இருக்கலாம். ஆனா பழைய தமிழ் இலக்கியங்கள் வேற கதை சொல்லுது.

முருகனுக்கு யானையும் ஊர்தியாம். அந்த யானைக்குப் பெயர் பிணிமுகம்.

இந்தப் பதிவைப் போட்டு அறுபடை முருகன் கோயிலுக்கு ஆற்றுப்படுத்தியமைக்கு நன்றி பல. :)

said...

பார்த்திபன் கனவு (சினேகாநடிச்ச படம்)அதுல கூட இந்த கோவில் நடிச்சிருக்கு.

:))

said...

முருகா !

said...

"கோவில் அழகைக் கெடுக்கும் கந்த சஷ்டி மண்டபம்"
அழகில்லாததையும் விடாமல் தெரிவிப்பதில் இருக்கிறது தங்களின் பாங்கு!

said...

அருமை. மிக விரிவா எழுதிருக்கீங்க. ஒரு முறை போகணும்

said...

தோழியோட போயிட்டு வந்த நினைவு வருது:)

said...

இடும்பன் பொண்டாட்டி கோவித்துக் கொள்ள்ப் போறாங்கப்பா பார்த்து.:)
படங்கள் நிறையவே எடுத்து இருக்கீங்க. நல்லாவும் வந்திருக்கு துளசி.

said...

நல்ல படங்களுடன் நல்ல பகிர்வு..திரைப்படங்களில் பார்த்த நினைவு வந்தது...

said...

ரொம்ப சிரிச்சிச் சிரிச்சிப் படிச்சேன் சிவப்பனின் பதிவை!:)

சிவப்பனா? = அவன் யாரு?
சிவனுக்கே சொன்ன அப்பன் = சிவப்பன்!:)
இல்லீன்னா
சேயோன் = சிவப்பன்!

இவனை இப்படி டைப் டைப்பாக் கூப்பிட எனக்கு ரொம்பப் பிடிக்கும் டீச்சர் (அ) நியூசி "இடும்பி" :))

சரி, மொத்தம் எத்தனை முருகனைப் பாத்தீங்க, சென்னை அறுபடைக் கோயிலில்?
ஆறு என்பது தவறான பதில்!:)
நல்லா யோசிச்சி, விரல் விட்டு எண்ணிப் பாத்துச் சொல்லுங்க!:)
------

//நல்ல காலம் ஐராவதம், முருகன் வீட்டுக்குப் போனதால்..... முருகனுக்கு பிரச்சனை இல்லை:-))) அவனிடம் இல்லாத செல்வமா?//

என்னவன் மேல கண்ணு வைக்காதீங்க டீச்சர்! பாவம் அவன்! அவனே ஒரு ஆண்டி! அவன் கிட்ட தமிழ்ச் செல்வம் தான் இருக்கு!
நீங்க நினைக்கிற ”வேற எந்தச் செல்வமும” இல்ல!:)))

said...

//இந்திரன் தன் மகள் தெய்வானைக்குக் கொடுத்த சீதனத்தில் இவரும் சேர்த்தியாம்! (அந்தக்காலத்தில் யாரையாவது வஞ்சகமா அழிக்கணுமுன்னா யானையைப் பரிசாக் கொடுப்பாராம்

அதுவும் மூலவரைப் பார்க்காமல் திரும்பி நின்னு நம்மை வாவான்னு கூப்பிடறார்//

இன்றும் திருத்தணியில் அப்படித் தான்!
முருகன் கருவறை முன்பு = யானை!
ஆனால் Opposite Direction Facing!

தேவானைத் திருமணத்தின் போது வீரபாகு கேட்ட சீதனம் = ஐராவதம் = வெள்ளை யானை!

ஆனால், இப்படிக் குடுத்த பின், இந்திரன் வீட்டு ஐஸ்வர்யம் குறைகிறது!
கற்பக விருட்சம், காமதேனு, ஐராவதம் - மூனில் ஒன்னு போயிருச்சே! அதனால் ஐஸ்வர்யமும் மூனில் ஒன்னு கொறைஞ்சிருச்சி!

