Monday, April 30, 2012

காலி நாற்காலியின் 'கனம்' Christchurch Earthquake 10

வெறுமையா இருக்கும் காலி நாற்காலிகளைப் பார்க்கும்போது மனசு அப்படியே கனத்துப் போகுது. இந்தக் 'காலி நாற்காலி' 'யை ஆரம்பிச்சுவச்சவர் யாருன்னு கொஞ்சம் துருவனுமேன்னு பார்த்தால் நமக்குக் கூடுதல் வேலையே வைக்கலை, இந்தக் கலைஞர். சார்லஸ் டிக்கன்ஸ் மறைந்த சமயம், அவருடைய கதை ஒன்றுக்குப் படம் வரைஞ்சுக்கிட்டு இருந்த ஓவியக்கலைஞர் Samuel Luke Fildes டிக்கன்ஸ்ஸின் நாற்காலியையும் எழுதும் மேசையையும் எழுத்தாளர் இன்றி தனிச்சு இருக்குன்னு காட்டும் ஓவியம் ஒன்றை ஜூன் 1870 வரைஞ்சார்.
இதை மனசில்வச்ச Van Gogh 1888 ஆண்டு தனித்தனியா ரெண்டு காலி நாற்காலிகளை வரைஞ்சு, அது இப்போ நேஷனல் ம்யூஸியத்திலே காட்சிக்கு இருக்கு.

இருந்த ஆள்,  இல்லாமப் போகும்போது அவர் விட்டுப்போன இடம்,  இட்டு நிரப்பவே முடியாத நிலையில் காலியா நிக்கும்போது மனசு வலிக்கத்தான் செய்யுதில்லையா? போன வருசம் ரெட்டை கோபுரத்தாக்குதல் நடந்து பத்து வருசங்கள் ஆனதையும், அதுலே உயிரிழந்த 2753 மக்கள் நினைவாகவும் Bryant Park நியூயார்க்கில் காலி நாற்காலிகளை வச்சு அஞ்சலி செலுத்துனாங்க. எல்லாம் ஒன்னுபோல இருக்கும் நாற்காலிகளின் வரிசை!
போலந்து நாட்டில் நடந்த யூதர் இன அழிப்பை நினைவு கூறவும், அமெரிக்கா Oklahoma city குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கும் இதுபோல நினைவுச்சின்னங்கள் வச்சு அஞ்சலி செலுத்தினாங்க. சுற்றுலாப்பயணிகள் அங்கே போகும்போது தவறாமல் பார்க்கும் இடங்களில் இவைகளும் முக்கிய இடத்தைப்பிடிச்சதென்னவோ உண்மை.


 போன வாரம் ஏப்ரல் 25 எங்களுடைய 'கொடி நாள்' இந்தப் பக்கங்களில் இதை ஆன்ஸாக் டே ANZAC DAY ( Australian and New Zealand Army Corps.) என்று Gallipoli என்ற இடத்தில் எதிரிகளால் அழிக்கப்பட்ட வீரர்களுக்கு அஞ்சலி என்று சொல்லி ஆரம்பிச்சு, இப்போது உலகப்போர்களிலும், மற்ற போர்களிலும் போராடி உயிர்துறந்த வீரர்களை நினைவு கூறும்நாள். அரசுவிடுமுறை தினம்.
எங்க வார்மெமோரியல் இருக்குமிடம்(மேலே உள்ள படம்) சமீபத்திய நிலநடுக்க அழிவுகளில் சிக்கிக்கொண்டதால் தாற்காலிகமா வேறொரு இடத்தில் அஞ்சலிக்கு ஏற்பாடு செஞ்சாங்க. விடுமுறை தினமாச்சேன்னு நிதானமாக் கிளம்பிப்போனால்.... சர்வீஸ் நடந்த இடத்தைக் கழுவிக் காயவச்சதுபோல் எல்லாம் சுத்தம். நகரின் மையப்பகுதியிலும் சுற்றிவர அக்கம்பக்கங்களிலும் நிலநடுக்க அழிவுகளை அப்புறப்படுத்தி சீராக்கும் வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு. எப்பப்போனாலும் ( anyone given time) அழிவுகளைப் பார்க்க, கண்ணீர் வடிக்க, புனரமைப்பு வேலைகளை வேடிக்கை பார்க்கன்னு ஒரு கூட்டம் இருந்துக்கிட்டே இருக்கும். (நாலுபேருக்கு மேல் போனால் கூட்டம் என்று கொள்க) நாமும் அந்த ஜோதியில் கலந்தோம்.
 " ஒன்னும்தான் இல்லைன்னாலும் ஆட்கள் என்னத்துக்கு சிட்டிபக்கம் வர்றாங்க? " 

 "மனசு கேக்காமதான். இது நம்மூர் என்ற பாசமும், என்ன ஆச்சோன்ற பதைப்பும்தான். இப்ப நீ வரலையா?"

