Tuesday, April 03, 2012

குகா மாடி ஹனுமனும் கோகா நவ்மியும்

மாடின்னு சொல்றதுக்கு ஏத்தாப்போலெ மாடியிலிருந்து வளாகத்தை எட்டிப்பார்க்கும் முகத்தைக் கவனிக்காமல் யாருமே அந்தபக்கம் போக முடியாது. குகா மாடி ஹனுமான் மந்திர் செக்டர் 20. கோவிலுக்குள் நுழைஞ்சு முன்முற்றத்துக்குள் காலடி வச்சால் எதிரே ஒரு மூணடி மேடையில் முப்பத்தைஞ்சு அடி உசர உருவம். கையில் ஒரு வெள்ளித் தகடு போர்த்திய Gகதை!
காலடியில் அவர் குடும்பமே நிக்குது. வாயுக்கும் ஒரு உருவம் கொடுத்தாத்தானே கண்ணுக்குப் புலப்படும். அதான் இங்கே முழுக்குடும்பமும் மங்கிகளாக!

நிகுநிகுன்னு இருக்கும் காலில் ரெண்டு கொலுசு வரைஞ்சுருக்கக் கூடாதா?தொட்டடுத்த இருட்டுச்சந்நிதி சனி பகவானுக்கு. என் பக்தர்களை தொல்லைப்படுத்தினால் உன்னைத் தொலைச்சுருவேன்னு சொல்றாரோ?
அடுக்கு தீபத்துக்குத் திரி போட்டு தயாரா வச்சுருந்தாங்க மாலை ஆரத்திக்கு! ஹரித்வார்போல் அவ்ளோ நெய்யைக் கொட்டி வைக்கலைன்னாலும்கூட..... ஏற்றும்போது தீவட்டியாகத்தான் எரியும்போல இருக்கு! இல்லேன்னா கைப்பிடிக்குத் துணி சுத்தி இருக்குமா? என்னதான் சொல்லுங்க இந்த ஜோதி விஷயத்தில் மட்டும் தமிழ்நாட்டுக் கோவில்களை அடிச்சுக்க முடியாது! அளவா எரியும் தீபங்களைப்போல அடுக்கு தீப ஆரத்தி எடுக்கும்போது மனசெல்லாம் நிறைஞ்சு போவது நிஜம். நம்ம சண்டிகர் முருகன் கோவிலிலும் அளவான அடுக்குதீப ஆரத்திதான்.
அனுமனுக்கு வலப்பக்கம் கோவில் கருவறைகளுக்குப்போகும் வாசலும் முற்றத்தின் ஒரு பக்கம் யாகசாலையும் இருக்கு. கோவிலுக்குள் முதல் சந்நிதி குதிரைமேல் அமர்ந்திருக்கும் சாமி. அட! கல்கி அவதாரம்! ஆனால் பக்கச் சுவரில் குக்கா ஜாஹர் வீர் மந்திர்ன்னு சலவைக்கல் !
யாகசாலை

ராஜஸ்தான் பகுதியின் கிராமக் கடவுள். அநேகமா எல்லா கிராமங்களிலும் இவருக்குச் சின்னதாக ஒரு கோவில் இருக்குமாம். பாம்புக் கடவுள் என்று பரவலா அறியப்படுகிறார்.

கோகா வீர் என்ற இந்துக்களும் ஜாஹர் பீர் என்று இஸ்லாமியர்களும் இவரைக் கொண்டாடிக் கும்பிடுறாங்க. இவர் கதையைப் பார்க்கலாம் வாங்க.