குடுத்த பொருளை எப்படிக் கேட்பது? அதுவும் மாப்பிள்ளை வீட்டில்?:)

சேதி, முருகன் காதுக்கு வருது!
என் முருகன் மானஸ்தன்! என்ன செஞ்சான் தெரியுமா?

= சீதனத்தைத் திருப்பி அனுப்பிச்சிட்டான்!

இதனால் மிகவும் வெட்கப்பட்டு போன இந்திரன்....ஓடியாந்து....
"மாப்பிள்ளை வீட்டில் திருப்பி வாங்கியவன்-ன்னு பேரு வரவேணாம்! அதே சமயம் இந்திரலோக ஐஸ்வர்யமும் குறையாம இருக்கணும்!
அதனால் ஐராவதம், முருகன் சந்நிதியிலேயே இருக்கட்டும்! ஆனா அது இந்திர லோகத்தைப் பார்த்தா மாதிரி இருக்கட்டும்"-ன்னு சொல்ல....

யானை, முருகன் கோயிலில் இருக்கு! ஆனா இந்திரனின் திசையைப் (கிழக்கு) பார்த்த வண்ணம் இருக்கு!

இதான் திருத்தணிப் "புராணம்":)))))
--------------------

ஆனால்.....சங்கத் தமிழில் இந்தப் "புருடாணம்" எல்லாம் இல்லை:)

முருகனின் ஊர்திகள் மூன்று
1 மயில்
2 யானை (பிணிமுகம்)
3 ஆடு

சுவாமிமலை, திருத்தணி = இரண்டு தலங்களிலும் யானை தான் முன்பு இருக்கும்! மயில் அல்ல!

said...

//கோவிலைப்பற்றி எழுதிவைக்கணும் என்ற நினைப்பு மட்டும் உள்ளூர இருந்துக்கிட்டே இருந்துச்சு. உள்ளூர் ஆளா இருந்து எழுதக்கூடாதுன்னு முருகன் கட்டளை//

:))))
தோடா!
அதான் கோயில் கூட, நியூயார்க் ஆளுங்க கட்டி இருக்காங்க-ன்னு சொல்லுவீங்க போல இருக்கே!

//இந்த மண்டபத்தின் 12 தூண்களிலும் அழகான சிற்பங்கள். எனக்கு ரொம்பப் பிடிச்ச சந்நிதி இதுதான்.//

எனக்கும் ரொம்ப பிடிச்ச இடம் = அந்தப் பழமுதிர்சோலை மண்டபம் தான்!
அகலம் கம்மி! நீளமா இருக்கும்! ஒய்யாரமாக் கால் நீட்டிக் கடற்கரைக் காத்துக்கு உக்காந்துகிடலாம்:) அவன் கிட்ட பேசிக்கிட்டே இருக்கலாம்!:)

சிங்கம், மயிலு, பூ-ன்னு ஏதோ கொஞ்ச நஞ்ச சிற்பம்-ன்னா, அது இந்தச் சந்நிதியில் தான்!
-----------

ஆனா, இந்தக் கோயிலுக்குப் பக்கத்திலேயே இருக்கும் பாம்பன் சுவாமிகளின் அமைதி சூழ் முருகன் கோயில் என் மனசுக்கு ரொம்ப பிடிச்சமான ஒன்னு!

said...

//வலக்கைப் பக்கம் பார்த்தால் தனியா ஒரு வேல் கம்பீரமா நிக்குது. நல்ல கருங்கல் தூண்!//

பழந்தமிழர்கள், இப்படியே முருகனை வழிபட்டார்கள்!
தூண் = கந்து = கந்தன்!

வேல் வேறு, முருகன் வேறல்ல!
முருகனே=வேல்! வேலே=முருகன்!
வேலுக்கு = உடம்பிடித் தெய்வம் ன்னே பேரு!

சங்கத் தமிழில் வேல் வழிபாடு = http://madhavipanthal.blogspot.com/2012/02/blog-post.html

----------

இந்தப் பதிவுக்கு வந்ததன் மூலம், கொஞ்ச நாள் ஒளிஞ்சிருந்த ஒருவரை எனக்கு முருகன் காட்டி, மிக்க இன்பத்தில் ஆழ்த்தி விட்டான்!:)))
கண்டேன், கண்டேன், கண்டேன்!

said...