 போக்குவரத்துக்கு மூடிவச்சுருந்த மதராஸ் தெருவைத் திறந்துட்டாங்கன்னு உள்ளூர் தினசரியில் சேதி. அங்கே போய்வரலாமுன்னு போனால் கம்பீரமா நிற்கும் சர்ச்சைக் காணோம்! இடிஞ்சு போயிருச்சாம்!

நம்மூர்லே முக்குக்கு முக்கு இருக்கும் புள்ளையார் கோவில்களைப் போலத்தான் இந்த ஊரில் சர்ச்சுகள். நிலநடுக்கத்துலே எத்தனை இடிஞ்சுபோச்சுன்னு எண்ணுறதைவிட எத்தனை பொழைச்சுருக்குன்னு எண்ணுவது சுலபம். உருப்படியா நிற்பது ரெண்டோ மூணோதான். அதுவும் சமீபத்து மாடர்ன் கட்டிடங்கள். அங்கேயும் சின்ன விள்ளல் விரிசல்ன்னு ..... ஹூம்.... எதுவுமே தப்பிக்கலை:(

எண்ணி நாப்பதே விநாடிகளில் ஊரின் தலைவிதி மாறியே போச்சு என்பதுதான் நிஜம்.

 இந்த இடத்தில் இருந்த பாப்டிஸ்ட் சர்ச் இந்த நகரத்தைவிட 13 வயசு சின்னது. 1863 ஆம் ஆண்டு வழிபாட்டுக்கான சபை ஒன்னு வேணுமுன்னு தீர்மானிச்சு அதுக்கடுத்த ஆண்டு நகரின் வேறொரு பகுதியில் மரக்கட்டைகளைக் கொண்டு கட்டப்பட்டது. 1870 வது ஆண்டு சின்னதா வேறொன்னு கட்டிக்கிட்டாங்க. வழிபாட்டுக்கு வரும் மக்கள்தொகை பெருக்கத்தை அனுசரிச்சு 1881 வது ஆண்டு லண்டனில் இருக்கும் பாப்டிஸ்ட் சர்ச் டிஸைனையொட்டி, இங்கே முகப்பில் பிரமாண்டமான தூண்களோடு கட்டி முடிச்சு நகரத்துக்கே ஒரு அலங்காரமா விளங்குச்சு. மகளின் பள்ளிக்கூட வாழ்வில் பாட்டுப்பயிற்சி, பாட்டுப்போட்டின்னு பலமுறை இங்கே கூட்டிவந்துருக்கோம்.

 அக்கம்பக்கம் இருக்கும் பல நல்லவிஷயங்களை அவைகள் இருக்கும்போதே பாராட்டி அனுபவிக்க மனசுக்குத் தெரியலை பாருங்க. எல்லாத்தையும் taken for granted கதைதான்:( 