காலக்கட்டம் கிபி 900 ஆண்டுகளாக இருக்கலாம். ராஜபுதன சிற்றரசர்களில் ஒருவர் வாச்சா (Vacha) என்ற சிற்றரசர் சௌஹான் இனத்தைச் சேர்ந்தவர். இவர் மனைவி ராணி பாச்சல் (Bachal) . இவுங்களுக்குக் குழந்தை இல்லை. குலகுருவான கோரக்நாத் ரிஷியிடம் தங்கள் குறைகளைச் சொல்லித் துயரப்படறாங்க. பனிரெண்டு வருசங்கள் விரதம் இருந்து வழிபாடுகள் நடத்தியபின் காலம் கனிஞ்சு வருது. மறுநாள் தவம் இருந்த பயன் கிடைக்கும் நாள். குருவின் ஆசிகள் கிடைக்கப்போகும் மகிழ்ச்சியில் இருக்காங்க ராணி. இந்த ராணிக்கு ஒரு 'உடன்பிறந்த சகோதரி' (ரெட்டைப்பிறவி) இருக்காங்க. 'அவுங்க பெயர் காச்சல்.(Kachal அன்று இரவு ராணியின் உடைகளை எடுத்து அணிஞ்சுக்கிட்டு குருவின் ஆசிகளைக்கோரி காச்சல் போக..... இருட்டில் ஆள் அடையாளம் தெரியாத ரிஷி (??!!) , குழந்தை பிறக்குமுன்னு ஆசி வழங்கிட்டார்.

பொழுது விடிஞ்சதும் ராணி பாச்சல், குருவின் ஆசிகளை வேண்டிப்போறாங்க. அப்பதான் ஆள்மாறாட்டம் குருவுக்குத் தெரியவருது. ஆனால்..... வரம் தான் ஏற்கெனவே கொடுத்தாகியாச்சே! என்ன செய்யலாமுன்னு யோசித்த குரு, குகல் என்ற மூலிகையால் செஞ்ச இனிப்புகளைக் கொடுத்து இதை சாப்பிடு. உனக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கும். நல்ல வீரனாக வளர்ந்து நாட்டைக் காப்பான்னு ஆசீர்வதித்தார்.

ராணியம்மாவுக்குப் பெரிய மனசு. அந்த இனிப்புகளைத் தான்மட்டுமே உண்ணாமல், குழந்தை இல்லாத சில பெண்களுக்கும், ஒரு துண்டு இனிப்பை ஒரு பெண்குதிரைக்கும் கொடுக்கிறார். எல்லோரும் நாளடைவில் கர்ப்பம் தரிச்சுப் பிள்ளைகளைப் பெற்றார்கள். ராணி பாச்சல் தன் குழந்தைக்கு கோகான்னு பெயர் சூட்டினாங்க. அந்தக் குதிரைக்கும் ஆண் குட்டி பிறந்தது. அதுக்கு நீலக்குதிரைன்னு பெயர். ராணியின் தங்கைக்கு ரெண்டு ஆண் குழந்தைகள். நர்சிங் பீர், போ(ஹ்)ரிவாலான்னு பெயர்கள். எல்லாரும் வளர்ந்து பெருசானாங்க.


கோகாஜி பிறந்தவுடன் தரையில் கிடக்கும் குழந்தையைக் கொல்ல தக்‌ஷன் என்னும் பாம்பு வந்து உடலைச்சுற்றி இறுக்குது. ஆனால் குழந்தை, தன் பிஞ்சு விரல்களால் அந்த தக்‌ஷனின் கழுத்தைப் பிடிச்சு அப்படியே வாய்க்குள் போட்டு விழுங்கிடறார். குழந்தை உடல் முழுசும் தக்‌ஷனின் விஷம் பரவினாலும் குழந்தைக்கு ஒன்னும் ஆகலை. அன்று முதல் இவர் பாம்புகளுக்கு அரசன் என்று எல்லோரும் நம்பறாங்க. அவர் வளர வளர குதிரையும் வளர்ந்து பெருசாச்சு. அந்தக் குதிரையே கோகாஜியின் குதிரையாக அவர்கூடவே இருந்துச்சு.

.

கோகாஜிக்குக் கல்யாணம் ஆச்சு. மனைவி பெயர் சிரியல். ஒரு சமயம்
குடும்பத் தகராறில் காச்சலின் மகன்கள் ரெண்டுபேரையும் கோகாஜி கொன்னுடறார். விஷயம் தெரிஞ்ச ராணி பாச்சலுக்குத் தன்மகனின் செய்கை பிடிக்கலை. 'இனிமேல் என் முகத்தில் முழிக்காதே. எங்கியாவது போயிரு' ன்னு சொல்லிடறார்.