இந்த அறுபடைக் கோயில்-ல்ல எனக்கு ரொம்ப பிடிச்சது என்ன-ன்னா....
பக்கத்திலேயே தான் பொறந்த வீடு = அட்ட இலட்சுமி கோயில்!:))

இப்படிப் பொறந்த வீடும், புகுந்த வீடும் பக்கத்து பக்கதுல இருக்குறது எனக்கு ரொம்ப வசதி:)))

said...

அறுபடைக் கோயிலும் ஒரே இடத்தில் இருக்கு-ன்னு பதிவு போட்டுட்டீக!

ஆனா அறுபடையும் ஒரே திருப்புகழில் இருக்கா?

இருக்கு!
= அருணகிரி அப்பவே ஆறும் ஒன்னாச் சேர்த்து வச்சிப் பாடி இருக்காரு!

ஈனம் மிகுத்துள பிறவி - அணுகாதே
யானும் உனக்கு அடிமையென - வகையாக

ஞான அருள் தனையருளி - வினைதீர
நாணம் அகற்றிய கருணை - புரிவாயே!

தான தவத்தின் மிகுதி - பெறுவோனே
சாரதி உத்தமி துணைவ - முருகோனே

ஆன திருப்பதிகம் அருள் - இளையோனே
"ஆறு திருப்படையில்" வளர் - பெருமாளே!!

said...

படங்களும் விவரங்களும் அழகு..

said...

அறுபடைவீடும் ஒரே இடத்திலா! வாய்ப்பு கிடைக்கும் போது செல்ல வேண்டும். பயனுள்ள தகவலுக்கு நன்றி டீச்சர்.

said...

அருமையான ஆறுபடைவீடுகளையும் ஒருங்கே தரிக்கவைத்த பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

said...

வாங்க ரத்னவேல்.
முகநூலில் பகிர்ந்தமைக்கு நன்றி.

said...

வாங்க உண்மைத்தமிழன்.

நெசமாவாச் சொல்றீங்க!!!!!!

முருகா முருகா!

said...

வாங்க பாபு.

சன்டிகர் கோவிலில் வரும் வடக்கர்கள் அனைவருக்கும் தமிழ் அரஹரோஹரான்னு சொல்லிக்கொடுத்துச் சொல்ல வச்சுருக்கார் நம்ம ஆல் இன் ஆல் ராஜசேகர்( சண்டிகர் முருகனின் ட்ரஸ்டி)வெற்றிவேல் முருகனுக்குன்னு அவர் ஆரம்பிச்சதும்
கூட்டம் கலகலத்துப்போய் அரஹரோஹரான்னு சொல்லும். அதுவே ஒரு அழகு!

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

தகவலுக்கு நன்றி.

இங்கே இந்தக்கோவிலில் இன்னொரு சிறப்பம்சம் இருக்கு. ஒரிஜனல் அறுபடைவீடுகளின் மூலவர் சைஸிலும் அங்கே அவர்கள் பார்க்கும் திசையிலும் இங்கே சந்நிதிகள் அமைச்சுருக்காங்க.

said...

வாங்க அட்சயா.

முதல் வரவா? நலமா?

வருகைக்கு நன்றி.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அப்படியே அந்தப் பக்கம்ஒரு எட்டு அஷ்டலக்ஷ்மி கோவிலுக்கும், இந்தப் பக்கம் ஒரு எட்டு பாம்பன் ஸ்வாமிகள் கோவிலுக்கும் போயிட்டு வாங்க. கூடவே அடையார் அனந்த பத்மநாபனும் நினைவில் இருக்கட்டும்:-))))

said...

வாங்க அன்புடன் அருணா.

லிஃப்டு சரியானதும் போன இருபது, இருநூறாத் திரும்பி வந்ததைச் சொல்ல மறந்துட்டேன்:-))))))

said...

வாங்க கோமதி அரசு.