போனவருசத்துக்கு முந்தின (செப் 4, 2010) நிலநடுக்கத்தில் இந்த சர்ச் கொஞ்சம் பாதிக்கப்பட்டுச்சுன்னாலும் ஆறு மாசம் கழிச்சு ஏற்பட்ட (ஃபிப்ரவரி 22 2011) நிலநடுக்கத்தில் உள்ளே அப்படியே இடிஞ்சு விழுந்துருச்சு. அடுத்தவருசம் 150 வது வருசக்கொண்டாட்டம் நடத்தணுமுன்னு தீர்மானிச்ச சமயம் இப்படி ஒரு இடி! இந்த நிலையிலும் இங்கே இருந்த சர்ச்சுக்கு என்ன ஆச்சோன்னு தவிக்கும் மக்களுக்காக படங்களுடன் ஒரு தகவல் பலகையை சர்ச்சு நிர்வாகம் வச்சுருப்பதைப் பாராட்டத்தான் வேணும்.
 உள்ளூர் கலைஞர் Pete Majendie இந்த சர்ச் இருந்த(!!!) இடத்துலேயே ஒரு நினைவுச்சின்னம் வைக்க அனுமதி வாங்கினார். 185 உயிர்களின் இழப்புக்கு முன்னால் மற்ற எதுக்குமே முக்கியம் இல்லைன்னு ஆகிப்போச்சு. 120 இருக்கைகளை ட்ரேட் மீ என்ற ஆன்லைன் சந்தையில் வாங்கினார். . உள்ளூர் மக்களும் இங்கே உள்ள ஒரு இருக்கைகள் மட்டுமே விற்கும் கடையும் சிலபல இருக்கைகளைத் தானமாக் கொடுத்தாங்க. ஒருத்தர் தன்னுடைய சக்கரநாற்காலியைக்கூடக் கொடுத்தார்.
 நாலைஞ்சு தன்னார்வலர்களின் துணையுடன் இருக்கைகளை வரிசையில் ஒழுங்குபடுத்தி வெள்ளை நிறப் பெயிண்ட் அடிச்சுருக்கார். வெள்ளை என்பதே பரிசுத்தத்தின் அடையாளம் அல்லவா!!!!
மணிகூண்டு இருக்கைகளைப் பார்த்தபடி மௌனசாட்சியா எதிர்சாரியில் நிற்கும் இடிஞ்சுபோன மணிக்கூண்டு. சம்பவம் நடந்த நேரத்தை 12.51 என்று துல்லியமாக் காட்டியபடி நிக்குது. சின்னதா ஒரு அமைப்பில் பிரார்த்தனை ஒன்னு ஒட்டி வச்சுருக்காங்க. கூடவே இந்த நினைவு அஞ்சலிக்கான விளக்கமும். ஒரு மேசையில் பின்னூட்டமிட நோட்டுப்புத்தகமும் பேனாவும் வச்சுருந்தாங்க. நாலுவரி எழுதிட்டுத்தான் வந்தேன். எந்த இருக்கையில் வேண்டுமானாலும் உக்காரலாம் என்ற அறிவிப்பு வேற! அநியாயமாப்போன உயிர்களுக்கு ஆத்ம சாந்தி வேண்டி பிரார்த்திக்கலாம். பிரார்த்திச்சேன்.
 உயிரிழந்த அப்பாவிகள் வாழ்க்கையின் பல பருவங்களில்/நிலைகளில் இருந்தவர்கள். வேலையில் இருந்து ஓய்வுபெற்றவர்கள் முதல் அஞ்சு வாரக் குழந்தைவரை. பலநாடுகள் பல வயதுகள்...... எத்தனை வகை இருக்கைகள்!!! லெதர் சோஃபா, Bean Bag, கம்ப்யூட்டர் சேர்ஸ், பியானோ ஸ்டூல், மூங்கில் ஆசனங்கள், மர நாற்காலிகள் இப்படி எத்தனையெத்தனை வகை!!! கைக்குழந்தையைக் கொண்டுபோகும் பேபி ஸீட் கண்ணில் பட்டதும், மனம் கதறியழுதது:(

24 comments:

said...

காலி நாற்காலிகளா ! இல்லை
காலனின் கோரத்தை
கண் முன்னே நிறுத்தும்
கண்ணீர் பொங்கச்செய்யும்
கலைப்பொக்கிஷங்கள்.

சுப்பு ரத்தினம்.

said...

காலி நாற்காலிகளை நிறைய பேசின. பேச வைத்தமைக்கு நன்றி

said...

அநியாயம். மனம் எப்படித்தாங்கும். குழந்தையின் அம்மா பிழைதிருப்பாளோ. என்னவெல்லாமோ நினைக்கத் தோன்றுகிறது.:(

said...

நிலநடுக்கத்துலே எத்தனை இடிஞ்சுபோச்சுன்னு எண்ணுறதைவிட எத்தனை பொழைச்சுருக்குன்னு எண்ணுவது சுலபம். உருப்படியா நிற்பது ரெண்டோ மூணோதான். //

மனதை கனக்க வைத்த பதிவு.
காலி நாற்காலிகளை கண்டதும் ,வருத்தம், பேபிஸீட் என்ற குழந்தை இருக்கையைப் பார்த்ததும் மேலும் கனத்து போனது.

said...