தாய் சொல்லைத் தட்டாத கோகாஜி அப்படியே தாய்க்கு முகம் காமிக்காமல் வேற இடத்தில் வசிக்கிறார். ஆனால் யாருக்கும் தெரியாமல் இரவுகளில் தன் தாயின் வீட்டில் இருக்கும் மனைவி சிரியலைப் போய்ப் பார்த்து வர்றார். தவமிருந்து பெற்ற பிள்ளையை இப்படி சொல்லிட்டோமேன்னு வருந்தின தாய், ஒருநாள் கோகாஜி வரும்போது, எப்படியாவது சந்திச்சு மன்னிப்பு கேட்டுக்கணுமுன்னு முடிவு செஞ்சு அந்த நாளுக்காகக் காத்திருந்தார்.

ஒருவேளை மகன் வரும் சமயம், தன்னிடம் வந்து சொல்லுன்னு மருமகளைக் கேட்டுருப்பார் போல. மன்னிப்புக் கேக்கணும் என்ற விவரத்தையும் சொல்லி இருக்கக்கூடாதா? என்னமோ போங்க:(

கோகாஜிக்கு தன் தாய் தன்னை சந்திக்க விரும்புகிறார் என்று தெரிஞ்சதும் இனிமேல் தன் முகத்தில் முழிக்காதேன்னு தாய் சொன்ன வாக்கை மீறணுமே என்ற கவலையில், குலகுரு கோரக்நாத்திடம் போய், என் தாய் சொன்ன சொல்லை நான் காப்பாற்றணுமுன்னு வேண்டிக்கேட்க, கோரக்நாத் தன் கையில் வச்சுருந்த ஒரு குறடால் ( சிமிட்டா) தரையில் ஒரு கோடு கீற அங்கே பூமி பிளந்தது. பெரிய பள்ளம், அதற்குள்ளே தன் நீலக்குதிரையுடன் இறங்கி சமாதி ஆகிட்டார். அன்றைய தினம் ஒரு நவமி திதி.


ராஜபுத்திர சௌஹான் வம்சத்தில் இந்துவாகப் பிறந்த கோகாஜி, மதம் மாறி இஸ்லாமியராக ஆகி இருந்தார். இஸ்லாமிய வேதத்தை பாபா மொய்னுதீன் சிஷ்டி, ஹாஜி ரத்தன், மெஹர் சாஹிப், க்வாஜா கிஜிர் என்ற நான்கு மௌல்விகளிடம் கற்றறிந்தார். அவருக்கு 35 மனைவிமார்களும் 45 மகன்களும் இருந்தார்கள் என்றும், தன் நாட்டுமக்களைக் காப்பாற்ற முகலாய அரசர் அவுரங்கஸேப் அவர்களுடன் நடந்த போரில் 43 மகன்களை இழந்தார் என்றும் சொல்கிறார்கள்.

இவர் வாழ்ந்த காலக்கட்டமும், இவுங்க சொல்லும் அவுரங்கஸேப் காலக்கட்டமும், மேற்படி மௌல்விகளுடைய காலங்களும் ஒத்துவராததால் இதெல்லாம் தங்கள் கடவுளையும் தாங்கள் மிகவும் மதித்த வீரர்களையும் ஏற்றிச் சொல்லிப் புகழ் பாட விரும்பும் மனுஷ சுபாவங்கள் இட்டுக் கட்டினதா இருக்கணும், தசரதனுக்கு அறுபதினாயிரம் மனைவிகள் போல!!!!

ஆனால் மதம் மாறியது உண்மையாக இருக்கலாம். முஹம்மது கஸ்னி இவரோட சமாதிக்கு வந்து வழிபட்டதாக இந்த தர்காவில் பெர்ஷிய மொழியில் குறிப்புகள் சுவரில் எழுதி வச்சுருக்காம்.