நாளும் கிழமையும் நமக்கெதுக்குன்னு இருக்கணும்:-)))))

எல்லா நாளுக்கும் அதிகாரி அவனல்லவோ!!!!!

said...

வாங்க ஆன்மீகச் செம்மலே!

அறுபடை உடையோன் எப்படி, ஆற்றுப்படுத்திக்கவே உங்களை இங்கே இழுத்து வந்தான்னு பார்த்தால்.....வியப்புதான் மிஞ்சுது!!!!!!

ஆறுமுகனின் காருக்குப் பெயர் பிணி முகமோ!!!!!

said...

வாங்க கோபி.

முருகா முருகா......

said...

வாங்க பத்மா.

கோவிலின் கட்டுமானத்துக்குக் கொஞ்சமும் பொருந்திவராத கண்பிணி அது:(

மனசே ஆறலைப்பா!

said...

வாங்க மோகன் குமார்.

பீச்சுக்குப் போகும் நாள் இந்தப்பக்கம் வண்டியை விரட்டுனால் ஆச்சு:-))))

said...

வாங்க வல்லி.

அடடா..... தோழியோடு போனீங்களா? என்னையும் கூடக் கூட்டிக்கொண்டு போயிருக்கக் கூடாதா.....

நியூஸி இடும்பியை ஒரிஜனல் இடும்பி ஒன்னும் செய்யமாட்டாங்கன்னு நம்பறேன்:-)

said...

வாங்க புதுகைத்தென்றல்.

அட! சினிமாப் புகழும் உண்டா!!!!!!

கோவில் கட்டுன புதுசுலே நடிச்சிருக்கும். பத்தே வருசத்துலே பழைய கோவிலா மினுமினுப்பில்லாமக் கிடக்கு:(

said...

வாங்க பாசமலர்.

எனக்கு வரவர ஞாபகமறதி அதிகமா ஆகுதோ.....

எந்தப்படங்களிலும் பார்த்த நினவில்லைப்பா:(

said...

வாங்க கே ஆர் எஸ்.

ஆழ்வார் பாடிய அறுபடை வீடு கொண்ட திரு முருகன் இவனா!!!!!!


//ஐராவதம், முருகன் சந்நிதியிலேயே இருக்கட்டும்! ஆனா அது இந்திர லோகத்தைப் பார்த்தா மாதிரி இருக்கட்டும்"-ன்னு சொல்ல....
//

அதுதான் மாமனார் மருமகனுக்கு வச்ச 'செக்'

"மவனே என் பொண்ணை எதாச்சும் செஞ்சியோ..... அவள் யானையில் ஏறி நேரே அம்மா வீட்டுக்கு வந்துருவா! அவள் மனம் கோணாமல் நடந்துக்கோ "

உங்க பின்னூட்டங்கள் எல்லாம் !நிறையவே சொல்லுது!!!!! பொருளைக் கொடுத்த முருகனுக்கு அரஹரோஹரா!!!!!

கோவிலில் பூ கட்டும் இடத்தில் இருந்தவரையும் சேர்த்தால் ஏழு!

said...

வாங்க அமைதிச்சாரல்.

நன்றியுடன் வரவேற்கிறேன்.

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

மூளையில் ஒரு முடிச்சுப் போட்டுக்கணும். ஆனாலும் அவன் அருள் எப்பவோ அப்பதான்!!!!

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

மனம் திறந்த பாராட்டுகளுக்கு இனிய நன்றிகள்.

said...

அறுபடை வீடுகளும் ஒரே இடத்தில் தர்சனம். அருமையான இடம்.

said...

வாங்க மாதேவி.

முந்தியெல்லாம் கதிர்காமம்கூட ஒரு படைவீடுன்னு சொல்வதைக் கேட்டுருக்கேன். ஆனால் இப்போ அங்கே போய்வரக் கொஞ்சம் சிரமமா இருக்காமே!

said...

சென்னையில் இருப்பவர்களுக்கே இந்த கோவில் பற்றி தெரியவில்லை.

said...

வாங்க ஜோதிஜி,

டிவி சீரியல் புகழ் கோவிலாச்சே !