ரொம்ப கனமா இருக்குங்க..

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

உண்மைதான். ஆனால்..... கண்ணீரைக் கடந்து வருவது கஷ்டமே:(

said...

வாங்க தருமி.



மௌனமாப்பேசி மனசைக் கலங்கவைத்த நாற்காலிகள் அவை:(

said...

வாங்க வல்லி.
குழந்தையின் தாயும் கூடவே போயிட்டாங்க. பஸ் ஸ்டாப்புக்கு நடந்து போய்க்கிட்டு இருந்த குடும்பம்.

அப்பாவும் அவருடைய தங்கையும் அடிபட்டதோடு தப்பிட்டாங்க. ஆனால் இந்தப் பிஞ்சுக்கும் தாய்க்கும் பாக்கியம் இல்லை:(

சின்னக்குழந்தை. சீக்கிரம் போகணுமேன்னு ரெண்டு வாரம் முன்னாடியே பிறந்த ப்ரீமெச்சூர் பேபி:(

மொத்தம் மூணு குழந்தைகள் பலி ஆகிருச்சு. ஒன்னு அஞ்சு மாசம், ஒன்னு எட்டு மாசம்.

கடவுளை சபிக்கும்படி ஆயிருச்சுப்பா:(

said...

வாங்க கோமதி அரசு.

நினைக்கும்போதே... மனசு பொங்கிருது:(

விதியின்மேல் பழியைப் போடணுமா?

said...

வாங்க அமைதிச்சாரல்.

வாழ்க்கையின்மீது அன்று ஒரு வெறுப்பு வந்தது உண்மைப்பா. மனசு கேக்காம முந்தாநாள்கூட ஒரு முறை போய்வந்தேன்.

said...

அநியாயமாப்போன உயிர்களுக்கு ஆத்ம சாந்தி வேண்டி பிரார்த்திக்கலாம். பிரார்த்திச்சேன்.


அனைவரும் பிரார்த்திக்கிறோம்..

said...

மனம் கனக்க வைத்த பகிர்வு.

குழந்தையை நினைக்கும் போதே துடிக்கிறது.......:(

said...

ஒவ்வொரு நாற்காலியும் ஒரு கதை சொல்கிறது.

எத்தனை சோகம். மனசுக்கு ரொம்ப கஷ்ட்மா போச்சு.... :(

said...

மனதை கனக்க வைத்தது பதிவு.

said...

சார்ல்ஸ் டிக்கன்சின் காலியான நாற்காலி சுவார்ஸத்தைக் கிளப்பியது. அருமையான படம்.
ஆனால் பின்னே வந்த விடயங்கள் கனமாக அழுத்துகின்றன.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

எங்கள் பிரார்த்தனையில் கலந்துகொண்டதற்கு மனமார்ந்த நன்றிகள்.

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

சேதியை ஏற்கெனவே தினசரிகளில் வாசிச்சு இருந்தாலும் கண்முன்னே கண்ட பேபி கேப்ஸ்யூல் மனசைப் பிழிஞ்சுருச்சு:(

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

சொல்லிச்சொல்லி எங்கள் துக்கத்தை ஆத்திக்கத்தான் இந்த முயற்சி.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

எங்கள் சோகம் தீருமா? மனசு கனத்துப் போகுதேப்பா.

said...

வாங்க டொக்டர் ஐயா.

எழுதுவதற்குன்னு எப்பேர்ப்பட்ட அறையும் அமைப்பும் என்று பிரமிப்பா இருந்தது, அந்தப்படம் பார்த்ததும்!

சோகச் சுமைகளுடன் வாழப் பழகிக்கணும் நாங்க:(

said...

I am so sorry for what happen and feel for them. However on the other side , the art installation of chairs depicting the life of different people and kids is very humanising.

Its making the connection to the event very realistic. thanks for posting.

said...

வாங்க ஆராமுதன் ஸ்ரீவத்ஸன்.

முதல் வருகைக்கும் எங்கள் துயரைப்புரிந்து சொன்ன ஆறுதல் சொற்களுக்கும் நன்றிகள்.

உங்கள் பெயரில் எனக்கு ஒரு குடும்ப நண்பர் சென்னையில் இருக்கார்.

said...

பார்த்ததும் மிகுந்த சோகம்.

பிரார்த்தனைகள்.

said...

வாங்க மாதேவி.

நன்றிப்பா.