மகன் சமாதியானதைக் கேட்ட தாய் ராணி பாச்சல், அந்த இடத்திற்கு வந்து சமாதியானார். கோகாஜியின் மனைவி சிரியலும் அப்படியே சமாதி ஆனாங்களாம்.

இவர் சமாதியான இடம் ஹனுமன்கட் மாவட்டத்தில் கங்காநகர் வட்டத்தில் கோகாமாடி என்ற சிற்றூர். காலம் இந்து காலண்டர் படி பத்ராபதி மாசம்/ ஆகஸ்ட் மாசம். இங்கே இவர் சமாதியான நவமி தினம் கோகா நவமி என்று மூணு நாள் திருவிழாவா நடக்குது. இது என்ன மாசமுன்னு நாமெல்லாம் கவலைப்படத் தேவையே இல்லை!!! ஸ்ரீ கிருஷ்ணாஷ்டமி வருது பாருங்க, அதுக்கு அடுத்த நாள் குகா நவமி. இவரை இந்துக்கள் கோகா வீர் என்று கும்பிடறாங்க. இஸ்லாமியர்கள் ஜாஹர் பீர் என்று வணங்கறாங்க. ரெண்டு மதத்துக்கும் பொதுவான சாமியா இருக்கார்.. இவருடைய வம்சாவளியில் வந்த இந்துக்கள் பாச்சல் வம்சம் என்றால் இஸ்லாமியர்கள் கயாம் கானி (Kayam Khani Muslims ) வம்சம் என்கிறார்கள்.

ராஜஸ்தானில் மட்டுமில்லாமல் குஜராத், பஞ்சாப், ஹரியானா, உத்தரப்ரதேஷ், மத்யப்ரதேஷ், மஹாராஷ்ட்ரா என்று பல இடங்களில் இவருடைய பக்தர்கள் இருக்காங்க. அந்தந்த ஊர்களில் கோவிலும் கட்டி வச்சுருக்கங்க. திருவிழா சமயம் கூடியவரையில் எல்லா பக்தர்களும் சேர்ந்தே கொண்டாடுறாங்க. ரெண்டு மினார்களுடன் சமாதிக்கட்டிடம் இருக்கு. நீலக்குதிரை மேல் சவாரி செய்யும் கோகாஜி படம் இங்கே வச்சுருக்காங்க.
பூசாரிகள் கோகாஜி கையில் இருக்கும் குதிரைச்சவுக்கு போல ஒன்னு கையில் வச்சுக்கிட்டு பக்தர்களை அடிப்பது விசேஷமாம். சவுக்கடி மேலே விழுந்தால் அந்த வருசம் ரொம்ப அதிர்ஷ்டமுன்னு பக்தர்கள் அடிவாங்க முந்துவாங்களாம். ( இதுதான் சாக்குன்னு வச்சு விளாசாம இருக்கணும்!) பல நிறமுள்ள கொடிகளைப் பிடிச்சுக்கிட்டு ட்ரம் இசைக்கு ஏற்ப ஆட்டம் பாட்டமுன்னு மூணு நாள் கோலாகலமாக இருக்குமாம்.

பாம்புக் கடவுள் என்றபடியால் பாம்புக்கடி, மற்ற வியாதிகளுக்கு இவரை வேண்டிக்கிட்டால் விஷம் இறங்கி உயிர்பிழைக்கும் நம்பிக்கை பரவலாக இருப்பதால் கிராமங்கள் தோறும் கோவில்கள் கட்டி கும்பிடறாங்க.

இந்த கோகாமாடி ஹனுமன் கோவிலிலும் குக்கா ஜாஹர் வீருக்கு ஒரு சந்நிதி வச்சுருக்காங்க. இதைத்தவிர ராதா கிருஷ்ணா, ராமர் அண்ட் கோ, சிம்மவாஹினி, சிவன் பார்வதி, புள்ளையார், காளி இப்படி வழக்கமான சந்நிதிகளும் ஒரு வரிசையில் இருக்கு.சாமிகளுக்குள் சமத்துவம் மட்டுமே. பேதமே கிடையாதுன்னு சொல்றதுபோல வடக்கே பல கோவில்களிலும் சாமிகளுக்குச் சீருடைதான். பல நிறங்களில் இருந்தாலும் ஜிலுஜிலுன்னு சரிகைமட்டும் பொது. இந்தக்கோவிலில் ஆரஞ்சு!

நாம் போனபோது முன்பக்கம் பெரிய ஹாலில் ராஜஸ்தான் பெண்கள் பலர் பஜன் பாடிக்கிட்டு இருந்தாங்க.
கோகா ன்னு(Goga veer) ஆங்கிலத்திலும் , குக்கான்னு(Gugga) ஹிந்தியிலும் பலவிதமா எழுதி வச்சுருக்காங்க. 'யே பக்வான் கா நாம் க்யா ஹை??ன்னு கேட்டதுக்கு 'கூகாஜி' ன்னு சொன்னார் பண்டிட். குழந்தைகளுக்கும் கிராம மக்களுக்கும் இவர் சிம்பிளா 'கோடே வாலா ஜி' குதிரைக்கார சாமி!

குதிரைவீரன் சாமி!!!!

jai shri jahar veer goga ji maharaj ki jai.


PINகுறிப்பு: எனக்கென்னவோ நம்ம மதுரைவீரன் சாமிதான் ஞாபகத்துக்கு வர்றார்!!!!!

25 comments:

said...

உண்மையா ஹனுமாஞிக்கு ஒரு கொலுசு போட்டிருக்கலாம். வெறுங்காலா இருக்கே. எத்தனை கதைகள் பா. மகா புத்திசாலி நேயடு கொடுத்ததாகத்தான் இருக்கணும். உங்களைத்தான் சொல்கிறேன்.:)
என்ன் ட் இந்த குதிரை வீரன் மதம் மாறினார். அதுக்கும் கதை இருக்கா. எப்படியே மத ஒற்றுமைக்கு வழியாச்சு. படங்கள் மஹா அழகு.

said...

ரசித்தேன்.

said...

நல்ல பகிர்வு.... நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது உங்கள் பகிர்வுகளில்.... தொடர்ந்து அசத்தறீங்க டீச்சர்!

said...

Present teacher !

said...

அளவா எரியும் தீபங்களைப்போல அடுக்கு தீப ஆரத்தி எடுக்கும்போது மனசெல்லாம் நிறைஞ்சு போவது நிஜம்.

நம் கோவில்களில் முத்துப்போல் பிரகாசிக்கும் தீப ஒளியில் மனம் ஒன்றிவிட முடிகிறது..

said...

கால்ல தண்டை போட்டுக்காத ஹனுமாரா//.. வால்ல கட்டுன மணிச்சத்தமே சனீஸ்வரனை எச்சரிக்கப் போதுமானதுன்னு விட்டுட்டாரோ!!

பண்டிட்ஜி கிட்ட கேட்டுருந்தா இதுக்கும் ஒரு கதை கட்டியிருப்பார் :-))

said...

உண்மையா ஹனுமாஞிக்கு ஒரு கொலுசு போட்டிருக்கலாம். வெறுங்காலா இருக்கே.

மஜா வீர தீரனான அனுமனுக்குக் கொலுசா ??

ஒத்துக்கமாட்டேன் போங்க..
அப்புறம் வளையலும் போட்டு வீரத்தைக் குறைக்கப் பார்க்கிறீங்களா !

வீரக் கழல் ,தண்டை போட்டு வீர கம்பீரமாக பாருங்க..

கையில் கங்கணம், வாகுவளையம் ஓ..கே.....

said...

கண்ணு காது மூக்கு எல்லாம் வச்சி ஒரு உருவம் கொண்டு வந்துடவேண்டியதுதானே வாயுவுக்கும்..குடும்ப போட்டோ நல்லா இருக்கு..:)

said...

நல்ல பகிர்வு.
அய்யனார், மதுரை வீரன் மாதிரி தான் போல இருக்கு ”கோகாஜி”.

said...

நல்ல கதைகள்..படங்களும் நல்லாருக்கு...

said...

எத்தனையோ ஊர்கள்! எத்தனையோ மொழிகள்! எத்தனையோ பண்பாடுகள்! அத்தனையத்தனையிலும் பலப்பல கதைகள்.

ஒவ்வொரு கதையிலும் எப்போதோ நடந்த நிகழ்வுகளின் எச்சங்கள் இருக்கின்றன என்பதும் உண்மை.

அது போலத்தான் இந்த மதுரைவீரன்... மன்னிக்க... குதிரைவீரன் கதையும்.

முகத்தில் விழிக்கக் கூடாது என்று சொன்னதும் கலைவாணர் சட்டியைத் தலையில் கவுத்திக்கொண்டு வருவார். பார்த்ததுமே சிரிப்பு வந்துவிடும். அந்தச் சிரிப்பும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

said...

குடும்பம் அசத்தலாக இருக்கிறார்கள்.

said...

தாமதமான பதிலுக்கு மாப்ஸ் ப்ளீஸ்.

ஃப்ளூ தடுப்பூசி போட்டுக்கிட்டேன் போனவாரம். என்னவோ தெரியலை இந்த முறை காய்ச்சலும் தடுமனுமா ரொம்பவே அவதியா இருக்கு ஒரு ஏழுநாளாக:(

said...

வாங்க வல்லி.

அலங்காரமில்லாத பாதங்கள் கண்ணைக் கடிச்சதென்னவோ நிஜம்.

மதம் மாறிய காரணங்கள் ஒன்னும் தெரியலைப்பா! எதாச்சும் கதை 'அதுக்கும் இருக்கத்தானே வேணும்?

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

ரசிப்புக்கு நன்றி.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

தொடர்ந்துவரும் உங்களுக்கும் ஆதரவுகளுக்கும் நன்றி.

said...

வாங்க மோகன் குமார்.

ஆஜர் போட்டுட்டு கடைசி பெஞ்சுக்குப் போறீங்களா என்ன?:-))))

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

சரியாச் சொன்னீங்க. முத்துச்சுடர்களேதான்!!!!!

said...

வாங்க அமைதிச்சாரல்.

வால்மணி சப்தம் போட்டுக்கிட்டே இருக்கணுமுன்னா....வால் ஆடிக்கிட்டே இருக்கணும்:-))))

இன்னிக்குத்தான் உங்க சங்நாப்பூர் பதிவுகளை நண்பருக்கு அனுப்பினேன்!

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.


ஹைய்யோ!!!!!

வீரக்கழல், வாகுவளையம் பெயர்கள் எல்லாம் மறந்தே போயிருந்தேன்! நினைவூட்டியதற்கு மனமார்ந்த நன்றிகள்.

said...

வாங்க கயலு.

வாநரக் குடும்பத்தை கற்பனை செஞ்ச பொம்மைக்காரரைச் சொல்லணும்:-)))))

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

மாறுகை மாறுகால் வாங்குன கதை 'இன்னும் இங்கே வரலை போல இருக்கே:-))))

said...

வாங்க பாசமலர்.

தொடர்ந்த ஆதரவுக்கு நன்றிப்பா.

said...

வாங்க ஜீரா.

பயணத்துலே பல கதைகளையும் கேட்கும்போது வெவ்வேற மூலைகளில் இருக்கும் ஊர்களின் கதைகளில்கூட ஒரு ஒற்றுமை இருப்பதைக் கண்டு வியப்புதான்!!!!

இன்னும் கொஞ்சம் ஆழமாப்போனா..... வெவ்வேற மதங்களில் இருக்கும் கதைகளுக்கும்கூட நீரோட்டமா ஒரு ஒத்துமை இருக்குல்லே!!!!!

said...

வாங்க மாதேவி.

குடும்பத்தில் 'முக ஒற்றுமை' கவனிச்சீங்களா:-)))))